திங்கள், டிசம்பர் 26, 2011

கவிதைப்பூவின் விவாகரத்து


ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்.
குடும்ப வாழ்வு சந்தோசமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. இதற்குக் காரணம் அந்த மனைவி. அவள் மிகவும் நல்லவள். கலகலவென்று இருப்பவள், மேலும் அவளுக்குக் கணவனின் அந்தரங்கங்களை ஆராயும் புத்தி வந்ததில்லை. சந்தேகப்படுவதும் அவளின் சுபாவமல்ல. தனிமனித சுதந்திரம் பேணுபவள். அநாவசியமாக பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைப்பவளும் அல்ல.

கணவன் இதற்கு எதிர்மறையானவன், அமைதியாக இருக்கும் தமது மனைவி எதோ ஒரு கபட நாடகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் ஒரு நெருடல், சந்தேகம்.

தினமும் அவளை ஆராய்வதோடல்லாமல் எதாவதொரு சங்கடத்திற்கு உட்படுத்திவிடுவான்.

வெளியே எங்கேயாவது சென்று வந்தாள், தொலைபேசியை ஆராய்வான். கைப்பையை ஆராய்வான்.

ஒரு முறை கடைத்தெருப்பக்கம் போனபோது, போனில் ஒரு மிஸ்ட் கால் வந்தது, தங்கைதான் -  உடனே அழைக்க கைப்பேசியில்  போதிய தொகையில்லாத காரணத்தால், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பொதுத் தொலைப்பேசியில் தமது தங்கையை அழைத்தாள். யதார்த்தமாக அப்பக்கம் காரைச்செலுத்திய அவளின் கணவன் இதைக் கவனித்து விட்டான்.  அவளைக் கையும்களவுமாக (!) பிடித்து விட்டதாக நினைத்து, விவரத்தைப் பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்யத்துவங்கினான். வீட்டில் ஒரே ரகளை. மனைவிக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. அமைதியாக இந்த ஆர்ப்பாட்டத்தைக் கவனித்துக்கொண்டு, சிரிப்பதா அழுவதா என்று யோசித்த வண்ணமாக இருந்தாள்.

சந்தேகம் வந்தால் என்ன சொல்லி நியாயப்படுத்தினாலும் பிரியோஜனமில்லை என்பது தெரிந்த மனைவி அமைதியாயிருந்தாள்.

ஒரு முறை தோழி ஒருவள், வீட்டிற்கு தொலைப்பேசியின் மூலம் அழைத்திருந்தாள். அழைப்பை எடுத்த கணவன், அவளை தேவையில்லாமல் தாறுமாறாக திட்டித்தீர்த்து விட்டான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத மனைவிக்குக் கோபம்வரவே, அவனிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டு, தமது மன ஆதங்கத்தையெல்லாம் கொட்டித்தீர்த்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டு வீசினாள், பாத்திரங்களையெல்லாம் உடைத்து நாசமாக்கினாள், இஸ்தீரியா வந்தவள் போல்.!

விவாகரத்து செய்யப்போவதாகக் கூறி மிரட்டினாள். கொஞ்சம் கூட சுதந்திரமில்லாத இந்த வாழ்க்கை தமக்குத் தேவையேயில்லை என்கிற முடிவிற்கு வந்துவிட்டதாகச் சொல்லி அழுதுவடிந்தாள்.  இதைக்கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத கணவன் அரண்டுபோனான். (சுயகௌரவம் என்கிற பாசாங்குப்போர்வையில் வளர்க்கப்பட்டவன் கணவன், ஆக இதுபோன்ற விவாகரத்து விஷயங்களின் அவ்வளவு சுலபமாக சம்மதம் தெரிவித்துவிடுவான் என்பது நிறைவேறாத ஒன்றே.)

திட்டம் தீட்டப்பட்டது;  அன்பு, பாசம், தீராக்காதல், நேசம்,  என் உயிர் நீ என பொறாமைக்குணத்திற்கும் சந்தேகத்திற்கும் அரிதாரம் பூசப்பட்டது.

காலில் விழாத குறையாக, கட்டிப்பிடித்து முத்தமிட்டு அவளை வசப்படுத்தினான். செல்லமே மானே தேனே என்கிற அலங்கார வாசங்களால் வார்த்தைகளை நிரப்பி..

இரவிலும் சில ஊடல்கள், கோபப்படுவதைபோல் பேசி, சமாளிப்புக்கு வந்து, தாவித் தடவி, கவ்வி கலவியில் தான் முடிகிறது.

இதெல்லாம் பழகித்தான் போனது மனைவிக்கு. எவ்வளவுதான் கோபம் வந்தாலும்,  ஆண்கள் தமது சாமார்த்தியத்தையும் பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி மயக்குகிறபோது, பெண் என்பவள் இந்த இடத்தில் நிச்சயமாக மண்ணைக்கவ்வுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அன்பு என்கிற ஆயுதத்தைத் எங்கோ ஓர் இடத்தில் நுழைக்கின்ற போது அவள் கிறங்கித்தான் போகிறாள், மயங்கித்தான் போகிறாள்...

இந்த சம்பவத்திற்குப்பிறகு, அவனின் தொல்லைகளில் இருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருந்தாலும், அதுவும் சில காலம்தான் தாக்குப்பிடித்தது. மனைவி மகிழ்கிறாள் என்றால் அவனுக்குத் தேள் கொட்டியதைப் போல் ஆகிவிடுகிறது, அவனில்லாத இடங்களில் அவள் மகிழ்கிறாள் என்றால், அந்த மகிழ்ச்சி அவனுக்கு தீப்போல் சுடுகிறது.

மீண்டும் துளிர் விடுகிறது பொறாமைத்தீ.

பேஸ் புக், ப்ளாக், புத்தக வாசிப்பு, எழுத்துத்துறை என சில சுவாரஸ்யமான விஷயங்களின் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவள் மனைவி. வீட்டை விட்டு வெளியே சென்றால்தானே பிரச்சனை.! வீட்டிலேயே  தமக்குப் பிடித்தமானவற்றில் தமது பொழுதினைக்கழிக்க இவைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவளாய் மாற்றிக்கொண்டாள்.

பொறுக்குமா கணவனுக்கு..! என்ன இவள், எப்போதுமே உற்சாகமாகவே இருக்கின்றாள்..!

எதோ ஒரு கேள்விக்குறியோடு.. நெருடலாக மீண்டும் பூதக்கண்ணாடிக்கொண்டு ஆராய ஆரம்பித்தான் அவளை. செய்கிற எல்லாவற்றையும் எட்டியெட்டிப் பார்ப்பது, என்ன புத்தகம் வாசிக்கிறாள் என்பனவற்றையும், அப்புத்தகம் சொல்லும் அர்த்தமென்ன என்பதைப்பற்றியும் ஆராயத்துவங்குவான்? செக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தால், தொலைந்தாள் அவள்.. தேவையா அவளுக்குச் செக்ஸ் எண்ணம்? தாம் இருக்கும் போது செக்ஸ் சிந்தனை அவளிடம் நுழைந்தால், நிலைமை என்னாவது.? என்கிற ஈகோதான் கணவனுக்கு.

இது போன்ற சல்லையான தொல்லைகளைத்தவிர்க்க மனைவி தனிமையை நாடினாள்.  இரவு நேரங்களின் கணவன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்குவது சகஜம். கணவனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பது, செய்தி கேட்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள், சன் மூசிக் என தொலைக்காட்சியின் முன் அமர்ந்துகொள்வது பிடித்தமான ஒன்று.. அதுவும் அதனின் ஒலிகளை சத்தமாக வைத்துக் கொண்டு ரசிப்பதென்பது வழக்கமானதுதான்.

மனைவிக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. அவளின் உலகமென்பது தனி, பூக்களும் வாசமும் நிறைந்த அமைதியான நந்தவனம் அவளின் உலகம். தனிமையை சுவாசித்து சுவைப்பவள். வாழ்வே அவளுக்குத் தியானம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தமது தனிமையை அவள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டள்.

மாடியில், தமது கணினியுடன் தாம் விரும்பிக்கேட்கும் பாடல், பேஸ் புக் பகிர்வுகள், மொட்டை மாடி காற்று வாங்குதல், சில நல்ல நட்புகளுடன் அளவளாவி மகிழ்வது.. புத்தக வாசிப்பு, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது போன்ற செய்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டாள். இரவு நேரங்களில் தனிமையில் கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை மணி நேரம்வரை தொல்லைகளற்ற பொழுதினை இப்படிப் பயனான வழியிலே கழிக்கின்றாள். தொலைப்பேசி அழைப்புகளைக் கூட சட்டைசெய்வதில்லை இதுபோன்ற நேரங்களில்..

இரவில் கணவனோடு படுக்கைக்குச் செல்லுகையில் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு..அவனோடு அதுவும் அவன், அவனது அன்றாட நடவடிக்கைகளை முடித்துகொண்டு மேலே வரும் போதுதான், மனைவியும் தயார் நிலையில் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டியபடி. அவனின் வருகை தெரியும் அவளுக்கு.. டீவி அடைக்கப்பட்டு அமைதியாகும் போது.

கணவனுக்கு மீண்டும் சந்தேகம்.. (எப்போதும் வருவதுதானே!) இவள் என்ன செய்கிறாள் மேல் மாடியில், தான் கீழே டீவியில் நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது, இவள் என்னமோ செய்கிறாள், எதோ ஒரு காரியத்தில் மூழ்கி தன்னை முழுமையாக மறந்துவிடுவதாக எண்ணி, இவளை விடக்கூடாது என முடிவெடுத்து, ஒர் அரிய திட்டத்தைத் தீட்டுகிறான்.

வேலை முடிந்து வந்தவுடன் அவள் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்கிறான். 

ஆம், இதுதான் அந்தத் திட்டம், இன்னும் ஒரிரு நாட்களில், அறைக்கே ஹோம் தியட்டர் வரப்போகிறது. எல்லாமும் இனி மாடியிலேயே நிகழப்போகிறது. சாப்பிட்டுவது மட்டும்தான் கீழே.  மேலே வந்தால், அவ்வளவுதான், அப்படியே கட்டிலில் கிடந்தபடியே எல்லாமும் முடிவுறும்.

இதைக்கேட்ட மனவிக்குக் கவலை வந்துவிடுகிறது. தமது தனிமை பறிக்கபடுவதை நினைத்து வேதனை அடைகிறாள். தனிமை ஒரு தவம் அவளுக்கு. அது எப்போதும் கிடைக்காது, அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் அவளைச் சுற்றி ஆட்கள் இருப்பது, வாழ்வின் மேல் வெறுப்பு வந்துவிடுகிறது.

நிம்மதியாக அதை அனுபவிக்கின்ற தருணம் வீட்டில் வாய்த்தும், அதுவும் இப்படி பாதியிலேயே பறிபோவதை எண்ணி கலக்கம் கொள்கிறாள்.   தர்மசங்கடம்தானே.!? நாம் செய்வதையெல்லாம் யாராவது ஒருவர் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தால், என்ன செய்வது?  யாருக்கா நாம் பிறவி எடுத்துள்ளோம்? செய்த தியாகமெல்லாம் போதாதா? நாம் எப்போது வாழ்த்துவங்குவது? இது ஒரு தொடர்கதையானால் பிறவிப்பயன்தான் என்ன? மகன் ஆறு வயதுவரை தாய்ப்பால் குடித்தான், பதினேழு வயதுவரை அவளைக் கட்டிக்கொண்டு தூங்கினான்.. இப்போது அதற்கு அவசியமில்லாமல், அவனும் மீசை முளைத்த ஆம்பளையாக, ஆனால் மனைவிக்கு மட்டும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமாகவே...

விடிவே இல்லையா இதற்கு? யோசித்தாள் மனைவி. தமக்கு இந்த இரைச்சல் வாழ்க்கை வேண்டாமென்கிற முடிவில், அறையை மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டாள். பக்கத்து அறை, விருந்தினர் வந்து தங்குவதற்காக செய்யப்பட்ட அறை. அவ்வறையைத் தூய்மைப்படுத்தி, தமது எல்லாப்பொருட்களையும் ஆவனங்களையும் எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு மாற்றலாகிச் செல்ல தயாரானாள்.

இதுவும் விவாகரத்து மாதிரிதான்.

கணவனால் மனைவியை ஒன்றும் செய்ய முடியாது, அவள் எந்தத் தவறும் செய்யாதவரை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக