செவ்வாய், மே 07, 2013

ஒர் பயண அனுபவம்...

சென்ற வாரம் தமிழ் நாடு சென்று வந்தேன், பல முறை சென்று வந்திருப்பினும் இந்த முறை கொஞ்சம் நொந்துதான் போய்வந்தேன்.

இயற்கையின் கொடுமையில் நீர் வளம் வறண்ட நிலையில், அதிக உஷ்ணத்தில் வெந்துபோய் வந்தேன்.

உஷ்ணத்தில் கொடுமையில் நடக்கவே முடியாத நிலையில் கால்களில் செருப்பு அணியாமல் நீண்ட தூரம் கோவில்களுக்கு நடக்கையில் கால்களில் நடுக்கம் ஏற்பட்டு மயக்கமே வந்துவிட்டது.

முதல்முறையாக திருப்பதி ஏழுமலையானை சந்திக்கச் சென்று வந்தேன். அடேயப்பா எவ்வளவு கடுமையான காவல் கெடுபிடிகள்.!   விமானநிலையத்தில் கூட அவ்வளவு கெடுபிடிகள் இல்லை.. தலையில் பூ கூட வைக்கக்கூடாதாம்.! எல்லாவற்றையும் பிய்த்து எறிந்த பின்னே உள்ளே அனுப்புகின்றார்கள். பண வசூல், வெளிநாட்டவர்களுக்கு ஒரு ரேட், உள்ளூர்வாசிகளுக்கு ஒரு ரேட்.

இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் கூட்டத்தைக் கண்டவுடன் எனக்கு கிறுகிறுப்பே வந்துவிட்டது. ஒரு முக்கிய பிரமுகர் வருகையின் போது, நுழைவாசல் மூடப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அப்படியே கோழிகூண்டில் அடைக்கப்பட்டதுபோல் பூட்டப்பட்டனர். நல்லவேளை எங்களின் தரிசனம் முடிந்தபிறகே பிரமுகர் வருகை இருந்ததால், நாங்கள் நான்கு மணிநேரத்தில் முடித்துக்கொண்டு வெளியே வந்துவிட்டோம். இலவச தரிசனத்தில்  குழந்தைகள் ஒருபுறம் கூச்சலிட்டவண்ணமாக.. வேண்டாம் போகிறோம் என்றாலும் வெளியே செல்லமுடியாத நிலையில் மக்கள் உள்ளே அவ்வளவு நெரிசலாக, அடைக்கப்பட்ட நிலையில்.. !

பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் சுலபமாக உள்ளே நுழைந்தும் பல கெடுபிடிகளின் மத்தியில் ஒர் இடத்தில் அடைத்துவைக்கப்பட்டு, ஒரு பாரத்தைப் பூர்த்திசெய்து கொடுத்தபின்பே அடுத்தக்கட்டத்திற்கு நகரவேண்டும். பூர்த்தி செய்கிற பாரம்வேறு தீர்ந்துபோகவே அங்கேயும் சில சலசலப்புகள். அதையும் சமாளித்தாகவேண்டிய கட்டாயம். முகத்தைக்கடுமையாக வைத்துக்கொண்டே நமக்கு உத்தரவு போடுகிறார்கள். விட்டால் அடித்தே விடுவார்கள் போலிருக்கு. தள்ளுகிறபோது யார் எவர் பெண்கள் குழந்தைகள் என்கிற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லோரையும் ஒரே தள்ளுதான்.

கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு நாங்கள் நுழையும் வாசலில் இலவச தரிசனம், குழந்தைகள் படும் அவஸ்தையைச் சொல்லவும் வேண்டுமா.! கத்திக்கதற உள்ளே அழைத்துச்செல்கிறார்கள். ஒரு குழந்தை கதறிய கதறு எனக்கே பரிதாபமாக இருந்தது. இறந்துவிடுவாளோ குழந்தை என்றுகூட தோன்றியது. இறைவனைக்காண எவ்வளவு மனவுளைச்சல் அங்கே.!

குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு இலவசம் என்றவுடன், பலர், குழந்தைகளை தூக்கிக்கொண்டு வரிசையில் முட்டிமோதி நிற்கின்றார்கள். நிஜமாலுமே குழந்தையா என்பதனைப் பரிசோதிக்க, குழந்தைகளின் பற்களை ஆராய்கிறார்கள். பற்கள் இருந்தால், குழந்தை அல்ல, உடனே அவர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள். காலில் விழாத குறையாக கெஞ்சிகூத்தாடிக் கொண்டிருக்கின்றார்கள் பக்தர்கள். வேண்டாம் போய்விடலாம் என்பதற்குக்கூட முடியாமல் எல்லோரும் முண்டியத்து நுழைவதற்கே முயல்கின்றார்கள். மனித சுனாமியில் நாமும் அடித்துச்செல்லப்படுகிறோம்.

அந்த ஏழுமலையானைத்தரிசிக்க பல மைல்கள் நடந்தே செல்கிறார்கள். தகிக்கும் தார்சாலைகளில் கால்களில் செருப்புகூட அணியாமல், கையில் கிடைக்கின்ற உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டு வரும் காட்சி.. யப்பா இந்திய பக்தர்களே, உங்களின் பக்திக்கு தலைவணங்குகின்றோம்.

இது முதல் இரண்டுநாள் அனுபவம். பயணம் நான்கு நாள்கள். திருப்பதியிலேயே  இரண்டு நாள்கள் தீர்ந்துபோனது. சென்னையிலிருந்து அரைநாள் செல்வதற்கு அரைநாள் திரும்புவதற்கு. ஒரு நாள் முழுக்க எழுமலையானை தரிசிக்க. இரண்டு நாள்கள் போச்சா.!

சென்னை வந்தோம். இரண்டு நாட்கள் எங்கும் செல்லாமல் சென்னையிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஷாப்பிங், பழைய வெள்ளிக்கொலுசுகள் மாற்றுவது (மலேசியாவில் அது முடியாது, காரணம் வெள்ளிக்கு மவுசு குறைவு), போன்ற சில்லரைவேலைகளை முடித்த பிறகு அருகில் உள்ள சில உல்லாசத் தளங்களுக்குச் சென்று  ஓய்வு(!) எடுக்கலாம் என்கிற எண்ணத்தில் இருந்தோம். ஆனால் எல்லாம் பாழ்.

ஏன் பாழ்? FOOD POISONING ஆகி அப்படியே படுத்தபடுக்கையாகிவிட்ட நிலை. எல்லாம் நன்றாகவே சென்றுகொண்டிருக்கையில் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றினில் சாப்பிடச்சென்றோம். காலை உணவு. ஹோட்டல் இரண்டுமாடிகள் கொண்ட கட்டடம், மேல்மாடி மதிய உணவிற்கு மட்டுமே திறக்கவிருப்பதால், கிழே முழுக்க மக்கள் நிறைந்திருந்தார்கள், நிறைந்து விட்டார்கள் என்பதைவிட உட்காருவதற்கு எங்களுக்கு இடம் கிடைக்காததால், படிக்கட்டுகளின் அருகில் உள்ள ஒருமேஜையில் அமர்ந்து உணவை ஆடர் செய்தோம். உணவு வந்தது, அப்பொழுது பார்த்து மேல்மாடியில் இருந்து ஒருவர் துடைப்பத்தைக்கொண்டு மேலிருந்த தூசு குப்பைகளை கீழே தள்ளிக்கொண்டிருந்தார். குப்பைகள் கீழே படியில் விழுந்தாலும், தூசுகள் பறந்து எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தன. காப்பியை ஒரு கைகொண்டு மூடினாலும், உணவை அப்படிச்செய்யமுடியவில்லை. எவ்வளவோ சொன்னேன், சாப்பிடுகிறோம் கூட்டாதீர்கள், என்று, யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை. கணவர் ஒரு பக்கம் `சும்மா இரு, சும்மா இரு..’ என்று உத்தரவு போட்டுக்கொண்டிருந்தார்.

சாப்பிட்டும் சாப்பிடாமலும் ஹோட்டல் அறைக்கு வந்தோம், மனபிராந்தியோ என்னவோ தெரியவில்லை,  விடாமல் வயிற்றுப்போக்கு ஆரம்பமாகிவிட்டது. எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும். இதனால், அதனால்தான் வயிற்றுப்போக்கு வந்தது என்று சொல்வதைவிட, ஒட்டுமொத்தமாக தூய்மைக்கேடு நிறைந்த ஒரு நகரத்தின் சூழல் எங்களை ஆட்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம்.

இக்காரணத்தால் எங்கும் செல்லாமல் ஒரு நாள் முழுக்க அறையினிலேயே முடங்கிக்கிடந்ததால், சற்று ஓய்வாக இருக்குமென்று நினைத்து, அருகில் உள்ள எதாவதொரு பியூட்டி  பார்லருக்குச் சென்று கொஞ்சம் ஃப்ரஷ்சாகி வரலாமே என்றெண்ணி அங்குள்ள என் உடன்பிறவா சகோதரி ஒருவரின் மூலமாக ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்கு பேஷியல் சென்றேன்.

நிலையம் அழகாகவே இருந்தது. அலங்கரிக்கப்பட்ட விளம்பரப்பலகை, நுழைந்தவுடன் மனதைத்தொடும் நறுமணம், சீருடை அணிந்த பணியாட்கள், பரபரப்பான சூழல் என பார்ப்பதற்கு தெம்பாகவே இருந்தது. கடுமையான வெயிலில் வந்ததன் காரணத்தால், அங்கே நுழைந்தவுடன் அறையின் குளுமை மனதிற்கு இதமாகவே இருந்தது.

என்ன விலை? நாற்பத்தைந்து நிமிடத்திற்கு தொள்ளாயிரத்தைம்பது ரூபாய். மலிவு அல்லவே, எங்களின் ஊரைவிட விலை அதிகம்தான். இங்கே இரண்டு மணிநேரத்திற்கு அறுபத்தைந்து ரிங்கிட் மட்டுமே.

இரண்டு நிமிடங்கள் காத்திருங்கள் என்று சொல்லி உள்ளே சென்ற பெண், அரை மணிநேரமாக வெளியே வரவில்லை. நேரமாகும் என்று தெரிந்திருந்தால் இந்த காரியத்திற்கு ஒத்திருக்கமாட்டேன். மேலும் சென்னையில் இந்த சர்வீஸ் எப்படியிருக்கும் என்பதனை அனுபவிக்கவே இந்த விபரீத முயற்சி. அதைவிட, அந்த பார்லரில் பல பிரபல நடிகைகளும் பேஷியல் செய்வார்கள் என்று குறிப்பிட்டு சில நடிகைகளின் பெயர்களையும்  சொன்னதால், இங்கே ஏதோ ஒரு விஷேசம்  இருக்குமென்றெண்ணி காலதாமதத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் காத்திருந்தேன். இடையில் கொஞ்சம் எரிச்சலுடன் குரல்கொடுத்து நினைவுறுத்தினேன்..

உள்ளே அழைத்துச்சென்றவுடன்தான் எனக்காக அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. தூய்மை துளியளவு கூட இல்லை. தலைமாட்டில் ஒரு சிறிய துண்டு, அதை பலர் உபயோகப்படுத்தியதுபோல் அசுத்தமாகவே இருந்தது. அதன்பிறகு எனது ஆடைகளை களையச்சொல்லி அவர்கள் கொடுத்த மேலாடை ஒன்றினை அணியச்சொன்னார்கள். அந்தக் கத்தரிப்பு ஆடையிலும் அங்கேயும் இங்கேயும் க்ரீம்’களின் பிசுபிசுப்பு.. அணியவே அருவருப்பாக இருந்தது. அதையும் பலர் பயன்படுத்தியதுதான். மாற்றாமல் மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துகிறார்கள். க்ரீம்’கள் அடுக்கிவைத்திருக்கும் ட்ரொலி மோசமாகவே இருந்தது. வெளியே மட்டும் மேக் ஆப் செய்திருந்தார்கள் உள்ளே அசுத்தமாகவே இருந்த்து.  நான் இதுவரையிலும் இதுபோன்ற ப்யூட்டி ஃபார்லரைக் கண்டதில்லை. எனக்கு இது பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

சேவை என்று எடுத்துக்கொண்டால் அதுவும் பயங்கர கோளாறாகவே இருந்தது. ஆரம்பித்தவுடன் முகத்தில் scrap போடுகிறார்கள். skin milk போட்டுத்தான் முகத்தை சுத்தம்செய்வார்கள் அதன்பிறகே scrap போடுவார்கள். இங்கே எல்லாம் தலைகீழாக நிகழ்ந்தது. அதுமட்டுமல்ல, அந்த scrap தூய்மையாகத்துடைத்து எடுத்தபின்பே மற்ற வேலைகளைச் செய்வார்கள் ஆனால் இங்கே ஒன்றின்மேல் ஒன்றாகப்போட்டு முகத்தைத் தேய்த்துக்கொண்டிருந்தார் அப்பெண்மணி. இதில் இடையிடையே நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்கிற ஐஸ் வேறு, கொஞ்சங்கூட ஜீரணிக்கமுடியாத நிலையில் புழுவாய் நெளிந்துகொண்டிருந்தேன் நான். வெளியே மட்டுமே ஏர்கோண்ட் குளுகுளுவென, உள்ளே செம சூடு. இந்தச் சூட்டில், முகத்திற்கு ஸ்டீம் போடுகிறேன் என கண்களுக்கு நேராக அந்த ஸ்டீம் கருவியை வைத்துவிட்டார் அப்பெண்மணி. அதைக் கொஞ்சம் நகர்த்தமுடியுமா? என்று கேட்டதிற்கு, காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. நானே நகர்ந்து படுத்துக்கொண்டதால் தப்பித்தேன், இல்லையேல் கண்களின் நிலை.!? தேவைதான்.

க்ரீம்கள் பாட்டல் பாட்டலாக ட்ரொலியில் வைத்துக்கொண்டுதான் ஃபேஷியல் செய்வார்கள். அதன் நறுமணமே மனதிற்கு இதமாக இருக்கும். பயன்படுத்துகிற அனைத்துப்பொருட்களும்  ஆளுக்கு ஆள் புதிதாக இருக்கவேண்டும். துணி முதல் துண்டுவரை சுத்தமாக இருக்கவேண்டும். ஆனால் இங்கே.!? ஒரு தட்டில் மூன்றுவிதமான க்ரீம்களை பிதுக்கி வைத்துக்கொண்டு, பிரஷ் பயன்படுத்தாமல் கைகளைக்கொண்டே  வேலைகளைச் செய்கிறார்கள். தொட்டு தொட்டு குழப்பி உழப்பி நம் முகத்தில் அப்புகிறார்கள். அது என்ன க்ரீம்.? என்ன ப்ரண்ட்.?  போன்றவைகளை நமக்குக்காட்டாமலேயே  வைத்துக்கொள்கிறார்கள். அசுத்தமான துண்டுகளைப் பயன்படுத்தி கைகளைத்துடைத்துக்கொள்கிறார்கள். உள்ளே நீர் வசதி கிடையாது. வெளியே சென்று நீர் கொண்டுவந்து பஞ்சுகளால் நனைத்து நம் முகத்தைத் துடைக்கின்றார்கள்.  அந்த நீர் தூய்மையானதுதானா என்பது கூட சந்தேகம்தான்.

பேஷியல் ஒரு ஓய்வு நிலையமாகத் திகழவேண்டும். தியானத்திற்கு சென்று வந்ததைப்போன்ற புத்துணர்வைத்தரவேண்டும். நமக்கு அவர்கள் வழங்குகிற சேவையில் நாம் மன அமைதி கொண்டு, சரும அழகை மேருகேற்றிக்கொள்கிற நிலை வரவேண்டும். அங்கே சென்று மனவுளைச்சலுடன் திரும்பியது மோசமான அனுபவமே.

சத்தம் போட்டுவிட்டு வந்தேன்.

பணம் தாரளமாக வாங்குங்கள், கொடுக்கக் காத்திருக்கின்றோம் ஆனால் நீதி, நேர்மை, கடமை, கண்ணியம், தூய்மை, ஆரோக்கியம் போன்றவற்றில் கொஞ்ச கூடுதல் கவனம் செலுத்துங்கள்.!

சில இடங்களில் சேவைக்கு ஏற்ற தேவை இல்லை. சில இடங்களில் தேவைக்கு ஏற்ற சேவை இல்லை. இதுதான் அங்குள்ள நிலை.

கும்பிடுறேன் சாமி.







12 கருத்துகள்:

  1. இந்திய அனுபவம் உங்களுக்கு மோசமானதாகவே அமைந்து விட்டது போலும்.

    திருப்பதியில் எப்போதுமே தள்ளு முள்ளு தான்.... அதற்கு பதில் இன்னும் பல கோவில்கள் மனித நடமாட்டமே இல்லாத கோவில்கள் உண்டு தமிழகத்தில். இப்போதெல்லாம் அங்கு தான் செல்கிறேன். ஆண்டவனிடம் One to One பேசுவது போல பேசிவிட்டு வருகிறேன்.....

    ஃபேசியல் - என்னத்த சொல்ல.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்துகொண்டமைக்கும் வருகைக்கும் நன்றி வெங்கட் சார்.

      நீக்கு
  2. // இறைவனைக்காண எவ்வளவு மனவுளைச்சல் அங்கே.!// இந்தியாவில் புரிந்துகொள்ள முடிய ஒரு விஷயம் தான்
    //நாற்பத்தைந்து நிமிடத்திற்கு தொள்ளாயிரத்தைம்பது ரூபாய்.// அடிக்கடி அந்த பார்லர்களைக் கடக்கும் பொழுது யோசிப்பது உண்டு, இன்று அறிந்து கொண்டேன்.. பார்லர் உள்ளே நடக்கும் விஷயங்கள் படிபதற்கே அருவருப்பாய் உள்ளது...

    இந்தியப் பயணம் உங்களுக்கு மிகக் கொடுமையாய் தான் இருந்திருக்கும் போல...

    நாடு உருப்பட அதே சாமியை நானும் கும்புடுறேன் :-)

    பதிலளிநீக்கு
  3. நல்ல வேளை புரட்டாசி மாதம் செல்லவில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தனபாலன், அந்த மாதத்தில் இங்கேயே கூட்டம் ஆளைக்கொள்ளும். நன்றி.

      நீக்கு
  4. சென்னையில் மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவரும் நீங்கள் அனுபவித்த கொடுமைகளைத்தான் தினம் தினம் அன்றாட வாழ்வில் அனுபவித்து வருகிறார்கள்,கொடுக்கும் பணத்திற்கு தகுந்த சேவை எந்த விசயத்திலும் இங்கு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மார்கெட் சென்றேன் சகோ. வெட்டிவைத்திருக்கும் மாதுழம் பழம் நல்ல சிகப்பு நிறத்தில் தகதகவென மின்னியது.
      இதேபோன்று நல்ல பழங்களாகப் பார்த்து பத்துகிலோ கொடுங்கள், மலேசியாவிற்குக்கொண்டு செல்லவேண்டும், என்றோம்.
      எங்களுக்கு எடுக்கத்தெரியாது. நீங்களே பார்த்துப்போடுங்கள் என்று பொறுப்பினை அவரிடமே விட்டோம்.
      விலையைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டார். இருப்பினும் நாட்டிற்கு பழங்களைக்கொண்டு வந்து உற்றார் உறவினர்களோடு பங்கிட்டபோது அனைவரும் பழங்கள் குறித்து குறையையே சொன்னார்கள். அனைத்தும் சிகப்பு அல்ல லேசான மஞ்சள் நிறத்தில் கால்வாசி பழுதான நிலையிலேயே இருந்தன...
      இது எதனால் வந்தது என்று தெரியவில்லை. நீண்டநேரம் விமானத்தில் அடைக்கப்பட்டதால் வெப்பத்தின் தாக்குதலால் பழங்கள் வெம்பிப்போயிருக்கலாம் இருந்தபோதிலும் அதன் நிறம் மாறுமா என்ன?
      முடியலங்க...

      நீக்கு
    2. //அனைத்தும் சிகப்பு அல்ல லேசான மஞ்சள் நிறத்தில் கால்வாசி பழுதான நிலையிலேயே இருந்தன...//
      ///நீண்டநேரம் விமானத்தில் அடைக்கப்பட்டதால் வெப்பத்தின் தாக்குதலால் பழங்கள் வெம்பிப்போயிருக்கலாம்//

      நீங்கள் வாங்கிய பழங்கள் ஏற்கனவே கால்வாசி பழுதான நிலையில் இருந்துள்ளது அதுதான் காரணம், நீங்களே பார்த்து கொடுங்கள் என்று நீங்கள் சொன்னதை பயன்படுத்திக்கொண்டு அதை கடைக்காரர் உங்களிடம் விற்றுவிட்டார்.

      வெட்டிவைத்திருக்கும் பழங்கள் என்றுமே நல்ல பழங்கலாக இருக்கும்,ஆனால் நமக்கு விற்பது வேறாக இருக்கும்.எனவே பழங்களை நாமே தெரிந்துஎடுக்க வேண்டும்.

      விமானம் குளிர்சாதன வசதி உள்ளதால் அது ஒரு காரணமாக இருக்க முடியாது மேடம்.

      நீக்கு
  5. எனக்கும் தமிழ்நாட்டு பயணத்தின் போது செம கடுப்பு வந்தாலும் எதுவுமெ எழுதல சகோதரி...
    இருக்கும் உறவை சிதைத்துவிடுமோ என்பதால் தான்

    பதிலளிநீக்கு