புதன், ஜூலை 04, 2012

வானொலி நாடகங்களும், நடக்கும் கூத்துகளும்

நம்ம ஊர் வானொலி நாடகங்களின் தரம் படு மோசமாகிக்கொண்டிருக்கிறன என்கிற புரிதல் நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கின்றது..!? ஒரு காலத்தில் தமிழர்களின் வீடுகளில் கலைக்கட்டிய இந்நாடகத்துறை இப்போது வலுவிழந்து காணப்படுவது வருத்தத்திற்குரிய ஒன்று என்பது பலரின் மனக்குமுறல். 

இலக்கியத்தில் அறவே பரிச்சயம் இல்லாதவர்கள் இத்துறையின் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்துகொண்டுநிலைமையை படுமோசமாக்கிக்கொண்டிருப்பது வெளியே ரசிகர்களான எங்களுக்குப் புரிந்திருக்கும் வேளையில், உள்ளே தமிழ் துறையில் தலைமை வகிப்பவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதுதான் இங்கே வியப்பு.!   

நாடகங்களை தயாரிக்கின்றார்களே, உலக அரங்கில் மிகபிரபலமாகப் பேசப்பட்ட நாடங்களை இவர்கள் பார்த்ததில்லை போலும். அல்லது எது நாடகமென்று சரிவர புரியவில்லைதான் போலும். ஷேக்ஸ்பியர் நாடகங்களை விடுங்கள், மௌலி, கே.பாலசந்தர், விசு, ஒய்.ஜி என இப்படிப் பலரின் சினிமா படங்கள் அனைத்தும் நாடகங்களே.! மக்களுக்கு அருமையான கருவைக் கொண்டுவரவில்லையா அந்நாடகங்கள்!இன்றுகூட திரையரங்குகளை அலங்கரிக்கும் அற்புதமான திரைப்படங்கள் அனைத்தும் நாடகங்களே. அதையும் எடுத்துக்கொள்ளலாமே துணையாக வழிகாட்டியாக.!

நம்முடைய நாடகங்கள் குறிப்பாக வானொலி நாடகங்கள் இன்னமும் அதன் கதைப்போக்கில் 1950திலேயே நின்றால் எப்படி? இன்றைய இளஞர்களின் கைகளிலே உலகம். உலகத்தை கைகளில் கைப்பேசியாக வைத்துக்கொண்டு உலவும் இளஞர்களுக்கு பாடமாக அமைகின்ற கதைகளுக்குப் பஞ்சமா என்ன?

இவர்களாகவே (வானொலி தயாரிப்பாளார்கள்) கதைத்தேர்வில் ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு, இதுதான், இப்படித்தான் நாடகம் இருக்கவேண்டுமென்கிற வரையறையை முதலில் தகர்த்தெறிந்து விசாலமாக பார்வைக்குள் வந்துவிடவேண்டும். சொல்லப்படும் கதைகள் தற்போதைய நாட்டு நிலவரத்தில் எம்மாதிரியான பங்குதனை வகிக்கின்றது என்பதனை ஆராயும் கதைக்குழு நமது வனொலியில் இருக்கின்றதா? அதற்காக புரிதல்தான் நமது வானொலி தயாரிப்பாளருக்கு இருக்கின்றதா?

ஒரிரு நாடகத்தில் நானும் பங்கேற்று அங்கே அரங்கேறும் நிகழ்வுகளைக் கண்காணித்தவள்  என்பதால்தான், இதை நான் இங்கே சொல்ல வருகிறேன். அதாவது, நாடகங்களை நல்ல முறையில் நடத்தப்பட வேண்டுமென்கிற அக்கறையில், நல்ல கதைகளைக்கொண்ட நாடங்களைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விடுகிறார் தயாரிப்பாளர். வசனத்தில் சரியாக உச்சரிகவில்லை, பேசும்போது ஒலிகளை சரியாக ஒலிக்கவும். வசனத்தில் ஏற்ற இறக்கங்கள் அவசியம், அழும்போது கையில் இருக்கும் காகிதத்தைப் பார்க்கவேண்டாம், இது சரியில்லை.. அது சரியில்லை என நடிப்பவர்களை நடுங்கச் செய்வதில் வல்லவரான தயாரிப்பாளார், ஒன்றுமேயில்லாத கதைகளை மட்டும் எப்படி கட்டிக்கொண்டு அழுகிறார் என்பதுதான் இங்கே வினா.!

அடுத்த வினா உடனே வரும் சிலருக்கு.. ஏன் நம்ம தயாரிப்பாளருக்குக்குட வரலாம்.! நீ இவ்வளவு பேசுகிறாயே, உன்னால் ஒரு நாடகம் எழுத முடியுமா? என்னங்க அந்நியாயம் இது? இறந்தால்தான் இறப்பைப்பற்றி பேசமுடியுமென்றால், ஒருவரும் மரணம் குறித்து மூச்சு விட முடியாது தானே!? ஒரு ரசிகர் என்கிற பார்வையில் நமது கருத்துக்களைச் சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லையா? எழுதுகிறவர்கள்தான் கருத்து சொல்லவேண்டுமென்றல், தங்களின் வட்டத்தில் உள்ள அந்த பத்து பதினைந்து எழுத்தாளர்கள் மட்டுமே கருத்தைச் சொல்வதற்கு தகுதியானவர்கள் ஆகிறார்கள். அப்படிப்பார்த்தோமென்றால், அவர்கள் தைரியமாகத் தமது கருத்துதனைச் சொல்லுவார்களா என்ன? பணம் வாங்கிக்கொண்டு விசுவாசமில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்கிற அவச்சொல் அவர்களுக்கு வந்துவிடாதா, உங்களால்?!  

சரி அதை விடுங்க, என்னால் ஒரு நாடகத்தை எழுதித்தர முடியுமா என்றால்.....முடியாதுஏனென்றால் பணம் கொடுக்கின்றார்கள் என்பதற்காக, கற்பனையை மழுக்கடிக்கின்ற வேலைகளில் நான் ஈடுபடவே மாட்டேன். எனக்கென்று சுதந்திர எழுத்துச்சூழல் கைவசம் இருக்கின்றபோது, யாரோ ஒருவர் வகுத்துவிட்ட சட்ட விதிமுறை என்கிற வட்டத்திற்குள் பணத்திற்காக சோரம் போகும் செய்கையை ஒரு நல்ல எழுத்தாளன்  செய்யவேமாட்டான், நான் மட்டும் என்ன விதிவிலக்கா!. உங்களின் விதிமுறை கெடுபிடிக்கெல்லாம் கதைகள் எழுதினால், கற்பனை என்கிற குப்பைகளைக் கட்டிக்கொண்டு கழுதைபோல் பொதிசுமக்கவேண்டி வரும். அல்லது எதாவது ஒரு சினிமா அல்லது சீரியல் கதைகளை திருடி (வாழ்வே மாயம் திரைப்பட கதையைப் போல்) அதை அங்கேயும் இங்கேயும் கொஞ்சம் மாற்றி, நமது பெயரைப் போட்டுக்கொண்டு வானொலிக்கு அனுப்பி விடவேண்டியதுதான். தயாரிப்பாளர் என்ன கண்டு பிடிக்கவாப் போகிறார்.! (கேட்பவர்கள் எல்லோரும் கேணயர்கள் என்கிற நினைப்புதான்.) இது போன்ற அசிங்கமான வேலைகளையெல்லாம் நான் செய்ய மாட்டேன். இதற்கு அப்பார்பட்ட கதைகளை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் அங்குள்ளவர்களுக்கு இல்லை. மெனகட்டு எழுதினாலும், நம் சக்திதானே விரையம். தேவையா? அதுவும் அடுத்து யாருடைய கதை நாடக வடிவம் கொடுக்கப்படவேண்டும்! யாரெல்லாம் அதில் நடிக்கலாம், பணம் யாருக்கெல்லாம் பகிர்ந்தளிக்கப்படும் என்கிற நியதியெல்லாம் ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதுதானே.! இதில் நான் நுழைந்து என்ன கிழிக்கப்போகிறேன்.!?

எல்லா கதைகளையும் நான் குறை சொல்லவில்லை. சில நல்ல நாடகங்களும் அரங்கேறிய வண்ணமாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் பெரும்பாலும் குப்பைகளே. அடுத்த வினாவும் வரலாம், `நல்ல கதைகளுக்குக் காத்திருந்தால், கதைகள்/நாடகங்கள் வராது. வாரந்தோரும் வெளிவரும் நாடகங்கள் முற்றாக நிறுத்தப்படும் நிலை வரலாம். இது அபத்தமில்லையா?’  என்னங்க இது கூத்து? உங்கள் கைகளில் அதிகாரம் இருக்கின்றதுதகுந்த சன்மானம்வேறு வழங்குகிறீர்கள், என்னவேண்டுமானலும் செய்து இந்ததுறையை மேல் நிலைக்குக்கொண்டு வரமுடியாதா என்ன? கெடுபிடிகளை அதிகப்படுத்தினால், தற்போது எழுதிக்கொண்டிருக்கும் அதே எழுத்தாளர்கள் கூட நல்ல முறையில் தமது எழுத்துக்களை மெருகேற்றிக் கொண்டு வருவதற்கு முயல்வார்கள்தானே!? கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, அற்பத்தனமான காரண்ங்கள் முகஞ்சுழிக்க வைக்கின்றன பலவேளைகளில்.

இறுதியாக ஒரே ஒரு கேள்வி.. நிறைய பணவிரையம் செய்து, குறுநாடகப்போட்டி, சிறந்த நடிகர்/நடிகைகள் தேர்வுப்போட்டி, எழுத்தாளர் சங்கத்துடன் நடத்தி நாடுதழுவிய நிலையிலான பல போட்டிகள் என நடைப்பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் நிலை என்ன? வானொலி நாடகத்துறை அவரகளை வரவேற்கிறதா?

(நீண்ட நாட்களுக்குப்பிறகு, இன்று நான் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய ஓர் கடிதம்.. வந்தால் என்ன வராவிட்டால் என்ன.! )

16 கருத்துகள்:

  1. வானொலி நாடகங்கள் கேட்பவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதாக எண்ணுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சகோ.. இருப்பினும் மக்கள் பணம் இப்படி இலக்கியம் என்கிற பெயரில் விரையமாவதை பொறுக்க முடியவில்லை. நிலைமை படு மோசமாகிக்கொண்டிருக்கிறது

      நீக்கு
  2. இறந்தால்தான் இறப்பை பற்றிக்கூற முடியுமென்றால் ஒருவரும் இறப்பினைப்பற்றிப்பேச முடியாது. உங்களின் ஆதங்கம் புரிகிறது. தயாரிப்பாளருக்கல்லவா புரியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7/08/2012

    ’வந்தால் என்ன வரா விட்டால் என்ன’ சுப்பர். அதனால தான் போட்டாங்க போல. இனி நானும் உங்கலபோல தான் சொல்லனும். எவ்வளவே எழுதினேன். போடல பா.

    பதிலளிநீக்கு
  4. நன்றி வேணு.. வேணுகோபல் ஈப்போ.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் இந்த தைரியமான கருத்தை நானும் வரவேற்கிறேன்.யாரையும் மதிக்காத ஒரு தயாரிப்பாளர் நமக்குத்தேவையில்லை.
    @ குகன் - கிள்ளான்.

    பதிலளிநீக்கு
  6. @ஜீவன் ராவ் - சுங்கைப்பட்டானி கேடா

    இலக்கியப்பரிச்சியமே இல்லாத ஒரு ஆள்// உண்மை விஜி. மனம் குளிர்ந்தேன் உங்களின் இந்த கடிதம் பத்திரிகையில் கண்டு.
    தோட்டத்தில் ``ஆயாக்கொட்டகையில்’’ வேலை செய்பவர்கள் எல்லாம், பெரிய பெரிய ஜாம்பவான்கள் உட்கார்ந்த இடத்தில் உகார்ந்துக்கொண்டு, எல்லாவற்றையும் நாசம் செய்கிறார்கள். (சில விஷயங்களை நீக்கி விட்டேன்)

    பதிலளிநீக்கு
  7. கோபால்- தாமான் செந்தோசா.
    என் மனதில் உள்ள அனைத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள் விஜி

    பதிலளிநீக்கு
  8. சிம்பு ராம் - பூச்சோங்
    இன்று நண்பன் பத்திரிகையில், அந்த தயாரிப்பாளரைப் பற்றி போற்றி புகழ்ந்துள்ளார்கள்.
    அவ்வளவும் டிராமா. அவரே ஆட்களைத் தயார் செய்து எழுதிப்போட்டது.
    அடுத்த வாரம் அந்த பத்திரிகையில் எழுதி போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. வீரா - ஜொகூர்

    தைரியமான ஒரு கடிதம். நானும் இதைப்பற்றி ஒரு கடிதம் எழுதினேன் வரவேயில்லை. இந்த பொம்பளைங்க பதவியில் இருந்தா இப்படித்தான் திமிர் பண்ணுவாளுங்க. அண்மையில் ஒரு பள்ளிக்குப்போயிருந்தேன், தலைமை ஆசிரியை பெண்..என்னா பேச்சு பேசறாங்க. வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
  10. குணா - தாமான் ரின்திங்

    நீண்ட நாள் கழித்து ஒரு கட்டுரை. அற்புதம்

    பதிலளிநீக்கு
  11. ராஜன் - தலைநகர்

    அருமையான கட்டுரை

    பதிலளிநீக்கு
  12. ஊர் பெயர் தெரியாத ஒருவர்

    எவ்வளவு வாய்ப்பு கொடுத்தார்கள் உனக்கு. நன்றி கெட்டவளே. நடிக்கவேதெரியாத உனக்கு பணம் கொடுத்து நடிக்கவைத்தார்கள், அது பண விரயம் இல்லையா? (சில விவரங்கள், நீக்கிவிட்டேன்)

    பதிலளிநீக்கு
  13. தயாரிப்பாளர்..

    எனக்கு நீங்கள் செய்த இந்த கைம்மாற்றை, என் உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. இன்று எனக்கு வந்த எஸ்.எம்.எஸ்’கள் தான் இவை. நான் எதையும் இட்டுக்கட்டி சொல்லமாட்டேன்.
    மனசாட்சிக்கு நேர்மையானவள். யாரையும் ஏமாற்ற மாட்டேன்.
    தயாரிப்பாளர் தொடர்ந்தால், சில விவரங்களை மீண்டும் எழுதுவேன். யாருக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? எங்களின் வரிப்பணம் இலக்கியம் என்கிற பெயரில் மோசடி செய்கிறார்கள். அதை எழுதுவேன்.

    பதிலளிநீக்கு