முன்பெல்லாம் எங்கேயாவது சென்றுவந்தால் அனுபவித்த விவரங்களைக்குறித்து நண்பர்களை தொலைபேசியில் அழைத்து, அவர்கள் அதை விரும்புகிறார்களா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் வளவளா என நாளெல்லாம் உளறிக்கொண்டிருப்பேன். சிலவேளைகளில் மனதிற்குள் என்னை நான் திட்டியும்கொள்வேன்.. தேவையில்லாமல் ஏன் இப்படி தோழிகளையும் நண்பர்களையும் பாடாய்ப்படுத்திக் கொண்டிருக்கின்றேன் என்று. ஆனால் எப்போது முகநூல் ப்ளாக் என்று நுழைந்தேனோ, அன்றிலிருந்து எனக்கு பயணமோ அல்லது வேறு எதேனும் அனுபவமோ நிகழ்ந்ததென்றால் அதை உடனுக்குடன் அங்கே பகிர்ந்து உலகத்திற்கே `டமார்’ அடித்துவிடுவேன். இதனால் நான் கூடுதல் மகிழ்வும் அடைகிறேன்.
முன்பெல்லாம் பத்திரிகைகளுக்கு எழுதுவதும் எனது வழக்கம். இப்போது அது `வேஸ்ட்’ என்று தோன்றியதால், அதைவிட ப்ளாக் முகநூல் மேல் என்று மனதிற்குப் பட்டதால், எனது அனைத்து அனுபவங்களையும் இணையத்தில் கொட்டிக்கொண்டிருக்கின்றேன்.
காலை மாலை வேளைகளில் பரபரப்பிற்கு குறைவே இல்லை. காலை ஆறுமணிக்கெல்லாம் ஆண் பெண் மாணவர்கள் என எல்லோரும் வேகவேகமாக தமது பணியினைத்தொடங்கிவிடுகிறார்கள். சாலையில் வாகனங்கள் குறைவாக இருப்பினும் சைக்கிள் மற்றும் மோட்டார் வாகனங்களில் மிக வேகமாக பயணிக்கத்துவங்கிவிடுகிறார்கள். சுறுசுறுப்பான மக்கள்.
விமானம் தரையிறங்கியதும் மலேசியர்களான எங்களை அனுப்பிவிட்டு மற்ற நாட்டவர்களுக்கு ஒரு பாரத்தைக்கொடுத்துப் பூர்த்தி செய்ய சொல்கிறார்கள். அதற்கு அமேரிக்கன் டாலர் இருபதை விசா கட்டணமாகவும் வசூல் செய்கிறார்கள். இதை இந்தியாவில் இருந்து வருபவர்களிடமும் வாங்குகிறார்கள்.
தங்கும்விடுதி சலுகைகளில், விடுதிக்குச்செல்ல, ஒருவழிப்பாதை டாஃக்சி போக்குவரத்து இலவசம் என்று சொல்லியிருந்ததால், அதை நான் முதல் நாளிலேயே அந்த விடுதிக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்து உறுதிசெய்துகொண்டேன்.
அதாவது, எங்களுடைய பெயர் கொண்ட பதாகையை அந்த டாஃக்சி ஓட்டுநர் ஏந்திக்கொண்டு நிற்பதாகவும், அவரை அடையாளங்கண்டு அவருடன் வந்துவிடுடவும், என்று அறிவுறுத்தப்பட்டது.
நாங்கள் வெளியே சென்றவுடன், வரிசையாக மற்ற இனத்தவர்கள் வரவும், இந்தியர்களான எங்களைக் கண்டவுடன், ஓடோடி வந்து புன்னகை தவழும் முகத்துடன் கையில் ஏந்தியிருந்த விளம்பரப்பலகையைக் காட்டினார் வாகன ஓட்டுனர். அவரின் அருகில் சென்றோம். பலகையை கைகளின் இடுக்கில் சொருகிக்கொண்டு, `வெல்கம்’ என்று சொல்லி, இருகரங்களைக்கூப்பி வணக்கம் தெரிவிப்பதைப்போல் குனிந்து வணங்கினார்.
`நீங்கள் இந்தியாவில் இருந்து வருகிறீர்களா?’ என்று கேட்டார். நாங்கள், `இல்லை, நாங்கள் மலேசியர்’, என்றோம். அதற்கு அவர், `ஓ, அப்படியா? உங்களைப் பார்ப்பதற்கு இந்தியர்கள் போலவே இருக்கின்றீர்கள்..’ என்றார். மௌனமாகச் சிரித்துக்கொண்டோம். காரணம் நாங்கள் இந்தியர்கள்தான் இருப்பினும் மலேசியர்கள் அல்லவா.!!!
ஆரம்பமே மிகப்பணிவான சூழல் அமைந்தவுடன் மனதிற்கு தெம்பாக இருந்தது. பிறகு `டாஃக்சி’ நிற்கும் இடத்திற்கு அழைத்துச்சென்றார். டாஃக்சி’யைப் பார்த்தவுடன், `அய்யோ... டாஃக்சியாம்.. என்ன இப்படி இருக்கு.!’ என்று மனதிற்குள் முணக ஆரம்பித்தோம். இருப்பினும் ஒருவழிப்பாதை இலவசம் என்பதால் இப்படி ஒரு டாஃக்சியை அனுப்பியிருக்கின்றார்கள் போலிருக்கு, என்று நானும் என் கணவரும் கிசுகிசுத்துக்கொண்டோம்.
சரி, டாஃக்சி எப்படித்தான் இருந்தது.? மோட்டார் சைக்கிளின் பின்னே மாட்டுவண்டியைப் பூட்டியதுபோல் இருந்தது. அதை அங்கு `டூட் டூட்’ என்கிறார்கள். அதன் ஒலியைவைத்து அப்படி பெயர் வந்திருக்கலாம்.
தங்கும் விடுதிக்குச்செல்லுகிற வழிகளில் பார்த்தோமென்றால், சாலையில் பெரும்பாலும் இந்த டூட் டூட் வண்டிகள்தான் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு உலா வந்துக்கொண்டிருந்தன.
மலேசியாவின் வாகனங்களில் ஸ்டேரிங் வலது புறத்தில் இருக்கும். ஆனால், சயாமில் எல்லாமும் ஐரோப்பிய நாடுகளின் வாகனங்கள் போல் இடது புறத்தில் இருந்தது. கார் ஓட்டத்தெரிகிற நான், டூட்டூட் செல்கிற திசைகளில் கொஞ்சம் குழம்பிப்போனேன். படபடப்பாகவும் இருந்தது, இருப்பினும் சிலவினாடிக்குள் அங்குள்ள சூழல் பழக்கமாகிவிட்டது.
டூட் டூட்’டிலேயே எங்களின் சுற்றுலா தொடந்தது. புதிய அனுபவமாக இருப்பினும் அது உற்சாகப் பயணமாகவே அமைந்தது. எழில் கொஞ்சும் அந்த நகரத்தை வழிநெருக இருக்கின்ற பயிர்கள் கிராமிய வீடுகள் என்று தங்கு தடையில்லாமல் ரசித்துக்கொண்டே வருவதற்கு இந்த டூட் டூட் பயணம் மிகப்பொருத்தமாகவே அமைந்துவிட்டது.
இரண்டு நாள் பயணம் போதும் என்றார் டூட் டூட் ஓட்டி ஷான். இரண்டு வழிப்பாதைப்பயணம்தான் இங்கு. ஒன்று சிறிய வட்டம் மற்றொன்று பெரிய வட்டம். எப்படிப்பார்த்தாலும் சிறிய வட்டம் முடிய முழுசாக ஒருநாள் ஆகும். காரணம் அங்குதான் அங்கோர்வாட் மற்றும் அங்கோர்தோம் இருக்கின்றது. அங்கே சுற்றுவதற்குள் நீங்கள் சோர்ந்துவிடுவீர்கள் காரணம் இரண்டுமே மிகப்பெரிய கோவில்கள், என்றார். இதில் எங்களின் ஆலோசனையை அவர் கேட்கவில்லை. அவரே முடிவு செய்து அழைத்துச்சென்றார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து அரைமணிநேர ஓட்டம் தான் இந்த கோவில்கள் செல்வதற்கு.
நுழைவாசல்கள் எல்லாமும் ஒரே வழிதான். முழுமையான அரசாங்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் சீரமைப்பு செய்யப்பட்ட வழிப்பாதை அது. சுற்றிலும் அடர்ந்த காடுகளேயானாலும் எங்கு நுழைந்தாலும் எப்படி நுழைந்தாலும் இராணுவ ஆடைகளுடன் காவல் காக்கின்ற போர்வீரர்களைத்தாண்டித்தான் நுழைவது வெளியேறுவது எல்லாமும் நிகழ்த்தமுடியும்.
இந்த map'பில் உள்ள இடங்களின் பெயர்களைக் கவனிக்கவும் - கபலபுரம், ப்ரசாத் க்ரவான், குட்டீஸ்வரா, ச்சவ் தேவடா, சரஸ் ஸராங்..
கட்டணம்..?
உள்ளூர்வாசிகளுக்கு இலவசம். நாம் மூன்று நாட்களுக்கு அமேரிக்கன் டாலர் நாற்பதைச் செலுத்தி டிக்கட் வாங்கவேண்டும். ஒரு நாளுக்கு இவ்வளவு என்று முன்பு டிக்கட் விற்பனை செய்தார்களாம். ஆனால், இப்போது அப்படி அல்ல. நீங்கள் ஒரு நாள் பயணம் செய்தாலும் மூன்று நாள் கட்டனம் செலுத்துகின்ற டிக்கட்களைத்தான் எடுக்கவேண்டும், என்கிற சட்டம் தற்போதைய நிலை. ஆக, பயணம் செல்ல நினைப்பவர்கள் மூன்று நாள் பயணத்திற்குத் தயார் நிலையிலே செல்லவேண்டும். இல்லையேல் நஷ்டம் நமக்குத்தான். மேலும் கோவில்களில் சும்மானாலும் நுழைந்தோம் பார்த்தோம் என்று வந்துவிடமுடியாது. ஒவ்வொரு அம்சமும் கலைப்பொக்கிஷம். நேரம் போதாது அணுவணுவாக ரசிப்பதற்கு. முடிந்தால் ஒருவாரம் தங்கி ரசித்து புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை.
சுற்றுலா பஸ்ஸுடன் பெரிய கூட்டம் சென்றால், டிக்கட் விலை குறையும் போலிருக்கிறது காரணம் என் தோழி என்னிடம் சொல்கிறபோது நுழைவுக்கட்டணம் யூஎஸ் பத்து டாலர்தான் என்றாள். அவள் பெரிய கூட்டத்துடன் சுற்றுலா சென்று வந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கட் எடுக்கின்றபோது இருவரையும் வரும்படி அழைத்தார்கள். டிக்கட்’டில் நமது புகைப்படம் இருக்கவேண்டும். ஒரு நொடிக்குள் புகைப்படத்துடன் கூடிய பாஸ் தாயாகிவிடுகிறது. அதை நாம் நம் கழுத்தில் மாட்டிக்கொள்ளவேண்டும். டிக்கட் எடுத்துக்கொண்டு வெளியேறுகிறபோது இடையில் உள்ள நுழைவாசலின் ஊழியர்கள் அதைவாங்கி தேதி பிரகாரமான punch hole செய்துவிடுகிறார்கள். நமக்கு விற்கப்பட்ட டிக்கட்கள் தொலைந்தால், மறுபேச்சுக்கு இடமில்லை. மீண்டும் அதை பணம்கொடுத்து வாங்கியாகவேண்டும் என்கிற எச்சரிக்கையையும் பணிவான தொணியில் காதில் போட்டுவைக்கப்பட்டது.
ஒவ்வொரு கோவில் வாசலிலும் டிக்கட் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயணிகளை உள்ளே அனுமதிக்கின்றார்கள். உடைகளிலும் கவனம் வேண்டும். ஷார்ட்ஸ், குட்டை பாவாடை போன்றவற்றை அணிந்துகொண்டு உள்ளே செல்வதற்கும் அனுமதியில்லை.
மக்கள் மற்றும் வாழும் சூழல்
மலேசியாவில் இருந்து சென்றதால், மக்கள் பார்ப்பதற்கு மலேசியர்கள் போலவே இருந்தார்கள். அசல் மலாய்க்காரர்கள் போலவே காணப்பட்டார்கள். அவ்வளவாக நிறமாக இல்லாமலும், கறுப்பாகவும் இல்லாமலும் மாநிறமாக இருந்தார்கள்.
பணிவாகவே பழகினார்கள் எல்லோரும். வணக்கம் சொல்வதைப்போல் கைக்கூப்பி குனிந்து மரியாதை செலுத்துகிறார்கள். என்ன கேட்டாலும் புன்னகை மாறாமல் பதிலளிக்கின்றார்கள்.
பொதுவாகவே குட்டி குசுமாளங்கள் வரை ஆங்கிலம் ஓரளவு பேசுகிறார்கள். வார்த்தைகள் சிதைந்து சிதைந்து வந்தாலும், ஐரோப்பியர்களின் பாணியில் ஆங்கிலம் பேசுகிறார்கள். தாய்மொழியோடு சேர்த்து, ஆங்கிலம் பிரஞ்ச் மொழியையும் கற்றுவைத்திருக்கின்றார்கள். டூர்கயிட் எங்களிடம் பேசுகிறபோது, உங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லவா அல்லது பிரஞ்சு மொழியில் விளக்கம் சொல்லவா.? என்று கேட்டுவிட்டே பேச ஆரம்பிக்கின்றார்.
பெண்கள் மிகவும் அழகாக இருக்கின்றார்கள். கோவில் சிலைகளில் தென்படுகிற ஆடைகள்தான் கலாச்ச்சார ஆடை அங்கே. கைலிபோல் கீழ் ஆடை. சொக்காபோல் மேல் ஆடை, அதன் மீது தாவணிபோல் சிறிய துணி, புத்தபிக்குகள் அணிகிற மேல் அங்கிபோல் அந்த துணியினை உடம்பில் சுற்றியிருந்தார்கள்.
கைக்களைக்கூப்பி `சொம்ஸ்வாஃகும்’ - என்கிறார்கள் அவர்களின் மொழியில். அதன் அர்த்தம் நல்வரவு. `ஆஃஹூன்’ என்றும் அடிக்கடி சொல்கிறார்கள் கைகளைக்கூப்பி - அதன் அர்த்தம் நன்றி. டூட்டூட் ஓட்டுனரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.
அங்குள்ள வீடுகளைப் பார்த்தோமென்றால், அடிக்கடி வெள்ளம் ஏறுகிற அபாயம் இருப்பதால், மலேசிய பாணியில் நான்கு தூண்களின் மேல் பலகை வீடு கட்டியிருந்தார்கள். முற்றிலும் எண்பதுகளின் மலேசிய சூழலை என் கண்முன் கொண்டுவந்தது அவ்வீடமைப்புச்சூழல்.
காண்கிற தூரமெல்லாம் பச்சைப்பசேல் என்று வயல்வெளிகள். காய்கறி தோட்டங்கள். எங்குபார்த்தாலும் சேர்சகதிகள் நிறைந்த ஒத்தையடிப்பாதை. கிராமிய சூழலுக்குச்செல்லலாம் என்று நான் கேட்டுக்கொண்டதன் பேரில், ஒரு சிறிய கிராமத்திற்கு அழைத்துச்சென்றார் டூட் டூட் ஓட்டுனர்.
விவசாயம்தான் முக்கிய தொழில். மணமுள்ள ஸ்டீம் ரைஸ்தான் உணவுக்கடைகளில் பரிமாறுகிறார்கள். சாப்பாடு அருமையான சீன உணவுகள் கிடைக்கின்றது. பன்றி இறைச்சிதான் முதன்மை உணவு. பன்றி வேண்டாம் என்று சொல்லாமல் விட்டுவிட்டால், பன்றியை சமைக்கின்ற உணவில் கலந்து விடுகிறார்கள். இந்துக்களாக இருக்கின்ற பட்சத்தில், உணவுக்கடைகளில் நுழைந்தவுடன் - சைவ உணவும் உள்ளது, வேண்டுமா? என்று கேட்கிறார்கள்.
சுவையான சீனரக உணவு
எந்த ஊருக்குச் சென்றாலும் அதன் காய்கறி சந்தைக்குச்சென்று காணவேண்டும் என்கிற ஆவல் எனக்கு எப்போதும் உண்டு. மண்மணம் அங்குள்ள விளைச்சலில் எப்படி உள்ளது என்று பார்க்க எனக்கு ஆசை. சயாம்ரீப் மிகப்பெரிய சந்தைக்குள் நுழைந்தவுடன், என்னால் அங்கு கொஞ்சநேரம் கூட நிற்கமுடியவில்லை, பன்றி இறைச்சியின் வாடை என்னை வெளியே விரட்டியது. அங்கு சென்று அந்த வாடையை நுகர்ந்தபின் எங்கு சென்றாலும் அதே வாடை வீசுவதைப்போன்ற பிரம்மை வந்து ஒட்டிக்கொண்டது.
தூரமாகச்சென்று தள்ளி நின்று அந்தப் பரபரப்புச்சூழலை ரசித்தேன். கொய்யா வாழை அன்னாசி போன்ற பழங்கள் வழிநெடூக விற்பனை செய்தவண்ணம் இருந்தார்கள். தாகம் தீர்க்க இளநீர் அருந்தினோம். ஒரு இளநி ஒருவர் பருகி முடிக்கமுடியாத நிலை. காரணம் அதில் உள்ள நீர் ஒரு லீட்டர் தேறும் போலிருக்கிறது. அவ்வளவு பெரிய இளநீ.
பெட்ரொல் விலை லீட்டருக்கு மலேசிய ரிங்கிட் நான்கு வெள்ளி ஐம்பது காசு. பெட்ரோல் போட்டு மாளாது என்பதால்தான் மோட்டார் சைக்கிள் டாக்சி ஆனது இங்கே என்கிறார் அதன் ஓட்டுனர்.
ஒட்டுக்கடைகளிலும் மளிகைசாமான்கடைகளிலும், பெட்ரோல்’ஐ காலியான மினரல் வாட்டர் பாட்டல்களில் நிரப்பி விற்பனை செய்றார்கள். எரிபொருளை இப்படி விற்பனை செய்வது பேராபத்து. இது பார்ப்பதற்கு வித்தியாசமாகவே இருந்தது. மோட்டார் வாகன ஓட்டிகள், பெட்ரோல் ஸ்டேஷனுக்குப் போகாமல், கடைகளின் ஓரம் மோட்டாரை நிறுத்திவிட்டு, பெட்ரோலை வாங்கி வாகனத்தில் ஊற்றிக்கொள்கிறார்கள்.
யூஸ் பணம் ஒரு டாலருக்கு கம்போடிய பணம் நாலாயிரம். மலேசிய ரிங்கிட் 80காசு கம்போடிய பணம் ஆயிரம். அப்படியென்றால், ரூபாய் கணக்கு எவ்வளவு என்று பார்த்துக்கொள்ளுங்களேன். இருப்பினும் அங்கே எல்லாமும் யூஎஸ் டாலர்தான். நான்கு கொய்யாப்பழம் யூஎஸ் ஒரு டாலர். இரண்டு சோளம் யூஎஸ் ஒரு டாலர். ஒருவேளைச் சாப்பாடு யூஎஸ் ஐந்து டாலருக்குக் குறையாமல்.. !
அங்குள்ள சீதோஷ்ண நிலை -
ஆக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நல்ல சீதோஷ்ணமாம். மழையும் இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் இருக்கின்ற அற்புத சூழல் என்றே சொல்லப்படுகிறது. அந்த மாதங்களின் தங்குவிடுதிகள் கிடைப்பதற்கே பெரிய பாடாக இருக்குமாம். உலகச்சுற்றுப்பயணிகள் அனைவரும் அங்கே வருகிற காலகட்டம் என்பது இந்த மாதங்கள்தானாம்.
மார்ச் தொடங்கி ஜூன்வரை கடுமையான சூடு என்றும் ஜூலை தொடங்கி ஆக்டோபர் வரை பாதிநாள் நல்ல சீதோஷணம் என்றும் மீதி பாதிநாள் மழை என்று சொல்லப்பட்டது. நாங்கள் சென்றது செப்டம்பர் மாதம். பாதி வெயில் பாதி மழை காலம். மாலை வேளைகளில் மழை பெய்யத்துடங்கிவிட்டது. ஹோட்டலிலேயே சொல்லிவிடுகிறார்கள். மாலையில் மழை வரும் முடிந்தவரையில் அதிகாலையிலேயே உங்களின் பயணத்தைத்தொடங்கிவிடுங்கள் என்று. இருந்தபோதிலும் நமக்குத்தேவையான அனைத்தையும் அந்த டூட்டூட் ஓட்டி தயார் நிலையிலேயே வைத்திருந்தார். குடிக்கநீர், முகம் துடைக்க வெட்டீஷ்யூ, குடை, ரெயின்கோர்ட் என எல்லாமும் அவரின் வண்டியில் தயார் நிலையிலேயே இருந்தது. மழை வந்தாலும் பிரச்சனையில்லை. இருப்பினும் கோவிலுக்குச்செல்கிற வழி சேரும்சகதியுமாய் கால் வைக்கிற இடமெல்லாம் நீராய் அசௌகரியத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதுதான் பிரச்சனை. ஐரோப்பிய பயணிகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. ஜாலியாக தொப்பி ஒன்றினை தலையில் மாட்டிக்கொண்டு நடந்துகொண்டே இருக்கின்றார்கள். அதிகமான ஐரோப்பியர்கள் உலவும் ஒரு சுற்றுலாத்தலம் அது.
டூட்டூட் ஓட்டி - Jon Chan
முதல் ஆலயம் அங்கோர் வாட்
இவ்வாலயத்தைப்பற்றி பலர் சொல்லக்கேட்டிருப்போம். பலருக்கு நேரில் சென்று காணவேண்டும் என்கிற ஆவல் விடாமல் துரத்திக்கொண்டிருக்கும். UNESCO அறிவித்தபடி உலகின் மிகப்பிரமாண்ட இந்து ஆலயம் இது. இதை எட்டாவது அதிசயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்கள். நம்முடைய மூதாதையர்கள் அடியெடுத்துக்கொடுத்து கட்டப்பட்டது ஆலயம் இந்த அங்கோர்வாட் என்பது இந்துக்களான நமக்குப் பெருமையே.
.
இதை ஆலயம், அதாவது வழிப்பாட்டுத்தலம் என்பதைவிட அரசரின் இல்லம் என்றே அறிமுகம் செய்துவைக்கின்றார்கள்.
அரசாங்க ஊழியர்களாக பணிபுரியும் பயண வழிகாட்டி ஒருவரை, (ஆலய வாசலிலேயே நிற்பார்கள்) யூஎஸ் டாலர் பன்னிரெண்டுக்கு அந்த ஒரு ஆலயத்தைமட்டும் சுற்றிக்காட்டி வரலாற்றுகதைகளைக்கேட்க எடுத்துக்கொண்டோம்.
அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டே வந்தார்.
அதற்கு முன், அங்குள்ள ஆலயங்கள் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும். ஒவ்வொரு ஆலயங்களும் நுழைவாசலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுவழிப்பாதையில் நடந்து சென்ற பிறகே ஆலய வாசல் வருகிறது. பிறகு ஆலயத்தில் உள்ளே கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் கற்கள், சிதைந்த சிலைகள், உடைபட்ட பாறைகளில் என கால்வலி வரும் வரை நடந்து வெளியே வரவேண்டும், அதன் பின் கோவிலின் பின்புறம் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து சென்று வெளியேறவேண்டும். அங்கோர் வாட் ஆலயத்தைத்தவிர மற்ற எல்லா ஆலயங்களும் முன்புறம் நுழைந்து பின்புறம் வெளியேற வேண்டும். டூட்டூட் ஓட்டுனரும் வாசலில் நம்மை இறக்கிவிட்டு பின்புறம் வந்துதான் ஏற்றிக்கொள்கிறார். நடந்தே ஆகவேண்டிய கட்டாயம். நான்கு திசைகளிலும் ஒரே மாதிரியான அளவின் படி சீராக அமைக்கப்பட்ட ஆலயங்கள் அனைத்தும். எல்லா ஆலயங்களுக்கு நான்கு பிரமாண்ட நுழைவாயில்கள் மற்றும் நுழைவாசல்கள். (தமிழகக்கோவில்கள் போல்). அங்கோர் வாட் சுற்றிலும் மிகப்பெரிய நீர்தேங்கிய அகழி இருப்பதால் அங்கு மட்டும் ஒரே ஒரு நுழைவாசல்தான்.
வரலாறு
அந்த tour guide சொன்ன வரலாற்றுக்கதைகளை நான் உள் வாங்கியதை உங்களோடு பகிர்கிறேன். தவறு எதேனும் இருந்தால், அது என்னுடையதே. காரணம் அவர் சொன்ன விவரங்களை நான் சரியாக உள்வாங்கவில்லை என்று அர்த்தப்படும். எல்லாமும் சரியாக இருந்திருந்தால் எல்லாப்புகழும் அந்தப்பயண வழிகாட்டிக்கே. சரியா.!
தமிழ்நாட்டில் இருந்து சூர்யவர்மன்II என்கிற மன்னன், பண்டமாற்று வியாபார நோக்கத்துக்காக கம்போடியாவிற்கு தமது பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அங்கு இருக்கின்ற சமயத்தில் அங்குள்ள கம்போடிய இளவரசியின் மீது காதல் கொண்டு அவரையே திருமணம் செய்து அங்கேயே தங்கிவிட்டார். அன்றைய கம்போடிய மன்னரான இவரின் ஆட்சியின் கீழ் கிழக்கு ஆசிய நாடுகளான பர்மா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், இந்தோனீசிய போன்ற நாடுகள் அனைத்தும் ஒரே சாம்ராஜ்யத்தின் கீழ் செயல்பட்டுவந்துள்ளது. பீடத்தில் அமர்ந்த அம்மன்னரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பல லட்ச அடிமைகளைக்கொண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஆலயம்தான் இந்த பிரமாண்ட அங்கோர்வாட் ஆலயம்.
ஆரம்பத்தில் விஷ்ணு ஆலயமாக உதயமான அங்கோர் வாட் ஏழாம் ஜெயவர்மன் புத்தமதத்தைத்தழுவிய போது அவ்வாலயம் புத்த ஆலயமாக மாறியது.
வைணவர், சைவர், பௌத்தம் என போராட்டம் நடந்து. ஒருவர் மாற்றி ஒருவர் ஆலயங்களின் சிலைகளை அழிக்கமுயன்று தத்தம் மத அடையாளச்சின்னங்களை பதிக்க எடுத்த முயற்சிகளின்போது அங்கே சிதிலமைடைந்து சின்னாப்பின்னமான சிவலிங்கம், விஷ்ணு உருவம், புத்த சிலை என, ஆங்காங்கே சிதறிக்கிடப்பதைக் காணலாம். இருப்பினும் மஹாபாரதம் ராமாயணம் என சுவற்றில் செதுக்கியிருக்கின்ற சிலைகள் அப்படியே பொக்கிஷமாகவே ஜொலிக்கின்றன.
இந்தச் சுவர்வெட்டு, ராமாயணம் மஹாபாரதம் கதைகளைச்சொன்னாலும், அந்தப்போர் வீரர்கள் சூடியிருக்கின்ற தலைக்கிரீடம், எஃகிப்த் நாட்டிற்குச் சொந்தமானதாம்.
மன்னர் மக்களிடம், நான் தான் விஷ்ணு அவதாரம் எனக்கு அழிவே இல்லை, எனக்குப்பின் என் வாரிசுகள் அவதாரம் எடுப்பார்கள். ஆக நீங்கள் எல்லோரும் எங்களைத்தான் வணங்கவேண்டும் என்று சொல்லி, மக்களைப்பாடாய் படுத்தியிருக்கின்றார்கள்.
மக்கள் பல மையில்கள் நடந்து வந்து 60டிகிரி வடிவில் செதுக்கப்பட்ட படிகளில் சிரமப்பட்டு ஏறி கூனிக்குறுகிய நிலையில் தம்மை வந்து காணவேண்டுமென்பதற்காக ஆக உயர்ந்த கோபுரத்தில் தமது அறையினை வைத்துக்கொண்டாராம். நெஞ்சுநிமிர்த்தி வர நினைக்கின்ற மக்களை பாதிவழியிலேயே காவலாளிகள் தமது கால்களாலேயே உதைத்து கீழே தள்ளிவிடுவார்களாம்.
மன்னரைக் காண்பதற்கு மிகவும் பணிவோடும் பயபக்தியோடும் அவரின் பார்வை தம்மீது விழவேண்டும் என்பதற்காக மக்கள் மன்னரையே தெய்வநிலையில் வைத்து பூஜித்து தவமிருந்திருக்கின்றனர்.
நடுவில் மிக உயரமாக இருக்கின்ற மன்னரின் அறைக்குச் செல்கிற ஆரம்பக்கால படிக்கட்டுகளைக் காண்கையில் எனக்கு அடிவயிறே கலங்கிற்று. நான் எப்படி இதில் ஏறுவேன்.? இப்படிப் பாசி படிந்து செங்குத்தாக இருக்கின்றதே, என்று வினவியபோது, கவலைவேண்டாம், பொதுமக்கள் மேலே செல்லவேண்டும் என்பதற்காக தற்போதைய அரசாங்கம் புதிய படிக்கட்டுகளைத் தயார்செய்து வைத்திருக்கின்றார்கள் நீங்கள் அதன் வழி ஏறலாம் என்றார்டூர் கயிட் . கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
மிக உயரமான படிக்கட்டுகள். ஏறுவதைவிட இறங்குகிறபோது, தலை கிர்ர் என்று சுற்றுகிறது
அந்தப் பயண வழிகாட்டி எங்களிடம் கோவில் வரலாற்றுக்கதைகளைச் சொல்லுகையில், இது அரசன் அரசியர் பயிலும் நூல்நிலையம். இது குழந்தைகளின் நூல்நிலையம். இது மக்கள் நுழைகிற நுழைவாசல். இது வி.ஐ.பி நுழைவாசல். உயரமாக இருக்கின்ற நுழைவாசல் அரசர் நுழைவது. அரசர் மட்டும் தலை குனிதல் கூடாது என்பதால் இப்படி உயரமான நுழைவாசலைக் கட்டியிருக்கின்றார்கள். இது அரசர் சவாரி செய்கிற குதிரை/யானையின் நுழைவாசல்.. இது மன்னரின் நீச்சல்குளம், இது மன்னரின் வைப்பாட்டிகளின் நீச்சல் குளம், இது குழந்தைகளது... என எல்லாவற்றிலும் அரசகுடும்ப வரலாற்றையே பதிவுசெய்தார்.
மேலிருந்து கீழே பார்க்கின்ற போது சுற்றியிருக்கின்ற அனைத்தும் தெரிகின்ற பட்சத்தில் முதன்முதலில் தென்படுவது அந்தப்புற ராணிகளின் அறைகளே. மன்னருக்கென்றே இருக்கின்ற லட்சக்கணக்கான mistresses மேலாடையில்லாமல் தங்களின் மேனி அழகினைக் காட்டி நாட்டியமாடியபடியே இருப்பார்களாம் இவ்வறைகளில். அவர்களின் உருவ சிலைகள்தானாம் அந்தச்சுவரைச்சுற்றி இருக்கின்ற மேலாடையற்ற பெண்சிலைகள். அந்த நடனத்தின் பெயர், அப்ஸரா. சொர்க்க வரவேற்பு நடனம் என்றும் சொல்கிறார்கள். இன்று அந்நடனம்தான் அங்கே கலாச்சார நடனம் - மேலாடையோடு.
முன்பு கம்போடியாவில் பெண் ஆட்சி நடந்துகொண்டிருந்ததாம். தமிழக அரசர் வந்து அங்குள்ள பெண்மீது காதல் கொண்டு அவளை மணமுடிக்க வரதட்சணை கொடுத்துள்ளார். வரதட்சணை கொடுத்து மணம் செய்து அங்கேயே அவர் தங்கிவிட்டதால், அந்த வழக்கம் இன்னமும் அம்மக்களிடையே கடைபிடிக்கின்ற ஒரு வழக்கமாகவும் மாறியிருந்தது. அதாவது ஆண்கள்தான் பெண்களை மணக்க வரதட்சணைக் கொடுக்கவேண்டும். திருமணம் முடித்தவுடன் ஆண் பெண்ணுடன் புகுந்தவீட்டிற்குச் செல்லவேண்டும். பெண் தான் அங்கு எல்லாமும். ஆண்குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு அவ்வளவாக மகிழ்விருக்காது. அதுவே பெண்குழந்தைகள் என்றால் கொண்டடுவார்களாம்.
சூரியவர்மனுக்குக் கூட இரண்டும் பெண்குழந்தைகள்தானாம். ஆண்வாரிசுகள் இல்லை. மருமகன்களாக வந்த ஜெயவர்ம வம்சங்கள்தான் அவருக்குப் பிறகு அப்பேரரசை ஆண்டு வந்து கலையம்சம் பொருந்திய ஆலயப்பணிகளைத் தொடர்ந்துள்ளனர். ஆக, ஜெயவர்மன்கள் அனைவரும் கம்போடிய இந்துக்கள்.
எல்லாக்கோவில் கல்வெட்டுகளிலும் ஏழாம் ஜெயவர்மன் என்கிற பெயர் இல்லாமல் இருக்காது.