திங்கள், ஏப்ரல் 09, 2012

தொட்டுக்க புளிச்சக்கீரை....

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் என்றால், சமையல்  தடபுடலாக இருக்கும். கோழி, இரால், நண்டு, இறைச்சி என நன்றாகச்சமைப்பேன். ஆனால் நேற்று, நோயாளியான மாமியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதால், அவரின் நாவிற்கு என்ன கேட்கிறதோ அதையே கூடுதலாக எல்லோருக்கும் சமைத்தேன்.

‘புளிப்பாக எதையாவது சமைம்மா, நாக்கு செத்துப்போச்சு..’ என்றார். சரி என்ன வேணும்னு சொல்லுங்க!? கேட்டேன். ``நல்லா காரமாக புள்ளிச்சைக்கீரையும், புளிப்பாக மாங்காய் துவையலும் செய்..’’ என்றார். இரண்டுமே புளிப்பு சம்பந்தப்பட்டதாகக் கேட்கிறார் என்றால், மருத்துவமனையில் அவர் சாப்பிட்ட உணவின் கொடுமையை நினைக்கும் போது, பரிதாபமாகத்தான் இருந்தது.

`கேட்பதைச் செய்துக்கொடு’, என்பதுதான் கட்டளை, இருப்பினும் கேட்பதையெல்லாம் செய்துக்கொடுக்க முடியுமா என்ன!? அததற்கு எது எது தோதாக இருக்குமோ, அதைத்தானே செய்ய வேண்டும்.!

புளிச்சக்கீரையை வாங்கி, நிறைய சிறிய வெங்காயங்களைச் சேர்த்து, எண்ணெய் கீரையாகக் கடைந்து, வவ்வாள் மீனை, எண்ணெய் இல்லாமல், எழுமிச்சஞ்சாறு பிழிந்து, பொன்நிறமாக வாட்டிக் கொடுத்தேன். வாட்டிய மீனைத் தொடவேயில்லை, புள்ளிச்சைக்கீரையை நக்கிக்கொண்டே, கஞ்சியைக் குடித்தார்.

``ரொம்ப நாளுக்குப்பிறகு சுறுக்’னு சாப்பிட்டேன்ம்மா’’ என்றார். என்ன சாப்பாடு போங்க, இரெண்டு மொடக்கு கஞ்சிதான், அதோடு போதும், வாந்தி வரமாதிரி இருக்கிறது என்கிறார். நோயாளியல்லவா..!

காலையில் எழுந்தவுடன், பசியாறுகிறாரோ இல்லையோ, ஆனால் நேரம் தவறாமல் மருந்து மாத்திரைகளை விழுங்கியாக வேண்டும்.   அம்மருந்து மாத்திரைகளைப் பார்க்க நமக்கு மளைப்பாக இருக்கும். அவ்வளவு மாத்திரைகள், விதவிதமான வடிவத்தில், பல நிறங்களில். கொடுத்தே ஆக வேண்டும், இல்லையேல் இனிப்பின் அளவு ஏழுலிருந்து இரண்டிற்கும், இரண்டிலிருந்து இருபதிற்கும் மாறிமாறி நோயாளியை இம்சை படுத்தும். அது பேராபத்து, நோயாளியை ஸ்ட்ரோக் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள். அவஸ்தைதான்.!

வந்த முதல் நாளிலேயே, மாத்திரைகளைப் பற்றி, மாமி வாய் திறக்கவில்லை. அவருக்கு மருந்து எடுத்துக்கொள்வதில் அவ்வளவாக இஷ்டமில்லை என்பதை உணர்ந்துக்கொண்ட நான், மாத்திரைகளை எடுப்பதற்கு அவரை வற்புறுத்தவில்லை. கணவர் வந்தவுடன், மாத்திரைகளைக் கொடுத்தாயா? என்பார். இருவரும் விழிப்போம்!. வசை எனக்குத்தான். என்ன செய்வது, வயதானவர்கள் குழந்தைகளாகிறார்கள்.

குழந்தைகளின் குறும்புகளையும் பிடிவாதங்களையும் ரசிக்கலாம் சகித்துக்கொள்ளலாம், ஆனால் வயதானவர்களின் நச்சரிப்பும் புலம்பலும் பெரும் எரிச்சலைத்தான் கொடுக்கிறது. அவர்களுக்கு என்ன வேண்டுமென்பதில் அவர்களுக்கே தெளிவு இருப்பதில்லை. சிறுபிள்ளைகளைப்போல் அது வேண்டும், இது வேண்டுமென்று நச்சரிப்பார்கள், ஆனால் கொடுத்தால் வேண்டாம் என்பார்கள்.

இப்படித்தான் ஒரு நாள், பால் வேண்டுமென்றார், பால்மாவு உள்ளது, பால் கலக்கிக்கொடுக்கவா? என்றேன்.  வேண்டாம் ஃப்ரெஷ் மில்க் வேண்டும் என்றார். உடனே, கடைக்குச்சென்று ப்ரெஷ் மில்க் வாங்கி வந்தேன். பாலைக் காய்ச்சி, நன்கு ஆறவைத்து டம்லரில் ஊற்றிக் கொண்டுவந்தால், வேண்டாம், குடலைப்பிரட்டுகிறது என்று சொல்லி படுத்துக்கொண்டார். சரி, காய்ச்ச பாலை விணாக்கவேண்டாமே என்று, அதில் கொஞ்சம் காப்பியைக் கலந்து, நான் குடித்துவிட்டேன். மகன் வந்தவுடன், புகார் செய்கிறார்,  பால் கேட்டேன், கொடுக்கவில்லை. என்று..!? திட்டவும்  முடியாமல், கோபித்துக்கொள்ளவும் முடியாமல்.. என்ன செய்வது!?

சனிக்கிழமை இரவு, வீட்டில் யாரும் இல்லை. கணவர் ஒரு ஒன்றுகூடல் நிகழ்விற்குச் சென்றுவிட்டார். நானும் வருடா வருடம் இந்நிகழ்விற்கு அவருடன் செல்வேன் . இந்த வருடம் கலந்துகொள்ள முடியாமல் போனது. சென்ற ஆண்டின் போது நான் தான் பேச்சாளர். சும்மா நமக்குத்தெரிந்த சில விவரங்களைப் பற்றி பேசலாம். வள்ளலார் பற்றிப்பேசினேன். மிக மகிழ்வாக இருந்தது, நிறைய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.  இவ்வருடம் அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

மாமியால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லைதான்.  உணவு கொடுத்து விட்டால், அமைதியாக உறங்குவார். ஆனாலும் எங்களுக்கு மனசு கேட்கவில்லை.  அவரை தனிமையில் விட்டு விட்டு எப்படி நிகழ்விற்குச் செல்வது? அதனால் இவ்வருட நிகழ்விற்குச் செல்ல எனக்குத்தடை. அந்நிகழ்வு, தமிழ் பள்ளி மாணவர்களின் உயர்விற்காக, கணவர் பணிபுரியும் நிறுவனம் வழங்கும் சேவை அன்பளிப்பு நிகழ்வு.

இரவு வெகுநேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். மாமிக்கு இப்போதெல்லாம் தூக்கமே வருவதில்லையாம். விடிய விடிய தூங்காமல் விழித்திருப்பாராம். ஏன் இந்த மாதிரியான சிக்கலில் இறைவன் தம்மை  தவிக்கவிடுகிறான், என என்னிடம் அவரின் உணர்வுகளைப் பகிர்ந்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களையும், அங்கிருந்து வந்தவுடன், மூத்த மகனின் வீட்டில் நடந்தவைகளையும், மகள் வீட்டீற்குச் சென்றிருந்த போது  பேரன்கள் பொழிந்த பாச மழை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாமி மீது வைத்திருக்கும்  அக்கறை, என,  எல்லாவற்றையும் பகிர்ந்துக்கொண்டிருந்தார். நானும் கணினியில், முகநூலில் வலம் வந்துக்கொண்டே, `உம்’ கொட்டிக்கொண்டிருந்தேன்.

பேச்சுவாக்கில் அவரிடம் ஒட்டிக்கொண்டுள்ள, `அந்த’ பழக்கத்தைப்பற்றியும் கூறினார். அதிகமாகக் குளிரும் போது ஒரு `பேக்’ போட்டுக்கொள்வாராம்.! மகன்கள் பேரன்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டு, ஊர் திரும்புகையில்,  நிச்சயம் பாட்டிக்கென்று வெளிநாட்டு மதுபானங்களை ஒன்று அல்லது இரண்டு பாட்டல்களை  வாங்கி வந்துவிடுவார்கள்.  இது எனக்குத் தெரிந்த ஒன்றுதான்.  இருப்பினும், மருந்து, ட்ரீப்ஸ், ஊசி, மூத்திரப்பிரச்சனை, மலச்சிக்கல், தோள் அரிப்பு, கால்களில் புண், கண் பார்வையில் பிரச்சனை, ஜீரணக்கோளாறு, வாயு கோளாறு என அத்தனை கோளாறுகளால் அவதியுறும் இந்த சூழலில், எப்படிக்கொடுப்பது?

கொஞ்சம் குடித்தால் இந்தக் குளிருக்கு இதமாக இருக்குமென்றார். எனக்கு, திக் என்றது. எப்படிக்கொடுப்பது?? யோசித்தேன்,  கொஞ்சமாக ஊற்றி, சுடுநீர் கலந்து, நானும் மாமியும் சீயர்ஸ் செய்துக் குடித்தோம். யாருக்கும்  தெரியாது.

நாம் செய்கிற செயல் நமக்குச் சரியென்று பட்டுவிட்டால், யாரிடமும் ஆலோசனைகளையோ அறிவுரைகளையோ கேட்கவே கூடாது என்பார்களே, அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை அன்றிரவு அறிந்துகொண்டேன்.!

இரவு கணவர் வீடு திரும்பியதும், ஜாடை மாடையாக, இது பற்றி ஒன்றுமறியாதது போல் வினா எழுப்பினேன்.

``குளிர் அதிகம், உடலெல்லாம் நடுங்குகிறதென்று அம்மா புலம்புகிறார்களே, கொஞ்சம் விஸ்கி,ப்ராண்டி கொடுத்துப்பார்த்தால்..!?”

``ஐயோ, அந்த மாதிரி முட்டாள் தனமாக எதுவும் செய்துவிடாதே.! வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைப்போல் ஆகிவிடும். கை கால் இழுத்துக்கொள்ளும். உடம்பில் ஏற்றியிருக்கும் அனைத்து மருந்துகளும் பாழாகி பிரிரோஜனமில்லாமல் போய்விடும். ஜாக்ரதை.!!” என்றார்.

எனக்கு அடிவயிற்றைக் கலக்க ஆரம்பித்தது. எதோ தவறு நிகழ்த்திவிட்டதைப்போல் மனம் பதைபதைத்தது. இந்த விவரகாரம் வெளியே தெரிந்தால், நான் தான் மாட்டிக்கொள்வேன். படித்திருந்தும் புத்தியில்லாமல் காரியம் ஆற்றிவிட்டேனென்று பல திசைகளில் இருந்து எதிர்ப்புக்குக் குரல்கள் கிளம்பலாம்.! மாமியின் காதிலும் லேசாக ஓதிவிட்டேன். அவரும் மௌனம் காத்தார். (குடிகாரிகள்)

காலையில், வேலைக்கு வந்தவுடன், முதல் வேலையாக என் மருத்துவ நண்பருக்கு தொலைப்பேசியில் அழைத்து,  இந்த விவரத்தைச் சொன்னேன்.

``அதில் தப்பே இல்லை. இனி என்ன? என்ன கேட்டாலும் கொடுங்கள், சந்தோசமாக இருந்து விட்டுப்போகட்டும். மது கூட மருந்துதான் சீரான ரத்த ஓட்டதிற்கு. அதிகமானால் எல்லாமே விஷம், உணவும் கூட. ”

நிம்மதிப்பெருமூச்சு வந்தது..

  

3 கருத்துகள்:

  1. சகோ, உண்மையாகவே நீங்க மலேசியாதானா ?? வாசிக்க தெரியவே இல்லை..ஏதோ சிறந்த எழுத்தாளர் கணக்கா இருக்கே..இந்தியாவோ ?? வாழ்த்துக்கள்..சிறப்பான எழுத்து நடை உங்களுக்கு..எத்தனை வருஷங்களா எழுதுறீங்க..? தொடருங்கள்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. A neatly written story in the form of a narration. Satisfying aged people is an art. We shouls go along their lines to provide them with comfort and to prevent unnecessary misunderstanding. After a certain stage we need not follow procedures rigourously. Hence by giving her a peg of liquor has fulfilled her desire and longing. Her encounter with her husband on varoious ocassions is written with humour. Generally Vijaya has a flair for humour and wit. This is evident in every line of this short story. Wishing to read more of your thoughts . Keep it up Vijaya...Dr.G.Johnson.

    பதிலளிநீக்கு
  3. @டாக்டர் ஜான்சன்.. உண்மைதான் வயோதிகத்தில் இது வேண்டாம் அது வேண்டாமென்று இவர்களாக ஒரு முடிவெடுப்பதை விட, சம்பந்தப்பட்டவரிடம் ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டு, தேவையானதையெல்லாம் கொடுக்கலாம். நன்றி

    பதிலளிநீக்கு