சனி, மே 12, 2012

அன்னையர் தின வாழ்த்துகள்.

ஒவ்வொரு அன்னையர் தினத்திலும் என் மகன் எதாவது ஒன்றை தமது சொந்த தயாரிப்பாகச் செய்து பரிசாக எனக்கு வழங்குவான். பாலர் பள்ளியில் பயிலும்போது அங்கே போதித்த ஆசிரியர்கள் இக்காரியத்திற்கு அடியெடுத்து கொடுத்துவிட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை விடாமல் ஒவ்வொரு வருடமும் எதையாவது செய்து கொடுத்துவிடுவான்.  

மூன்று வயதிலேயே பாலர் பள்ளிக்குச் சென்றவன் என் மகன். அப்போது அவனின் ஆசிரியர் கொடுத்த ரோஜாவைக் கொண்டுவந்து கொடுத்து முத்தமிட்டான். அதுதான் ஆரம்பம். எனக்கு அது ஒன்றும் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. 

அதன் பிறகு நான்குவயதில் அவனே செய்த செயற்கை ரோஜா ஒன்றைக்கொண்டுவந்து கொடுத்தான். வர்ண காகிதங்களை வெட்டி வெட்டி ஜிகுணா எல்லாம் போட்டு தமது கைவண்ணத்தில் செய்த காகித ரோஜாவை கொண்டுவந்தான். அடுத்தடுத்த ஆண்டுகளின், அவனே வேலை மெனக்கட்டு, காலண்டரின் பின்புறத்தில் பலவித ஓவியங்களை வரைந்து `அம்மா, ஐ லவ் யூஎன்கிற வாசகங்களை எழுதி, வாழ்த்து அட்டைபோல் செய்து எனக்கு போஸ்ட் செய்வான். வீட்டின் போஸ்ட் பாஃக்ஸில் போட்டுவிடுவான். அதை நான் `லெட்டர் வந்திருக்கே, யாரும் கவனிக்கவில்லையே..என்கிற சிந்தனையில் எடுக்க வேண்டுமாம், `அட, மகன் செய்த வாழ்த்து அட்டைஎன்று ஆச்சிரியப்படவேண்டுமாம்.. அதைப்பார்க்கின்ற அவன் குதூகலிப்பானாம்..!!!

அடாடாடா வேற வேலையில்லையா? என்பேன் அலட்சியமாக..!!

இப்படியே ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. அவனுக்கும் வயது பத்தொன்பது ஆகிவிட்டது.
இவ்வருட அன்னையர் தினத்தில் (நேற்று), `அம்மா, நீங்கள் காலெஜுக்கு கொடுக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்துள்ளேன், இந்த வருட அன்னையர் தினத்திற்கு உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்?’’ என்று கேட்டான். அப்போதுதான் உணர்ந்தேன் அவன் வளர்ந்து பெரியவனாகிவிட்டான் என்பதை.

அவன் குழந்தைப்பருவத்தில் எனக்களித்த அத்தனைப் பரிசுப்பொருட்களையும் தேடுகிறேன். குழந்தை மனதில் பூத்த அந்த காதல் பரிசுகள் மீண்டும் எனக்குக் கிடைக்குமா.? அலட்சியமாக வீசிவிட்டேனே அனைத்தையும்.. அதே போல் செய்து கொடுய்யா, என்றால், வெட்கத்தில் சிரிப்பானே..! அதெல்லாம் ஒரு பரிசாம்மா.! என்பான் இப்போது. அன்று நான் இருந்த அதே உணர்விற்கு அவன் வந்துவிட்டான் இப்போது. நான் தான் குழந்தையானேன். 

ஏன் அப்போது நான் ரசனையே இல்லாதவளாக இருந்துள்ளேன்.!!?? எல்லோரும் இப்படித்தானா, பொருள் தேடும் பூமியில்...!!?




9 கருத்துகள்:

  1. நன்கு ரசித்தேன்...அன்னையர் தின வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இந்த உலகில் வாழும் தெய்வம் ஒன்று உள்ளது என்றல் அது அன்னை தான்

    பதிலளிநீக்கு
  3. ம்ம் காலம் கடந்தாவது தோன்றியது.\\

    அம்மா அம்மா தான் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. செம கியூட். எனக்கெல்லாம் அன்னையர் தினம் என்று ஒன்று இருப்பதே பதின்ம வயதுக்கு அப்புறம்தான் தெரியும். சோ தினம் தினம் அன்னையர் தினம்தான். Belated Wishes

    பதிலளிநீக்கு
  5. எனக்கெல்லாம் அன்னையர் தினம் என்று ஒன்று இருப்பதே பதின்ம வயதுக்கு அப்புறம்தான்// எனக்கும்தான்.. 50,60,70களில் பிறந்தவர்களுக்கு அந்த பாக்கியம் இல்லை. அழாதிங்க பாலா சார். நன்றி பதிவிற்கு.. :)))

    பதிலளிநீக்கு