செவ்வாய், மார்ச் 27, 2012

நிஜம்

பிடித்தவரோடு இருக்கும் போது, 
பிடிக்காதவரை நாம் நினைப்பதேயில்லை. 
பிடித்தவர் பகைக்கும் போது
பிடிக்காதவரை பிடிப்புக்குள் கொண்டு வருகிறோம்.
இது மனிதனின் பிடிப்பற்ற நிலையேயானாலும்,
இதுவே பலரின் வாழ்வியல் சூட்சமம்.!
உறவை வெற்றிக்கொள்ள
போடப்படும் இந்த நாடகத்தில்
எனது பங்களிப்பு அறவே இல்லாமல் இருக்க
எனக்காகவே நான் போட்டுக்கொள்ளும் கவசம்..
நிஜமான, மாசுமருவற்ற அன்பு.
ஆமாம் உன் மேல் நான் கொண்ட நேசம்,
நிஜம்..நிஜம்..நிஜம்

சித்தி வளர்ப்பு

``என் மகளுக்கு எப்படியாவது வேலை வாங்கிக்கொடுங்க, சிஸ். ’’ ஒருவர் என்னிடம் வந்து மன்றாடினார்.

அவர் வேலை கேட்பது அவரின் முதல் மனைவியின் மகளுக்கு.  குழந்தைக்கு ஆறு வயது இருக்கும் போது,  இவருக்கும் வேறொரு பெண்ணிற்கும்  தீவிர காதல். காதல்ன்னா காதல் அப்பேர்பட்ட காதல். அவர்களின் காதல் தழும்புகூட இன்னமும் இவரின் நெஞ்சில் பச்சை குத்தலாக. ஒருமுறை அதைக் காட்டுவதற்காக, தமது சட்டையை கீழே இறக்கினார். ஐயோ.. எதுக்குங்க இதெல்லாம், அவளின் படிப்பிற்கு தோதான வேலை காலி இருந்தால், நிச்சயம் நான் உங்களிடம் சொல்கிறேன், என்று கூறி, கண்களை வேறு பக்கம் திருப்பினாலும், அவரின் மார்பில் பச்சைக் குத்தியிருந்த அந்தப் பெண்ணின் பெயரை ஜாடை மாடையாக பார்த்தும் விட்டேன்.

ஒரு நல்ல வாழ்கையை அந்தப் பிள்ளைக்கு (மகளுக்கு) நான் கொடுத்து விட்டால், அவளின் அம்மாவிற்கு நான் செய்த கொடுமைகள் எல்லாம் என்னை விட்டு விலகும் என்றார்.

காதல் ஜோரில், நான் எனது முதல் மனைவிக்குச் செய்த அக்கிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னுடைய இரண்டாவது மனைவியின் காதல் வலையில் சிக்கி, அவளை படாத பாடுபடுத்தினேன். அவளுக்கு எங்களின் காதல் பிடிக்கவில்லை, (எப்படிப் பிடிக்குங்க.!?) போராடிப் போராடிப்பார்த்தாள், இறுதியில் தற்கொலை செய்துக்கொண்டாள்.

என்னுடைய இந்த  ஆறுவயது மகளை வைத்துக்கொண்டு, நான் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல. என் காதலியையே நான் திருமணம் செய்துக்கொண்டேன். அப்போது அவள் வேறு கர்பமாக இருந்தாள், இவள் வேறு மரணம், இந்த பிள்ளை வேறு என் கையில் அநாதையாக. நான் என்ன செய்வேனுங்க..! (ஹுக்கும்.. ரொம்ப சோகம்தான், ஒழுங்கா இருந்தால் ஏன் இவ்வளவு சிக்கல்!?)

என் இரண்டாவது மனைவிதான் இவளையும் வளர்த்தாள். எனக்கும் அவளுக்கும் பிறந்த குழந்தைகள் மூன்று. பையன், இரண்டு பெண் பிள்ளைகள். இவளோடு சேர்த்து நான்கு பிள்ளைகள். மற்ற பிள்ளைகள் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இவள்தான் பாவம்.! எந்த குறையும் இல்லாமல் எல்லோரையும் நன்றாகத்தான் வளர்த்தாள் என் மனைவி. இருந்தாலும் அவளின் அம்மா இருந்திருந்தால், இந்த பிள்ளை இன்னும் நல்லா செல்லமாக வளர்த்திருப்பாள். அவ்வளவு பாசமாக இருந்தாள். இவளை இப்படி வளர்க்கனும் அப்படி வளர்க்கனும், நல்லா படிக்கவைக்கனும்’னு அடிக்கடி சொல்வாள். என்ன செய்வது? எல்லாம் தலைவிதி. (விதி???)

போலிடெக்னிக்கில் படித்தாள், டிப்ளோமா வைத்திருக்கின்றாள். ரொம்ப தாழ்வுமனப்பான்மை’ங்க. எப்போதும் தன்னை மற்றவர்களிடம் ஒப்பிட்டு, தாழ்வாகவே புலம்பிக்கொண்டிருக்கின்றாள். உங்களைப்போன்ற தெளிவான நண்பர்கர்கள் இருக்கும் இடத்தில் வேலைக்குச் சேர்ந்துக்கொண்டால், அவளின் தன்னம்பிக்கை வளரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

எவ்வளவோ கம்பேனிகளுக்கு வேலைக்குச் சென்று விட்டாள்,  ஆனாலும்  தாக்குப்பிடிக்காமல் பாதியிலே வேலையை விட்டு வந்து விடுகிறாள்.   வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால், அவளின் அம்மா (சித்தி) ஜாடை மாடையாகப் பேசுகிறாள், பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கிறது, அவளின் நிலைமை. எவ்வளவோ கொடுமைகளை நானும் அவளும் அனுபவித்து விட்டோம். இனி என்னால் முடியாதுங்க, வயசு ஆயிகிட்டே போகுது, திடீரென்று செத்துப்போயிட்டா, அவளுக்கு யாருமே இல்லை. அவளின் பாட்டி வேறு, என்னால் தான் அவர்களின் மகள் செத்துப்போனாள், என்று சொல்லி, என்னை சுத்தமாக வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள்.  (பின்னே சேர்த்துக்குவாங்களாக்கும்!)

எப்படியாவது உதவி செய்யுங்கள், என்று என்னிடம் அவளின் ரெஸுமி’யைக் கொண்டு வந்துக்கொடுத்தார்.

அவர், கணவரின் பழய நண்பர் என்பதாலும், அவரின் நிலைமை எனக்கு ஓரளவு புரிந்து போனதாலும், (மற்றபடி குடும்பம் பிள்ளைகள் பற்றி எதுவும் தெரியாது) மேலும் அந்தப் பெண், அரசாங்க தேர்வுகளில் சிறப்பான புள்ளிகள் வாங்கியிருப்பதாலும், அதை விட, தற்போது அவளின் தகுதிக்கு ஏற்றாட்போல் ஒரு வேலையும் காலியாக இருப்பதால், அவரின் நச்சரிப்பிற்கும் புலம்பலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய  நேரமும் வந்துவிட்டது.

இதுவரையில் நான் யாருக்கும் சிபாரிசு செய்ததில்லை. ஆதலால், இவளின் ரெசுமி’யை எடுத்துக்கொண்டு, நேராக அந்தப் பகுதியின் தலைமை நிருவாகியைச் சந்தித்து, சிபாரிசு செய்தேன். அவரும் அவளின் தேர்வு சான்றிதழ்களை நோட்டமிட்டு விட்டு, அதில் அவர்களுக்குத் தேவையான தகுதிகள் இருந்து விட்டபடியால், நேர்முகதேர்விற்கு தேதி குறித்தார். அவசரமாக அப்பிரிவிற்கு ஆட்கள் தேவை என்பதும் கூடுதல் தகுதியே.

நேர்முகதேர்விற்கு வந்தாள். சிபாரிசு, அவரசமாக ஆட்கள் தேவை, அவளுக்கும் வேலை அனுபவம், கணினி என இன்ன பிற தகுதிகள் இருப்பின், உடனே அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் கிடைத்தது.

என் சிபாரிசு தயவால்தான் உடனே வேலை கிடைத்தது என்றெண்ணி, அவளின் அப்பா, விட்டால் காலிலே விழுந்து விடுவார் போலிருக்கு. அப்படி ஒரு பவ்வியம். அவர் ஒரு பக்கம் நன்றி..நன்றி என்று கூறியவண்ணமாகவும்..! மகள் ஒரு பக்கம்.. தினமும் தொலைபேசியில் தொல்லை..

வேலை எப்படிக்கா? எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராதே! நிறைய டைப்’ வேலைகள் இருக்குமா? தவறு செய்தால் திட்டுவார்களா? வேலைக்கு வரும் போது, என்ன டிரஸ் போட்டுக்கிட்டு வரணும்? சுடிதார் போடலாமா? யூனிபோர்ம் எனக்கும் கிடைக்குமா? கண்டிப்பா ஷூ தான் போடணுமா? என்னிடம் நிறைய செருப்புகள்தான் உள்ளன. ஷூ இல்லையே, செருப்பு போட்டுக்கொண்டு வேலைக்கு வரலாமா!? கம்பனியில் ஷூ கொடுப்பார்களா? என்ன மாதிரியான கணினி வேலைகள் அதிகம்.? என்ன சிஸ்டம் பயன்படுத்துகிறார்கள்? நான் கருப்பா குண்டா இருக்கிறேனே, ஈவ் டீசிங் செய்வார்களா? நிறைய ஆண் பணியாளர்கள் வேலை செய்கிறார்களா? தமிழர்கள் ஜாஸ்தியா, இல்லை மற்ற இனத்தவர்கள் ஜாஸ்தியா? அந்த டிப்பார்ட்மெண்டில் யார் அதிகாரி? அவர் எப்படிப்பட்டவர்? சீனரா, மலாய்க்காரரா, தமிழரா? ஆரம்பத்திலேயே இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே, வேலை கஷ்டமா? ஆறு மாதம் கழித்து நிரந்தரமாக்காவிட்டால், என்ன செய்வது? எனக்கு முன்னாடி அந்த இடத்தில் வேலை செய்த அந்தப் பெண், ஏன் வேலையை விட்டுச்சென்றாள்? நீங்கள் எத்தனை ஆண்டுகள் அங்கே வேலை செய்கிறீர்கள்? வருடா வருடம் சம்பள உயர்வு சரியாகக் கிடக்குமா? போனஸ் எத்தனை மாதம்? எல்லா பொதுவிடுமுறையும் லீவா? லீவு எடுக்கச் சுலபமா, கஷ்டமா? மெடிக்கல் லீவு எடுத்தால் திட்டுவார்களா? அங்குள்ளவர்களெல்லாம் நல்லா பார்த்துக்குவாங்களா........!!! ???

இப்படி தினமும் எதாவதொரு கேள்விகளோடு, தொலைப் பேசியில்  என்னைத்  தொடர்புக் கொள்கிறாள்.! அடுத்த மாதம் வேலைக்குச் சேர்கிறாள்.

திங்கள், மார்ச் 26, 2012

நான்கு சுவர் ரகசியம்தான்

இன்று கொஞ்சம் சோர்வாகவே உள்ளேன். உணவு எடுப்பதற்குக் கூட மூட் வரவில்லை. இருப்பினும் கடுமையான பசிதான். தாமதமாகவே மதிய உணவை எடுத்துமுடித்தேன்.

சரியான முறையில் காலை உணவும் எடுக்கவில்லை. உடம்பெல்லாம் அடித்துப்போட்டதைப் போன்ற வலி.

பேருக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை. வேலைக்கு மட்டுமே விடுப்பு. வீட்டில் ஏது ஓய்வு.!? வார நாட்களில் தள்ளிப்போடப்பட்ட வேலைகளையெல்லாம் வார இறுதியில் முடித்தாக வேண்டும். இல்லையென்றால், தேங்கி நிற்கும் அனைத்து வேலைகளும் அப்படியே நின்றுபோகும். முடிவே இல்லாதது வீட்டு வேலைகள் தான். இரவு படுக்கைக்குப்போகும் வரை ஓயாது.

நேற்றைய பரபரப்பின் அழுத்தம் கூடுதலாக இருந்ததால், இன்றைய காலைப் பொழுதில் கொஞ்சம் தாமதமாக எழுந்து, அரக்கப்பறக்க வேலைக்கு வர நேர்ந்ததால் காலை உணவு எடுக்கவில்லை

முதல் நாள் சமைப்பதை,  காலைவேளைகளில் மீண்டும் சுடவைத்து அதை மதிய உணவிற்கு அலுவலகத்திற்குக் கொண்டுவந்துவிடுவது என் வழக்கம்.

நான் சமைப்பது சாதாரண அரிசி கிடையாது. பொன்னி அரிசி. அதனின் விலை இங்கே அதிகம். ஒரு கிலோ எட்டு ரிங்கிட் விகிதம் விற்கப்படுகிற அரிசி அது. இதன் காரணத்தாலே அதனின் ஒரு பருக்கைக்கூட விரையம் செய்ய எனக்கு மனம் வராது. விலை அதிகம் என்பதால் விரையம் செய்யமாட்டேன் என்பதல்ல, பொதுவாகவே உணவுகளை விரையம் செய்வது எனக்குப் பிடிக்காது.

உலகத்தில் பசி பட்டினியால் வாடித்துடிக்கின்ற மக்களை நினைக்கின்றபோது, உணவுகளை விரையமாக்க எனக்கு மனம் வராது என்கிற போலித்தனமான அனுதாபங்களையெல்லாம் வரவழைத்துக்கொண்டு, கேட்பவர்களின் மனதில் இடம்பிடித்து, தம்மை உலகமகா கருணையாளினியாகக் காட்டிக்கொள்வதற்கு எனக்கு இஷ்டமில்லை... !

நாம் எதற்காக உழைக்கின்றோம்? வாழ்வின் அத்தியாவசிய தேவையில் உணவுதான் முதல்நிலை. வயிறு மட்டும் இல்லையென்றால், நாம் எதற்காக ஒன்பது மணி நேரம் ஓடி  ஓடி வேலை செய்யப்போகின்றோம்.!?  இதன் தேவைக்காகத்தானே படாத பாடுபடுகிறோம்.! அதை ஏன் வீண் விரையமாக்குவானேன்.!

பொதுவாக விடுமுறையென்றால் ஒன்பது மணிக்குமேல் எழுவதுதான் வழக்கம். நேற்று கூடுதலாக அரை மணிநேரம் தூங்கிவிட்டேன். எழும்போது காலை மணி ஒன்பதரை. மாமியார் வேறு மருத்துவமனையில் இருப்பதால், எழுத்தவுடன் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கிளம்பினார் கணவர்.

எதாவது சமைத்துக்கொடுக்கவா அம்மாவிற்கு? என்றவுடன், இல்லை நேரமாச்சு, வழிவழியப் பார்ப்பார் அம்மா, நான் கிளம்புகிறேன் என்று சொல்லிக் கிளம்பினார்.

அதன்பிறகு, நான் தனிமையில்! எனது நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, மெது மெதுவாக என் வார இறுதி வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன். வாசலைப் பெருக்கி, நன்கு தேய்த்துக் கழுவினேன். மேலும் கீழும் மோப், வஃக்யூம் செய்தேன். வாரம் ஒரு முறை செய்யும் வேலைகள் தான் இவை. இடையிடையே மற்ற மற்ற வேலைகளையும், மெத்தை தலையணைகள் உலர வைப்பது, துணிமணிகளைத்தேடி, துவைக்காத துணிகளை துவைக்கப்போடுவது என என் வேலைகள் தொடர்ந்தன. மணி பதினொன்றாகிவிட்டது.

காய்கறி சந்தைக்குக் கிளம்பினேன். தாமதம்தான் இருப்பினும் பொருட்களை மதியம்வரை விற்பனை செய்வார்கள்.

மார்கெட் சென்றுகொண்டிருக்கையில், ஒரு அழைப்பு வந்தது. கணவர்தான். அம்மாவிற்கு மருத்துவமனை உணவு அலுத்துவிட்டதாம், சுடச்சுட ரசம் வைத்து, கொழகொழன்னு சோறு ஆக்கியும் எடுத்து வரமுடியுமா, மதியம் ஒரு மணிக்குள்.? என்றார்.

அழைப்பு வரும் போது காலை மணி பதினொன்று முப்பது. நான் மார்கெட் சென்று சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்வதற்கு எப்படியும் பனிரெண்டு அல்லது பனிரெண்டு முப்பதாகும்.

சரி, மதியம் ஒரு மணிக்குள் சமைத்துவிடமுடியும்தான் இருந்தபோதிலும் மருத்துவமனைக்கு வீட்டிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் செல்லவேண்டும். தாடால் புடால் என்று அவசர அவசரமாக சமைத்து எடுத்துச்சென்றாலும், மதிய உணவுவேளை முடிந்த பிறகே சென்று சேர முடியும். நோயாளிகளின் மதியஉணவு நேரம் 11.30யில் இருந்து 12.30 வரைதான். மேலும் அங்கு மாமிபோன்ற நோயாளிகளுக்கு கஞ்சிதான் உணவு. கொடுக்கும் கஞ்சியில் உப்பு போடமாட்டார்கள், நாம் கொஞ்சம் உப்பு சேர்த்துக்கொள்ளலாம். ஒண்ணும் பிரச்சனையில்லை.!

காலையிலே இப்படி வெறுப்பேற்றினால் கோபம் வருமா வராதா? எனக்குக் கோபம் வந்தது. எல்லாம் ரிமோர்ட் மாதிரி நடைபெற வேண்டுமென்றால் முடியுமா? மேலும் யாராவது என்னை இப்படி அவசரப்படுத்தினால், அது என்னைத் துன்புறுத்துவதற்குச் சமம். எனக்கு வாழ்க்கையில் பிடிக்காத ஒன்று, அவசரப்படுத்துவது. நானும் யாரையும் அவசரப்படுத்த மாட்டேன், அதே போல், என்ன தலை போகிற காரியமாக இருந்தாலும், என்னையும் யாரும் அவசரப் படுத்தக்கூடாது. இதனாலேயே, ஆளாய்ப்பறக்கும் அவசர கூட்டங்களுக்கு நான் போகிறதே இல்லை. அவசரப்படுத்தும் பலரை நான் பாதியிலே கலற்றிவிட்டுள்ளேன். அவசர அவசரமாகக் கிடைக்கும் எதையுமே நான் எற்பதுமில்லை. இதுவே என் பாலிஷி.

என்னால் முடியாது. இப்பவே மணி 11.30ஆகிவிட்டது, இனிமேல் வந்து சமைத்து, ஜேம்மில் மாட்டிக்கொண்டு ஆஸ்பித்திரி வந்து சேர எப்படியும் மணி ரெண்டு மூணு ஆகும். அதனால், பக்கத்து ரெஸ்டரெட்ண்டுகளில்
கொஞ்சம் ரசம் வாங்கி, அங்கே கொடுக்கப்படும் கஞ்சியில் அதை ஊற்றி கலந்துகொடுங்கள், இரவு உணவிற்குப் பார்க்கலாம் என்றேன்..சொல்லி முடிப்பதற்குள் தொலைப்பேசி துண்டிக்கப் பட்டுவிட்டது. பேசுவதை நிதானமாகக் கேட்பதற்குக்கூட நேரமில்லாமல் எவ்வளவு அவசரம் பார்த்தீர்களா.!

வீட்டிற்கு வந்து சமையல் வேலைகளைத் தொடங்கினேன். திடீரென்று கேஸ் முடிந்து விட்டது. தொலைப்பேசியில் கேஸிற்குச் சொல்லிவிட்டு, வாங்கி வந்திருக்கும் ஞாயிறு பத்திரிகைகளைப் புரட்டினேன்.  பத்திரிகைகளைப் படித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு அழைப்பு வந்தது.

இங்கே, பத்திரிகைகளுக்கு எழுதும் சில வாசக எழுத்தாள நண்பர்கள் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு சில இலக்கிய விஷ்யங்கள் குறித்துப்பேசுவது வழக்கம். எல்லோரிடமும் இலக்கியம் குறித்து பேசமுடியாது. யாராவது ஒரு சிலர் அத்திப்பூத்தாட்போல் கிடைப்பார்கள். எதாவது சந்தேகம் என்றால் உடனே அழைப்பார்கள். எல்லோரையும் நண்பர்களாக வைத்துக்கொள்ளலாம், ஆனால் குழந்தை குணமுள்ள சிலரிடம் மட்டுமே தொலைபேசி வழியும் பேசுவேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்தாள வாசக நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ஜெயகாந்தனின் கதை ஒன்றினைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தார். என்னிடம் ஜெயகாந்தனின் சிறுகதைத் தொகுப்பு எதுவுமில்லை. கூகுளில் தேடிப்பார்க்கிறேன் என்று சொல்லி, ஒரு கையில் தொலைபேசி மறுகையில் கூகுளில் தேடல். பேசிக்கொண்டே இருவரும்... அவர் சொல்ல நான் தேட, இடையிடையே நகைச்சுவையாக கிண்டல் வேறு. பேருக்குத்தான் எழுத்தாளர், ஆனால் யாருடைய கதைகளையும் வாசிப்பதில்லை, எல்லாவற்றிற்கும் இந்த விஜி ஒருவள் கிடைத்து விடுவாள், தொல்லை செய்ய..  சரியான போங்கு எழுத்தாளர்கள்,
என்று நையாண்டி செய்தேன்.. ஒரே சிரிப்பு.  கலகல சத்தத்துடன். சிரிப்பு, பிறகு உரையாடல் கதையைப்பற்றி சின்ன அறிமுகம் என தொடர்ந்தது எங்களின் பேச்சு. எப்போதுமே தொல்லை செய்பவரல்ல அவர், ஆதலால், கொஞ்ச நேரம் பேசினேன்.

தொலைப்பேசியை வைத்து விட்டு வெளியே வந்தேன், ஹாலில் கணவர். அவர் வந்து எவ்வளவு நேரமாகிவிட்டதென்று தெரியவில்லை. நாங்கள் இருவரும் பேசியதைக் கேட்டிருப்பார். எனக்குத்தான் குசுகுசுவென பேசத்தெரியாதே. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயமிருக்கும்.! கள்ளங்கபடமில்லா எனக்கு எந்த சங்கடமும் தோன்றவில்லை.

கோபக்கனல் அவரின் முகத்திலும் கண்களிலும்.

``சமையல் ஆச்சா?’’ குரலில் கொடூரம்.

``இல்லை, கேஸ் தீர்ந்துவிட்டது, ஆடர் கொடுத்தாச்சு, இன்னும் வரவில்லை, நீங்க போய் எடுத்து வரமுடியுமா?!’’ எப்போதும்போலவே நான்....

வாசகர்களை, எழுதுத்தாளர்கள் யோசிக்க வைக்க வேண்டுமல்லவா!? அதனால், அதன் பிறகு வந்த படுமோசமான வாசகங்களை, வாசர்களான நீங்களே கோர்த்துக்கொள்ளுங்கள். எப்படி வேண்டுமானாலும் கெட்டவார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். என்ன மாதிரியான கேவலமான வாசங்களையும் நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். அது உங்களின் சாமார்த்தியத்தையும், உங்கள் வளர்ப்பின் தராதரத்தையும் பொருத்தது.

நான்கு சுவருக்குள் நடப்பதை, ஒருவரிடம் மட்டும் பகிர்ந்தால் அது ரகசியமாக இருக்காது. பொதுவில் வைக்கும் போது பலரின் மனதில் அது ரகசியமாக பாதுகாப்பாக இருக்கும்.

சொல்லாமலும் இருக்க முடியாது, சொன்னால் பாரம் குறையும்.


ஞாயிறு, மார்ச் 25, 2012

பழைய வீடு

முன்பு நாங்கள் வசித்த இடம், வீடு, எங்களை அவ்வளவாகக் கவரவில்லை. பெரும்பாலும் மலாய்க்காரர்கள் வசிக்கும் ஓர் இடம் அது.

அவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லைதான். இருந்தபோதிலும், அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூனை வளர்ப்பார்கள். அவர்களின் அந்த வளர்ப்புப் பூனைகள் இரவு வேளைகளில் அந்த ஏரியாவையே சுற்றும். நாம் கதவை மூடிவைத்திருந்தாலும் அது நம் வீட்டிற்குள் எப்படியாவது நுழைந்து அடுப்பங்கரையில் குடும்பம் நடத்திக் குட்டிகள் போடும்.

ஒரு முறை அப்படித்தான், மகள் தூங்கும் அறையின் கட்டிலுக்கு அடியில் அமைதியாகப் படுத்துக்கொண்டது ஒரு கருப்புப்பூனை. நடு இரவில் அங்கே ஒரு எலி வர, அந்த எலியைப்பிடிப்பதற்குத் தாவிய பூனை, மகளில் மேல் பாய்ந்தது. அதைக்கண்டு அவள் அலற (பயங்கரமாக)  ஓரே அமளித்துமளியாகிவிட்டது.

அதுமட்டுமல்ல, இரவு நேரங்களில் வீட்டின் கூறையில் பூனைகளின் ராஜ்ஜியம் தாங்க முடியாத ஒன்று. நள்ளிரவு வேளைகளில் திடுதிமென தாறுமாறாக சத்தங்களை எழுப்பிக்கொண்டு ஓடும். ஓடுகளைப் பிராண்டும்.. அயர்ந்து உறங்கும் நமக்கு தீடிரென்று விழிப்பு வரும், அதன் பிறகு உறக்கம் களைந்து, உறங்காமலேயே எத்தனையோ இரவுப்பொழுதுகள் பாழாய்ப்போயின, இந்தப் பூனைகளால்..

பூனைகளுக்குள் பயகரச்சண்டையெல்லாம் வரும். சண்டைகள் கடுமையாகவே நிகழும். சண்டை என்று இறங்கிவிட்டால் அதுகளில் பேச்சையே அதுகள் கேட்காதுகள் போலிருக்கு. விடாமல் போராட்டம் நடக்கும்.

சிலவேளைகளில் குழந்தைகள் அழுவதைப்போன்ற சத்தத்தில், ஊளையிடும் பாருங்க, கேட்கவே பரிதாபமாக இருக்கும்.  சில நேரங்களில் பொழுது விடியும் வரை அதே போல் கத்திக்கொண்டே இருக்கும். ஒரு முறை கடுமையான கோபத்தில் வீட்டில் வைத்திருந்த பிரம்பால் வசமாக மாட்டிய ஒரு பூனையை வாங்கு வாங்கு என வாங்கினேன். அப்போது என் மகனுக்கு ஏழு வயது இருக்கும்..

``ஏம்மா, பேசவே முடியாத இந்த ஜீவனை அடிக்கிறீங்க? பாவம் இல்லையா? இந்த பிரம்பால் (ரோத்தான்) அடித்தால் எப்படி வலிக்கும் தெரியுமா? குடுங்க நான் உங்கள திருப்பி அடிக்கிறேன், எப்படி இருக்குன்னு அப்புறம் தெரியும்!. எனக்கு நீங்க சோறு ஊட்டறீங்க, அதுக்கு அவங்க அம்மா சோறு ஊட்டல, அதான் அது அழுவுது, அத போய் இப்படி அடிக்கிறீங்களே அறிவிருக்கா!?’’ என்று கைகளை முகத்திற்கு நேராக நீட்டி என்னைத் திட்டினான்.

அன்றுமுதல் எனக்கு பிடிச்சது சனியன் என்றுதான் சொல்லவேண்டும். வீட்டில் சமைப்பதை, தனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, பூனைகளுக்குக் கட்டாயம் போட்டாகவேண்டுமென்று, சமைத்து வைத்த உணவுகளை அப்படியே எடுத்து பூனைகளுக்கு உணவாகக் கொடுப்பான். ஒரு முறை மார்க்கெட்டில் இருந்து அப்போதுதான் வாங்கிவந்த வஞ்சரை மீன் துண்டு ஒன்றை அப்படியே தூக்கி பூனைக்குப் போட்டான்.

``மீன் விக்கிற விலைக்கு, பூனைக்கு மீன் கேட்குதா?, இரு உன்ன என்ன பண்ணுகிறேன் பார் என ஒரு முறை அவனையும் அடித்தேன். அசரவில்லை, தொடர்ந்து வீட்டில் உள்ள கருவாடு, சார்டின், நெத்திலி என ஓயாமல் எடுத்துப் போட்டுக்கொண்டே இருப்பான். இதனாலேயே, அவனைக்கண்டால் சில பூனைகள் உடனே ஓடிவந்து விடும்.

வீட்டு வாசட்படியில் உட்கார்ந்திருப்பான், அவனைச் சுற்றி பூனைகள் வட்டமடித்தவண்ணமாகவே இருக்கும் `மீயாவ்,மீயாவ்’ என. என்னன்னவோ பேசிக்கொண்டிருப்பான் பூனைகளோடு.

அந்த பழைய வீட்டு வாசலில் ஒரே பூனை மலமாக இருக்கும். பூனையின் மலம்  துர்நாற்றம் வீசும். வீடே நாறும். நான் நட்டுவைத்துள்ள செடிகள் அனைத்தும் செத்துப்போகும் இந்தப் பூனை மலத்தின் கொடுமையால். பூனையின் மலம் புல்லில் பட்டால் கூட அந்த புற்கள் கருகிப்போகும். எத்தனையோ முறை முயன்று தோற்றுப்போனேன் துளசி செடியை முளைக்க வைப்பதற்காக.. பூனைகளின் அராஜகத்தால் துளசி செடி வளரவே வளராது. பூச்செடியில் உள்ள பூவைப் பறித்து பூஜைக்குப் போடுவதற்குக்கூட மனம் ஒவ்வாது, காரணம் அந்த செடியின் கீழ் ஒரே பூனை மலமாக இருக்கும். ஒரு முறை, என் மகனைத் திட்டினேன், உன் பூனைகளால் தான், அம்மாவிற்கு பூஜைக்குக் கூட பூக்கள் கிடப்பதில்லை என்று. !

மறுநாள் குழந்தை, பூனை மலங்களைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான். என்ன கொடுமை.!! நான் மலம் அல்லினாலும் அல்லுவேனேயேயொழிய அவைகளை விரட்டவே மாட்டேன் என்று பிடிவாதமாகவே இருந்தான்.

இதுவாவது பரவாயில்லை, ஒரு நாள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, மழையில் நனைத்து குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பூனைக் குட்டியை, கால்வாயில் இறங்கித் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். கால்வாயில் இறங்கியது எப்படித் தெரியுமென்றால், அவனின் வெள்ளைச் சட்டையெல்லாம் அழுக்கு.

பூனை தொப்பையாக நனைந்து, வெடவெட என நடுங்கிக்கொண்டிருந்தது. பள்ளிச் சீருடையைக்கூட கலற்றாமல், அந்தப் பூனைக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தான். பால் கலக்குங்க, பாவம் பூனை என, எனக்கு வேறு ஆடர் கொடுத்துக்கொண்டிருந்தான். எங்கேயோ கிடந்த ஒரு காகிதப் பெட்டியைக் கொண்டு வந்து அதை அதனுள் வைத்து இங்கேயும் அங்கேயும் தூக்கிக்கொண்டு, அவனின் அக்காவிடமும் திட்டு வாங்கிக்கொண்டு, பள்ளி வீட்டுப்பாடங்களைக் கூட செய்யாமல், பூனைகளிலேயே கவனத்தைச் செலுத்தி பொழுதை ஓட்டினான்.

கணவர் அவனைத் தொடர்ந்து மிரட்டி எச்சரித்து, படிப்பில் கவனம் வைக்கச்சொல்லி,  கொஞ்சம் கொஞ்சமாக அவனின் பூனை பாசத்தை விலக்கினார்.

இப்படியாக பூனைக்கதைகள்...

மேலும் அந்தப் பழைய வீட்டில் கொசு தொல்லை அதிகம். அங்கே வசிப்பவர்கள் அதிக அளவில் டிங்கி காய்ச்சலுக்கு பலியாவார்கள். இதற்குக்காரணம், முறையான கால்வாய் துப்புறவுப் பணி  நடைபெறாததுவே. வீட்டின் பின்புறமிருக்கும் கால்வாயில் கழிவுகளின் அடைப்பு அடிக்கடி நிகழும். நான் வசித்த வீட்டின் எதிர் வீட்டில் மலாய்க்காரப்பெண்மணி ஒருவர் வீட்டிலேயே அதிக அளவில் சமைத்து கம்பனி கம்பனியாக கேட்டரிங் சப்ளை செய்து வியாபாரம் செய்கிறாள். அவள் சுத்தம் செய்கிற மீன்,கோழி, இறைச்சி, இரால், நண்டு போன்றவற்றின் கழிவுகள் அனைத்தும் அந்த கால்வாயிலேயே தேங்கி இரவுவேளைகளில் துர்நாற்றத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கும். கடுமையான மழைவந்தால் ஒரிரு நாட்கள் விடுதலை கிடைக்கலாம், இல்லையேல் மூக்கைத்துளைக்கும் நாற்றத்திலேயே நாள்பொழுதுகள் நகரவேண்டியிருக்கும். இரவில் வெளியே ஆட்கள் நடமாட முடியாத அளவிற்கு நாற்றம். எல்லோரும் மூக்கை மூடிக்கொண்டுதான் என் வீட்டையும் அவள் வீட்டையும் கடப்பார்கள்.

மக்கள் குடியிருக்கும் வீடமைப்புப் பகுதிகளில் இது போன்ற வியாபாரங்களுக்குத்  தடைவிதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  அதுவும் பானை பானையாக சமையல் செய்து கேட்டரிங் வியாபாரம் செய்வது கூடவே கூடாது. பிடித்தால் அபராதத்தொகை செலுத்துவதோடல்லாமல் வியாபாரத்திற்குப் பயன்படுத்துகிற பொருட்களையும் பறிமுதல் செய்துவிடுவார்கள்.

இருப்பினும் அப்பெண்மணியை மட்டும் யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு மூலக்காரணம் அவளின் கணவன் ஒரு போலிஸ் அதிகாரி என்பது கூடுதல் தகுதி அங்கே.  மேலும் அவர்கள் மலாய்க்காரர்கள். நாங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் வசிக்கின்ற தமிழர்கள் சிலர் ஒற்றுமையாக செயல் பட்டு புகார் கொடுத்தால், புகாரைத்தூக்கிக்கொண்டு, இன்னார் இன்னார்தான் இப்படிப்புகார் கொடுத்தார்கள் என்று ஒளிவுமறைவின்றி நம்மைக் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே ஒருமுறை அப்படித்தான் நடந்தது. புகார் கொடுத்த அந்த தமிழ் குடும்பத்தை அப்படியே புறக்கணித்தார்கள் அங்குள்ள மலாய்க்காரகள். அவர்களின் புறக்கணிப்பு நம்மை ஒன்றும் செய்துவிடாதுதான் இருப்பினும், ஊருடன் கூடிவாழ் என்பது நமது தாரகமந்திரமாச்சே. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்தான் நமது முதல் சொந்தங்கள். பகைத்துக்கொள்ள முடியுமா?  இதற்கு பயந்துகொண்டே, புகார் கொடுப்பதை நிறுத்திவிட்டு, பொறுத்துக்கொண்டோம் நாற்றத்தை.

நாம் ஒரு நாய் வளர்த்தால் போதும் உடனே முனிசிபலுக்கு புகார் போகும்.. நாயைப் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்.

அந்த இடத்தில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், எங்களின் வீட்டு வரிசையின் பின்புற இறுதியில்தான் பொதுத்தொலைபேசிக் கூடாரம் உள்ளது. அதன் அருகிலேயே பஸ் நிறுத்தும் இடம் வேறு அமைந்துவிட்டதால், காலை மாலை இரவு என எந்த நேரமாக இருந்தாலும் ஆட்களில் நடமாட்டத்திற்கு குறைவே இருக்காது.

வேலை முடிந்து வந்து இரவாகும் நான் சமைத்து முடிக்க. இப்படித்தான் ஒருநாள் இரவுவேளையில் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பெண் அலறும் குரல் கேட்டது,  ‘அக்கா கதவைத்திறங்கக்கா...! ஒருவன் என்னைத்தொடர்கிறான்..’ என்று என் பின் வாசல் அருகில் நின்றுக்கொண்டு மன்றாடினாள். எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. யார், எவர் என்று தெரியாத பட்சத்தில் எப்படி வீட்டைத்திறந்து உதவுகிறேன் என்கிற பெயரில் அடைக்கலம் கொடுப்பது? காலம் வேறு கெட்டுக்கிடக்கிறது. நான் திருதிருவென முழித்து யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் அச்சம்பவம் நிகழ்ந்தது.. துரத்திவந்த அந்தத் திருட்டு ராஸ்கல், அவளை நெருங்கி, அவள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் கதற கதற பிடுங்கிச்சென்றான். என் கண் முன்னேயே நடந்தது அச்சம்பவம்.
கத்துகிறாள் கதறுகிறாள், காப்பாற்றுங்கள் திருடன் திருடன் என்று.. எந்த மலாய்க்காரர்களும் தமது கதவுகளைத் திறக்கவேயில்லை. சாட்சியாக நின்ற நானும் வாய்பேசா மௌனியாக உரைந்து போனேன்.

அவ்வீட்டின் சமையல் அறை பின் பக்கம் உள்ள ஒரு தாழ்வாரத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும். வீட்டோடு ஒட்டியிருந்தாலும் சமையல் அறை தனியாகவே இருந்தது. நான் கேட்டுக்கொண்டதின் பேரில் அதுமாதிரி கட்ட உத்தரவு போட்டார் கணவர். அங்கே பாதி சுவர், பாதி ஃகிரில் போடப்பட்டிருக்கும். பின் பக்கமாக போவோர் வருவோரெல்லாம் என் சமையல் மணத்தை நுகரலாம் அதோடு நான் சமைப்பதையும்   நன்றாகப்பார்க்கலாம். அவ்வேளையில் சிலரை அடிக்கடி சந்திப்பதால், சந்திக்கின்றபோதெல்லாம் ஒரு `ஹை’ சொல்லுவார்கள்.

பொதுவாக அதிகாலையில் எழுத்தவுடன் நேராக அடுப்பங்கரைக்குச் செல்வது என வழக்கம். அப்படிச்செல்லும் போதெல்லாம், யாராவது நடமாடுக்கிறார்களா என்று பார்ப்பது வழக்கமான ஒன்று. ஒரு நாள் அந்த அதிகாலைவேளையில்  இருட்டில் ஒரு பெண் மறைவாக நின்றுகொண்டு, என் வீட்டையே கண்காணித்துக்கொண்டிருந்தாள். யாராக இருக்கும்.!?  மனதிற்குள் கேட்டுக்கொண்டே, நானும் குனிந்து அவளை உற்று நோக்கினேன். அவள் வைத்தக்கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். ``யாருங்க?’’ அவள் பதிலே பேசவில்லை. மீண்டும் குரல் கொடுத்தேன். அவள் பதில் சொல்லாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். இரத்தமே உரைந்து விடுவதைபோன்றதொரு பயம் கவ்வியது எனக்குள். கதவை விரைவாக மூடிவிட்டு உள்ளே ஓடினேன். வேலை முடிந்து வீடு திரும்பியதும், பக்கத்து வீட்டு மலாய் பெண் மூலமாகத்தெரிந்தது அவள் ஒரு போதைப் பித்தர், இரவில் பசங்களோடு தெருத்தெருவாக சுற்றுபவள் என்று.

அக்கம் பக்கத்தில் வீடுடைத்து உள்ளே நுழைந்து திருடுகிற திருட்டுச் சம்பவங்கள் வேறு சதா காதில் விழுந்தவண்ணமாகவே இருக்கும். நான் வசித்த வீட்டின் நேர் எதிர் வீட்டில், மகளை பள்ளி பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்புவதற்குள், உள்ளே நுழைந்து பணப்பை, கடிகாரம், கைப்பேசி என எல்லாவற்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள்.

ஊறுகாய் வியாபாரி, கார்பெட் வியாபாரி, தர்மம் கேட்பவர்கள், சிப்ஸ் பொறிகடலை வியாபாரிகள், ஜாதகம் ஜோசியம் பார்ப்பவர்கள் என சர்வசதா காலமும் யாராவது வீட்டின் வாசலில் கதவைத்தட்டி நின்ற வண்ணமாகவே இருப்பார்கள். பகல் வேளைகளில் நிம்மதியாக தலை சாய்க்கமுடியாது. (இப்போது தங்கியிருக்கும் வசிப்பிடத்தில் இந்தத் தொல்லைகளெல்லாம் இல்லை - நுழைவாசலில் இருக்கும் காவலாளிகள் யாரையும் எவரையும் லேசில் உள்ளே விட மாட்டார்கள், நம் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட, நிஜமாலுமே விருந்தாளிகள்தானா.!? என்பதனை அவர்களின் பின்னாலேயே வீடுவரை வந்து உறுதிபடுத்திக்கொள்வார்கள். )

அங்கே நடந்த இன்னோரு பயங்கரம், ஒரு நாள், நான் குளித்துக் கொண்டிருந்தேன். பிள்ளைகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் நேரமாதலால், முன் கதவை தாழிடாமல் குளித்துக்கொண்டிருந்தேன். கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லை, ஆனால் யாரோ உள்ளே நுழைந்து விட்டதை என்னால் உணரமுடிந்தது. பிள்ளைகள் தான் வந்திருப்பார்கள் என நினைத்து, நானும் ஜாலியாகக் குளித்து விட்டு வெளியே (மாராப்புடன்) வந்தேன். ஒரு மலாய்க்காரன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்து, வணக்கம் ஆச்சி என்றான்.  என் கை கால்கள் எல்லாம் வெடவெட என்று நடுங்கத்துவங்கி விட்டன. பட்டென்று மகளின் அறையில் புகுந்துகொண்டு, அவளின் ஒரு நைட்டியை எடுத்து மாட்டிக்கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் மகனும் வந்துவிட்டான்.மகனின் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, எங்கள் வீட்டில் உனக்கு என்ன வேலை.? என்று பதற்றத்துடன் கேட்டேன். தமது வீங்கிய கால்களைக் காட்டி, நான் தர்மம் வாங்கத்தான் வந்தேன் வேறு எந்த கெட்ட நோக்கமும் எனக்கில்லை அக்கா, என்னைத்திட்டாதே, என்றான். கையில் உள்ள நோட்டுகளை கொடுத்து அனுப்புவதைப்போல் அனுப்பிய பின் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தோம்.

அதுதான் முதல் முதலில் போலிஸுக்குப் அழைப்பு விடுத்த முதல் அனுபவம். போலிஸ்காரர்கள் கேட்டார்கள், `அவர் என்ன சட்டை போட்டிருக்கார்? என்ன கலர் ஆடை? முழு பேண்ட்’டா அரைக்கால் பேண்ட்’டா? அவன் உயரம் என்ன? அவன் கருப்பா சிகப்பா? எப்படி வந்தான்? நீ ஏன் கதவைப் பூட்டவில்லை? மோட்டார் ஓட்டி வந்தானா? இதற்கு முன் நீ அவனைப் பார்த்தாயா? அவன் எங்குள்ளவன்? புத்திசுவாதினமா? இப்போ அவன் எங்கே? இனிமேல் ஜாக்ரதையாக இரு...’ என்றார்கள். அவன் மலாய்க்காரர் என்றதுதான் போதும், நன்றாகத்திட்டினார்கள் என்னை. எப்படி நீ அப்படிச் சொல்லலாம்? இந்தோனிசியராகக் கூட இருக்கலாம்.! பங்களாதேசியாகக் கூட இருக்கலாம்.! ஏன் தமிழராகக்கூட இருக்கலாம்...! தோற்றத்தையும் நிறத்தையும் வைத்து இனத்தை அடையாளப்படுத்தாதே.. என்று கொஞ்சம் கடுமையாகவே எச்சரித்தார்கள். ஏன் தான் அழைப்புவிடுத்தோமே என்றிருந்தது.
ஒரு நாள் கடுமையான மழை, என் வீட்டு வாசலில் ஒருவன் விடிய விடிய உட்கார்ந்திருந்தான். மழைக்கு ஒதுங்க வந்திருப்பான் போலிருக்கிறது. உள்ளிருந்து நானும் என் கணவரும், ஜன்னல் வழியே அவன் என்ன செய்கிறான் என்று பார்த்துக்கொண்டே இருந்தோம். தாழ்வாரத்தின் கீழ், கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான். காத்திருந்து காதிருந்து நாங்களும் உறங்கச்சென்று விட்டோம். காலையில் வீட்டு வாசலில், தீப்பெட்டி, சிகரெட் என சிதறிக்கிடந்தது.

இப்படியே ஒரு வழியாக விடுதலை கிடைத்தது அந்த இடத்திலிருந்து, புது வீடு வாங்கியப்பிறகு இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினேன். விடுதலை அவ்வளவு ஆறுதலாக இருந்தது...!!!

தற்போது தங்கியிருக்கின்ற வசிப்பிடத்தில் எந்தத் தொல்லையும் கிடையாது. காரில் ஸ்ட்டிக்கர் இருந்தால் தான் உள்ளே நுழைய  முடியும். வியாபாரிகள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை. பால்காரர், பூக்காரர், ரொட்டிபாய் ஆகியோரைத்தான் பார்க்கலாம்.

அழகிய நந்தவனம் இந்த இடம். சுற்றிலும் அரசாங்க போலிஸ் அதிகாரிகள் காவல் காக்கும் அழகிய அடர்ந்த காடு. காட்டிற்குப் பாதுகாப்பு கொடுப்பதால், போலிஸ்காரர்கள் வட்டமிட்ட வண்ணமாகவே இருப்பார்கள். பெரிய பெரிய அரசாங்க அதிகாரிகள், வக்கில், டாக்டர், தொழிலதிபர்கள்,அரசியவாதிகள், ஆன்மிகவாதிகள், தீயான மடம் என பெரிய பெரிய ஆட்கள் குடியிருக்கும் ஒர் குடியிருப்பு இது. தூய்மையாக அழகா இருக்கும்.

அண்மையில் கூட, சிலாங்கூர் மாநில சுல்தான் வருகை புரிந்திருந்தார்.  கோத்தோங் ரோயோங் முறைப்படி அவ்விடத்தை துப்புறவு செய்தார்கள். காட்டிற்குச் செல்ல எங்களின் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும், அவர் காட்டிற்கு வருகை புரிந்திருந்தார். அந்த காட்டின் உள்ளே, ஒரு பல்கலைக்கழக  (யூ.பி.எம்) ஆய்வுக்கூடமென்று மிக கம்பீரமாக இருக்கிறது. ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால், ஒரு அற்புதமான நீர்வீழ்ச்சியும் உள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற, ஒன்று கூடல் நிகழ்வின் போது, பாதுகாவலாளிகளின் உதவியோடு நாங்களும் அங்கு சென்று வந்தோம்.

இன்று காலையில்,  எனது அந்தப் பழைய வீட்டை வாங்கிய மலாய் தோழி, என்னைத் தொலைப்பேசியில் அழைத்திருந்தாள். இன்னமும் அந்த வீட்டின் முகவரிக்குச் செல்லும் எங்களின் சில கடிதங்களை அவள் பத்திரமாக எடுத்து வைத்து, எங்களிடம் ஒப்படைப்பாள். மாதம் ஒரு முறை சென்று அவைகளை எடுத்துவருவேன். போன மாதம் செல்லவில்லை, அதனால் அதிகமான கடிதங்கள் வந்திருப்பதாகச் சொல்லி அழைத்தால். அப்படியே இந்தக் கேள்வியையும் கேட்டாள்.

``புது வீடு எப்படி இருக்கிறது, என்ன சொல்கிறது?’’

``என்ன இருந்தாலும், அந்த பழைய வீடு மாதிரி வராது, அங்குதான் அதிக மகிழ்ச்சி, எல்லா வசதிகளும் உண்டு.. ஏன் தான் விற்றோம், என்று கவலையாக உள்ளது.’’ என்றேன்.

நாங்கள் அதிர்ஷ்டசாலி என்று சொல்லி பெருமிதம் கொண்டாள்....




  

வெள்ளி, மார்ச் 23, 2012

ஆணாதிக்கம்

கொஞ்சம் சோகமான குட்டிக்கதை - யாரும் அழவேண்டாம்.

``ஹை பேபி, என்ன சமையல் இன்று?’’

``முட்டைக் குழம்பு வைத்தேன் மாமா.’’

``சாப்பாடு எடுத்து வை, மாமா குளித்து விட்டு வருகிறேன்.!’’

``சரி மாமா..’’

``ம்ம்ம்..சுவையோ சுவை. நல்லா சாப்பிட்டேன். என்ன மசாலா போட்டு சமைத்தாய் பேபி, மணம் தூக்கலாக இருக்கிறதே..?’’

``எல்லாம் தமிழ்நாட்டு மசாலாதான் மாமா’’.

``நானே நான்கு முட்டைகள் போட்டுச் சாப்பிட்டுவிட்டேன். உனக்கு இருக்கா?’’ அக்கறையோடு கேட்கிறார் மச்சான்.

``இருக்கு மாமா, பத்து முட்டைகள் போட்டுச் சமைத்தேன். இன்னும் இருக்கு, வேணுமா?’’ அப்பாவியாகச் சொல்கிறாள். தாய்மையுணர்வோடு.!

``என்ன!!!! ரெண்டு பேருக்கு பத்து முட்டைகளா? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் இருக்கிறேயே? எதுக்கு இந்த அநாவசிய செலவு எல்லாம்? சிக்கனமா இருக்கத்தெரியாதா? ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால் போதாதா? மீதம் ஐந்து முட்டைகளை வேறு நாள் பயன்படுத்தலாமே.! இப்படியா ஊதாரியா இருப்ப!?’’  சொல்லம்புகள் பாய்கின்றன, இதயத்தைத் துளைக்கின்றன. இதை அவள் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.

``மாமா, ஐந்து முட்டைகள் போட்டுச் சமைத்தால், நீங்க நான்கு முட்டைகள் சாப்பிட்டு விட்டீர்கள், அப்போ எனக்கு?? ’’ கலங்கிய நெஞ்சத்துடன் பேபி.

``உண்டிக்குறைத்தல், பெண்டிற்கழகு... உனக்கு ஒண்ணு போதும். அலையாதே.!’’ .

.டிங்..டிடின்..டிங்..டிடின் ..டிங்..தென்பாண்டிச்சீமையிலே தேரோடும் வீதியிலே, மான் போல வந்தவள, யார் அடிச்சாரோ, யார் அடிச்சாரோ?

எங்கே இருக்கு சம உரிமை? பார்த்தீர்களா எப்படியெல்லாம் அடிமை படுத்துகிறார்கள் என்று?!? ஆணாதிக்கம் ஒழிக.

புதன், மார்ச் 21, 2012

மாம்பழம்


`லில்லி’ மாம்பழங்கள் வாங்கினேன். சாப்பிடத்தான் நேரமில்லை. மறந்துவிட்டேன் என்று கூட சொல்லலாம். வாங்கியபோது இந்தியா மாம்பழங்கள் போல் தோலேல்லாம் பளபள என மஞ்சளும் லேசான சிகப்பும் கலந்து பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

பிள்ளைகள் இருந்தார்கள் என்றால், அந்த மாம்பழத்தின் கொட்டை கூட முளைத்திருக்கும், சாப்பிட்டு, சப்பி எடுத்து வீசியிருப்பார்கள், காரணம் அவ்வளவு இனிப்பு. தித்திப்பான மாம்பழம். திகட்டாதா மாம்பழம். 

நேற்றுகூட அவர்,  பழம் வாங்கினாயே, எங்கே?  வெட்டி எடுத்திட்டு வா, சாப்பிடலாம் என்றார். வேலை செய்யுமிடத்தில், தோழி சில மாங்காய்களை வெட்டி வேகவைத்து, அதில் கச்சானை (கடலை) அரைத்து, ஊசி மிளகாய், உப்பு, கிச்சாப், ஒய்ஸ்ட்தெர் சாஸ் என ஊற்றி கலந்து ஒரு பாட்டலில் அடைத்துக்கொடுத்தாள். அதை அவர் முன் வைத்தவுடன், வாங்கி வைத்திருந்த  மாம்பழங்களை இருவரும் மறந்து, இந்த மாங்காய் பச்சடியின் ருசியில் மூழ்கினோம். உண்மையிலே சுவைதான். புளிப்பு,இனிப்பு, காரம், கச்சானின் சுவை என அசத்தல் தான் போங்க. இன்று கூட வேலை முடிந்து வந்தவுடன் அந்த மாங்காய் கச்சான் பச்சடி மீதமிருக்கா, என்று கேட்டுவிட்டு, மிச்ச மீதியெல்லாம் காலியாக்கினார். 

நானும் மாம்பழம் இருப்பது நினைவுக்கு வர, சரி, சமையல் வேலையெல்லாம் முடிந்த பிறகு, இன்று அதில் ஒன்றைச் சாப்பிடலாம் என மனதில் நினைத்துக்கொண்டு, வேலையெல்லாம் முடித்தவுடன், பழம் வைத்திருக்கும் கூடையைத் திறந்தேன். பெரிய பெரிய பழங்கள் மூன்று, பத்திரமாக இருந்தது. ஆனால், அதன் தோளில் இருந்த அந்தப் பளபளப்பு குறைந்து காணப்பட்டது. நிறம், மஞ்சள் மற்றும் சிகப்பு கலந்து அப்படியே.! 

ஒரு பழத்தைக் கையில் எடுத்தேன்.. கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தேன். நன்கு பெருத்த பழம். ஒரு பழமே குறைந்தது முக்கால் கிலோ இருக்கும். அதன் தோளில் கருப்புப் புள்ளிகள் அங்காங்கே. காம்பு உள்ள இடத்தில் கொஞ்சம் கருப்பு அதிகமாகவே இருந்தது. அதன் மூக்கு அப்படியே சிவந்து, பளப்பளப்பாகவே.. பழம் முழுக்கக் கருப்புப்புள்ளிகள் ஆரம்பித்துவிட்டன. ஆனால் பழம் அழுகவில்லை. 

கழுவினேன், கை நழுவி, கழுவும் இடத்தின், வஷிங் பேஷனில் பொத்தென்று விழுந்தது. விழுத்த பழத்தை பட்டென்று எடுத்து அதை மீண்டும் கழுவி தட்டில் வைத்தேன். பார்த்தேன். விழுந்த இடத்தில், பழத்திற்கு அடிப்பட்டு நீர் வடிந்தது. கரும்புள்ளிகள் உள்ள இடத்தில், கை வைத்து அழுத்திப்பார்த்தேன், உள்ளே சென்றது, அதிலும் நீர் வடிந்தது. கொஞ்சம் பலங்கொண்டு அழுத்தினால் ஓட்டை விழுத்துவிடும் அளவிற்கு அந்த கரும்புள்ளிகள் உள்ள இடங்கள் அழுகியதுபோல் இருந்தது. இருந்தாலும் சாப்பிடலாம்.

இதுபோலவே இருந்த ஒரு பெண்ணின் காலை நேற்று நான் மருந்துவமனையில் பார்த்தேன். சக்கரை வியாதியின் கொடுமையால், அவளின் காலுக்கு ஏற்பட்ட கதி. இந்த மாம்பழம் போலவே இருந்தது, அவளின் காலும். அநேகமாக காலை எடுக்கவேண்டிய நிலை வரலாம்.   

அந்தக்காட்சி நினைவுக்கு வர, பழத்தை மீண்டும் கூடையிலே வைத்தேன். நாளைக்குத்தான் ஃப்ரூட் லாசி செய்யவேண்டும், மாம்பழங்களை வெட்டி தயிர் விட்டு கிரைண்டர் செய்தால் ப்ரூட் லாசி தயார்.


செவ்வாய், மார்ச் 20, 2012

காலநேரம்


மருத்துவமனைக்குச் சென்று வந்தேன். மாமி அங்கே அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமியின் கிட்னி ரெண்டும் பழுதாகிவிட்டதால், சிறுநீர் கழிக்கும் இடத்தில் ஒரு குழாயும் இடது கையில் ஒரு குழாயும் பொருத்தி, ஒன்றினில் நீர் இறங்கிக்கொண்டும், ஒன்றினில் நீர் வெளியேறிக்கொண்டும் இருந்தது. இரண்டு கால்களிலும் புண். நடக்க முடியாதபடி கால்கள் வீங்கியவண்ணமாகவே இருந்தன. மருத்துவமனை ஸ்பெஷலிஸ்ட் என்பதால், நல்ல கண்காணிப்பு, தரமான சிகிச்சை முறை, இரவு பகல் பாராமல் தாதிகளின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் கொஞ்சம் ஆறுதலாகவே இருந்தது.

நாங்கள் சென்றபோது பயங்கர குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார் மாமி. கூடுதலாக போர்வைகள் வாங்கிப்போர்த்தியும் குளிர் விட்டபாடில்லை. ஏர்கோண்ட் அதிக குளிராக இருப்பதால் வந்த நிலை இது. அந்த ஏர்கோண்ட்’ஐ கொஞ்சம் குறைக்க முடியுமா.? என்று அங்குள்ளவர்களிடம் கேட்டேன். குறைக்க மாட்டார்களாம். சூழல் உஷ்ணமாக இருந்தால் கிருமிகளுக்குக் கொண்டாட்டமாகிவிடுமாம்! சூடான சிதோஷ்ண நிலையில் அது அதிவிரைவாகப் பெருகுமாம், பரவுமாம்.. (சொன்னார்கள்)

பசியில்லை தூக்கமில்லை என்றார். கணவர் வெளியே டாக்டரிடம் எதோ பேசிக்கொண்டிருந்தார். நான் அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

காலையில் யாரோ பக்கத்து வீட்டில் (வார்ட் என்பதற்கு வீடு என்றார்) இறந்துவிட்டார்களாம், அந்த பையனின் அம்மா பயங்கரமாகச் சத்தம் போட்டார். கொஞ்ச நேரத்தில் ஆட்கள் குவிந்து விட்டார்கள். மாலை பூ என எக்கச்சக்கமாக.. என்னம்மா பெட்டியெல்லாம் கூட கொண்டுவந்து விடார்கள்! அப்படிக்கத்துகிறார்கள், மனசே நல்லா இல்லை. தோ நல்லா கேள், மோட்டார் சத்தம் இன்னமும் கேட்கிறது பார், என்றார்.

அது மோட்டார் சத்தம் அல்ல, ட்ரோலியின் சத்தம். அழுக்குத்துணிகளை பணியாட்கள் எடுத்துச்செல்கிறார்கள், என்றேன்.

ம்ம்ம்.. பக்கத்தில் ஒரு சீனத்தி இருக்கின்றாள், ஓயாமல் எதையெதையோ சாப்பிடுகிறாள் ஆனால் என்னிடம் மட்டும் பேசவில்லை, யார் இறந்தார்கள்? என்ன ஆச்சுன்னு கேட்கிறேன் பதிலே சொல்ல மாட்டேன் என்கிறாள். ரொம்ப மோசம்மா டவுன்’ல உள்ளவர்கள். அங்கெல்லாம் அப்படியில்லை, கேட்காமலேயே சொல்வார்கள்.

ஆஸ்பித்திரி என்றால் இதெல்லாம் சகஜம். நீங்க ஏன் அதெல்லாம் பார்கறீங்க?

ச்சே, மக்க மனுஷாளுங்க.. என்னன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? எதையுமே கண்டுக்காமல் இருந்தால் என்ன புண்ணியம்?

சரி மணியாச்சு தூங்குங்க என்றேன்.

எங்கம்மா தூக்கம் வருது? பசியே எடுக்க மாட்டேங்கிறது. துக்கமும் வரமாட்டேங்கிறது... கதை பேசறாங்க டாக்டர் நர்ஸ் எல்லாம், விடிய விடிய...,  கல்யாணமான பொண்ணுங்க, நம்ம தமிழ் பொண்ணுங்கக் கூட ஆம்பள பசங்கக்கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுதுங்க. தொட்டுத்தொட்டு பேசுதுங்க.. படித்த டாக்டரெல்லாம் கூட.. ச்சே, என்ன கண்றாவியோ..!

அதற்குள் பக்கத்து சீனத்தி என்னமோ சொல்ல, விரலை உதட்டருகே வைத்து உஸ்ஸ் என்று சொல்லிவிட்டு, அவள் சொல்வதைக் காது கொடுத்துக்கேட்கிறார். எப்படி விளங்கும், அவள் சீன மொழியில் பேசுகிறாளே?

உதடுகளைப் பிதுக்கி, கண்களை ஓரமாகக் கொண்டு ஜாடை காட்டினார், அவர்களின் பேச்சு விளங்கியதைப்போல..!

சரி இதற்கு மேலும் இருப்பது சரியல்ல, நோயாளிகள் தூங்க வேண்டும், விளக்கை எல்லாம் பணியாட்கள் அணைக்கத்துவங்கியதைப் பார்த்தவுடன். நாங்களும் கிளம்பவேண்டுமே.!


ம்ம்ம், சரி நாங்க கிளம்பறோம்மா. நாளைக்கு காலையிலே அண்ணி வருவாங்க.. சரியா? என்றேன். அதற்குள் கணவரும் அருகில் வந்தார். கிளம்பறோம் என்றோம்.

ரெண்டு வெள்ளியிருந்தா கொடுய்யா.. அம்மா காலையிலே பசியாற எதாவது வாங்கிக்கொள்கிறேன் என்றார். நடக்கவேமுடியாதபடி உடம்பெல்லாம் ட்யூப். இதில் எப்படி. ? சரி, குழந்தையான அம்மாவிற்கு ரெண்டு வெள்ளி கொடுத்து விட்டுக்கிளம்பினோம்.

வெளியே வரும்போது, ஒரு நர்ஸ் எதிரில் வந்தார், அவரிடம் கேட்டேன், என்ன சிஸ், காலையிலே யாரோ இறந்து ஒரே அமளிதுமளியாச்சாமே?

நர்ஸ் சொன்னார், அப்படி எதுவும் நடக்கவில்லை, மெம்.