வெள்ளி, மே 04, 2012

நினைவுகள் களவாடிச்சென்றன

(மே மாத அதீதத்தில் வந்த எனது கவிதை)

பூமியை பிளக்கவிருக்கும்
விதை

தொட்டால் சிணுங்கும்
தொட்டாச்சிணுங்கி

வீட்டைச் சுற்றும்
சுட்டிப்பூனை

கொஞ்சி விளையாடும்
நாய்க்குட்டி

தண்ணீர் தொட்டியில்
வால் ஆட்டும்
மீன் குஞ்சு

காற்றில் அசைகின்ற
இலை

தென்றலில் தவழும்
பூக்களின் மணம்

ஓய்வில்லாமல்
பாடிக்கொண்டே இருக்கும்
குருவிகள்

வரிசையாகச் செல்லும்
எறும்புகள்

சிவப்பை உமிழும்
சூரியனின் மறைவு

சிறகடித்து
கூண்டில் புகுந்துக்கொள்ளும்
சிட்டுக்குருவிகள்

பனியை சுமந்து
தலை சாய்க்கும்
நுனிப்புல்

பச்சை இலைகளை
ரசித்து உண்ணும்
பச்சைப் புழுக்கள்

படரும் கொடி
மரத்திடம்
கையேந்தும் காட்சி

இலைகளுக்கு பின்னால்
வர்ணங்களை மாற்றி
அமைதியாகக் காத்திருக்கும்
பச்சோந்தி...

வட்டமடிக்கும்
பட்டாம்பூச்சியின் தேடல்

கரு மேகத்து நிழல்
பூமியில் விழுகின்ற காட்சி

பக்கத்துவீட்டில்
சதா பேசிக்கொண்டே இருக்கும்
குழந்தை...

தரையை
வர்ணக் கம்பளமாக்கும்
மரித்து விழுகின்ற பூக்கள்

சருகுகளின்
ஓசை

இன்னும் இயற்கையில்
உள்ள அனைத்தையும்
ரசித்திருப்பேன்

உன் நினைவுகள் மட்டும்
என்னை சிதைக்காமல்
இருந்தால்


4 கருத்துகள்:

  1. அருமையாக சொன்னீர்கள் கடைசி நான்கு வரிகளில்...
    ரசிக்க இவ்வளவு இருக்கா அதற்கு முந்தய வரிகளில் பட்டியல்
    பிரமாதம் சகோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மனசாட்சி. தொடர்ந்து உற்சாகமூட்டிய வண்ணம்.. தொடரட்டும்

      நீக்கு