ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

WARTS


ஃபேஷியலுக்குச் (முக ஒப்பனை) சென்றேன். வழக்கமாகச் செல்லும் இடத்திற்குச்செல்லாமல், இந்த முறை, முக ஒப்பனைக்கலையில் பட்டம் வைத்திருக்கும் நம்ம பெண் ஒருவரிடம் (மகள் மாதிரி) சென்றேன். தோழியின் மகள் அவள். தோழியைச் சந்திக்கும் போதெல்லாம், `ஒரு முறை அவளிடம் சென்று ஃபேஷியல் செய்துபார்.. உனக்கு நிச்சயம் பிடிக்கும் என்பாள்’. அதனால் இம்முறை அங்கே...

வேறொரு துறையில் படித்துப் பட்டம் வாங்கிய அவள், வேலை வேலை என்று அலையாமல், இந்த கலையை ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு குடும்பத்தின் உதவியோடு சொந்தமாக ப்யூட்டி பார்லர் ஒன்றைத் திறந்து, சிலரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு, முழுநேரத்தொழிலாகச் செய்துவருகிறார் அப்பெண்.

வென்மையான ஆடையில் ஒரு மருத்துவரைப்போன்ற தோற்றத்தில் காட்சி கொடுத்தார் அப்பெண். ரொம்ப அழகு.

என் முகத்தில் கை வைத்தவுடன் சொல்லிவிட்டார், முகத்தில் நிறைய மருக்கள் இருக்கின்றன என்று.! என் கண்களுக்குத்தெரியாத அம் மருக்கள் அவர் கண்களுக்கு மட்டும் எப்படித்தெரிகிறதென்று கேட்டேன்.

பெரிய கண்ணாடியை முகத்திற்கு நேராகக் காட்டி, மருக்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று காட்டினார். அதிர்ந்துதான் போனேன்..!! அதிகமான மருக்கள். எப்படி இவ்வளவு மருக்கள் எனக்கே தெரியாமல்.. !? சிலதுகள் பெரிதாகியிருந்தன.. சிலதுகள் சிறிது சிறிதாய்..

பெரிதாய் வளர்ந்துள்ளதைப் பார்க்கும்போது... கே.ஆர்.விஜயா, சரோஜாதேவி போன்றோர்களுக்கு உள்ள அழகு மச்சம் போலவே இருந்தன. எனக்கும் அழகு மச்சங்கள் உள்ளன என்றே பெருமிதம் கொண்டிருந்தேன் இவ்வளவு நாளாக.... பார்த்தால்... மருவாம்..!!

ட்ரீட்மெண்ட் கொடுக்கவா ஆண்டி? கேட்டார்.

எப்படிம்மா, வலிக்காதா?

வலிக்காது, எறும்புக்கடிபோல் சுறுக் என்றுதான் இருக்கும்.. கொஞ்சம் பணம் செலவாகும், ஆனால் இனி அங்கே அந்த மரு வரவே வராது. என்றார்.

அழகாய் மிளிர வேண்டுமென்றால் - வலியையும் விலையையும் பார்க்கமுடியுமா?  சரி என்றேன்.

கண்களை மூடிவிட்டு, ஒரு கருவியின் உதவியோடு, எல்லாவற்றையும் சுட்டு எடுத்தார்.. முடி பொசுங்குவதைபோன்ற வாசனை வந்தது. வலிதான் - பொறுத்துக்கொண்டேன்.

மூன்று நாள்கள் கழித்து முகம் பளிச் என்று அழகாக இருந்தது. கரும்புள்ளிகள் இல்லை.. ஸ்மூத் ஆக இருந்தது.

முகத்தில் இருந்த  மருக்களை எடுத்ததிலிருந்து, யாராவது மருக்களோடு இருந்தால் - ஆலோசனை வழங்கலாம் போல் தோன்றுகிறது. மருக்களை எடுத்துவிட்டால், உங்களின் முகமும் பொலிவுடன் பளிச்சென்று இருக்குமே, முயலலாமே..! என்று சொல்லவேண்டும்போல் இருக்கிறது.

அந்தப் பெண்ணிடம் கேட்டேன், ஏன் இப்படி மருக்கள் என்றுமில்லாத அளவிற்கு அதிகமாகக் காணப்படுகிறது திடீரென்று..?

அவள் சொன்னாள்.. அதற்கு நிறைய ரீஸன் இருக்கிறது ஆண்டி. அதில் ஒன்று, வயது.!

“எனக்கொன்றும் அவ்வளவு வயதாகவிடவில்லை’’ - நினைத்தேன், ஆனால் சொல்லவில்லை.

அவளுக்கு நான் ஆண்டிதானே..!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக