வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012

முகமூடி - திரைப்படம்

என்னைக்கவர்ந்த புதிய திரைப்படம்.

திரையரங்கமே கூட்டம். 
காட்சிக்குக்காட்சி பரபரப்பு. 
அதிகரிக்கும் இதயத்துடிப்பு. 
ஆபாசம் ஊறுகாய்அளவில் கூட இல்லை. 
ஜீவா அழகிய உடல்வாகில். அவரின் நடையுடையில் மிடுக்கு. 
நரேன் வில்லன் - நல்லாவே இல்லை. அழகிய ஹிரோவை இப்படியா..
செல்வா நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழில். 
தமிழ் படங்களிலேயே சண்டைக்காட்சிகளை நான் மிகவும் ரசித்த படம் இதுதான். 
ஜெக்கிசான் படம் பார்ப்பதைப்போல் விருவிருப்பாக இருந்தது. 
இறுதிக்காட்சியில் குருவை (அவர் எந்த குருவாக இருந்தாலும் சரி) மதிப்பதைப்பற்றிய அற்புதமான டுவிஸ்ட். 
மொத்தத்தில் முகமூடி ஒரு நல்ல படம். 
கடைசியில் ஒரு மெசெஜ் இருக்கு.. பார்த்து விட்டு நீங்களே கண்டுபிடிங்க.
நிச்சயமா ஒரு பொழுதுபோக்கு படம்தான்
கண்டிப்பாக பார்க்கலாம்.

பள்ளியறையும் பாமரர்களும்

பள்ளியறை கூட
பலரை
பாமரர்களாக்கி விடுகிறது.

%%%%%

பேசாமல் இருக்கமுடியாது 
என்றல்ல..
நினைக்காமல் இருக்கமுடியாது 
என்பதால்தான்
பேசிக் கொண்டிருக்கின்றோம்

%%%%%%

நல்ல மழை
மழை படாத இடங்களில்
செடிகளுக்கு நீர் பாய்ச்சினேன்
வழக்கம்போல்

%%%%%%%

முதல்வரையும்
குஷ்பூவையும்
கனிமொழியையும்
யாதுமறியா என்னையையும்
யாரவது ஒருவர்
திட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்..

%%%%%%%

விளக்கில் 
எழுதிவைக்கிறார்கள்...
வெளிச்சம் 
வெளியேறுகின்றது..

%%%%%%%

செடிகளுக்கு 
நீ பாய்ச்ச
மனமும் ஈரமாகிறது..

%%%%%%%

செடி வளர்த்துப்பார். 
ஒரு குட்டி இலை 
துளிர் விட்டாலும், 
நீ குதூகலிப்பாய்.

%%%%%%%

மேகத்தின் 
நிழல்தான்
கடல்நுரையோ..!

%%%%%%%%

பேரிரைச்சலில் இருப்பவரை, 
`ப்ப்பே’ என்கிற மிரட்டல் 
பயமுறுத்திவிடாது

%%%%%%%

உன் கருத்தில் 
எனக்கு உடன்பாடில்லை.! 
அதேபோல் எனக்கும்தான்.

%%%%%%%

எல்லோரும் 
எழுத்தாளராகிறார்கள்
யார் வாசிப்பது?

%%%%%%%

மனிதர்கள் எல்லோரும் 
ஒரே நிறமாய்
கடலில் உள்ள மீன்கள் மட்டும்
கலர்கலராய்..

%%%%%%

போ, என்றால், 
போகிறேன் என்று, 
மீண்டும் நாளை வந்துவிடுகிறாயே..?

%%%%%%%%

ஒரு பொருளைத் 
தொலைத்து விட்டேன். 
இப்போது அப்பொருள் என் வசமில்லை 
அதில் எனக்குக் கவலையில்லை, 
ஆனால், அதை எங்கு தொலைத்திருப்பேன் 
என்பதுதான் மனதைக் குடையும் வினா..?

%%%%%%%

கைத்தட்டுபவர்களால் தான் 
நல்ல தீர்ப்புகள் 
தடம் புரள்கிறது

%%%%%%%

கண்வலி என்றால், 
கவனம் கண்களைச்சுற்றி..
பல் வலி என்றால்,
கவனம் பற்களைச் சுற்றி..
வயிற்று வலி என்றால்
கவனம் வயிற்றைச்சுற்றி..
மனசு வலி என்றால் மட்டும்
யார் காரணம் என்கிற கேள்வி ஏன்?

%%%%%%%

நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...

%%%%%%%%

வேலைகளைச் செய்வதற்கு 
நிறைய நாளைகள் இருக்கின்றன. 
படைப்பதற்கு 
இன்றுதான் சிறந்த நாள். 




சுதந்திர தின வாழ்த்துகள்

கஞ்சி குடித்து
சஞ்சிக் கூலிகளாக
பஞ்சத்தில் அடிப்பட்டு வந்திருந்தாலும்
இனி கெஞ்சிக்கூப்பிட்டாலும்
அஞ்சாமல் நிராகரிக்கும்
பசி பஞ்சமில்லா
ஓர் அற்புத அழகிய ஊரில்
நாங்கள்

எங்கள் மலேசியா..

நாட்டின் வளம் எங்களின் வளமே.. வாழ்க மலேசியா.


புதன், ஆகஸ்ட் 29, 2012

Latest photos from Mars Rover

The Mars rover Curiosity has sent some spectacular new images to Earth, giving a detailed view of the landing site in Mars Gale Crater and the surface of the red planet.  NASA’s Jet Propulsion Laboratory, mission control for the project, put them together in a giant mosaic.






ஓணம் ஆஷாம்ஷகள்

பிரதமம் செய்ய
வருத்த பாசிப்பயிர் இருக்கு
சேமியா இருக்கு
ஜவ்வரிசி இருக்கு
தேங்காய் இருக்கு
கருப்பட்டிச் சீனி இருக்கு
முத்திரி உலர்ந்த திராட்சை இருக்கு
நெய் இருக்கு
பால் வாங்கிக்கலாம்
சுக்கு ஏலக்காய் இருக்கு
எந்த அக்காவைக் கூப்பிட?
பாயாசம் வைக்கனும்?


பொழுது போக்கு

பொழுது போகவில்லை
உன் காதல் கதை வேண்டும்..

உன் மேல் அவன்
உயிராக உள்ளானா?

எப்படியெல்லாம் உன்னைக்
கொஞ்சுகிறான்?

அன்று திட்டிய போது அழுதாயே,
என்ன சமதானம் சொன்னான்?

நீ இல்லையென்றால்
உயிர் வாழ முடியாது என்றா?

நீயும் அதை தானே
சொன்னாய் அவனிடம்?

வயது ஆக ஆக
உன்னின் அழகு கூடுகிறது என்றானே!
பிறகு என்ன சொன்னான்?

வர்ணிக்க வார்த்தைகளே
இல்லையென்றா?

உனக்காக உயிரையே
கொடுப்பானா?

சாப்பிடும் போதும்
அவனையே நினைக்கின்றாயா?

அவனும் தானா...??

அவனை நீ
உயிர் என்பாயா?
ஆத்மா என்பாயா?
ஜீவன் என்பாயா?

அவன் உன்னை என்னவென்பான்?
சிலை?
சிற்பம்?
தேவதை?

ச்சே, இன்று கதையே இல்லை
பொழுது போக்க..

அவளும் வேலைக்கு வரவில்லை
குழந்தைக்கு சுகமில்லை..

அவன் ஊரிலேயே இல்லை
மனைவிக்குப் பிரசவமாம்..!




செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

பெண்ணியம்?

பெண்ணியம் என்றால் என்ன?

பெண்ணியம் என்கிற சொல்லின் அசல் என்ன.?  பெண் + இயம்?  இயம்புதல் - பேசுதல்? ஆக, பெண்கள் பேசும் அனைத்தும் பெண்ணியம்?

பெண்ணியம் என்றால் FEMINISM  ஆங்கிலத்தில்

பெண்ணியம் - பெண்களின் அர்ப்பணிப்பில் உள்ளதா, அல்லது அடக்குமுறையில் உள்ளதா?

பெண்ணியம் என்ற வார்த்தையைக்கேட்டவுடன் உடனே நினைவுக்கு வருபவர்கள் யார்? ஏன்?

பெண்ணியம் என்கிற சொல் என்னமாதிரியான உளவியல் மாற்றங்களை உங்களுக்குள் கொண்டு வருகிறது? (பெண்ணாக இருந்தால்)

பெண்ணியம் என்கிற சொல் என்னமாதிரியான உளவியல் மாற்றங்களை உங்களுக்குள் கொண்டு வருகிறது? (ஆணாக இருந்தால்)

பெண்ணியம் என்பது, மிக உயந்த நிலையில் தெளிந்த புரிதலோடு பேசப்படுகிற விஷயமாம், சில பெண்கள் சொல்கிறார்கள்? அப்படியா, சொல்லவே இல்லை? ஆச்சிரியமா இருக்கு!

பெண்ணியத்தை சரியாகப்புரிந்துக்கொள்ளாத பெண்கள், பெண்ணியம் பேசுகிறேன் என்று இன்னமும் பெண்ணுரிமை பற்றியே பேசுவது ?

பெண்ணியம் பற்றிபேசும் போது, பெண்ணுக்கு சம உரிமை இல்லை என்று சொல்வது சரியான கூற்றா, இன்றைய காலகட்டத்தில்?

பெண்ணிய உணர்வு என்பது, நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம், கலாச்சாரத்திற்குக் காலாச்சாரம், வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றதென்பதை ஏற்றுக்கொள்ளலாமா?

பெண்ணியம் என்பது, இஷ்டம்போல் ஆட்டம்போடும் சுதந்திரத்தில் உள்ளதா?

குடும்பச் சிக்கல்களை சமாளிக்கத் திறனற்று,  உடனே விவாகத்து செய்து விட்டு, மறுமணம் செய்துக்கொள்ள நினைப்பது, பெண்ணுரிமையா/பெண்ணியமா?

ஒரு சில ஆண்களின் சுயநலன்களுக்காகவும் சுய இச்சைகளுக்காகவும், சில இடங்களில் பெண்களின் சம்மதத்துடன்,  சம்பந்தப்பட்ட ஆண்களின் ஆயுதமாக இந்த பெண்ணியம்  பயன்படுகிறதென்பதை  ஏற்றுக் கொள்ளலாமா?

எல்லாமும் எல்லோருக்கும் சமம்; என்கிற  இக்காலகட்டத்தில் பெண்ணியம் என்கிற ஆயுதம், சுய விளம்பரத்திற்காகவே பயன்படுகிறதென்று சொன்னால், பெண்ணியவாதிகளுக்குக் கோபம் வருமா?

பெண்ணியவாதிகளின் இலக்கியம் எனப்பட்டது, பெண்கள் படும் அவஸ்தைகளைத்தான் சொல்லவேண்டுமா?

பெண்கள் மூலமாக வெளிப்படும், ஆண்களை மட்டம் தட்டுகிற  அனைத்து சமாச்சாரமும் பெண்ணியமா?

கணவனின் அர்ப்பணிப்பு, தந்தையின் அர்ப்பணிப்பு, சகோதரனின் அர்ப்பணிப்பு, நண்பனின் அர்ப்பணிப்புகளைப் பற்றி ஒரு பெண் எழுதினால், அது பெண்ணிய இலக்கியமாகப் பார்க்கப்படுவதில்லையே, ஏன்? முதலில், இலக்கியத்துறையில்  இந்த பேதமே கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.


பெண்ணிய கூறுகளை இவ்வாறு பிரிக்கலாமா?
1.ஆண்களின் அடக்குமுறை
2.சமூதாயம் ஒரு பெண்ணின் மேல் ஏற்றிவைக்க நினைக்கும் சுமைகள்
3. சம உரிமை
4. சமயப்பெயரால் நடத்தப்படும் பெண் இழிவுகள்
5. பெண்களின்பால் நடத்தப்படும் பாலியல் வன்முறைகள்
6.  ஆணாதிக்கத்தால் நடைபெறுகிற குடும்ப வன்முறைகள்
7. பணியிட சலுகைகளில் பால் பிரிவினைகளுக்குள் ஏற்படுகிற பாராபட்சம்
இன்னும் சொல்லலாம் -

பொதுவாக பெண்களைப்பற்றி பேசுகிற அனைத்தும் பெண்ணியம் தான். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படிச்சொல்லித்திரியும் பெண்குல மாணிக்கங்களின் உள்நோக்கமும் வெங்காயமும் ஒன்றே.

பெண்ணியம் என்கிற சொல், பரவலாக பலரால் தினமும் பேசப்பட்டாலும், அதன் உள் அர்த்தம் இன்னமும் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் பேசப்படுகிறதென்பதுதான் நிஜம். அதிலும் கோபக்கனலைக்கக்கி, பெண்களை பெண்களே சாடுவதென்பது அதை விட கொடுமை.

பாரதியார் இன்னமும் இருந்திருந்தால்...???

பெண்ணியம் - பெண்ணின் இயல்பாக மாறவேண்டும் - அதுவே ஓஷோ சொல்லும் பெண்ணியம்.











வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

பதிவர் சந்திப்புக்குச் செல்லலாமே..

(ஆகஸ்ட் மாதம் 26-ம் நாள் ஞாயிற்றுக் கிழமை) சென்னையில் மிகப் பெரிய பதிவர் சந்திப்பு நடைப்பெறவிருக்கின்றது. வழக்கமாக ஆங்காங்கு ஒரு சில பதிவர்கள் சந்தித்து உரையாடி வந்தனர். ஆனால் இம்முறை தான் கொஞ்சம் பெரிய அளவில் ஒரு சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் வலைப்பதிவில் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. பொது ஊடகங்கள் பலவும் இன்று வலைப்பதிவுகளுக்கும் முக்கியம் தர ஆரம்பித்துவிட்டன. மேற்குலகில் அனைத்து பொது ஊடகங்களும் ஒரு வலைப்பதிவை வைத்திருக்கின்றன, பல தனி வலைப்பதிவர்களின் எழுத்துக்களையும் பொது ஊடகங்கள் அரவணைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் ஒரு வலைப்பதிவராவது வந்து பேசுகின்றார். பல வலைப்பதிவு சந்திப்புக்கள் நடந்தேறி வருகின்றன. 

தமிழர்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் பின் தங்கியே இருக்கின்றோம். பல முறை முயன்றும் இம்முறை தான் அதுவும் இளையவர்களைக் காட்டிலும் மூத்தவர்கள் இதற்குப் பெரும் துணையாக இருந்து செயல்பட்டு வருகின்றார்கள். புலவர் இராமாநுசம் ஐயாவை பாராட்டியே ஆக வேண்டும். அவர்களோடு இணைந்து பணியாற்றி வரும் இதர பதிவர்களையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். 

இந்தப் பதிவர் சந்திப்பானது சென்னைப் பதிவர் சந்திப்பாகத் தான் அறிவிக்கப்பட்டது என நினைக்கின்றேன். உலகிலேயே தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம் சென்னை பிரதேசம் ஆகும். சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு தான் இன்று தமிழர்களின் தலைமையிடமாக விளங்குகின்றது. சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். இங்கு நடைப்பெறும் பதிவர் சந்திப்பு என்பது, வெறும் சந்திப்பு என்பதையும் தாண்டிய ஒரு நிலையே ஆகும். இப் பகுதியில் தான் அதிகமான பதிவர்கள் இருக்கின்றார்கள். சுமார் 500-க்கும் மேற்பட்ட பதிவர்கள் சென்னை பிரதேசத்தில் இருக்கக் கூடும். 

ஆகவே இது சென்னை பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டி தமிழகம், கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் உட்பட அண்டை மாநிலங்கள் முதல் வெளிநாடுகளில் இருந்தும் பல தமிழ் பதிவர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைச் சென்னை பதிவர் சந்திப்பு என்பதையும் தாண்டிக் கொண்டு சென்றுவிட்டார்கள் என்பதை நாம் மறுக்கவே முடியாது. 

ஒரு சிலரின் பொருளாதாரப் பங்களிப்பு, உழைப்பு என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு இச்சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதையும் நாம் மறக்க வேண்டாம். ஒரு சில நிறுவனங்களைத் தவிர வேறு எந்தவொரு ஊடகங்களும் இந்தத் தமிழ் பதிவர் சந்திப்புக்கு முக்கியம் தரவில்லை என்றே தோன்றுகின்றது. 

தமிழ் பொது ஊடகங்களில் பதிவர்கள் என்றால் சும்மா வேலை வெட்டியில்லாமல் இணையத்தில் கிறுக்குபவர்கள், அரட்டை அடிப்பவர்கள் என்ற ஒரு விம்பம் இருக்கின்றது. ஆனால் அது எந்தளவு உண்மை என்பதைக் காலம் தெளிவுப் படுத்தும். பதிவர்களின் எழுத்துக்கள் பல பொது ஊடகங்களில் குறிப்பாக ஆனந்த விகடன் போன்றவைகளில் வரத் தொடங்கி இருப்பது நல்லதொரு முன்னேற்றம். ஏனெனில் பதிவர்களின் பல எழுத்துக்கள் பொது ஊடகங்களை விடச் சிறப்பாக இருப்பதே அதற்கான காரணம். 

ஆனால் பதிவுலகம் என்பது பட்டைத் தீட்டப்படாதவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பதிவுலகத்தில் குறிப்பாகத் தமிழ் பதிவுலகில் குப்பைகள் நிறையவே இருக்கின்றன. அந்தக் குப்பைகள் குழுவாகச் சேர்ந்து கொண்டு மொத்தமாகக் குப்பைக் கொட்டி வருகின்றன என்பதையும் நாம் அறிவோம். 

அப்படிக் குப்பைக் கொட்டுவோர் பலருக்கு இந்தப் பதிவர் சந்திப்பு வயிற்று எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் நன்கு உணர முடிகின்றது. பதிவுலகில் தாம் கொட்டும் குப்பைகளுக்குத் தான் நறுமணம் இருப்பதாக வாசகர்களின் கண்களைக் கட்டும் வித்தைகள் நடந்தேறி வருகின்றன. ஏனைய மொழிப் பதிவர்களை விடவும் தமிழில் இது அதிகமோ என்று தோன்றச் செய்கின்றது.

குறிப்பாகத் தமிழ் மணம் திரட்டியில் குழுக்கள் அமைத்துப் பதிவுகளுக்கு வாக்கு குத்துவது, பொது ஊடகச் செய்திகளைக் கருத்துப் பெட்டியில் நிரப்பிப் பதிவுகளை முன்னுக்குக் கொண்டு வருவது, எதிர் கருத்துக்கள் உடைய பதிவுகளைப் பின்னுக்குத் தள்ளுவது, பொய்களை மெய்கள் போலக் காட்டுவது என ஒரு பின்னணி அரசியல் நடந்த வண்ணமே இருக்கின்றது. அதில் ஒரு அங்கமாகவே ஒரு சில குழுக்களின் ஏற்றலால் பதிவர் சந்திப்பு என்றாலே குடித்துவிட்டுக் கும்மாளம் அடிப்பவர்கள், டாஸ்மாக் வியாபாரத்தைக் குத்தைகைக்கு எடுப்பவர்கள் என்ற ரீதியில் ஒரு பிரச்சார உத்தியை எடுத்துள்ளார்கள். 

பதிவர் சந்திப்பு என்பது வெறும் குடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் மட்டும் நடத்தும் ஒரு வைபவம் அல்ல என்பதை நாம் உணர வேண்டும். சந்திப்புக்குப் பின் அவர் டாஸ்மாக் போவதும், கோவிலுக்குப் போவதும் அவரவரின் தனிப்பட்ட சுதந்திரம். ஆனால் பதிவர் சந்திப்பில் பெண்கள், குடிப்பழக்கமற்றவர்கள் என அனைத்துப் பிரிவினரும் வருவார்கள். கிட்டத் தட்ட ஒரு திருமண வீடு போன்ற கலகலப்பு இருக்கும். அப்படியான சூழலில் நட்ட நடு மேடையில் Cheers  சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் தரம் கெட்டவர்கள் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

ஒரு சில பதிவர்கள் இந்தச் சந்திப்புக் குறித்து வாய்த் திறவாமல் இருப்பதையும் நாம் கவனிக்க முடிகின்றது. வெகுகாலமாகப் பல்வேறு பதிவர்கள் பலமுறை பதிவு ஊடாகவும் இன்னும் பல ஊடகங்கள் ஊடாகவும் பதிவர் சந்திப்புக் குறித்துப் பேசியும், எழுதியும் வருகின்றனர். ஆனாலும் பலர் அப்படி ஒரு விடயமே இல்லாதது போல நடந்து கொள்கின்றனர். வருகின்றேன் ! வரவில்லை என்று கூடச் சொல்வதில்லை. இவர்கள் என்ன கூட்டம் நடத்துவது அதில் நாம் என்ன போவது என்ற பழமை சிந்தனையோடும் வெட்டிக் கௌரவம் கொண்டவர்களும், இந்தப் பதிவர் சந்திப்பால் நமக்கு என்ன லாபம் பணம் வருமா ? ஜோதிட புக் விற்குமா ? மதம் மாற்றம் செய்ய முடியுமா ? ஆசிரமத்துக்கு வாங்கோ, பரிகாரம் செய்யுங்கோ என விளம்பரம் தான் வைக்க முடியுமா ? என்ற எண்ணத்தில் பலர் இந்தச் சந்திப்பைக் கண்டுக்கவே இல்லை என்பது தான் உண்மை. 

இந்தப் பதிவர் சந்திப்பானது தமிழில் எழுதும் அனைவரையும் அழைக்கும் ஒரு சங்கமம் ஆகும். இவற்றில் மதம், சாதி, கருத்து, கொள்கை என்பதை எல்லாம் தாண்டி தமிழால் இணைவோம் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டவை ஆகும். இருப்பினும் விசமம் உடையவர்களின் விசனங்கள் உள்ளூருவதை எம்மால் நாடி பிடித்துப் பார்க்க முடிகின்றது. 

எனக்கு என்ன வருத்தம் என்றால் பலர் தமிழ் பதிவர் சந்திப்புக்கான ஒரு சுட்டியைக் கூடத் தம் தளத்தில் இடமால் இருந்தமை தான். தாம் வராவிட்டாலும், அந்தச் சுட்டிகளைப் பார்க்கும் வாசகர்களாகவது வருவார்கள் என்ற ஒரு சிறிய பெருந்தன்மைக் கூட இல்லாமல் போய்விட்டது. 

தமிழ்மணம் திரட்டிக் கூட அதனைச் செய்யவில்லையே. அமெரிக்காவில் நடந்த ஃபெட்னாவுக்கு விளம்பரம் வைத்தவர்களுக்கு இதற்கு மனம் இல்லாமல் போய்விட்டது. இந்தச் சந்திப்புக்கு அமலா பால் வரவில்லை, டிக்கேட் போட்டு விற்கவில்லை, கும்மியடிக்கவில்லை. ஆனால் உலகில் பெரும்பங்கான தமிழ் பதிவர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் பெரும் பதிவர் சங்கமத்துக்கு ஒரு சிறு ஆதரவுக் குரலையாவது தமிழ்மணம் உட்படச் சில திரட்டிகள் செய்திருக்கலாம். ஒரு சில திரட்டிகளைத் தவிரப் பெரும்பாலான திரட்டிகள் ஒருவித சுயநலப் போக்குடன் செயல்படுகின்றனவோ எனத் தோன்றச் செய்கின்றன. தமிழ்மணத்தால் பதிவர்களுக்குப் பயன் என்றாலும், பதிவர்கள் இல்லை என்றால் தமிழ்மணம் உட்படத் திரட்டிகளுக்கும் ஒரு பயனும் இல்லை என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன். 

பதிவுலகில் உலாவி வரும் மதவாத கும்பல்கள், இடதுசாரி குழுக்கள் போன்றவை தமது பங்களிப்பை பதிவர் சந்திப்புக்குத் தராமல் இருந்தாலும் கூடப் பரவா இல்லை. ஆனால் ஒரு சில மதவாத கும்பல்கள் இச் சந்திப்பை திசைத் திருப்பவும், குழப்பவும் திட்டமிடுவது வேதனை தருகின்றது. இதனால் என்ன லாபம் அவர்களுக்கு என எனக்குத் தெரியவில்லை.

தமிழ்மணம் உட்படத் திரட்டிகள் பதிவர்களுக்கு ஊக்கம் தர முனைய வேண்டுகின்றேன். பதிவர்களாகிய நாம் நம்மில் இருக்கும் கறுப்பு ஆடுகளைக் கொஞ்சம் இனங்கண்டு வைத்துக் கொள்வதும் நமக்கு நல்லது. பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் எனத் தோழர்களுக்கு வேண்டிக் கொள்கின்றேன். முடிந்தவரை தமிழ் பதிவர்களாகிய நாம் காழ்ப்புணர்ச்சிகளைக் கைவிட்டு விட்டு பதிவர் சந்திப்புக்களை வருங்காலத்தில் பதிவர் மாநாடுகளாக மாற்ற முனைவோம். 

தொழில்நுட்பத்தில் பதிவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றன. பொது ஊடகங்களை எப்படி ஆக்கிரமிப்பது என்பதையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. வளவள என அனைத்திலும் வாய் வைப்பதை விடப் பதிவர்கள் தமக்கான விருப்பம் சார்ந்த துறைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுவதன் மூலம் அத்துறையில் நிபுணத்துவம் பெறும் வாய்ப்பும் உள்ளது. அத்தோடு பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், யூட்யுப் போன்றவைகளையும் நன்கு பயன்படுத்துவது மூலம் தமிழ் பதிவுலகம் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல முடியும். இப்படிப் பாசிட்டிவான விடயங்களை நோக்கி நகர நாம் அடிக்கடி சந்திப்புக்கள் நடத்தவும், பொது ஊடகங்களின் கவனங்களை ஈர்க்கவும், வலைப்பதிவு தெரியாத தோழர்களை எழுத வைப்பதும், அறியாத மக்களுக்கு வலைப்பதிவு வாசிப்பை ஏற்படுத்துவதும் மிக மிக அவசியம். கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் வலைப்பதிவின் நன்மைகளைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். 

வெளிநாடுகளில் இருப்பவர்கள் வருவது எளிதான ஒன்றில்லை என்ற போதும், சென்னைக்கு அருகே இருப்பவர்கள் எந்தக் காரணம் என்றாலும் அதனைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இந்த சந்திப்பில் கலந்துக் கொள்ள வேண்டும். பதிவர் சந்திப்புக்கு வரும் தமிழ் பதிவர்களை வேண்டிக் கொள்வது என்னவெனில் சந்திப்புக்கு வரும் போது புதிய தோழர்களையும் அழைத்து வரலாம், அப்படி வருவதால் பதிவுலகம் குறித்த தகவல்கள் மக்களிடம் மேலும் பரவ வாய்ப்புள்ளது. பல புதிய பதிவர்களை உருவாக்கும் முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள முனையலாம். தமிழ் பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம் என்ற மின்னஞ்சல்கள் சில ஏற்கனவே சிலருக்குச் சென்றுவிட்டன, இதனால் பதிவர் சந்திப்புக்கு நட்டமில்லை, சந்திப்புக்குப் போகாமல் இருப்போருக்குத் தான் நட்டம் என்பதையும் நான் இங்குக் கூறிக் கொள்ள விழைகின்றேன். 
 
தொகுப்பு...
 
நன்றி, இக்பால் செல்வம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

எனது நேர்காணல் - தினக்குரலில்

கே:நீங்கள் யார்…?வாசகியா?கவிதை புனைபவரா?புனைகதை எழுத்தாளரா?சூடு பறக்க பத்திகள் எழுதுபவரா?
ஷா ஆலம் விஜயாவாக முத்திரை பதித்துவிட்ட எனது உண்மைப் பெயர், ஸ்ரீவிஜயலக்ஷ்மி. படித்தது, வசிப்பது எல்லாமே கோலாலம்பூரில்தான். இரண்டு குழந்தைகள். அமைதியான குடும்ப சூழல். புரிந்துணர்வுள்ள கணவர்.  
நான் எப்போதுமே வாசகிதான். எழுத்தாளர், கவிஞர், விமர்சகர் போன்ற அங்கீகாரமெல்லாம் எனக்கு எப்போதுமே வேண்டாம். இந்த பட்டம், அந்த பட்டமெல்லாம் அடைமொழியாகப் போட்டுக்கொண்டு, அவலத்தைக் கண்டு கொதிக்கிறேன் பேர்வழி என்கிற போலி முகமுடியெல்லாம் தூரத்தூக்கி எறிய நினைக்கும் ஒரு சராசரி பெண் வாசகி நான்.  
நான் இப்படித்தான், என, யார் எப்படி முடிவு செய்தாலும், அந்த வட்டத்திற்குள் சிக்காமல், அவற்றையெல்லாம் கவனத்திலும் கொள்ளாமல், எனக்குள் எழும் ஐயங்களையும் அவலங்களையும்  சொல்லியே ஆகவேண்டுமென்பது தான்  எனக்குள் தணலாக இருக்கும் நெருப்பு. அவை கவிதை, கதை, கட்டுரை, கடிதம் என எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம். அவற்றையெல்லாம் சகித்துக்கொண்டும், பொறுத்துக்கொண்டும், நான் எழுதும்  தமிழில்இலக்கணப்பிழைகள் எழுத்துப்பிழைகள்  போன்றவற்றைத் திருத்தி, எனக்குத்  தொடர்ந்து  ஆதரவும் உற்சாகமும் அளித்துக் கொண்டிருக்கும் தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களை முதலில் நான் வணங்குகின்றேன். எல்லாப் பத்திரிகைகளிலும் எனது பங்களிப்பு இடம் பெற்ற வண்ணமாகத்தான் இருக்கின்றது. நான் என்ன எழுதினாலும், `அதுதாங்க எழுத்துஎன, தொடர்ந்து உற்சாகமும் ஆர்வமும் ஊட்டிய அனைத்து பத்திரிகை ஆசிரியர்களும் நினைவுக் கூர்பவர்கள்.
எனது நோக்கம், நம் நாட்டு இலக்கிய உலகில் நடக்கும் அவலங்களைக் களைய வேண்டும். வளரும் எழுத்தாளர்கள் என்ன எழுதினாலும் தோளில் தட்டி வளர்த்துவிடலாம்ஆனால்ஓரளவு வளர்ந்து விட்டவர்கள், சுயநலத்திற்காக இலக்கியத்துறையை கீழ் நிலைக்கு இட்டுச்செல்வதை, பேனா பிடிக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் தட்டிக்கேட்கவேண்டும். இலக்கியம் தான் வருங்காலத்தில் நமது சரித்திரங்களையும் தரித்திரங்களையும் சொல்லுபவை. நாம் எழுதுகிற எழுத்து பல லட்ச மக்களின் குரலாக ஒலிக்கவேண்டும். எனக்கு, எனக்கு என்று சுயநலமாக சிந்தித்துபேர் புகழ் வேண்டி இலக்கியத்துறைக்கு வருபவர்களை அடையாளங்கண்டு துரத்தியடிக்கப்பட வேண்டும்.  இலக்கியத்துறை ஒன்றும் அவர்களின் அப்பன் வீட்டு சொத்து அல்ல. நாம், நம் சந்ததிகளுக்கு விட்டுச் செல்லவிருக்கும் புதையல் அது.
இதில் வானொலி தொலைக்காட்சி இலக்கியத்துறைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். பத்திரிகையாவது எழுத்துப் பயிற்சிகளை வழங்குகிறது. ஆனால் வானொலி தொலைக்காட்சிகளுக்கு எழுதுவது பயிற்சியல்ல. நல்ல சன்மானம் வழங்கப்படுகிறது அங்கே என்பதும் கவனத்தில் கொள்ளல் அவசியம். சன்மானம் வழங்கப்படும் இடங்களில்தான் மலிந்துகிடக்கிறது ஊழல்.!!
கே:பெண்ணிய உணர்வு என்பது படைப்புகளில் எப்படியாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள்?
நிச்சயமாக போலியாக இருக்கக்கூடாது என்பதுவே என் எதிர்ப்பார்ப்பு. உணர்வுதானே என கற்பனையில் மிதக்கின்ற அனைத்து எழுத்தும் ஆபாசமானவை. உணர்வுகளை ஒளிவு மறைவின்றிச் சொல்வதில் என்ன தயக்கம்.? சில பெண் எழுத்தாளர்கள்தமது உணர்வுகளை மற்றவர்களின் மேல் திணித்து, அதை ஒரு பாத்திரமாக அமைத்து, கதை மாந்தர்களின் உணர்வுகளாகவே பார்த்து, அதற்கு, இவர்களின் மனசாட்சியைக் குடைந்துகொண்டிருக்கும் நல்லொழுக்கங்களைத்  தீர்வாக வழங்கி, இவர்களை உலக மகா பரிசுத்த ஆத்மாவாக பொதுவில் காட்டிக்கொண்டு, படைப்பை முடிக்கின்றார்கள்.   இன்னமும் அதே பழைய பாணி.
மேலும், ஆண்களை எதிர்ப்பதுதான் பெண்ணியம் என்பதும் படு நகைச்சுவை. விவாகரத்து செய்துவிட்ட எல்லா பெண்களும் ஒன்று திரண்டு, இரவு பகல் பாராமல் பெண்ணியம் பேசுவதால், பெண்களின் வளர்ச்சி உச்சத்தை அடைந்துவிடுமென்று நினைப்பதும் அதைவிட நகைச்சுவை..
கே:சிலருக்கு நீங்கள் சிம்ம சொப்பனமாக தோற்றம் தருகிறீர்கள் எனபதை மறுக்க முடியுமா?
இந்த கேள்வியில், உள்குத்து ஒன்றுமில்லையே.!?
அப்படியெல்லாம் இல்லை சார். நான் என்ன எழுதினாலும் கடுமையான விமர்சனங்கள் எதிர்ப்பாக, அவை குப்பையாக இருந்தாலும், பிரசுரமாகிக்கொண்டுதானே இருக்கின்றன.!கருவாட்டுக்கடைக்கு கத்தரிக்காய்க் கடை அவசியம்தான்.! ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.!  சூரியனின் வேலை என்ன? உலகிற்கு வெளிச்சத்தைக்கொடுப்பது. இச்சிந்தனையிலேயே நாம் இருந்து விட்டால், பூனை கத்தினாலும், நாய் குரைத்தாலும்  பிரச்சனை இல்லை.  இந்தப் பயணத்தில் எனக்கு ஏற்பட்ட காயங்கள் கொஞ்ச நஞ்சமா.!? வேறு பெண்ணாக இருந்திருந்தால், இலக்கியமாவது மண்ணாவது என இந்நேரம் காணாமல் போயிருப்பார்.
கே:ஒரு காலத்தில் ஞாயிறு பிரதிகளில் நிறைய எழுதிக்கொண்டிருந்த நீங்கள் திடிரென இணையத் தளத்தில் நிறைய எழுத ஆரம்பித்து விட்டீர்களே..எப்படி?
நம் நாட்டு பத்திரிகைகளின் நிலவரம் அப்படி. உலகமே இணையத்தின் வழி எங்கேயோ சென்று கொண்டிருக்கையில், நமது நாட்டின் பத்திரிகை ஆசிரியர்கள் சிலர், எப்படி கதை, கட்டுரை, கவிதைகள் எழுதி தபால் நிலையத்தில் கொண்டு சேர்ப்பது என்பனவற்றைப் போதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நல்லவேளை, தபால் தலையை நாக்கை நீட்டி, எச்சில் தொட்டும் ஒட்டலாம், இல்லையேல் நீரைத்தொட்டும் ஒட்டலாம் என்று போதிக்கவில்லை. !
அதுமட்டுமல்ல, அவலங்களைச் சொல்லி கடிதங்கள் எழுதினால், `அது அரசாங்கம் சார்ந்த விவகாரம், நமக்கு நாமே எப்படி ஆப்பு அடித்துக்கொள்வது? நாம் இக்கடிதத்தைப்போடுவதால் எவ்வளவு சிக்கல்களைச் சமாளிக்கவேண்டியுள்ளது தெரியுமாஎழுத்து என்பது எல்லோருக்கும் வந்து விடாது, வரும் படைப்புகளை ஆதரித்துகொடுக்கும் பணத்தை பகிர்ந்துகொள்வதால் என்ன அவலம் வந்துவிடப்போகிறது..!எனகொஞ்சங் கூட பொறுப்பே இல்லாத தொடை நடுங்கும் ஆசாமிகள் இருக்கும் இடத்தில் நமக்கென்ன வேலை? இந்த விரக்திதான் என்னை அதிகமாக இணையத்தில் எழுதவைக்கின்றது. மேலும்அவைகள் உலகமுழுக்கப் போகின்றன. புரிந்துணர்வுள்ள வாசகர்கள் மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கின்றார்கள். நிறைய பகிர்வுகள் எழுத்திற்கு உரமிடுகின்றன. பல எழுத்தாளர்களின் அறிமுகமும் நமது வாசிப்புத் திறனை வளர்க்க உதவுகின்றது.  இது போதாதா, தனி ஒரு எழுத்தாளரின் வளர்ச்சிக்கு..! . என மனம் பேசும் அவலங்கள் பல, பிரசுரத்தகுதியை இழந்து விடும், ஆகவே, எனது இணையத்தளம் இதற்கு வடிகாலாக அமைந்து விட்டதால் எல்லாவற்றையும் அங்கே கொட்டிக் கொண்டிருக்கின்றேன். 
கே:மலேசிய இலக்கியங்களில் பெண்களுக்கு பங்களிப்புகள் அதிகமாக உள்ளதை ஏற்கிறீர்களா?அல்லது வாய்ப்புகளை அவர்கள் பயன் படுத்திக்கொள்ள வில்லையென கருத்து ஏதும்?
ஆமாம் பெண்களின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது ஆனால் அவர்களிடம் வாசிப்பின் பரப்பளவு குறைந்தே காணப்படுகிறது.   மிகப்பெரிய எழுத்தாளர் என்கிற முத்திரையைப் பதித்துவிட்டவர்கள் கூட, கொஞ்சங்கூட ஆய்வு மனப்பான்மையே இல்லாமல்  இன்னமும் கற்பனையில் மிதந்துகொண்டு புனைவுகளை எழுதிவருகிறார்கள். ஒரு படைப்பு, மழையைப்பற்றி சொல்வதாக இருந்தால், இன்னமும் மழையில் நனைவதால் காய்ச்சல் சளி வருமென்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.! கர்பப்பை புற்று நோயால், நோயாளி இறந்து விடுகிறார் என்கிறார்களேஇன்னமும்...! இப்படி கற்பனையிலே குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதை எப்படி ஜீரணிப்பது.?   அதற்கு அவைகளை படிக்கமலேயே இருந்துவிடலாம்.  ஒரு படைப்பைப் படிப்பதால் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளவேண்டும். சும்மா பொழுது போக்காகப் படிப்பதில் அவ்வளவாக விருப்பமில்லை. பத்திரிகையில் எழுதும் பெண் படைப்பாளிகளை விட, இணையத்தில் நமது பெண்மணிகள் சிலர் சக்கை போடுபோடுகிறார்கள். அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.  புவனேஸ், யோகி, பூங்குழலி வீரன் போன்றோர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
போட்டிக் கதை நாயகிகள் பத்திரிகைகளில் வரும் வாய்ப்புகளை பணத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் மறுக்கலாகாது.
கே:எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?எழுத்துக் கலையை எப்படியாக காண்கிறீர்கள்?
எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுத ஆரம்பித்தேன். அப்போது நான் பள்ளி மாணவி. அந்த காலகட்டத்தில் எழுத்தில் அதிகமாக ஆர்வமூட்டிய வழிகாட்டிகள் அப்போது பரபரப்பாக செயல் பட்டு வந்த வாசக வட்டத்தலைவர்கள். அவர்கள் தத்தம் வாசககவட்டத்தை விரிவு படுத்தி விளம்பரம் செய்வதற்காகவே பல வாசகர்களை எழுதவைத்தார்கள். ஒரு சின்ன `ட்ம்லர்பரிசாகக் கிடைத்தாலும் அது மிகப்பெரிய வெற்றியாகவே எங்களுக்குள் பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லஎங்களின் எழுத்துகளை, அவர்கள் மூலமாகவே பத்திரிகைகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டது. எழுத்தே வராது. எதையாவது கிறுக்கிக் கொண்டிருப்போம். அதையும் பிரசுரித்து ஆர்வமூட்டினார்கள் அன்றைய பத்திரிகை ஆசிரியர்கள். அந்த வகையில் பத்திரிகை ஆசிரியர்கள் இன்னமும் மாறாமல் அதேபோல் இருப்பது வரப்பிரசாதமே. இருப்பினும், வாசகர் வட்டம் என்று எடுத்துக்கொண்டால்,  நிகழ்வுகளை இன்னமும் சோர்வின்றி சிறப்பாக நடத்திவருவதில் திரு.பாலகோபாலன் நம்பியார் முத்திரை பத்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
எழுத்துக்கலையை வாழ்வில் ஒரு பகுதியாகவே காண்கிறேன். பிரச்சனைகள் மனதைக்குடையும் போது, அவைகளை அப்படியே எழுத்தில் இறக்கிவைப்பேன், மனம் சிறகடித்துப்பறக்கும். எப்போதுமே என்னால் உற்சாகமாக செயல்பட முடிவதற்கு இதுதான் முக்கியக் காரணம்.

நன்றி, தினக்குரல் ஞாயிறு பொறுப்பாசிரியர்
திரு. இராஜசோழன்.  

வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மனிதவெடிகுண்டு..

பேசும் போது
வார்த்தைகளை
விழுங்கிவிடுகின்றேன்

எழுதும்போதும்
சொற்களின் இடையே
சூறாவளிதான்

உணர்வுகளை
மறைத்து மறைத்து
பழகிப்போச்சு

உள்ளே காத்திருக்கின்றது
தனலாய்
ஒரு எரிமலை

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

மெயிலில் வந்தது

ஆயிரம் கதைகள் சொல்லும் படம்


நன்றி: பாலகோபாலன் நம்பியார்.

மாறாத தமிழ்


அதே இடம்
அதே கரும்பலகை
அதே நாற்காலி மேஜை
அதே அறை
அதே பாணி
அறியாத மாணவர்கள்
மாறிப்போன ஆசிரியர்கள்
மாறாத தமிழ்

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

இயற்கையின் எழில்

Danxia Landform at Nantaizi village, Gansu province of China


Out of this world: The incredibly coloured rocky landscape that looks as though it's been painted
These incredible landscapes look as if they have been painted in the sweeping pastel brush strokes of an impressionistic artwork.
But in fact these remarkable pictures show the actual scenery of Danxia Landform at Nantaizi village of Nijiaying town, in Linzhe county of Zhangye, Gansu province of China.
Formed of layers of reddish sandstone, the terrain has over time been eroded into a series of mountains surrounded by curvaceous cliffs and unusual rock formations









ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

இலக்கியவாதிகளுக்கு எது அளவுகோல்?


தினக்குரல் - வாசகர் குரல், மக்கள் குரலாக மாறி வருவது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கின்றது. எவ்வளவோ அவலங்களைச் சொல்வதற்கு களங்களைத் தேடியலைந்து, நிஜமாகவே மக்களின் எதிரொலிக் குரலாக ஒலித்து, தற்போது நமது சொந்தக்குரலாக மாறியிருக்கின்ற தினக்குரலையும் அதன் ஆசிரியர் மற்றும் அவர்தம் குழுவினரையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். பல சவால்களை எதிர்நோக்கி, ஆசிரியரின் அயராத உழைப்பில், அதிகவேகமாகப் பலரைச் சென்று அடைந்துக்கொண்டிருக்கின்ற ஒரு உரிமைக்குரல், நிச்சயமாக உச்சத்திற்கு வரவேண்டும் என்பதுவே என் பிரார்த்தனை.  

போகிற போக்கில், யாரோ ஒரு வாசகர், தாம் படித்த, கேள்விப்பட்ட ஒரு விவரத்தை ஆதாரத்தோடு எடுத்தியம்பிய மறு வினாடி, அதனை கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து, அதன் விவரமென்ன, சங்கதி என்ன, அதனால் வரும் சங்கடங்கள் என்னென்ன போன்றவற்றை மனதில் கொண்டு, எந்த கொம்பனாக இருந்தாலும், எப்பேர்பட்ட கல்வியாளராக இருந்தாலும், இலக்கியம் என்று வரும் போது, அதன் கீழ் எல்லோரும் சமம்; அதேவேளையில், சில விஷயங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டுமென்கிற, ஞாயிறுகுரல் கதைக்குழுவின் துணிச்சலான முடிவால், நிஜமாகவே வாயடைத்துப்போனேன்.  

நம் நாட்டு இலக்கியம், உலகளவில் பேசப்படவேண்டுமென்றால், இந்தக் கெடுபிடிகளை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும். போட்டிக்கதையில் இருந்து `பி.கே.ஜி 6391’ என்ற சிறுகதையை நீக்குகின்றோம் என்கிற முடிவே சிறப்பானது. இதுவே நியாயமான முடிவும் கூட; அது குறித்து ஆசிரியரின் விளக்மும் மிக நன்று. யார் மனதையும் புண் படுத்தாமல், நாகரீகமாக எழுதியிருந்தார். இந்நேரம் கதாசிரியரும் புரிந்துக்கொண்டிருப்பார்.

 அக்கதையின் கரு, தழுவல் என்றாலும், கதை போக்கு அற்புதம் அழகான நடை. கைதேர்ந்த எழுத்தாளர்களால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் எழுத்தாளர் சிறந்த கதாசிரியர், அதில் எந்த நெருடலும் இல்லை.

ஆனாலும், பிரபல எழுத்தாளரும், ஒரு பெண் வாசகியுமான (சரஸ்-பினாங்கு) பார்வையில் வந்திருந்த கடிதம் ஒன்றை பலரால் ஜீரணிக்கவே முடியாது என்பதனையும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவரின் இலக்கியப்பார்வை, சராசரி வாசக நிலையைவிட மோசமாக இருப்பதைக் கண்டு குமுறுகிறேன். இப்படி பாமரத்தனமாக எழுதிக்கொண்டு, மற்றவர்களுக்குத் தமிழ்ப் பாடம் போதிக்கும் நிலை, மற்றொரு அவலம்.  

ஒரு எழுத்தாளர்; படித்தவர், முனைவர், பல பட்டங்களைப் பெற்றவர், மொழியியல் வல்லுநர் என்றெல்லாம் கூறிக்கொண்டு, இலக்கியவாதிகளுக்கு அளவுகோல் வைப்பது, இலக்கியச்சுழலில் நடக்கும் மிக மோசமான கூத்து. அதுவே அந்த எழுத்தாளர், ஒரு மாடு மேய்ப்பவராகவோ அல்லது 'மிஷின் ஆப்பரேட்டரா'கவோ இருந்திருந்தால், போனால் போகிறது என, வாளாவிருந்து விடுவாரோ இந்த அம்மணி.?!  இலக்கிய உலகிற்கு சமாதி கட்டும் செய்கையல்லவா இது! 

படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் தலைசிறந்த இலக்கியவாதிகளா? நம் நாட்டு இலக்கியப் பார்வை எப்படிப் போகிறது பார்த்தீர்களா? உருப்படுமா இலக்கியம் இங்கே.? ஒரு படைப்பு, எழுத்து வடிவில் (இலக்கண, எழுத்துப்பிழைகள்) எவ்வளவு மோசமாக வந்திருந்தாலும், எழுதியவரின் மனதைப்பார்ப்பதுதான் இலக்கியம். எப்படியாவது மோசடிகள் செய்து பேர் புகழ் சேர்ப்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளாகிவிட முடியாது. அவர் கோடீஸ்வரரா அல்லது மிகச் சிறந்த கல்வியாளரா என்பதெல்லாம் இலக்கிய உலகிற்கு ஒத்துவராத அளவுகோல். இது போன்ற சிபாரிசுக் கடித்தை இனி வரும் காலங்களில் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன்.

கல்விக்கும், இலக்கியப் பார்வைக்கும், அறிவிற்கும், எப்போதுமே சம்பந்தமில்லை என்பதனை எப்போது நாம் உணர்கின்றோமோ, அப்போதுதான் இலக்கியம் என்கிற விதை மெல்லத் துளிர்விட ஆரம்பிக்கும். அதுவரை எல்லாமும் பூஜியம்தான்.!!

இன்று ஞாயிறு குரலில் வந்த எனது வாசகர் கடிதம்