புதன், மே 02, 2012

மல்டி லென்ஸ்

சில நாட்களாகவே தீராத தலைவலி. கண் பார்வை பிரச்சனையோடு, பழைய மூக்குக்கண்ணாடியும் கோளாறாகிப்போனதால் தொடர் சோர்வு தலைவலி என துன்புற்றேன். முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்ள கண் நிபுணர்களிடம் சென்றேன்.

``தலைவலிக்கு எனது மூக்குக்கண்ணாடிதான் பிரச்சனையானது. அதை மாற்றினால் எல்லாம் சரியாகிவிடும். காரணம், ஒரே கண்ணாடியில் தூரம் மற்றும் கிட்டத்துப்பார்வைக்கான மூக்குக்கண்ணாடியை அணிவதென்பது எல்லோருக்கும் பொருந்தாத ஒன்று. மேலும் உனக்கு ஒரு கண் கிட்டப்பார்வையில் கோளாறு, ஒரு கண் தூரப்பார்வையில் கோளாறு. அப்படியிருக்கும்போது தூரம், கிட்டே என இரண்டுக்கும் உள்ள ஒரே மூக்குக்கண்ணாடியை அணிவது, பல பிரச்சனைகளைக் கொண்டுவரும். நீ கண்டிப்பாக தூரத்துப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும், கிட்டப்பார்வைக்கு ஒரு கண்ணாடியையும் தனித்தனியாக அணிந்துகொள்வதுதான் சிறப்பு. மேலும் உன்னுடைய பழைய பவர் அதே நிலையில் இல்லை. அது இப்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாகி இருக்கின்றது, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் மாற்றியாக வேண்டும்.’’ என்றார் கண் நிபுணர். தலைவலிக்கான காரணமும் தெரிந்துவிட்டது.

அவரின் அந்த முழு பரிசோதனைக்குப்பிறகு, அவர் கொடுத்த சீட்டை வாங்கிக்கொண்டு அங்கே மருத்துவமனையிலேயே இருக்கும் மூக்குக் கண்ணாடி தயாரிக்கும் கடையில் கண்ணாடி வாங்கச் செல்லவேண்டும்.

மூக்குக்கண்ணாடிகளை வெளியே செய்வதை விட, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு மருத்துவமனையிலேயே செய்துகொள்வதென்பது செலவு மிச்சம். நான் ஏற்கனவே ஆடர் செய்து வாங்கிய ஒரு கண்ணாடியின் விலை வெளியே ரிங்கிட் அறுநூறு, ஆனால் இங்கே அதில் பாதிதான் அதனின் விலை. அதுவும் multi code and multi focus lens தான்.

ஆடர் கொடுத்த கண்ணாடியை ஒரு வாரம் கழித்து வந்து எடுத்துக்கொள்ளச்சொன்னார்கள்.

ஒருவாரம் கழித்து, இன்று, அக்கண்ணாடியை எடுக்கச்சென்றிருந்தேன். நிறையை பேர் காத்திருந்தார்கள். இரண்டு இரண்டு பேராக வரச்சொல்லி, அவர்களிடம் மூக்குக் கண்ணாடிகளைப்பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார்கள், அக்கடையின் ஊழியர்கள். அவர்களும் மருத்துவமனை ஊழியர்களே. பயிற்சிப்பெற்ற தாதிகள்.(ஆண்கள்/பெண்கள்)

அவ்வரிசையில் நானும், என்னுடன் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவரும் உள்ளே சென்றோம். அவருக்கு ஒரு ஆள், எனக்கு ஒரு ஆள் என, கண்ணாடி ஃபிரெம்’களை தேர்ந்தெடுக்க உதவி செய்துகொண்டிருந்தார்கள் அங்குள்ள ஊழியர்கள். நேரமெடுத்து நம்மை கவனித்துக்கொண்டார்கள். ஜவுளிக் கடையில், புடவையை எடுத்துப்போடுவதைப்போல, கேட்கின்ற எல்லாக் கண்ணாடி ஃபிரெம்களையும் எடுத்துப் போட்டார்கள். நானும் ஒவ்வொன்றாக போட்டுப் போட்டு அழகு பார்த்து தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன்.  என்னுடன் உள்ள நுழைந்த அந்த அறுபது வயதுத்தக்க ஆடவரும் அதேபோல் தேர்ந்தெடுத்து அழகுபோட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். நானாவது பரவாயில்லை, தேர்தெடுத்து விட்டேன், ஆனால் அவர் செய்த கூத்து இருக்கே, இன்னமும் எனக்கு சிரிப்புத்தான்.

பலவிதமான கண்ணாடிகளை, அவர் கொஞ்சம் மாடர்ன் டைப் ஆள் போலிருக்கு, சும்மா அப்படித்தான் போட்டுப்போட்டு அழகு பார்த்துக்கொண்டிருந்தார். மூக்கில் மாட்டினார், நீண்ட கண்ணாடியின் முன் நின்று அழகு பார்த்தார், தலையை சாய்த்துப்பார்த்தார், முகத்தை கீழ் நோக்கிப்பார்த்தார், கண்களை மேல் நோக்கிப் பார்த்தார், கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு பார்த்தார், ஒரு கையில் தலை முடியைக் கோதியவாறு பார்த்தார். சிரித்துப்பார்த்தார், திருப்தியில்லை போலும் மீண்டும் மாற்றி மாற்றி `அதை எடு, இதை எடு’ என, ஃபிரெம்களை போட்டிருக்கின்ற சட்டைக்கு தோதாகவும் தேடினார்.வயது அறுபது இருக்கும் ஆனால் சும்மா டாப்ப்பா ஜிம்முன்னு அழகாக இளமையாகவே இருந்தார்.

இறுதியாக ஃபிரெம்லெஸ் கண்ணாடி, மல்டி கோட், மல்டி ஃபோகஸ் மற்றும் மல்டி லென்ஸ். என தேர்ந்தெடுத்தார். . மல்டி லென்ஸ் என்றால், வெளிச்சத்தில் வெயிலில் செல்லும் போது, கண்ணாடி தன்னாலே கருப்பு, நீலம், சிவப்பு போன்ற வர்ணங்களில் கூளிங்க் கிளாஸாக மாறி கண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்குகிற அதேவேளையில் ஒர் அழகான தோற்றத்தையும் தரவல்ல அற்புதமான மெஜிக் கண்ணாடி அது.

உள்ளபடியே சிறப்பான மூக்குக்கண்ணாடியின் ஃபிரெம்மை அவர் தேர்ந்தெடுத்திருந்தார். அதன் விலையைக் கேட்டவுடன், அவருக்கு மயக்கமே வந்து விட்டது.

`என்ன இவ்வளவு விலையா?, வெளியே இதனின் விலை அதிகம் என்பதால்தான் நான் இங்கே வந்தேன், இங்கேயும் இவ்வளவு விலையா?” விலையைக்கேட்டு விட்டு மிரண்டு போனார்.

மருத்துவமனை ஊழியர்கள், அவர் எடுத்துவைத்திருந்த அந்தக் கண்ணாடியின் தரம் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள். ``வேறு வேண்டுமானால் தருகிறோம் சார், கொஞ்சம் மலிவாக, ஆனால் இது முடியாது. நீங்கள் தேர்ந்தெடுத்த ஃபிரெம்மே அதிக விலையுள்ளது. விலையைக் குறைக்க முடியாது, அதனின் விலையே அவ்வளவுதான். நாங்கள் ஏற்கனவே அரசாங்க உத்தரவின்படி மலிவு விலையில் தான் விற்பனை செய்துகொண்டிருக்கின்றோம்,  இதில் ஏமாற்று வேலையெல்லாம் கிடையாது சார்’’ என்றார்கள்.

சுற்றும் முற்றும் பார்த்தார், என்னைப்பார்த்து ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்தார். நான் இன்னமும் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன், காரணம் என்னுடைய கண்ணாடியை ஃபிரெம்மிற்கு சரியான அளவில், வெட்டி நுழைக்க உள்ளே எடுத்துச்சென்று விட்டார்கள். கொஞ்ச நேரம் காத்திருக்கவேண்டிய தருணத்தில் இந்த காட்சிகள்.

இறுதியாக அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.. `` நான் ஏழை, எனக்கு வயது அறுபதிற்கு மேல், ரிட்டையர் ஆகிவிட்டேன், வருமானம் இல்லை, வயதானவர்களுக்கு பாதி கழிவு கொடுப்பார்களே, அது இந்த மூக்குக்கண்ணாடி விஷயத்தில் இல்லையா?” என்றார்.

கண்ணத்தில் கை வைத்து, தலையை ஒரு பக்கம் சாய்த்தவாறு, அப்பெண் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அதற்குள், என் கண்ணாடி தயாராகி வரவும், நான் வெளியே வந்து விட்டேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக