புதன், ஜூன் 13, 2012

சில சேரிங்

நகவெட்டியை யாராவது இரவல் கேட்டால், உங்களுக்குக் கோபம் வருமா?
எனக்குக் கோபம் வரும்.

ஞாயிறு இரவன்று, என் மகனை, அவன் பயிலும் காலெஜில் விட்டு வரக் கிளம்பும் வழியில், ஒரு ரெஸ்டரண்டிற்குச் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

என் மகனுக்கு ஒரு பழக்கம் உண்டு, கரண்டியில் சாப்பிடமாட்டான். என்ன அற்புதமான வெஸ்டன் ஃபூட் உணவகத்திற்கு அழைத்துச் சென்றாலும், தமிழர்கள் பாணியில் கைகளைக் கொண்டு பிய்த்து எடுத்து உண்பதுதான் அவனின் வழக்கம். சரி அது அவன் பாணி. கொஞ்சம் நாகரீகமாகச் சாப்பிட மட்டும் கற்றுக்கொடுப்பேன் காரணம் பல இனங்கள் ஒன்றாக அமர்ந்து உண்ணும் இடங்களில், கைகளைக்கொண்டு பிய்த்து இழுத்துச் சாப்பிடுவதென்பது, கொஞ்சம் அநாகரீகமாகவே பார்க்கப்படுவதால், அதை மட்டும் கவனத்தில் வைத்துக்கொள்ள ஆலோசனைகள் வழங்குவேன்.

எப்போதும் கைகளைப் பயன்படுத்திச் சாப்பிடுகிறவர்கள் தங்களின் கைகளைச் சுத்தமாகவும் நகங்கள் வெட்டப்பட்டுத் தூய்மையாக இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா.!?  இதனாலேயே, ஆளுக்கு ஒரு நகவெட்டியை ஹென்பேக் அல்லது கார் சாவிக்கொத்தில் எப்போதுமே மாட்டி வைத்திருப்பேன், அதோடு வீட்டிலும் ஸ்பெராக ஒரு நகவெட்டி எப்போதுமே இருக்கும்.  என்னைப்பொருத்தமட்டில் அது ஒரு அத்தியாவசிய ஆயுதம்.

அவன் சாப்பிடும் போது, அவனின் கைகளைப் பார்த்தால், நகங்கள் கொஞ்சம் நீளமாக வளர்ந்து அதன் உள்ளே அழுக்கு போல் கருப்பாகவும் தென்பட்டது.

`என்னது இது? நகம் வெட்டவில்லையா?’

`ஒ ஓ..மறந்துட்டேன்.’

`என்னது மறந்துட்டியா? பார்க்க அப்படி தெரியவில்லையே! நீண்ட நாட்கள் வெட்டாமல், அப்படியே விட்டது மாதிரி இருக்கே.!’

`ஆமாம், நக வெட்டி காணாமல் போய்விட்டது.’

`காணாமல் போனால் என்னிடம் சொல்லவேண்டியதுதானே. இப்படி அழுக்கேறிய நீண்ட நகங்களோடு சாப்பிடுவாயா?’

`ம்ம்ம்...’

`வேண்டாம்,  கைகளை பயன்படுத்தாதே, கரண்டியில் சாப்பிடு.!’

`அம்மா மானத்தை வாங்காதீர்கள், என்னால் கரண்டியைக்கொண்டு சாப்பிட முடியாது என்று உங்களுக்குத்தெரியும்தானே..’

`அய்யோடா, நகங்களை அழுக்காக வைத்துக்கொண்டு சோறு திங்கும் இவருக்கு மானமிருக்காமே.!!! அம்மாவுடைய நகவெட்டியைத்தறேன், எடுத்துச் சென்று நாளை மதியம் சாப்பிடுவதற்குள், ஒழுங்காக வெட்டிவிடு நகங்களை. ஒகே.’’

`வேண்டாம், நான் கூட்டாளியோட நகவெட்டியைக் கொண்டு வெட்டிக்கொள்கிறேன்.’’ .

`கூட்டாளியோட.. நகவெட்டியையா?? ’

`ஏன்மா கொலவெறி? வாங்கினா என்ன?’

`உள்ளாடைகளை இரவல் கேட்பதைப்போல், இந்த நகவெட்டியை இரவல் கேட்கும் செய்கை. உனக்கு வெட்கமா இல்லையா?. இதையெல்லாம் இரவல் வாங்குவது அநாகரீகம்.’

`நாங்க எங்க நண்பர்களுக்குள்ளே இதெல்லாம் சகஜம்’ம்மா...’ என்றான்

எனக்கென்னவோ, நகவெட்டியை இரவல் வாங்கி, நகங்களை வெட்டுவது அருவருப்பான செய்கையாகவே படுகிறது. நமது அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருள் எப்படி அடுத்தவர்களுக்கு இரவல் கொடுப்பது. அடுத்தவர்களின் அசுத்தங்களை வெட்டிய ஒரு பொருளை எப்படி நாம் பயன்படுத்துவது.!?

எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம். நகவெட்டியை பகிர்ந்து பயன்படுத்துவதால், இதன் வழி கூட  தொற்றுவியாதிகள்  தொற்றிக்கொள்கிற சாத்தியம் இருக்கின்றதாம். குறிப்பாக ஏயிட்ஸ். இதில் விழிப்புணர்வு அவசியமாகப் படுகிறதுதானே.!

இதுக்குத்தான் அந்தக்காலத்திலேயே  பெண்களை கல்விகற்க அனுப்பவில்லை போலும். எதையாவது படித்துத் தெரிந்து கொண்டால், அது மைண்ட்’யில் ஓடிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்தவண்ணமாக இருக்கும். இல்லையேல் இன்னமும், கணவன் பயன் படுத்தும் துண்டுகளையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் துலக்கும் பல் துலக்கியையே இவர்களும் பயன் படுத்துவார்கள். கணவன் சாப்பிட்டு வைத்த எச்சில் தட்டிலேயே இவர்களும் சாப்பிடுவார்கள். கணவன் கைகழுவச் செல்லுகையில், தமது புடவையில் துடைத்துக்கொள்ளுமாறு முந்தியை நீட்டுவார்கள். ஒரே சோப்பில் (நுரைக்கக்கி) குடும்பமே குளிப்பது.. என இன்னமும்  தொடர்ந்திருக்கும்,  நமது பாரம்பரியம்.

என்ன நாஞ்சொல்வது?

(“நீ வேண்ணா பாரு, கெழவியா ஆகி, எந்த முதியோர் இல்லத்தில், நாய் சாப்பிடும் தட்டில் உனக்கு சோறு கொடுக்கப் போகிறார்களோ  தெரியாது.’’)

இது போன்ற சாபங்கள் நான் பலமுறை வாங்கியிருப்பினும், தயவு செய்து அதுபோன்ற சாபங்களை வாசிப்போர் முனகாமல் இருப்பது நல்லது.! :P 

9 கருத்துகள்:

  1. சகோ, நகவெட்டியில இம்புட்டு விடயம் இருக்கா? என்னவோ சொல்றீக -

    சரி, பாரம்பரியம் நல்லது வேணும்னு சொல்றீகளா? இல்ல கெட்டது வேண்டாம்னு சொல்றீகளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ அது உங்களின் பார்வையைப் பொருத்தது. நன்றி வருகைக்கு

      நீக்கு
  2. பாரம்பரிய மூதாதையர்களின் செயற்பாடுகளால் தொற்று நோய் படவுகிரது எம்பது ஓரளவுக்கு உண்மையாக இருந்தாலும் நக வெட்டியால் எந்த தொற்று நோயும் பரவுவதற்கு சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே இருக்கிறது....

    பதிலளிநீக்கு
  3. இதன் வழி கூட தொற்றுவியாதிகள் தொற்றிக்கொள்ளும் சாத்தியம் இருக்கின்றதாம். குறிப்பாக ஏயிட்ஸ். இதில் விழிப்புணர்வு அவசியமாகப் படுகிறதுதானே.!//

    இந்த கருத்து சற்று சிந்திக்க வேண்டியது,எயிட்ஸ் பரவும் வழிகளை ஒரு முறை மீட்டிப் பாருங்கள் . கருத்து முரன்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரண்படலாம், அது உண்மையாகவும் இருக்கலாம். நான் என்றோ படித்த விடயம் இது.
      நகங்களை வெட்டும் போது, அதன் சதைகளும் சில வேளைகளில் வெட்டுப்படும்.அப்படி வெட்டுப்படும்போது, அந்த நகவெட்டியில் சிறிதாக ஒட்டிக்கொள்ளும் இரத்தமாகப்பட்டது, வேறொருவர் வெட்டும் போது அவருக்கும் காயமேதும் ஏற்பட்டால், இந்த இரத்தமானது அவர்களோடு கலக்கும் வாய்ப்பு உள்ளதுதானே!? நோய் பரவாதா? ஏயிட்ஸ் இரத்தத்தின் வழியாகத்தானே பரவுகிறது. படித்ததைப் பகிர்கிறேன். ஆய்வுகள் எதேனும் செய்து, புதிய தகவல்கள் இருந்தால், கிடைத்தால் என்னோடும் பகிருங்கள். நன்றி வருகைக்கும் தகவலுக்கும்

      நீக்கு
    2. முதலில் சுத்தம் என்பதினை நாம் அறிந்திருக்க வேண்டும் சகோ...
      நகம் வெட்ட நாம் உபயோகிக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதனை பாவித்து முடித்த பின் நன்றாக கழுவிவிட்டுத்தான் உரிய இடத்தில் அதனை வைக்க வேண்டும்.

      இப்படி செய்தாலே பெரும்பாலான தொற்றுநோய்கள் பரவுவது குறைந்து விடும்.

      மேலும் எயிட்ஸ் நுண்ணங்கிகள் அதற்குறிய சூழலில் தான் உயிருடன் வாழ்கின்றன.வெளியில் சிந்தப்படும் இரத்தங்களில் இருக்கக்கூடிய நுண்ணங்கிகள் குறிப்பிட்ட சில நேரத்தின் பின் இரந்து விடுகின்றன.இதனால் நகவெட்டியில் இருக்கக் கூடி இரத்தம் குறிப்பிட்ட நேரத்துக்குள் மற்றயவரிடன் சென்றால் தான் அது அவரை பாதிக்கும்.இதற்கான சாத்தியப்பாடுகள் மிகக் குறைவுதான்.

      ஆழ்ந்த முத்தங்கள் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு இன்னும் எயிட் நோயாளியின் இரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துதல் இவற்றால் தான் எயிட்ஸ் பரவ அதிக சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.

      மற்றப்படி எயிட்ஸ் நோயாளியிடம் சாதாரண மனிதரிடம் பழகுவது போன்று பழகலாம் அவருடைய உணவினில் நாமும் பங்கு கொள்ளலாம்.உணவ்ருந்த்ம் போது அவருடைய எச்சிகள் எம்மில் சேராவண்ணம் உணவருந்த வேண்டும்.

      இவைதான் எயிட்ஸ் பற்றி நான் அறிந்தவைகள்.

      தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சகோ..

      நீக்கு
    3. தவறே இல்லை சகோ. தகவல் இருந்தால் தாரளமாகப் பகிருங்கள். நன்றி

      நீக்கு