சனி, ஏப்ரல் 19, 2014

தெனாலிராமன்

வடிவேலுவின் மறுபிரவேசம். இரட்டைவேடம்.

இனி பயணம் தொடரட்’டும்.. என்கிற வாசகத்துடன் உற்சாகமாகப் பயணிக்கிறது திரைக்கதை.

அவரின் நகைச்சுவையும் உடல்மொழிகளை(லை)யும் மிஸ் செய்கிறவர்களுக்கு இந்தப்படம் நல்ல விருந்து.
அரசியலில் மூக்கை நுழைத்து பாதிப்புக்குள்ளாகி, அதனால் தாம் பட்ட அவஸ்தைகளை ஆங்காங்கே வசனமாகப் பேசுகிறார். ஏன் தனிமையில் இருக்கின்றாய்.? என்று கேட்கின்றபோது, `நிறைவாகும்வரை மறைவாக இருப்பதே சிறப்பு.’ என்கிற பதிலைக் கூறுகையில், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்குத் தகுந்த பதில் வழங்குவதாகவே எமக்குப் படுகிறது.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் மக்கள் திரையரங்கில் திரண்டிருந்தனர். ஏமாற்றம் இல்லை. மக்கள் காட்சிக்குக் காட்சி கைத்தட்டி ஆரவாரம் செய்வதைக் காண்கையில், நிஜமாலுமே ரசிகர்கள் வடிவேலுவை `மிஸ்’ செய்துள்ளார்கள் என்பது வெள்ளிடைமலை.

அரச சபையில் மந்திரிகளில் ஒருவராக தெனாலிராமன்  நியமிக்கபபடுகிறார். அரசரைக் கொலை செய்யவருகிறார். பிறகு கதை வேறுபக்கம் நகர்கிறது.

அரசராகவும் தெனாலிராமனாகவும் வடிவேலுதான். அரசர் அப்பாவி. தெனாலிராமன் அறிவாளி. தெனாலிராமன் செய்கிற அனைத்து சேட்டைகளும் படத்திற்குத் திருப்புமுனை. சிறுவயதில் ஆரம்பப்பள்ளியில் பயில்கின்ற காலகட்டத்தில் கேட்கப்பட்ட தெனாலிராமன் கதைகளை படத்தின் காட்சிக்கு ஏற்ப மிகவும் நகைச்சுவையாக நுழைத்திருக்கின்றார்கள். `எல்லாம் நன்மைக்கே’ என்கிற கதை தொடங்கி `பானைக்குள் யானை’, `கிடைக்கின்ற பரிசில் பாதி’ என்கிற கதைகளையெல்லாம் என்றோ எங்கேயோ கேட்டதுபோலவே இருந்தாலும், வடிவேலுவின் பாடிலங்குவேஜ்’யின் மூலம் மீண்டும் அவைகளை உயிர்ப்புடன் கண்டு மகிழ்கையில் மனம் குதூகலிக்கிறது.

பேரங்காடிகள் திறக்கப்பட்டால் சிறுவனிகர்களின் பாடு என்னவாகும் என்கிற சர்ச்சை சென்ற ஆண்டு தமிழ்நாட்டில் விஸ்வரூபம் எடுத்திருந்ததை இத்திரைக்காவியத்தில் இடைசெருகலாக நுழைத்துள்ளார்கள்.

வயிறுகுலுங்க சிரிக்கவைத்த படம் என்று சொல்லமாட்டேன். இருப்பினும் பல காட்சிகளை நான் ரசித்துப்பார்த்தேன். அரச சபையில் நிகழ்த்தப்படுகிற காட்சிகள் அனைத்தும் ரகளையானது.

முப்பத்தாறு மனைவிகளில் ஒருவர், தம்மிடம் எப்படி மயங்கினார் என்று மகளிடம் கதை சொல்லுகையில், `பார்த்தும்மா, நீ எதும் இந்த யுக்திகளைக் கடைப்பிடித்து விடப்போகிறாய். பிறகு நம்மை சொம்பு பரம்பரை என்று முத்திரை குத்தி விடுவார்கள்.. அதுவும் வெறும் சொம்பு... என்று சொல்கிற காட்சியில் தியேட்டரில் கலகல சிரிப்பு. மனைவிகளின் ஒருவரைக் காணச் செல்லுகையில் எங்கே நுழைவது, எங்கே செல்வது என்று தள்ளாடும்போதும் .. உடல்மொழி பிரமாதம். நல்ல நடிகர் வடிவேலு.

அரசர் வடிவேலு சராசரி மக்களோடு கலந்து படும் அவஸ்தைகள் அனைத்து செம காமடி.

அப்போ அப்போ அரசியல் பேச்சுகள்/வம்புகளும் தலைகாட்டுகிறது. யாரைப்பற்றிப்பேசுகிறார்கள் என்று மலேசியாவில் இருக்கின்ற எங்களுக்கே புரிகிறபோது, தமிழ்நாட்டவர்களுக்குச் சொல்லவா வேண்டும்.!?

வடிவேலுக்கு டூயட், ரொமண்டிக் லூக் எல்லாம் ... ஷப்ப்ப்ப்ப்பா.. அதுவும் அழகான பெண்நாயகி ஜோடி.

சீரியஸ் வடிவேலு வருகிறபோது, வடிவேலுவாகவே தெரியவில்லை. நடையில் மிடுக்கு. சிவாஜிகணேசன் திருவிளையாடல் படத்தில் கடற்கரையோரம் நடப்பாரே, அதே போல் இருந்தது.
நாகேஷ் அவர்களை எல்லா வேடத்திலும் ரசிக்கமுடிந்தது. ஆனால் வடிவேலு நகைச்சுவை செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும். வயதான தோற்றமும் வந்துவிட்டது வடிவேலுவிற்கு.

ராதாரவியின் நடிப்பு `ஓவர் அக்டிங்’

அழகுப்பதுமை நாயகி.

நிச்சயம் குழந்தைகளைக் கவரும் படம் இது. குடும்பத்துடன் சென்று காணலாம்.

happy அண்ணாச்சி

திங்கள், ஏப்ரல் 14, 2014

துளிப்பா

வர்ணங்களை ஏந்திய
பறவைகள்
கிளைகளில் ரங்கோலி.

______%______________

கலர் தீட்டுகிறேன்
முகத்தில்
நான் ஓவியனல்ல.

ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

முகநூலில் நாங்கள்

அன்பு ஜெ.. 

வாசிக்க நினைப்பவர்கள் எதையாவது வாசித்துக்கொண்டேதான் இருப்பார்கள். 

முகநூலில் இருந்து விலகிவிட்டால், அவன் புத்தகமும் கையுமாக இருப்பானா என்ன.?

முகநூல் அக்கவுண்ட்’ஏ இல்லாத எத்தனை பேர், புத்தகப்புழுவாக இருக்கின்றார்கள். ? 

புத்தகத்திலேயே மூழ்கி இருப்பவன் மட்டும் என்ன அறிவாளியா?

முகநூலே கதியாக இருக்கவேண்டாம் என்பதைப் பற்றிய தெளிவு உள்ளவர்களும் இங்கே இருக்கின்றார்கள்தான். இருப்பினும் தினமும் எதேனும் புதிய செய்திகள் உள்ளனவா, என்று எட்டிப்பார்த்து, மனதில் தோன்றுவதைப் பதிவேற்றி குதூகலிப்பது, தவறா?

ஒரு சினிமா படத்தைப் பார்க்கலாமா, வேண்டாமா? என்கிற சிந்தனையில் இங்கே நுழைந்தால், உடனே தெளிவு கிடைக்கலாம்.! பலரின் பகிர்வுகள் சினிமா பற்றியதே..

எங்களுக்கே தெரியாத சில பண்டிகைகளை தமிழ் நாட்டில் உள்ளவர்கள் கொண்டாடி மகிழும்போது, நாங்களும் அதனின் தத்துவ அடிப்படைகளை ஆராய்ந்து பின்பற்றத்துவங்குகிறோம். கலாச்சார செயல்பாடு. உகத்தமிழர்கள் இணையத்தின் வழி இணைகிறோமே.. நன்மைதானே.. !? (அம்மா அப்பா சொல்லித்தரவில்லையா? என்று கேட்டால், அவர்களே கூலித்தொழிலாளிகள். பண்டிகையாவது பலகாரமாவது.. என்று ஓடி ஓடி உழைத்தவர்கள். சொல்லிக்கொடுக்கவில்லை என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.)

நிறைய நண்பர்கள் மூலமாக பலர் வியாபாரத்திலும் உலக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். export import, travel agencies என.!

நட்புக்குள் திருமணமும் நடந்துள்ளது. சிறப்பாகவே வாழ்கின்றார்கள்.

படித்ததில் பிடித்த பகிர்வுகள் அதிகம் நம்மையும் கவர்கின்றன. எழுதத்தூண்டுகின்றன..

பத்திரிகைகளுக்கு டாட்டா காட்டியாகிவிட்டது.. எல்லோரும் நிருபர்களாக மாறி இங்கே தகவல்களைப் பகிர்வதால், சுடச்சுட செய்திகள் உடனுக்குடன் கிடைக்கின்றன.

சில பிரபல எழுத்தாளர்கள், முகநூலை விட்டு விலகுங்கள் என்கிற கோரிக்கையினை வைக்கின்றார்கள். இருந்தபோதிலும், அவர்களின் எழுத்துகளின் மேல் காதல் வந்ததிற்கு முகநூல் பாலமாக இருந்துவந்துள்ளது என்பதனை மறுக்கத்தான் முடியுமா, அவர்களால்?

உலகம் சுருங்கிவிட்டது என்பதனை முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கள் பறைசாற்றிவருகிறன.

தமிழில் தட்டச்சு செய்யவேண்டும் என்கிற வேட்கை, தமிழ் படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டதிற்குக் காரணம் இந்த முகநூல் என்றால், இல்லை என்போமா?

தமிழில் நாம் செய்யும் எழுத்துப் பிழைகளை உடனே கண்டித்து திருத்தித் தருகிற தமிழ் நட்புகள் இங்கே அதிகம். தனியாளாக புத்தகமும் கையுமாக இருப்பவர்களுக்கு இது சாத்தியமா? நாம் செய்வதுதான் சரி என்கிற இறுமாப்பு அதிகரிக்காதா? இது அவலமில்லையா.?

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்பதைப்போல், ஊறுகாய் போல் முகநூல் சகவாசம் இருக்கின்றபோது, வாசிப்பிற்கு அது சுவை சேர்க்கிறது, என்று நான் சொன்னால் என்மேல் கோபப்படுவீர்களா?

நான் முகநூலின் மூலமாக நிறைய கற்கிறேன். இல்லையேல் கற்கால மனிதர்கள் போல், எதுவுமே தெரியாமல், எதையும் கற்காமல், சுற்றியுள்ள பலரை வெட்டிப்பேச்சால் வெறுப்பேற்றிக்கொண்டே இருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்..

விலகுங்கள் என்று சொல்லாதீர்கள். தேவையற்றதைப் பேசுகிறவர்களை நட்பு வட்டத்தில் இருந்து நீக்குங்கள் என்று மட்டும் சொல்லுங்கள் சார்..

ஞாயிறு, ஏப்ரல் 06, 2014

நர்சிங் ஹோம்

நேற்று ஒருவரைச் சந்திக்க அவரின் நர்சிங் ஹோமிற்குச்சென்றேன். அந்த நர்சிங் ஹோமின் முதலாளி அவர். அதை ஹோம் என்பதைவிட, முதியோர் இல்லம் என்று சொல்லலாம். 

சொல்லலாமா? என்று அவரிடமே கேட்டேன். ஹம் சொல்லலாம், ஆனாலும் இது முதியோர் இல்லமல்ல. நர்சிங் ஹோம்தான். என்றார்.

சரி வாங்க, நான் உங்களின் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறேன் என்று கூறி, என்னை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சுற்றிக்காட்டினார். விளக்கமும் அளித்துக்கொண்டே.

இவர் இன்னார். இவரின் பெயர் இது. இவரின் நிலை என்ன. ஏன் இங்கே உள்ளார். இவர் ஒரு பிரபல மருத்துவர். இவர் ஒரு டத்தோ. இவர் கம்பனி முதலாளி... என, எல்லோரின் அறிமுகத்தையும் வழங்கியபடி நகர்ந்துகொண்டிருந்தார்.

அனைவரும் முதியவர்கள். ஒருவரைத் தவிர. அவர் கார் விபத்தில் உடல் செயலிழந்து சக்கரநார்க்காலியில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சிப் பெட்டியில் மூழ்கியிருந்தார். யாரையும் கண்டுகொள்ளாமல்...

முதலாளியே தொடர்ந்தார். நார்சிங் ஹோமிற்கும் முதியோர் இல்லத்திற்கும் உள்ள வித்தியாசம். நர்சிங் ஹோம் என்றால், மருத்துவமனைக்கு அடுத்த நிலை. மருத்துவமனை என்றால், வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி போகும் நிலை வரும். ஆனால் இங்கே அப்படி அல்ல. வருகிறவர்கள் சாகும் வரை இங்கேயே இருப்பார்கள். இங்கே மருத்துவர்கள் வருவார்கள். இங்கே உள்ள பணியாளர்களில் பெரும்பாலானோர் முறையான தாதிப்பயிற்சி பெற்றவர்கள். மருத்துவர்கள் போல் அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியவர்கள். எங்களிடம் மருந்தகமும் உண்டு. அனைத்து சேவைகளையும் எங்களின் பணியாட்களே அவர்களுக்குச் செய்து தருவார்கள். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இவர்களின் பிள்ளைகள் எங்களுக்குப் பணம் அனுப்பிவிடுவார்கள்.

நான் நோட்டமிட்டுக்கொண்டே, வலம் வந்தேன். இரவு நேரமாகிவிட்டதால், அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள். நாங்கள் ஒவ்வொரு அறையாக நுழைகின்றபோது, விழித்திருப்பவர்களிடம், ஒரு, ஹை, நலமா? குட் நைட்.. என்கிற வாசகத்தைச் சொல்லிவிட்டு, அடுத்தடுத்த அறைகளுக்குள் நுழைந்தோம். மிகவும் தூய்மையாக, ஒரு வித நறுமணத்துடன், ஜிலுஜிலு ஏர்காண்ட் வசதியுடன், சிறப்பாக அழகாக அமைக்கப்பட்ட அறைகள் அனைத்தும். அது ஒரு பிரமாண்டமான பங்களாவீடு.

பெரும்பாலும் சீனர்கள்தான் அங்கே.

பார்த்துக்கொண்டே வருகிறபோது, இறுதியாக, ஒரு தனியறையினுக்குள் நுழைந்தோம். அங்கே மூச்சுவாங்க ஒரு மூதாட்டி உறங்கிக்கொண்டிருந்தார். உறங்கிக்கொண்டிருந்தார் என்பதைவிட, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் உள்ளாராம். படுத்தப்படுக்கையாக. மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவராம் அந்த மூதாட்டி.

அவரின் அருகில் சென்றேன். அங்குள்ள மேஜை ஒன்றில் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்ட ஒரு குழந்தை பொம்மை. அந்த பொம்மையின் வாயில் பால்புட்டி. அதினின் கைகளைத் தொட்டால், மிருதுவான குழந்தையின் தோல்போலவே இருந்தது. நிஜமான குழந்தைதான் தொடுவதற்கு, இருப்பினும் அது பொம்மை.

எதுக்கு சார், இந்த பொம்மை இங்கே. ? கேட்டேன்.

சிலநேரங்களில் அந்த மூதாட்டியின் கண்களில் இருந்து கண்ணீர் கசியுமாம், அப்போது இந்தக்குழந்தை பொம்மையை அவரின் கைகளில் திணித்துவிட்டால், கண்ணீர் நின்றுவிடுமாம்..

எனக்குக் கசிய ஆரம்பித்தது.... கண்ணீர்.

சனி, ஏப்ரல் 05, 2014

கையில் கிடைத்த கவிதைப் புத்தகங்கள்..

கவிதைகள்..

ஏன் பிடிக்கிறது.?
எந்த மாதிரியான கவிதைகளை மனம் விரும்பி வாசிக்கத்துவங்குகிறது.?
கவிதை என்ன மாதிரியான உணர்வுகளை நமக்குள் விட்டுச்செல்கிறது? 
அதிகமான கவிஞர்கள் நம்மில் உருவாகுகிறபோதுமனம் எதைக் கவிதை என்று ஏற்றுக்கொள்கிறது.?
ஏன் கவிதை எழுதவேண்டும்.?
ஏன் கவிதை வாசிக்கவேண்டும்.?
கவிதை மூலமாக எழுதித்தான் சொல்லவேண்டுமா.?
இங்கேயும் அங்கேயும் வரிகளைப் பிய்த்து பிய்த்து அடுக்கிவிட்டால், அது கவிதையா?
முகநூல் வந்ததிலிருந்து – திபுதிபுவென கவிஞர்கள் கூட்டம். அனைவரும் கவிஞராகலாம் என்கிற நிலை புற்றீசல்போல் பரவி வருவது கண்கூடு, இது ஆரோக்கியமா.!?
யாருக்கும் புரியக்கூடாது என்கிற சிந்தனையில், ஒன்றுமே இல்லாத விஷயத்தை, சுற்றிவளைத்து, வார்த்தை ஜாலம் செய்வதுதான் கவிதையா?
கட்டுரையை ஒவ்வொருவரிகளாகச் சொல்லிஒரு சிறிய திருப்பத்துடன் முடிவடைகிற கவிதைகளை சிலர் படைத்துவருகிறார்கள். அதற்கு அவர்கள் கட்டுரையே எழுதிவிடலாமே.!?
உவமைகளைச் சொல்லி, ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மறைமுகமாகச் சொல்வதால்கவிதை வாசிப்பில் என்ன திருப்தி வந்துவிடப்போகிறது. அதற்கு நாம், நமது முன்னோர்களின் பழமொழிகளைப் படித்துவிட்டுப்போகலாமே...!
மூன்று வரிஹைக்கூ என்கிறார்கள். அதற்கும் மரபு இருக்கின்றது. அந்த மரபோடு எத்தனை பேர் ஹைக்கூ படைக்கின்றார்கள்.?
உரைவீச்சு கவிதையல்ல என்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான கவிதைகள் என் பார்வையில் உரைவீச்சே.!
கவிதைக்கு யாப் இலக்கணம் தேவை என்கிறார்கள். யாப் இலக்கணம் என்பது என்னவென்று தெரியாத பலர், கவிஞர்களாகி விட்டார்களே.
டி.ராஜேந்தர் பாணியில் சொல்வது கவிதையல்ல என்கிறார்கள். இருப்பினும் அதுமாதிரி எழுதுவது சுலபம். அதுதான் கவிதை என்றும் சொல்கிறார்கள்.?
சிலகவிதைகள் என்கிற பெயரில் தத்துவங்களைச் சொல்லிச்செல்கின்றன.!
சிலகவிதைகள் என்கிற பெயரில் அறிவுறுத்துகிறது.!
சிலகவிதைகள் என்கிற பெயரில் அலோசனைகளை வாரி வாரி வழங்குகிறது.! 
சிலமிரட்டுகிறது.!
சில கவிதைகள், கேள்விக்கணைகள்.!
சிலவிடுகதைகளை விட்டுச்செல்கிறன..
சிலர் மரத்தின் கீழ் வானத்தையே அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு, அங்கே நிகழ்கின்ற அனைத்தையும் கவிதைகளாக வடித்திருப்பார்கள்..!
சிலருக்கு மழை வந்தால் போதும்.. ஜுரம் வருகிறதோ இல்லையோகவிதை வந்துவிடும். தூரல்சாரல்நீர்வெள்ளம்இயற்கைத்தாயேதந்தையேசித்தியே என்று அவர்களின் கற்பனைக்குதிரைக்கு தீனி கிடைத்துவிடும்.
சிலரின் கவிதைகளில் காதல் மட்டுமே இருக்கும்.. அதை அழகாகச் சொல்லியிருப்பார்கள்.
எப்படிச்சொன்னாலும்இவைகள் எல்லாம் கவிதைகளே அல்லஎன்று, நாம் போற்றிக்கொண்டிருக்கும் சில கவிதைகளைமெத்தப்படித்த கல்வியாளர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். 
சங்ககாலத்தில் புனையப்பட்ட கவிதைகளைக் கரைத்துக்குடித்து உள்வாங்கியவர்களுக்கு, நாம் சாதாரணமாகச் சொல்கிற எதனையும் கவிதை என்று அங்கீகரிக்க மாட்டார்கள். கோபப்படுவார்கள். (அனுபவித்துள்ளேன்)..
எழுத்தாளர் சாரு சொல்வார்பெண்களுக்கு கவிதையே எழுத்ததெரியவில்லை.! (இன்னும் அசிங்கமாகச் சொல்வார்)  
ஜெயமோகன் சொல்கிறார்கவிதைகளில் சாதாரண விஷயங்களைத் தொட்டு எழுதுகிறீர்களாதேவையில்லை. எனக்கு அதுவேண்டாம். நானும் அப்படி யோசிப்பேன்.
மனுஷயப்புத்திரனின் கவிதைகள் அனைத்தும் கவிதைகளே அல்ல என்று ஆதராத்துடன் விளக்கம் கொடுக்கப்பட்டதையும் நான் வாசித்துள்ளேன்.
பல பிரபல எழுத்தாளர்கள், சினிமா பாடல்களைக் கவிதை என்று ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இருந்தபோதிலும் நம்மில் பெருபாலானோர், சினிமா பாணியிலான கவிதைகளைத்தான் எழுதிவருகிறோம்.!
வனிக நோக்கத்துடன் சினிமாவிற்கு பாட்டெழுதும் கவிஞர்கள், உள்ளபடி கவிஞர்களே அல்ல; என்று வாதிடும் கூட்டமும் இங்கே உள்ளனர்.!
மரபில் சேராத கவிதைகளைக் கட்டி அழுபவர்களை நாங்கள் கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்ளமாட்டோம், என்கிறது ஒரு கூட்டம்.!
நாம் கவிதை எழுதுவோமென்று வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தெரிய நேர்ந்தால், நம்மிடம் சாதாரணமாகப் பேசுகிற போதுகூட, கவிதை நடையிலேயே பேசி கழுத்தை அறுப்பவர்களும் உண்டு..!?   

இப்படிப்பலவாறாக கவிதைகளைப் பற்றிய கருத்துகள்வினாக்கள்விமர்சனங்கள்எதிர்ப்புகள்வம்புகள், சிக்கல்கள் என கவிஞர்களைப் பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கின்ற வேளையிலும்தினம் ஒரு கவிஞர் முளைத்துகவிதைகளை எழுதிநூல் வெளியீடு செய்துதமது தமது உள்ளக்கிடங்கை கவிதை நயத்துடன் வெளிக்கொணர்ந்து கவித்திறனைப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்ற சில தைரியசாலிகளை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.

அப்படி எழுதப்பட்டு வெளியீடு கண்ட சில கவிதைப் புத்தகங்கள் என்னை வந்து சேர்ந்தன.

1.       1. கே. பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்கள் நாக்குகள்
2.       2. ம.நவீன் - வெறி நாய்களுடன் விளையாடுதல்
3.       3. R.K குரு (லஷ்மிகாந்தன்) தமிழுக்கு ஆட்கள் தேவை
4.       4. ப.ராமு சிணுங்கும் சிறகுகள்.  

இந்தப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட கவிதைகளில் எனது வாசிப்பு அனுபவங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இது விமர்சனமல்ல.

கே.பாலமுருகனின் தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள். 

இந்த நூலைத்தான் முதல் முதலில் வாசிக்கத்துவங்கினேன். ம.நவீனின் சிறப்பான முன்னுரையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கவிதைப் புத்தகம், வாசிப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொடுக்க்க்கூடிய அற்புத கவிதை நூல் என்று சொன்னால் அது மிகையல்ல. `எதிர் அறம்என்று தலைப்பிட்ட அந்த முன்னுரையின் முக்கிய பகுதியாக நான் கருதுவதுஅதிகாரத்தோடு ஒத்துப்போவது, அதிகாரத்திடம் சமரசம் செய்துகொள்வது, அதிகாரத்தின் முன் மௌனம் சாதிப்பது, அதிகாரம் வீசும் எச்சில் இலைக்காக வாலாட்டி நிற்பது எனத் தமிழ்ச்சூழலில் வளைந்த முதுகெலும்புகளுக்கு மத்தியில் படைப்பிலக்கியம் மூலம் பாலமுருகன் தனது எதிர்க்குரலை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதே அவரின் படைப்புகள்.
கலை என்பது எதனுடனும் ஒத்துபோகுதல் அல்ல. ஏற்கனவே சொல்லப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் எழுதி உலகுக்குக் காட்டுவதால் எதை நிரூபிக்கப் போராடுகின்றார்கள் என்கிற சிந்தனையுடன் முடிவடைகிற ஓர் சிறிய முன்னுரைதான் அது.     

கவிதை மாலை நிகழ்ச்சியின் போது, ஜெயமோகன் பேசுகையில், கவிதை என்பது, ஒன்று, பூ வாக இருக்கவேண்டும். இல்லையேல் இரத்தமாக இருக்கவேண்டும் அதுவும் இல்லையேல் நெருப்பாக இருக்கவேண்டும், என்கிற மூன்று பிரிவினைக்குள் கவிதைகள் இருக்கவேண்டுமென்று தரம்பிரித்தார். இதற்கு அர்த்தம் சொல்லி விளக்கத்தேவையில்லை. காரணம் கவிதை வாசிப்பில் நமக்கு ஏற்படுகிற அனுபவங்களை வைத்து, அது ரத்தமா, நெருப்பா அல்லது பூவா? என்பதை நாமே உணர்ந்துகொள்ளலாம். அப்படிப்பார்க்கையில் பாலமுருகனின் கவிதைகள் அனைத்தையும் நெருப்பு என்கிற பிரிவினைக்குள் தாரளமாகக் கொண்டுவரலாம். வாசிப்பு அனுவபத்தில், மனதில் தீயை விதைத்து விட்டுச் செல்பவை அனைத்தும். 

வாசகனின் பார்வையில், பல வடிவங்களின் பல கோணங்களில் மாறுபடுகிற பின்நவீனத்துவ கவிதைகள்தான் பாலமுருகனின் அனைத்து கவிதைகளும். ஒரு தமிழ் சொல் அங்கே பலவிதமான அர்த்தங்களை விட்டுச்செல்கிற சூட்சமத்தை இவரின் கவிதைகளில் வாசிக்கலாம். குறிப்பிட்டு சொல்வதற்கு `செத்த இறைச்சி’. இக்கவிதையில், இறைச்சி என்கிற வாசகம் வாசகனின் நாசியில் கவுச்சி வாடையை விட்டுச்செல்கிறது. 

`முதலாளி எவனென்று தெரியாமல்
போவோர் வருவோரெல்லாம் 
காறி உமிழும் துப்புகெட்ட 
இறைச்சியாய் தொங்குவதும்
இதற்கு முன் தான் எதுவாக இருந்து 
பிறகு இறைச்சியானோம் எனக்கூடத் தெரியாத 
முட்டாள் இறைச்சியாக்கப்படுவதும் 
பழகிப்போனதாயின..

இயலாமையின் வெளிப்பாடுகளை, செத்து தொங்குகிற இறைச்சியின் மூலமாக உருவகப்படுத்தி சமுதாயத்திற்கு சாட்டையடி கொடுக்கின்றார். 

அடுத்துஉனதும் எனதுமான மூத்திரம் என்கிற தலைப்பில் சொல்லப்பட்ட கவிதை. நடுத்தரவர்கத்துப்பிள்ளைகள் படும் அவஸ்தைகளைச் சித்தரிக்கின்ற கவிதை இது. முன்பெல்லாம், அவனின் மூத்திரம் குடி, அப்போதான் உனக்கு புத்திவரும், என்கிற வார்த்தைகளைக் கேட்காத நடுத்தரவர்கத்துப் பிள்ளைகள் இருக்கமுடியாது என்றே சொல்லலாம். அடுத்தவீட்டுப்பிள்ளைகளிடம் எந்தனை ஓட்டைகள் எத்தனை அவலங்கள் மலிந்து கிடந்தாலும், அவற்றையெல்லாம் அவன் வாங்கிய நல்ல தேர்வு முடிவுகள் தவிடுபொடியாக்கிவிடும். 

குழந்தைகளை ஒப்பிட்டு `அவனின் காலைக்கழுவிக் குடி, மூத்திரம் குடிஎன்கிற சொல்லால், பெற்றோர்கள், உறவினர்கள் என எப்படியெல்லாம் காயப்படுத்துவார்கள் என்பதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். 

எனது எல்லா நடவடிக்கைகளும் 
சாதனைகளும் அடைவுகளும் 
பக்கத்து வீட்டுப் பையனின் முத்திரத்தில் 
ஊறவைக்கப்பட்டன.. 

என்று தொடர்ந்து, அதன் பிறகு அந்தப் பையன் எப்படியெல்லாம் குடும்ப உறுப்பினர்களால் சீண்டப்படுகிறான் என்று சொல்லி, இறுதியாக ஒரு திருப்பம்

பக்கத்துவீட்டுப் பையனின் 
கையிலும் துருப்பிடித்த 
ஒரு குவளை இருந்தது
யாரோ இன்னொரு பையனின் 
மூத்திரத்தை வாங்குவதற்காக.! 
என்று முடிவடைந்து வாசகனுக்கு வேலை வைக்கின்றான் கவிஞன்.

அனைத்து கவிதைகளையும் உள்வாங்கி ரசித்தேன். உணர்ந்தேன். அதில் அடுத்ததாக, அவசியம் சொல்லக்கூடிய ஓர் கவிதை 
`ஒரு துண்டு சிகரெட் புகைப்பவனின் அவலத்தை, ஒரு சிகரெட் துண்டு படும் அவஸ்தையின் மூலமாக சித்தரிக்கின்றார். அற்புதமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்த கவிதை இது. இந்தக் கவிதையில் வரும் வரிகள் அனைத்தும், ஹைக்கூ கவிதைகளை வாசிக்கின்ற அனுபவத்தைக்கொடுத்தது. 

கடைசியாகத் தன்னை உறிஞ்சியவனைப் 
பற்றி சொல்வதற்குள் 
இறந்துவிடும் துண்டு 
சிகரெட்டின் முணுமுணுப்பு.

இந்த வரிகளுக்குள், ஒரு ஹைக்கூ அல்ல, பல ஹைக்கூக்கள் ஒளிந்து இருக்கின்றன.

உறிஞ்சியவன் நினைப்பதற்குள்
இறந்துவிடுகிறது
சிகரெட் துண்டு.

இறந்து விழுந்த
சிகரெட் துண்டு
உறிஞ்சியவனையும் வஞ்சிக்கிறது

சிகரெட் துண்டு இறக்கிறது
உறிஞ்சியவனை
துணைக்கு அழைத்துக்கொண்டு 

எனக்கு ஹைக்கூ கவிதைகள் அதிகம் பிடிக்கும். இருந்தபோதிலும் எழுதவராது. மேலே உள்ள மூன்று கவிதைகளும் பாலமுருகனின் வரிகளில் இருந்து, நான் முயன்றது.


விலங்கிட்ட வாழ்வு – நெகிழவைத்த கவிதை. 

அவர்கள் விளையாடுவது - நம் ஆசைகளைத் தின்று செரிக்க முடியாமல்போன நம் வீட்டுக்குழந்தைகளுடன். 
நாம் கக்கிய கசப்புகளைத் தின்று வளர்ந்த நம் வீட்டுக் குழந்தைகளுடன். இது ஒரு fun fare நினைவலைகள்.

உங்களை நான் மன்னிக்கிறேன் என்று முடிவடைகிற கவிதையில், சாபமிட்டவர்களை சபிக்கப்படும் கவிதையாக நம்மை மிரட்டிச்செல்கிறது.

இரகசியங்களை ஒளிக்கத்தெரியாதவர்கள் என்கிற கவிதையில் ஆன்மிக வாடை வீசியதை என்னால் உணரமுடிந்தது. ஞனப்பார்வை என்பது ஆன்மிக அனுபவத்தின் மூலமாக நிகழ்வது. நான் கண்களை உற்று நோக்குகிறபோது, என் கைகளில் சாவிக்கொத்துகளைத் தேடி களைக்கின்றனர்என்கிற வரியில் ஒளிந்திருக்கும் ஆன்மிகத்தின் தெளிவு நிலை, நம்மையும் கலவரமடையச்செய்கிறது.

பாலமுருகனின் ஒவ்வொரு கவிதைக்கும் நாம் நமது பாணியில் விளக்கம் சொல்லிக்கொண்டே போகலாம். அது நிச்சயம், படைப்பாளியான பாலமுருகனுக்கே வியப்பாகவும் இருக்கலாம். நாம் யோசிக்காததையெல்லாம் வாசகன் யோசிக்கின்றானே.? என்கிற சிந்தனை உதிக்கின்ற தருணத்தில், அவருக்கான அடுத்த கவிதை நூல் தயாராகி விடும் என்பதில் சந்தேகமில்லை. 

முகநூலில் அவரைத் தொடரும் ஒரு வாசகியான நான், அவரின் படைப்புகளைக் கூர்ந்து கவனித்து வாசிப்பேன். சிலவேளைகளில், கிண்டல் கேலி செய்து, திட்டு வாங்கிக்கொண்டதும் உண்டு. அப்போது இருவருக்கும் கோபம் வந்தது. இப்போது நினைக்கையில், படைப்பாளியின் மனமாகப்பட்டது, நாம் நினைக்கின்ற கோணத்தில் நமது சிந்தனைக்கு ஒப்ப அமைவது கிடையாது. அது வேறொரு உலகில் சஞ்சரிப்பவை என்பதை உணர்ந்துகொண்டேன்.

தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற இந்தக் கவிதைப்புத்தகம் எனக்கு நல்ல பரிசு. வாழ்த்துகள். 


2. வெறிநாய்களுடன் விளையாடுதல். கவிஞன் ம.நவீன். 

இந்த நூலுக்கு கே.பாலமுருகன் முன்னுரை வழங்கியிருந்தார். நீண்ட விரிவான முன்னுரைக்கு `சொற்கலைக்கொல்லும் கலையானது’ என்று தலைப்பிட்டு, அற்புதமாக, மிக விரிவாக எழுதி அறிமுகப்படுத்தியிருந்தார். கோபப்படுபவன் மட்டுமே கவிஞனாகலாம் என்கிற சூழலில் இன்றைக்கான கவிதை இலக்கியம் செயல்பட்டு வருவது கவிஞர்களுக்கான கற்பனை வறட்சியைக் காட்டுகிறது, என்று, தீப்பொறி பறக்க தமது கருத்துகளை முன்னுரையின் மூலமாகப் பகிர்ந்திருந்தார். 

கவிதை என்கிற பெயரில் மனித வாக்குமூலங்களைப் பிரசுரிக்கின்ற பத்திரிகைகளின் போக்கு குறித்தும் இங்கே சாடியுள்ளார்.   

பகுதி பகுதியாகப் பிரித்து அழகான தமிழ்ச்சொற்களைக் கொண்டு மிகவும் அருமையாகச்சொல்லப்பட்ட முன்னுரை இது. இதற்காகவே இந்நூலை வாங்கவேண்டும் என்கிற கோரிக்கையையும் இங்கே முன்வைக்கிறேன். 

நூலின் தலைப்பே வெறி பிடித்த்துபோல் இருப்பினும், இந்தக் கவிதை நூலை நான், பூவிற்கு சம்மாகத்தான் ஒப்பிட்டுச்செல்வேன். இவரின் கவிதைகளின் வாசிப்பு அனுபவத்தின் இறுதியில், அனைத்தும் மெல்லிய புன்னகையை நம்மிடம் விட்டுச்செல்கிறது. அது நகைச்சுவை உணர்வாகவும் இருக்கலாம். நையாண்டியாகவும் இருக்கலாம். சின்னச்சின்ன `twist’ மனதின் இறுக்கத்தைக் குறைத்துவிட்டுச் செல்வதாகவும் இருக்கலாம். காதல் துளிர்விடுவதைப்போலவும் இருக்கலாம். கோபத்தின் நேரடி வெளிப்பாடாகவும் இருக்கலாம். விடுகதைக்கு விடை கிடைத்த திருப்தியில் உதிக்கின்ற புன்னகையாகவும் அது இருக்கலாம்.! இப்படிப் பல கோணங்களில் புன்னகையை மட்டும் நம்மிடம் விட்டுச்செல்கிற கவிதைகளை, பூ என்கிற பிரிவினைக்குள் கொண்டுவருவது கவிஞனுக்கு கோபத்தை வரவழைக்காது என்று நம்புகிறேன்.

உதாரணத்திற்கு
, புத்தகத்தின் முதல் கவிதை.. 

மிக இயல்பான
 
ஒரு காலைப்பொழுதில் 
சோற்றுப் பருக்கைகளை 
கொத்தித்தின்னும்
மைனாக்களின் கண்களில்
பட்டுவிடும்
மீந்திருக்கும் எலும்புத்துண்டுகள்
ஒரு தரம் குதித்து
பின்னோக்கி ஓட வைக்கும்

இந்தக் கவிதையின் உள்ளர்த்தம் புரிந்தால், இதில் உள்ள எள்ளல் நல்ல நகைச்சுவை. 

நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வின் கூத்துகளை, நவீன், மாயா என்கிற சிறுகுழந்தையின் இருத்தலின் மூலமாக வெளிக்கொணர்கிறார். அறியாத சிறுகுழந்தையின் உணர்வுகளில், வளர்ந்த குழந்தைகளுக்கு `மெசெஜ்சொல்வதைப்போல் சில கவிதைகள் வந்திருப்பது ரசனைக்குரியது.   

நான் வாசித்த தடித்த நூலொன்றைப்பற்றி நண்பர்களிடம் சிலாகித்தேன். மாயாவும் தாம் வாசித்த எ,பி.சி,டி புத்தகத்தைப்பற்றி பெரிதாகப்பேசிக்கொண்டிருந்தது. இதிலும் லேசான நையாண்டி, நமக்குள் புன்னகையை விட்டுச்செல்கிறது. 

பூச்சாண்டி என்கிற கவிதை கொஞ்சம் நெருடலைத் தந்தது. இப்படி நேரடியாகச்சாடுவதை விடுத்து கொஞ்சம் வேறுமாதிரியாகச் சொல்லியிருக்கலாம் என்கிற சிந்தனை வாசிப்பு அனுபவத்தில் கிடைத்தது. 

பயம்கலந்த கனவுக்கவிதையிலும் லேசான புன்னகை எட்டிப்பார்த்த்து.

மரணம் குறித்த கற்பனையில்.. என்கிற கவிதைவரிகள்தான் நேரடி அர்த்தத்தைக் கொடுத்துவிட்டுச்சென்றது. தனிமையின் வெறுமை கொடுக்கின்ற சூழல் விதைத்துச்சென்ற கவிதை இது. இப்படியெல்லாம் நானும் சிறுபிராயத்தில் யோசித்துள்ளேன். மரணபயம் குடைவதைப்போன்ற திணறலில், நாமே முதன்முதலில் உலகத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும். அம்மா அப்பா சகோதரர்களின் மரணத்தை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது, என்கிற சிந்தனையில், கைகளைக் கூப்பி, நமது இறைவனை வணங்குவதைவிடுத்து, ஓ ஜீஸஸ் என்கிற முனகலில், கையை, நேற்றி, இடது வலது என தொட்டு பின்பு உதட்டில் வைத்து முத்தமிடுவதைப்போன்று செய்துகொள்வேன்.. நிறைய கடவுள்கள் வந்து அவர்களைக் காக்கவேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனம் அது. 

33 கவிதையைப்படித்தபின்பு, demo செய்தேன். காற்றாடியைச் சுழலவிட்டு. 

கறை என்கிற கவிதை வாசிக்க வாசிக்க பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருந்தது, அது என்ன என்பதைத்தான் நான் இந்தத் தருணம்வரை யோசித்துக்கொண்டிருக்கின்றேன்.

இன்றிரவு நான் தூங்கப்போகிறேன் என்கிற கவிதையில் தூங்காமல் விழித்திருக்கும் கண்களின் கொலைவெறி வக்கிரமும் எனக்கு புன்னகையை வரவழைத்துவிட்டுச்சென்றது. 

சராசரி கவிதை - சராசரியல்ல.

சுதந்திரமற்ற வாழ்வைச்சொல்லும் கவிதையில், சுயநல வாடை வீசுகையிலும், நான் அதிகம் ரசித்த கவிதை அது - அற்புதம் அற்புதம்.. 

அந்தக் கவிதை இதோ...

சட்டென சந்திக்கும் பெண்ணிடம்
எழும் காமத்தை..
காதல் தீர்ந்துவிட்ட கணத்தின்
கசப்பை ..
உன் நட்பு இனி தேவையில்லை
என்ற வெறுப்பை..
இதற்காகத்தான் பழகினேன்
என்ற உண்மையை..
நான்தான் குற்றவாளி
என்ற வாக்குமூலத்தை..
எனக்கு யாருமே தேவையில்லை
என்ற இறுமாப்பை..
நான் மரணத்தை மட்டுமே விரும்புபவன்
என்ற மௌனத்தை
சத்தமிட்டுச் சொல்லமுடியாதவரை
இந்த வாழ்க்கை
சுதந்திரமற்றதுதான்...

நவீனின் எல்லாக் கவிதைகளிலும் சீற்றம் இருப்பினும், அது வாசகனுக்கு அற்புத அனுபவத்தையே விட்டுச்செல்கிறது. இது கவிஞனின் வெற்றியோ அல்லது வாசகனின் புரிதல் வெற்றியோ என்பது பற்றியெல்லாம் எனக்குத்தெரியவில்லை. இதுபோன்ற சிந்தனைச்சிதறல்கள் கவிதைகளாக இன்னும் நிறைய வரவேண்டும் என்பதுதான் ஒரு வாசகியாகிய எனது வின்னப்பம். 

3 தமிழுக்கு ஆட்கள் தேவை. RK குருவின் கவிதை நூல். 

குரு எனது முகநூல் நண்பர். நான் முகநூலில் சேர்ந்த காலகட்டத்தில் இருந்து எனக்கு நண்பராய் இருக்கின்றார். பொறி பறக்கும் பகிர்வுகளைப் பதிவேற்றி பின்னூட்டங்களின் மூலமாக கடுமையான கண்டனங்களைச் சம்பாதித்தவர். முகநூல் பிரபலம் என்றும் சொல்லலாம். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இவர்போன்ற நண்பர்கள்தான் எனக்கு ரோல்மாடல். என்னாலும் முகநூலில் நீண்ட காலம் தாக்குபிடிக்கமுடிகிறது என்றால், அதற்கு குரு போன்றோர்களின் தைரியமும் உற்சாகப் பதிவுகளும், தொடர் பங்கேற்புமே முக்கியக் காரணம். 

ஒருமுறை அவரின் பதிவின் கீழ் நானும் கோபமாக பின்னூட்டம் இட்டு எழுத்துப்போர் செய்கிறபோதுதான் நாங்கள் இருவரும் நண்பர்களாக அறிமுகம் ஆனோம். என்னை விட வயதில் ரொம்ப சிறியவர். அறிவு முதிர்ச்சி என்னை விட அதிகம். நிறைய படித்தவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்,ஏ பட்டப்படிப்பு முடித்தவர். பேசுகையில், ஆங்கிலம் கலக்காமல் அழகான தமிழில் பேசுவார். மரியாதையான நண்பர்.

நூல் வெளியீடு செய்கிறேன் விஜி, இதுதான் நான் எழுதிய கவிதைகள், என்று, தாம் எழுதிய அனைத்துக் கவிதைகளையும் தொலைபேசியின் வழி என்னோடு பகிர்ந்து கொண்டவர் குரு. புத்தகம் வெளியீடு கண்டவுடன், அந்த மகிழ்வான நிகழ்வை என்னோடு மனதார பகிர்ந்து பூரித்துக்கொண்டார். தபால் வழி நூலையும் அனுப்பிவைத்தார். தோழி தோழி என்று அன்பு ததும்ப அழைப்பவர். 

எப்படி அன்பு ததும்ப அழைத்து நலம் பேணி நட்பு பாராட்டினாலும். இலக்கியம் என்று வருகையில் நான் உண்மையை மட்டும்தான் சொல்வேன். இதில் `நோ செண்டிமெண்டல்.

குருவின் கவிதை நூலிலும் எனக்குப்பிடித்த அம்சம் அந்த முன்னுரையே. தீக்கதிர் நாளிதழின் பொறுப்பாசிரியர் அ.குமரேசன் (குமரேசன் அசக்) அவர்களால் சிறப்பாக எழுதப்பட்ட முன்னுரை அது.

எளிமையான தமிழில் மிகப்பெரிய விஷயங்களை அழகாகச் சொல்லியிருக்கின்றார் குமரேசன் ஐயா அவர்கள். எல்லா மனித மனங்களும் கவிதையின் பால் ஈர்ப்பு கொண்டதுதான். படிப்பறிவே இல்லாத ஒரு பெண் தன் குழந்தை தொட்டிலில் தூங்கி விழிக்கின்றபோதுபாரு எம்புள்ள எப்படி பூ மாதிரி கண்ணைத்தொறக்குது, என்று சொல்கிறபோது அங்கே கவிதை மனம்தான் செயல்படுகிறது என்று ஆரம்பிக்கின்றார் தமது முன்னுரையை. 
உலகப்புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வெர்ட்ஸ்வொர்த், கவிதையைப் பற்றிச்சொன்ன ஒரு விஷயத்தை உதாரணமாகக் காட்டிவிட்டு, தொடர்ந்து RK குருவின் கவிதைக்குள் நுழைந்து, அங்குள்ள ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

குருவின் கவிதைகள் அனைத்திலும் இந்த(து) சமுதாயத்தின் மேல் அவர்கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடாகவே உதிர்க்கின்றது. சில இடங்களில் `பொத்திக்கொண்டு போஎன்பதை, கவிதையில் கவிதைக்குத்தோதாக எழுதியிருப்பினும், அதனின் ஆழத்தை உணர்ந்து வாசித்தோமானால், அங்கே சமுதாயத்தின் மேல் அவர் கொண்டுள்ள சீற்றம் வெளிப்படுகிறது. 

எனக்கும் பசி
என்புள்ளைக்கும் பசி
பாலில்லா என் மார்பில் 
ரத்தமாவது கசியாதா
பசியாறட்டும் என்புள்ள..

இந்த ஒரு கவிதை போதும் குருவின் கவிதைகள் அனைத்தும் எதைப்பற்றிப் பேசுகிறதென்று. அரசியல், வன்முறைக் கலாச்சாரம், நாட்டின் வறுமை. தமிழ்மீது பற்றற்ற நிலை. பஞ்சம் பசியின் கொடுமை. பெண்ணடிமை, இனம், மதம்,சமயம் என்று எல்லாம் கலந்த கலவையாக தமது கவிதைகளைப் படைத்திருக்கின்றார்.

ஒரே மூச்சில் எல்லாக் கவிதைகளையும் வாசித்துமுடித்தேன். நீண்ட நெடிய சிந்தனையில் மீள்வாசிப்புச் செய்து புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் உள்ள கவிதைகள் அல்ல அவை அனைத்தும். மிக எளிமையாக திருப்பங்களற்று சொல்லப்பட்ட கவிதைகள்தாம். கவிதைகள் என்பதைவிட.. நிமிடக்கதைகள்தான் அதில் அதிகம். கவிதைக்கு வேறொரு வடிவம் கொடுத்திருக்கின்றார் குரு. வாழ்த்துகள். முயற்சி மேலும் தொடர்க.

4. சிணுங்கும் சிறகுகள். ப.ராமுவின் கவிதை நூல். 

ப.ராமுவின் கவிதைகள் அற்புதமாக இருக்கும் என்பதை ஏற்கனவே நான் அறிந்துவைத்திருப்பதால், நானே நேரில் சென்று பணம் கொடுத்து அப்புத்தகத்தைப் பெற்றுக்கொண்டேன். ஆனால் இந்தக்கவிதை புத்தகத்தில் எழுதப்பட்ட அனைத்து கவிதைகளிலும், பழைய ப.ராமுவின் சாயல் கொஞ்சம் கூட இல்லை என்பதை நான் பகிரங்கப்படுத்தினால், கவிஞர் கோபித்துக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். நான்கு வாசகங்களை எழுதி, அதை மேலிருந்து கீழாக நான்கு வரிகளில் அழகாக அடுக்கி, அதற்குத் துளிப்பா என்று பெயரிட்டு, அற்புதமான படங்களைக்கொண்டு பக்கங்களை வடிவமைத்து,  அழகிய கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள். 

சில, கட்டளை வாசகங்கள். சில, காதல் வாசகங்கள். சில, இயற்கையைப் பற்றி, சில தத்துவங்கள், சில அறிவுறுத்தல்கள், சில நினைவலைகள்.... வீடு, தெரு, நிலா, வானம், பூமி, பூ, கடல், அலை, தென்றல் என நகர்கிறது. இதையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். .

உதாரணத்திற்கு :- 

நிற்காதே
நட..
அருகில் 
வரும்பார்
வாய்ப்பு

சுட்டெரிக்கும்
வெயில்
அவள் வந்தாள்
மனசெல்லாம்
மழை

தூரப்பயணம்
வழியெல்லாம் 
விக்கல்
அவளின் 
நினைவு

நீயும் மருத்துவரா?
புரியவேயில்லை
கையெழுத்து
மின்னல்

பார்த்தேன்
ரசித்தேன்
இதயத்தில்
நுழைந்தாய்
கவிதையாக..


கவிஞர் ப.ராமு அவர்கள் நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருப்பதாக, அவரே சொல்லக் கேட்டேன். நலம் பெற பிரார்த்தனைகள்.