சனி, ஜூலை 23, 2016

கபாலி

கபாலி நல்லா இருக்கா.? என்கிற கேள்வியினை வைத்தேன்.

நீங்கள் பார்த்துவிட்டு உங்களின் ரசனையைப் பதிவுசெய்யுங்கள் என்றார்கள்.
பார்த்தேன். என்னைக்கவரவில்லை. டைட்டல் போடுகிறது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று வரும், ரசிகபெருமக்கள் கூச்சல் போட்டார்கள். அத்தோடு சரி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவே கதை நகர்ந்தது.

பெயர் போடுகிறபோது, மலேசிய மக்களுக்கு நன்றி என்று வரும், நான் மட்டுமே கூச்சல் போட்டேன், விசில் அடித்தேன்(முயற்சி செய்து பார்த்தேன்).

கபாலி அதிரடி அஃக்ஷன் படம் என்றெல்லாம் சொல்லமுடியாது.சொல்லமுடியாது என்ன, அஃக்ஷனே இல்லை. மெட்ராஸ் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் தலைகாட்டி இருந்தார்கள், கார்த்தியைத் தவிர.

ரஜினி நடித்தார் என்பதைவிட சிரித்தார், நடந்தார், காரில் பயணம் செய்தார். சுட்டார்.
கதாநாயகியை, மவுன்டன் மென் படத்தில் பார்த்ததிலிருந்து எனக்கு பிடித்த நாயகி அவர். அழகி.

இன்னொரு மன்னன், பாஷா வருமா என்று ஏங்குகிறோம். வராது போலிருக்கிறது. தொடர் ரஜினி படம் ரசிகர்களை ஏமாற்றிவருகிறது.

அது இருக்கட்டும், படத்திற்கு யார் வசன‌கர்த்தா.? மலேசியாவில் நாங்கள் இப்படியா தமிழ் பேசுவோம்.!? சிலர் போதை தலைக்கு ஏறுகிறபோது உளறிய சில வார்த்தைகள் வைத்து, அதுதான் மலேசிய தமிழர்கள் பேசுகிற பாணி மலேசிய மக்களின் வட்டாரவழக்கு என்பதைப்போல் காட்டியிருப்பது, பொன்னடென்ஷன் போங்க.!

இந்தியா பெரிய நாடு, ஊருக்கு ஒரு பேச்சு வழக்கு இருக்கும், அதை உலகுக்குக் காட்டலாம், இங்கே எங்கள் நாடு, சென்னை அளவு கூட கிடையாது அவ்வளவு சிறிய நாடு, அதில் வட்டரவழக்கா.? நாட்டுவழக்கா,பேச்சா.? ஒண்ணுமே புரியல'லா. கச்சவு.

நாங்கள் பிறந்துவளர்ந்தது எல்லாம் கோலாலம்பூர்தான், எங்களுக்கே தெரியாத ஒரு பேச்சுவழக்கு, கோலாலம்பூரில் புழங்குகிறதா.! சூசாலே.

ரௌடிஷம் காட்டுகிறார்கள். நாட்டின் பொருட்களை சேதப்படுத்துகிறது,பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிரட்டல், திருட்டு, கொலை, வன்முறை, குழந்தைக் கடத்தல், வன்புணர்வு என அட்டூழியங்கள்
தொடர்கிறபோது, எப்படியேனும் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்கள்தானே, அதிலென்ன நல்ல கேங்ஸ்டர், கெட்ட கேங்ஸ்டர்.! கேங்ஸ்டரிஷம் ஒழிய வேண்டும் என்பதுதானே பலரின் வேண்டுகோள். தொடர்ந்து இவன் அடிக்க, அவன் சுட, இவன் தேட, அவன் வெட்ட.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

கோலாலம்பூரில் 80களில் இல்லாத ரௌடித்தன அராஜகமா.! போலிஸாரால் கூண்டோடு சுட்டுத்தள்ளிய காட்சிகள் அடைங்கிய‌ பத்திரிகைகளைக்கூட எங்களிடமிருந்து மறைப்பார் அப்பா. அப்படி இருக்கின்றபோது நல்ல ரௌடி கெட்ட ரௌடி என்று வகை பிரித்து காட்டியிருப்பது கேடித்தனம்.



ஒரு ஊர், அங்கே நடக்கின்ற பிரச்சனைகள், சம்பவங்கள் குறைந்தபட்சம் பத்துவிழுக்காடாவது உண்மை இருக்கவேண்டும், 0.01 விழுக்காடு சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்த மலேசியர்களைப் படம்பிடித்துக்காட்டுகிறேன் பேர்வழி என்று கிளம்பியிருப்பது, மலேசியர்களான எங்களுக்குக் கோபத்தை வரவழைக்கின்ற ஒன்று.

நாங்கள் இங்கே சிறப்பாக வாழ்கிறோம். மொழிப்பற்று தமிழர்களிடையே அதிக அளவில் மேலோங்கி நிற்கிறது. ஏழு, ஆறு, ஐந்து என மக்கள்தொகை விழுக்காட்டில் கனிசமாகக் குறைந்துகொண்டே வருகிறோம். அதில் 0.01விழுக்காடு தமிழர்களின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த மலேசிய இந்துக்களின் பிரச்சனைகளாகப் பார்க்கவேண்டாம். சினிமா கிடக்கட்டும். நாங்கள் சொல்கிறோம், எந்த ஊர் என்றாலும் எங்கள் ஊர் போல் வராது.
வளம் கொழிக்கும் நாடு எங்கள் நாடு. அரசியல் சித்துவேலைகள் எங்குதான் இல்லை. இங்குமட்டும் விதிவிலக்கா என்ன.! உணவுக்குப் பஞ்சமில்லை. வெளிநாட்டுக்காரர்கள் இங்கே வேலை செய்து சம்பாத்தித்து ஊரில் வீடு நிலம் என வாங்கிப்போடுகிறார்கள். இங்கே பஞ்சம் பட்டினி என்றால் உழைக்கமறுப்பவர்களுக்குத்தான் இந்த கதி. இந்தச் சோம்பேறிகள் கிளப்பிவிடுகிற சில விவகாரங்கள்தான் உலகமக்களின் பார்வையில் பூதாகரமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டின் பெயருக்கு ஊறு.
அதை மையமாக வைத்து சினிமா எடுத்து, அதுவும் ரஜினி படம், உலகமக்களால் விரும்பிப் பார்க்கப் படுகிற திரைப்படம் இப்படியா எங்கள் ஊரைப்பற்றிச் சொல்வது.! படம் முழுக்க ரௌடிஷம். கோலாலம்பூர், கோளாறு’ரும்ப்பூர் ஆக மாற்றியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் மலேசியாவில் எடுக்கப்பட்ட சீரியல் டிராமாவில் ரஜினி நடித்ததைப்போல் இருந்தது.அப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.
அதில் ஒரு நன்மையும் இருந்தது. எவ்வளவு அழகாகக் காட்டியிருந்தார்கள் எம்மண்ணை... அழகுடா செல்லம் நீ.