வியாழன், நவம்பர் 22, 2012

சாருவை சந்தித்தேன்....


நவம்பர் 20ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, மலாயா பல்கலைக்கழகத்தில், தம்பி தயாஜி மற்றும் நவீன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஓர் அற்புத இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்கிற வாய்ப்பு கிட்டியது.  அங்கே தமிழ் நாட்டு பிரபல எழுத்தாளர் சாரு அவர்களைச் சந்தித்தேன். நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

எழுதவேண்டுமென்று நினைத்திருந்தால் குறிப்பு எடுத்து வைத்துக்கொண்டு, சாரு மேற்கோள் காட்டிய எழுத்தாளர்கள் இலக்கியப்பகிர்வுகள் என அக்கு அக்காக எழுதிப் பகிரலாம்!. நான் நிகழ்காலத்தில் வாழ நினைப்பதால், அவரின் பேச்சுகளில் முழுமையாக ஒன்றிவிட எண்ணி, குறிப்புகளில் அக்கறை செலுத்தவில்லை. குறிப்புகள் என்னை தடுமாற்றத்தில் ஆழ்த்தும். குறிப்பு எடுப்பதால் பேச்சுகளில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடுமென்பதால் பெரும்பாலும் நான் குறிப்பு எடுப்பதை தவிர்த்து விடுவேன். நான், என் கன்னத்தில் கை வைத்துக் கேட்டுவிட்டு எழுதியதை, மாங்கு மாங்கு என்று குறிப்பு எடுத்து எழுதுபவர்கள் கூட பகிரமாட்டார்கள்.  என்ன, அவர்களிடம், சொற்பொழிவாளரின் பேச்சுகளின் போது பகிரப்பட்ட பெயர், ஊர், கதைகளின் தலைப்பு, இடப்பெற்ற சூழல் என அப்படியே ஈ அடிச்சான் காப்பி போல் வரும். என்னுடைய பகிர்வில் நான் உள்வாங்கிக்கொண்டது மட்டுமே வெளிப்படும்.

இருப்பினும், என் தம்பிகளான நவீன் மற்றும் தயாஜி இருவரும் சாரு அவர்களின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள் என்பதை நானறிவேன். அவர்களிடமிருந்து விலாவரியான தகவல்கள் வரலாம்.! ஆக, என்னுடைய இப்பகிர்வு மிக மேலோட்டமாகவே இருக்கும். அங்கே நிகழ்ந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். நான் கலந்துக்கொண்ட இலக்கிய நிகழ்வுகளில் சாருவை நேரில் சந்தித்ததை மிக அற்புதத் தருணமாகவே கருதுகிறேன்.

பெரிய ஆள் சாரு. நிறைய விஷயங்கள் அவரிடம் கொட்டிக்கிடக்கின்றன. நடமாடும் நூல்நிலையமாகவே திகழ்கின்றார். வாழ்க்கையையே வாசிப்பிற்கும் எழுத்திற்கும் அர்ப்பணித்தவர்.  இலக்கியத்தின் மேல் அலாதி பிரியம் கொண்டவர். பேச்சில் வசீகரிக்கின்றார். அறவே இலக்கியப்பரிச்சயம் இல்லாதவர்களையும் இலக்கியத்தின் பால் இழுக்கக்கூடிய ஆற்றல் அவரின் பேச்சிற்கு உண்டு. ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உரையாடுவதைப்போல் மிக எளிமையாக கலந்துரையாடினார் எங்களோடு.

அதிக அலட்டல் இல்லாமல் மிக மிக எளிமையாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடைப்பெற்ற நிகழ்வு அது.  இலக்கிய ஆர்வலர்கள் ஏறக்குறைய ஐம்பது அல்லது அறுபது பேர் வருகை புரிந்திருப்பார்கள் என்பது என் கணிப்பு. அதிக விளம்பரம் இல்லாத, எளிய இலக்கிய நிகழ்விற்கு இந்த வருகையாளர் கூட்டம் பெரிய சாதனைதான். அதுவும் தயாஜியின் `புத்தகச்சிறகுகள் வாசிப்பாளர்கள் குழு’ என்கிற வட்டத்தின் கீழ் நடத்திய முதல் நிகழ்வு இது.  முதல் முயற்சியே இவ்வளவு சிறப்பாக நடைபெற்றதே பெரிய வெற்றிதான்.

தொடர்ந்து அவரை வாசித்து (இணையப்பக்கம் மற்றும் அவரின் எட்டு புத்தகங்கள்) வருவதால், சாரு அவர்களின் எழுத்தில் இருக்கின்ற வீரம், கோபம், குளறுபடி, வெறுப்பு, நகைச்சுவை, கிண்டல் கேலி, உள்குத்து விவகாரம், மறைமுக தாக்குதல்கள் எல்லாம் பேச்சில் இல்லை. பேச்சு ஆன்மிகவாதியைப்போல் சாந்தமாகவே இருந்தது. கேள்விகள் கேட்கப்படும் போது, முக பாவனைகள் மாறுகின்றனவா.? என்பதனை கூர்ந்து கவனித்தேன். இல்லை, தெளிவாக அமைதியாகவே பதிலளித்தார். கோபத்தை உண்டு பண்ணுகிற கேள்விகள் கூட கேட்கப்பட்டன. நிதானமாகவே பதில்கள் வந்தன. உதாரணத்திற்கு ; `பிரபலங்களை வசை பாடுவதால் நீங்கள் பிரபலமடையலாம் என்கிற எண்ணத்திலேயே உங்களின் செயல்பாடுகள் இருப்பதைப் பற்றிய தோற்றம் உருவாகியிருக்கின்றதே, அதற்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்? நித்யானந்தா நல்லவரா கெட்டவரா? (நாயகன் பாணியில்). எனக்கு வாசிக்க நேரமேயிருப்பதில்லை, அப்படியே வாசிக்க விருப்பம் வந்தால், என்ன மாதிரியான புத்தகங்களை நான் வாசிக்கலாம்.? பெண் இலக்கியவாதிகளின் படைப்புகள் எப்படி இருக்கவேண்டும்? உங்களின் எழுத்துகளில் வரும் நிகழ்வுகளில் நீங்களே சம்பந்தப்பட்டிருக்கின்றீர்களா? உங்களுக்குப்பிடித்த மலேசிய படைப்பாளி யார்? (இந்த கேள்விக்கு எங்களாலேயே பதில் சொல்ல முடியாது). ரஜினியை ஏன் உங்களுக்குப்பிடிக்கவில்லை? பெரும்பாலும் செக்ஸ் அடிப்படையிலான கதைகளை நீங்கள் எழுத என்ன காரணம்? அங்காடித்தெரு மற்றும் வழக்கு எண் திரைப்படங்களை ஏன் மிக மோசமாக விமர்சித்தீர்கள்? போன்ற கேள்விகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இருப்பினும் அவரின் பதில்கள் அனைத்தும் நிறைகுடமாய் நிதானமாகவே வந்தது. எல்லாவற்றிற்கும் உதாரணக்கதைகள் வேறு சொல்லப்பட்டன. அவை அங்கே வருகை புரிந்திருந்த வாசக எழுத்தாளர்களுக்கு நல்ல தீனியாய் அமைந்தது என்றே சொல்லலாம்.    

உலக இலக்கியவாதிகளின் கதைகளைப் பற்றிப்பேசினார். அவர்களைப்பற்றிய அறிமுகத்தை வழங்கினார். தமிழ் இலக்கியம், சீனாவில் பிரபலமாகப்பேசப்பட்ட நாவல் , பிரெஞ்சு கதைகள் ஆங்கில நாவல்கள், ரஷ்ய இலக்கியம், உலக சினிமா, தமிழ் சினிமா என பல சுவாரஸ்யமான விஷயங்களைத்தொட்டு மிகத் தெளிவாக விளக்கமளித்தார்.

எங்களின் நாட்டு நிலவரத்தைப் பற்றிய ஓர் உண்மையை ஒரே நாளில் கண்டு கொண்டு, போட்டு உடைத்தார். அதாவது, எங்களிடம் தாய் மொழியான தமிழ் உள்ளது, தேசிய மொழியான மலாய் உள்ளது, படித்தவர்களாகத்திகழ்கிறோம் ஆனாலும் பெரும்பாலானோருக்கு ஆங்கில அறிவு மிக மிக கம்மியே.. இது ஒரு ஊனம்.  ஆங்கிலம் தெரியாமல் இருப்பது பெரிய இழப்பு. என்றார். நிஜமான குற்றச்சாட்டுதான் இது. இங்கே ஆங்கிலத்தில் சரியான தேர்ச்சியைப் பெறாமல் சுமாராக தேரியிருந்தாலே போதுமானது, தொடர்ந்து வாய்ப்புகள் வரும், பல்கலைக்கழகமும் செல்லலாம் ஆனால் மலாய்மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை என்றால், நம்முடைய சான்றிதழ் குப்பைக்குப்போகும். அதற்காகவே மலாய்மொழியில் தீவிர கவனம் செலுத்திப்பயின்று ஆங்கிலத்தைப் புறக்கணித்து விட்டோம் என்பதனை ஏற்றுக்கொள்ளலாம். இந்த குறை எங்களுக்கும் தெரிவதால், இப்போதுதான் ஆங்கிலத்தைக் கற்று வருகிறோம், சொந்த முயற்சியில். நாங்கள் பள்ளியில் படிக்கின்ற காலகட்டத்தில் நிலைமை படு மோசமாக இருந்தது. ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை என்கிற அலட்சியப்போக்கு அதிகமாகவே காணப்பட்டது. தற்போதைய நிலைமை மாறியிருக்கலாம். ! இருப்பினும் ஆங்கிலம் தெரியாத எங்களின் இளமைக்காலம் பாழ்தானே. !? நிஜமாலுமே பெரிய இழப்புதான். இது விழிப்புணர்வைக் கொடுக்கக்கூடிய பார்வையே. நன்றி சாரு.

இங்கே சீன உணவகத்தில் ஒரு அற்புதமான உணவைச் சுவைத்ததாகச் சொன்னார். அந்த உணவைப்பற்றி எழுதப்போவதாகவும் சொல்லி பீடிகை போட்டார். என்ன உணவாக இருக்குமென்று நானும் மிக ஆவலாய் காத்திருந்தேன்.!  உரித்து உரிந்து சாப்பிடுவார்கள் என்றவுடன், தவளை மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிச்சொல்கிறாரா, என்று யோசித்தால், `பவ்’ என்றார். என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. `பவ்’ உரித்து சாப்பிடுவதல்ல, அதை அப்படியே சாப்பிடலாம். உடன் இருப்பவர் யாரோ உரித்துச் சாப்பிட்டு விட்டார்கள் போலும்.. உரித்துச் சாப்பிட அது என்ன வாழைப்பழமா? சரி அந்த உணவைப் பற்றி அவர் எழுதுவார். அங்கேயே படித்துக்கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கி வேலையைச் செய்யமாட்டேன். சாரு இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்வார்.  

தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்படும் புத்தகங்கள் இங்கே ஒரு மடங்கு, இரு மடங்கு அல்ல, நான்கு ஐந்து மடங்கு கூடுதல் விலையில் விற்கப்படுகின்றன. இதைப்பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது. விகடன் குமுதம் அங்கே என்ன விலை? இங்கே என்ன விலை? அதுபோல்தான், அங்குள்ள ரூபாய் விலையை இங்கே அதே போல் பின்பற்றலாகாது, அதிக விலை கொடுத்து வாங்கித்தான் ஆகவேண்டும். நிலைமை அங்கு வேறு இங்கு வேறு,என்றார். இருந்தபோதிலும் நான் வாங்கவில்லை. வருடத்திற்கு ஒரு முறையாவது தமிழ் நாடு சென்றுவருவதால், அங்கேயே எனக்குத் தேவையான அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிக்கொள்வேன்.  இருப்பினும், சாருவின் கையொப்பம் வேண்டி, அங்கே விற்கப்பட்ட அவரின் `தேகம்’ நாவலை வாங்கி, அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன்.

சந்திப்பில் என்னை பெயர் சொல்லியே அழைத்தார். முதலில் அடையாளங்காணவில்லை, பிறகு அறிமுகமானவுடன், பல நாள் பழகியதுபோல் மிக மரியாதையுடன் நட்பு பாராட்டினார். அருகில் அமரவைத்தார். நிறைய புகைப்படங்களை எடுக்க ஒத்துழைப்பு நல்கினார்.

கணவரையும் உடன் அழைத்துச்சென்றேன். பெரிய எழுத்தாளரெல்லாம் தமது மனைவியிடம் நட்பு பாராட்டுகிறார்கள் என நினைத்து கொஞ்சம் அரண்டுத்தான் போனார். வீட்டிற்கு வந்ததிலிருந்து சாருவின் புராணம் ஓயவில்லை. சாருவை பெரிய இலக்கிய ஜாம்பவான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது அவரைப் பற்றிய தேடல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார். சாருவைப் பற்றிய தகவல்களை இணையத்தில் ஆராயத்துவங்கியுள்ளார். இணையத்தில்தான் தெரியாதா? நல்லனவைகளோடு மோசமானவைகள்தான் தங்கம்போல் மின்னும்.. அநேகமாக எதிர்மறை சிந்தனையையே பிடித்துக்கொள்வார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை காரணம் அவருக்கும் வதந்திகள் என்றால் அல்வா சாப்பிடுவதைப்போல்தான். மிகவும் விருப்பமான ஒன்று.

வாசித்து ஒரு எழுத்தாளரைப் புரிந்துகொள்வதை விடுத்து, வதந்திகளைப் பிடித்துக்கொண்டு நல்ல எழுத்தாளரைப் புறக்கணிக்க நினைப்பவர்களை நாம் ஒண்ணும் செய்யமுடியாது. அது கணவனாகட்டும், சகோதரிகளாகட்டும், நண்பர்களாகட்டும்..! எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.




புதன், நவம்பர் 21, 2012

பிறந்தநாள் பரிசு

ஒரு வருடம்
புடவை

ஒரு வருடம்
ஐம்பொன் தங்கத்தில் சிறிய தோடு

ஒரு வருடம்
வளையல்

ஒரு வருடம்
கால் கொலுசு

ஒரு வருடம்
விநாயகர் படம்

ஒரு வருடம்
குட்டி முருகன் சிலை

ஒரு வருடம்
சுடிதார்

ஒரு வருடம்
மேஜை விரிப்பு

ஒரு வருடம்
முகக் கிரீம்

ஒரு வருடம்
உடம்புப்பிடி வைத்தியம்

ஒரு வருடம்
சிக்ரட் ரெஸிப்பி கேக்

ஒரு வருடம்
அதிசயமாக அலுவலகம் வந்த பூங்கொத்து

ஒரு வருடம்
கேண்டல் லைட் டின்னர்

ஒரு வருடம்
ஆங்கில சினிமா

ஒரு வருடம்
செக்ஸ் வர்க் ஸ்பெர் பார்ட்

பதினைந்து வருடங்கள்
வருடா வருடம் நீ எனக்களித்த பரிசுகளை
பன்னிரண்டு வருடமாக அசைப்போட்டு
கண்ணீர் விடுகிறேன்
உன்னைப்பிரிந்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது
இன்றும் நிச்சயமாக
எனக்காக ஒரு புதிய பரிசினை வாங்கி
வைத்துக்கொண்டு
கண் கலங்க முணகிக்கொண்டிருப்பாய்
பிறந்தநாள் வாழ்த்துகள் விஜி என்று..
  

செவ்வாய், நவம்பர் 20, 2012

ஆண்டு விடுமுறை அர்ப்பணிப்பு

இருபத்திரண்டு நாடுகளைக்கொண்டு ஆய்வு மேற்கொண்டதில், எங்களின் நாடான மலேசியா, வேலைக்குச் செல்லும் பணியாட்கள் வேலையே கதியாகக் (Workaholic) கிடக்கின்றார்கள் என்கிற பட்டியலில் நான்காவது இடத்தை வெற்றிகரமாகப் பிடித்துள்ளது.

உலக நாடுகளை வைத்துப்பார்க்கையில், மலேசியாவில்தான் பணியாளர்களுக்கு ஆண்டு விடுமுறைகள் (ANNUAL LEAVES) மிக மிக கம்மியாம். (இந்த தகவல் இப்போதுதான் எனக்கே தெரியவந்தது). மற்ற நாடுகளில் இருபத்திநான்கு முப்பத்திரண்டு என்று அதிகரித்துக்கொண்டே போகும்  பட்சத்தில் மலேசியாவில் மட்டும்தான் இன்னமும் சராசரி நிலையில் பதினான்கு நாட்கள் ஆண்டு விடுமுறைகள் கொடுக்கப்படுகிறன என்கிற உண்மையையும் அந்த ஆய்வு தாங்கி வந்திருந்தது.

இருந்தபோதிலும், அந்த பதினான்கு நாட்களையும் முழுமையாக எடுத்து முடிக்க முடியாமல், தொண்ணூறு விழுக்காடு பணியாளர்கள் வேலையிடமே கதியாகக்கிடக்கின்றார்கள் என்கிற சுவாரிஸ்யமும் அதிர்ச்சியும் கூடிய தகவலும் அதில் இடம் பெற்றுள்ளது.

இங்குள்ள தொழிலாளர்களின் மத்தியில் பதினைந்து விழுக்காட்டினர்களுக்கு, தாம் விடுப்பு எடுத்துக்கொள்வதால் மேலதிகாரிகள் மற்றும் சக தொழிலாளர்கள் தம்மீது எதிர்மறை சிந்தனைகளைக் கொண்டுவிடுவார்கள் என்கிற பய உணர்வில் அல்லல்பட்டு முடிந்தவரையில் வேலைக்கு விடுப்பே எடுக்காமல், தினமும் அலுவலகத்திற்குச் சென்றுவிடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு சொல்கிறது. இதனாலேயே நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்து வருகிறார்களாம் மலேசியர்கள்.

இதில் இன்னொரு சிக்கலும் மறைமுகமாக உள்ளது. அதாவது போட்டிகள் மலிந்த சூழலில், வேலை கிடைப்பதே பெரும் பாடாக இருக்கும் பட்சத்தில், கிடைத்த வேலையை தக்கவைத்துக்கொள்ளவும், தற்காத்துக்கொள்ளவும்,  தொடர் பதவி உயர்வு, சம்பள உயர்வு, அலவன்ஸ் போன்றவைகள் தங்குதடையில்லாமல் கிடைக்கவேண்டுமென்பதற்காகவும் ஓய்வு உளைச்சல் இல்லாமல் வேலை இடங்களுக்கு தொடர்ந்து விஜயம் செய்து விடுகின்றார்கள் பணியாட்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மைதான்.

வருட விடுமுறைகளை முடிக்க முடிக்காமல், ஆண்டு இறுதி வரை வேலை செய்து, அந்த விடுமுறைகளை நிறுவனங்களுக்கே தானமாக (!)அர்பணிக்கின்ற அரிய வேலையை நானும் செய்துள்ளேன்.

இதில் உள்ள உளவியலை ஆராய்ந்தால், வேலைக்கு விடுப்பு எடுக்கின்ற சமயத்தில், நிச்சயமாக நமது வேலைகளை வேறொருவர் செய்கிற நிலை வரும், அப்போது, சம்பந்தப்பட்ட அந்த தற்காலிக ஊழியர், நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள குறைகள் குளறுபடிகள் போன்றவற்றைக் களைந்து, வேலையை இன்னும் மெருகேற்றி சிறப்பாகச் செய்து காட்டிவிட்டால், என்னாவது நம் பிழைப்பு? இப்படிச் செய்துகாட்டித்தான் முன்பு நான் வேலை செய்த ஒரு பெரிய நிறுவனத்தில், குமாஸ்தா பணியில் இருந்து அலுவலக அட்மின் அஸிஸ்டண்ட் பதவிக்கு பதவி உயர்வு பெற்றேன்.

என்னுடைய சீனியர், சவுதி அரபியாவிற்கு, ஒரு மாதகால ஆன்மிக பயணம் சென்றுவிட்டாள். நான் அவளுக்குக்கீழ் பணிசெய்த குமாஸ்தா. அவள் சென்றவுடன் அவளின் வேலைகள் அனைத்தும் என் பார்வைக்கு வந்து விட்டன. அப்போது நான் துடிப்புமிக்க வேகமான பணியாள். போட்டி உலகத்தில் என்னை நான் தக்க வைத்துக்கொள்ள எவ்வளவு விரைவாக வேலைகளைச் செய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக, முறையாக அட்டவணையிட்டு, அன்றைய வேலைகளை அன்றே முடித்து, அதன் அறிக்கைகளை அதிகாரிகளின் மேஜையில் அன்றைய பொழுதிலேயே வைத்து விடுவேன். அவர்களுக்கு என்னுடைய இந்த பாணி மிகவும் பிடித்துப்போனது. அதிகாரிகள் மறுநாள் காலை சந்திக்கவிருக்கின்ற `மீட்டிங்க்’கிற்கு இது பேருதவியாக அமையவும், எனது சீனியர் வருவதற்குள், என்னை அப்பதவிற்கு நிரந்தரமாக நியமித்தும் விட்டார்கள். விடுமுறை முடிந்து வேலைக்கு வந்த அவள் அதிர்ந்து போனாள். அவளை வேறு துறைக்கு (டிப்பார்ட்மெண்ட்) மாற்றல் செய்தார்கள், அங்கேயும் முறையாக அட்டவணைப்படி வேலை செய்யமுடியாமல் திணறி வேலையை விட்டே நின்று விட்டாள்.

இன்று அவள் என்றால், நாளை நாம் அல்லவா? அதனால்தான் பெரும்பாலான மலேசியர்கள் தங்களின் விடுமுறைகளைக் கழிக்க விடுப்பு எடுப்பதை தவிர்த்து விடுகின்றார்கள் போலும்.! மேலும் இங்கே மூவினங்கள் ஒன்றாக வாழ்கிறோம். பேச்சுக்குச் சொல்லலாம், நாங்கள் ஒற்றுமை அப்படி இப்படி என்று. நிஜத்தில் எங்களுக்குள் ஒருவித மௌனப்போர் நிகழ்ந்தவண்ணமாகவே இருக்கும். குறிப்பாக; பணியிடம், பள்ளிக்கூடம், போன்ற இடங்களில் உன்னை நான் மிஞ்சுவேன், என்னை உன்னால் மிஞ்ச முடியுமா? என்கிற போட்டிகள்தான் இன்னமும்.

ஒருவரை ஒருவர் மிஞ்சவேண்டுமென்கிற வெறியில், உன்னைவிட நான் ஒசத்தி என்கிற போராட்டத்தில், வேட்டைக்காரர்கள் போல் செயல்படுவதால், விட்டுக்கொடுக்க மனமில்லாமல், இறுக்கிப்பிடித்துக்கொண்டு இறுக்கமாகவே வாழ்ந்து வருகிறோம். இதுதான் இந்த ஆய்வின் பின்னணி.   

வெள்ளி, நவம்பர் 09, 2012

வியாழன், நவம்பர் 08, 2012

ஆயுள் கைதி

சுற்றிலும் மாடமாளிகைகள்
சுதந்திர மனிதர்கள்
சுற்றுலா செல்லும் பயணிகள்
சுறுசுறுப்பாக இயங்கும் வாகனங்கள்
கேளிக்கை சுற்றுப்புறங்கள்
கூவி விற்கும் வியாபாரிகள்
சுவரெல்லாம் அழகழகான ஓவியங்கள்
சூழல்களில் பரபரப்பு
மையத்தில் பிரமாண்டமான சிறைச்சாலை
அங்குள்ள கைதிகளுக்கு மட்டும்
ஆயுள் தண்டனை

புதன், நவம்பர் 07, 2012

சாரு மலேசிய வருகை

சாருவின் எழுத்துகள் நம்மை மிக உயரே பறக்கவைக்கும். பறப்போம் ஆனால் பறப்பதற்கு காரணம் இரண்டு இறக்கைகள் கொண்ட வெள்ளை தேவதைகள் அல்ல. அது கழுகு. நம்மைக் கொத்திச்செல்கின்ற கழுகு. அந்தக் கழுகு எங்கே எப்போது நம்மைக் கடாசும் வீழ்த்துமென்று நமக்கே தெரியாது. எவ்வளவுக்கெவ்வளவு மயக்குகின்ற மாய வித்தை அவரின் எழுத்துக்களில் இருக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு மண்ணைக்கவுகின்ற சமாச்சாரங்களும் இருக்கும்.

வசீகர எழுத்திற்குச் சொந்தக்காரர் சாரு. அவரின் எழுத்துகளை வாசிக்கும்போது நமது உள்ளுணர்வுகளுக்குத் திரைபோடாமல் வாசிக்கவேண்டும். அன்பு,காமம், ஆன்மிகம், காதல், பெண்ணியம், ஆணாதிக்கம் என எதுவாக இருப்பினும் அதே உணர்வில் தொடரவேண்டும். ஈகோவிற்கு காயங்கள் ஏற்படுகிற தருணத்தில் வாசகன் அவரை நிந்திப்பான். அந்த சந்தர்ப்பத்தில்தான் வசை பாடுகள் நிகழ்கின்றன. அது அவரது பலவீனமல்ல, நம்முடையதே.  

எழுத்தில், அவலமென்பதை அவர் எங்குமே போதிக்கமாட்டார். நம் நிலையிலேயே நாம் அவரை உள்வாங்கிக்கொள்ளவேண்டும். வாசிப்பு அனுபவத்தில்  மனம் பேசுகின்ற மனசாட்சி வாசகங்களை அசைப் போட்டுப்பார்த்துக்கொண்டு, பின்நோக்கிப் பின்நோக்கிப் பயணித்தால், அங்கே இருப்பது எழுத்தாளரான சாரு அல்ல, நாம்தான். இதை ஏற்றுக்கொள்ளாத வாசகன் சாருவை புறக்கணிக்கின்றான். ஏற்றுக்கொண்டவன் அவரைக் குருவாகப் பூஜிக்கின்றான்.

சிலர் சாருவை, அவர்களின் எண்ணங்களைக்கொண்டு மிக மோசமாக வடிவமைத்து வைத்திருப்பார்கள். அந்த வடிவத்திற்குள் நுழைந்துக்கொண்டு, `அவர் அப்படித்தான்’ என முடிவெடுத்து, அவரை வாசிக்காமல் இருப்பது, பேரிழப்பு என்றே சொல்வேன். அவரின் நாற்பது புத்தகங்களில், `காமரூப கதைகள்’ என்கிற ஒரு நாவலையாவது முடிந்தால் வாசித்துப்பாருங்கள். அல்லது அவரின் அகப்பக்கத்தை http://charuonline.com/blog/ வலம் வரலாம்.

உலக இலக்கியம் விரல் நுணியில். நல்ல வழிகாட்டி. வாசிப்பும் எழுத்துமே அவரின் வாழ்க்கை. அவரைப்பின் தொடர்பவர்கள் பெண்களாக இருந்தால் ஆண்களையும், ஆண்களாக இருந்தால் பெண்களையும் மதிக்கக்கற்றுக்கொள்வார்கள். சுயமரியாதை சுடர்விடும். எல்லாவற்றிலும் வழிகாட்டுவார். எல்லாமும் மக்கள் நலம் பெற சொல்லப்படுகின்ற கருத்துகள்தாம். நம்மை நாமே திருத்திக்கொள்கிற போதனைகளற்ற எழுத்து அவருடையது. அது ஒரு நுண்ணுணர்வு, அதைப்பற்றி அதிகமாகச் சொல்ல இயலாது

அவரைச் சந்திக்கின்ற இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள். அதே போல் அவரைச் சரியாக வாசிக்காமல் அவரைப் பற்றிய கேள்விகள் எதும் இருந்தால் கேட்டுவிடாதீர்கள்.. அவருக்கு எப்போதுமே சமூதாயத்தின் மீது ஒரு சீற்றம் இருக்கின்றது, அது எத்தகையது என்றால், எதையுமே சரியாகக் கற்காமல் கருத்து என்கிற பெயரில்  எதையாவது உளறிக்கொண்டிருப்பது. இதை அவர் முற்றாக நிராகரிக்கின்றார். கடந்த ஒரு ஆண்டு காலமாக அவரைத் தொடர்ந்து வாசித்துப் புரிந்துகொண்டதால், சாதரண வாசகியான அடியேனின் சின்ன  நினைவுறுத்தல் இது.

வருகை சிறப்பாக அமைய என் பிராத்தனைகள். எங்களின் நாடு மிகவும் பாதுகாப்பான நாடு. மகிழ்ச்சியாக வாருங்கள் சாரு. அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் விஜி.




செவ்வாய், நவம்பர் 06, 2012

லட்சியம்

ஒவ்வொரு வினாடியும்
அலட்சியமாய் நகர்கிறது
எனக்குள் எழும் போராட்டங்களை
லட்சியம் செய்யாமல்...