வெள்ளி, மே 11, 2012

நீ அரை பைத்தியம் என்றால், நாங்கள் முழு பைத்தியம்

எங்கள் கம்பனி ஒரு sales and service நிறுவனம். இங்கே கஸ்டமர்கள் தங்களின் பழுதான மின்சாரசாதணங்களைப் பழுதுபார்க்கக் கொண்டுவருவார்கள். பழுது பார்ப்பது ஒரு புறமிருந்தாலும், spare parts கள் வாங்குவதற்கும் நிறைய கஸ்டமர்கள் வருவார்கள். மேலும், உள்ளே மற்ற மின்சார சாதணங்கள் அடுக்கி வைத்திருக்கும்  show room மிற்கும் வருகை புரிவார்கள்.


இப்படி தினமும் சந்திக்கின்ற கஸ்டமர்களில் பலர், படு சுவாரஸ்யமானவர்கள். அவர்களின் பேச்சுகளைக்கேட்டால், ஒரு நகைச்சுவை புத்தகமே எழுதலாம்.


இப்படித்தான் ஒரு கஸ்டமர், அவர் பழுதுப்பார்க்கக் கொண்டுவந்த வானொலி, எங்கள் கம்பனி தயாரிப்பில் மிக பழமையானது. இனி இதுபோன்ற  வானொலியை எங்கு தேடினாலும் கிடைக்காதாம். பல ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓர் கருவி அது.

அதனை அவர் கொண்டுவந்திருந்த போதே தெரிந்தது, அதனின் பழைமை. தொல்பொருள் காட்சிக்கூடத்திலிருந்த்து அபகரித்துக் கொண்டு வந்ததைப்போல் இருந்தது அப்பொருள். அதன் spare parts  கிடைப்பதில் சிரமம் இருப்பதால், (ஜப்பானில் கிடைக்கலாம், அது கூட உறுதியில்லை) பழுது பார்க்க முடியாது, மன்னிக்கவும் என்றிருக்கின்றார்கள். அவர் தமிழர், வீரமண்ணுக்குச் சொந்தக்காரராச்சே,  விடுவாரா? நான் ஒரு தமிழ் இளிச்சவாய் கிடைத்து விட்டேனா.. சும்மா விஜயகாந்த் கணக்கா `நான் இவனுங்களை என்ன செய்கிறேன் பார், என்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்!, நான் நினைச்சேனா, இந்த கம்பனி இந்த இடத்திலேயே இருக்காது!, நீங்க ஒரு தமிழர் இங்கே வேலை செய்வதால்தான் கருணை காட்டுகிறேன்.! எங்க பெரியப்பா யார் தெரியுமா? எங்க சின்னத்தாத்தா யார் தெரியுமா? எங்க மாமா பொண்டாட்டி யார் தெரியுமா!..என..!

நம்முடைய சிந்தனையோ.. கடவுளே, இந்த மாதிரியான ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்று, என்கிற பிராத்தனையைத்தவிர வேறொன்றும் இருக்காது.


எங்கள் கம்பனியின் மின்சார சாதணங்களில் எதேனும் ஆபத்துகள் விளைவிப்பதைப்போன்ற அறிகுறிகள் தென்பட்டதென்றால், அவற்றை உடனே இங்கு கொண்டு வந்து, அதனின் ஆபத்து என்வென்று விளக்கமாக ஆதரத்தோடு நிரூபித்தால், அப்பொருளைத் திருப்பிக்கொடுத்து புதிதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றம் உடனே நிகழாது, கொஞ்ச காலம் எடுக்கும். சும்மா கொடுத்துவிடுவார்களா என்ன.!

இங்கே அதைப் பரிசோதித்து, எந்த நிறுவனம் அப்பொருளைத் தயாரித்ததோ, அங்கே அதைத் திரும்பவும் அனுப்பி, அவர்களும் பரிசோதித்து அதற்கான காரணம் என்ன என்பதனை ஆராய்ந்து, சோதனைச் சான்றிதழை ஜாப்பானுக்கு அனுப்பி, அங்கே அவர்கள் அதை ஏற்றுக்கொண்ட பிறகே, இங்கே அதற்கான புதிய பொருள் வெளியாக்கப்படும். சில பொருட்களுக்கு இதுபோன்ற அப்ரூவல் கிடைக்கவே கிடைக்காது.

ஒருமுறை, கஸ்டமர் ஒருவர், அவரின் வீட்டில் உள்ள ஏர்கோண்ட், ஆன் செய்யும் போதெல்லாம் பயங்கர துர்வாடை வீசுவதாகச் சொல்லி, சதா தொலைப்பேசியின் வழி தொல்லை செய்தவண்ணமாகவே இருந்தார். இப்படி துர்வாடை வீச வாய்ப்பே இல்லை. என்ன மாடல்? எங்கே வாங்கினீர்கள்? போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. பொறுமை இழந்த அவர் ஒரு நாள் எங்களின் அலுவலகத்திற்கு நேராக வந்துவிட்டார். அதன்பின், உண்மை நிலவரங்களைக் கண்டுவர, இரண்டு டெக்னிஷன்களை அனுப்பினார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று வந்த டெக்னிஷன்கள் சொன்ன கதைதான் இங்கே சுவாரஸ்யம்.

அந்த அறையே பயங்க துர்நாற்றமாம். குழந்தையின் மலம், சிறுநீர், அழுக்குத்துணிகளின் குவிப்பு, குப்பைகளின் சிதறல் என வீடே அசுத்தமாக இருந்ததாம்.. !! ஆக, பகலில் ஏற்படுகிற இந்த துர்நாற்றத்தை அந்த ஏர்கோண்ட் அப்படியே கிரகித்து வைத்துக்கொண்டு, இரவில் அவர்கள் அதை முடக்கிவிடும்போது, அந்தத் துர்நாற்றம் இரட்டிப்பாகி, அவர்களுக்கே திரும்பி விடுகிறதாகச் சொன்னார்கள். இதை அவர்களிடம்  சொன்னால் ஏற்றுக்கொள்வார்களா..! எவ்வளவோ போராடினார்கள். அவனும் பத்திரிகையில் எழுதி உங்களின் கம்பனி இமெஜ்யை பாழ்படுத்தப்போகிறேன் பார்’ என்கிற சவால் எல்லாம் விட்டான். எங்களின் கம்பனியில் பத்திரிக்கைத்துறையை  கவனிக்க ஒரு நிபுணரே வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் போது, இந்த பாச்சா எல்லாம் இவர்களிடம் பலிக்குமா என்ன.! அவனும் MD யிடம் பேசனும், மந்திரியை அழைக்கப்போகிறேன் என்றெல்லாம் மிரட்டல் விடுத்து, காணாமலே போனான்.


ஒரு கஸ்டமர், எங்களின் நிறுவனத்திற்கு அவன் வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டான். பிரச்சனை என்னவென்றால், அந்த தொலைக்காட்சியை அவன் கடையில் வாங்கும்போது, 29’’ என்று சொன்னார்களாம். ஆனால் அவன் வீட்டிற்குச்சென்று அவன் வைத்திருக்கும் அளவுகோலில் அளந்து பார்க்கையில், அது 29’’ டீவி இல்லையாம். !

இங்கே உள்ள பலருக்கு, இந்த கேஸ் படு பயங்கர நகைச்சுவையை உண்டுபண்ணியது. ஆனாலும் கஸ்டமர் முன்னிலையில் சிரிப்பது தவறு என்பதால், எல்லோரும் அவனுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார்கள், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு. காரணம் இது போன்ற கேஸ்’ஐ இந்த வழக்காடு மன்றத்தில் இதுவரையில் இவர்கள் சந்தித்ததில்லை. நானோ சிரிப்பை அடக்க முடியாதா சூழலில் தத்தளித்துக்கொண்டிருந்தேன்... இந்த தர்மசங்கட நிலையில், எங்களின் சர்வீஸ் மானேஜர் ஒருவர், என் அருகில் வந்து, அவனிடம் ஒரு பேர்னோ சீடியைக் கொடுத்து அனுப்பி, அதை ஓடவிட்டு பார்க்கச்சொல்லலாம், டீவி வளரும் என்றார். நான் இடத்தை விட்டே காலி செய்துவிட்டேன். தேவையா.! சிரித்தால், புரிந்து விட்டது போலும் என்று நினைப்பார்களே.. வில்லங்கம்.


தான் வாங்கிச்சென்ற ரைஸ்கூக்கர், கத்திப்போல் கூர்மையான மூடியைக்கொண்டதால், அதைக் கழுவும் போது, தன் விரலையும் தமது மனைவியின் விரலையும் பதம் பார்த்துவிட்டதென்று சொல்லி,வெள்ளை பேண்டேஜ் ஒன்றை விரல்களில் சுற்றிக்கொண்டு (காயம் பட்டால், போடுவோமே அதுபோல்) வந்தார் மற்றொரு கஸ்டமர்.. அவரிடம்  ஒரு நீண்ட கடிதம் வேறு. அக்கடிதம், அவர் எங்களைச் சந்தித்து விட்டதாகச் சொல்லும் அத்தாட்சியாம்.. ! அந்த  ரைஸ் கூக்கரையும் கையோடு கொண்டுவந்திருந்தார்.

ரைஸ் கூக்கரை எங்களின் டெக்னிஷன்கள் துருவித்துருவித் தேடுகிறார்கள் அதில் அவர் சொன்ன அந்த மாதிரி கோளாறு எங்கும் தென்படவில்லை. சோதித்துப்பார்த்தார்கள், அவர்களின் கைகளை அது பதம் பார்க்கவும் இல்லை. இதில் ஒரு பிரச்சனையும் இல்லையே என்கிற ரிப்போர்ட்’டும் வந்தது.

அதை அந்த கஸ்டமர் காது கொடுத்துக்கேட்பதாய் இல்லை.வம்பிற்கு நின்றான்.

சரி, அந்த காயத்தைக்  காட்டுங்கள், என்றால், பேண்டேஜ்தான் பெரிசாக இருக்கின்றதே தவிர காயங்கள் எதுவுமேயில்லை. தக்காளி நறுக்கும் போது கத்தியின் கீறல் விரல்களில் லேசாக விழுமே, அது போன்ற ஒரு கீறல்தான். அதுகூட இந்த ரைஸ் கூக்கரால் தான் வந்தது என்றால் சந்தேகமே.! காயத்தை அவன் காட்டுகிற போது நான் தயார்நிலையில் இருந்தேன் சிரிப்பதற்கு.. இருப்பினும் அடக்கிக்கொண்டேன்.  இயலாமை வெளிப்படும்போது சிரித்தால் நிலைமை படு மோசமாகும் என்பது எனக்கும் தெரியுமே.

அவனைச் சமாளிக்கவே முடியாமல் திணறினார்கள் டெக்னிஷன்கள். அவர் சீனர் என்பதால், சீன மானேஜர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து சீன மொழியில் பயங்கரமாக சத்தம் போட. அவனும் மறுமொழியில் என்னன்னமோ சொல்லி சத்தம் போட, இடமே அமளிதுமளியானது.

மானேஜர் உள்ளே சென்றார், எங்களின் கம்பனியிலே மிகப்பெரிய புகைப்பட கருவி ஒன்றினை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார், வேண்டுமென்றே..! 70களில் பயன்பாட்டில் இருந்த அந்தக் கேமரா. இப்போது வெறும் காட்சிப்பொருள்தான் அங்கே. அதைத்தூக்கிகொண்டு, காயம் பட்ட உன் விரலைக் காட்டு, நான் புகைப்படம் எடுக்கப்போகிறேன், இந்தப் புகைப்படத்தை ஜப்பானுக்கு அனுப்பி, அவர்கள் ஏற்றுக்கொண்டால் உனக்கு மாற்றுப்பொருள் வழங்குவோமென்று, வித்தை காட்ட ஆரம்பித்தார்.. நான் ஓடியே போய் விட்டேன். கொடுமை இல்லையா..!? நீ அரை பைத்தியமென்றால் நாங்கள் முழு பைத்தியம், புரியுதா என்பதைப்போல் இருந்தது அந்த காட்சி.! அன்று அவர் நடத்திய நாடகத்தை சொல்லிச் சொல்லி அலுவலக ஊழியர்கள் அனைவரும் சிரித்தோம்..!!!


ஒரு நாள், கடுமையான மழையில் கடுப்பேறி வந்த ஒரு கஸ்டமர், காரைவிட்டு இறங்கும்போது, மழையில் நனையாமல் இருக்க, பார்க்கிங் தேடியுள்ளார். பார்க்கிங் கிடைக்காததால், நேராக எம்.டி’யின் அரைக்குள் நுழைந்து விட்டார். காவலாளிகள் எல்லோரும் உடனே வந்து அவனைப்பிடித்து,  வெளியே துரத்திவிட்டனர்.  அதிலிருந்து எம்.டி அறைக்குப்போகும் எல்லா குறுக்கு வழியும் மூடப்பட்டது. நேர்வழியில் சென்றாலும், நெம்டாக்  இருந்தால் தான் அந்த டிப்பார்ட்மெண்டிற்க்குள்ளேயே நுழைய முடியுமென்கிற சட்டமும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது.


இப்படி இன்னும் பலவித கூத்துகள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணமாகத்தான் உள்ளது எங்களின் கஸ்டமர் சர்வீஸ் நிறுவனத்தில். நினைவிற்கு வரும்போது நிச்சயமாக தொடர்ந்து பகிர்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பு கூட ஒரு அழைப்பு வந்தது.

``உங்களின் அலுவலக நேரம் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணிவரை.?’’ 

சொன்னேன்.. ``எட்டு முப்பதிலிருந்து, ஐந்து முப்பதுவரை!.’’

``அப்படியென்றால் சரி, நாளைக்கு நான் private part வாங்க வருகிறேன், bye.’’ என்றார்.




4 கருத்துகள்:

  1. ஐயோ செம செம செம...........சூப்பரா சொல்லியிருக்கிறீங்க....

    கஸ்டமர் சேர்விஸ் பார்ட்டிகளுக்கு நிறைய அனுபவம் இருக்கும் என்னு நான் யோசிப்பேன் இப்பதான் புரிஞ்சுகிட்டன்/சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. //நீ அரை பைத்தியம் என்றால், நாங்கள் முழு பைத்தியம்//

    நல்லா இருக்கே

    தொடருங்கள் ரசிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ..நன்றி வருகைக்கும் வாசிப்பிற்கும். சுவாரிஸ்யமாக இருந்தால் தொடர்கிறேன்.

      நீக்கு