வியாழன், மே 29, 2014

அழகு குறிப்பு

அழகுக்குறிப்பு.. (பெண்களுக்கு மட்டும். ஆண்கள் படிக்கவேண்டாம்)

பெண்கள் நாம், முகக்கிரீம்களை வாங்குகிறபோது, எப்போதுமே ஒரு செட் ஆகத்தான் வாங்குவோம். அப்படித்தான் கிடைக்கும். Skin milk, toner and moisturiser. தனித்தனியே வாங்குவதைவிட மொத்தமாக வாங்குகிறபோது, விலையில் அதிக மாற்றம் இருக்கும். செலவைக் கொஞ்சம் குறைக்கலாம். 

கண்டிப்பாக, இந்த மூன்றும், முக ஒப்பனைக்கு அவசியத்தேவை. இவைகள் இல்லாமல் முகத்தை ஒண்ணும்பாதியுமாக அலம்பிவிட்டு, பவுடரையோ அல்லது பவுண்டெஷனையோ பூசிக்கொண்டால், சருமம் வறண்ட தோற்றத்தைத் தரும். வெப்பத்தின் தாக்கத்தை முகத்தின் தோல் ஏற்றுக்கொள்ளது, முகம் கருவடையும்.

இருந்தபோதிலும், இந்த மூன்று பொருட்களையும் செட் ஆக வாங்கிக்கொண்டு, அதில் அந்த skin milk மற்றும் moisturiser ’ஐ மட்டுமே தொடர்ந்து பயன்படுத்திவருவோம். toner ஐ மறந்துவிடுவோம். காரணம் toner போட மிருதுவான பஞ்சுவேண்டும். போட்டு சில நிமிடங்கள்வரை காத்திருந்து அந்தத் திரவம் காய்ந்த பின்பே மொட்சுரைசர் பின் பௌண்டேஷன் பூசவேண்டும்.

பரபரப்புச்சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு, அந்தத் தோனர் காய்கிறவரை பொறுமை காக்க மறுப்பதால், தோனரை ஒரு பொருட்டாகக் கருதாமல் தூக்கிப்போட்டு விடுவார்கள்.
இதனாலேயே பல தோனர் பாட்டல்களை அதனின் expiry date வந்தவுடன் தூக்கி வீசிவிடுவது பல பெண்களின் வழக்கம். நானும் பல தோனர் பாட்டல்களை பயன்படுத்தாமல் அப்படியே வீசியுள்ளேன்.

இப்போது அதற்கு அவசியம் இல்லை.

அதாவது, முகத்தில் மேக் ஆப் போடுகிற பெண்கள், முகத்தை அலம்பி, skin milk கொண்டு தேய்த்து சுத்தம் செய்வார்கள். சிலவேளைகளில் அந்த ஸ்கீன் மில்க் முகத்தில் படிந்திருக்கின்ற மேக் ஆப்களை முழுவதுமாக அகற்றாது. அதனால் அகற்றவும் முடியாது, அதன் தன்மை வேறு. முகம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பளபளவென்று இருந்தாலும், அந்த மேக் ஆப்கள் ஏழு எட்டு மணிநேரம் முகத்தில் படிந்து இருக்கும். பார்த்தால் தெரியாது, டிஷ்யூ கொண்டு துடைத்தால், துடைக்கத் துடைக்க தெரியும்.

அப்படிப் படிந்திருக்கின்ற அந்த முக ஒப்பனைகளை முழுமையாகத் தூய்மை படுத்தாமல், இரவில் படுக்கச்சென்று, காலையில் எழுந்து மீண்டும் முகஒப்பனை செய்கிறபோது ஏற்கனவே ஒட்டியிருக்கின்ற பழைய மேக் ஆப் களோடு புதிய மேக் ஆப்களும் கலந்து முகத்தைப் பாழ்படுத்தும்.

இதற்காகவே சில பெண்கள், அதற்கென்றே இருக்கின்ற make up remover வாங்கி வைத்துக்கொண்டு அந்த ஒப்பனைகளைச் சுத்தம் செய்வார்கள். மேக் ஆப் ரிமூவரும் மலிவு அல்ல. அதிக விலைதான். நல்ல பொருட்கள் எப்போதுமே அதிக விலைதான்.

ஆக, இந்தத் தோனரை மேக் ஆப் பேஸ் ஆகப் பயன்படுத்த சோம்பல் படுகிறவர்கள், அதை make up remover ஆகப் பயன் படுத்தலாம்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்கள், குளிப்பதற்கு முன், மிருதுவான பஞ்சுகளின் (cotton sponge) தோனரை நனைத்து, கண்மை, உதட்டுச்சாயம், பவுண்டேஷன், ஐ சேடோ போன்றவற்றை நன்கு துடைத்து எடுத்த பின், ஸ்கீன் மில்க் கொண்டு கழுவி சுத்தம் செய்யலாம். பார்ப்பதற்கு பளீச் சென்று இருக்கும்.

நீங்களும் அழகிகளே..

செவ்வாய், மே 27, 2014

கோச்சடையான்

தமிழ் சினிமா வரலாற்றில் வித்தியாசமான படமொன்றைப்பார்த்த திருப்தியில் திளைத்துள்ளேன்.

என்ன படம்.?  காத்து மாத்திரி நடக்கிறார்கள்.. பொம்மை மாதிரி நடிக்கின்றார்கள். நடையில் மாற்றம். உடையில் மாற்றம், நடிப்பில் மாற்றம். வாய் அசைவில் வசனங்கள் அமரவில்லை, உடல் அசைவுகளின் நடிப்பு சரியாகச் சேரவில்லை. கண்ணோடு கண்நோக்குதலில் சொதப்பல், தொடுதலில் அணைப்பில் உயிர்ப்பு இல்லை. புதிய பாணியில் படமெடுத்து சரியாக வரவில்லை. தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தேன், பாதியில் எழுந்து வந்துவிட்டேன்.. கார்ட்டூன் படம். குழந்தைகளுக்கான படம்.. என்கிற என் நண்பர்களின் புலம்பல்களைப் பொருட்படுத்தாமல் நான் இத்திரைப்படத்தை திரையரங்கில் சென்று கண்டேன்.

என்னை அதிகம் கவர்ந்த புதிய பாணி திரைப்படம்.. நன்றாக ரசித்துப்பார்த்தேன். வியந்துபோனேன்.

கதையை விடுங்கள். நடிகர்களை விடுங்கள். நடிப்பை விடுங்கள். மறைந்த மறவா கலைஞன் நாகேஷ் அவர்களும் நடித்திருக்கின்றார், அதையும் விடுங்கள். இசை அற்புதம், அதையும் விடுங்கள்.  ஆனால் அந்தப் படத்தின் பிரமாண்டம்  இருக்கிறதே.. ஆஹா.. அற்புதம்.. அப்படியே மனதில் அரியணை இட்டு அமர்ந்துகொள்கிறது.

என்ன கதை.? என்பதில் நான் கவனம் செலுத்தவே இல்லை. மீண்டுமொருமுறை இத்திரைப்படத்தைப்  பார்த்தால்தான் கதையைப் பற்றி என்னால் சொல்லமுடியும்.  காரணம் அரங்கில் கதையோடு நான் ஒன்றவில்லை.

காட்சியமைப்புகள். நாம் எப்போதும் கண்டு ரசிக்கின்ற நடிகர்களின் வித்தியாசமான முகபாவனைகள், மெழுகு பொம்மைகள் போன்ற உருவ அமைப்புகள், கோட்டைகளின் பிரமாண்டம், மிகப் பழமையான உணர்வை நமக்குக் கொடுக்கின்ற சுற்றுச்சூழல். செட் போடப்பட்டது போ்ன்ற தாக்கத்தை ஏற்படுத்தாத இயற்கைக் காட்சிகள், அற்புதமான நேர்த்தியான நடன அசைவுகள்.. ஆதிகால பாரம்பரியத்தைச் சொல்கிற ஆடைகள் அணிகலன்கள். மக்கள், மண், நிலம், புல், மரம், தென்றல், நீர், அலை, கடல், மன்னர்காலத்துக் குதிரைகள், தேர், போர்க்கப்பல்கள், போர்ப்படைகள் என அனைத்தும் அற்புதம். காட்சிகளை ஒன்றுவிடாமல் அணுவணுவாக இரசித்தேன். அற்புதமாக இத் திரைப்படத்தைத் தயாரித்து உள்ளனர். இதுபோன்ற படங்களை நான் இதுவரையில் கண்டு களித்ததில்லை.

கிழவனுக்கு மே ஆப்’களை அப்பி கோப்புகளை ஏந்திக்கொண்டு கல்லூரிகளுக்குச் சென்று பதினாறு வயது பெண் குழந்தையுடன் கட்டிப்புரல்வதைக் கண்டு நொந்துபோன நூற்றாண்டு சினிமா ரசிகப் பெருமக்களுக்கு நல்ல விருந்து. ரஜினிகாந்தை மிகவும் இளமையாக அழகாகக் காட்டியிருப்பது மனதிற்குத் தெம்பைத் தந்துள்ளது.

இதுபோன்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் உலக அளவில் அதிகமாக வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் நான் முதன்முதலில் கண்டு ரசித்த புதிய தொழில்நுற்பக் கலைப்படைப்பு என்றால் அது கோச்சடையான் தான். 

இது தமிழ்ச் சினிமா பரிணாமத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றுகின்ற ஓர் திரைப்படமே என்றாலும், வருங்கால நடிகை நடிகர்களுக்கும் ஒப்பனை மற்றும் ஆடை அணிகலன் கலைஞர்களுக்கும் பேராபத்தைத்  தருகிற  முயற்சியின்  தொடக்கமாகவே   ஆரம்பமாகியிருக்கிறது.  காரணம் இப்படத்தின் ஆடைகள் முக ஒப்பனைகள் அனைத்தும் கணினி இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகியிப்பது வெள்ளிடைமலை.

தொடர்ந்து இதுபோன்ற படங்கள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தால், மறைந்த மூத்த ஜாம்பவான்களான சிவாஜி ஜெமினி எம்.ஜி.ஆர் போன்ற பழம்பெரும் நடிகர்கள் தீபிகா படுக்கோன் போன்ற இளவட்டங்களோடு டூயட் பாடி நடித்துவிட்டுச் சென்று விடுவார்கள்.  வருங்காலத்தில் முதல்வருக்கு பஞ்சம் ஏற்படலாம்.! . :(

படம் அருமை. திரையில் கண்டு ரசியுங்கள்..

சௌந்தர்யா ரஜினிகாந்த சூப்பர்.  - Amazing

கே.எஸ்.ரவிக்குமார் சார்..  Rocking
 

ஞாயிறு, மே 25, 2014

சமையல் கலை

என் தோழி ஒருவர் எப்போது பார்த்தாலும் என்னை வெளியே ஷாப்பிங் மால் சுற்றுவதற்கு அழைத்த மேனியாக இருப்பார். 

ஹூஹும் முடியாது. சமைக்கணும் மார்கெட் போகனும்.. சாமான்கள் வாங்கணும்.. என்று தட்டிக்கழித்துக்கொண்டே இருப்பேன். கிடைக்கிற வார இறுதி ஓய்வில், அங்கேயும் இங்கேயும் சுற்றுவது கூடுதல் சோர்வு.. எனக்கு இஷடமில்லை. 

என்ன உங்களுக்கு எப்போதும் சாப்பாடு நினைவுதானா..? சாப்பாட்டை விட்டு வேறு சிந்தனையே வராதா? கேட்டாள், என் மனதைக் காயப்படுத்துகிற நோக்கில்.

கொஞ்சங்கூட அந்தச்சொல் என்னைப் புண்படுத்தவில்லை. நான் காயப்படவில்லை. சொல்கிறவர்கள் சொல்லட்டும். நம்முடைய கடமை நம்முடையது. செய்யாமல் ஒத்திவைக்கின்ற பொறுப்புகளை வெளியே இருந்து வந்து யாரும் செய்து தந்துவிடப்போவதில்லை. ஆக, அவரின் புண்படுத்துகிற சொல் என்னை எதுவும் செய்யவில்லை.

இருப்பினும் ஒரு பெண்ணிற்கு வீட்டு வேலைகளை விட சமையல் செய்வது அவசியமான ஒன்று.

பசி எடுக்கின்றபோது, காரை எடுத்துக்கொண்டு, எங்கே சாப்பிடுவது, என்று கடை கடையாக ரெஸ்டரண்ட் ரெஸ்டரண்டாக அலைந்தவர்களுக்கு இந்த சிக்கல் கண்டிப்பாகப் புரியும். அப்படியே நல்ல கடைகள் கிடைத்தாலும், சாப்பிட்ட பிறகு எதோ கோளாறான உணவை உள்ளே தள்ளிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்.. ஏந்தான் வினையை விலைகொடுத்து வாங்கிக்கொண்டோமே, என்கிற சிந்தனை வேறு உருத்தும்.

அதோடு, பசிக்குது, வீட்டில் என்ன சமையல்? என்று பிள்ளைகளோ அல்லது கணவரோ கேட்கிறபோது, சமைக்கவில்லை வெளியே சாப்பிடுங்கள், என்று சொல்கிற நிலை வந்தால், என் மனம் குற்றவுணர்வில் அலைமோதும். ச்சே எதாவது கிண்டி வைத்துவிட்டிருக்கலாமே..! எங்கே போவார்கள் சாப்பிட.! எதைத் திண்ணுத் தொலைப்பார்களோ..!! என்கிற குறுகுறுப்பும் படபடப்பும் இல்லாமல் இல்லை.

அதற்காவே சனி ஞாயிறு என்றால், மற்ற நாட்களைவிட நல்லபடி எதையாவது கூடுதல் சுவையுடன் சமைக்கலாமே என்று முயல்வேன். வெளியே சென்று வந்தால், எல்லாம் பாழாகும்.. சமையல்தானே.. ஒரு நொடியில் செய்துவிடலாம் என்கிற வாசகம் எனக்குப் பிடிக்காத ஒன்று. சமையல் என்பது நேரமெடுத்து அக்கறையோடு தூய்மையாக சுவைபட சமைத்தல் வேண்டும். சமைப்பதை முடித்துவிடவும் வேண்டும்.

மேலும் என் வீட்டில் எங்கே சென்று வந்தாலும், திருமண விருந்திற்குச் சென்று வந்தாலும், வீட்டில் வந்துதான் உண்பார்கள். அப்படி வீட்டில் உணவு இல்லையென்றால், ஃபாஸ்ஃபூட் ஆடர்கொடுத்து வரவழைத்து உண்பான் என் மகன். அது இன்னும் விரையம். எல்லாவிதத்திலும். இல்லையேல், பானை சட்டிகளை உருட்டி, மெஃக்கி செய்கிறேன் பேர்வழி என்று வீட்டில் உள்ள அனைத்துப் பத்துப்பாத்திரங்களையும் பயன்படுத்தி வெளியே தூக்கிப்போட்டுவைத்திருப்பார்கள். கழுவித்தான் வைப்பார்கள் . ஆனாலும் அதையெல்லாம் மீண்டும் நான் சுத்தம் செய்து அடுக்கவேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். இன்னும் அழுத்தமான சூழல் அது. அதற்காகவே சமையல் செய்யவேண்டும்.. மார்கெட் செல்லவேண்டும் என்று எனது நேரத்தை நான் எப்போதும் அதிலேயே கழிப்பேன்.

சரி எப்போதும் அழைத்துக்கொண்டே இருக்கின்றாளே என்று, நேற்று நானும் அவளும் எங்கள் இருவருக்கும் பழக்கமாகியிருந்த மலாய்த் தோழியின் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றோம். மதிய உணவு. நோன்பு நெருங்கிவிட்டதால், பல மலாய் அன்பர்கள் ஹும்ரா செல்வது வழக்கம். அதையொட்டி கூட்டுப்பிரார்த்தனை வழிபாடு செய்து நண்பர்களுக்கு விருந்துகொடுப்பார்கள்.

விதவிதமான உணவுவகைகளை வைத்திருந்தார்கள். பார்த்தவுடன் பசியை அதிகரிக்கின்ற உணவுகள் அனைத்தும்.

நான் வீட்டில் சமைத்து முடித்துவிட்டுத்தான் சென்றேன். காரணம் மலாய் அன்பர்கள் வீட்டின் சமையல்களை நம்மால் சாப்பிட்முடியாது. குருமாவிலும் சக்கரை சேர்ப்பார்கள். நமக்கு அந்த உணவுகள் ஒத்துவராது. எல்லாம் இனிப்பாக இருக்கும்..

நான், சூடாக இருந்த டீ’ஐ மட்டும் எடுத்து இரண்டு கேக் துண்டுகளைத் தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிட அமர்ந்தேன். தோழி தமது ஏழு வயது மகனோடு தட்டைப் பிடித்துக்கொண்டு போராடிக்கொண்டிருந்தாள். இது வேணும்.. அது வேணும்.. இது வேணாம்.. உங்கள யார் இதைப் போடச்சொன்னது? எடுங்க எடுங்க.. என்று அவளைப் பாடாய்ப் படுத்திக்கொண்டிருந்தான். ஜூஸ் வேணாம், மிலோ வேணும்.. என்றான். மிலோ இல்லை.. என்றாள் தோழி. இல்லை அந்த அண்டியைக் கேளுங்க.. கேளுங்க.. என்று ஒரே போராட்டம். தாயும் மகனும் ஆங்கிலத்தில் பேசுவதால், அதைப் புரிந்துகொண்ட எங்களின் மலாய்தோழி, மிலோ கலக்கி எடுத்து வந்தாள். மிலோவையும் குடித்தபாடில்லை. ஜூஸ் வேணும்.. என்றான். எடுத்து வந்தாள். நான் வைத்துள்ள கேக் வேண்டும் என்றான். தோழி சொன்னாள், நீ முதலில் சோறு சாப்பிடு, நான் உனக்குக் கேக் எடுத்துவருகிறேன் என்று.. என் தோழியை சாப்பிடவே விடவில்லை அந்தப் பையன்.

நன்றாக சுவைத்துச் சாப்பிட்டான். கீழேயும் மேலேயும் கொட்டிக்கொண்டு. சாப்பிட்டு முடித்தவுடன். நான் காலியாக்கி வைத்துவிட்ட என் தட்டைப் பார்த்து அவனுக்கு அவ்வளவு கோபம். எனக்கு கேக் வேண்டும்.. எனக்கு கேக் வேண்டும்.. என்று நச்சரிக்க ஆரம்பித்தான்..

அடிவாங்கப்போற நீ.. நிறைய ஆட்கள் இருகாங்க.சும்மா இருக்கமாட்டியா.? என்று தாய் போராடிக்கொண்டிருந்தாள். என்னிடம் வந்து, நீதானே கேக் எல்லாவற்றையும் முடித்தாய், போய் எடுத்திட்டு வா.. போ.. டோங்கி.., என்று எனது முதுகிலேயே குத்த ஆரம்பித்துவிட்டான். தர்மசங்கடமாகிவிட்டது அவளுக்கு... சரி கிளம்புவோம் என்று இருவரும் இடத்தைக் காலி செய்தோம்.

செவ்வாய், மே 20, 2014

பிடித்த பிடிக்காத விஷயம்

என் பணிப்பெண் ஊருக்குச்சென்று இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டன. 

நான் அவளை அதிகமாகவே மிஸ் செய்கிறேன். 

நான் இப்படிச் சொல்வதை உறவுகள் எள்ளிநகையாடலாம்.. வேலைக்காரியை மிஸ் செய்யறாங்களாம்.ஹிஹிஹி என்று.!

நல்ல பெண் அவள். கிழவியோடுதான் ஓயாமல் மல்லுக்கு நிற்பாள். மற்றபடி எல்லா நேரத்திலும் என்னோடு நெருங்கி ஒத்தாசையாகவே இருந்துள்ளாள்.

சில கருத்துவேறுபாடுகள் இருந்திருப்பினும், விட்டுக்கொடுத்து விசுவாசமாகவே இருந்தாள். ஒரு குண்டூசியைக் கூட எனக்குத் தெரியாமல் எடுத்துச் செல்லவில்லை.

அவளிடம் எனக்குப் பிடித்த விஷயம் - வீசு, என்று சொன்ன எல்லாப்பொருட்களையும் எதற்காவது உதவுமென்று எங்கேயாவது எடுத்து பத்திரப்படுத்திவைத்திருப்பது..

அவளிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் - வீசு, என்று சொன்ன எல்லாப்பொருட்களையும் எதற்காவது உதவுமென்று எங்கேயாவது எடுத்து பத்திரப்படுத்திவைத்திருப்பது..

எல்லாவற்றையும் வீசி எறிந்தேன்.. நினைவுகளை சுமந்துகொண்டு

ஞாயிறு, மே 11, 2014

மின்சாரக் கட்டணம்

யாராவது என்னைத்திட்டினால், எனக்கு உறுத்தும். மனக்கஷ்டம் கொள்வேன். மறந்துவிடுவேன்.

அதுவே நான் யாரையாவது திட்டினால்.. கோபம் தொடரும். வெறுப்பு வரும். எரிச்சல் வரும். எதுவும் செய்ய முடியாது என்னால்..

மூன்று மாதங்களுக்கு முன் நான் ஒரு பிரிட்ஜ் வாங்கினேன். செகண்ட் கிளாஸ் பிரிட்ஜ். செகண்ட் கிளாஸ் என்றால், லாரியில் இருந்து இறக்குகிறபோது சின்ன விரிசல் அதனில் கதவுகளில். அது உடனே சர்வீஸ் டிப்பார்ட்மெண்ட் பரிசோதனைக்குச் சென்று, பாதிவிலையில் விற்பனக்கு வந்தது.

இதுபோன்ற பொருட்களை அங்கே பணிபுரியும் நாங்களே, `நான் நீ’ என எடுத்துக்கொள்வோம். பணம் கூட முதலில் கொடுக்கத்தேவையில்லை. சம்பளம் கிடைக்கின்றபோது கொடுக்கலாம். ஆனால் invoice இஸ்ஷு செய்துவிடுவார்கள். நம் பெயரில்.

`சூப்பர் ஐஸ் பெட்டி, வாங்கிக்கோங்க. புதுசு பாதிவிலையில்.. கிடைக்காது. சர்வீஸ் ஒகே.. நல்ல பிரிட்ஜ்..’ என்று சர்வீஸ் டிப்பார்மெண்ட் ஊழியர்கள் சொல்லவே, போனால் வராது. விட்டால் கிடைக்காது என்று அதை நான் வாங்கிக்கொண்டேன்.

என்னிடம் ஏற்கனவே ஒரு பிரிட்ஜ் உள்ளது. இருபது ஆண்டு கால பிரிட்ஜ். பெரியது. அது இன்னும் நல்ல நிலையிலேயே உள்ளது. இப்போது இன்னொன்று கொஞ்சம் சிறியது. சரி பரவாயில்லை, பேரங்காடியில் offer விலையில் விற்கப்படுகிற சமையல் பொருட்களை கொஞ்சம் கூடுதலாக வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதற்கு இந்த பிரிட்ஜ்’ஐ பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு வாங்கிவைத்துப் பயன்படுத்தி வந்தேன்.

நான் பிரிட்ஜ் வாங்கிய சமையத்திலா நாட்டில் மின்சாரம் விலையேற்றம் காணவேண்டும். !

என்ன கணக்கோ தெரியவில்லை, திடீரென்று இம்மாதம் மின்சாரக் கட்டணம், நாநூற்று இருபது ரிங்கிட் வந்துவிட்டது. கொடுமை. இவ்வளவு அதிகமாக வந்தே இல்லை. எப்போதும் இருநூறு ரிங்கிட்’ஐக் கூட தாண்டாது. இது என்ன புதிய கொள்ளை.! என்று நினைத்து, மின்சாரவாரியத்திற்கு அழைப்பு விடுத்துக்கேட்டால், `மின்சாரம் விலையேறிவிட்டது, இனி கட்டணம் அப்படித்தான் வரும். உங்களின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது.’ என்று மட்டும் ஆலோசனை வழங்கினார்கள்.

பிறகு என்ன.? உன்னால் தான் இவ்வளவு உயர்வு. ஓயாமல் மைக்ரொவெவ் பயன்பாட்டினால்தான்..! ஓயாமல் சுடுநீர் கேத்தலை தட்டிக்கொண்டே இருப்பதால்தான்.. ! ஹிட்டரில் ஓயாமல் குளிப்பதால்தான்..! எல்லா விளக்குகளும், மின்விசிறிகளும் ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தால்..! மழைகாலத்திலும் ஏர்கோண்ட் ஓடினால்..! லப்டாப், தொலைக்காட்சிப்பெட்டி, ஐயர்ன், வாஷிங்மிஷின், வஃகியூம், வானொலிப்பெட்டி என எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பின்.. நான் வாங்கிய புதிய பிரிட்ஜிக்கு வந்துவிட்டார்கள். `நீ தான் ரெண்டு பிரிட்ஜ் பாவிக்கிற.. அது எவ்வளவு கரண்ட் இழுக்கும் தெரியுமா? அம்மானாலத்தான் கரண்ட் அதிகமா ஏறுது.. என்று எல்லாப்பழியும் என் மேல் விழ, நான் வேலைக்காரியை உருட்ட, ஒரே அமளி சென்ற ஏப்ரல் மாத இறுதியில்.

எப்படி என்ன பிரச்சனை வந்தாலும் நான் தான் பொதிசுமக்கும் கழுதையாகிவிடுவேன் என் வீட்டில். என் தலையிலேயே விடியும் அனைத்தும். சரி இம்மாதம் எல்லாவற்றையும் குறைத்துவிடலாமே என்று பயன்பாட்டைக் குறைக்கப்போராடி வருகிறேன்.

இவ்வேளையில், என் கம்பனியில் ஏற்கனவே பணிபுரிந்த நபர் ஒருவர் கம்பனிக்கு வந்தார். பிரிட்ஜ் வாங்க. பிளாட் வீடு அவரின் வீடு. ஏற்கனவே உள்ள பிரிட்ஜ் கெட்டுப்போக, அது மிகவும் பழமையான பிரிட்ஜ் என்பதால், பழுதுபார்க்கமுடியாது, காரணம் அதனின் உபரிபாகங்கள் தற்போது விற்பனையில் இல்லை. ஆக பழுதுபார்ப்பது விரையம். புதிதாக வாங்கிக்கொள்ளுங்கள், என்று ஆலோசனை வழங்கவே, ஷொரூமுக்குள் வந்தார், புதிய பிரிட்ஜ் பார்க்க. எல்லாம் அதிக விலை. அவ்வளவு பணம் கொண்டுவரவில்லை. விலை குறைவாக இருந்தால் பரவாயில்லை.. என்ன இப்படி விலையேறிக்கிடக்கு சாமான்கள்.! மகளுக்கு கல்யாணம் வேறு வைத்திருக்கேன். பணம் போதாது என்று முனகிக்கொண்டே என்னிடம் வந்தார்.

என்ன பிரிட்ஜ் வேணும்.. நான் வேண்டுமானால் செகண்ட் கிளாஸ் எதும் ஸ்டோர்க் இருக்கா என்று கேட்டுப்பார்க்கிறேன், என்று கூறி அவர் வாங்க நினைக்கின்ற பிரிட்ஜ்’யைக் காட்டச்சொல்லிக் கேட்டேன். என்ன ஆச்சரியம், நான் வாங்கிய அதே பிரிட்ஜ்’ஐக் காட்டினார். எனக்கு தலையில் கொம்பு முளைத்தது. என்னிடம் உள்ளதை விற்றுவிட்டால்.!! மனதில் நினைத்தேன். சொல்லவில்லை. இருப்பினும் அந்த பிரிட்ஜ், செகண்ட் கிளாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரித்துச்சொன்னேன். இருந்தது. ஆனாலும் அதுவும் விலைதான். கொஞ்சம்தான் குறைத்தார்கள். இல்லேங்க.. முடியாது. அவ்வளவு பணம் இல்லேங்க.. ப்ப்ச்ச்.. என்று சலித்துக்கொண்ட அவரிடம், என்னுடைய பிரிட்ஜ் பற்றிய விவரத்தைச் சொன்னேன்.

வாங்கி மூன்றுமாதமே என்றாலும், நான் வாங்கிய விலையில் இருந்து இருநூறு ரிங்கிட் குறைத்துக்கொண்டே பேரம் பேசினேன். பாவம் ஏழை. அகமகிழ்ந்தார். அப்படியா.? நல்லவேளை கடைகளின் பக்கம் செல்லவில்லை. உடனே எடுத்துக்கொள்கிறேன். போன் நம்பர் கொடுங்க.. என்று உற்சாக வசனமெல்லாம் பேசிவிட்டு.. வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டு.. ஓ அங்கேயா வீடு.. வந்திருக்கேன் வந்திருக்கேன். டோல் தாண்டி, லெஃப்ட்ல ஏறி நேரா.. ஓ.. லாரி ஓட்டிக்கிட்டு அங்கே எல்லாம் வந்திருக்கேன். பெரிய வீடுகளாச்சே அது எல்லாம்.. புது ஏரியா.? நான் அங்கே வீடு வாங்கலாம்னு நினைச்சேன்.. லோன் கிடைக்கல.. அழகான எடங்க அது.. என்று பில்டாப் எல்லாம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து ஓயாத `மிஸ்ட் கால்’கள்.

என்ன.? என்று நாம் அழைத்துக்கேட்டால், நமது பணத்திலேயே.. என்ன மாடல் அந்த பிரிட்ஜ்? எப்போ வாங்கியது.? எப்போ வந்து எடுக்கலாம்.? எவ்வளவுக்கு வாங்கினீங்க? புதுசா இருக்கா? விலை இன்னும் கொஞ்சம் கொறச்சுக்கீங்களேன்.. என் நண்பனுக்கும் வேணுமாம் அதனால நானும் நண்பனும் வருவோம்..! ரெண்டு பேர்ல யாருக்கு பிடிக்கிதோ, அவங்க எடுத்துக்குவோம்.! பிரிட்ஜ்’யில் என்ன எல்லாம் வைப்பீங்க.? நாறுமா? சுத்தம் பண்ணிவையுங்க.. இன்னிக்கு வரோம்.. நாளைக்கு வரோம்.. வந்துக்கிட்டு இருக்கோம்.. லாரி வாடகை நூறுவெள்ளி கேட்கறாங்க.. அத நீங்க கொடுக்கறீங்களா? இப்ப நான் ஒண்டி வந்தா ..ஆரு ஒதவி செய்வா? என இப்படி ஓயாத டார்ச்சர்.

நேற்று மீண்டும் ஒரு மிஸ் கால். தொலைபேசியில் கிரேடிட் இல்லை. இருந்த கொஞ்ச பணத்திலேயும் அழைத்து, என்ன ? என்று கேட்டேன். நான் இப்போ வந்துக்கிட்டு இருக்கேன். பாதை தெரியாம தடுமாறுகிறேன். வழிகாட்டுங்க.. என்றார். எப்படி வழிகாட்டுவது.? கிரெடிட் வேறு தீர்ந்துபோனது. ஆன் லைன்ல இதுக்கென்றே மெனக்கட்டு டாப் ஆப் செய்துகொண்டு, அழைத்தேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``ஆஸ்பித்திரிக்கிட்டே ..’’

``ஐயோ, அங்கே ஏன் போனீங்க?’’

``நீங்கத்தான் லெஃப்ட்ல நுழையச்சொனீங்க ..அதான்.?’’

``எங்கே இருந்து லெஃப்ட்ல நுழைந்தீங்க? டோல் தாண்டிய பிறகா?’’

``டோல்’எ நான் பார்க்கவே இல்லியே..’’

``பிறகு ஏன் லெஃப்ட்ல நுழைஞ்சீங்க?’’

``அதாங்க சீலாப் ஆ நுழைஞ்சிட்டோம்..’’

``இப்போ எங்கே இருக்கீங்க?’’

``பாண்டார் புத்ரி சைன்போட் முன்னாடி..’’

``ஹூஹும்ம்.. அங்கே இருந்து இன்னும் பத்து கிலோமீட்டர் வரணும்.’’

``ஐய்யோ.. இன்னும் பத்து கிலோ மீட்டரா? லோரிக் காரன் கத்துவானே..”

``சரி சரி.. ட்ரை பண்ணுறேன்.”

ஆள் அழைக்கவே இல்லை. என்னாச்சு என்று மீண்டும் அழைத்தேன். எங்கேயாவது மாட்டிக்கொண்டால்..! அதற்குள் பிரிட்ஜில் உள்ள பொருட்களையெல்லாம் தூய்மை படுத்திக் காலியாக்கினேன்.

``எங்கே இருக்கீங்க?’’

``அட கண்டுபிடிக்கமுடியலங்க.. காரை திருப்பி டோல் கிட்ட வந்திட்டோம்.” யாருடனோ உரத்தகுர்லில் சிரித்துப்பேசிக் கொண்டே பதில் வந்தது. (கவனத்தில் கொள்ளவும்.. அவர் என்னிடம் முதலில், டோல் வரவே இல்லை என்றார். பிறகு லோரி ஓட்டுனர் கத்துவான்.. என்றார். இப்போது வேறுகதை.. இதுதான் நம்மவர்கள்.)

என்னால் அதற்குமேல் பொறுக்கமுடியவில்லை. என்னுடைய கிரேடிட் முப்பது வெள்ளி ஏறக்குறைய தீர்ந்த நிலையில்.. வறுமையில் வாடும் ஒருவருக்கு உதவ நினைத்து நான் வறுமையின் எல்லைக்கோட்டுக்கே வந்திடுவேன் போலிருக்கு.. முப்பது வெள்ளி முடிந்தாலும் பரவாயில்லை, பிரிட்ஜ் விற்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று முடிவுசெய்துகொண்டு, அழைப்புக் கொடுத்து `தாறுமாறாகத்’ திட்டித்தேர்த்தேன் அவனை.

கெட்டவார்த்தைகள் வராத குறைதான். அற்பர்கள்.

வாக்கு காக்கத்தெரியாதவர்கள் எல்லாம் மனிதர்களா? மடையர்கள்.







வியாழன், மே 01, 2014

தங்கச் சங்கிலி

மாமிகதை...

பணிப்பெண்ணின் பெர்மிட் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் அவளின் மாமியாருக்கு ஸ்ட்ரோக் வர, நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டாள்.

இடையில் எனக்கும் அவளுக்கும் என் மாமியால் ஒரு பிரச்சனை வர, அவளை ஒரு நாள் காலையில் செம்மையாகத் திட்டித்தீர்த்தேன். அன்றிலிருந்து ஒரு மாதிரியாகவே இருந்தாள். வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டாள். அலுவலகத்தில் இருந்து அழைப்பு கொடுத்து, மாமி என்ன செய்கிறார்..? குளிர்சாதனப் பெட்டில் உள்ளை மீன்களை வெளியே எடுத்துவை, மாலையில் சமைக்கவேண்டும் ..! என எதாவது சொல்லவேண்டுமென்றால், தொலைபேசியை எடுக்கமாட்டாள்..

நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, இடையில் சலசலப்புகள் வர, அவள் செல்கிறேன் என்றவுடன், சரி போ.. என்று நானும் விடைகொடுத்துவிட்டேன்.

மாமிக்கும் அவளுக்கும் ஓயாத வியட்நாம் போர் நடந்துகொண்டே இருக்கும். அவள் எது செய்தாலும் மாமிக்குப் பிடிக்கவில்லை. ஏப்பம், குசு, தும்மல், இருமல் என எது சத்தமாக வந்தாலும், `எனக்கு அருவருப்பாக இருக்கு.. அவளைப் போகச்சொல்.. அவள் வேண்டாம்.. ’ என ஓயாத கூப்பாடு. வேலை முடிந்து வீட்டுக்கு ஏன் வருகிறேன் என்றிருக்கும் எனக்கு.. ஒரே அக்கப்போர்.

சரி கிழவி, அல்ஸமீர் வியாதிக்காரர்.. நேரத்திற்கு ஒன்று பேசுவார். நீ சின்னப்பொண்ணுதானே, அநுசரணையாக நடந்துகொள்ளக்கூடாதா? என்றால், என்னிடம் முறைப்பாள்.

சரி, அவளே வேலைக்காரி. வேலைக்கு வந்தவள். அவளிடம் நாம் என்ன எதிர்ப்பார்க்கமுடியும்.? கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன், அவள் என்ன நீங்க பெத்த பிள்ளையா.? என்றால், மாமி இரண்டு நாளைக்கு சோறு சாப்பிட மாட்டார். கோபமாம். நான் போறேன். என்னை அங்கே அனுப்பு. இங்கே அனுப்பு.. என பல்லவியை ஆரம்பித்துவிடுவார்.

நேரகாலம் கூடி வர, சரி வேலைக்காரப் பெண்ணை அனுப்பிவிடலாமென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினேன்.

மாதக்கடைசி நேற்று. அவளின் கணக்கு வழக்குகளையெல்லாம் முடித்துவிட்டு, அவளுக்கும் மாமிக்கும் கொஞ்சம் புதுத் துணிமணிகள். இன்று நல்ல சமையல் செய்வதற்கு நிறைய பொருட்கள்.. இறைச்சி மீன் காய்கறி பழவகைகள் என வாங்கிக்கொண்டு, அவளுக்கொடுக்கவேண்டிய சம்பள பாக்கி இரண்டாயிரம் ரிங்கிட் சொற்சம் என வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு, வீடு வந்து சேர்ந்தேன்.

இன்று காலையில் (1/5/2014) கிளம்புகிறாள்.

மாமியும் கிளம்புகிறார். இங்கே யாருமில்லை கவனிக்க.. ஆக, இன்னொரு மகன் வீட்டிற்குக் கிளம்ப அவரும் குதூகலமாகவே ஆயத்தமானார்.

மாமி ஒருவாரத்திற்கு ஒருமுறைதான் மலம் கழிப்பார். மருந்துகொடுத்து அதை வெளியாக்கவேண்டும். சென்றவாரம் மருந்துகொடுத்தும் வெளியே வரவில்லை. என்ன பிரச்சனை என்றும் தெரியவில்லை. பொதுவாக மருந்துகொடுத்து, மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் மலம் வெளியாகிவிடும். பயங்கர நாற்றத்தோடு, கருப்பாக.. பணிப்பெண் தான் அனைத்தையும் தூய்மைப்படுத்துவாள். முகஞ்சுளிக்காமல் செய்வாள்.
பிரச்சனை இப்படி இருக்க.. இன்று கிளம்பவேண்டும். இடையில் எதும் கோளாறு என்றால், பிரயாணத்தில் பிரச்சனை வரும். ஆக, எப்படியாவது மருந்துகொடுத்து அந்த இரண்டு வார `ஸ்டோக்’ஐ வெளியாக்கிவிடு, என்று பணிப்பெண்ணிற்கு உத்தரவு இட்டேன்.

அவளும் நேற்று மதியம் வாக்கில் மருந்துகொடுத்து, வயிற்றை காலியாக வைத்திருந்து, மாலை நான்கு மணிக்கு மாமிக்கு வயிற்றுவலி வந்து, எல்லாம் சுத்தமாக வெளியாகியது.

வயிற்றுவலி என்று மாமி சத்தம்போட.. வேக வேகமாக மாமியின் ஆடைகளைக் கழற்றவே, மாமி கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலி கீழே விழுந்துவிட்டது. அதை மாமியும் கவனிக்கவில்லை. பணிப்பெண்ணும் கவனிக்கவில்லை.

தூய்மைப்படுத்துகிற வேலையெல்லாம் செய்து முடித்தபிறகு, என்ன குளியலறையில் மினுக்மினுக் என்று மின்னுகிறதே, என்று பார்க்க, மாமியின் தங்கச் சங்கிலி அங்கே கிடந்துள்ளது. அதை எடுத்துக் கழுவி, அவளின் கழுத்தில் மாட்டிக்கொண்டாள், மறந்தாட்போல் எங்கேயாவது வைத்துவிட்டால், அது காணாமல் போய், ஊருக்குப்போகும் தருவாயில் தமக்குக் கெட்டப்பெயர் வந்துவிடப்போகிறதென்று நினைத்து, பத்திரமாக கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

இரண்டு வார `ஸ்டோக்’ வெளியாகியவுடன், மாமிக்கு கடுமையான அசதி. வெறும் வயிறு வேறா, கஞ்சி துவையல், ஒரு கப் காப்பி என உள்ளே தள்ளிய பிறகு, சோர்ந்துபோய் தூங்கிவிட்டார். தூங்குபவரை தொந்தரவு செய்ய விரும்பாமல், அதை அவள் கழுத்தில் மாட்டிக்கொண்டாள்.

மாலை ஆறு மணிக்கு நான் வீட்டுக்கு வருகிறபோதுகூட நல்ல உறக்கத்தில் இருந்தார் மாமி. என் குரல் கேட்டவுடன் எழுந்துகொண்டார்.

சுறுசுறுப்பாக கலகலப்பாக இருந்தார். பலநாள் கழிவுகள் உடலைவிட்டு அகன்ற திருப்தியில் உற்சாகமாகவே தென்பட்டார். மறுநாள் பிரயாணம் செய்யப்போகிற மகிழ்ச்சியில், `என்னுடைய பர்சில் பணம் எவ்வளவு இருக்கு பார்.. அவள் திருடிக்கொண்டு போய்விடப்போகிறாள். என் சட்டையெல்லாம் எடுத்துவை. மருந்து எடுத்துவை... ஒரு நல்ல புடவையும் வை.. தோடு இப்பவே போட்டுவிடு.’ என, ஒவ்வொன்றாக நினைவுக்கூர்ந்து நினைவுக்கூர்ந்து `நொய்..நொய்..நொய்’ என்றார். தங்கச் சங்கிலியைப் பற்றி அவரும் கேட்கவில்லை. எனக்கும் தெரியவில்லை.

இரவு உணவிற்குப் பிறகு அவரை அறையில் தள்ளிவிட்டு, புலம்பல்களை ஒரு பொருட்டாகக் கருதாமல்,  நாங்களும் உணவை முடித்துக்கொண்டு, பணிப்பெண்ணின் சம்பளக் கணக்கை முடிக்க, இருவரும் வரவேற்ப்பு அறையில் அமர்ந்தோம்.

இரவுமணி பதினொன்று.

தோ..பாரு.. உன்னுடைய கணக்கு வழக்கு இது.. இவ்வளவு நாள் வேலை செய்ததில், எடுத்தது, அப்பாவிற்கு அனுப்பியது போக மிச்சம் இவ்வளவு. உன்னிடம் பணத்தை ஒப்படைக்கிறேன், என்று கூறி, கணினியில் கணக்கைக் காட்டிவிட்டு என்னுடைய ஹென்பேக்கில் கைவிட்டால், மணிப்பர்ஸைக் காணோம்.

முகமெல்லாம் வெளிறிவிட்டது எனக்கு. வெடவெடன்னு வந்துவிட்டது...வேர்க்கிறது.. என்னுடைய சம்பளம். அவளுடைய சேமிப்பு என ஒரு தொகையை அல்லவா நான் அதில் வைத்திருந்தேன்.! எங்கே என்னுடைய பர்ஸ்.? காணோம். துணிக்கடைக்குப்போனேன்.! பழக்கடைக்குப்போனேன்..! இறைச்சிவாங்கினேன்.! காய்கறி சந்தைக்குப்போனேன்...! பர்ஸ்’ஐ கொண்டுசெல்லவில்லையே.. பாக்கெட் தைத்த யூனிபெர்மில், தேவையான பணத்தை மட்டும் உள்ளே வைத்துக்கொண்டு பர்ஸை ஹென்பேக்கிலே அல்லவா வைத்துவிடுவேன்.. ஆனால் ஹென்பேக்கில் பர்ஸ் இல்லையே.. ஐய்யகோ .. நான் என்ன செய்வேன்.? அழாதகுறைதான்.

பணிப்பெண் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பணம் செலுத்துகிற சமையத்தில், நான் நாடகமாடுகிறேன் என்றல்லவா நினைத்திருப்பாள், மனதில். இருப்பினும் அவளே ஆலோசனை கூறினாள். அலுவலக மேஜையில் வைத்திருந்தால்.?

இருக்கலாம், இருக்கலாம்.. என்று சொல்லிக்கொண்டே, அணிந்திருந்த நைட்டி’யோடு காரை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு விரைந்தேன். நானும் துணைக்கு வருகிறேன், என்று, அவளும் என்னோடு தொற்றிக்கொண்டாள்.

அலுவலகம் சென்று சேர்ந்தவுடன், கார்ட் கேட்டான், `என்ன விஜி இந்த நேரத்தில்.. ?’ ஒரு முக்கியமான விஷயம். பர்ஸ் காணோம். உள்ளே நுழைய அனுமதி கொடு.. என் இடத்திற்குச்சென்று பார்த்துவிட்டு வருகிறேன். என்றேன். அவனும் கேட்’ஐ திறந்து உள்ளே நுழையவிட்டான்.

பர்ஸ் மேஜையின் கீழ் விழுந்துகிடந்தது. கிடைத்ததே போதுமென்று நினைத்துக்கொண்டு., வீடு வந்து சேந்தோம்

நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது, சாலை அமைதியாகவே இருந்தது. காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தால்...

மாமி தனியாக அலறிக்கொண்டிருந்தார்..

“விஜி..விஜி.. வந்திட்டியாம்மா.. என்னுடைய தங்கச்சங்கிலியைக் காணோம். யாரோ பிடுங்கிக்கொண்டார்கள். நாசமாப்போச்சு.. எனக்கு மூச்சுத்திணறல் வருகிறது. ஐய்யோ.ஐய்யோ.. ”

நல்லவேளை.. நான் கொஞ்சம் திடகாத்திரமான பெண்...!