வியாழன், ஏப்ரல் 19, 2012

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கு
அதிர்ஷ்டம்
வரும் போகும்..

அதிர்ஷ்டம் பணமாக வந்தால்
பணமும் வந்தவழியே..

அதிர்ஷ்டம்
பொருளாகக் கிடைப்பதால்

எனக்கு இது கிடைத்தது?
உனக்கு என்ன கிடைத்தது?
இந்த பொருள் என்னிடம் உண்டு!
அந்த பொருளும் என்னிடம் உண்டு!
என்ன செய்வது?
எனக்கும் புரியவில்லை!?
யாரிடமாவது விற்கவேண்டும்
பணமாக்கவேண்டும்..
போன வருடம் கிடைத்ததே அப்படியே இருக்கு
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
அவருக்கு என்ன கிடைத்ததாம்!
இவருக்கு என்ன கிடைத்திருக்குமோ!?
மாற்றிக்கொள்ள கேட்டால் கொடுப்பார்களா?
விலை ஒப்பீடு வந்தால், கூடுதல் பணம் கொடுக்கனுமே
நாமாக இருந்தாலும் சும்மா கொடுப்போமா?
பணம் வாங்காமல் விடமாட்டோமே!
சரி இருக்கட்டும்
உறவுகளில் யாருக்காவது
திருமணம் பிறந்தநாள் என்றால்
பரிசாக கொடுத்து விடலாம்

அதிர்ஷ்டம் கூட
குழப்பம்தான்

அதிர்ஷ்டம் ஒண்ணும்
இல்லாததைக் கொடுத்துவிட வில்லை

அதிர்ஷ்டம் கூட
வியாபார சிந்தனைதான்

அதிர்ஷ்டம் கூட
வெட்டி அரட்டைதான்...

இருப்பினும்
இன்னும் ஓய்ந்தபாடில்லை
அதிர்ஷ்ட சிந்தனை
எனக்கும் தான்..!!

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புளிப்பு மிட்டாய்

நீயும் திட்டு
விளங்காமல் நானும்
கொஞ்சம் திட்டி வைக்கிறேன்
இப்படி கொந்தளித்தால் தானே
உனக்கு நான் நல்லவன்
ஊருக்கு புரட்சியாளன்

யாருங்க ஊனம்?

சிலரிடம் இருக்கும் அபாரத் திறமைகளைக் காணும் போது, நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் செய்ய இயலவில்லை என்று நினைக்கையில் மனம் சில விஷயங்களைச் செய்துபார்க்கத் துடிக்கும்.

சில நாட்களாக என்னால் முடியுமா என சிலரின் கைவரப்பெற்ற அபாரத் திறமைகளை நான் என்னிடம் பரிசோதித்த்துப் பார்த்துக் கொண்டேன்.
கீழே ஒரு காகிதத்தை வைத்து, வலது கால் விரல்களில் பென்சிலைப் பொருத்தி, (கால்களால் வெட்கத்தில் கோலம் போடுவது சுலபம்) அந்த காகிதத்தின் மீது `விஜி’ என்று எழுதிப்பார்த்தேன். முடியவில்லை, அது அவ்வளவு சுலபமேயல்ல. மண்ணில் கோழி பிராண்டிய குப்பை போல் வந்தது என் எழுத்து. மீண்டும் முயன்றேன், தோல்வியே. மிக மிக கடினமான ஒரு காரியமாகவே இருந்தது. அதற்குள் காலின் நடு விரல் நரம்பு வேறு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அது வேறு ஒரு பக்கம் வலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது!  அந்த விரலை இழுத்து நேராக ஆக்கிக்கொண்டு மீண்டும் முயன்றேன், ஓரளவு வந்தது இருப்பினும் அழகாக வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றும் கோணல்மாணலாக அலங்கோலமாகவே வந்தது.

அடுத்து, மறுபடியும் அதே பென்சிலை இடது கால் விரல்களின் நுழைத்துக்கொண்டு எழுத முயன்றேன், அறவே முடியவில்லை, இன்னும் கூடுதலாகச் சிரமப்பட்டேன். வலது காலிலாவது ஒரு விரலில்தான் சுளுக்கிக்கொண்டது, இடது காலில் பெருவிரலும் சேர்ந்து இழுத்துக்கொண்டது. பொறுக்கமுடியாத வலியை அனுபவிக்க நேர்ந்தது.

நமக்கு வலது கைப்பழக்கம் எழுதுவதற்குச் சரளமாக இருந்து விட்டால், வலதுகாலால் கொஞ்சம் எழுத முடிகிறது. அதுவே இடது கால் என்று வருகிறபோது கால் சுழலும்போது உடம்பும் ஆடுகிறது, எழுத்துவருவதில் சிக்கல் ஏற்படுகிறது.  எனது கால்களைக்கொண்டு எழுதும் பயிற்சியில்  ஈடுபட்டபோது கண்ட ஆராய்ச்சி இது.

அடுத்து, வாயில் பேனாவை வைத்துக்கொண்டு எழுத முயற்சி செய்தேன்.. பேனா நீட்டமாக இருப்பதான் எழுத்து காகிதத்தில் சரியாக விழவில்லை. காகிதத்தில் எழுதுகிறபோது பேனா வாயிற்குள் நுழைந்து நுழைந்து, தொண்டையினை உராயும்போது, குமட்டல் வந்து எச்சில் ஒழுகுகிறது.

ஆக, பேனா சரிப்பட்டு வராது என்பதால், பென்சிலை சிரியதாகச் சீவி (குட்டையான பென்சில் என்றால் சுலபம்) வாயிற்கும் காகிதத்திற்கும் இரண்டு இஞ்ச், பென்சிலும் அதே அளவில் இருப்பதை உறுதி செய்துகொண்டு., எழுத ஆரம்பித்தேன்.

வாயில் கவ்விய அந்தச் சிறிய பென்சிலால் `அம்மா’ என்று எழுதிப்பார்த்தேன். அதை எழுதி முடிக்கவே அப்பப்ப்பா என்றிருந்தது. எவ்வளவு சிரமங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது தெரியுமா.!. 

`அ` என்கிற எழுத்தை எழுதும்போது தலையும் சேர்ந்து சுழல்கிறது. வாயில்  நுழைத்த பென்சில் வேறு நழுவிக்கொண்டே இருந்தது. பற்களால் கடித்துக்கொண்டும், உதட்டால் இறுக்கிக்கொண்டும்... பெரும்  பாடாகிவிட்டது நிலை.

அம்மா என்கிற மூன்றெழுத்தை எழுதிமுடிக்கவே சில நிமிடங்கள் ஆனது. பென்சில் அங்கும் இங்கும் வளைந்தது. வாயிலிருந்து எச்சில் வேறு வடிந்து காகிதத்தை நனைத்து நாசம் செய்தது. தலையும் ஆடுகிறது,  ஆடும்போது தலைவலியும் சேர்ந்து வருகிறது. மிகவும் சிரமப்பட்டேன். குனிந்து குனிந்து எழுதுகிறபோது முதுகு வளையும், அப்போது  இடுப்பும் சேர்ந்து வளைகிறதல்லவா, அத்தருணத்தில் பின்புறத்தின் நடுமுதுகுப் பகுதி வலிக்கும். கீழே அமர்ந்துகொண்டு இதைச் செய்யும்போது யோகாசனம் செய்வதுபோல் இருந்தது, நிச்சயம் கொஞ்சம் குண்டானவர்கள் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.

நான் வலது கைப்பழக்கம் உள்ளவள். எழுதுவது தொடங்கி எடுப்பது கொடுப்பது எல்லாமும் வலது கைதான். உதைப்பது, முதல் அடி எடுத்து வைப்பது, படியேறுவது என வலது காலும் எதற்கும் முதலாவதாகவே பயணிக்கும். பெரும்பாலும் பலருக்கு வலது கை வலது கால் பழக்கமாகத் தான் இருக்கும். யாரோ ஒரு சிலர் தான்  இடது கைப்பழக்கம், இடது கால்பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பத்தில் மூன்றுபேர் இடது கை கால் பழக்கமுள்ளவர்களை இப்போது அதிக அளவில் காணலாம்.

இடது கை கால் பழக்கமுள்ளவர்கள் அறிவாளிகள் என்று யாரோ ஒரு சிலர் பரவலாகக் கிளப்பிவிட்ட புரளியால், குழந்தைகளை குழந்தைப்பருவத்திலேயே இடது கைப்பழக்கம் வருவதைப்போன்று செயற்கையாகப் பழக்கப்படுத்தி விடுகின்ற பெற்றோர்களும் இருக்கவேதான் செய்கிறார்கள்.  நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது.
இடது கை கால் பழக்கமுள்ளவர்கள், இடது கையால் பூப்பந்து விளையாடுவார்கள், இடது காலால் உதைத்து காற்பந்து விளையாடுவார்கள்,  சிலர் உணவு கூட இடது கையால் எடுத்துச் சாப்பிடுவார்கள். எதை எடுத்தாலும் இடது கையையே பயன் படுத்துவார்கள். கோழி, இறைச்சி, மீன் போன்றவற்றை துண்டு போடும் போது கூட இடது கைதான், இதைப் பார்க்கும் நமக்கு வித்தியாசமாகவே தோன்றும்.

இடது கை பழக்குமுள்ளவர்கள் எழுதுவதைப்பார்க்கும்போது எனக்கு படு குஷியாகிடும். எதோ நமக்கு இல்லாத ஒரு தனித் திறமை அவர்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு ஆர்வத்தில், அவர்கள் எழுதும் போது, வைத்தக்கண் வாங்காமல் அவர்கள் எழுதும் பாணியை ரசிப்பேன். எழுதுகிற எழுத்து அழகாக இருந்து விட்டால், ஒரே ஆச்சிரியம்.  

அதே மாதிரி நானும் எழுதிப்பார்ப்பேன். வலது கையால் எழுதும் போது, இடமிருந்து வலமாக எழுதுவோம்.இடது கை பழக்கமுள்ளவர்களும் அப்படியேதான் எழுதுவார்கள், ஆனால் நான், இடது கையால் எழுதிப்பழகும்போது, எழுத்து வலமிருந்து இடமாகச்செல்கிறது. எழுதியதை, கண்ணாடியின் முன் வைத்துப்பார்த்தால்தான், அந்த எழுத்தை சாரியாகப் வாசிக்க முடியும். இல்லையென்றால் அது தலைகீழாக இருக்கும்.

இவற்றையெல்லாம் ஏன் நான் பகிர்கிறேன் என்றால், எல்லாம் இருந்தும் நாம் ஊனமாகவே உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

இப்போது சொல்லுங்கள்.. யார் இங்கே ஊனம்?  
  

வெள்ளி, ஏப்ரல் 13, 2012

இறக்கி வைத்தேன்

நேரம் ஆக ஆக ஒரு வித பதற்றத்துடன் என் பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.  பொழுதுவிடிந்தால் நான் வசிக்கும் இடத்திலிருந்து நானூறு கிலோமீட்டர் அப்பாலில் உள்ள ஒரு இடத்திற்கு பயணம் செல்லவேண்டும். அதை நினைக்கும்போதே உடலும் மனமும் மிகவும் சோர்வாகவே இருந்தது.

நான் பணிபுரியும் கம்பனியின் நூறு ஆண்டு சாதனைக் கொண்டாட்ட விழா அங்கே வெகு விமர்சையாக நடைபெறவிருப்பதால் ஒவ்வொரு பணியாளர்களும் விசுவாச உணர்வோடு அதில் பங்குகொள்ளவேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில் எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தார்கள்.

முடிந்தவரையில் இதுபோன்ற நிகழ்வுகளை கொஞ்ச காலமாக தவிர்த்து வருகிறேன்.தவிர்ப்பதற்குக் காரணம், பெரும்பாலான வேளைகளில் வாகனமும் சாலையும், போக்குவரத்து நெரிசலுமாக அலைந்து அலைந்து பிரயாணமென்றால் பீதியைக்கிளப்புகிறது.

சொற்ப நேர பிரயாணமென்றால் பரவாயில்லை, இது குறைந்தது ஐந்து அல்லது ஆறு மணிநேரப் பிரயாணமாகும். அதுவும் சரியான சாலையமைப்பு இல்லாத காட்டுப்பாதையில் குறைந்தது ஒரு மணிநேரம் பிரயாணமாம். பஸ் பரதநாட்டியம் ஆடும் அந்த சாலையில் என ஆடிக்காட்டினான் என் சக ஊழியன்.

காலை ஒன்பது மணிக்கு பஸ் புறப்படும் என்று ஒலிப்பெருக்கியில் நான் தான் அறிவிப்பு செய்தேன். ஒன்பது என்றால் பத்து ஆகும் என்பது ஒருபக்கமிருந்தாலும், பஸ் புறப்பட்டுப் போய் சேர, மதியம் இரண்டாகும் என்கிறார்கள். சேர்ந்தவுடன் அங்கே எங்களுக்கென்றே தயாரித்து வைத்திருக்கின்ற மதிய உணவை எடுக்கவேண்டும். (உணவு என்ன லட்சணமாக இருக்குமோ என்பதை நினைத்தால், இப்போதே வயிற்றைப் பிரட்டுகிறது.)

அதன்பிறகு ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்ளவேண்டுமாம். அநாதைக்குழந்தைகளின் அவல நிலை, அவர்களைப் பராமறிக்கும் இல்லம் பற்றிய தகவல்கள், குழந்தை வளர்ப்பு, ஏன் குழந்தைகள் அநாதைகளாக் கப்படுகிறார்கள் போன்ற சிந்தனைத்தொகுப்பு.. தேநீர் விருந்தோடு. (எனக்கு இப்பவே கண்ணைக்கட்டுகிறது). கம்பனி பொதுச்சேவையில் ஈடுபட்டுள்ளது என்பதை இது போன்ற நிகழ்வுகளில் பறைச்சாற்றிக்கொள்கிறது. இந்த நிகழ்வின் படங்கள் பத்திரிகைகளிலும் பரவலாக வரும், பணமும் கொடுப்பார்கள், நல்ல சேவைதான்.

செக் இன், ஹோட்டல் ரூம்மிற்கு. பெரிய கூட்டமாக இருப்பதால் அறையின் சாவி கிடைப்பதற்கு எப்படியும் மணி ஐந்து ஆகும். பிறகு அவரவர் அறைகளுக்குச்சென்று, குளித்து அலங்காரமெல்லாம் செய்துகொண்டு மாலை ஆறு மணிக்கெல்லாம் ballroom  ற்கு வந்துவிடவேண்டும். தாமதமானால், லக்கி ட்ரோ டிக்கட் கிழித்து போடப்படும் பெட்டியை மூடிவிடுவார்கள், இதனாலேயே சகஊழியர்கள் அடிபுடி என்று ஓடுவார்கள்.

விருந்து இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்து விடுவார்கள். உணவு, சீன ரக உணவு. வேலை அனுபவத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ரக உணவைத்தின்னுத்தின்னு சலிப்பு வந்து விட்டது. அதுவும் ஒரு மேஜையில் பத்து பேர் அமரவேண்டும். அந்த பத்து பேரில் ஐவர் நன்கு சாப்பிடுகிறவர்கள் நம்மோடு அமர்ந்துவிட்டால், அவ்வளவுதான், மற்றவருக்கு உணவு கிடைக்காது. அதுவும் என்னைப்போன்றவர்கள், உணவு மிச்சம் இருந்தாலேயொழிய உணவில் கை வைப்பதில்லை. கரண்டியையும் முள்ளையும் டக்கு டொக்கு என்கிற சத்தத்துடன் உணவை உண்பார்கள்.. ஒரே டென்ஷனா இருக்கும்.

இடையிடையே அதிஷ்டக்குலுக்கலும் நடைபெறும். எல்லோருக்கும் விழும், நமக்கு மட்டும் விழாது. ஒரே ஒரு ஆண்டு, ஒரு ரேடியோ கிடைத்தது. அதோடு ஒன்றுமில்லை. வாய் பிளந்து கையில் வைத்திருக்கும் அழைப்பு அட்டையை உர்ரென்று பார்த்துக்கொண்டு, பரபரப்பாக நம் எண்கள் வருமா வருமா என காத்திருந்து பழகிப்போச்சு என்றே சொல்லலாம். பொறுமையைச் சோதிக்கும் அதிஷ்ட எண்கள் சொல்லும் பாணி வேறு படபடப்பை ஏற்படுத்தும்.

ஒருவகையாக டின்னரும் முடியும். பிறகு பார்ட்டி டைம்.. டிஸ்கோ ஆடுவார்கள், ஸ்லோ டான்ஸ் ஆடுவார்கள், நமக்கு அதில் ஆர்வமில்லைதான் இருந்தபோதிலும், நம்மோடு தங்கியிருக்கும் ரூம்மெட் கள் ஆடுவார்களே..!! அவர்களுக்காக சும்மானாலும் உட்கார்ந்துக்கொண்டு, நிகழ்வு களைகட்ட கைகளைத்தட்டிக்கொண்டு இருக்கவேண்டும்.

நீண்ட நேர பஸ் பிரயாணம், சாப்பிட்டும் சாப்பிடாத நிலை, இரவு பன்னிரெண்டு மணி வரை தூங்காமல், கராமுரா என இரைச்சலான மேல்நாட்டு இசையில், கண்களைப்பறிக்கும் வர்ண விளக்குகள், மினுக் மினுக்கென்று மின்னும் லேசர் ஒளிகள் என படும் அவஸ்தைகள் ஒருவருடம் தாங்கும்.

அதன் பிறகு அறைக்கு வந்து, யாரோ படுத்துப்புறண்ட படுக்கையில் தலை வைக்கக்கூட ஒவ்வாமல் கொண்டு வந்த துண்டை போர்த்திக்கொண்டு படுத்துத் தூங்கவேண்டும்.

காலை ஏழு மணிக்கு பசியாறை. கொஞ்சம் தாமதமானால், வாட்டிய ரொட்டிதான் கிடைக்கும். (அனுபவம்) அதற்கும் தாடாபுடா என ஓடவேண்டும். சாப்பிடுவார்கள் சாப்பிடுவார்கள் உணவையே இதுவரையில் பார்த்திராதது போல் சாப்பிடுவார்கள். புஃவ்வே தான், இருப்பினும் மிக விரைவாக உணவுகள் அனைத்தும் தீர்ந்துபோகும். ஒரு பெரிய பட்டாளமே திரண்டிருந்தால் எப்படி சமாளிப்பார்கள்!? கஷ்டம்தான்.

காலை உணவு முடிந்தவுடன் திடலுக்குச் செல்லவேண்டும், டெலிமேட்ச்.. அங்கே காலில் பலூன் கட்டி வெடிக்கச் சொல்வார்கள், பந்து எடுத்துக் கொண்டு ஓடி மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டும், சாக்கிற்குள் நுழைந்துக்கொண்டு ஓடவேண்டும், காகிதத்தை மடித்து சிறிது சிறிதாக்கி, அதில் நிற்கவேண்டும், பாட்னரை தூக்கிக்கொண்டு... கலகலப்பு மூட்டுகிறார்களாம்..

மதிய உணவு வேளையும் வரும். மதிய உணவிற்குப் பிறகு படகு சவாரியாம்.! இது எனக்குப் பெரிய தலைவலி. பாதிவழியிலே கடலில் வாந்தி எடுத்துள்ளேன். மதிய உணவு எல்லாம் வந்தி வழியாக மீன்களுக்கு இரையாகக் கொடுப்பேன். கொடுமை படுத்துவார்கள். ஒதுங்கி நின்றால் எங்களின் அதிகாரிகள் வந்து வந்து பேசுவார்கள். அவர்களிடம் பேசுவதைவிட பேசாமல் இந்த கொடுமைகளை அனுபவித்து விடலாம்.!

ஓய்ந்து களைத்து, மீண்டும் ரூம்மிற்குள் பிரவேசம். அக்கம் பக்கம் கடற்கரையோறமாக இருப்பதால், மீனவர்கள் விற்கும் மீன் கருவாடு நெத்திலி (கிடைக்காத பொருள் போல்) வாங்குவதற்கு நடந்தே ஷாப்பிங் செல்லலாம் என்கிற அனுமதி கிடைக்கும். உடனே புறப்படுவாள்கள். நானும் அடிவாங்கிய நாய்போல், தலையத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாடியே சுற்றுவேன். கால்கள் பிண்ணும் இருப்பினும் காட்டிக்கொள்வதில்லை.  அவர்கள் சளைக்காமல் சுற்றுகிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமையோ..!

மீண்டும் இரவு உணவு. உறக்கம். மறுநாள் காலையில் ஒரு ஒன்றுகூடல் நிகழ்வும் உண்டு, நிகழ்வுகள் எப்படியிருந்தது என்கிற உணர்வுப் பரிமாற்றம். ஆஹா ஓஹோ என எல்லோரும் கூற நானும் ஒத்தூதுவேன். அவை முடிந்தபிறகுதான் பஸ் புறப்படும். வீடு வந்து சேர, ஞாயிறு இரவு ஆறு அல்லது ஏழு ஆகும். மறுநாள் வேலை..!!

இதனால், இந்த வருட அன்னுவல் டின்னருக்குச் செல்லவேண்டாமென்று முடிவெடுத்து விட்டேன். அதற்கான காரணம், மாமியார் கீழே விழுந்து மண்டையில் பலத்த அடி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

இப்போதுதான் எஸ்.எம்.எஸ் அனுப்பினேன் அதன் ஏற்பாட்டுக்குழு தலைவருக்கு. பதிலும் வந்தது ``ok.take care'' என்று.
ஒரு பாரத்தை இறக்கிவைத்ததைப்போன்ற தெளிவு மனதில்.

பி.கு : மாமி உண்மையிலே கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். மண்டையில் அடி. ரத்தம் வழிகிறதாம். அழைப்பு வந்தது, மூத்தார் வீட்டில் இருந்து. 

வியாழன், ஏப்ரல் 12, 2012

வேதம் என்பது?

வேதங்கள் நான்கு..
அவை என்ன சொல்கின்றன?
யாரால் எழுதப்பட்ட்து?
யார் யாருக்கு கொடுக்கப்பட்ட்து?
வேத்த்தில் வர்க்கப்பிரிவுகள் உள்ளனவா?
வேதம் சமஸ்கிருத மொழியில் உள்ளனவா?
வேத்த்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
யாருக்குச்சொந்தம் அது?
ஏன் எல்லோருக்கும் வேதம் போதிக்கப்படவில்லை?
இறைவனால் அளிக்கப்பட்ட்து என்றால், ஏன் எல்லோருக்கும் வேதம் தெரியவில்லை?
ராமாயணம்ம் மஹாபாரதம் வேத்த்தின் ஒரு பிரிவா?
வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா?
வேதங்கள் முதலில் தமிழில் தான் இருந்த்து, ஆரியர்களின் வருகையால், அது மற்றப்பட்டது என்பது சரியா?

வேதங்களைப்பற்றிய சந்தேகங்களை, எனது தமிழ்நாட்டு நண்பர் ஒருவருக்கு மெயில் மூலமாக அனுப்பி வைத்தேன். அவரின் எளிய விளக்கம் என்னை அதிகம் கவர்ந்து விட்டதால்,  இதை இங்கேயும் பகிர அனுமதி கேட்டுக்கொண்டேன்.


வேதங்கள் யாராலும் எழுதப் படவில்லை.வாய் வழியாகவே குரு அவரின் சீடர்கள் என்று பரப்பபட்டவை. வேதங்களை  தொகுத்து கொடுத்தவர் வியாசர். வேதம் சமஸ்க்ரித மொழியில்தான் உள்ளது. ஒரு காலத்தில் அனைவரும் வேதம் சொல்லிக்கொண்டுதான் இருந்தனர். பின் அவற்றை விட்டுவிட்டனர். பிராமணர்களில் ஒரு சிலர்தான் வேதம் பயில்கின்றனர். ராமாயணம் ,மகாபாரதம் வேதத்தில் வராது . அவை புராணங்கள் .

முதலில் ஆரிய / திராவிட வாதமே தவறு. அப்படி எதுவும் இல்லை/ ஆங்கிலேயர் பிரித்தாளும் கொள்கைகியின் விளைவுதான் ஆரிய திராவிட வாதம். ஆரியப் படையெடுப்பு இதெல்லாம். அதை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை குழப்ப உபயோகித்துக் கொள்கின்றனர்.

//வேதம் ஓதுகிறவர்கள் எல்லோரும் பிராமணர்களா
?// இன்றைய கால கட்டத்தில் ஆமாம். ஆனால் முன்பு ரிஷிகளில் கூட பலர் பிராமணர் அல்ல.

வேதம் அனைவருக்குமே சொல்லித் தரப்பட்டது
, கால போக்கில் அனைவரும் விட்டுவிட்டனர் (ப்ராமானர்களையும் சேர்த்துதான்)

நான்கு வேதங்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான விஷயங்களை சொல்கிறது. உதாரனத்திற்க்கு அதர்வண வேதம்
, விமானம் செய்வது /மருத்துவக் குறிப்புகள் போன்றவற்றை சொல்கிறது.

நன்றி: கார்த்திக்

புதன், ஏப்ரல் 11, 2012

எனக்கு எந்த வருத்தமும் இல்லை

எங்களின் ஊரில், எடிட்டர்கள் இல்லையென்றால் பலர் எழுத்தாளர்களே இல்லை. !?

அதனால்தான் இந்த கணினி யுகத்திலும் பல வாசக எழுத்தாளர்களுக்கு சமூகவளைத்தளங்கள், பேஸ்புக், வலைச்சரம் போன்ற மின் ஊடங்களைப்பற்றிய போதிய ஞானம் இல்லை. இன்னமும் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பிவைத்து விட்டு, அவை வருமா வராதா என்று வாரவாரம் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கின்றனர்.


 

படைப்புகளுக்கு ஏற்ப தலைப்பைப் போடுவது, பத்திகள் பிரிப்பது, பிழைகளைத் திருத்தம்செய்வது, மோசமான கருத்துப்பிழைகளை கண்டறிவது, சுருக்குவது, நீட்டுவது, சரியான வார்த்தைகளைக்கொண்டு பத்திகளை நிறைவுசெய்வது, தேவையற்றதை நீக்குவது போன்றனவற்றில் விழிப்புணர்வு இல்லாத்தால், அவ்வரிய காரியத்தை பத்திரிகை எடிட்டர்கள் செய்து பல `எழுத்தாளர்களை’ எழுத்தாளர் அந்தஸ்திற்கு உருவாக்கி உயர்த்துள்ளனர்.


 

ஒரு முறை, பத்திரிக்கை அலுவலகமொன்றிற்குச் சென்றிருந்தேன். சொந்த பணியின் காரணமாக அப்பக்கம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால், பத்திரிகை அலுவலகமும் செல்லும் வழியிலேயே இருந்துவிட்டதால், எனது சிறுகதை ஒன்றினை  அப்பத்திரிகை  ஆசிரியரிடம் ஒப்படைத்துவிடலாமே என்றெண்ணி அப்பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றேன்.   

 

படைப்புகளை நேராக வந்தும் கொடுக்கலாம், அதில் ஒரு பிரச்சனையும் இல்லை  என்று அப்பத்திரிகை ஆசிரியரே ஒப்புதல் வழங்கியதால்தான் படைப்பை கையுடன் எடுத்துச் சென்றேன். 

 

நான் அங்கு சென்று சேர்ந்தபோது, அந்த ஆசிரியர் அவசர அவசரமாக ஒரு வேலையில் மிக மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு படைப்பை பக்கம் பக்கமாக திருத்திக்கொண்டும் வெட்டிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தார். என்னதாக இருக்குமென்று எட்டிப் பார்த்தால், ஒரு `பிரபல’ எழுத்தாளரின் படைப்பு அது. தலையே சுற்றியது எனக்கு. பல ஆண்டுகளாக பத்திரிகைகளிலும் இதழ்களிலும் விடாமல் எழுதிக்கொண்டிருப்பவரான அந்த குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்து இவ்வளவு மோசமான எழுத்துப்பிழைகளோடு வந்திருப்பது எனக்குப் பெரும் அதிர்ச்சி.! ஆசிரியர் சிகப்புப் பேனாவால்  பிழைத்திருத்தங்களை செய்துகொண்டிருந்ததால்,  பளிச்சென்று கண்களுக்குத்தென்பட்டன அங்கே அவர் திருத்தம் செய்திருந்த பிழைகள்.  

 

எதற்காகப் போடவேண்டும்? முயன்று, வாசிப்பில் கவனம் செலுத்தி நன்றாக எழுதவரும்போது அவைகளை பத்திரிகையில் பிரசுரிக்கலாமே, என்றதிற்கு, பாவம், எழுத்தில் அதிக ஆர்வமிருக்கிறது, மேலும் தமிழில் எழுதுபவர்கள் வேறு குறைந்துகொண்டே வருகிறார்கள். இந்நிலையில் ஆர்வம் உள்ளவர்களை எங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் வளர்த்துவிடவேண்டும். பிறகு பய்யப்பய்ய எழுத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்கிறார்..!

 

எப்போது? எத்தனை ஆண்டுகளாக இந்நிலை..?


 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு சிறுகதை கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிற்பதற்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில், பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தன. அவற்றில் பத்து கதைகளை சிறந்த சிறுகதைகளாகத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தார்கள். அந்த ஆய்வுகளை அக்கருத்தரங்கில் வாசித்து விமர்சனம் செய்தார்கள். விமர்சனங்கள் அனைத்தும் அற்புதம். செய்தவர் ஒரு முனைவர் என்பதால் நிகழ்வு சோர்வாக இல்லாமல் சுவரஸ்யமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. அனைத்தும் அற்புதமான கதைகள்.

 

ஒவ்வொன்றாக விமர்சனம் செய்துகொண்டே வரும்போது, ஒரு கதையின் விமர்சனம் எனக்குள் சிறு நெருடலை உண்டு பண்ணியது. அக்கதை அப்பட்டமான காப்பி.  சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகளில் ஒன்றான பின்நோக்கிச் சென்று வள்ளுவரையும் சித்தர்களையும் சந்தித்துவிட்ட பிறகு முன்நோக்கிச்செல்வதைப்போன்ற ஓர் அற்புதக்கதை அது. அதை அப்படியே நகல் எடுத்து தமது பெயரை போட்டுக்கொண்டு போட்டிக்கு அனுப்பியுள்ளார் ஒருவர். அச்சமயத்தில் நான் மிக அண்மையில் படித்த கதை அது என்பதால், அக்கதை அப்படியே மனதில் பதிந்துபோயிருந்தது. 

 

தவறு, எழுதியவரின் மேல் இல்லை. எழுதுபவர்கள் இப்படித்தான் எதையாவது செய்து தம்மை நிலைநிறுத்தப்பார்ப்பார்கள். கதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கும் அக்கதைகளை ஆய்வு செய்பவர்களுக்கும் எங்கே போனது சுரணையை உணர்வு? அவர்களின் வாசிப்பின் பரப்பளவு என்ன? புதிதாக எழுதுகிற ஒருவர், எழுதிய உடனேயே மிகப்பெரிய எழுத்தாளர்களின் பாணி தெரிகின்ற போதே, அவைகளை ஆராயவேண்டாமா..!? 

 

நிகழ்வில் ஓய்வு நேரம் வழங்கப்பட்டது. அப்போது, கதைகளை ஆய்வுசெய்திருந்த முனைவர் ஐய்யா அவர்களை தனிப்பட்டமுறையில் சந்தித்து, கதைகளில் ஒன்று அப்பட்டமான காப்பி என்றும், எனக்குத்தெரிந்த ஒன்று காப்பி என்பதால் மற்றவைகளையும் கொஞ்சம் ஆராய்வதுதான் சிறப்பு என்பதனை தயங்கித்தயங்கியே சொன்னேன். 

 

கண்களை அகல விரித்து ஆச்சிரியமாகப் பார்த்தார் என்னை. அப்படியா? அதுமாதிரியே எழுதியிருக்கலாமல்லவா.!? என்றார் படபடப்பை மறைத்தவண்ணம்.  எனக்கும் இச்சூழல்  தர்மசங்கடத்தை  ஏற்படுத்தியதால், அமைதியாக வந்துவிட்டேன். இதுபோல் இன்னும் எத்தனை காப்பிக் கதைகளை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்களோ..  ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

 

இதையொட்டி, அந்நிகழ்வை எடுத்து நடத்திய பத்திரிகைக்கும் தகுந்த ஆதாரத்தோடு ஒரு வாசகர் கடிதம் எழுதினேன்.. அதையும் மூடுமந்திரம் செய்தார்கள்.


 

தமிழ் நாட்டு மோகத்தில் ஆட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுப்பவர்களின் படைப்புகள் கூட அச்சு அசப்பில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் சாயல் உள்ளதுவே.

 

இங்குள்ள மற்றவர்களுக்கு இதுபுரியாமல் இருக்கலாம் ஆனால் நான் தினமும் இரண்டு தமிழ்நாட்டு சிறுகதைகளையாவது படித்துவிடுபவள். இந்தச் சாயல் மோகம் தப்பு என்று சொல்லவில்லை, நல்ல விஷயம் தான். பெரிய வளர்ச்சி. அவர்கள் போல் கதை எழுதுவது சாமானியமான ஒன்றா!? ஒரு முதிர்ந்த நிலை பார்வையில் கதைகளைப் புனைவது பாராட்டப்படவேண்டிய ஒன்றுதான். 


இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஒருவர் என்னைக் கேட்டார், மலேசிய இலக்கியத்திற்கு உனது உழைப்பு என்ன?


எனது பதில்: குப்பைகளை எழுதிக் குவிப்பதுதான் உழைப்பு என்றால் - எனது உழைப்பு ஒன்றுமேயில்லைதான். நான் ஒரு சாதாரண வாசகி. 


என்னைப்போல் இலக்கியங்களை விமர்சனம் செய்ய முடியுமா உன்னால்!!? என்றால்...


 

எனது பதில்: என்னால் முடியாதுதான், நான் ``நல்லாருக்கு, நல்லாலை’’ என்கிற வார்த்தையோடு முடித்துக்கொள்வேன். தேவையில்லாமல் இலக்கிய விமர்சனம் என்கிற பெயரில் எழுத்தாளர்களின் மனதை இரணமாக்க நான் தயாராக இல்லை. அவரவரின் பார்வையில், படைப்புகளின் தன்மை வேறுபடலாம். ஏன் நன்றாக இல்லை என்பதற்கு, நான் 100 காரணங்களை வைத்தால், ஏன் நன்றாக இருக்கு என்பதற்கு அவர்கள் 200 காரணங்களைக் கொடுக்கமுடியும். இதில் யாருக்கு என்ன லாபம்?

 

எது சரியான படைப்பு என்பது படிப்பவரின் பக்குவத்தைப் பொருத்தது. ஒருவர் மனது அதை ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எழுதியது எழுதியதுதான். நான் ஒருவள் தனிப்பட்ட முறையில் `ஆஹா.. ஓஹோ’ என்பதாலும் அல்லது, இது எழுத்து அல்ல குப்பை என்பதாலும் , எழுதியவரின் வங்கித்தொகையில் கூடுதல் ஆயிரம் ரிங்கிட் கூட்டியோ குறைந்தோ போவதில்லை.  


 

எழுத்துக்களின் மூலம், அவரவர் பார்வையில் அவலம் என்பதை அவரவர் பாணியில் பிரித்துப் பகுத்துச் சொல்ல வருகிறார்கள், அவற்றில் அங்கீகாரம் தேடுகிறார்கள், புகழ் சேர்க்கப் பார்க்கிறார்கள், தம்மை நிலைநிறுத்தத் துடிக்கின்றார்கள். கிடைத்தால் எல்லோருக்கும் சந்தோசம். கிடைக்காவிட்டால், எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 


 

மிகப் பிரபலமாக பேசப்பட்ட, பல புகழ்பெற்ற எழுத்தாளர்களே, இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை (தமிழில்). நமக்குள் ஏன் பிரியோஜனமேயில்லாத வாக்கு வாதம்.!? 


 

தயவு செய்து தமிழ் நாட்டு இலக்கியவாதிகளின் சர்ச்சைகளில் இதில் சேர்க்கவேண்டாம். அவர்களுக்கு எழுத்து முழுநேரத் தொழில், இங்கே நாம், பொழுதுபோக்கு எழுத்தாளர்கள். லட்சியமில்லாத எழுத்து பலருக்கு. எழுத்தால் என்ன மறுமலர்ச்சி புரட்சி வந்தது என்று யாராவது கேட்டால், எனக்குத்தெரியாது, தெரிந்தால் பகிருங்கள். கோபமில்லாமல். நான் கேள்விப்பட்டதில்லை (பத்திரிகை நிருபர்களின் எழுத்தைத் தவிர, பத்திரிக்கை நிருபர்கள் எழுத்தாளர்கள் அல்ல - அதுவும் அவர்களின் பிழைப்பு) 


 

அரசியல் தலைவர்களை மட்டம் தட்டி, அரசியல் சூழலை மையமாக வைத்து சில தகிடதத்தோம் எழுத்துகளை எழுதிவிட்டால், அது அதிரடி அரசியல்    எழுத்தாகிவிடுமா?  அதனால் வந்த மாற்றம் என்ன என்பது தான் இங்கே கேள்வி. மாற்றமே வராது, ஆனால் ``நான் எருமை வாங்கினால் உன் தோட்டதில்தான் மேயவிடுவேன்’’ என்கிற கதையில், நடக்காத விஷயத்திற்காக வரும் சண்டையிடும் நிலைதான் இங்கு  இலக்கிய வட்டத்தில் அவ்வப்போது நடக்கும் கூத்து.

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

புரட்சியாளர்கள்

கையில் `ரிமோர்ட்’
ஓயாத புலம்பல்
ஒலி(ளி)பரப்பு சரியில்லை
பொதுநல புரட்சியாளர்கள்

`ரிமோர்ட்’ என்பது
தமிழ் அல்ல
தமிழ் கொலை செய்யாதீர்கள்
தமிழ் புரட்சியாளர்கள்

புரட்சி என்பதே
தமிழ் அல்ல
சம்ஸ்கிருதம்
சமஸ்கிருத மறுப்பாளர்களின்
புரட்சி.

நோக்கமே புரட்சியானால்
புரட்சியில்
ஒரு வெங்காயமும் இல்லை