புதன், டிசம்பர் 04, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு

இரண்டு நாட்களாக இங்கே ஒரு பிரச்சனை மிக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இங்குள்ள இந்துக்களுக்கு இப்படி ஏடாகூடமாக எதாவது என்றாவது ஒருநாள் நடக்குமென்று ஏற்கனவே தெரியும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே.. அதுபோல் பிரச்சனை வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றது அரசாங்கம்.

உலகம் இந்நிகழ்வை எப்படிப் பார்க்கின்றதென்று பல ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் எழுதி உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரச்சனை இதுதான்-

பூஜாங் பள்ளத்தாக்கு என்கிற ஒரு இடம் கெடா மாநிலத்தில் உள்ளது. அங்கே என்ன சிறப்பு.? அது சோழ பல்லவமன்னர்கள் வந்து தங்கி வாழ்ந்த ஆதாரங்களைத் தாங்கி நிற்கும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப்பின்னணியைச் சொல்லும் அற்புத ஊர்.

UNESCO அறிவித்திருக்கும் உலகப்பாரம்பரியச் சின்னங்களான ஜக்கார்த்தா - போரோபோடர் மற்றும் சயாம் - அங்கோர்வாட் போன்ற இடத்திற்கு சரி நிகராக வைக்கப்படவேண்டிய பூஜாங் பள்ளத்தாக்கு, கட்டுமான நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டதால், இன்று அவர்கள் அதை புல்டோசர் ஏற்றி தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

தரைமட்டமான பிறகு.. ``நீ, நான், உன்னால் பிரச்சனை , நான் அல்ல, எனக்குத்தெரியாது, முந்தய அரசாங்கம், முன்னால் மந்திரி..’’ என ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


உலக வரலாற்றுச்சின்னம் நாட்டில் இருப்பதற்கு நாடு பாக்கியம் செய்திருக்கவேண்டும். அதுவும் எம் முன்னோர்களால் இந்தச் சிறப்பு என்கிறபோது - பெருமைதான்.

உலகமே நம்மை நோக்குவதற்கு இந்தச்சின்னம் ஒர் அரிய பொக்கிஷம் அல்லவா.!

மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒன்றாக வைத்துப்பார்த்து, அவ்விடத்தில் வரலாறு, இந்து பௌத்த மதத்தைப் பறைசாற்றுகிறது என்பதற்காக இக்கோவிலை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல் நாடகத்தை நினைத்து மனம் வேதனைப் படுகிறது.

இப்போது இந்த Candi Lembah Bujang சில இடங்கள் உடைபட்ட நிலையில் இருக்கின்றதே, இது அவமானம் இல்லையா?

சில தமிழர்கள் அழுகிறார்கள் - இந்த அவல நிலையை நினைத்து.

பத்திரிகைகள் அரசாங்கத்தைச் சாடுகிறது, ஏன் இந்த அவலம்? என்று.

ஆய்வாளர்கள் விரைகிறார்கள் அங்கே.. நிலவரத்தை அறிந்து அதை மீண்டும் எப்படி உருவாக்குவது என்று கலந்தாலோசிப்பதற்காக...

ஆட்சிதான் உங்களின் கைகளில் உள்ளதே. வரலாறு எதைச்சொன்னால் என்ன? ஏன் இந்த மூடுமந்திரம்.!?

வெட்கம்...

மேல் விவரம் அறிய - LEMBAH BUJANG TEMPLE என்று கூகுளில் தேடி வாசிக்கவும்.



11 கருத்துகள்:

  1. //தரைமட்டமான பிறகு.. ``நீ, நான், உன்னால் பிரச்சனை , நான் அல்ல, எனக்குத்தெரியாது, முந்தய அரசாங்கம், முன்னால் மந்திரி..’’ என ஒருவர் மாற்றி ஒருவர் அரிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
    //

    இப்படி சொல்லத்தான் இவர்கள் லாயக்கு ...

    பதிலளிநீக்கு
  2. பாதுகாக்க வேண்டிய ஒன்றை இப்படிச் செய்துவிட்டார்களே.... எல்லாம் அரசியல்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது பாரம்பரியத்தைச் சொல்லிவிடுமாம் அந்தச் சின்னம். காழ்ப்பு. உருப்பட்டமாதிரிதான்.
      உலகத்தின் அதிக முஸ்லீம்கள் வாழும் நாடான இந்தோனீசியா கூட விநாயகர் உருவத்தை ஒரு மியூசியத்தின் வரவேற்புச் சின்னமாக வைத்திருக்கின்றார்களாம். பஞ்சபாண்டவர்களின் சிலைகளை அங்குள்ள பிரமாண்ட கலைக்கூடங்களில் காணலாம் என்றும் சொல்கிறார்கள்.
      எங்கள் நாட்டில் நிலவரம் பார்த்தீர்களா?
      வெட்கம் வெட்கம்

      நீக்கு
  3. மூன்றாண்டுகளுக்கு முன்னர் மலேசியா வருவதற்காக வாய்ப்பு ஒரு முறை கிட்டியது. கிடாமாநிலத்தில் உள்ள இராஜராஜன் காலத்து அடித் தளங்களை எல்லாம் நேரில் பார்த்து வியந்தேன். அதற்கு இந்த நிலைமையா, வேதனையாக இருக்கிறது சகோதரியாரே.
    பழமையின் மதிப்பினை அறியாதவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் நடக்கிறது சகோ. இங்குள்ள பலருக்கு குறிப்பாக சீன மலாய் அன்பர்களுக்கு.. பூஜாங் பள்ளத்தாக்’ஆ? என்ன இருக்கு அங்கே என்கிறார்கள்.! அறிமுகம் செய்து வைத்து மரியாதை செலுத்தவேண்டும், வரலாறு காக்கப்படவேண்டும் என்கிற சிந்தனை துளிகூட இல்லாத மூடர் கூட்டம் மலிந்த ஊர் இது.

      நீக்கு
  4. கொடுமை... முன்பு இந்துக்கோயில்களை இடித்தார்கள். தற்போது வரலாற்று நினைவுச்சின்னங்களை தகர்க்கிறார்கள். சகோ, அரசாங்கத்தில் தமிழ் எம்பிக்கள் இருக்கிறார்கள்தானே... யாரும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லையா..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மணிமாறன். இது இந்துக்கள் அல்லது தமிழர்கள் பிரச்சனையன்று. நாட்டின் அரசாங்கத்தின் பிரச்சனை. உலகமே அரசாங்கத்தின் மீது காறி உமிழ்கிறது.

      நீக்கு
  5. பாதுகாக்க வேண்டிய ஒன்றை இப்படிச் செய்து விட்டார்களே...
    கொடுமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதுதான் அனைவரின் பார்வையும் பூஜாங் பள்ளத்தாக்கின் மேல் திரும்பியுள்ளதென்று ஒரு மந்திரி சொல்கிறார்

      நீக்கு
    2. வரலாற்றுச்சின்னத்தை உடைத்துவிட்டு அதுதான் நல்ல அறிமுகம் என்கிற பார்வை கொடூரமாக இருக்கின்றது.

      நீக்கு