வியாழன், மே 01, 2014

தங்கச் சங்கிலி

மாமிகதை...

பணிப்பெண்ணின் பெர்மிட் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் அவளின் மாமியாருக்கு ஸ்ட்ரோக் வர, நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டாள்.

இடையில் எனக்கும் அவளுக்கும் என் மாமியால் ஒரு பிரச்சனை வர, அவளை ஒரு நாள் காலையில் செம்மையாகத் திட்டித்தீர்த்தேன். அன்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருந்தாள். வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டாள். அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுத்து, மாமி என்ன செய்கிறார்..? குளிர்சாதனப் பெட்டில் உள்ளை மீன்களை வெளியே எடுத்துவை, மாலையில் சமைக்கவேண்டும் ..! என எதாவது சொல்லவேண்டுமென்றால், தொலைபேசியை எடுக்கமாட்டாள்..

நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, இடையில் சலசலப்புகள் வர, அவள் செல்கிறேன் என்றவுடன், சரி போ.. என்று நானும் விடைகொடுத்துவிட்டேன்.

மாமிக்கும் அவளுக்கும் ஓயாத வியட்நாம் போர் நடந்துகொண்டே இருக்கும். அவள் எது செய்தாலும் மாமிக்குப் பிடிக்கவில்லை. ஏப்பம், குசு, தும்மல், இருமல் என எது சத்தமாக வந்தாலும், `எனக்கு அருவருப்பாக இருக்கு.. அவளைப் போகச்சொல்.. அவள் வேண்டாம்.. ’ என ஓயாத கூப்பாடு. வேலை முடிந்து வீட்டுக்கு ஏன் வருகிறேன் என்றிருக்கும் எனக்கு.. ஒரே அக்கப்போர்.

சரி கிழவி, அல்ஸமீர் வியாதிக்காரர்.. நேரத்திற்கு ஒன்று பேசுவார். நீ சின்னப்பொண்ணுதானே, அநுசரணையாக நடந்துகொள்ளக்கூடாதா? என்றால், என்னிடம் முறைப்பாள்.

சரி, அவளே வேலைக்காரி. வேலைக்கு வந்தவள். அவளிடம் நாம் என்ன எதிர்ப்பார்க்கமுடியும்.? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன், அவள் என்ன நீங்க பெத்த பிள்ளையா.? என்றால், மாமி இரண்டு நாளைக்கு சோறு சாப்பிட மாட்டார். கோபமாம். நான் போறேன். என்னை அங்கே அனுப்பு. இங்கே அனுப்பு.. என பல்லவியை ஆரம்பித்துவிடுவார்.

நேரகாலம் கூடி வர, சரி வேலைக்காரப் பெண்ணை அனுப்பிவிடலாமென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினேன்.

மாதக்கடைசி நேற்று. அவளின் கணக்கு வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு, அவளுக்கும் மாமிக்கும் கொஞ்சம் புதுத் துணிமணிகள். இன்று நல்ல சமையல் செய்வதற்கு நிறைய பொருட்கள்.. இறைச்சி மீன் காய்கறி பழவகைகள் என வாங்கிக்கொண்டு, அவளுக்கொடுக்கவேண்டிய சம்பள பாக்கி இரண்டாயிரம் ரிங்கிட் சொற்சம் என வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன்.

இன்று காலையில் (1/5/2014) கிளம்புகிறாள்.

மாமியும் கிளம்புகிறார். இங்கே யாருமில்லை கவனிக்க.. ஆக, இன்னொரு மகன் வீட்டிற்குக் கிளம்ப அவரும் குதூகலமாகவே ஆயத்தமானார்.

மாமி ஒருவாரத்திற்கு ஒருமுறைதான் மலம் கழிப்பார். மருந்துகொடுத்து அதை வெளியாக்கவேண்டும். சென்றவாரம் மருந்துகொடுத்தும் வெளியே வரவில்லை. என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. பொதுவாக மருந்துகொடுத்து, மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் மலம் வெளியாகிவிடும். பயங்கர நாற்றத்தோடு, கருப்பாக.. பணிப்பெண் தான் அனைத்தையும் தூய்மைப்படுத்துவாள். முகஞ்சுளிக்காமல் செய்வாள்.
பிரச்சனை இப்படி இருக்க.. இன்று கிளம்பவேண்டும். இடையில் எதும் கோளாறு என்றால், பிரயாணத்தில் பிரச்சனை வரும். ஆக, எப்படியாவது மருந்துகொடுத்து அந்த இரண்டு வார `ஸ்டோக்’ஐ வெளியாக்கிவிடு, என்று பணிப்பெண்ணிற்கு உத்தரவு இட்டேன்.

அவளும் நேற்று மதியம் வாக்கில் மருந்துகொடுத்து, வயிற்றை காலியாக வைத்திருந்து, மாலை நான்கு மணிக்கு மாமிக்கு வயிற்றுவலி வந்து, எல்லாம் சுத்தமாக வெளியாகியது.

வயிற்றுவலி என்று மாமி சத்தம்போட.. வேக வேகமாக மாமியின் ஆடைகளைக் கழற்றவே, மாமி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி கீழே விழுந்துவிட்டது. அதை மாமியும் கவனிக்கவில்லை. பணிப்பெண்ணும் கவனிக்கவில்லை.

தூய்மைப்படுத்துகிற வேலையெல்லாம் செய்து முடித்தபிறகு, என்ன குளியலறையில் மினுக்மினுக் என்று மின்னுகிறதே, என்று பார்க்க, மாமியின் தங்கச் சங்கிலி அங்கே கிடந்துள்ளது. அதை எடுத்துக் கழுவி, அவளின் கழுத்தில் மாட்டிக்கொண்டாள், மறந்தாட்போல் எங்கேயாவது வைத்துவிட்டால், அது காணாமல் போய், ஊருக்குப்போகும் தருவாயில் தமக்குக் கெட்டப்பெயர் வந்துவிடப்போகிறதென்று நினைத்து, பத்திரமாக கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

இரண்டு வார `ஸ்டோக்’ வெளியாகியவுடன், மாமிக்கு கடுமையான அசதி. வெறும் வயிறு வேறா, கஞ்சி துவையல், ஒரு கப் காப்பி என உள்ளே தள்ளிய பிறகு, சோர்ந்துபோய் தூங்கிவிட்டார். தூங்குபவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், அதை அவள் கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

மாலை ஆறு மணிக்கு நான் வீட்டுக்கு வருகிறபோதுகூட நல்ல உறக்கத்தில் இருந்தார் மாமி. என் குரல் கேட்டவுடன் எழுந்துகொண்டார்.

சுறுசுறுப்பாக கலகலப்பாக இருந்தார். பலநாள் கழிவுகள் உடலைவிட்டு அகன்ற திருப்தியில் உற்சாகமாகவே தென்பட்டார். மறுநாள் பிரயாணம் செய்யப்போகிற மகிழ்ச்சியில், `என்னுடைய பர்சில் பணம் எவ்வளவு இருக்கு பார்.. அவள் திருடிக்கொண்டு போய்விடப்போகிறாள். என் சட்டையெல்லாம் எடுத்துவை. மருந்து எடுத்துவை... ஒரு நல்ல புடவையும் வை.. தோடு இப்பவே போட்டுவிடு.’ என, ஒவ்வொன்றாக நினைவுக்கூர்ந்து நினைவுக்கூர்ந்து `நொய்..நொய்..நொய்’ என்றார். தங்கச் சங்கிலியைப் பற்றி அவரும் கேட்கவில்லை. எனக்கும் தெரியவில்லை.

இரவு உணவிற்குப் பிறகு அவரை அறையில் தள்ளிவிட்டு, புலம்பல்களை ஒரு பொருட்டாகக் கருதாமல்,  நாங்களும் உணவை முடித்துக்கொண்டு, பணிப்பெண்ணின் சம்பளக் கணக்கை முடிக்க, இருவரும் வரவேற்ப்பு அறையில் அமர்ந்தோம்.

இரவுமணி பதினொன்று.

தோ..பாரு.. உன்னுடைய கணக்கு வழக்கு இது.. இவ்வளவு நாள் வேலை செய்ததில், எடுத்தது, அப்பாவிற்கு அனுப்பியது போக மிச்சம் இவ்வளவு. உன்னிடம் பணத்தை ஒப்படைக்கிறேன், என்று கூறி, கணினியில் கணக்கைக் காட்டிவிட்டு என்னுடைய ஹென்பேக்கில் கைவிட்டால், மணிப்பர்ஸைக் காணோம்.

முகமெல்லாம் வெளிறிவிட்டது எனக்கு. வெடவெடன்னு வந்துவிட்டது...வேர்க்கிறது.. என்னுடைய சம்பளம். அவளுடைய சேமிப்பு என ஒரு தொகையை அல்லவா நான் அதில் வைத்திருந்தேன்.! எங்கே என்னுடைய பர்ஸ்.? காணோம். துணிக்கடைக்குப்போனேன்.! பழக்கடைக்குப்போனேன்..! இறைச்சிவாங்கினேன்.! காய்கறி சந்தைக்குப்போனேன்...! பர்ஸ்’ஐ கொண்டுசெல்லவில்லையே.. பாக்கெட் தைத்த யூனிபெர்மில், தேவையான பணத்தை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு பர்ஸை ஹென்பேக்கிலே அல்லவா வைத்துவிடுவேன்.. ஆனால் ஹென்பேக்கில் பர்ஸ் இல்லையே.. ஐய்யகோ .. நான் என்ன செய்வேன்.? அழாதகுறைதான்.

பணிப்பெண் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பணம் செலுத்துகிற சமையத்தில், நான் நாடகமாடுகிறேன் என்றல்லவா நினைத்திருப்பாள், மனதில். இருப்பினும் அவளே ஆலோசனை கூறினாள். அலுவலக மேஜையில் வைத்திருந்தால்.?

இருக்கலாம், இருக்கலாம்.. என்று சொல்லிக்கொண்டே, அணிந்திருந்த நைட்டி’யோடு காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தேன். நானும் துணைக்கு வருகிறேன், என்று, அவளும் என்னோடு தொற்றிக்கொண்டாள்.

அலுவலகம் சென்று சேர்ந்தவுடன், கார்ட் கேட்டான், `என்ன விஜி இந்த நேரத்தில்.. ?’ ஒரு முக்கியமான விஷயம். பர்ஸ் காணோம். உள்ளே நுழைய அனுமதி கொடு.. என் இடத்திற்குச்சென்று பார்த்துவிட்டு வருகிறேன். என்றேன். அவனும் கேட்’ஐ திறந்து உள்ளே நுழையவிட்டான்.

பர்ஸ் மேஜையின் கீழ் விழுந்துகிடந்தது. கிடைத்ததே போதுமென்று நினைத்துக்கொண்டு., வீடு வந்து சேந்தோம்

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது, சாலை அமைதியாகவே இருந்தது. காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தால்...

மாமி தனியாக அலறிக்கொண்டிருந்தார்..

“விஜி..விஜி.. வந்திட்டியாம்மா.. என்னுடைய தங்கச்சங்கிலியைக் காணோம். யாரோ பிடுங்கிக்கொண்டார்கள். நாசமாப்போச்சு.. எனக்கு மூச்சுத்திணறல் வருகிறது. ஐய்யோ.ஐய்யோ.. ”

நல்லவேளை.. நான் கொஞ்சம் திடகாத்திரமான பெண்...!

     

5 கருத்துகள்:

  1. பெயரில்லா5/05/2014

    Your state is pitiable. Reminds me of my mother's last few years. My wife was 9 months pregnant when we had a similar situation and i was not in town that week. She visited several placement agencies and brought home a new maid for my mother. And this happened almost all the time. But now we are at peace that in spite of several shortcomings, my mother lived with us till her end. Its another thing that nobody wanted to keep her during those times.
    But YOU ARE AMAZING. Considering that people today do not ever care for their own parents and a very few take care of their spouse's parent, love and responsibility is not lost in this world.
    GOD BLESS YOU.

    பதிலளிநீக்கு