வியாழன், ஜனவரி 09, 2014

தேங்காய்கள்

தைபூசத் திருநாள் நெருங்கினாலே தேங்காய்களின் விலை கிடுகிடுவென ஏறும்.

அதுவும் இந்த முறை அனைத்துப்பொருட்களும் அதிக அளவில் விலையேற்றம் கண்டுள்ளதால், தைபூசத்திருநாளில் தேங்காய்களைக் குறிவைத்து அவைகளின் விலையையும் அதிக அளவில் ஏற்றிவிட்டார்கள். விளைப் பொருட்களின் பற்றாக்குறையால் அவைகளின் விலை, ஏற்றம் காண்கிறது என்பது ஒருபுறமிருந்தாலும், தைபூசத் திருநாளில் தெருவில் உடைப்பதெற்கென்றே பலகோடி தேங்காய்கள் தேவைப்படுவதால், தேங்காய்களின் விலை இரண்டு மடங்கிற்கு மேலாக உயர்வு கண்டு பக்தர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய பத்திரிகைச் செய்தியின் நிலவரப்படி, ஒரு தேங்காயின் விலை, சென்ற ஆண்டு ஒரு ரிங்கிட் இருபதுகாசு. இன்றைய விலை, இரண்டு ரிங்கிட் எண்பது காசு என உயர்வு கண்டுள்ளது. விலை உயர்ந்தால் என்ன..!?  நாங்கள் அவைகளை சாலையில் தெருவில் உடைத்து பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்வோம், என்பதிலிருந்து பின்வாங்கமாட்டார்கள் நம்மவர்கள்.

பண்டிகைக்காலமென்றாலே நமது இனத்தவர்கள் அதிக அளவில் பயிர்களையும் காய்கறிகளையும் தேவையில்லாமல் வீணடிக்கின்றனர் என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதன் பயன், பாதிப்பு, விலை யேற்றம், உணவுக்கு பயிர்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் போதாமை என்பனவற்றைப் பற்றியெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பயிர்களை நாசம் செய்து குதூகலிக்கின்ற பண்டிகைக் கொண்டாட்டங்கள் எல்லாமும் நம்மவர்களது என்றாகிவிட்டது.

சென்ற ஆண்டு நவராத்திரி விழாவின் போது நாங்கள் தமிழ் நாட்டில் இருந்தோம், தீபாவளி ஷாப்பிங் செய்துகொண்டு.

விஜயதசமி, ஆயுதபூஜை செய்கிற நாட்களில் பயிர்கள், வாழைக்கன்றுகள், தென்னங்குறுத்துகள், மா இலைகள், வெற்றிலை, தேங்காய்கள் என வெட்டி வீதியெங்கும் நாசம் செய்திருந்த கலாச்சாரத்தைக் கண்டு திடுக்கிட்டோம்.

ஒவ்வொரு வாகனத்திலும், வீடுகளிலும், தெருவிலும், கடைகளிலும் எங்கு பார்த்தாலும் கொலையுண்ட பயிர்கள், கழுத்து அறுக்கப்பட்ட வாழைக்கன்றுகள்,  வீசி எறியப்பட்ட தாணியங்கள், தேங்காய்கள் என குப்பைக்குவியல்களாக வீதியெங்கும். காண்பதற்கு வியப்பாகவே இருந்தது எங்களுக்கு. தமிழர்களாக இந்துக்களாகப் பிறந்திருப்பினும்  இவ்வளவு மோசமான முறையில் பயிர்களை நாசம் செய்கின்ற கலாச்சாரத்தை இதுவரையில் எங்கும் கண்டதில்லை. இங்கே மலேசியாவில் தமிழர்கள் வாழ்கிற சிறிய வட்டத்தில் எங்கோ ஒரு மூலையில் இவைகள் நடந்திருக்கலாம், அவை எங்களின் பார்வையில் படாமலும் இருந்திருக்கலாம். ஆனால்அங்கே (தமிழ்நாட்டில்), காண்கின்ற இடமெல்லாம் விழாக்கோலம் என்கிற பெயரில் பயிர்கள் நாசம் செய்யப்பட்டிருப்பதை ஜீரணித்துக்கொள்ளத்தான் முடியவில்லை.

பயிர்களை நாசம் செய்து விழாக்கோலம் காண்கிற இந்தக் கலாச்ச்சாரம் தற்போது இங்கேயும் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து பெரிய அளவில் முகாமிட்டு நாடு தழுவிய நிலையில் விரிவடைந்து வியாபார  நோக்கமாக மாறி வருவது கண்கூடு.

தமிழர்கள் இந்துக்கள் பண்டிகைகள் என்றால் எதாவதொரு பயிர் நாசம் செய்யப்படுவதென்பது இயல்பான ஒன்று என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் அவைகள் நல்ல நோக்கத்திற்காக அமல்படுத்தப்பட்டிருப்பினும் தற்போதைய சூழலில் பண்டிகைகளுக்குப் பயன்படுத்துகிற பயிர்கள் தாணியங்கள் பெரும்பாலும் வீதியில் வீசியெறிகிற உபயோகமற்ற பொருளாகவே மாறிவிட்டது. அப்படியில்லையேல் மரியாதை நிமித்தமாக பொட்டலங்கட்டி ஆற்றில் வீசியெறிவதும் உண்டு. என்னைப் பொருத்தவரையில் இரண்டுமே வீண் விரையம்தான். இது காலத்தின் கோலமேயென்றாலும், இந்த நவநாகரீக காலகட்டத்தில் மனிதர்கள் சுற்றுப்புற சூழலின் மகத்தும் புரியாமல் கற்கால மனிதர்கள் போல் அறியாமையில் உழல்வதுதான் சிக்கல் இங்கே.  

கூடியவிரைவில் பொங்கலை வரவேற்கக் காத்திருக்கின்றோம். அதற்குத்தயாரான நிலையில் ஆங்காங்கே கரும்புகளுக்கும் வேரோடு பிடுங்கிய மஞ்சள் செடிகளுக்கும், `ஆடர்கள்’ வேண்டி அழைப்புகள் ஒலித்தவண்ணமாகத்தான் இருக்கின்றன. சாங்கியத்திற்காவது வாசலில் கட்டிவைக்கவேண்டுமென்று வாங்கி, இரண்டு மூன்று நாட்கள் கழித்து வீதியில் குப்பைக்கூலங்களில் வீசி எறிவதைத்தவிர வேறொன்றும் சிறப்பாக நடந்துவிடாது.

கரும்பைக் கடித்து மென்று துப்புவதை யார் செய்கிறார்கள் இப்போதெல்லாம்.? மஞ்சள் இலை ஏன் கட்டுகிறோமென்பது கூட தெரியாத நிலையில், ஊரார் பார்த்து மெச்சுவதற்காகவே சில ஏற்பாடுகள் செய்யப்படுகிறன. சிலர் பொங்கலுக்குப் பொங்கிய பொங்கச்சோற்றைக்கூட சாப்பிட ஆள் இல்லாமல்/கிடைக்காமல் வீசிவிடுகிறார்கள்.  இனிப்பு கெடுதல் என்கிற கலாச்சரம் வேறு விஷவாயு போல் மிக வேகமாகப் பரவி விட்டது. பழத்தின் இயற்கையான இனிப்பு என்றாலும் கூட, “ஐய்யோ இனிப்பா? வேண்டாம்.” என்கிற நவநாகரீக சூழலில் நாம் சிக்குண்டுக்கிடக்கின்றோம்.

பண்டிகைகளின் மகத்துவத்தை மறந்து, உலகிற்கு நாம், நமது கலை கலாச்சாரங்களை விடாமல் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம் என்பதைப் பறைச்சாற்றுவதற்காகவே பலவிதமான பயிர்தாணிய விரைய வேலைகளில் ஈடுபட்டு சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறோம் என்கிற உணர்வில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.

தைப்பொங்கல்தான் வருடத்தின் முதல் பண்டிகை. அதற்குப் பிறகு வரிசையாக வரும் அனைத்துப்பண்டிகைகளிலும் எதாவதொரு பயிர் பலிகடா ஆகும் என்பதை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா.?

திருஷ்டி சுற்றிப்போடுவதிலும் மிளகாய் ,எலுமிச்சை, பூசணி, பூ என நம்மையறியாமலேயே பல விளைப்பொருட்களை விரையம் செய்துகொண்டிருக்கின்றோம்.

யோசிப்போம்...
    

11 கருத்துகள்:

  1. விழிப்புணர்ச்சியூட்டும் கட்டுரை. காலத்துக்கேற்ப.

    பதிலளிநீக்கு
  2. விழாக்காலத்துக்கு ஏற்ற பயனுள்ள சிந்தையுடன் இக் கட்டுரையை எழுதியுள்ளார் மலேசியா விஜயா. இதை தமிழர்கள் குறிப்பாக தமிழ் நாட்டவர் படித்து இது பற்றிய விழிப்புணர்வை உண்டுபண்ண வேண்டும். செய்வார்களா அல்லது இவையெல்லாம் எங்கள் பண்பாடு என்று சொல்லி உதாசீனம் செய்துவிடுவார்களா? நானறியேன்! நான் கிறிஸ்த்துவ மதத்தவன் என்பதால் இத்தகைய இந்து மத சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி கருத்து கூறுவது தவறாகிவிடும்! ஆனால் உண்மை என்றுமே எல்லாருக்கும் ஒன்றுதான்! விஜயா சொல்வதுபோல் இதுபோல் உணவு வகைகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அழித்து நாசம் செய்வதோடு, சுற்றுச் சூழலை மாசு படுத்துவது தவறுதான். தேங்காய்களுக்கு வீணடிக்கும் பணத்தைக்கொண்டு பட்டினியால் வாடும் ஏழை எளியோருக்கு உதவுவது எவ்வளவோ மேல்! டாக்டர் ஜி. ஜான்சன்,

    பதிலளிநீக்கு
  3. விழாக்காலத்துக்கு ஏற்ற பயனுள்ள சிந்தையுடன் இக் கட்டுரையை எழுதியுள்ளார் மலேசியா விஜயா. இதை தமிழர்கள் குறிப்பாக தமிழ் நாட்டவர் படித்து இது பற்றிய விழிப்புணர்வை உண்டுபண்ண வேண்டும். செய்வார்களா அல்லது இவையெல்லாம் எங்கள் பண்பாடு என்று சொல்லி உதாசீனம் செய்துவிடுவார்களா? நானறியேன்! நான் கிறிஸ்த்துவ மதத்தவன் என்பதால் இத்தகைய இந்து மத சடங்கு சம்பிரதாயங்களைப் பற்றி கருத்து கூறுவது தவறாகிவிடும்! ஆனால் உண்மை என்றுமே எல்லாருக்கும் ஒன்றுதான்! விஜயா சொல்வதுபோல் இதுபோல் உணவு வகைகளை கொண்டாட்டம் என்ற பெயரில் அழித்து நாசம் செய்வதோடு, சுற்றுச் சூழலை மாசு படுத்துவது தவறுதான். தேங்காய்களுக்கு வீணடிக்கும் பணத்தைக்கொண்டு பட்டினியால் வாடும் ஏழை எளியோருக்கு உதவுவது எவ்வளவோ மேல்! டாக்டர் ஜி. ஜான்சன்,

    பதிலளிநீக்கு
  4. விழிப்புணர்வுப் பகிர்வு....
    பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. கொஞ்சம் தாமதம்தான் :-) ..மன்னிக்கவும்..

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாச்சு சகோ.. பதிவுகள் குறைந்துவிட்டன. ஊருக்குப் போயிட்டீங்களா? ஒரே அமைதி.

      நீக்கு