சனி, செப்டம்பர் 15, 2012

ஒரு கதை ஒரு விளக்கம்

அற்புதமான சிறுகதை ஒன்றை அனுப்பியுள்ளேன், நம் நாட்டிலும் பின்நவீனத்துவம் வளர்ந்துள்ளது என்பதனைப் பறைச்சாற்றும் ஓர் கதை இது, வாசித்துப்பாருங்கள், உங்களின் கருத்து எனக்குத்தேவை. என, எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவரும் இலக்கியத்துறையில் உள்ளவர்தான். அந்த சிறுகதையும் என் கைவசம் உள்ளது. இருப்பினும் அது வேண்டாம். தனி நபர் தாக்குதல் போலாகிவிடும்.

படித்துப்பார்த்தேன், என்னைக்கவரவேயில்லை அச்சிறுகதை. அழகான நடை, அற்புதமான தமிழ்.. அறவே ஆங்கிலக்கலப்படமில்லாத ஒரு கதைதான். இருப்பினும் அதில் ஒன்றுமேயில்லை.

முன்று பகுதிகளாகப்பிரித்து, அங்கேயும் இங்கேயும் தாவி, வாசகர்களை குழப்பி, முடிவு தெளிவில்லாமலும், கதையை எந்த கோணத்தில் வாசித்தாலும் கருவே தென்படாமலும் முடித்திருக்கின்றார் எழுத்தாளர். குழப்புவதுதான் பின்நவீனத்துவமா?, என்கிற என் கருத்தை, வழக்கம்போல் ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படையாகச் சொல்லிவிட்டேன். நம்மவர்களுக்குத்தான் வெளிப்படை என்றால் பாகற்காய் போல் கசக்குமே.! முகஸ்துதியைத்தானே பெரும்பாலும் பால்பாயசம்போல் விரும்புவார்கள்.

`நான் நிறைய வாசிக்கின்றேன், என்னையே அவமதிப்பதைப்போல் உள்ளதே உன் கருத்து. அப்போ நான் என்ன ஒண்ணும் தெரியாதவனா(ளா)? இவ்வளவு காலம் எழுதுகிறேன் வாசிக்கின்றேன், எனக்குத் தெரியாதா, எது நல்ல கதை என்று..! ’ அப்படி மனதில் நினைத்திருக்ககூடும். ஆனாலும் சொல்லவில்லை. இருப்பினும், என்னிடம் மிக நாகரீகமாக ஒரு கோரிக்கையை வைத்தார்.

நீங்கள் எப்போது பார்த்தாலும் எல்லா சிறுகதைகளையும் நன்றாக இல்லை, அப்படி.. இப்படி என ஏதாவது குறைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றீர்களே, உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த, ஒரு சிறுகதையைச் சொல்லமுடியுமா? காட்டமுடியுமா? அது எப்படி இருக்கு என்றும், என்னைக் கவர்கிறதா என்றும் பார்க்கப்போகிறேன், என்றார்.

நமக்குத்தான் அழியாச்சுடர்கள் கைவசமிருக்கே.. அங்கே நிறைய அற்புதமான சிறுகதைகளை அவ்வப்போது வாசித்துவருகிறேன். பெரும்பாலும் எல்லாக்கதைகளும் அற்புதமானவை. எதாவதொரு வகையில் நமக்குப் பாடம் புகட்டிக்கொண்டிருக்கும்.

அங்கே சென்றேன், சாரு எழுதிய முள் என்கிற சிறுகதையை எடுத்தேன், அந்த நபருக்கு அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, லிங்க் அனுப்பினேன். இதைப் படித்து விட்டு கருத்து பகிருங்கள் என்று. ஒரு நாள் முழுக்க மூச்சு பேச்சே இல்லை.

மறுநாள், மெயில் வந்தது.. அந்த சிறுகதையில் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லையே.! மீன்பிடித்தொழிலைப் பற்றி சொல்லியிருக்கின்றார் எழுத்தாளர், அதோடு அற்புதமான காதலையும் அங்கே இழையோடவிட்டிருக்கின்றார் அவ்வளவுதான், மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லையே, என்றார் பாருங்களேன், எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. என் தொண்டையில் முள் சிக்கிக்கொண்டது.

எது காதல் என்பது கூட சரியாகத் தெரியாதவர்களுக்கு, அந்த சிறுகதையைப்பற்றி நான் பக்கம் பக்கமாக எழுதினாலும், விளங்கிடும் பாருங்க...!

சரி, அது அவரின் புரிதல். அதை அப்படியே விட்டிடவேண்டியதுதான். நமக்கென்ன வந்தது.  

6 கருத்துகள்:

 1. அவரவரின் புரிதல் அப்படியே விட்டிடவேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 2. அவரவர் கருத்துக்கு கருத்து சொல்ல சிந்திப்பதே தவறு... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்து கேட்டால் சொல்லலாம் சகோ. இலக்கியப்பகிர்வு படு சுவாரிஸ்யம்.. அதில் தப்பில்லை. எனக்கு இப்படிப் புரிகிறது, உங்களின் புரிதல் என்ன என்று கேட்பதில்தான் அந்த சுவாரிஸ்யத்தை சுவாசிக்க முடியும். ஆனால் சரியான ஆள் கிடைப்பதுதான் சிரமம். எல்லோரிடமும் பேசமுடியாது.நன்றி வாசிப்பிற்கும் உங்களின் பகிர்விற்கும்.

   நீக்கு
 3. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கும்.
  எல்லாத்துக்கும் கருத்து சொல்லி சிந்திக்க வைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்பது என் கருத்து.... இதில் உங்களுக்கு முரண் இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை சகோ, நானும் உங்கள் கட்சிதான். முரண்படவில்லை. நன்றி வாசித்தமைக்கு.

   நீக்கு