புதன், ஏப்ரல் 04, 2012

ஓஷோவின் கதை இது

முன்னொரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் உள்ள குக்கிராமத்தில் சோம்பேறி ஒருவன் இருந்தான். எதற்கெடுத்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கொண்டு எந்த வேலையும் செய்யாமலேயே காலத்தை கழித்து வந்தான். முப்பாட்டன் காலத்து சொத்துக்கள் இருந்ததால் அவனது ஜீவனத்துக்கு குறைவொன்றும் இல்லை. எப்போது தெருவில் சென்றாலும் கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு செல்வான். யாருமே இவனை மதிக்கமாட்டார்கள். மாறாக அதே ஊரில் ஏழை பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் மதித்தார்கள். இவனுக்கு ஆத்திரமாக வந்தது. தன் நண்பனிடன் கேட்டான் 

"அதெப்படி?, அவன் அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகிறான். ஆனால் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள். என்னை எவனும் மதிக்க மாட்டேங்கறான்?"

நண்பர் கூறினார், "அவனை எல்லோரும் அறிவாளி என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீயும் அறிவாளி என்று எல்லோரையும் நம்ப வைத்து விட்டால், உன்னையும் எல்லோரும் மதிப்பார்கள்." 

அந்த நொடியே, நம்மாளுக்கு அறிவாளி ஆகிவிட வேண்டும் என்ற பேராவல் உண்டானது. ஆனால் எப்படி என்ற உபாயம்தான் தெரியவில்லை. நண்பரின் ஆலோசனைக்கிணங்க ஊருக்கு வெளியே உள்ள ஒரு சாமியாரை பார்த்து, அவரிடம் பேசி, அறிவாளியாகும் வழியை கண்டு பிடித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன், அந்த சாமியாரை சந்திக்க சென்றான். 

தியானத்தில் இருந்த சாமியாரின் முன்னால் தவிப்புடன் அமர்ந்திருந்தான். வெகு நேரம் கழித்து கண் திறந்த சாமியார், அவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன், மெலிதாக புன்னகைத்தார். பிறகு, "தெளிவாக சொல். நீ அறிவாளி ஆக வேண்டுமா? அல்லது அறிவாளி போல காட்டிக்கொள்ள வேண்டுமா?", என்று கேட்டார். 

இவன் திருதிருவென முழித்தான். "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் சாமி?", என்று கேட்டான். 

அவர், "அறிவாளி ஆவதற்கு வருடங்கள் ஆகும். ஆனால் அறிவாளி போல காட்டிக்கொள்வதற்கு கண நேரம் போதும். அறிவாளியாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமயத்தில் மாட்டிக்கொண்டு விழிக்க நேரிடும்.", என்று கூறினார். 

இவன் உடனே, "அப்படியானால் நான் அறிவாளியாக வேண்டாம். அறிவாளி போல காட்டிக்கொண்டால் போதும்." என்று கூறினான். 

சாமியார் இவன் காதில் ஏதோ சொல்ல, இவன் முகம் பிரகாசமானது.

அடுத்த நாளே அவன் பெயர் அந்த நாடு முழுவதும் பிரபலம் ஆனது. இவன் பின்னால் பலர் வரத்தொடங்கினர். அவனை அறிவாளி என்று ஒரு கூட்டம் தலையில் வைத்து கொண்டாடியது. வெளியூர் சென்றிருந்த அவனது நண்பருக்கு மகா ஆச்சர்யம். இவனிடம், "எப்படி இவ்வளவு சீக்கிரம் எல்லோரிடமும் அறிவாளி என்ற பெயர் பெற்றாய்?", என்று கேட்டார். 

அவன், "இன்று இரவு நடக்கும் இலக்கிய கூட்டத்துக்கு வா. உனக்கே புரியும்." என்று கூறினான்.  

அன்று இரவு இருவரும் அந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். பெருங்கூட்டம். அறிஞர் ஒருவர் தனக்கு தெரிந்த கருத்துக்களை மக்களிடம் கூறிக்கொண்டிருந்தார். 

அவர் பேசி முடித்தவுடன், நம்மாள் எழுந்து, நீங்கள் கூறுவது அத்தனையும் பொய். எல்லோரையும் ஏமாற்றுகிறீர்கள்." என்று அடித்து பேசினான். 

அவர் சில சான்றுகளை எடுத்துக்காட்டினார். இவன், "இல்லையில்லை. இவை எல்லாம் போலியாக தயாரிக்கபட்டவை. உங்களை நம்ப முடியாது. நீங்கள் சொல்வது உண்மை என்பதை இப்போதே நிரூபிக்க முடியுமா?" என்று சவால் விட்டான். அவர் அமைதியாகி விட்டார். 

இப்படியே வரிசையாக ஒவ்வொருவரின் கருத்துக்கும் எதிர்கருத்தை தெரிவித்து, நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டான். எல்லோரும் பயந்து பின்வாங்கினார்கள். இவன் நண்பனிடம், "பார்த்தாயா?,  இருக்கிறது என்று சொல்வதற்கு நிறைய அறிவும், சான்றுகளும் தேவை. இல்லை என்று சொல்வதற்கு அறிவும், சான்றுகளும் தேவை இல்லை. இருக்கிறது என்று நிரூபிக்க நிறைய கால அவகாசம் வேண்டும். இல்லை என்று நிரூபிக்க, கண நேரம் போதும். என்னிடம் விவாதம் செய்யும் அனைவரும், ஒரு கட்டத்தில் பின் வாங்கி விடுவதால், மக்களும் என்னை அறிவாளி என்று ஒப்புக்கொண்டு விட்டனர்." என்று பெருமிதம் பொங்க கூறினான். 

இந்த கதையை படிக்கும்போது, நம்மூரில் இருக்கும், பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். 


- சுகி. சிவம் 
பாலாவின் பக்கத்திலிருந்து - சுட்டது.
படித்ததில் பிடித்தது

4 கருத்துகள்:

  1. சகோதரி, சில நாட்களுக்கு பிறகு மீண்டும் வருகிறேன்.சில வேலைகள் இணையப்பக்கமே வர முடியாமல் ஆக்கிவிட்டது.
    கதைக்கு நன்றிங்க..நல்ல அர்த்தங்கள் நிறைந்தது.சிறிய கதையில் சிந்தனைக்கு பஞ்சமில்லை.வாழ்த்துக்கள்..வளர்க.

    பதிலளிநீக்கு
  2. @kumaran .கருத்திட்டமைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாங்க, ஒன்றும் பிரச்சனையில்லை. இது பாலாவின் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பதிவு, நன்றியெல்லாம் பாலாவிற்கே. ஓஷோவின் புத்தகத்திலும் இக்கதையைப் படித்தேன்,சுறுக்கமாக இருந்தது. அதன் பிறகு ஏமாற்றாதே ஏமாறாதே என்கிற சுகி சிவம் புத்தகத்திலும் இக் கதையைப் படித்தேன், கொஞ்சம் விரிவாக்கம் இருந்தது..

    பாலா சொல்லும் போது இதில் ஏதோ ஒரு படிப்பினை மறைந்துக்கிடப்பதை உணர்ந்தேன். பிடித்தது.பகிர்ந்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்த கதையை படிக்கும்போது, நம்மூரில் இருக்கும், பகுத்தறிவாளர்களும், புரட்சியாளர்களும் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள்....///

    இதுவே உண்மை......

    பதிலளிநீக்கு
  4. @தினேஷ்குமார்..உங்களுக்கு வந்ததா? எனக்கும் தான்.

    //"அறிவாளி ஆவதற்கு வருடங்கள் ஆகும். ஆனால் அறிவாளி போல காட்டிக்கொள்வதற்கு கண நேரம் போதும். அறிவாளியாக இருப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. சமயத்தில் மாட்டிக்கொண்டு விழிக்க நேரிடும்.",//இதுகூட உண்மையான வாசகம். எல்லா காலத்திற்கும் ஏற்புடையது. காலத்தைக் கடந்து நிற்கும் ஒரு கருத்து இதுவும். வருகைக்கு நன்றி தினேஷ். :)

    பதிலளிநீக்கு