திங்கள், செப்டம்பர் 03, 2012

அதீதத்தில் - என் கட்டுரை

பங்கோர் - பயண அனுபவக் கட்டுரை

மலேசியா,  வளம் கொழிக்கும் ஒர் அழகிய நாடு. எங்களின் நாடு.

சுற்றுப்பயணிகள் வந்து தங்கிச்செல்ல பாதுகாப்பான நாடும் கூட. உலகின் பாதுகாப்பான நாடுகளில்,  மலேசியா பத்தொன்பதாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது எங்களுக்குப் பெருமையே.

சுற்றுப்பயணிகளைக் கவர பலதரப்பட்ட அம்சங்கள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன. சீரான சாலை மேம்பாட்டுத்திட்டங்களால்பயணங்கள் இலகுவாக அமைந்துவிடுவதும் வரப்பிரசாதமே.  . இயற்கை எழில் கொஞ்சும்  இடங்களை நன்கு மெருகேற்றி, சுற்றுப்பயணிகளுக்காக பல வசதிகள் செய்யப்பட்டு, உலக நாடுகளில் இருந்து நிறைய சுற்றுப்பயணிகள் இங்கே வந்து இளைப்பாற வேண்டியே பல திட்டங்கள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டிற்கு நல்ல வருவாயை  ஈட்டித்தருவதால், இத்துறையை நன்கு வளப்படுத்துகின்றார்கள்.

இங்கே உள்ள பல இடங்களுக்கு மலேசியர்களான நாங்கள் கூட சென்றதில்லை, ஆனால் இங்கே குவிகின்ற வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் கணக்கில் அடங்கா.

கடந்த நோன்புப்பெருநாள் நீண்ட விடுமுறையை நன்கு பயன்படுத்திக்கொண்டு, பங்கோர் தீவிற்குச் சென்று வந்தோம். பங்கோர் தீவில் கூட, அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் தான் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள்.



பங்கோர் தீவு - மலேசியாவின் வட மாநிலங்களின் ஒன்றான பேராக்கில் உள்ளது. இயற்கையிலேயே பேராக் ஒரு அழகிய ஊர். சுற்றிலும் காடுகள், மலைகள், கடற்கரையோறங்கள், நீர் வளமான ஆறுகள், குட்டைகள், தாமரைக்குளங்கள், செம்பனை, தென்னை, சோளம், வாழை என அழகிய காட்சிகள் வழி நெடூக பச்சைப்பசேல் என்று கண்களுக்கு விருந்தாகவே அமைந்தது எங்களின் பயணம்.

நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து சுமார் இருநூற்று ஐம்பது கிலோ மீட்டர் சென்றவுடன், பேராக்கின் எல்லை வந்து விடும். நோன்புப்பெருநாள் விடுமுறை மற்றும் சாலையோற சுப்ரமணி ஆலயத்தில் கும்பாபிஷேகம் வேறுஆக, சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டு பேராக் வந்து சேர ஆறுமணி நேரம் பிடித்தது. பொதுவாக மூன்று மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். அங்கே `ஜெட்டிஃபெர்ரி துறைமுக நுழைவாயில், ஒரு நாளைக்கு பத்து வெள்ளி விகிதம் கட்டனம் செலுத்தப்பட்ட பாதுகாப்பான கார் பார்க்கிங் ஒன்றில் எங்களின் காரை ஒப்படைத்துவிட்டு, பங்கோர் தீவிற்குப் ஃபெர்ரியில் புறப்பட்டோம்.

கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கடலில் பயணம். இக்கரையில் இருந்து அக்கரையில் பார்க்கும்போது, அத்தீவு ஒரு சிறிய மலைக் குன்றுபோல் காட்சியளித்தது. ஃபெர்ரி நேராகச்சென்றிருந்தால் (அதாவது கடிகாரத்தின் ஆறு மணியிலிருந்து பன்னிரெண்டு மணி, நோக்கிச்செல்வது) மிக விரைவாகச் சென்றிருக்கும், ஆனால் அது  ஒரு வட்டம் போட்டுக்கொண்டு, கடிகாரத்தின் ஆறு மணியிலிருந்து மூன்று மணி சென்று, பிறகு பன்னிரெண்டு மணியை அடைவது போல் நகர்ந்துக்கொண்டிருந்தது. நிச்சயமாக பயணிகளின் பாதுகாப்பிற்காகத்தான் அப்படி ஒரு வழியை கண்டிருக்கவேண்டும், இல்லையேல் அத்தீவிற்கு குடிநீர் வசதி, இந்தப்பக்கத்திலிருந்து நடுக்கடல் வழியாக பெரிய குழாய் மூலமாக அந்தப்பக்கம் செல்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்.!

ஃபெர்ரியில் ஏறிய அனுபவம் ஏற்கனவே இருப்பினும், என் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கிணங்க, இரண்டு அடுக்குகள் உற்காரும் இடம் தாண்டி, ஆக மேலே, நிற்கின்ற இடத்திற்குச் சென்றோம். பலர் அங்கே டைட்டானிக் பாணியில் `போஸ்கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். சிலருக்கு மயக்கம் வந்து அப்படியே உற்கார்ந்துக்கொண்டார்கள். நாங்கள் அழகிய காட்சிகளை ரசித்துக்கொண்டே சென்றோம்.

சென்று சேர்ந்த கையோடு, ஒரு வேன் வாடகைக்கு எடுத்துக்கொண்டோம். முதலில் மலாக்காரர்தான் வந்தார். எனக்கு அவ்வளவாக விருப்பமில்லை. தமிழர்தான் வேண்டுமென்று அடம் பிடித்து, தமிழர் ஒருவர் கிடைத்தவுடன் தான் கிளம்பினோம். (ஏன் தமிழர்? நிறைய விவரங்களை, தம்பி..தம்பி தம்பி.. என கேட்டுக்கொண்டே போகலாம். அதுவே வேறு இனமாக இருந்தால், கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கும், அதுதான் காரணம் மற்றபடி, இனவெறி எல்லாம் ஒன்றும் இல்லை)

இங்கே நெட்டின் வழி, முன்கூட்டியே அறைகளைப் பதிவு செய்து விட்டிருந்தபடியால், எங்களுக்குப் பிரச்சனையில்லாமல் தங்கும் விடுதி கிடைப்பதற்குச் சுலபமாக இருந்தது. பலருக்கு அறையே கிடைக்காமல் அவஸ்தைப் பட நேரிட்டது. விடுமுறைகளைக் கழிக்க நினைப்பவர்கள், இதுபோன்ற சுற்றுலா தளங்களுக்குச் செல்ல விரும்புகையில், முன் பதிவு செய்துகொள்வது அவசியம். வேறு இடங்களாக இருந்தால், காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடலாம். இங்கே வந்த பிறகு, உடனே கிளம்புவதென்பது சாத்தியப்படாத ஒன்று. ஆக, வேறுவழியில்லாமல், காலியாக இருக்கின்ற ஃபைவ் ஸ்டார் அறைகளை எடுத்தாகவேண்டிய கட்டாய நிலை. ஒரு இரவிற்கு நானூறு அல்லது ஐநூறு ரிங்கிட் கட்டனம் செலுத்தித்  தங்குகிற  துர்பாக்கிய நிலை. நடுத்தர வர்க்க வாசிகளென்றால் இது ஒரு சுமைதான். உணவும் அதிக விலையில். பகல் கொள்ளைதான். வேறுவழி.!?

 முதல் நாள் மாலை ஆறுமணிக்குத்தான் எங்களின் அறைக்குச்சென்றோம். அது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் இல்லை, இருப்பினும் சுத்தமாகவே இருந்தது. தூய்மை, அதுதானே அவசியம்.

இன்று எங்கும் செல்லவேண்டாம், பிரயாண களைப்பில், நன்கு குளித்து விட்டு, ஹோட்டல் அறையின் முன்னே இருக்கும் கடற்கரையோடமாக உலவச்சென்று, சாப்பிட்டுவிட்டு நன்றாக ஓய்வெடுத்துக்கொள்கிறோம். நாளை சந்திப்போம் என, வேன் ஓட்டுனருக்கு விடைகொடுத்தோம். குளித்து, ஓய்விற்குப்பிறகு சாப்பிடச்சென்று, கடற்கரைக் காற்றுவாங்கினோம். அருகே உள்ள கடைகளில் பொருட்களின் விலைகளை விசாரித்தோம். ஏறக்குறை மலேசிய முழுக்க உள்ள கடைகளில் கட்டுப்படுத்தப்பட்ட விலைகளில்தான் பொருட்கள் விற்கப்பட்டது.

கடற்கரைக்கு இரவு நேரங்களில் ஏன் காற்று வாங்கச்செல்கிறார்கள் என்பதையும் அன்றுதான் தெரிந்துக்கொண்டேன். குளுமையான சூழலை அக்காற்று கொண்டுவந்தது. மனதிற்கு மிக இதமாக, மனம் லேசாகிப்போனதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது.

அது ஒரு தூரமான தீவு, ஒதுக்குப்புறமான இடமாதலால், அங்கே காதலர்களின் கொஞ்சலும் ஊடலும் கூடலும் அதிகமாகவே இருந்தது. அண்டை நாடான தாய்லாந்திலிருந்து (பேசுகிற மொழியில் கண்டுக்கொண்டோம்) பெண்களை அழைத்து வந்து, ஓய்வு எடுப்பதாக என்னன்னமோ செய்துக்கொண்டிருந்தார்கள். கடற்கரையிலேயே சில ஆபாசமான காட்சிகளையும் கண்டோம். அப்பெண்களும் வெறும் நீச்சல் ஆடையுடன் தான் உலாவிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை மணலிலேயே உடம்புப்பிடி வேலைகள் எல்லாம் நடைப்பெற்றது. அன்றைய பொழுது அப்படிக்கழிந்த்து.

மறுநாள் காலையிலே எழுந்துவிட்டோம். படகு சவாரியில் அருகருகே இருக்கும் சில தீவுகளைக் காண்பதற்காக கிளம்பினோம். அதுதான் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

`ஸ்பீட் போர்ட்இல் செல்லவேண்டும். அப்படகில் ஏறுவதற்கே சிரமப்பட்டேன் நான். கால்களை இங்கே வைத்தால்,படகு அங்கும் இங்கும் நகர்கிறது. நாங்கள் நான்கு பேரும் எங்கெங்கு அமர்ந்தால் படகு சமநிலையில் இருக்கும் என்பதை படகு ஓட்டுனர், படகை இறுக்கிப்பிடித்துக்கொண்டுவழிகாட்டினார். நான் நடுவில் அமரவேண்டும். படகில் ஏறுவதற்கே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. ஏறியவுடன் படகு வலதுபுறமும் இடதுபுறமும் வேகமாக அசைந்தது. விழுந்தோம் கடலில் என்கிற பீதி இல்லாமல் இல்லை. ஒருவையாக அமர்ந்தோம். நீரைக் கிழித்துக்கொண்டு கிளம்பியது, அதிவேகமாக. அக்கம் பக்கத்துப் படகுகளில் உள்ளவர்கள் `ஊஊஊஎன்கிற உற்சாக சத்தத்துடன் பயணித்தார்கள். எங்களுக்கு மட்டும் பீதி விடவேயில்லை.


ஒரு அழகான தீவில் இறக்கிவிட்டார். அதன் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. சினிமாவில்தான் இதுபோன்ற காட்சிகளைக் கண்டுள்ளேன். நந்தவனமாய் காட்சியளித்தது. சுற்றிலும் அடர்ந்த காடுகள். அற்புதமான கடற்காற்று, மரத்தில் யாரோ கயிறு கொண்டு கட்டிய ஊஞ்சல், மரத்தாலே செய்யப்பட்ட சாய்வு நாற்காலி. மணல்குன்றுகளுக்கு இடையில் இளைப்பாற பெரிய பெரிய பாறைகள். பாறைகளை மோதிச்செல்லும் அலைகளின் ஓசை. கண்ணாடி போன்ற நீர். அதில் அழகழகான வர்ணங்களில் மீன்கள், நண்டு, இரால், sea cucumber, ஜெல்லி ஃபிஷ் என கரையை முத்தமிட்டுச்சென்ற வண்ணமாக கடல் வாழ் உயிரினங்கள். அற்புத காட்சியாக இருந்தது. காணும் இடமெல்லாம் மீன்கள் துள்ளி விளையாடின.


அங்கே அதிகமானோர் உல்லாசமாகத் தமது பொழுதினைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிட்டுக்கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும், பலர் கடலில் மிதந்துக்கொண்டும் தங்களின் விடுமுறைகளில் மூழ்கியிருந்தனர். அங்குள்ள பாறைகளின் மேல் படுத்தால் தூங்கியே விடுவோம்.. அவ்வளவு குளுமை. காண்பதற்கரிய காட்சியாகவே இருந்தது, எழில் கொஞ்சும் அவ்விடம்.

மீண்டும் படகில் ஏறி, சுற்றிலும் உள்ள சில தீவுகளை படகில் அமர்ந்தபடியே கண்ணுற்றோம். ஒரு தீவில், அசல் திமிங்கிலம் போன்ற ஒரு பாறை, ஆமை போல் ஒரு பாறை, முதலை போல் ஒரு பாறை அருகருகே ஒன்றை ஒன்று பார்த்தபடி இருந்தது. நாங்கள் எங்கே இக்காட்சியை தவற விட்டிடுவோமோ என்றெண்ணி, படகோட்டி அதனை அங்கம் அங்கமாக விளக்கிக் கூறினார். அது வாய், அது தலை, அது முதுகுப்பகுதி என..! பார்ப்பதற்கு அதேபோல் தான் இருந்தது. இது ஒரு காட்சிப்பிழையே. படகில் அமர்ந்துக்கொண்டு கேமரா எடுத்துப்படம் பிடிக்கின்ற அளவிற்கு தைரியமில்லை. கைகள் படகின் இருபக்கங்களையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டிருந்தது.

மற்றொரு தீவிற்கும் சென்றோம். அங்கே ஆட்களின் நடமாட்டமே இல்லை.  அழகான இடம்தான் அதுவும். சீனிமா ஷூட்டிங் செய்வதற்குச் சிறந்த இடமாகவே இருந்தது.

உச்சி வெயிலின் கொடுமையால் உடல் அனலாய் இருக்கவே, மதியவேளை வருவதற்குள் கரை சேர்ந்தோம்.


மதிய உணவிற்குப்பிறகு சில சுற்றுலாத் தளங்களைக் காண மீண்டும் வேன் எடுத்து நகர் வலம் சென்றோம். நாங்கள் தங்கியிருந்தது, கடற்கரையோரமாக இருந்த ஹோட்டலில்.  நகர் வலம் எங்களை மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அழகிய சாலையேயானாலும் ஆபத்துகள் நிறைந்த வழிப்பாதையாகவே இருந்தது. பாம்பு நெளிவதைப்போன்ற வளைவுகள் அதிகம். இரண்டு பக்கமும் எந்த தடுப்பும் இல்லாத பாதாளம். எட்டிப்பார்க்கும் போது பயமாகவே இருந்தது.

வேன் கார தம்பியிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டே.. `தம்பி கொஞ்சம் மெதுவா போங்களேன், பாதை பயங்கரமாக இருக்கின்றதே.!

`இல்லைக்கா, இதுக்கே இப்படி பயப்பட்டா எப்படி? நாங்கள் தினமும் ஓட்டுகிறோம், பயமெல்லாம் இல்லை. ஜாலியாக வெளியே பார்த்துக்கொண்டே வாருங்கள், கவலை வேண்டாம்.’  என்றார்.

`இங்கே எந்த இனம் அதிகம்.?’

`யக்கா, ஆரம்பத்தில் நம்மவர்கள்தான் அதிகம். தமிழ்நாட்டிலிருந்து மீன் பிடித்தொழிலுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்தான் நாம். அதன் பிறகு வந்த சீனர்கள், நம்மை வைத்து காடுகளை அழித்து சாலைகள் செய்தார்களாம். இந்த இடத்தின் பெயர் கூட பங் கோர், அது ஒரு சீனரின் பெயர்தான். சீரமைப்புச் செய்யப்பட்டவுடன் எப்படித்தான் மலாய்க்காரர்கள் வந்தார்களோ தெரியவில்லை ..துபுதுபுவென எங்கு பார்த்தாலும் அவர்கள்தான். உணவுக்கடைகள் பெறும்பாலும் அவர்களுடையதுதான். மலாய்க்கார சுற்றுப்பயணிகள் மற்றவர்களின் உணவுக் கடைகளில் சாப்பிட மாட்டார்கள்,  சாப்பாடுக் கடைகள் எங்கும் அவர்களின் ராஜியம்தான். சாப்பாடு எல்லாம் சரியான விலையாக இருந்திருக்குமே, கவனித்தீர்களா..!?’ இது அவர் கொடுத்த தகவல். அவருக்கும் அவர்களின் பாட்டன் பாட்டியின் மூலமாக வாய் வழி சொல்லப்பட்டதாகவே இருக்கலாம். சொல்லும்போதே, இருக்கலாம்! இருக்கலாம்! என சேர்த்துக்கொண்டார்.

செல்லும் வழிநெடுக, சில இடங்களைக்காட்டிக்கொண்டே சென்றார். தமிழர்கள் வசிக்கும் இடம், சீனர்கள் வசிக்கும் இடம், மலாய்க்காரர்கள் வசிக்கும் இடம் என.. எல்லாமும் அழகழகான பெரிய வீடுகள்.

`எப்படி தம்பி, இங்கே இருக்கின்றீர்கள்.? எல்லாமும் இங்கே கிடைக்கின்றதா? வெளியே டவுனுக்கு வரவெண்டுமென்றால், ஃபெர்ரி ஏறி, வாகனம் பிடித்து (சொந்த கார் கொண்டுச்செல்லமுடியாதே, தீவிலும் கார்கள் குறைவுதான்) பல ஊர்களுக்குச் செல்லவேண்டுமே..? கஷ்டமாக இல்லையா?’

`எதுக்குக்கா நாங்கள் வெளியே செல்லவேண்டும்? எல்லமும் இங்கேயே கிடைக்கிறது. இமெர்ஜென்சி கேஸ்தான் வெளியே செல்லவேண்டும், மற்றபடி எல்லாமும் இருக்கு.!என்றார். உண்மைதான் அழகிய தமிழ்ப்பள்ளியும், நம்மவர்களின் கோவில் ஒன்றும் கடற்கரையோறமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது.


சீனக்கோவில் ஒன்றிற்குச் சென்றோம். புத்தர், பெங் சூய் பொம்மைகள், போதிதர்மர் என, நிறைய சிலைகள் அங்கே.  ஊதுபத்தி வாங்கி, மண் நிரப்பப்பட்ட  பாத்திரத்தில் குத்தி விடவேண்டும். அவ்வளவுதான், முடிந்துவிடும் அவர்களின் வழிப்பாடு.

காலில் உள்ள செருப்புகளைக்கூட அகற்றாமல் மூலஸ்தானத்தைச் சுற்றி வருகின்றார்கள். நமக்குப் பார்ப்பதற்கு என்னவோ போல் இருந்தது. ஆனாலும் நுழைந்த வேகத்தில், நோட்டுகளை சிலைகளின் காலடிகளில் வைத்து விட்டு, ஒரு கும்பிடு போட்டப்பின் நகர்ந்து விடுகிறார்கள். வருவோர் போவோரெல்லாம் ஊதுபத்தியைக் கொளுத்தி குத்தி விட்டுச்செல்வதால், புகையின் மணம் மூச்சுத்திறலை ஏற்படுத்தியது. நீண்ட நேரம் உள்ளேயே இருக்கவும் விடாமல் செய்தது அச்சூழல்.

அங்கே ஒரு மீன்குட்டை, அதில் ஏறக்குறைய அறுபத்தைந்து கிலோ எடைகொண்ட ஒரு பெரிய மீனைப் பார்த்தோம். ஆம், நம்மைத்தூக்கி நீரில் போட்டால் நாம் எப்படி நீந்துவோமோ, அப்படி இருந்தது அந்த மீன், பார்ப்பதற்கு.

அக்கோவிலை வலம் வந்தோம். பயணிகளைக் கவரகுட்டி சீனப்பெருஞ்சுவரையும் எழுப்பியிருந்தார்கள்  அதுவும் மிக நீளமாகவே இருந்தது. அதன் அருகில் இருந்த படிக்கட்டுகளில் ஏறி, மலை உச்சிவரை சென்றால், பங்கோர் தீவின் பாதி இடங்களைக்காணலாம்.


கோவிலில் பல சிலைகள் நீரிலேயே இருந்தன. பார்வையாளர்கள் அதில் நாணயங்களை வீசிச்சென்றனர். அது என்ன மாயமோ, என்ன மர்மமோ தெரியவில்லை.. !!நீரில் சிலைகளைக் கண்டுவிட்டால், பாக்கெட்டில் உள்ள சில்லரை நாணயங்களை வீச நாம் தயாராகின்றோம். ஏன்?? யோசிப்போம்.

அதன் பிறகு, டச்சுக்காரர்களின் செங்கல் கோட்டை (KOTA BELANDA) ஒன்றிற்குக் கூட்டிச்சென்றார். எதோ ஒரு நோக்கத்திற்காக எதிரிகளை பீரிங் கொண்டு தாக்குவதற்காக கட்டப்பட்ட அக்கோட்டை, அங்குள்ள மலாய்க்காரகளால் முறியடிக்கப்பட்டு பாதியிலே நிறுத்தப்பட்டதாம்.! அது இப்போது சரித்திரம் சொல்லும் கோட்டையாக, கடலை நோக்கியவாறு காட்சி கொடுத்துக் கொண்டிருந்தது. கல் வெட்டுகள் பல கதைகள் சொல்கிறன. வரலாறுதானே, படித்துக்கொண்டோம்.


பங்கோர் தீவு என்றாலே நெத்திலி மீன், கருவாடுகளுக்குப் பேர் போனது என்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு கூட சில கடைகளில், பங்கோர் நெத்திலி என்றால் மவுசுதான். விலையும் அதிகமே. வேன்காரரிடம் கேட்டேன், `ஏன் பங்கோர் நெத்திலி ரொம்ப ஸ்பெஷல்?’

`அக்கா, நீங்க நம்பறீங்களோ, நம்பலையோ.. மற்ற இடங்களில் உள்ள நெத்திலியையும், இங்கே கிடைக்கின்ற நெத்திலியையும் தனித்ததியாகச் சமைத்து சாப்பிட்டுப்பாருங்களேன், அதன் சுவையின் வித்தியாசம் தெரியும் உங்களுக்கு.! இதை நான் எங்கு வேண்டுமானாலும் அடித்துச்சொல்வேன், மேலும் இங்கே நெத்திலி மீன் பிடிப்பவர்களில் நாம்தான் (தமிழர்கள்) ஸ்பெஷலிஸ்ட். இந்த விஷயத்தில் எல்லோரும் நம்மிடம் கையேந்துவார்கள். எனக்குக்கூட வேன் ஓட்டும் வேலை, விடுமுறை நாட்களில் மட்டும்தான், மற்ற நாட்களில் நானும் நெத்திலி மீன் பிடிக்கத்தான் செல்வேன், கடலுக்குச் செல்ல இயலாத நாட்களில், நெத்திலி வியாபாரம் செய்ய வெளியூர்களுக்குக் கிளம்பிவிடுவோம், நல்ல வருமானம் க்க்கா .!’ கேட்க மகிழ்ச்சியாகவே இருந்தாலும், ஆபத்துகள் நிறைந்த வேலைகளைச் செய்கிறார்களே என்று நினைக்கும் போது, மனசு லேசாக கனத்தது.


`சத்தே ஸ்டோர்ஆம், நெத்திலி மீன், கருவாடு மொத்த வியாபார ஸ்டோர்க்குச் சென்றோம். பங்கோர் போகிறோம் என்றாலே, எல்லோரும் சொல்வது, `கருவாடு, நெத்திலி மீன் வாங்கிவா’, என்பதுதான். நிறைய வாங்கினேன். மலிவு என்றல்ல, ஏறக்குறைய இங்கே விற்கப்படும் விலையில்தான் கிடைத்தது, இருப்பினும் கருவாடு நெத்திலிகள் எல்லாம் மிகவும் சுத்தமாக புதிதாகவே இருந்தன. அவைகளை உலரப்போடுகிற இடங்களுக்கும் சென்றோம், மிக நீளமான பலகைக்கூடாரத்தின் கீழ் நெத்திலி மீன்கள் உலர்ந்துக்கொண்டிருந்தன.

படகு (ஸ்பீட் போர்ட்) செய்யும் இடத்திற்கும் கூட்டிச்சென்றார். ஒரு படகின் விலை லட்சக்கணக்கிலாம். அதன் கட்டை ஒன்றைத் தூக்குங்கள் பார்ப்போம், என்றார். முடியவில்லை அவ்வளவு கனமான கட்டைகள். ஒரு கட்டையின் விலையே மலேசிய ரிங்கிட் இருபத்தைந்தாயிரமாம்.! நீரில் மிதக்க மிதக்க அதன் மவுசு அதிகரிக்கும் என்கிற கூடுதல் தகவலையும் பகிர்ந்துக்கொண்டார். இவ்வளவு பாரமான கட்டைகள் நீரில் மூழ்காமல்..!!? வியப்பாகவே இருந்தது. எல்லாமே புதிய தகவல்கள் எனக்கு.

இறுதியாக, நம் கோவிலுக்குச் சென்றோம். மாரியம்மன் கோவில். இன்னும் நேரமாகவில்லை என மூடிவைத்திருந்தார்கள். ஏழு மணிக்குப்பூஜை, அப்போதுதான் திறப்பார்களாம். வெளியே பல சுற்றுலாப் பயணிகள் அந்த அம்மனின் முகதரிசம் கிடைக்கக் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அடிக்கடி சுற்றுலா பயணிகள் வரும் இடங்களாகத் திகழும் இது போன்ற கோவில்களின் மூலஸ்தான திரைகளை கொஞ்சம் விலக்கிவிட்டால்தான் என்னவாம்..! சாமி குத்தமாகிவிடுமா? இங்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டிலும்தான். நாம் எவ்வளவோ வேகமாக பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பலாமென்றால், நேரகாலம் பார்த்துத்தான் கோவிலைத் திறக்கின்றார்கள். பல இடங்களில், பொன்னான நேரத்தை வீனடிக்க விரும்பாமல், கோவில் வாசலிலேயே விழுந்து கும்பிட்டுச் சென்று விடுகின்ற இக்கட்டான நிலையும் உண்டு என்பதனையும் மறுக்கலாகாது.




எல்லா இடங்களிலும் விரைவாகப் பயணத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய நாங்கள், இங்கே ஒரு மணிநேரம் காத்திருந்தோம்.

அதற்கிடையில் இந்த கோவிலைப்பற்றிய விவரங்களையும் வேன் டிரவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டோம். கோவில் எப்படித்தோன்றியது என்றால்.. முன்னொரு காலத்தில், அலைகளால் அடித்துக்கொண்டு வரப்பட்ட ஒரு பெண், கரையோறமாக கையில் ஏந்தியிருந்த சூலத்தை, தமது மார்போடு அணைத்துக்கொண்டு, கண்களைக்கூட திறக்க முடியாமல் மயங்கிய நிலையில் கிடந்தாராம். சிலர் பார்த்து விட்டு, உதவி செய்யலாமே என மக்களைத் திரட்டிவரும் வேளையில், அப்பெண் மாயமாய் மறைந்துப் போனாராம்.! ஆனால், அந்த சூலம் மட்டும் அங்கேயே இருந்ததாம்.!!

மாரியம்மாதான்,ஆத்தாதான் வந்திருக்கவேண்டும், ( மலேசியாவில், மாரியம்மா வழிப்பாடு மிகவும் பிரசித்திப்பெற்றது, முன்பு இருந்த தோட்டக்கோவில்கள் எல்லாமும் மாரியம்மன் கோவில்தான். அது என்ன காரணமாக இருக்குமென்பது சரியாகத்தெரியவில்லை. !) என்கிற நம்பிக்கையில் அங்கேயே ஒரு கோவிலை எழுப்பி விட்டார்கள். ஆரம்பத்தில் கொட்டகைபோல் இருந்த இக்கோவில், நாளடைவில் சுற்றுவட்டார மக்களால் பிரபலம் அடைந்து, மக்களின் நன்கொடையோடும், அரசாங்கத்தில் உதவியோடும் மிகப்பெரிய கோவிலாகவும் மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

`சக்தி வாய்ந்த கோவில்க்கா, எது கேட்டாலும் கொடுப்பாள் இந்த அம்மா, வேண்டிக்கொள்ளுங்கள்.’ என்றார், வெள்ளந்தியாக.  இதுதான் அங்குள்ள கோவிலின் வரலாறு.

`டங்..டங்..மணியடிக்கும் சத்தம் கேட்டு, கடலைப்பார்த்துக்கொண்டிருந்த நாங்களும் கோவிலுக்குள் நுழைந்தோம். சூடம் ஏற்றி தீபம் காட்ட முடியாத அளவிற்கு காற்று ஜில்லென்று வீசியது. எல்லோரும் ஒன்றாக நின்று, காற்றுக்கு வேலி போட்ட பிறகுதான் தீபம் காட்டப்பட்டது. பிராத்தனையில் மனதும் லேசானது. இரவும் வந்தது.

இரவு ஆகிவிட்டது, இனி எங்கும் போகமுடியாது, நொறுக்குத்தீனி மொத்த வியாபார விற்பனை இடங்களுக்குச் சென்றால் எதையாவது வாங்குவீர்களே, என்றார். அங்கேயும் சென்றோம். கடல்வாழ் உயிரினங்களால் செய்யப்பட்ட பொரி, சீப்ஸ், இனிப்புகள்மிட்டாய் என எல்லாமும் மொத்தவியாபாரத்தில், சீனர்களின் ராஜியத்தில்.

வேன் டிரைவருக்கும் சேர்த்தே வாங்கினேன். இங்கே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் வாங்கினேன்.

`திருப்தியாக சுற்றினீர்களாக்கா? ’ கேட்டார். `தம்பி வார்த்தையே வரவில்லை. மிக்க நன்றி.என்று, பிரிய மனமில்லாமல் விடைகொடுத்தேன்.

அடுத்தமுறை வந்தால் அழையுங்கள், நிச்சயமாக எங்களின் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறேன், இப்போ, அண்ணிக்கு பிரசவம் ஆகியிருக்கு, அதனால் வேண்டாம், என்றார்.

அழைத்ததே விருந்து சாப்பிட்டதைப்போல் இருந்தது, என்று கூறி, உணவுக்கடையில் இரவு உணவை முடித்துக்கொண்டு, அவருக்கான சன்மானத்தையும் வழங்கி, விடைகொடுத்தோம்.

மறுநாள் காலையிலே, பங்கோருக்கு `டாட்டா’ சொல்லி, ஊர் திரும்பினோம்.


http://www.atheetham.com/?p=2128 - 

அதீதம் ஆசிரியர் குழுவிற்கு எனது மனப்பூர்வ நன்றி

   

14 கருத்துகள்:

 1. நல்ல அங்கீகாரம், வாழ்த்துக்கள் சகோ!

  கட்டுரையை வாசித்துவிட்டு பிரிதொரு சமயம் கருத்திடுகிறேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்..இப்போ வாசித்து விட்டீர்களா?

   நீக்கு
 2. அருமையான பங்கோர் பயணப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

   நீக்கு
 3. நல்ல சுற்றுலாப் பகிர்வு.
  அதீதததில் வெளியானமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும்

   நீக்கு
 4. நல்ல கட்டுரை... தங்களது பயணக் கட்டுரையை ரசித்தேன்....

  அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் சகோதரி... ரொம்ப சந்தோசமாய் இருக்கிறது... நன்றி...

  பதிலளிநீக்கு