புதன், ஜூலை 24, 2013

இ(ம்)சை அரசர்கள்

இப்போதுவருகிற சில பாடல்களின் மியூஸிக்கில் - போலிஸ் சைரன், அம்புலன்ஸ் அலறல், தீயணைப்பு வண்டியின் சத்தம், கார் வேகமாக ப்ரெக் வைக்கப்படும்போது கேட்கின்ற சத்தம், கார்கள் மோதுகிற சத்தம், ஹாரன் சத்தம்.. போன்ற சத்தங்கள் ஒலிப்பதைப்போல் பாடல்களின் இடையே இசையாகப் புகுத்தியிருப்பார்கள்.

காரில் செல்லுகையில் இதுபோன்ற சத்தங்கள் வருகிறபோது மனம் திடுக்கென்று தடுமாறி சாலையில் கவனம் செல்லாமல் கண்கள் அங்கேயும் இங்கேயும் அலைமோதத் துவங்கிவிடுகிறது.

வானொலியில் ஒலிக்கின்ற பாடல்கள் நின்றவுடன் தான் புரியும் அது பாடலின் இடையே வந்த இ(ம்)சை என்று. இது வாகனமோட்டிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை இ(ம்)சை அரசர்கள் புரிந்து கொள்வது அவசியம்.

இங்கே லோகல் மியூஸிக் சேனல் அனைத்திலும் இந்த இரைச்சல்கள் அவ்வப்போது தலைகாட்டத் துவங்கியுள்ளன.

இதனாலேயே இப்போதெல்லாம் வாகனமோட்டும்போது பெரும்பாலும் வானொலியை நான் கேட்பதில்லை.சீடி தான் - நல்ல பழைய பழைய பாடல்களைக்கேட்டுக்கொண்டே ..... என் வண்டி ஓடும்.

ஆல்வேஸ் லவ் யூ, எம்.எஸ்.வி

என் முதல் கணினி அனுபவம் - தொடர் பதிவு..!

எனது முதல் கணினி அனுபவம் என்கிற தலைப்பில் http://nanjilmano.blogspot.jp/search?updated-max=2013-07-23T16:53:00-07:00&max-results=1 நாஞ்சில் மனோ தமது பதிவை எழுதி சிலரை அழைத்திருந்ததை நானும் வாசித்தேன்.

நல்ல சுராஸ்யமான தலைப்பாக உள்ளதே என, அதை வாசிக்கின்ற போது நானும் எனது அனுபவங்களை மனதிற்குள் அசைபோட்டுப் பார்த்துக்கொண்டேன்.

தொடர் பதிவு எழுத, வலைத்தலத்தில் நீண்ட நாள் எழுதாமல் இருப்பவர்களையும் என்ன எழுதுவதென்று புரியாமல் போராடிக்கொண்டிருப்பவர்களையும் இதுபோன்ற தலைப்புகளைக் கொடுத்து அவர்களைத் தனிப்பட்ட முறையில் அழைத்து தொடர் எழுத வைப்பதென்பது சிறப்பான ஒன்றே. பாராட்டுகள்.

முகநூல் வந்ததிலிருந்து ப்ளாக் எழுதுவது குறைந்துள்ளதாகவே சில குற்றச்சாட்டுகள் முகநூலிலும் ப்ளாக்கிலும் பதிவாகியிருந்தது. அனைவரும் விரைவாக feedback வேண்டி பதிவுகளை ப்ளாக்கில் போடுவதை விடுத்து முகநூலில் இட்டு, பின்னூட்டம் லைக் என கண்சிமிட்டும் வேளையில் குவிகின்றதைக் கண்டு மகிழ்ந்துகொள்கின்றனர். இது காலத்தின் கட்டாயம் என்கிற போதும் முகநூல் தொடர்ந்து நம்முடைய டைரியாய் இருந்து செயல் படமுடியாது என்பதை உணர்கின்ற தருணத்தில் ப்ளாக்கின் பக்கம் பதிவுகள் வரத்துவங்கியிருக்கின்றன- நாஞ்சில் மனோ போன்ற பதிவர்களின் உந்துதலின் பேரில்.

மனோ நிறைய நாட்டு, வீட்டு, ரோட்டு நிகழ்வுகளைக் கலாட்டா செய்து நகைச்சுவையாக பல பதிவுகளை எழுதுபவர்.  அவர் பதிவு எழுதினாலேயே நிறையபேர் வந்து வாசித்து பின்னூட்டம் இடுவார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி வட்டம் இருப்பதை நான் கண்டுள்ளேன். என் வளி தனி வளி என்பதைப்போல் அவ்வட்டத்தின் செயல்பாடுகளின் காற்று ஒரே பக்கமாக வீசுவதை, அவர்களைத்தொடரும்  நான் உணர்ந்து வந்துள்ளேன்.

இருப்பினும் இந்த வட்டதிற்குள் நான் எப்படி வந்தேன்.?

நாஞ்சில் மனோ தமது பதிவைத்தொடர http://krvijayan.blogspot.jp/2013/07/blog-post.html கே.ஆர்.விஜயன் அவர்களை அழைத்திருந்தாரல்லவா.? அதையும் நான் வாசித்தேன்.

கே.ஆர். விஜயன் தமது அனுபவங்களை எழுதிய பிறகு தங்கை செல்வியை அழைத்து பதிவைத் தொடரச் சொல்லி முடித்திருக்கின்றார்.

என் முதல் கணினி அனுபவம் http://skselvi.blogspot.jp/2013/07/blog-post_23.html என்று தமது அற்புத அனுபவங்களை வலைப்பதிவில் ஏற்றி என்னையும் தொடரச்சொல்லி அழைத்து, `உன் பெயரைப் போடுகிறேன் - மானத்தை வங்காமல் தொடரு’  என்கிற எச்சரிகையின் பேரில் உத்தரவு போட்டார் செல்வி. 

ஊர் கூடி உருண்டைச்சோறு சாப்பிடுகிறபோது, நாம் மட்டும் சும்மா இருக்கலாமா? சரி என்றேன்.

எனது முதல் கணினி அனுபவம்.

நான், ஆரம்பத்தில் ஒரு சிறிய கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். சேரும்போது, அந்தக் காலகட்டமென்பது (1990) கணினியின் பயன்பாடுகள் அவ்வளவாக இல்லை. இல்லை என்பதைவிட பெரும்பாலான கம்பனிகளில் அது அமல்படுத்தப்படாமலேயே இருந்தது. அரசாங்கம் அப்போதுதான் கணினி அறிமுக செயல்பாடுகளை நாடு தழுவிய நிலையில் அமல்படுத்துகிற காரியங்களில் முழுமூச்சாக ஈடுபடத்துவங்கியிருந்தது.

அக்கம்பனியில் நான் வேலைக்குச் சேர்ந்தபோது, அங்கே வேலை செய்யும் ஒரு டைப்பிஸ்ட் வேலையை விட்டு சென்று விடவும், அவர் செய்துவந்த டைப் அடிக்கும் வேலைகள் சில எனக்கும் வந்தது.  டைப் ரைட்டரின் முன்னே அழுவாத குறையாக அமர்ந்துகொண்டு `டொக் டொக் டொக்’ என்று அந்த மிஷினோடு மல்லுகட்டிக்கொண்டிருப்பேன். (டைப் அடிக்கின்ற வேலையில் அனுபவம் இல்லை). எங்களின் முதலாளிக்கு கோபம் வரும். திட்டுவார். நிச்சயம் நீ விரைவாக டைப் அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையேல் இங்கே வேலை செய்யமுடியாது என்று எச்சரிப்பார்.

கவலையில் ஒரு நாள் மாலை, வேலை முடிந்து, எனது தோழி மேகலாவின் (டீச்சர்) ஆலோசனையின் பேரில், அவரே அறிமுகப்படுத்திய ஒரு டைப் ரைட்டிங் வகுப்பில் சேர்ந்துகொண்டேன். அங்கே அப்போதுதான் டைப் ரைட்டிங் மிஷின்களையெல்லாம் எடுத்துவிட்டு கணினிகளை வைத்து பாடம் நடத்தத்துவங்கியிருந்தார்கள்.

ஆளுக்கொரு கணினி மேஜையில் அமர்ந்துகொண்டு, ஆசிரியர் white board யில் கற்பிக்கின்ற பாடங்களை நாங்கள் கணினியில் பயிற்சி செய்து பார்க்கவேண்டும். கணினி பற்றிய போதனையில் ஆரம்பித்து quotopro, word process, lotus 123 போன்றவற்றில் தொடர்ந்தது எங்களின் கணினிப் பயிற்சி. எப்படி கணக்கு செய்வது, கிரஃப் வரைவது, கோடு போடுவது, கடிதங்கள் எழுதுவது என பல விஷயங்கள் போதிக்கப்பட்டன அங்கே.

வகுப்பு படு சுவாரஸ்யமாகச் சென்றாலும், கற்றதை அலுவலகத்தில் அமல் படுத்த இயலாமல் திணறினேன். கணினியின் கீபோர்ட்’டில் கை வைத்தவுடன் எழுத்து தட்டச்சாகும், அதுவே டைப் ரைட்டர் என்கிற போது விரல்களால் அழுத்தி தட்டும்போதுதான் மூன்று நான்கு கார்பன் காகிதங்களில் எழுத்து/எண்கள் விழும். எவ்வளவோ முயன்றேன் எனக்கு டைப் ரைட்டரும் அதனின் சத்தமும் வெறுப்பையே கொடுத்துக்கொண்டிருந்தது.  அலுவலகத்திலும் கணினிக்கு மாறுவதை கலாச்சாரக் குற்றமாகவே கருதி டைப் ரைட்டரையே பூஜித்து வந்தனர்.

கணினி ஆசிரியரிடம் (சீனர்) எனது பிரச்சனைகளைச் சொன்னேன். அதற்கு அவர், நீ வேலையை மாற்றிவிடு. உலகமே கணினி மையமாக மாறிக்கொண்டிருக்கும் போது உங்களின் அலுவலகம் பழைய பஞ்சாங்கம் பாடுகிறது. கணினி கற்பவர்களுக்குத்தான் இனி வேலை வாய்ப்புகள் என்று அரசாங்கமே சொல்லிவிட்டது, என்று கோடுதான் போட்டார், ஒருவருடம் கழித்து கணினி சான்றிதழ் கையில் கிடைத்தவுடன் பெரிய தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர ரோடே போட்டுவிட்டேன் நான்.

JVC ELECTRONICS ( JAPAN VICTOR COMPANY) எண்பதுகளில் மக்களின் பயன்பட்டில் முக்கிய பங்கு வகித்த வீடியோ மற்றும் அதன் கருவிகள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனம் அது. அந்நிறுவனத்தில் அட்மின் கிளார்க்’ஆக பணியில் அமர்த்தப்பட்டேன். கணினி அனுபவம் இருந்ததால், ஆரம்பத்திலேயே EFFICIENCY REPORT செய்யும் வேலைக்குப் பணிக்கப்பட்டேன். அந்த ரிப்போர்ட் செய்யும் பணிதான் எனது முதல் கணினி அனுபவமும் கூட.

EFFICIENCY REPORT’யில் நான் புகுத்துகிற எண்களாகப்பட்டது கம்பனியின் அனைத்து சிஸ்டத்திலும் நுழைந்து மொத்த வீடியோ வெளியீட்டை உறுதிபடுத்தும். அங்கே ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து அது எங்கள் டிப்பார்மெண்ட் பிரச்சனையாக இருந்துவிட்டால், அப்போது பலியாவது நானாகத்தான் இருக்கும்.  இதனாலேயே மிகக் கவனமாகக் கூர்ந்துகவனித்து, தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கற்று சொந்தமாகவே சிஸ்டத்தில் இருக்கின்ற பிரச்சனைகளைக் களையவும், சுயமுயற்சியில் அவைகளைச் சரி செய்யவும், எளிய வழிகளில் format formula போன்றவற்றை அமல்படுத்தி அறிமுகப்படுத்தவும் கற்று கைத்தேர்ந்தேன். நாளடைவில் கண்களை மூடிக்கொண்டு விரல்கள் கீபோர்ட்டில் நர்த்தனம் ஆடுகிற அளவிற்கு எனது கணினி ஞானம் வளர்ந்திருந்தது.

இருந்தபோதிலும் தமிழில் பக்கம் பக்கமாக மனதின் பதிவுகளை தட்டச்சு செய்வதை முகநூலில் தங்கை செல்வி, முகநூல் நண்பர் லியோ மெடி மற்றும் நண்பர் கார்த்திக்கின் மூலமே கற்றுக்கொண்டேன்.

இந்த முகநூல் மட்டும் இல்லையென்றால் நான் இங்கில்லை. எனது கணினி அறிவாகப்பட்டது ரிப்போர்ட் செய்கிற ஸ்தானத்திலேயே இருந்து மழுங்கிப்போயிருக்கும். அதுவே கணினி ஞானம் என்கிற முட்டாள்தனமான சிந்தனைப்போக்கிலேயே நான் உலாவந்திருப்பேன்.

முகநூல் சகவாசம்தான் என்னை அதிகம் கணினியின் பால் நாட்டம் கொள்ளவைத்தது.

தினமும் பதிவு எழுதவேண்டும். புகைப்படம் போட வேண்டும், புகைப்படத்தில் தெரிகிற தொப்பை, முகத்தின் கரும்புள்ளிகளைக் குறைத்து அழகாக எடிட் செய்து காட்டவேண்டும் (இதைக் கற்றுக்கொடுத்தது முகநூல் தோழி தங்கை சாந்தி), லிங்க் கொடுப்பது, பிழையில்லாமல் எழுதுவது, வீடியோ பதிவேற்றம், குரல் பதிவு, ஸ்கைஃப் என இன்னும் பல அம்சங்களை கற்றுக்கொண்ட இருப்பதற்கு இந்த முகநூல்தான் உந்துதல் சக்தி. வாழ்வின் கற்றல்  தத்துவம்  இங்கே  தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்துள்ளதை நினைத்து  உவகை கொள்கிறேன்.

இருப்பினும் கணினியின் பயன்பாட்டில் சந்தேகங்கள் வருவது எப்போதுமே தவிர்க்க இயலாத ஒன்றாகிக்போவது கணினி பயன்படுத்துபவர்களின் பெரும்பிரச்சனையே. ஏன்? எப்படி? எதனால்? என்ன செய்யலாம்? எப்படிச்செய்யலாம்? யாரை அழைக்கலாம்? என்கிற போராட்டாம் இல்லாத கணினி பயன்பாடு அமைந்துவிடாது யாருக்குமே. எனக்கும் சிலவேளைகளில் பல சிக்கல்கள் ஏற்படும். அப்படி ஏற்படுகிற போது, கடல்தாண்டி ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலில் உள்ள நண்பர் கார்த்திக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பி அந்தப் பிரச்சனையைக் களையச்சொல்லி மன்றாடுவேன். கணினி துறையிலே கல்வி கற்றவரான கார்த்திக் பலமுறை எனது சந்தேகங்களை தீர்த்துவைத்துள்ளார். இன்னமும்..

இன்றைய எனது இப்பதிவைத் தொடர நான் எல் கே என்கிற கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மனையே http://bhageerathi.in/ அழைக்கின்றேன்.

அழைப்பிற்கு நன்றி. சிந்தனையைத்தூண்டிய நாஞ்சில் மனோவிற்கு பாராட்டுகள்.

    

திங்கள், ஜூலை 22, 2013

மரியான்

மரியான் படம் பார்த்துவிட்டீர்களா? நான் பார்த்து விட்டேன். பாருங்க நன்றாகத்தான் இருக்கின்றது என்று சொல்லத்தான் ஆசை. இருப்பினும் அப்படத்தின் கரு அவ்வளவு அழுத்தமாக இல்லாததன் காரணத்தால் படம் பாருங்கள் என்று சொல்வதற்கு மனம்வரவில்லை.

கதை  : காதலியின் (பார்வதி) அப்பா பட்ட கடனை அடைப்பதற்கு, மகிழ்வாக மிக உல்லாசமாக  சுற்றித்திரிந்த பழக்கப்பட்ட மீன்பிடி தொழிலையும் அம்மாவையும் நண்பர்களையும் விட்டு சுடான் செல்கிறார் தனுஷ். அங்கே தீவிரவாதிகளால் பிணையாகப் பிடிக்கப்பட்டு பணம்கேட்டு துன்புறுத்தப்படுகிறார். காதலியை நினைத்து நினைத்து அந்த இக்கட்டான சூழலும் மகிழ்வாகவே நகர்கிறது மரியானுக்கு. காதலியின் பிரார்த்தனையின் பேரில் போராடி வருவதைப்போல் படம் முடிவடைகிறது.

மீன்பிடி கிராமத்தில் இருக்குவரை படம் அவ்வளவு அழகாக நகர்கிறது. சுடான் செல்கிறார், படம் எப்போது முடியுமென்று  நாட்காலியைத்  தேய்க்க ஆரம்பித்துவிடுகிறோம். சுருங்கக்கூறின் இடைவேளை வரை சூப்பர். அதன் பிறகு அவ்வளவாகக் கவரவில்லை.  

கதையின் கரு மனதில் நிற்கவில்லை. காதலிக்காகவே இவ்வளவும் என்று நினைக்கின்ற போது படம் ஒட்டமாட்டேன் என்கிறது.

தனுஷ் மற்றும் பார்வதி - படத்தின் நாயகர்கள்.

தனுஷ் மிகவும் மெலிந்து காணப்படும் தோற்றத்தில் வருகிறார். நம்ம வீட்டுப்பையன் ஒழுங்காகச் சாப்பிடாமல் உருகுலைந்து போவானே, அதுபோலவே இருந்தது தனுஷின் தோற்றம். தாடி மட்டும் இல்லையென்றால், முகத்தோடு ஒட்டிய சதை வயதான  தோற்றதைக் கொடுத்திருக்கும். இருப்பினும் மிக நெருக்கத்தில் முகத்தைக்காட்டுகிற காட்சிகள் வருகின்றபோது பொலிவற்ற முகம் பார்ப்பதற்கு நன்றாகவே இல்லை. பாத்திரத்தோடு ஒன்றிவிட்டார் என்றும் சொல்லலாம், தோற்றத்திலும்.

நடிப்பு வழக்கமான நடிப்புதான். பரிதாபமாகவே இருந்தார். காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது `i am loving you' என்று சொன்ன ஆடுகளம் காட்சிபோல் மனதில் எதுவும் நிற்கவில்லை.
சமைத்து எடுத்துவா, என்று அப்புகுட்டனிடம் தூது சொல்லி காதலியையும், தாயையும் வரவழைத்து பார்வதியை (பனி) ஓட்டுவது நல்ல தமாஷ். இருப்பினும் பட்டென்று எல்லோரையும் கைநீட்டி அறையும்படி இருக்கின்ற காட்சிகள் இன்னமும் கவுண்டமணி செந்தில் பாணியிலான நகைச்சுவைக் காட்சிகளையே கண்முன் நிறுத்துகிறது.

சில காட்சிகளில் பார்வதி நிஜமாலுமே அடிவாங்குவதைபோல் அமைந்திருக்கின்றது. சினிமாவில் மிருகவதை தடை செய்யப்பட்டுவிட்டது ஆனால் இன்னமும் வன்புணர்வின் போது பெண்களின் புடவை ரவுக்கைகளை கிழித்துக் கீழே தள்ளி அட்டூழியங்கள் நிகழ்வதைப்போல் காட்டுகிற காட்சிகள் இன்னமும் நிறுத்தப்படாமலேயே இருக்கின்றது சினிமாவில்.

மிருகங்களைப் பாதுகாப்பதற்குக் கூட இயக்கங்கள் இருக்கின்றன. நடிப்புலகில் இருக்கின்ற பெண்களைப் பாதுகாக்க எதாவது இயக்கங்கள் இருக்கின்றதா தெரியவில்லை. காதலை அல்லது அன்பைப் பொழிய நினைக்கும் பெண்களை காதலன் அல்லது அப்பா அண்ணன் போன்ற நடிகர்கள், காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டுமென்பதற்காக நடிகைகளை நிஜமாகவே அடிக்கின்றார்களாம்; கேள்விப்பட்ட தகவல். அதுபோலவே மரியான் படத்தில்  ஒரு காட்சி. தனுஷ் பார்வதியின் கன்னத்தில் அறைவார், அந்த அறை நம் கன்னத்தில் விழுவதைப்போல் இருந்தது. காதல் இல்லை, அன்பும் இல்லை பின் எதற்கு அடிக்கின்றார்கள்.? அடிப்பதைப்போல் காட்டிவிட்டு பிறகு உருகி அன்பு, காதல், நேசம், பாசம் எல்லாமும் துளிர் விடுவதைப்போல் காட்டி எடுக்கின்ற காட்சிகளில் மட்டும் இன்னமும் அதே பழைய பாணி, நம் தமிழ் சினிமாவில் மட்டுமே.

பார்வதி - நல்ல நடிப்பை வழங்கியிருந்தார். முக பாவனைகளில் நவரசங்களை காட்டுவதில் கைத்தேர்ந்தவராகவே திகழ்கின்றார் பார்வதி. பூ பட நாயகி. ச்சூ ச்சூ மாரி என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.

யார் இந்த பார்வதி? எங்கேயோ பார்த்ததைப்போலவே இருக்கின்றாரே.! என்று யோசித்தபோது மகள்தான் சொன்னார், பூ பட நாயகி என்று. நீண்ட இடைவெளிக்கும் பிறகு தமிழ் படத்தில் தோன்றுகிறார் போலும். நவ்யா நாயரின் முகபாவனைகளை அப்படியே பிரதிபலிக்கின்றார்..!? அதட்டிப் பேசுகிற போதும், கண்களை உருட்டுகிற போதும், மிரளும்போதும், கொஞ்சு தமிழ் பேசுகின்ற போதும், உடல்வாகு என எல்லாவற்றிலும், கிட்டத்தட்ட தமிழ் சினிமா உலகம் மறந்துபோன நவ்யா நாயர்தான் கண்முன் தோன்றி மறைகிறார்.

தனுஷின் அம்மாவாக கமலா காமேஷின் இடத்தைப்பிடிக்க வந்துவிட்டார் அவரின் மகள் உமா. எதார்த்தமான நடிப்பு. நான் மிகவும் ரசித்த கதாப்பாத்திரம் என்றால் அது உமாரியாஸ் தான். அடுத்த அம்மா வேடத்திற்கு ஆள் தாயார் என்று நினைக்கிறேன். அதற்காக ரஜினி கமலுக்கு அம்மாவாக நடிப்பதென்பது -  பண்டரிபாய் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு அம்மா ஆனதைப்போல்தான் இருக்கும். இளம் நடிக நடிகைகளுக்கு அம்மா. ஒகே.

மற்ற பாத்திரங்கள் அனைத்தும் முதல் பாதி படத்திற்கு பொருந்தியே விடுகிறார்கள். இருப்பினும், சொல்லுங்கண்ணே சொல்லுங்க அண்ணாச்சி, அப்புக்குட்டி போன்றோர்களின் பாத்திரம் மனதில் ஓட்டாத அளவிற்கு தனுஷின் ராஜ்ஜியம். காட்சிக்குக் காட்சி தனுஷ் மட்டுமே தெரிகிறார். அவர் மட்டுமே பேசுகிறார் நடிக்கிறார். பிற்பகுதியில் வரும் சுடான் நடிகர்களாவது நடித்திருப்பது தெரிகிறது. நம் நடிகர்கள் கடலில் உள்ள மீன்களோடு மீன்களாகக் காட்டப்பட்டு மறக்கடிக்கப்படுகின்றனர்.

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இசை மற்றும் பாடல்கள். எல்லாப்பாடல்களும் அருமை. படம் பார்த்துவிட்டு காரில் வரும்போது, அனைவரும் ஆளுக்கொரு பாடலை முணுமுணுத்தபடியே திரும்பினோம். சுடான் பாடலும் காட்டுவாசிகள் பாடுவதைப்போல் மனதில் நிழலாடியபடியே இருந்தது.

மற்றுமொரு நிறைவைத்தந்த அம்சம் அந்த மீன்பிடி கிராமிய சூழல். அப்படியே அதனுள்ளேயே நுழைந்துவிட்டதைப்போல் இருந்தது. கிராமிய வீடுகள், மழைக்காட்சிகள், அம்மியில் மசாலா அரைப்பது, விறகடுப்பு பயன்பாடு, மீன் குழம்பு வைப்பது, மீன் பொரியல் செய்வது, குழம்பு ஊற்றி சோறுசாப்பிடுவது, தூக்குப்பானையில் சாப்பாடு தூக்கிச்செல்வது. நடிகநடிகர்கள் எதையாவது வாயில் போட்டு தின்றுக்கொண்டே இருப்பது- அப்படியே நிதர்சன சூழலாகவே படத்தில் அமைந்திருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கணவர், நாளை மீன் குழம்பு வைக்கிறாயா? என்று கேட்கும் அளவிற்கு வாயில் எச்சில் ஊறவைக்கின்ற குழம்புக் காட்சிகள் அதிகம் படத்தில். ஏழைதான், கஷ்டப்படுபவர்கள்தான் இருப்பினும் உணவிற்கும் சாப்பாட்டிற்கும் பஞசமில்லை என்கிற ரீதியில் மனநிறைவைத்தருகிற முதல் பாதிப்படக் காட்சிகள்.

அழகாகக் கொண்டு சென்றார்கள் இருந்தபோதிலும் எப்படி முடிக்கின்றதென்று தெரியாத நிலையிலேயே படத்தைக் குழப்பியிருக்கின்றனர் இறுதியில்.

வில்லன் சொல்வார். மரியானுக்கு எதாவது பிரச்சனை என்றால் என்னிடம் சொல். நான் உதவுகிறேன். நாங்கள் அடித்துக்கொள்வோம் ஆனால் அவன் மேல் வேறு யாராவது கை வைப்பதை நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டேன், என்பார். அந்த வசனத்தின் போது அவரின் நயவஞ்சக குணம்  கொஞ்சங்கூடத் தென்படவில்லை. ஆக, அங்கே அந்த வில்லன் மாறி நல்லவனாகவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்.! அதன் பிறகு மரியான் வருவான் என்று கதாநாயகி துள்ளிக்குதிக்கின்ற போது, அவன் மீண்டும் வில்லனாகி அவளை பலாத்காரம் செய்வதைப்போல் எடுத்திருப்பது - காட்சிக்கு சரியாக பொருந்தவில்லை. அக்காட்சி மிகவும் செயற்கையாகவே இருந்தது.

காடுகளே இல்லாத பாலைவனத்தில் சிறுத்தைகள் எப்படி வந்ததன?  ‘தனுஷின் மனபிராந்தி’ம்மா, குருட்டுக் கேள்வி எல்லாம் கேட்காதிங்க’ என்றார் மகன். அதுசரி.

பாதிவழியிலேயே சுடான் திவிரவாதிகளில் ஒருவரை ஏன் சக தீவிரவாதி சுடுகிறான். அவன் என்ன சொன்னான்? இவனுக்குக்கோபம் வந்து சுடுகிறான்.?

எல்லோரையும் சர்வசாதாரணமாகச் சுட்டுவீழ்த்தும் தீவிரவாதிகள் தனுஷை மட்டும் ஏன் சுடவில்லை.?

இறுதிக்கட்டத்தில் எல்லாம் முடிந்து நாடு திரும்புகிற சூழலில், வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு விடுக்கும் தனுஷின் முகத்தில் ஏன் அவ்வளவு பெரிய கேள்விக்குறி? காதலிக்கு எதோ அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதைப்போல் முடிக்கவிருந்த படத்தை, எதோ ஒரு காரணம் கருதி,  கதாநாயகர்களை உயிரோடு விட்டிருப்பதை நன்கு உணரமுடிகிறது. நன்றாக `ப்ளான்’ பண்ணி படத்தை முடிக்கவில்லை. கடின உழைப்பு அங்கே தென்படவில்லை.

இறுதியாக -  படத்தில் வருகின்ற ஒரு வசனம்- `சாதிக்க நினைக்கின்ற ஆண்களுக்கு பொம்பள வாடை இருந்துக்கிட்டே இருக்கவேண்டும்.’ அப்படியா? தெரியாதுப்பா எனக்கு...!

மரியான் படம் - பார்க்கலாம் ஒரு முறை.

மார்க்.. 32/50  :P

வெள்ளி, ஜூலை 19, 2013

இலக்கியதிற்கு பால் பேதங்கள் தேவையற்ற ஒன்று


முதலில் இவைகளைப் படியுங்கள் : -
  • கள்ளக்காதலனுடன் தாய் சல்லாபம், அதைப்பார்த்துவிட்ட மகனை காதலனும் அந்தத்தாயும் கொலை செய்தனர்.
  • கணவர் தமது மனைவியை மாதவிடாய் காலகட்டத்தின் போது உடலுறவு கொள்ள அழைத்ததால்- மனைவி அவனை விவாகரத்து செய்தாள்.
  • குழந்தையை பால்வல்லுறவு செய்துவிட்டு, அதனின் பிறப்புறுப்புக்குள் நீண்ட குச்சியினைச் சொரூகிய காமுகன். 
  • வாய்வழி புணரும்போது கணவன் தனது விந்துவை மனைவியின் வாயினுள்ளே விட்டதால் போலிஸில் புகார் செய்தாள் மனைவி.
  • தமது மகளின் நிர்வாணப்புகைப்படங்களை நெட்டில் ஏற்றிய தாய்.
  • காதலர்கள் தாங்கள் உடலுறவு கொண்ட வீடியோ நிகழ்வை வலைத்தலத்தில் பதிவேற்றி அம்பலப்படுத்தினர்.
  • பள்ளி ஆசிரியை தமது மாணவனுடன் உடலுறவு கொண்டார். ஆசிரியர் மாணவியின் மார்பகத்தைத் தடவினார்.
  • மின்தூக்கியில் எழுபத்தைந்து வயது மூதாட்டி வன்புணர்வு.
  • எதிர்வீட்டு மாடியில் துணிகளை உலரவைத்த இல்லத்தரசியிடம் தமது விரைத்த குறியைக்காண்பித்த காமுகன், மனநோயாளி என்று போலிஸில் ஒப்படைப்பு...
  • காலநேரமில்லாமல் சதா ஆபாசப்படங்களை பார்த்து, பலமுறை விந்துவை வெளியேற்றியபடியே இருந்த மாணவன் கணினியின் அருகிலேயே பிணமாகக்கிடந்தான்.
  • திருட்டுத்தனமாக காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட பள்ளிமாணவி, துரதிர்ஷ்டவசமாக கர்ப்பம் தரிக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாத காதலன் (அவனும் மாணவனே) அவள் வயிற்றில் வளரும் சிசுவைக் கொல்வதற்கு கர்ப்பவதியான காதலியின் வயிற்றில் கத்தியால் குத்தினான்..
  • அக்காள் தங்கை என இருவரையும் மறைமுகமாகக் காதலித்து இருவருடனும் பலமுறை உடலுறவு கொண்ட வெளியூர்வாசி கற்பழிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். காரணம், பெண் பிள்ளைகள் இருவரும் பதினாறு வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள்...
  • தந்தையே தாம் பெற்ற மகளிடம் பலமுறை உடலுறவுகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டது போதாமல், தமது  தங்கைகளின் மீதே கைவைக்கப் பார்ப்பதைப்பொறுக்க முடியாத அப்பெண் அவனை போலிஸில் பிடித்துக்கொடுத்தாள்.
  • தமது மார்பகங்களை பெரிதாக்குவதற்கு முயன்ற பெண், அறுவை சிகிச்சையின் போது மரணம். 
  • இன்றைய செய்தி, பன்னிரெண்டு வயது பள்ளிமாணவியை ஆசிரியை வேசி (prostitute ) என்று திட்டினார். பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்துள்ளனர். 

இவையெல்லாம் கட்டுக்கதைகளோ அல்லது நானே எனது மன அரிப்புகளைப் போக்கிக்கொள்வதற்காகவோ எழுதப்பட்டவையல்ல. அனைத்தும் பலரும் கையில் ஏந்தித் திரிகிற பலவிதமான நாளேடுகளில் (தமிழ்,மலாய் ஆங்கிலம்) பதிவாகியிருக்கின்ற திடுக்கிடும் உண்மைச் செய்திகள்.

இப்படிச் செய்திகளில் வருகிற ஆபாசங்களைத் தொகுத்து சமூதாய சீர்திருத்தக் கருத்துகளாக தமது படைப்புகளில் எதாவதொரு பாத்திரங்கள் செய்வதுபோலவும் அல்லது நடக்கின்ற அவலங்களை நேரிடையாக சொல்வதுபோலவும், இடைச்செருகலாக படைப்புகளில் புகுத்துகின்றபோது, அங்கே அப்படைப்பாளியாகப்பட்டவன் பொதுவில் வக்கிரபுத்தி கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான்.

இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகமுழுக்க வியாப்பித்திருக்கின்ற நமது இனத்தில் புரையோடிக்கிடக்கின்ற நோய். நல்ல படைப்பாளிகள் உருவாவதற்கு பெரிய முட்டுக்கட்டை இந்த வெட்டியான புரட்சி சிந்தனை. எதாவதொரு வகையின் சமூகக்காவலர்கள் என்கிற பெயரில் திடிரென முளைத்து, படைப்புகளில் இருக்கின்ற ஆழத்தைப் புரிந்துகொள்ள முயலாமல், அதைக் கண்மூடித்தனமாக எதிர்ப்பதிலேயே குறியாக இருப்பார்கள் இத்தகைய வெட்டிப் `புரட்சியாளர்கள்’.

இந்தக் கணினி யுகத்தில் அனைத்தும் விரல்நுணியில் வந்துவிட்ட தெளிவு இல்லாமல், இன்னமும் பழையகால சிந்தனையிலேயே மூழ்கி, கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் எதிர்க்கின்ற கட்டபஞ்சாயத்து ஆசாமிகள் தமிழ் இலக்கிய உலகில் அதிகம். என்ன பாவம் செய்தார்களோ நமது எழுத்தாளர்கள்.!

இன்னமும் இலக்கியமென்றால், சங்க இலக்கியங்களை மனனம் செய்து வைத்துக்கொண்டு நாபிசகாமல் மேடையில் தூயதமிழில் முழங்குவதையும், ஆங்கிலச் சொற்களைத் தமிழ் படுத்தி தமது படைப்புகளில் புகுத்தி, கதைகள் கட்டுரைகள் (அது ஒரு உருப்படாத கருவாக இருப்பினும்..) வடிப்பதையும், தட்டையாக ஒரே பாணியில் உலக ஒழுங்களைச்சொல்லி, தாமே உலக ஒழுக்கத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பவன், என்று சொல்லி முடிவடைகிற   படைப்புகளைத்தான் இலக்கியமென்று  உச்சத்தில் வைத்து, பரிசுகளை வழங்கி போற்றிக்கொண்டிருக்கின்றார்கள். புதியபாணியில் எதையாவது முயலலாம் என்றால், அறவே இலக்கிய வாசிப்பு இல்லாதவர்கள் அங்கே நீதிபதிகளாக அமர்ந்துகொண்டு, எல்லாவற்றையும் புறக்கணித்துவிட்டு, தாம் தேர்ந்தெடுத்த படைப்புகளே சிறப்பானதாகப் பிரகடனப்படுத்தி எல்லா ஏடுகளிலும் விளம்பரம் செய்துவிடுகிறார்கள்.

அப்படி விளம்பரப்படுத்தப்படுகிற படைப்பாளியாகப்பட்டவன், தாம் தான் சிறந்த படைப்பாளி என்கிற வட்டதிற்குள் நுழைந்துகொண்டு, அடுத்துவருகிற சிறந்த வித்தியாசமான படைப்புகளில் குறைகள் இருப்பதாகச் சொல்லி, தமது பாணியில் இக்கதையோ கட்டுரையோ சேரவில்லை என்கிற ஆதங்கத்தை பொதுவில் வைத்து, புதிய பாணி எழுத்துகளை நிராகரிக்கத்துவங்கிவிடுகிறான். தாம் எழுதுகிற பாணியே சிறப்பானதாக அவன் நினைக்கையில், கதையென்றால் இந்தந்த கூறுகளைக்கொண்டவைகளாகத்தான் இருக்கவேண்டுமென்று அவனாகவே சில சட்டத்திட்டங்களை உருவாக்கிக்கொண்டு, படைப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கவேண்டும், இப்படித்தான் முடிக்கவேண்டுமென்று பாடம் நடத்தத் துவங்கிவிடுகிறான்.

எல்லாக்கதைகளையும் `பாட்டி வடை சுட்டு, காக்கா தூக்கிச்சென்றது. இடையில் அதையும் நரி பிடுங்கிச்சென்றது - இறுதியில் ஒரு நீதி. இன்னமும் இப்படி முழுமையாக முடிவடைகிற கதைகளையே சிறந்த கதைகளாக நினைத்துக்கொண்டிருக்கின்றார்... !?

இவை இன்று நேற்று நடப்பவையல்ல, பல ஆண்டுகளாக மலேசிய இலக்கியச்சூழலில் புறையோடிக்கிடக்கும் ஒருவழிச் சிந்தனைதான் இது. படைப்பாளி எப்படி யோசிக்கின்றான் என்பதைப்பற்றிய அக்கறையெல்லாம் யாருக்கும் கிடையாது. தம்மிடம் குடிகொண்டிருக்கின்ற `ஒழுக்கசீல’ நிலையையும், தமது சிந்தனையையும் அப்படைப்பாளி பிரதிபலிக்கவில்லையென்றால், அவன் நிச்சயம் படைப்பாளியாக இருக்க முடியாது என்பதுதான் இங்கே பல சட்டாம்பிள்ளைகளில் தீர்க்கமான முடிவு.

இந்த அவலம் இன்னமும் மலேசிய இலக்கியச்சூழலில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனை. தமிழ்நாட்டு எழுத்தாளர்.. வேண்டாம் அவர் இப்போது உலக எழுத்தாளர், சாருவின் படைப்பில் காமரசம் சொட்டுகிறதென்று ஒரு பேராசிரியர் மேடையில் முழங்கிய போது நான் அதிர்ந்துபோனேன். சாருவின் எழுத்துகளை முழுமையாக ஆழமாக வாசிக்காத பட்சத்தில், நாலந்தர வாசக எழுத்தாளர்கள் கொண்டிருக்கின்ற கருத்தையே ஒரு பேராசிரியரும் கொண்டிருக்கின்ற போது, எப்படி அவரை இலக்கிய ஜாம்பவான் என்று எற்றுக்கொள்வது?

இவர் போன்ற மெத்தப் படித்தவர்களின் கைகளில்தான் இலக்கியம் இருப்பதான ஓர் நிலை இங்கே உருவாகி விட்டதே, அதை எப்படிக்கலைவது.? வாசிப்பில் அவர்களாகவே ஒரு தேடலை வைத்துக்கொண்டு, அவர்களுக்கு புரிகின்ற படைப்புகளை மட்டும் சிறந்த இலக்கியமாகவும், புரியாத சிக்கலான எழுத்துகளை, அவ்வளவாக சிறக்கவில்லை என்றும் சர்வசாதரணமாக சொல்லிச்சென்று விடுகின்றனரே.! என்ன செய்வது? பல்கலைக்கழக பேராசியர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் நம்பி தற்போதைய இலக்கியம் உலகம் நகர்ந்துகொண்டிருக்கின்ற பட்சத்தில் இலக்கியத்திற்கான சட்டதிட்டங்களை உருவாக்குகின்ற பொறுப்பினை ஏற்கின்ற நிலை அவர்களுக்கு ஏற்படுகிற போது, மாணவர்களுக்குப்
 புள்ளிகள் வழங்குகிற  அட்டவணையின்படியே இலக்கிய படைப்புகளையும் ஆராயத்துவங்கிவிடுகின்றனர்.

கடந்த வார சனிக்கிழமை, பெண் எழுத்தாளர்களின் இலக்கியத்தொகுப்பு நூல் ஒன்றின் வெளியீட்டு விழாவில் மதிப்பிற்குரிய இலக்கியவதி முனைவர் கிருஷணன் மணியம்  அவர்கள், `தமிழ்நாட்டு பெண் படைப்பாளிகள் வரம்பு மீறி எழுதுகிறார்கள். தமது அவயங்களை வெளிப்படையாக படைப்புகளின் வழி `இந்தா பார்’ என்று காட்டிக்கொள்கிறார்கள். நம் நாட்டில் அப்படி யாரும் இதுவரையில் எழுதியதில்லை. அது நமது கலாச்சாரமும் அல்ல, நமது பாணியும் அல்ல, நம் சமூதாயம் அதை ஏற்றுக்கொள்ளாது.’ என்று அக்கூட்டத்தில் பேசியிருக்கின்றார்.

நான் கேட்கிறேன் ஐய்யா, நீங்கள் இங்கே குறிப்பிட்ட வரம்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம்தான் என்ன? எந்த தமிழ்நாட்டுப்பெண் எழுத்தாளர் வரம்பு மீறி தமது படைப்புகளைப் படைத்திருக்கின்றார்? அந்த வரம்பு மீறிய படைப்பு என்பது எதுவென்று உதாரணம் காட்ட முடியுமா? எந்த இடத்தில் அந்தப் பெண் படைப்பாளி  வரம்பு மீறினார்? பெண் தமது அவயங்களைச் சொல்வது வரம்பு மீறுதல் ஆகுமா? இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் வரம்பு வைப்பதற்கு நீங்கள் யார்? மேலே நான் குறிப்பிட்ட சில உதாரணங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளதே -அப்படியென்றால் பத்திரிகைகள் வரம்பு மீறுகின்றனவா? அதை ஏன் ஐய்யா நீங்கள் தட்டிக்கேட்கவில்லை?  மலேசிய தமிழ் படைப்பாளிகளிடம் மட்டும் எதற்கு ஓயாமல் இந்த சட்டாம்பிள்ளைத்தனம்?

அதே நிகழ்வில் மலேசிய எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு பெ.இராஜேந்திரன் அவர்கள் பேசுகையில், பெண் படைப்பாளிகளுக்கு மலேசிய எழுத்தாளர் சங்கம் தொடந்து பரிசுகளை வழங்கிவருவது, ஆண் படைப்பாளிகளின் பெருந்தன்மையையே காட்டுகிறதென்கிற மிக கேவலமான கூற்று ஒன்றினை அதுவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவான பெண்குல மாணிக்கங்களின் முன்னிலையிலேயே சொல்லியிருக்கின்றார். அந்நிகழ்ச்சிக்குச் செல்லாத நான், தங்கை திருமதி யோகி சந்துரு அவர்கள் தமது முகநூலில் பகிர்ந்திருந்த வீடியோ பதிவின் மூலமாக அந்நிகழ்வினை ஓரளவு பார்த்துக்கேட்டு, அதிர்ந்துபோனேன்.  உலகத்தின் எந்த மூளையிலும் பெண் படைப்பாளிகளை இது போல் யாரும் கேவலப்படுத்த முடியாது. பெண்களிடம் படைப்பாற்றலே இல்லை, எதோ பிச்சைப் போடுவதைப்போல் பரிசுகளையும் அங்கீகாரங்களையும் வழங்கிவருவதைப்போல் இருந்த இவரின் பேச்சு நிஜமாலுமே பேரதிர்ச்சி. இந்த மனோபாவ சிந்தனையைக்கொண்டவர்தான் இன்றைய மலேசிய இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.! இவர்கள்தான் சிறந்த படைப்புகளை அடையாளாங்கண்டு இலக்கியத்துறையை வளார்க்க நினைப்பவர்கள் இங்கே.

தவறு எழுத்தாளர் சங்கத்துத்தலைவர் மேல்தான் என்றாலும் அவரிடம் கையேந்தி பிச்சை கேட்கிற  பெண் படப்பாளிகளின் மாதர்குல தலைவிகளை என்னவென்று சொல்வது. ! வாசிப்புத்திறன், எழுத்துத்திறன், சிந்திக்கும்திறன் அற்ற பெண் படைப்பாளிகள் சிலர் சிபாரிசுவேண்டி பரிசுகள் வேண்டி, அங்கீகாரம் வேண்டி, மண்டியிட்டார்களோ என்னவோ தெரியவில்லை.! எதற்கு இந்த விபரீத ஆசையெல்லாம்.!?  அங்கீகாரம்.. எழுத்தாளர் என்கிற அங்கீகார ஆசை. எழுத்தாளர் ஆவது அவ்வளவு எளிதான காரியமா என்ன.!?

இதுபோன்ற மேடைகளில் பரிசுகளைப் பெற்றுவிட்டால், எழுத்தாளர் சங்கத் தலைவர் தங்களை அங்கீகரித்து விட்டால், பெண், ஒரு படைப்பளி என்று தலைநிமிர்ந்து பரிணமிக்கத்துவங்கி விடுவாளோ.! பெண் படைப்பாளி என்று சொல்லிக்கொண்டு ஆண்களின் உதவியை நாடித்தானே பரிசு அங்கீகாரமெல்லாம் தேடுகிறீர்கள்.? பிறகு எதற்கு மலேசிய பெண் படைப்பாளிகளின் எழுத்துகள் என இலக்கியத்தை பால் பிரிவினைக்குள் கொண்டுவந்து கூறுபோடுவானேன்.!

இலக்கியத்தில் பால் பேதம் பார்ப்பதை ஏன் விட்டொழிக்கமாட்டேன் என்கிறார்கள் இந்தப்பெண்கள்?. பெண் படைப்பாளிகள், பெண் படைப்புகள் என்று தேடித்தேடி அறிமுகம் செய்து, அவர்களிடம் படைப்புகளை வாங்கி `மலேசியப்பெண்படைப்பாளிகள்’ என்று முத்திரையினைக் குத்தி, அதற்கு ஒரு விழா எடுத்து, ஐந்தாறு பெண்களைத்திரட்டி நாங்கள் சாதனை படைக்கின்றோமென்று கூவித்திரிகிற போக்கிற்கு என்றுதான் விடிவோ.

இலக்கியம் எல்லா எல்லைகளையும் தாண்டி, தமிழ் இலக்கியம் என்கிற ஒரே குடையின் கீழ்   இணைவதே சிறப்பென்று பல இலக்கியப் படைப்பாளிகள் முழங்கிக்கொண்டிருக்கின்ற வேளையில், இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடுகிற பெண்படைப்பாளிகள் மாறுவதாகத் தெரியவில்லை.

பழைய இலக்கியங்கள் பல, எழுதியது ஆணா, பெண்ணா அலியா? என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமலேயே, அந்த எழுத்தின் போதனைகளையும் தமிழின் அழகினையும் கல்விக்கூடங்கள் கற்று ஆராய்ந்து போதித்து வருகின்றார்கள். இங்கே பால் பேதங்களுக்கு அவசியம் ஏற்பட்டதே இல்லை.

எழுதுகிற ஒருவர் ஆணா பெண்ணா என்று உங்களுக்குத்தனிப்பட்ட முறையில் அறிமுகமாகும்போதுதானே, அவர் பெண் படைப்பாளி அல்லது அவர் ஆண் எழுத்தாளர் என்று அறிந்துகொள்ள முடிகிறது.!?  அதுவே தாம் யார் என்று பொதுவில் காட்டிக்கொள்ளாமலேயே பல படைப்புகளை எழுத்திதள்ளிய எத்தனையோ எழுத்தாளர்கள், பெண் பெயரிலேயே அல்லது ஆண் பெயரிலோ எழுதிவருகிறார்களே,  அவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பிர்கள்? எதை வைத்து இது ஆண் எழுத்து அல்லது பெண் தான் எழுதியிருப்பாள் என்கிற முடிவிற்கு வருவீர்கள், மாதர்குல மாணிக்கங்களே?

எழுத்தாளருக்கு எழுத்துதான் அறிமுகம்.  அவன் ஆணா அல்லது பெண்ணா என்பதெல்லாம் தேவையற்ற அலசல். மாறுங்கள் இல்லையேல் மாற்றப்படுவீர்கள்.



புதன், ஜூலை 17, 2013

குட்டி நகைச்சுவைக் கதை

காலையிலே, மகளை எழுப்புகிறார் தந்தை..

“ம்மா..ம்மா..”

“ஆ..”

“எழுந்திரிச்சிட்டியா?”

வெள்ளி, ஜூலை 12, 2013

கம்பளி

கொல்லப்பட்ட மிருகங்கள்
விட்டுச்சென்ற கம்பளி ஆடைகள்
சாலையெங்கும்..

வியாழன், ஜூலை 11, 2013

வாகன நெரிசல்

உள்ளூரிலேயே சுற்றிக்கொண்டு, எப்படிச்செல்வதென்று பாதிவழியிலேயே நின்று பாதை கேட்ட ஆள் நான்.

இன்று காலையில் படுபயங்கர வாகன நெரிசல்.
எப்படி எங்கே நுழைந்தாலும் நெரிசல் நெரிசல் நெரிசல்தான்.

பத்து நிமிடத்தில் அலுவலகம் செல்கிற நான், இன்று காலை முக்கால் மணி நேரம் வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலேயே மாட்டிக்கொண்டேன்.

பல வாகனங்கள் ஒன்றாக வரிசையாக  எதோ ஒரு சாலைக்குள் நுழைவதைப்பார்த்த நானும், அவர்களின் பின்னால் நுழந்துவிட்டேன். நெடுதூரம் கார்கள் வரிசையாக சென்று நாளாபக்கமும் பிரியவே, நான் நடுரோட்டில் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தேன். அதன் பிறகு எங்கே செல்வதென்று எனக்குப் புலப்படவில்லை. அப்போது நான் எந்த இடத்தில் உள்ளேன்.! என் அலுவலகத்திற்கு எப்படிப்போவது.? என்றும் எனக்கே விளங்கவில்லை.

இது என்ன சாலை? எங்கே விளம்பரப்பலகை? என தேடவும் ஆரம்பித்தேன்.

சரி போவோம். எங்கேயாவது சயின்போர்ட் தெரிந்தால் அதன்படி செல்லலாமே, என்று மனம்போனபோக்கில் என் காரும் போனது.
ஒன்றும் புலப்படவில்லை. தூரத்துல் ஒரு பெரிய தண்ணி டாங்கி தென்படவே, அது என்ன தண்ணீ டாங்கி என்று கண்ணாடியை மாட்டிக்கொண்டு பார்த்தேன்.

`பூச்சோங் பெர்மாய் தண்ணீர் தொட்டி’ என்று மலாய் மொழியில் எழுதியிருந்தது.

அங்கேயே ஒரு ஓரமாக காரை நிறுத்திவிட்டு, தம்பிக்கு அழைத்தேன். (கணவருக்கு வேண்டாம்- திட்டுவார்)

“டேய், நான் இங்கே பெர்மாய் தண்ணீ டாங்கி முன்னே நிற்கிறேன். எப்படி என் அலுவலகத்திற்குச்செல்வது?”

“அங்கே ஏன் போனே?”

“சரியான ஜேம்டா.. எங்கே போனாலும் நகரமுடியல..”

“இன்னிக்கு எல்லா இடத்திலேயும் ஜேம்தான். கூச்சாய்லாமாவில் பயங்கர கார்விபத்தாம்.! நீ ஏன் பெர்மாயில் போய் மாட்டிக்கிட்ட.? அங்கே இன்னும் அதிகமான ஜேம் ஆச்சே.”

“இல்லியே..கார்களே இல்லை.. நான் மட்டும்தான் இருக்கேன்.”

“அப்படியா, இன்னும் கொஞ்சதூரம் போ அப்புறம் தெரியும்.!! அப்படியே நேரா போ... ஒரு ஷாப்பிங் complex  வரும்.. அதைத்தாண்டி நேரா போ, நீ போர இடம் வந்திடும்.. அதுக்கப்புறம் உனக்கே தெரியும் எப்படிப்போகவேண்டுமென்று.. ஒகேவா?”

“ஹம்ம்ம், ஒகே.”

காரை செலுத்தினேன். கொஞ்சதூரம் சென்றவுடன் அங்கேயும் பயங்கர நெரிசல். கார்கள் நகரவேயில்லை. நத்தைபோல் ஊர்ந்தன. பெட்ரோல் எல்லாம் தீர்ந்துபோய் அதுவேறு சிக்னல் காட்டிக்கொண்டிருந்தது.

தம்பி சொன்ன ஷாப்ப்ங்க கம்லெஃக்ஸ் வந்தது.  அவன் `நேராக போ’ என்றான் ஆனால் பல கார்கள் வலது பக்கம் சென்று கொண்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் நானும் வலது பக்கம் செல்லத்துவங்கிவிட்டேன். கொஞ்சதூரம் சென்றவுடன் மீண்டும் குழப்பம். பாதை புரிபடவில்லை... எப்படி? 
அழைத்தேன் தம்பியை. எடுத்தான். விவரத்தைச்சொன்னேன்.

“ஏய்ய்ய்ய்ய்... (எரிச்சலுடன்) நான் உன்ன எந்த ரோட்டை எடுக்கச்சொன்னேன், எங்கே போனே நீ யீயீயீ? திரும்பு திரும்பு.. யூ டெர்ன் எடுத்து மீண்டும் அந்த ரவுண்டபோர்ட்டுக்கே வா. நான் சொன்னபாதையிலேயே போ.. காலையிலே உயிரை வாங்கிக்கிட்டு..!” முனகியபடி தொலைபேசியை வைத்தான். 

திரும்பி வந்து, அந்த சாலைவழியாக நுழைந்து, ஒன்பதுமுப்பதுக்குத்தான் ஆபிஸ் வந்தேன். 

இதிலிருந்து என்ன தெரிகிறது? 

புதிய தேவதையைவிட பழகிய பிசாசே மேல். 
 

என்ன எழவுடா இது.?

தேர்தல் முடிந்து இருமாதகாலம் ஆகப்போகிறது.

தேர்தல் குறித்த கணிப்பு, முடிவின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி. தங்களைக்கவர்ந்த தலைவர்கள் பதவியில் இல்லாமல் போன ஆதங்கம்.! எலெக்‌ஷன் கமிஷன் செய்துள்ள துரோகம்.! சிலபலரை பதவியில் இருந்து இறக்கப்போடப்படும் கோஷம்.! மாபெரும் கூட்டனிக்கட்சியான ம.சீ.சா எந்த ஒரு பதிவியையும் ஏற்க மறுத்துள்ள அதிரடி நடவடிக்கை.! எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரைப் பிடித்து சிறையில் அடைப்பது.! தேர்தலில் நடந்த மோசடிகளுக்கு ஆதாரங்களைத் திரட்டுவது.! தேர்தல் முடிவுகள் பிடிக்காமல் கோஷம் போடுபவர்கள், நாட்டை விட்டு ஓடுங்கள் என்கிற வெட்டி எச்சரிக்கை..! நாடு உங்கப்பனுடையதா? இல்லை, இருப்பினும் அது உங்கப்பனுடையதுமில்லை என்கிற காமடி கோஷங்கள்.!

பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுதிரட்டி பேதங்களற்ற ஒரே கட்சியாக நியமிக்க முயல்வது.! எங்களுக்கு இனக்கட்சியே வேண்டாம், ஒரே இனம் அதுதான் `பங்சா மலேசியா’ என்கிற அதிரடி முழக்கங்கள்!.  ஐம்பத்தாறு ஆண்டுகள் அடிமைப்பட்டது போதும், ஊழல் ஆட்சியினை வீழ்த்துவோம் என்கிற வீர வசனம்.!

நாட்டின் தொடர் மேம்பாட்டுத்திட்டதிற்கு, ஒரே ஆட்சியின் கீழ் செயல்படுவதுதான் சாலச்சிறந்தது. 2020 நோக்கிப்பயணிக்கும் நாம், ஏன் தீய சக்திகளின் தூண்டுதலில் சிக்கிக்கொள்ளுதல் வேண்டும்.!? வளர்ந்த நாடு என்கிற அங்கீகாரம் நம் நாட்டிற்குக் கிடைத்துவிட்டது அதைச் சீர்குலைக்கின்ற நோக்கத்தில் தீட்டப்படுகின்ற அனைத்துத் திட்டங்களுக்கும் சமாதி கட்டுவோம், என்கிற சூலுரை. இருபத்திரண்டு ஆண்டுகள் நாட்டை ஆண்ட, துன் டாக்டர் மஹாதீரே நாட்டையும் மக்களையும் கெடுத்த பாவி.! ஏழைகளுக்கு உதவுவதற்கு ஏன் ஒர் இனத்தை மட்டும் தேர்ந்தெடுக்கவேண்டும் எல்லா இனத்திலுமே ஏழைகள் உள்ளனரே, அவர்களுக்கு இவ்வளவு நாளாக இந்த அரசாங்கம் என்ன செய்தது? கூட்டனிக்கட்சிகள் தொடைநடுங்கிகள், வாய் பேசாமௌனிகள்.! `சீனர்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட பத்திரிகையின் லைசன்ஸ் ஏன் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.?

தேர்தலில் மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்பதனைச் சுட்டிக்காட்டிய பத்திரிகைகளை ஏன் பறிமுதல் செய்தீர்கள்? சீன தமிழ் பள்ளியை மூடவேண்டுமென்று சொல்வது இனவாதமில்லையா? சீனர் ஒருவர் மைக் பிடித்து மேடையேறி தேர்தலின் மோசடிகளைப் பற்றிப் பேசினால் அது இனவாதமா? பொதுமேடையில் மைக் பிடித்து, இந்து மதத்தை இழிவு செய்தவன் இன்னும் உலவுகிறானே.!? அரசாங்கத்திற்கு எதிராகக் குரல்கொடுத்த கல்லூரி மாணவனை போலிஸ் பிடித்துச்செல்கிறது.! அமைதிப்பேரணியில் குண்டர்களின் அட்டகாசம், போலிஸ் வாளா இருந்தது.! பெண் வழக்குரைஞரின் வயிற்றில் உதைத்தான் போலிஸ்..! அமைதிப்பேரணியில் போலிஸ் அராஜகம்.! ம.இ.கா, எங்களின் முன்னோர்களை ஏமாற்றியதுபோதும், இனி நாங்கள் ஏமாறுவதாக இல்லை.! ம.சீ.சவிற்கு வேலை போய் பல ஆண்டுகள் ஆகின்றன இருப்பினும் அவர்கள் ஆள் இல்லா டீக் கடையில் தவ் ஃபூ பா செய்துகொண்டிருக்கின்றார்கள்.! அம்னோ என்கிற கட்சி அம்னோவாக மட்டுமே இருக்கட்டும், எதற்கு பாரிசான் என்கிற போர்வையில் கண்கட்டி வித்தை காட்டுகிறது.!? மலேசிய மக்கள் அதிக அரசியல் பேசுவதைத் தவிர்க்கவேண்டும், கடமைக்கு முன்னுரிமை கொடுங்கள் - பிரதமர் எச்சரிக்கை.!  இணையத்தலத்தில் வரும் அனைத்தும் உண்மையல்ல, அவைகளைச் சீர்தூக்கிப்பாருங்கள்.........

இப்படி இன்னும் பலவிதமான சாடல்கள், எச்சரிக்கைகள், அறைகூவல்கள், செய்திகள், குறுந்தகவல்கள் மின்மடல்கள் என எழுத்துவடிவில், மேடைகோஷங்களின் வழி, இணைத்தில் வழி, சமூகவலைத்தலங்களின் வழி, வானொலி தொலைக்காட்சி வழி தொடர்ந்து வந்தவண்ணமாகவே உள்ளன.

அரசியல் குறித்த கட்டுரைகள் எழுதுவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல என்பார்கள்.  அதற்கு பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று அங்கே சொல்லப்பட்ட  செய்திகளை ஆதாரங்களாகத்திரட்டி, இங்கே இப்படி நடந்தது, அங்கே ஏற்கனவே அவர் அப்படிச்சொன்னார், நடந்தது ஒன்று மேடை முழக்கம் ஒன்று, வாக்குகள் காப்பாற்றப்படவில்லை, நடந்தது என்னன்னா? வரலாறு, பார்லிமெண்ட் பேச்சு..!!  போன்ற  தகவல்களையெல்லாம் ஆதாரமாகத்திரட்டி அல்லது இணையத்தலங்களை சாட்சியாகக்கொண்டு, அங்கே சென்று சில விவரங்களை வாசித்துச் செய்திகளைச்சேகரிப்பது, அல்லது பத்திரமாகச் சேகரித்து வைத்திருக்கின்ற பழைய பத்திரிகைகள், இதழ்கள், சரித்திரப் புத்தகங்கள் என தகவல்களைத் திரட்டுவது, இதுவும் இல்லையென்றால் விவரம் தெரிந்தவர்களை தொலைபேசியின் வழி அழைத்து இது எதனால் நடந்தது.? அது எதனால் நடந்தது? போன்ற விவரங்களைக் கேட்டுவாங்கியாவது  அரசியல் ஆய்வுக்கட்டுரைகளைத் தயார் செய்துவிடுவார்கள்.

என்னைப்பொருத்தவரையில், அரசியலைப் பற்றித்  தெரிந்துகொள்வதற்கு  ஆய்வுகள் தேவையே இல்லை. நடப்புச்சூழல் என்ன சொல்கிறது? அந்த நடப்பு நமக்கு என்னமாதிரியான இன்னல்களையும் அசௌகரியங்களையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்குச்சம்பந்தப்பட்டவர் யார்? என்ன நடக்கிறது நாட்டில்.? போன்ற நடப்புச்சூழல்களில் தீர்க்கப்பார்வை இருந்துவிட்டால் அரசியல் சிந்தனை தானாக வந்துவிடும்.

இந்தத் தீர்க்கப்பார்வை அனைவருக்கும் வருமா? வராது. அதுவும் மலேசியத்தமிழ்ர்களிடத்தில் அதை எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம். ஒரு காரியம் நடக்கிறதென்றால், அது ஏன் எதனால் நடக்கிறது என்கிற தெளிவே இல்லாமல், எருமை மாட்டின் மீது மழை பெய்வதைப்போல் தேமே’என்று இருக்கின்றார்கள். எங்கேயோ காத்தடிக்கிறது, எங்கேயோ மழை பெய்கிறது, நமக்கென்ன வந்தது என்கிற சிந்தனையிலே வாழ்ந்து, சுற்றியிருப்பவர்களை தினம் தினம் சாகடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நடப்பு நிகழ்விற்கு அதிக அளவில் மக்கள் அலையலையென திரள்கின்றனர் என்றால் அதில் எதோ ஒரு சிறப்பு இருந்திருக்கவேண்டும்தானே.! வேலைவெட்டியில்லாதவர்கள் ஒன்றுகூடி அராஜகம் செய்கிறார்கள் என்று போகிற போக்கில் புழுதிவாரி விட்டுச்சென்றால், என்ன சொல்ல.!

தனிமனிதனான ஒருவனுக்கு ஒரு வேலை கிடைத்துவிட்டது, மாதம் முடிந்தவுடன் சம்பளம் வருகிறது. ஆக, அவன் ஒருவனின் வண்டி சரியாக ஓடுகிறதென்றால் அரசியல் நடப்புகள் பற்றி எனக்கு என்ன கவலை என்கிற அவனது மெத்தனப்போக்குச் சிந்தனை மாறவேண்டாமா.?

இரவும் பகலும் படித்து நல்ல நிலையில் தேர்ச்சி பெற்ற உனது அப்பாவிப்பிளைகளுக்கு யூனிவர்சிட்டியில் இடம் கிடைக்காமல், கல்வியமைச்சு, அரசியல் தலைவர்களின் வீடு என்று அலைந்திருக்கின்றாயா?  நீ கேட்கிற கோஸ் ஒன்று அவர்களாக (அரசாங்கம்) நாயிற்கு எலும்புத்துண்டு போடுவதைப்போல் கொடுக்கின்ற கோஸ் ஒன்று என்று உன் மகனோ மகளோ தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதை சந்தித்துள்ளீரா? ஏழையாக நாம் இருந்தாலும் நமக்கு வீடுகள் வாங்குவதற்கு சிறப்புச்சலுகை கிடைக்காமல் (bumiputra sahaja) வீடே வாங்க முடியாமல் காலம் முழுக்க புறம்போக்கு நிலத்திலேயே குடியிருந்த அனுபவம் இருந்திருக்கா உனக்கு? போலிஸ் தடுப்புக்காவலில் குற்றமென்று நிரூப்பிக்கும் முன்பே போலிஸ்காரகள் மூலமாக துன்புறுத்தப்பட்டு மரணதண்டனைக்குள்ளான உன் நண்பர், மகன், சகோதரன், உறவுகள் என யாரேனும் உனக்கு உள்ளனரா? பணக்கார மலாய் மாணவன் இலவச கல்வியில் உயர் படிப்பிற்குச்செல்லுகையில், அதைவிட அதிக மதிப்பெண் வாங்கிய ஏழைத்தமிழன் ஒருவனுக்கு எதுவுமே கிடைக்காமல் படித்தது போதுமென்றெண்ணி பாதியிலே வேலைக்குப்போன ஒருவனை நீ சந்தித்ததில்லை? வீட்டை விற்று, நகைகளை விற்று, பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, ஒரு வேலைக்குப் பலவேலைகள் செய்து கஷ்டப்பட்டு பிள்ளைகளைப் படிக்கவைத்து, அவர்கள் படித்துமுடித்தபின் நிம்மத்திப்பெருமூச்சு விடுகிற தருணத்தின் போது, வெளிநாட்டில் இவர்கள் படித்த அந்தக் கல்லூரியை அரசாங்க அங்கிகாரத்திலிருந்து நீக்கிவிடுகிற நிலை வந்துள்ள உன் உறவுகளை சந்தித்திருக்கின்றாயா?

விலைவாசி ஏற்றத்தின் காரணமாக நாலாயிரத்தி ஐந்நூறு நிங்கிட் சம்பளம் வாங்குபவனே முப்பத்தாறு ரிங்கிட்தான் சேமிக்க முடியுமென்கிற ஆய்வு ஒன்றினை எதிர்க்கட்சி தமது இணைய ஏட்டில் இணைத்துள்ளதே, வாசித்தாயா அதை? தமிழ் பள்ளி தமிழ் பள்ளி என ஓயாமல் போராடிக் கொண்டிருக்கின்றார்களே, தமிழ்ப்பள்ளியில் படித்து முடித்தபின்பு அடுத்தகட்ட நகர்தலுக்கு அந்தத் தமிழ் தேர்ச்சி உதவி செய்யவில்லையே, அது குறித்த புரிதல் இருக்கா உனக்கு? தமிழிலேயே கற்று பல்கலைக்கழகம் வரை சென்றாலும் அந்தப்படிப்பிற்கு வேலைவாய்ப்புகள் என்பது குதிரைக்கொம்பு என்பது அறிந்ததில்லையா நீ?  இருக்கின்ற கொஞ்ச நஞ்ச தமிழர்களையும் ஜாதிவாரியாக, இனவாரியாகப் பிரித்து (மலையாளி/தெலுங்கு/கன்னடர்) அவர்களின் சங்கங்களுக்கும் தலைமை தாங்கி உரமிடும் அரசியல் தலைவர்களைச் சந்தித்ததேயில்லையா நீ?  நாம் நமது ஊதியத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, ஆனால் வருடம் தவறாமல் வருமானவரி செலுத்துகின்றோமே, அந்த வரியில் எத்தனை பிரமாண்டமான சொத்துகளை வாங்கிக்குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் தலைவர்களைப் பற்றி இதுவரையிலும் கேள்விப்பட்டதில்லையா?  சுங்கைத்துறை அதிகாரிகளால் விசாரிக்க அழைக்கப்பட்ட ஒர் எதிர்க்கட்சி உறுப்பினரை அக்கட்டத்தின் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்தபோது அவரின் மனைவி, ஒரு மாத கர்ப்பிணி. உனக்கு இதுபோன்ற சூழல் வந்திருந்தால்? இலக்கியம் என்கிற பெயரில் அரசியல் தலைவர்களை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் கொட்டமடிப்பதை உணர்வுப்பூர்வமாக யோசித்ததுண்டா?......

இன்னும் இருக்கின்றது, இதற்கு மேலும் யோசித்தால் எனக்கு மயக்கமே வந்துவிடும். அரசியல் என்றால் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு இந்த சான்றுகள் போதுமென்று நினைக்கின்றேன்..

ஓட்டுரிமை என்றால் என்னவென்று தெரியாமல் கூட பல தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது இன்னுமொரு வேதனை.

ஒரு சம்பவம், வாக்களித்த மறுநாள் வேலை. சில இடங்களில் பொதுவிடுமுறையேயானாலும் எங்களுக்கு வேலை. வேலைக்கு வந்த நான் பல சம்பவங்களால் அதிர்ந்துபோனேன்.

பலர் ஓயாமல் தேர்தல் முடிவுகள் பற்றிய ஆதங்கத்திலேயே மூழ்கியிருந்தார்கள். வருகிற கஸ்டமர்களும் தேர்தல் முடிவில் திருப்தியில்லை என்றே புலம்பிக்கொண்டிருந்தார்கள். சீனர்கள் சிலர் ஆவேச அரசியல் பேச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.  நம்மவர்களும் சிலர் சேவை மையங்களைத் திறக்கவிருப்பதாகக் கூறி, இதை கொஞ்சம் டைப் செய்துகொடு, அதை கொஞ்சம் எடிட் செய்துகொடு என, என்னை வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள். இனி எங்களுக்கு நடப்பு அரசாங்க உதவிகள் தேவையில்லை. நாங்களே ஒரு கட்சி ஆரம்பித்து மக்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளைச் செய்யப்போகிறோம் என்கிற ஆர்வக்கோளாறு `பொறம்போக்கு’ வசனங்கள் ஒருபுறமென ஒரே அலப்பரைதான்.

இங்கே வேலை செய்கிற நம்மவர் ஒருவர் என்னிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார். அவரின் பேச்சு என்னை வெறுப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. பேச்சு இதுதான்..

`என்னங்க ஓட்டு ஓட்டு.. எல்லாம் திருட்டு. இந்த ஆளுங்கட்சி எப்படி ஜெய்க்கிறாங்க தெரியுமா? ம.இ.கா உதவியுடன்தான். ஏன்னா ம.இ.கா ஒரு கேங்ஸ்டர் அரசியல் கட்சி. அந்த கேங்ஸ்டர் அரசியல் கட்சியால் மக்களை உருட்டி மிரட்டி பாரிசானுக்கு ஓட்டுப்போடவைத்து விடுவார்கள். இது வழக்கமான ஒன்றுதான். நாம் எப்படி தலைகீழாக நின்றாலும் பாரிசான்தான் ஜெய்க்கும். எங்களுக்கு தெரியும், அவர்கள் நிறைய இடத்தில் கேங்ஸ்டர்களை இறக்கி ரெடியாக வைத்துவிட்டார்கள்.  தோற்றுப்போயிருந்தால், ம.இ.காவுடன் சேர்ந்து ரௌடித்தனம் செய்து சீனர்களைக் கொன்றிருப்பார்கள். இதுதான் உண்மை..’ என்றான்.

“அடேய் மக்கு சாம்பராணி, அறிவிருக்காடா உனக்கு.!?” என கத்தவேண்டும்போல் இருந்தது எனக்கு. இருப்பினும் இவன்போன்ற அறிவிலிகளிடம் பேசுவது பெருத்த அவமானம் என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு,  `ஓ.. ’, என வேண்டாவெறுப்பிற்குக் குரல்கொடுத்துவிட்டு,  “நேற்றுதான் ஓட்டுப்போடப்போனோம், ஆனால் இன்று உங்களின் விரலில் உள்ள மை அழிந்துள்ளதே எப்படி?”  என்றேன்.

“எனக்குச் சலிச்சுப்போச்சுங்க.. ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு.. (இருபத்தெட்டு வயதுதான் இருக்கும் - என்னத்த சலிச்சுப்போச்சோ..!? )  என்னத்தக்கண்டோம்.!? எப்படிப் போட்டாலும் அவர்கள்தான் (ஆளுங்கட்சி)  ஜெய்ப்பார்கள். ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்ட அவர்களை விரட்ட முடியுமா? அதான் நான் இந்த முறை ஓட்டுப்போட போகல..”  என்றான்.

எனக்கு வந்த கோபம், சொல்லி மாளாது. அறைவிடவேண்டும்போல் இருந்தது. பேசிப் பிரியோஜனமில்லை என்பதால், பைத்தியம் போல் பேசிக்கொண்டிருந்த அவனை நான் சட்டை செய்யவேயில்லை.

இன்னொரு கூத்து. முடிக்கும்போது சிரிக்கவேண்டுமல்லவா.! 

இங்குள்ள பல தமிழர்களுக்கு, தமிழக/இந்திய அரசியலில் இருக்கின்ற ஈடுபாடும் அறிவும் ஞானமும்  நம் நாட்டு அரசியலில் அறவே இல்லை என்பதனை இந்த உரையாடல் சொல்லும்.

கண்டீனில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, தர்மேந்திராவை போலிஸ்காரர்கள் கொடூரமான முறையில் அடித்துக்கொன்றுள்ளார்கள்,  என்றேன். அதற்கு என்னுடன் உணவருந்திய அந்த ஆள் சொன்ன அடுத்தத் தகவலில் நான் மூர்ச்சையானேன்.

“ஆமாம், அவன் பம்பாய் குண்டு வெடிப்பின் தீவிரவாதி, சாகட்டும். அவனால் எத்தனை ஸ்கூல் பஸ்கள் குண்டுவெட்டிப்புக்குள்ளாயிருந்தன தெரியுமா?” என்றார்.

என்ன எழவுடா இது..!!?

ஜூலை மாத வல்லின இணைய இதழில் வெளிவந்துள்ள எனது அரசியல் கட்டுரை.       

சனி, ஜூலை 06, 2013

மனம் முழுக்கக் காதல்

நீ வராத நாட்களில்
பொழுதுபோகவில்லை
இருப்பினும் நீ
பொழுதுபோக்கிற்காக அல்ல....

%%%%%%

குறட்டை
ஒரு மாஸ்டர் பெட்ரூம்’ஐயே
தனதாக்கிக்கொள்கிறது

%%%%%%%

எனக்கு `மிக நல்லவள்’ 
என்கிற பெயர் எடுக்க ஆசை. 
சிலர் -சரியாகத்தான் சொல்கிறார்கள் - 
சிலர் பொய் சொல்கிறார்கள்

%%%%%%%%

ஊடலும் போர் அடிக்கிறது
ஆகவே, ஊடல் கொண்டு
நிறுத்திக்கொள்கிறேன்

%%%%%%%%

மனமுழுக்கக் காதல்
உனக்காக அல்ல
எனக்காக

%%%%%%%

நானே நுழைந்து
நானே புகுந்து
நானே தொலைந்து
நானே தேடுகிறேன்
என்னை

%%%%%%%

எல்லோரும் அப்படித்தான்
சொல்கிற நாமும்
அப்படித்தான்..

%%%%%%%%

டிரஸ் போட்டுட்டு
ஒரு சிரிப்பு
தலைவாரிவிட்டு
ஒரு சிரிப்பு
பொட்டுவைத்துவிட்டு
ஒரு சிரிப்பு
பௌடர் போட்டுவிட்டு
ஒரு சிரிப்பு
பர்ஃப்யூம் போட்டுவிட்டும்
சிரிப்புதான்...
காலை மாலை
கண்ணாடி என்ன நினைக்கும்?

%%%%%%%

என்னை விட
புறா அழகு
உன்னைவிடவும்தான்

%%%%%%%

ரசித்து ரசித்து
பழகிப்போச்சு..
விட்டு விலகத்தான்
முடியவில்லை..

%%%%%%%

மீசை வைத்த நீ
என்னை அக்கா என்றபோது
நான் `அண்டி’யானேன்