புதன், டிசம்பர் 21, 2011

இன்று மனதில் ஏதோ ஒரு பயம்

தினமும் வேலைக்குச்செல்லுகையில், குறுக்குப்பாதையைப் பயன் படுத்தி விரைவாக பிரதான சாலைக்குச் செல்வது  என் வழக்கம்.

நேர்சாலை என்பது நிறைய கார்கள் பயணிக்கு. கொஞ்சம் நெரிசலாக இருக்கும், போகும் வழியில் நாசிக் லெமக் விற்பனை, பத்திரிக்கை விற்பனை, ஒரு பெரிய ஆட்டுக்கொட்டகை, கடைத்தெரு, பஸ் ஸ்டாப் என ஆட்களின் நடமாட்டம் என இருந்த வண்ணமாகவே இருக்கும்.  வாகனத்தை மெதுவாக நகர்த்தவேண்டிய நிலை வரும்.

நாமோ எல்லா நாட்களிலும் சுடுநீரைக் காலில்  ஊற்றிக்கொண்டு அரக்கபரக்க  ஓடுபவர்கள்.  இதில் சென்று மாட்டிக்கொண்டால், கொஞ்சம் தாமதமாகும். ஆக இந்தக் காட்டுக்குறுக்கு வழி எனக்குச் சுலபம்.

அந்தக் குறுக்குப்பாதையில் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. வழிநெடுக மலேசிய பூர்வீக குடிகளின் (orang asli) வீடுகள், வளர்ச்சியடையாத பழய மலேசியக் குடியிருப்புகளை ஞாபகப்படுத்தியபடி இருக்கும். எண்பதுகளின் இறுதிவரை மலேசியா இந்த மாதிரியான குடியிருப்பைக் கொண்டதாகவே இருந்தது.

பெரும்பாலும் புறம்போக்கு நிலத்தில், இஷடம்போல் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு, சுற்று வட்டார நிலப்பரப்பையெல்லாம்  தமதாக்கிக் கொள்கிற ஜமிந்தார் வாழ்க்கைத்தான் முன்பெல்லாம்..!

எங்களின் வீடும் பெரிய வீடுதான். நான்கு பெரிய பெரிய அறைகள் கொண்ட விஸ்தாரமான வீடு. கோழிப்பண்ணை, ஆடு வளர்ப்பு, காய்க்கறித் தோட்டம், குழந்தைகள் விளையாட்டுத்திடல், துணி காயப்போடுகிற நீண்ட கொடிக்கம்புகள், விறகு அடுக்கும் கொட்டகைகள், காட்டு வேலைக்குப் பயன்படுத்தும் துணிமணிகள், வாளி, காண்டா, உளி, பால் தூக்கும் தோம்பு, அரிவாள், தேங்காய் அறுக்கும் கத்தி, வேலைக்குப்பயன்படுத்தும் சைக்கிள் போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு கொட்டகை. கோழிக்குப் போடும் தீவனம், ஆட்டிற்க்கு புல்கட்டு, சோறு வடிக்கிற நீராகாரம் ( மாடுகளுக்குக் குடிக்க எடுத்துச்செல்வார்கள்)  என சேகரித்து வைக்கின்ற வாளி போன்றவைகள் வைப்பதற்கு ஒரு கூடாரம். நாய் வளர்ப்பிற்கு ஒர் இடம், இரண்டுப்பக்கமும் பெரிய கட்டைகளைக் கொண்டு அடித்து ஒரு நாட்காலி போல் செய்து வைத்த வாங்கு. வீட்டின் பக்கவாட்டில் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, அரைக்கல், அண்டா குண்டா  போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு ஒதுக்குப்புறமென மிக அழகான நந்தவனம் போல் வாழ்ந்து வந்தவர்கள் நாங்கள் இங்கே.

அந்தச் சூழலெல்லாம் காலத்தின் கட்டாயத்தின் பேரில் மாறி பலவருடங்கள் ஆகிவிட்டன. நாட்டின் அதீத வளர்ச்சியின் காரணமாக அவைகள் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் தான் போயிருந்தன.



சரி விஷயத்திற்கு வருவோம், இப்போது இங்கே இந்தக் குறுக்குப்பாதையில் இவைகளைக் காணுகிற போது, மீண்டும் பழைய வாழ்க்கைக்குச் செல்வதைப் போன்ற உணர்வுவரும். ஆகவே அச்சூழலை காலைவேளையில் ரசித்துக்கொண்டே, சுற்றும் முற்றும் நோட்டமிட்டவண்ணமாக என் காரைச் செலுத்துவதில் எனக்கு மகிழச்சி.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் அமைதி மையானமாகவே காட்சியளிக்கும். வீட்டைச்சுற்றி அழகழாகான பூச் செடிகள், பாதையின் இரு புறங்களிலும் அடர்ந்த மரங்கள், தென்னை பலா வாழை மரவள்ளி என தினசரி வாழ்விற்கு உதவும் பயிர்கள்.

தூரத்தில் எங்கோ ஒரு மூளையில் அந்தக்குளிர் காலையில் புகை வெளிப்பட்ட வண்ணமாக  இருக்கும்.
ஒரு இதமான சூழலைக் கொடுக்கும் அற்புதக் காட்சிகள் இவை. எவ்வளவு தாமதமானாலும், நமது படபடப்பை ஒரே நொடியில் அகற்றிவிடும் ஆற்றல் இந்தச் சூழலுக்கு உண்டு .

மேலும் சில காரணங்களுக்காகவும் நான் இந்தப் பாதையைப் பயன் படுத்துவது வழக்கம். அதாவது, பழங்களும் காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும்.  காட்டு வாழை, காட்டு டூரியான், மிகச் சுவையான பலா, சிறிய கொய்யா, பப்பாளி, பெரிய பெரிய மரவள்ளிக்கிழங்கு, தளத்தளவென இருக்கும் கீரைவகைகள், நாட்டுக்கோழி அதன் முட்டை, மலைத்தேன் என, எதாவதொரு பொருள் தெரு ஓரமாக விற்பனைக்கு வரும்.. காலை மாலை கணக்கில் இல்லை, பார்த்தவுடன் காரை நிறுத்தி விடுவேன். மலிவாகக் கிடைக்கும் நல்ல பொருட்கள் அவை.


இப்போதான் கதையே ஆரம்பமாகிறது....

இன்று சனிப்பெயர்ச்சி. காலையிலேயே சன் டீ.வி யில் திருநள்ளாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுப வைபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இரவிலிருந்து இங்குதான் உள்ளோம், அற்புதமான பூஜை, தரிசனம், விடிய விடிய தூங்காமல் ... ” என்று மக்கள் ஒரு பக்கம் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்...

பின்புறத்தில் வேலையாக இருந்த என்னை, விரைவாக முன்னுக்கு வரும்படி அழைத்தார் கணவர்.

“டாலிங் ஓடிவா, அற்புதமான நிகழ்ச்சி ஓடுகிறது” என்றார்.

பார்த்தேன், `ம்ம்ம்ம்ம்’ என்கிற ஒர் சிறிய ஒலியை எழுப்பிவிட்டு நான் என் வேலையைத் தொடர்ந்தேன்.

“எல்லாம் அலட்சியம் தான் உனக்கு.படுவாய்!” சாபம் மாதிரி இருந்தது. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

வழக்கமான பணிகளையெல்லாம் முடித்து விட்டு, வேலைக்குக் கிளம்பினேன். வழக்கமாக நுழையும் அதே குறுக்குப் பாதைக்குள் புகுந்தேன். கார் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

மழையில் நனைந்த மரங்கள், மீண்டும் தூரலைச் சிதறியவண்ணமாக இருந்தது. சாலையும் ஈரமாக.

மீண்டும் ஒவ்வொரு காட்சிகளாக, ரசித்தபடி.. இன்று ஏனோ கூடுதல் அழகுடன் இயற்கை.

அப்போது.... ஒரு பெரிய பாம்பு. சாலையை ஒய்யாரமாக கடந்துகொண்டிருந்தது. உடம்பில் ஒரு மினுமினுப்பு, பளபளப்பு..  உருண்டு திரண்டு செல்லும் அதன் அழகை என்னால் ரசிக்க முடியவில்லை.

என் உரோமங்கள் சிலிர்த்தன. கால்கள் கூசின. உடலில் ஒரு நடுக்கம். கார் ஜன்னல் எல்லாம் சரியாக மூடியிருக்கின்றதா என்பதனைச் சரி பார்த்துக்கொண்டேன்.

திடிரென்று எதோ ஒரு எண்ணம் தோன்ற... குரூர குணமுள்ள ஒரு பெண்ணாக மாறி, அதன் மேல் என் காரை ஏற்றினேன்.
ஏற்றிய மறு நொடி, திரும்பிப்பார்த்தேன்..அது அங்கில்லை. எதோ ஒரு குழப்பத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். அப்போதும் கால்களின் ரோமங்கள் சிலிர்த்தவண்ணமாகவே இருந்தன.

காணாமல் போன அந்த விஷப்பாம்பு எங்கு சென்றிருக்கும்? காரை விட்டு இறங்கியவுடன்.. முடிந்தவரை கீழே குனிந்துப்பார்த்தேன். யார் கண்டது, டையர் பகுதியில் பதுங்கியிருந்தால்.!!!

ஒரு குழப்ப நிலையில், மெதுவாக நடந்துவந்தேன். என் சக ஊழியரும் என்னுடன் வர (முஸ்லீம்) இந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். கொஞ்சம் பதற்றத்துடன்.

அவர் என்னை உற்று நோக்கி.. கிண்டல் சிரிப்புடன் “ அடி பட்டவுடன், அது ஓடியிருக்கும், எங்கே வந்து உன் காரில் ஏறப்போகிறது!” என்றார்.

சரி இவனிடம் சொல்லலாமே என ஒரு சீன நண்பரிடம் விசாரித்தேன், அவன், “ ஐயோ, எனக்குக் கிடைத்திருந்தால்.. சூப் செய்து சாப்பிட்டிருப்பேன், காட்டில் உள்ள பாம்புகள் சுவை அதிகம்..” என்றான் கண்களைச் சிமிட்டியபடி. இவன் வேற நிலைமை புரியாமல் என சிணுங்கிக்கொண்டு...
கொஞ்சம் ஆறுதல்தான் இருப்பினும் தமிழர் யாரிடமாவது கேட்டுப்பார்க்கலாமே, என்றெண்ணி காத்திருந்தேன்..வந்தார் நம்ம ஹீரோ. அவரிடமும் பகிர்ந்தேன்

“அய்யோ, அடிப்பட்டப் பாம்பு, சும்மா விடாது. கவனமா இருக்கணும். பழிவாங்கும். இனி அந்தப்பக்கம் போக வேண்டாம்.. இன்றைக்குச் சனிப்பெயர்ச்சி, கோவிலுக்குப் போய் சனி பகவானுக்கு விளக்குப் போடுங்கள்...எல்லாம் சரியாயிடும்..” !!!!









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக