ஞாயிறு, டிசம்பர் 08, 2013

படைப்புலகில் சோதனை

இலக்கியம் – போதிப்பது சித்தாந்தம் சொல்வது அல்ல. அது வாசிக்கப்படுகிற தனிமனிதனை சிலநொடி சிந்திக்கவைப்பது.

ஒரு படைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும், இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்கிற வறைமுறைகளைப் பின்பற்றிக்கொண்டிருப்பவர்களால் ஒரு போதும் சிறந்த படைப்புகளைக் கொடுக்கமுடியாது.

அதற்காக http://vallinam.com.my/version2/?p=789 தயாஜி எழுதியது சிறப்பான சிறுகதை என்று நான் சொல்லமாட்டேன். அம்மாதிரியான கருவைத்தொட்டு எழுதுவதற்கு `தில்’ வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஆரம்பித்த விதம் கவர்கிறது,சொல்லப்பட்ட அவலம் நெருடுகிறது, அதனால்தான் வல்லினத்தில் பிரசுரமாகியிருந்த அச்சிறுகதையை `அருமை வாழ்த்துகள்’ என எனது முதல் பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன்.

இருந்தபோதிலும் படைப்பு மண்டையைக் குடையவே ஆரம்பித்தது.நவீன் சொல்லியிருக்கின்ற கருத்துக்களை அனைத்தும் அருமை. அப்படிப்பார்க்கையில் ஒரு படைப்பாளியாகப்பட்டவன், நவீன் சொல்லியிருக்கின்ற அனைத்து இலக்கியங்களையும் வாசித்தாலேயொழிய தெரிந்திருந்தாலேயொழிய இக்கருத்தையொட்டிய செம்மையான படைப்பினை சீர்த்தூக்கிப் பார்த்து வழங்க இயலாது என்று சொன்னால் அது மிகையல்ல.

அப்படி எந்த ஒரு பரந்த வாசிப்பு அனுபவமும் இல்லாமல் இதுபோன்றதொரு கருவைத்தொட்டு படைப்பினைப் படைக்கப்படுகிறபோது அது வெறும் வக்கிர சிந்தனையின் வெளிப்பாடாகவே பரிணமிக்குமே தவிர நுண்ணறிவு சமாச்சாரங்கள் அங்கே ஒருபோதும் இருக்காது. இக்கதையில் வரும் சில இடங்களின் சம்பவங்களில் எனது வாசிப்பு அனுபவமும் அப்படித்தான் இருந்தது.

ஒரு வாசகன் எந்நிலையில் இப்படைப்பினை ஏற்பான், எப்படி இப்படைப்பாகப்பட்டது மனித அவலங்களை அகற்றி வாசகனின் அக இருளைப்போக்கும், என்கிற ரீதியில் மிக மிகத்தெளிவாக படைப்பினை நகர்த்திச்செல்வது ஒரு படைப்பாளியின் கடமை. அதாவது, படைப்பு போதனையாகவும் இல்லாமல், அனுபவித்ததை அக்குஅக்காக மனதில் அல்லாடும் ஆசைகளோடும் இச்சைகளோடும் சொல்வது போலவும் இல்லாமல் கவனமாகப் பார்த்து நகர்த்துவது படைப்பாளியின் புத்திகூர்மையில் இருக்கின்றது.

எல்லா எழுத்தாளர்களாலும்.. அதாவது எழுத்தாளர்கள் என்று சொல்லிப் பேர்போடுபவர்களாலும் இதுபோன்ற கருவைத்தொட்டு அவ்வளவு எளிதாக எழுதிவிடமுடியாது. அதற்கென்று சில கோட்பாடுகள் தெரிந்தவர்கள், கொள்கைப் பிடிப்பாளர்களால் மட்டுமே எழுதி அவலங்களை வெளியே சொல்ல முடியும். அதில் ரசனையும் ஊடாட வேண்டும்…

ஒரு படைப்பாளி இக்கருவை கையில் எடுக்கின்றபோது, படைப்பாளியின் பார்வையாகப் பட்டது, முதிர்ந்த நிலையில் இருப்பது அவசியம். அந்த முதிர்ச்சி தயாஜியின் படைப்பில் இல்லை. முதிர்ச்சி என்றால்? என்று கேட்பவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது. தெரியாது என்றும் வைத்துக்கொள்ளலாம்.

இலக்கியம் படைப்பது சுலபமானதல்ல என்கிற சிந்தனை நம்மைக் குடைந்துகொண்டே இருப்பது அவசியம்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

காலையிலிருந்து ஒரு விஷயம் என்னை நெருடிக்கொண்டே இருந்தது.

கீரை ஆய்கிறேன். மனம் லயிக்கவில்லை. மீன்களைக் கழுவி சுத்தம் செய்தேன் மனம் லய்க்கவில்லை. என்ன என்று சரியாகப் புரிபடவில்லை.

வாஷிங் மிஷின் அருகில் கொஞ்ச நேரம் நின்று சுற்றும் முற்றும் பார்த்தேன். உள்ளே வந்தேன், அடுக்கி வைத்துள்ள மங்கு பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை முகர்ந்துபார்த்தேன். அதில் ஒரே ஒரு மங்கு சரியாகக் கழுவாமல் இருந்ததால் ஒருவித முட்டை  வாடை வீசியது. அதை மீண்டும் எடுத்து அந்த நாற்றம் போகும் வரை கழுவினேன். ஓ இதுதான் அந்த நெருடல் போலிருக்கு என்று மீண்டும் வேலைகளில் மூழ்க எத்தனித்தேன்.

நெருடல் தொடர்ந்தது. ஒருவேளை உப்பு ஜாடியில் உப்பு முடிந்துவிட்டதால்தான் இந்த நெருடலோ, என ஏற்கனவே அலமாரியில்  வாங்கி வைத்திருந்த உப்பு பொட்டலத்தைப்பிரித்து ஜாடியை நிரப்பினேன்.

வேலைகள் தொடர்ந்தன. மீண்டும் என்னமோ நினைவுக்கு வர, குளிர்சாதன பெட்டியின் அருகில் சென்று அதைக்கொஞ்ச நேரம் முறைத்துப்பார்த்தேன். அங்கே வைக்கப்பட்டிருந்த காய்கறிகளின் பெட்டகத்தைச் சுத்தம் செய்தேன். வாங்கிய பச்சை மிளகாய்கள் காம்பு எடுக்காமல் அப்படியே வைக்கப்பட்டதால் காம்பு உள்ள சில மிளகாய்கள் அழுகி இருந்தது.  காய்கறிகள் அனைத்தையும் உள்ளிருந்து வெளியே எடுத்து மீண்டும் தூய்மைப் படுத்தி புதிய காகிதம் மாற்றி அவைகளை அடுக்கி வைத்தேன்.

சமையல் வேலைகள் தொடர்ந்தன. நெருடலும் தொடர்ந்தது. ச்சே என்ன இது..? தொலைப்பேசியை எடுத்தேன், தங்கையை அழைத்தேன், ``இன்னிக்கு மாயாஸ் போவியா, அரிசி வாங்கணும், போகும்போது சொல்லு நானும் வரேன்.”

நெருடலைப் பொருட்படுத்தாமல் சமையலில் மூழ்கினேன். வசிங் மிஷின் ஒரு பக்கம் `லொட..லொட..லொட’ என்கிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டு தனது வேலையைச் செய்து கொண்டிருந்தது.

லப் டாப்’ஐ முடக்கி நாதஸ்வர இசையைத் தட்டிவிட்டேன். அவ்விசை கோவிலில் திருமண மண்டபத்தில் இருப்பதைப்போன்றதொரு சூழலைக்கொடுத்தது. நெருடல் விலகியிருந்தது. கொஞ்ச நேரம்தான் மீண்டும் மீண்டும் என்னமோ என்னை நெருட ஆரம்பித்தது.

நேரமாச்சு, சமையல் முடிந்ததா? ஒரு குரல் வந்தது. தோ ஆய்கிட்டே இருக்கு, என்று பதில் கொடுத்துவிட்டு சமையலை முடிக்கின்ற வேலைகளில் மும்முறமானேன்.

சமையல் முடியவும் மிஷினில் போட்ட துணிமணிகள் துவைத்துமுடிக்கவும் சரியாக இருந்தது. துணிகளை உலரவைக்க எடுத்தேன். நெருடல் குடையல் தொடர்ந்தது.

என்ன இன்று ஒரு மாதிரியாகவே இருக்கின்றதே. என்ன பிரச்சனை.? எல்லா வேலைகளையும் தூய்மையாக முடித்துவிட்டேனே.!? என்று மனதிற்குள் அசைபோட்டுக்கொண்டே துணிகளை உலர வைத்தேன். உலரவைத்த துணி ட்ரொலியை இழுத்து வெளியே வெயிலில் வைக்கின்ற தருணத்தில்போது எனது நெருடலுக்கு பதில் கிடைத்தது.

எனது ரோஜா செடி இருக்கின்ற இடத்தின் அருகில் ஒரு பூனை மலம் போயிருந்தது. அந்த மலம் இருக்கின்ற இடத்திற்கு நேராக எனது ரோஜா செடியின் அழகிய பூ ஒன்று விரிந்து வாசனையைப் பரப்பிக்கொண்டிருந்தது.

நேற்று மாலைமுடிந்து இரவு சந்திக்கின்ற வேளையில் எனது காரை எடுக்கின்றபோது அக்காட்சியினைப் பார்த்தேன். இருளாகிவிட்டது, நாளைக் காலை விடிந்தவுடன் இதை நான் சுத்தப்படுத்தவேண்டும் என்கிற சிந்தனையில் உறங்கச்சென்றதை மறந்தேபோனேன்..

யோசிக்க அவகாசம் கொடுக்காமல் உடனே அதைத்தூய்மை படுத்தி, அவ்விடத்தைக் கழுவி சுத்தம் செய்தபின்புதான் நெருடல் குடைச்சல் என்னை விட்டு அகன்றது.

அசிங்கத்தை நினைக்கவே வேண்டாம். அது இருந்தாலே போதும்... நெருடல் வரும்.

பூ என்னைப் பார்த்து சிரித்தது.

வெள்ளி, டிசம்பர் 06, 2013

என்னாச்சி.


உலகம் எங்கே செல்கிறது? என்னாச்சு நம்ம குழந்தைகளுக்கு.! எதுவும் சொல்லமுடியவில்லை. பதின்மவயதுப்பிள்ளைகளை (teenage) வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களின் புலம்பலும் ஒரே மாதியாகவே இருக்கின்றதே. எதில் குறை? எங்கே இந்த அவலங்கள் ஆரம்பிக்கப்பட்டது.? உழைப்பதற்கு அஞ்சுகிறார்கள். அவமானப்பட்டுவிடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். பெரியவர்களிடம் மரியாதை இல்லை. யார் என்ன சொன்னாலும் முகத்தில் அறைந்தாட்போல் பதில் சொல்கிறார்கள். அதிகாலை துயில் எழல் இல்லாமல் போய்விட்டது. முடியைப் பரட்டையாக வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள். உடம்போடு இறுக்கமாக ஒட்டிய ஆடைகளைப்போட்டுக்கொள்கிறார்கள். கிழிந்த கால்சட்டை பேஷன் என்கிறார்கள்.. கணினி கைப்பேசி கேம் விளையாட்டில் மணிகணக்காக பொழுதைக் கழிக்கின்றார்கள்.. என்ன நடக்கிறது இந்த உலகத்தில்!? எங்கே போகப்போகிறார்கள் இவர்கள் அனைவரும்? ஓரளவு சொருசு வாழ்வு வாழ்ந்து வந்த நாமே, தர்மசங்கடத்தின் போது ஆடிப்போகின்ற நிலை வருகிறபோது, முற்றிலும் சொருசாக வளரும் இன்றை குழந்தைகளின் நாளைய நிலை..? என்னாகும்?.

என்ன திடீரென்று இப்படி ஒரு அரட்டல் என்று கேட்கின்றீர்களா?
அனுபவத்தில் காண்கிற பதின்மவயதுப்பிள்ளைகளின் நிலையையும், பத்திரிகைகளில் வரும் தினசரி செய்திகளாலும்தாம் இப்படிப் பலவாறாக என்னை யோசிக்கவைக்கிறது. தினமும் பதின்ம வயதுப் பிள்ளைகளைப்பற்றிய அவலச் செய்திகள் எங்கேயாவது ஒரு மூளையில் நிகழ்ந்தவண்ணமாகத்தான் இருக்கின்றது. பத்திரிகைகளைப் புரட்டினால், இன்றாவது இவர்களைப் பற்றிய செய்திகள் கண்ணில் படாமல் இருக்க வேண்டுமென்று ஏங்குகிறது மனம்.

பிரசுரமாகுகின்ற செய்திகள் ஒருபுறமிருந்தாலும் பிரசுரமாகாமல் அப்படியே மூடிமறைக்கப்படுகின்ற செய்திகள் இன்னும் அதிகம்தான். பிள்ளைகள் கொஞ்சம் தலையெடுக்கத்துவங்கிவுடன், பெற்றோர்கள், வயதில் மூத்தவர்கள், அனுபவப்பட்ட பெரியவர்கள், ஆசிரியர்கள் போன்றோர்களின் ஆலோசனைகள் அனைத்தும் அவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கத் துவங்கிவிடுகிறது.

என்ன சொன்னாலும் எப்படிச்சொன்னாலும் அவை வில்லங்கத்தில் போய் முடிவதைத்தான் பரவலாகப்பார்க்கலாம் இப்போது. அது செய்தியாகட்டும் அல்லது கேள்விப்படுகிற விவரமாகட்டும்.

சில சம்பவங்கள் பெற்றோர்களைப் பழிவாங்கும் படலமாக மாறி நிகழ்வதைக் காண்கையில் நெஞ்சு பதைபதைக்கிறது.

தெரிந்த ஒருவரின் மகள் திடிரென்று தற்கொலை செய்துகொண்டாள். பதினேழு வயது பருவப்பெண். அழகி என்றால் அப்பேர்பட்ட அழகி. படிப்பில் கெட்டிக்காரி. மருத்துவம் பயிலவேண்டும் என்கிற லட்சியம் உள்ளவள். தொடர் தேர்விலும் நல்லப் புள்ளிகள். மருத்துவப்படிப்பிற்கு எல்லாதகுதிகளும் அமையப்பெற்ற ஒர் அதிர்ஷ்ட தேவதையாகவே காட்சியளித்தாள் அப்பெண். பரீட்சை எழுதி, தேர்வுக்காகக் காத்திருக்கின்ற  சமையத்தில் இப்படி ஒரு செய்தி வந்து நட்பு வட்டத்திற்குள் உள்ள பலரை நிலைகுலையச்செய்தது. என்ன பிரச்சனை? ஏன் இப்படி ஆனது என்று விசாரிக்கின்றபோது, அப்பெண் தன் தாயைப் பழிவாங்குவதற்கென்றே இப்படிச் செய்துள்ளாள் என்று தெரியவந்தபோது, தாயிற்காக அழுதவதா அல்லது பழிவாங்க நினைத்து இப்படி ஒரு பெரிய காயத்தை பெற்றோர்களுக்குக் கொடுத்து விட்டுச்சென்ற மகளைத்திட்டுவதா, என்று தெரியாமல் உறவுகள் நட்புகள் என மனதைக் கல்லாக்கிக்கொண்டு இறப்புவீட்டில் நின்றிருந்த காட்சி இன்னமும் நெஞசைப் பிளக்கிறது.

தேர்வு முடிந்த நாட்களில், அந்தச் சந்தோசத்தைக்கொண்டாடுவதற்காக ஒரு நாளை தேர்வுசெய்து, நண்பர்கள் தோழிகள் என ஒன்றாகச் சேர்ந்துகொண்டாடி, இரவுமுழுக்க ஊர்சுற்றிவிட்டு நள்ளிரவுதாண்டி வீடு திரும்பிய மகளைத் திட்டிய தாய், அவளின் எதிர்ப்பேச்சுகளில் எரிச்சல் கொண்டு ஒரு அறை விட்டுள்ளார். `என்னை அறைந்துவிட்டாய், என்னை நம்பவில்லையா? உன்னைப் பழிவாங்குகிறேன் பார்..’ என்று கூறி, அறையின் கதவை தாழிட்டு, மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டாள் அப்பெண். என்ன கொடுமை இது.! நினைக்கின்றபோதே நெஞ்சு பதறுகிறது. இதைத் தட்டச்சு செய்கின்ற போதே, விரல்கள் நடுங்குகின்றன. இப்படியா ஒரு தாயை பழிவாங்குவது.!? மூன்று பிள்ளைகளில் ஒரே ஒரு செல்ல மகளை இழந்த துயரத்தை யார் என்ன ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி போக்கமுடியும்.? இந்த இழப்பை ஈடு செய்யமுடியுமா? அந்தத் தாயால் அழக்கூட முடியவில்லை. பைத்தியம்போல் அமர்ந்திருந்தார். இறந்து ஆண்டுகள் சில ஆனாலும், அவரால் இன்னமும் நிம்மதியாய் ஒருவேளை சோறு சாப்பிடமுடியாத மனநோயாளியாய் உலவுகிறார்.

எங்களின் பதின்ம வயதில் நாங்கள் படாத அவமானமா.? வெளியே நிற்க வைத்து விளக்குமாறு செருப்பு போன்றவற்றாலே அடிப்பார் அம்மா. காதல் விவகாரம் வீட்டில் தெரியவந்தபோது, சம்மதம் கிடைக்கவில்லை. எங்கே வீட்டை விட்டு ஓடிவிடுவேனோ என்று அவராகவே ஒரு யூகத்தை ஏற்படுத்திக்கொண்டு, என் காலில் சுடுநீரை ஊற்றி ரணமாக்கினார். தேங்காய்த்திருகியை என் மேல் வீசி, கல்யாணம் ஆகும்வரை அந்த ஒரு கால் வீங்கியே இருந்த்து. இப்படியெல்லாம் செய்கிற போது..`சாவு, சாவு.. செத்துத்தொலை, பூமிக்கு பாரம்..’ என்றெல்லாம் வசைமொழிகள் வேறுவரும். இப்படித் துன்பம் அனுபவிக்கின்ற நிலையிலும் கூட, எதோ ஒன்று வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்ததேயொழிய தற்கொலை செய்துகொண்டு பழிவாங்கவேண்டும் என்கிற எண்ணம் எந்த காலத்திலும் வந்ததே இல்லை.  அந்தச் சவால் ஏன் இன்றைய பெரும்பாலான பிள்ளைகளிடம் இருப்பதில்லை.! இத்தனைக்கும் அன்றைய நிலை சொகுசற்ற வாழ்வு. இருபதுவயதை நெருங்கியபோதுதான் வீட்டில் கொஞ்சம் வசதி எட்டிப்பார்க்கத் துவங்கியது. மின் விசிறி, தொலைக்காட்சிப்பெட்டி, தொலைப்பேசி, கிரைண்டர் என, அதுவரை அனைத்திற்கு அல்லல்தான். இருப்பினும் வாழ்வேண்டும் என்கிற சிந்தனை விடாமல் துரத்தியதே. இன்று எல்லாமும் கிடைத்தும், அதை ஏற்படுத்திக்கொடுத்த பெற்றோர்களை அல்லவா பழிவாங்குகின்றார்கள்.!? 

பதினைந்து வயதே ஆன பெண் ஒருவள், முகநூல் நண்பனைத்தேடி அவளின் வீடு சென்றுள்ளாள். அங்கே கூட்டமாக இருந்த பதின்ம வயது ஆண் பிள்ளைகள் அவளை மாறி மாறி அனுபவித்துள்ளார்கள்.. பெண்ணின் பெற்றோர்கள் போலிஸில் புகார் கொடுக்க, அனைவரையும் போலிஸ் பிடித்துச்சென்றுள்ளது. அவர்களின் எதிர்காலமே பாழ்.கற்பழிப்பு வழக்கில் சிறையில் உள்ளார்கள்.! என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.? எது இவர்களை இப்படியெல்லாம் செய்யவைக்கிறது.? முன்பைவிட இன்றுதான் தவறு செய்பவர்களுக்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கப்பெறும் என்று குற்றவியல் பிரிவு அதிகாரிகள் தமது விளங்களைப் பக்கம் பக்கமாக எழுதி பொதுவில் வைக்கின்றார்களே, படித்த பிள்ளைகள்தானே.! அதன் பின்விளைவுகள் பற்றித் தெரியாமல் போய்விடுமா என்ன.!?

படித்து முடித்துவிட்ட ஒரு பையனை அவனின் அப்பா திட்டியுள்ளார். `உன் வயதில் நான் மூட்டைத்தூக்கினேன், நெற்றியில் விளக்கைக் கட்டிக்கொண்டு பால்மரம் சீவினேன். தினக்கூலிக்கு வேலைக்குச்சென்றேன். நீ என்னடான்னா, படித்த படிப்புக்குத்தான் வேலை வேண்டுமென்று சும்மானாலும் சுத்தற. கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். கிடைத்தவேலையைச் செய்வதைவிட்டு இப்படியா தண்டமாய் இருப்பாய்.! ஒரு காலகட்டம் வரைதான் நாங்க சோறு போடுவோம் அதற்கப்புறம் உங்களின் செலவுகளை நீங்களே பார்த்துக்கொள்வதற்காவது வேலைக்குச் செல்லவேண்டாமா?’ என்று கொஞ்சம் கடுமையாகத்திட்டியுள்ளார். மறுநாள் பையன் கோபப்பட்டுக்கொண்டு வீட்டை விட்டே வெளியேறிவிட்டான் சிங்கப்பூருக்கு. அப்பாவைத் தண்டிக்கின்றானாம்.!

போகட்டும் கழுதை. குளத்திடம் கோபித்துக்கொண்டு கால் கழுவாமல் போறது யாருக்கு நட்டம். குண்டி காய்ந்தால் தானாய் வருவான் என்று அலட்சியம் செய்துவிட்டார் அப்பா. என்னதான் அலட்சியம் செய்தாலும், இப்படியா கோபத்தில் வீட்டைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுவது.? நண்பர்களுத்தெரிகிறது, எங்கே சென்றான் என்று, ஆனால் பெற்றவர்களிடம் சொல்லவில்லை.
முன்பெல்லாம் பசங்களை பெற்றோர்கள் தெருவில் ஆட்களைப் பார்க்கவைத்து அடித்து அவமானப்படுத்துவார்கள். இப்போது அப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை. ஆசிரியர்கள் கூட தண்டிப்பதை நிறுத்திவிட்டார்கள். வாயால் திட்டுவதற்குக்கூட பயப்படுகிறார்கள். அந்த அளவிற்குச் செல்கிறது நிலை. ஏன் இப்படி?

முகநூலில் புகைப்படங்களைப்போடுகிறார்கள். கல்லூரியில் பயில்கிற பசங்களை கட்டியணைத்துக்கொண்டும் கைகளைக்கோர்த்துக்கொண்டும், கன்னத்தோடு கன்னம் ஒட்டிக்கொண்டும்.. இப்படியா பெண்பிள்ளைகள் பொதுவில் அசிங்கப்படுவது. மேல் நாட்டுக்கலாச்சாரம் என்றாலும் அவர்கள் கூட இவ்வளவு மோசமாக் நடந்துகொள்ளமாட்டார்கள் போலிருக்கிறதே. நம்ம பிள்ளைகள் செய்கிற கூத்துகள் இருக்கே.!

இப்படித்தான் தெரிந்த ஒருவரின் டீன் எஜ் பெண் முகநூலில் செய்த அக்கப்போர்களை சகிக்க இயலாமல், என் தோழியான (தூரத்துச்சொந்தமும் கூட) அவளின் அம்மாவிடம் கேட்டுவிட்டேன். `என்னதான் படித்திருந்தாலும் பையனைப் பிடித்திருந்தாலும், இப்படியா பொதுவில் இடுப்பில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுத்து எடுத்த புகைப்ப்டங்களை முகநூலில் பதிவேற்றுவார்கள்.!? பார்க்கிறவர்கள் ஒரு மாதிரியாகப்பேச மாட்டார்களா.! இந்த உறவு கல்யாணம் கச்சேரிவரை சென்றால் பரவாயில்லை. நாளையே அவர்களுக்குள் பிரிவு என்று வந்துவிட்டால், அவளையோ அல்லது அவனையோ வேறு யாராவது கல்யாணம் செய்துகொள்கிற நிலை வந்தால், இதுபோன்ற புகைப்படங்கள் இடைஞ்சல் இல்லையா..!?என்று வாய் இருக்கமாட்டாமல் கேட்டுவிட்டேன். என்ன செய்வது நமது கலாச்சாரம் அப்படி. நாகரீகம் வளர்ந்துவிட்டது என்றாலும், ADULTERY’ யை வெள்ளைக்காரனும் சகித்துக்கொள்வது கிடையாது. கொலை தற்கொலைகள் பெரும்பாலும் தகாத உறவு முறைகளினால்தானே ஏற்படுகிறது.

நான் சொன்னதை அவரின் அம்மா அப்படியே பிள்ளைகளிடம் சொல்லி கண்டித்துள்ளார். முகநூல் விஷயம் வீட்டு வாசல்வரை வந்துவிட்டதென, என்னை முகநூலில் இருந்து ப்ளாக் செய்துவிட்டு, தாயிடம் நீலிக்கண்ணீர் வடித்து நாடகமாடி கதையையே திருப்பிவிட்டார்கள் கண்மணிகள். அப்பெண்ணின் அம்மா என்னை அழைத்து.. `இல்லெ, அண்ணனாம்.. நல்ல பையனாம்.. உதவி செய்வானாம்.. தெரியாத்தைச் சொல்லிக்கொடுப்பானாம்... அவர்களின் வீட்டுக்கெல்லாம் போவார்களாம்...என இழுத்து இழுத்து கதை சொல்லி, பாதுகாப்புக்கருதி விவரத்தைச் சொன்ன நான், பகையாளியான துர்ப்பாக்க்கியம்தான் நிகழ்ந்தது.

சரி, முடிந்தது முடிந்து விட்டது, பெரியவர்கள் நன்மை கருதி சொல்லியிருக்கின்றார்கள் என்று நினைத்து அதை அத்தோடு விடாமல், பொதுவில் என்னைக் காண்கிற போதெல்லாம், ஒரு வெட்டு, ஒரு திருப்பு, ஒரு குலுக்கு என திருப்பிக்கொண்டு போகிறாள்கள். என்னாச்சு நம்ம பிள்ளைகளுக்கு.?

பெற்றவர்களை மிரட்டி வைக்கின்றார்கள் பிள்ளைகள். எல்லா இனத்திலேயும் இதே நிலைதான். எல்லா அம்மாக்களும் ஒன்று சேர்ந்தால், என் வீட்டின் அவலம் உன் வீட்டின் அவலம்போலவே உள்ளது என்றுதான் பேசிக்கொள்வோம். பிள்ளைகளிடம் பேசமுடியவில்லை. எது சொன்னாலும் கோபம் வருகிறது. வீட்டை விட்டு வெளியேறுவதற்குத் தயாராகிவிடுகிறார்கள். காலம் முன்புபோல் இல்லை. என்னாச்சு? என்றுதான் புலம்புகிறார்கள்.

பரீட்சையில் தேறவில்லை என்று பன்னிரெண்டு வயது மாணவி தற்கொலை செய்துகொள்கிறாள். கொடுமை இல்லையா? பன்னிரெண்டு வயதில் நான் என்ன படித்தேன், எதில் பாஸ் பண்ணினேன், பரீட்சை முக்கியமான ஒன்றாக இருந்ததா, என்றெல்லாம் யோசிக்கின்ற போது, பள்ளிக்கூடம் போனது மட்டுமே பசுமையான நினைவாக இருக்கின்றது. மற்றது எதுவுமே நினைவில் இல்லை. சரி தேறவேயில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன். ஏன் நான் வாழவில்லையா? நிறைய ஏ’க்கள் எடுத்த என் சக தோழிகளைவிட நல்ல நிலையில், தெளிந்த நிலையில் வாழ்கிறேனே. 

இன்றைய இந்த நிலைக்கு என்ன காரணமாக இருக்கும்?

முக்கியமாக நம் சமூகத்தில் நல்ல வழிக்காட்டி இல்லாமையே இதற்கு முதன்மைக்காரணம் என்றும் சொல்கிறார்கள். நல்ல வழிகாட்டி யார்? சமய குரு நல்ல வழிகாட்டியாகத்திகழலாம் என்றால் அவர்களுக்கே நன்நெறிபோதனைகள் தேவைப்படுகிறது இன்றைய காலகட்டத்தில். அப்படியே சமய குரு வழிகாட்டியாக இருக்கின்றார் என்று வைத்துக்கொண்டால், எடுத்ததிற்கெல்லாம் அவரிடமே ஆலோசனைகள் கேட்டு குடும்பம் நட்த்தத்துவங்கிவிடுகிறார்கள் சில பெற்றோர்கள். வீட்டில் என்ன செடி நட்டுவைக்கலாம், என்ன செடி நட்டுவைக்கக்கூடாது என்பனவற்றையெல்லாம் கூட குருவின் ஆலோசனையின் பேரிலேயே நடக்கின்றது சிலரின் இல்லத்தில். சுவரில் விருப்பப்பட்டு வாங்கிய படங்களை மாட்டுவதற்குக்கூட, சாமி வந்து சொல்வார் என்கிறார்கள். என்ன சொல்ல?

நன்நெறி போதனைகளை விட சகல சடங்கு சம்பிரதாயங்களைப்போதித்து மூடப்பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதிலேயே குறியாக இருந்து மனிதர்களைக் கோழைகளாக்கி வாழ்வை நரகமாக்குகின்றார்கள் சில குருமார்கள்.

வைச்சா குடுமி அடிச்சா மொட்டை என்கிற ரீதியில் சிலரின் வாழ்க்கைப் பயணம்.

எதுவும் சரிப்பட்டு வரவில்லை. பிறகு?

என்னாச்சு? என்னாகும்? 

( நவம்பர் வல்லினத்தில் வந்த எனது கட்டுரை. - நன்றி நவீன். )  

புதன், டிசம்பர் 04, 2013

பூஜாங் பள்ளத்தாக்கு

இரண்டு நாட்களாக இங்கே ஒரு பிரச்சனை மிக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

இங்குள்ள இந்துக்களுக்கு இப்படி ஏடாகூடமாக எதாவது என்றாவது ஒருநாள் நடக்குமென்று ஏற்கனவே தெரியும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் என்பார்களே.. அதுபோல் பிரச்சனை வரும்வரை காத்துக்கொண்டிருக்கின்றது அரசாங்கம்.

உலகம் இந்நிகழ்வை எப்படிப் பார்க்கின்றதென்று பல ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் எழுதி உலகுக்குப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

பிரச்சனை இதுதான்-

பூஜாங் பள்ளத்தாக்கு என்கிற ஒரு இடம் கெடா மாநிலத்தில் உள்ளது. அங்கே என்ன சிறப்பு.? அது சோழ பல்லவமன்னர்கள் வந்து தங்கி வாழ்ந்த ஆதாரங்களைத் தாங்கி நிற்கும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுப்பின்னணியைச் சொல்லும் அற்புத ஊர்.

UNESCO அறிவித்திருக்கும் உலகப்பாரம்பரியச் சின்னங்களான ஜக்கார்த்தா - போரோபோடர் மற்றும் சயாம் - அங்கோர்வாட் போன்ற இடத்திற்கு சரி நிகராக வைக்கப்படவேண்டிய பூஜாங் பள்ளத்தாக்கு, கட்டுமான நிறுவனத்திற்கு தாரைவார்க்கப்பட்டதால், இன்று அவர்கள் அதை புல்டோசர் ஏற்றி தரைமட்டமாக்கிவிட்டார்கள்.

தரைமட்டமான பிறகு.. ``நீ, நான், உன்னால் பிரச்சனை , நான் அல்ல, எனக்குத்தெரியாது, முந்தய அரசாங்கம், முன்னால் மந்திரி..’’ என ஒருவர் மாற்றி ஒருவர் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


உலக வரலாற்றுச்சின்னம் நாட்டில் இருப்பதற்கு நாடு பாக்கியம் செய்திருக்கவேண்டும். அதுவும் எம் முன்னோர்களால் இந்தச் சிறப்பு என்கிறபோது - பெருமைதான்.

உலகமே நம்மை நோக்குவதற்கு இந்தச்சின்னம் ஒர் அரிய பொக்கிஷம் அல்லவா.!

மதத்தையும் கலாச்சாரத்தையும் ஒன்றாக வைத்துப்பார்த்து, அவ்விடத்தில் வரலாறு, இந்து பௌத்த மதத்தைப் பறைசாற்றுகிறது என்பதற்காக இக்கோவிலை உலகத்தின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருக்கும் இந்நாட்டு அரசியல் நாடகத்தை நினைத்து மனம் வேதனைப் படுகிறது.

இப்போது இந்த Candi Lembah Bujang சில இடங்கள் உடைபட்ட நிலையில் இருக்கின்றதே, இது அவமானம் இல்லையா?

சில தமிழர்கள் அழுகிறார்கள் - இந்த அவல நிலையை நினைத்து.

பத்திரிகைகள் அரசாங்கத்தைச் சாடுகிறது, ஏன் இந்த அவலம்? என்று.

ஆய்வாளர்கள் விரைகிறார்கள் அங்கே.. நிலவரத்தை அறிந்து அதை மீண்டும் எப்படி உருவாக்குவது என்று கலந்தாலோசிப்பதற்காக...

ஆட்சிதான் உங்களின் கைகளில் உள்ளதே. வரலாறு எதைச்சொன்னால் என்ன? ஏன் இந்த மூடுமந்திரம்.!?

வெட்கம்...

மேல் விவரம் அறிய - LEMBAH BUJANG TEMPLE என்று கூகுளில் தேடி வாசிக்கவும்.



வெள்ளி, நவம்பர் 29, 2013

குரு வருவார்

இன்று மதிய உணவின் போது, எனது மூன்று நாள் `மைஃக்ரென்’ தொல்லைக்கு மருந்து எடுக்கலாமென்று, அருகில் இருந்த கிளினிக் ஒன்றிற்குச்சென்றேன். மருந்து எடுத்துவிட்டு அப்படியே சாப்பிடச்செல்லலாம் என்றும் நினைத்திருந்தேன். 

தோழியும் வருவதாகச் சொன்னாள், பிறகு அவளுக்கு எதோ பிரச்சனை வர, வரமுடியாது என்று குறுந்தகவல் அனுப்பினாள்.

தனியாளாக உணவகங்களின் சாப்பிடப்பிடிக்காமல், ஏற்கனவே சக பணியாளர் ஒருவர் சொன்ன விவரம் ஒன்று ஞாபகத்திற்கு வரவே, கிளினிக் அருகில் இருந்த பாபா செண்டருக்கு மதிய உணவு எடுப்பதற்குச்சென்றேன்.

அங்கே அற்புதமான சைவ உணவு கிடைக்கும். சாப்பிட்டுவிட்டு இருப்பதைக் கொடுத்துவிட்டு வரலாம் அல்லது கொடுக்காமலும் வரலாம் என்பது அங்குள்ள நியதி, அவரவர் விருப்பமும் கூட...

செண்டருக்குள் நுழைந்தேன். அழகழகான பெரிய பாபா சிலைகள். பாபா புத்தக நூல் நிலையம் என மிகவும் தூய்மையாக அழகாக இருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தேன்.. சோறு போடுவதற்கான அறிகுறிகளே இல்லை.

பாபா பக்தர்கள் விளக்கு போட்டு, தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிகத்தூய்மையான குளுகுளு வசதி கொண்ட பிரமாண்ட அறை அது.

எங்கே சாப்பாடு போடுவார்கள்? என்று கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை

ஒரு ஓரமாக, மிக நீண்ட மேஜை ஒன்றினில், லட்டு, ஜிலேபி, பால்கோவா என அடுக்கிவைத்திருந்தார்கள். அங்கே சென்று இரண்டு லட்டுகள் எடுத்து ஒரு தட்டில் வைத்து, அங்கே பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தவரை அழைத்து, ஐந்து ரிங்கிட் கொடுத்தேன்.

ஒரு வெள்ளியை எடுத்துக்கொண்டு மீத நான்கு ரிங்கிட்’ஐ என்னிடமே திருப்பிக்கொடுத்தார்.வேண்டாம் என்றேன்.
இந்த லட்டுகள் யாருக்கு? என்றார்.
எனக்குத்தான், நான் சாப்பிடப்போகிறேன் (பசி), என்றேன்.
உடனே அவர், ஒரு குட்டி தட்டினை எடுத்து, அதில் இன்னும் சில பலகாரங்களை வைத்து என்னிடம் நீட்டினார்.
எதுக்கு? கேட்டேன். அவர் என்னையே உற்று நோக்கிவிட்டு, இதற்கு முன் நீங்கள் இங்கே வந்ததில்லையா ? என்று கேட்டார். ஹூஹும் வந்ததில்லை, என்றேன். சரி வாங்க, என்று என்னை பாபாவின் பெரிய சிலைக்கு முன் அழைத்துச்சென்று, அவர் பாதத்தின் கீழ் நான் வாங்கிய லட்டு பலகாரங்களை என் கைகளாலேயே வைத்து வணங்கச்சொல்லி, பாபாவில் மேல் இருந்த ஒரு பெரிய மாலையினை எடுத்து அவரின் பாதத்தில் வைத்து, பிரார்த்தனை செய்து, அதை என்னிடம் வழங்கி, இனி உங்களின் வாழ்வில் நடப்பதனைத்தும் சிறப்பானவையே. இனி நீங்கள் அடிக்கடி இங்கு வருவீர்கள். பாபா உங்களை அழைத்துவருவார் என்று சொல்லி, சீரடி பாபாவின் சீடி ஒன்றினையும் எனக்கு வழங்கினார்.

நிஜமாலுமே ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். அங்கே இருக்கின்ற அத்தனை பேரில், புதிதாக வந்த எனக்கு மட்டும் அவ்வளவு பெரிய மாலை ஒன்று கிடைத்திருப்பது மகிழ்வைத்தந்தது.

சீடி என்ன விலை? கேட்டேன்

நீங்கள் முதலில் அதைப் பாருங்கள். உங்களுக்கு இஷடமென்றால் பணம் கொடுங்கள் இல்லையேல், பரவாயில்லை. என்றார்.
கொஞ்ச நேர மௌன நோட்டத்திற்குப்பிறகு அலுவலகம் வந்துசேர்ந்தேன். வந்தவுடன், என் சக ஊழியரை அழைத்து, பாபா செண்டரில் மூன்றுவேளை உணவு கிடைக்கும் என்றாய். அப்படி ஒன்று தெரியவில்லையே..!

அதற்கு அவள், கீழே தியான பஜன் மடம். மேலேதான் உணவு வழங்குவார்கள். நீங்கள் முதல் மாடிக்குச் செல்லவில்லையா? அங்கே யாரிடமாவது கேட்டிருக்கலாமே.. யக்கா.. என்றாள்.

ஓ.. ஒகே ஒகே.

வியாழன், நவம்பர் 21, 2013

section 376A for incest


A 46-year old foodstall operator has been remanded for having sex with daughter over the past three years. The 21-year old daughter, however, says she is a willing partner as she is in LOVE WITH HER FATHER .

இப்படி ஒரு தலைப்புச் செய்தியுடன் வந்த பத்திரிகை ஒன்றினைப் படித்துவிட்டு அலுவலகத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானோம்.

மூவினம் வாழும் நாட்டினிலேயே, இப்படிப்பட்ட incest  உறவுகளைச் சொல்லும் செய்திகள் பிரசுரமாகுகின்ற போது, எங்களுக்குள் எழுகின்ற முதல் கேள்வி.. `யார், எந்த இனத்தில்? என்பதுதான்.

இன்றைய இந்தச் செய்தியால், அனைவரும் ஒன்று சேர வினவிய முதல் கேள்வியும் இதுதான். யார்? எந்த இனம்? காரணம், `எந்த இனம் என்று தெரிந்துகொண்டால், `அப்பாடா, எங்க இனத்தில் இப்படியெல்லாம் நடக்காது, நாங்கள் மதத்தால் கட்டமைக்கப்பட்ட சீரிய ஒழுக்கத்துடன் வாழ்கிறோம்.., `இந்த இனமே இப்படித்தான்..’ என்கிற முத்திரையினை குத்திவிட்டு, சம்பந்தப்பட்ட இனத்தவர் அவ்வேளையில் அங்கே இருந்தால், அவரையும் கொஞ்சம் சீண்டிவிட்டுச்செல்வதுதான் இங்கே வழக்கம். இது எதிர்ப்பாராமல் நிகழ்வதுபோல் இருந்தாலும், திட்டமிட்டு ஒருவரை ஒருவர் ரணமாக்குகின்ற சாதுர்யம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இருப்பினும் பொதுவில் மூவினம் கைக்கோர்த்து ஒன்றாக ஒற்றுமையாக வாழ்கிறோம் என்று `சும்மாகட்டியும்சொல்லிக்கொள்வோம்.

நல்லவேளை, யார் எவர் என்று சொல்லாமல், பெயர்களையும் குறிப்பிடாமல், பத்திரிகை தமது செய்தியினை மட்டும் பிரசுரமாக்கியிருந்தது.

செய்தி இதுதான்...

SPM வரை படித்த இருபத்தொன்று வயது பெண் தனது அப்பாவையே காதலித்து அவருடன் கடந்த மூன்று வருடங்களாக உடலின்ப சுகம் அனுபவித்து வந்திருக்கின்றாள். ஒவ்வொரு முறையும் அவளை உடலின்ப சுகத்திற்கு பயன்படுத்தியப்பிறகு அத்தந்தை அவளுக்கு பணத்தைத் தாரளமாக வாரி இரைத்துள்ளார் என்றும் அச்செய்தி சொல்லியிருக்கின்றது.

சரி, எப்படி இவர்கள் பிடிப்பட்டார்கள்.?

பள்ளிப்பருவம் முடிந்தபிறகு தனது மாமாவில் சலூனின் அவரின் பாதுகாப்பில் அங்கேயே வேலை செய்துவந்திருக்கின்றாள் அப்பெண். ஒருநாள், மாமாவின் கைப்பேசி `பேட்டரி’ தீர்ந்துபோகவே, அப்பெண்ணின் கைப்பேசியை இரவல் வாங்கி பயன்படுத்துகிறபோது, அவ்வேளையில் அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் ஒன்றினைப் படிக்கநேர்ந்து குழப்பம் கொண்டு, மேலும் அவளின் கைப்பேசியை முழுமையாக ஆராய்ந்து அங்கே அவளுக்கு வந்திருந்த குறுந்தகவல் அனைத்தையும் வாசித்து அருவருப்பாகி அப்பெண்ணின் தாயிடம் அக்கைப்பேசியை ஒப்படைத்துள்ளார்.

அப்பா மகளின் காதல் காம குறுந்தகவல்களைப் படித்து இதயம் இரண்டாய் பிளந்தநிலையில் சிலையாய் இருந்த தாயை அழைத்துச் சென்று போலிஸில் புகார் கொடுத்துள்ளார் மாமா.

தந்தையை காவல்துறை பிடித்துச்சென்றிருப்பினும், மகளை ஏன் தண்டிக்கவில்லை என்கிற கேள்வியும் இல்லாமல் இல்லை. தான் இஷ்டப்பட்டு தன் தந்தையை காதலித்து, நடைபெற்ற அனைத்து காமலீலைகளுக்கு தாமும் பொறுப்பு என்று அம்மகள் ஒத்துக்கொண்டாலும், சட்டம் இதுபோன்ற உறவுமுறைகளை ஆதரித்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒருபோதும் அனுமதிக்காது என்று முடிவாக சொல்லிவிட்டது.

அநேகமாக இருவருக்கும் செக்‌ஷன் 376A குற்றவியல் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படும் என்றும் அச்செய்தியில் சொல்லப்படுகிறது. குற்றம் நிரூபிக்கபட்டால் இருவருக்கும் தலா இருபது ஆண்டுகள் சிறைவாசம் உறுதி.

Thank you The Star.     
      

செவ்வாய், நவம்பர் 12, 2013

ஒலிக்காத இசை

நாய்கள் சொல்லும் 
அதன் பாஷையில்
மனிதன், 
குரைத்துக்கொண்டிருக்கிறான்..

%%%%%%

காற்று அப்படியே நிற்கிறது
உடலுக்குள் உஷ்ணம் தான் 
அசைகிறது..

%%%%%%%

எனக்குள் இயங்குகின்ற 
இசை..
எங்கும் ஒலித்ததில்லை
இதுவரை..

%%%%%%%

Pose கொடுக்காதபோது
click செய்யப்பட்ட புகைப்படத்தில் 
நானும் பேரழகியே... குழந்தைபோல்.!

%%%%%%%