புதன், மார்ச் 07, 2012

மெயில்

உனது பதிலுக்காக
காத்திருக்கும் போது
எனக்குக் கேள்வி
அனுப்பியவர்களை
பழிவாங்கினேன்

புனைவுப் பின்னணியில்.....

எழுதும் கதைகளை
நிஜமாக்க..
நிஜவாழ்கையே
புனைவுகளுக்கு
தாரைவார்க்கப்படுகிறதா?

கதை நிஜமா அல்லது
நடைமுறையில்
நடந்து விட்டதெல்லாம்
கற்பனையா?

ஒத்து ஊதுவதற்கு
ஆள் சேர்க்கப்படுகிறதா, அல்லது
ஓட்டி ஓட்டி விரட்டியடிப்பதற்கு
ஆள் சேர்கப்படுகிறதா?

எல்லாமும்
நாடகமாய்
நடைமுறையையும்
வேடமுமாய்..!!

கொஞ்சம் தீர்க்கப்பார்வை
தரிசித்து விட்டதால்
நானும் விலகிக்கொள்கிறேன்
சாதாரண வாசகியாய்...

திங்கள், மார்ச் 05, 2012

கொலை

புனையப்படும்
ஒவ்வொரு
மர்ம கதைகளிலும்
மர்ம நாவல்களிலும்........

ஒலிபரப்பப்படும்
ஒவ்வொரு
வானொலி தொலைக்காட்சி
மர்ம நாடகங்களிலும்.........

ஒரு வாசகனும்
ஒரு ரசிகனும்..!
கொலை செய்யப்படுகிறார்கள்.

சனி, மார்ச் 03, 2012

சில தற்கொலைகள்

சில சம்பவங்கள்
தூக்க மாத்திரையால்
என்னைச் சாகடிக்க
பார்த்துள்ளன

சில வார்த்தைகள்
தூக்குக் கயிறாய்
என்னை நோக்கிப்
பாய்ந்துள்ளன

சில நிகழ்வுகள்
பாதாளம் வரை
நுழைய வைத்து
உயிர் மாய்க்க
வைத்துள்ளன

தண்டவாளத்தின்
கனவில் கூட
நான் தலை வைத்துள்ளேன்
இரைச்சலான சத்தத்தில்
உறக்கம் கலைந்து
பெருமூச்சு விட்ட
இரயில் பயணம்

நல்ல கத்தரிக்காய்
எப்படி இருக்குமென
தெரியாத நிலையில்
என் கணவன் பிள்ளைகள்..

நல்ல வேளை
நான் இருக்கேன்..


(அதீதம் இணைய இதழில் வந்த எனது கவிதை)

வெள்ளி, மார்ச் 02, 2012

கடை சாப்பாடு

வெறும் புளியின் சார் - ரசமாம்
பருப்புக் கலவை, கொஞ்சம் மஞ்சளாக - சாம்பார் என்கிறார்கள்
கோழியின் காலகள் மிதக்கின்ற நீர் - கோழிக்குழம்பு
வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளிய
பெரிய பெரிய மீன் தலைகளின் கலவை - மீன்குழம்பு
குருவிக்கு உணவாக வைத்திருக்கும் அரிசியில் பொங்கிய - சோறு...
அதிலும் ஒரே ஒரு மயிர் இருந்து விட்டதால்
அருவருப்பாகி துக்கிப்போட்டுவிட்டு வந்துவிட்டேன்..
காலையில் கிண்டிய புளிசாதம் -
பஞ்சாமிர்தமாய் இன்னும் அதிக சுவையுடன்...

.?

எதற்குமே
விடைகொடுக்காமல்
கேள்வியாகவே
இருக்கின்றாய்
உன்னை நான்
தொடரவேண்டும் என்பதற்காக.?

உயிரின் ஓசை

ஒவ்வொரு முறையும்
விழுங்கப்படுகின்ற மாத்திரைகள்
தொண்டையத் தாண்டி
இதயத்தை வருடிச்செல்லும் போது
நம்பிக்கை ஜீவிக்கிறது
ஆயுளாய்