சனி, ஏப்ரல் 27, 2013

மேடை கும்பிடு ஏன்?


மேடை ஏறும்போது மேடையைத் தொட்டுவணங்குகிறார்கள். கலைஞர்கள் அப்படிச்செய்யலாம் காரணம் அவர்களுக்கு பிழைப்பைக்கொடுக்க்கும் ஒர் இடம் அது.

ஆனால், பொதுவாகவே நம் மக்கள் மேடை ஏறும்போது மேடையை ஏன் தொட்டு வணங்குகிறார்கள்?

கோவிலுக்குச் செல்லும்போது கோவில் வாசலைத்தொட்டு வணங்கவேண்டும். காரணம் அடியார்களுக்கும் அடியேன்.அடியார்களின் பாதம் பட்ட இடத்தை நானும் தொட்டு வணங்குகின்றேன், எனது ஆணவம் அழிய வேண்டும் என்பது அதன் அர்த்தம்.

கலைஞர்கள் ஆடுகிற மேடையை நாம் ஏன் தொட்டு வணங்க வேண்டும்.

ஒரு நிகழ்விற்குச் சென்றிருக்கையில், அதிர்ஷ்டக்குழுவில் பரிசு விழுகிறது ஒரு பெண்ணிற்கு. அவர் மேடைக்கு அழைக்கப்படுகிறார், பரிசுதனைப் பெறுவதற்கு. மேடை ஏறிய அவர், அந்த மேடையைத்தொட்டு வணங்கிய பிறகுதான் பரிசை வாங்கச்செல்கிறார்.

ஒரு திருமணத்தில் அப்படித்தான். மேடைக்கு வாருங்கள், மணமக்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நில்லுங்கள், இன்னும் சிறிது நேரத்தில் தாலி கட்டவிருக்கிறது என்றவுடன், எல்லோரும் காலணிகளைக் கலற்றிவைத்துவிட்டு, மணவரை மேடையை பயபக்தியுடன் தொட்டுகும்பிட்ட பிறகுதான் மேடையேறுகிறார்கள்.

அரசியல் மேடைகளும் அப்படியே. தலைவர் மேடையில் எதேனும் வழங்க அழைத்தால், மேடையைத் தொட்டு வணங்கிய பிறகே ஏறுகிறார்கள்.

நான் இதுவரையில் அப்படிச்செய்தது இல்லை. இருப்பினும் யோசிப்பேன், நாம் தெளிவாக இருக்கின்றோமா அல்லது தெளிவற்ற நிலையில் உலவுகிறோமா, என..!

ஏன் ஏறுகிற மேடையினை தொட்டுவணங்கவேண்டும். ? கலைஞர்கள் செய்யலாம்.. அது விசுவாசத்தின் வெளிப்பாடு. நாம் ஏன்?

வியாழன், ஏப்ரல் 25, 2013

தேர்தலும் நாங்களும்


பத்திரிகை செய்திகளைக் கவனியுங்கள். பாரிசான் ஆட்சியின் தலைமையில் வருகின்ற செய்திகள் அவை.

உத்துசானில் -  DAP, பாஸ் கட்சியை அடக்கி ஆளுகிறது.

சீனப்பத்திரிகைகளில் -  பாஸ் கட்சி ஹூக்கும் ஹூடுட்’ஐ அமல்படுத்தவிருக்கிறது, சீனர்களுக்கு இதில் உடபாடில்லை. ஓரிரு சீனர்கள் பதாதைகள் ஏந்தி தமது எதிர்ப்பினை தெரிவிப்பதுபோல்  காட்சிகொடுக்கின்ற புகைப்படம் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.

பிரித்த ஹாரியானில் - பி.கே.ஆர் கட்சி இந்தியர்களின் பொம்மை.

ஆங்கிலப்பத்திரிகையில் - பினாங்கில் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டு வெடித்தது - எதிர்கட்சியின் சதி. வீட்டுவாசலில் நாய்குரைத்தால் கூட எதிர்கட்சி தலைவரின் சூழ்ச்சி என்கிறார்கள். (ஸ்டூப்பிட்)

பாரிசான் ஆட்சி மக்கள் அறிவாளி இல்லை என்று நினைக்கிறதா? அல்லது அறிவாளியாய் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறதா?

மின் ஊடகங்களில், எதிர்க்கட்சிக்கூட்டத்தில் முட்டிமோதி ஓரமாக மோட்டார் வாகனத்தில் அமர்ந்தவர்களை மட்டும் காட்டி, எதிர்கட்சி வேட்பாளர் பேசுகையில் மக்கள் யாரும் வரவில்லை என்கிறார்கள்.

தமிழ் வானொலி, உங்களின் பொது(ய்)தேர்தல் வானொலி என ஓயாமல் புருடா விட்டுக்கொண்டு, மன்னிப்பு மனிதனின் மாண்பு என்கிற குறுநாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

ம.இ.கா தலைவரோ, ஏற்கனவே எந்த பிரச்சனையும் இல்லாமல் வெற்றிகண்ட ஓர் தொகுதிக்குச் சென்று அமர்ந்துகொண்டு, தமிழர்களுக்கு அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கின்றார். சாவால்களைக் கண்டு நடுங்கும் இவர் ஒருவரே சாட்சி, நமது உரிமைகளைத் தட்டிக்கேட்கும் லட்சணம்.

DAP ஆட்சியில் எதுவும் கிடக்கவில்லை என்று கூறிக்கொண்டு அக்கட்சியின் சில மகளிர் தலைவிகள் (பார்ப்பத்தற்கு கட்சித் தலைவர்கள் போலவே இல்லை, மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்பவர்க்ளைப் போலவே உள்ளனர்.) கட்சியின் அடையாள அட்டையினை வெட்டி எறிகிறார்கள். இச்சம்பவத்தை மலாய்ப்பத்திரிகைகளும், டீவி 3 வும்  பிரமாண்டமாக தாங்கி வருகிறது. அங்கே தமிழர்களின் பிரச்சனைகள் லேசில் தலைக்காட்டாது. அவற்றை மூடுமந்திரம் செய்துவிடுவார்கள்.

பாரிசான் எல்லோரையும் விலைகொடுத்து வாங்குகிறது. பண அரசியலில் பேர்போனது பாரிசான் ஆட்சி.

பாரிசான் நம்மை 56 ஆண்டுகள் பின்னோக்கியே இழுத்துச்செல்கிறது. மக்கள் அறியாமையிலேயே உழலவேண்டுமென்கிற எண்ணம் கொளுந்துவிட்டு எரிகிறது பாரிசான் தலைவர்களிடத்தில்

என்னைக்கேட்டால், தேர்தல் முடியும்வரை எந்த வானொலி தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளின் பக்கம் போகவேண்டாம்.

மலேசிய மம்மி

பார்த்ததில் பிடித்தது ரசித்தது யோசித்தது.
நன்றி பாலகோபாலன் நம்பியார்.


ஒகே, இந்த கார்ட்டூன் படம் என்ன சொல்கிறதென்றால், தலைவரின் மனைவி ( மலேசிய மம்மி) பயன்படுத்தியிருக்கின்ற அணிகலன்கள் மற்றும் ஆடை ஆபரணங்களின் விலையில் அதிகமான வெங்காயம், பூண்டு, முட்டை, கேஸ், கோதுமைமாவு, சீனி, அரிசி, குழந்தையின் பால், சமையல் எண்ணெய், கடுகுக்கீரை என நிறைய அத்தியாவசியப்பொருட்களை மக்களுக்காக வாங்கி கஷ்டப்படும் ஏழைகளுக்கு இலவசமாகவே தரலாம். அவர்களின் பசியாவது ஆறும்.  


திங்கள், ஏப்ரல் 22, 2013

பள்ளியாசிரியர்கள்.

எங்கள் ஊரில் தமிழாசிரியர்கள் (தமிழ்ப்பள்ளியில் போதிப்பவர்கள்) நிறைய பேர் எழுத்தாளர்களாக பவனி வருகிறார்கள். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், அவர்களின் தமிழ்மொழி ஆற்றல் இயற்கையிலேயே அற்புதமாக அமைந்துவிடுவதுதான். 

இருப்பினும், அவர்களின் சிறுகதைகளை வாசித்தோமென்றால் எல்லோரும் ஒரே மாதிரியான சிந்தனைச் சூழலில் சிக்குண்டுதான் கதைகளைப் புனைந்திருப்பார்கள்..

உதாரணத்திற்கு மாணவனின் புறத்தோற்றம், படிப்பில் கவனமின்னை, பெற்றோர்களின் ஆடைகள் (அழுக்கான உடைகளில் பள்ளிக்கு வருவதால் அவமானம்) பெற்றோர்கள் முடி வாறியிருக்கும் பாணி, பெற்றோர்களின் நாக்கு முக்கா ரிங்டோன், சத்தம் போட்டுப்பேசும் பெற்றோர்கள் (அநாகரீகமாம்!) குளிக்காமல் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள், குழந்தைகளின் வளர்ச்சியை பள்ளியில் வந்து கண்டுகொள்ளாத நிலை. (மலாய்,சீனப் பள்ளியில் - உடனே கண்டனக்கடிதம் வரும், தமிழ்ப்பள்ளியில் என்னைப்பொருத்தவரையில், எனக்கு வந்ததேயில்லை, அழைப்பு விடுவார்கள்.. மகன் ரொம்ப குறும்பு என.) பிள்ளைகளின் பேக் சரியில்லை.. தூய்மையில்லை.. பெற்றோர்கள் ரௌடிகள்...அது இது என, தமது கதைகளின் கதை மாந்தர்களாக இவரகளை வைத்து கதைதனை வடித்து விடுவார்கள். அல்லது பள்ளியில் நடக்கும் அரசியலை நுழைத்து அது சரியில்லை இது சரியில்லை என்கிற புராணத்தைச் சொல்ல ஆரம்பிப்பார்கள்...

அதாகப்பட்டது, கதைகளின் கரு என்னவென்றால், எல்லா அவலத்திற்கும் யாராவது இருப்பார்கள் பின்னணியில், அந்த  ஆசிரியரைத்தவிர. !!!?? அவர் மட்டுமே நல்லவர் அங்கே. போதிக்கின்ற வேலைகளை விட்டுவிட்டு அவலங்களைக் கண்காணிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

மாணவர்களின் கல்வி மற்றும் பொது அறிவு வளர்ச்சியில், அந்த ஆசிரியர் ஆற்றிக்கொண்டிருக்கும் அரிய பங்கு பற்றிய அற்புதமான கதைகளை நான் இதுவரையில் வாசித்ததில்லை. (இருக்கலாம், என் கண்ணில் இன்னும் படவில்லை).

சமூதாய அக்கறை அதிகம் உள்ளவர்கள் ஆசிரியர்கள். அதைவிட முக்கியம் மாணவர்களின் வளர்ச்சி.
 

சாக்லெட்

விளம்பரமே இல்லாத
ஒரு சாக்லெட்டும்
அதிக விலையில்
விற்கப்படும்
ஒரு சாக்லெட்டும்
அதே சுவையில்..
சாக்லெட் ஒரு உவமைதான்!

சிதறல்கள்

நினைவுகள்
தவிடுபொடியாகும் போது
உறவுகள் சிதறல்களாகின்றன
நிலைக் கண்ணாடி கூட
தூள் தூளாக...
பிம்பத்தைக்காட்டாமல்..

திங்கள், ஏப்ரல் 15, 2013

பி.பி.ஸ்ரீநிவாஸின் மரணம்

பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸின் பரம ரசிகை நான். பைத்தியக்கார ரசிகை என்றுகூட சொல்லலாம். எங்கு அவரின் பாடல்கள் ஒலித்தாலும், என்ன முக்கியமான வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு, அவரின் பாடல்களில் லயித்துவிடுவேன்..
அப்பேர்பட்ட வசீகர குரலுக்குச் சொந்தக்காரர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்.

எங்களின் வானொலி நிலையங்களில்  அன்னாரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்பமாட்டார்கள். பணியில் இருக்கும் அறிவிப்பாளர்களுக்கு எந்த பாடகரைப் பிடிக்கிறதோ அவரின் பாடல்களை அதிகமாக ஒலிபரப்புவார்கள். ரசிகர்களின் விருப்பங்களுக்கு என்றுமே செவிசாய்க்காத ஒலிபரப்பு நிலையங்கள் எங்களுக்குக்கிடைத்திருப்பது பெரும் துரதிஷ்டமே.

பகலில் இளைஞர்களை கவர்கிறோமென்று ஒரே கூச்சல் பாடல்களும் அதிநவீன பாடல்களும் ஒலிபரப்பாகும். இரவில் பழைய பாடல்களை ஒலிபரப்புகிறேன் பேர்வழி என, எப்போதுமே ஒரே மாதிரியான பாடல்களை ஒலிபரப்பி வெறுப்பேற்றுவார்கள்., மேலும் அப்பாடல்கள் வானொலியில் ஒலியேறுவதற்கு முன், தமது குரல்வளத்தைப் பறைசாற்ற அப்பாடலை இவர்கள் ஒருமுறை பாடிக்காட்டியோ அல்லது அந்த பாடல் வரிகளுக்கு/கவிதைகளுக்கு மொன்னையாக ஓர் விளக்கதையோ கொடுத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கும்போது பாடல்களைத் தொடர்ந்து கேட்கின்ற ஆர்வமே போய்விடுகிறது.

இந்த அலம்பல்களுக்கெல்லாம் வடிகாலாக அமைந்தது `குருவின் இன்பமிங்கே’ என்கிற இசைப்பொக்கிஷ `வெப்சைட்’. முகநூலின் என் இனிய நண்பரின் அறிமுகத்தில் கிடைத்தது இந்த வெப்சைட். எப்பொழுது அந்த வெப்சைட் என் கண்ணில் பட்டதோ, அன்றிலிருந்து வானொலிக்கும் அங்கே பணிபுரியும் அறிவிப்பாளர்களுக்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, வானொலிக்கு பதில் குருவின் இன்பமிங்கே’வைத் தட்டிவிட்டுவிடுவேன். எந்த ஒரு அறுவையான அறிவிப்பும் இல்லாமல், எல்லாவற்றையும் தமிழ் படுத்துகிறேன் என்கிற படுத்துதல் இல்லாமலும், எரிச்சலூட்டுகிற பாடல்களும் இல்லாமல், விளம்பரங்களும் இல்லாமல் அற்புதமான பாடல்களைக்கேட்டுக்கொண்டே நமது பணிகளைச் செவ்வனே செய்யலாம்.

அங்கே தினமும் விஜயம் செய்துவிடுவேன். பகலில் அலுவலகத்திலும் இரவு நேரங்களில் வீட்டிலும், விடாமல் என்னுடன் இருப்பது இந்த அற்புத இசைத்தொகுப்புதான்.

அவ்வேளைகளில் நான் அதிகம் கேட்பது பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடல்களைத்தான்.

பக்திப்பாடல்களையும் இவரின் குரலில் ஒலிக்கின்ற பாடல்கள்தான் அதிகாலை நேரங்களில் என் வீட்டில் பக்திப்பரவமூட்டும்.
 

சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
பொழுது விடிந்துவிடும்..விடிந்தால்..
ஒடிவதுபோல் இடையிருக்கும்..இருக்கட்டுமே..
தோள் கண்டேன் தோளே கண்டேன்..
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
முன்னழகைக் கண்டுகொண்டால், பெண்களுக்கே ஆசை வரும்..
துள்ளித்திரிந்த பெண் ஒன்று துயில் கொண்டதேன் இன்று..
சந்திப்போமா இன்று சந்திப்போமா..
பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா..
போகப்போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்..
ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவிற்குப் பெயர் என்ன..
அந்தரங்கம் நானறிவேன்..
அனுபவம் புதுமை, அவனிடம் கண்டேன்..
அழகிய மிதுலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..
சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..
கன்னிவேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா..
மாலையும் இரவு சந்திக்கும் இடத்தில்...

i am going crazy on all this songs ...

பி.பி ஸ்ரீநிவாஸ் அவருக்கு மரணமில்லை. தேனிலும் இனிய பாடல்களை என்றும் நெஞ்சம் மறப்பதில்லை. அனைத்தும் இறவாப்புகழ் சொல்லும் பாடல்கள். அவரின்
தாலாட்டும் குரலில் மயங்காதோர் உண்டோ..

இங்கே சென்று அந்த இசைமேதையின் பாடல்களைக்கேட்கலாம்..

http://www.inbaminge.com/t/hits/Voice%20of%20P%20B%20Srinivas/

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

சாட்டிங்

குடும்பத்தில் உள்ளவர்களின் முகநூல் அக்கவுண்ட்’ஐ தெரிந்துவைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அவ்வப்போது எட்டிப் பார்த்துக்கொள்வது வழக்கம். 

நான் என் கணவருடையதையும் அவர் என்னுடையதையும் பார்த்துக்கொள்வோம். பெரும்பாலும் சட்டை செய்வது கிடையாது, இருப்பினும் பார்ப்போம்.

நீண்ட நாள் கழித்து நேற்று அவருடைய அக்கவுண்ட் உள்ளே நுழைந்து என்ன செய்கிறார் என்று பார்த்தேன். சாட்டிங்கில் பகிர்ந்துள்ளதைப் படித்தேன். 

ஒரு பெண்ணிடம் அடிக்கடி சாட் செய்துள்ளார். ஹை.. இருக்கியா? குட் மார்னிங்... சாப்பிட்டாயா? என்ன சாப்பாடு? இவ்னிங் ஃப்ரீயா? பிறந்தநாள் வாழ்த்துகள். பரிசு வேண்டுமா? என்ன பரிசு வேண்டும்... நான் வாங்கித்தரவா? குட் நைட்.. வீட்டில் யாரும் இல்லையா? என இப்படியே... (ஆபாசமாக ஒன்றுமில்லை..) 

என் கணவர் பப் செல்லும் போதெல்லாம் அதிகமாக உளறியிருக்கின்றார் அப்பெண்ணிடம். தண்ணீ மப்பில் அதிக அன்பைப்பொழிந்துகொண்டு... 

அப்போதெல்லாம் அவர் செய்துள்ள சாட்.. ஒரே உளறலாக இருந்துள்ளது. அப்பெண்ணிற்கு குழப்பம்.

சார், நீங்க என்ன சொல்லவறீங்க? ஆங்கிலத்தில் சொல்லவேண்டாம், தமிழில் சொல்லுங்கள்.. புரியல.. மலாய் மொழியில் சொல்லலாமே... என மீண்டும் மீண்டும் சாட்டில் கேள்விகளை அனுப்பிக்கேட்டவண்ணமாக இருந்துள்ளார். 

மறுநாள், மேலே உளறியதை ஒரு பொருட்டாகக் கருதாமல் மீண்டும், சாப்பிட்டியா? வேலை முடிந்துவிட்டதா? வீட்டில் யாரும் இல்லையா? தூங்கலையா? என இவரின் சார்பாக சாட் தொடர்கிறது. 

இதே கேள்வி பரிமாற்றங்கள் தான் தினமும்... போர் அடித்துவிட்டது போலும், இப்போதெல்லாம் அவளிடம் அவ்வளவாக சாட்டில் பிதற்றுவது இல்லை. பதில் போடுவதும் இல்லை. 

ஆனால் அப்பெண் தொடர்ந்து,  இருக்கீங்களா? வேலை முடிந்துவிட்டதா? என்ன பதிலே காணோம்..! சாட் செய்யப்பிடிக்கவில்லையா? எதுவாக இருந்தாலும் சொல்லிவிடுங்கள்.. மௌனம் வேண்டாம்.. !! என தொடர்ந்து மெசெஜ் செய்தவண்ணமாகவே உள்ளார். 

நேற்று நான் இந்த சாட் சமாச்சாரங்களைப் படித்துக்கொண்டிருக்கும் போது, புத்தாண்டு வாழ்த்துகள் சார், என அனுப்பியிருந்தார் அப்பெண். 

நான் பதில் எழுதினேன். 

`புத்தாண்டு வாழ்த்துகள் மேடம். ’

`நலமா?’

`ம்ம் நலம்?’ 

`ரொம்ப நாளா ஆளையே காணோம். !!?’

`ரொம்ப பீஸி மேம்..’

`வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு சார்..’

`ஆடிட் இருப்பதால் தினமும் அதிக வேலை. பேஸ்புக் வருவதில்லை. கவலை வேண்டாம், வந்தால் நிச்சயம் உங்களுக்கு ஒரு ஹை சொல்வேன்.. ஒகே வா?’

`ம்ம் ஒகே சார். தெங்ஸ்..’

`பை..’ 






வியாழன், ஏப்ரல் 11, 2013

இங்கிதம்..

நம்மவர்களின் மனோபாவங்கள் நம்மை எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாக்கும் என்பதனைச்சொல்லும் ஒரு சிறுகதை இது.

கேளுங்க கதையை.;

என்னுடைய கடை வீடு ஒன்றினை விற்பனை செய்வதற்கு நான் ஆள் பார்த்துக்கொண்டிருந்தேன். போகிற போக்கில் பலரிடம் சொல்லிவைத்தாகிவிட்டது. அதற்கான நேரம் வராததால், சரியான விலையில் கொடுத்தும், வாங்குபவர்கள் அமையவில்லை.

அந்த வீட்டின் தற்போதைய விலை அதிக அளவில் ஏற்றம் கண்டுள்ளது. இருப்பினும் வாங்குபவர்கள் நம்மவர்களாக இருந்தால் வாங்கியவிலையை விட கொஞ்சம் கூடுதல் லாபத்தில் விற்கலாமே என்கிற சிந்தனையில் இருந்தேன்.

வீட்டின் விலை, ஐம்பத்தைந்தாயிரம் நான் வாங்கும்போது. பதிநான்கு வருடங்களுக்குமுன். இப்போது அவ்விலை நான்கு மடங்காக உயர்வு கண்டுவிட்டது. எனக்கு நான்கு மடங்கெல்லாம் வேண்டாம். இரண்டு மடங்கில், அதாவது நூறாயிரம் விற்றால் போதுமானது. அவ்விலைக்கும் ஆட்கள் வந்தார்கள், பார்த்தார்கள், சென்றார்கள் பதில் இல்லை.

இப்படி காலதாமதாமாவதற்கு காரணமும் உள்ளது. அதாவது அந்த வட்டாரம் அதிக அளவில் அயல்நாட்டவர்கள் வசிக்கும் கோட்டையாக மாறிப்போனதால், உள்ளூர்வாசிகள் அங்கு தங்குவதற்குத் தயங்குகின்றார்கள். வன்புணர்வு, வழிப்பறிக்கொள்ளை, கொலை, திருட்டு, கடத்தல், விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு அந்த இடத்தின் பெயர் அடிக்கடி பத்திரிகைகளில் அடிபடுவதால் நிலைமை மோசமாகிவிட்டது. அங்கே விடுகளை வாங்குவதற்கு மக்கள் தயங்குகின்றார்கள். வாடகைக்கு வேண்டுமானால் விடலாம், அதுவும் அயல்நாட்டவர்களின் மத்தியில் கிராக்கிதான்.

வாடகைக்குக் கொடுத்திருந்தேன்.

இரண்டு நாள்களுக்கு முன் சரோஜா என்கிற ஒரு பெண் என்னைத் தொடர்பு கொண்டு வீட்டின் விலை பற்றி விசாரித்தார்.

“ விஜி தானே, அப்பா நல்ல வேளை நம்பர் இருந்தது. அந்தக் கடை வீடு வித்துட்டீங்களா’ங்க?”

“இன்னும் விற்கவில்லை, சேவாக்கு போய்கிட்டு இருக்கு. ஏங்க வேணுமா?”

“ சேவாக்கு கிடைக்குமா?”

“சேவாக்கு ஆள் இருக்காங்களே, வேணும்னா, வாங்கிக்கோங்க...”

“வாங்கிடுவேன் ஆனா இப்போ பணம் இல்லைங்க. அதான் சேவாக்கு..!!?”

“ சேவாக்கு ஆள் இருக்காங்களேன்.. என்ன செய்ய.?”

“வெளியூர் காரன்தானே, போன்னா போகப்போறான்.”

“அதெல்லாம் முடியாது..வேணும்னா டிப்போர்ஷிட் கொடுத்து புக் பண்ணுங்க, அதற்கப்புறம் சேவா ஆட்களை வெளியேற்றுவதைப்பற்றி பேசலாம். அதே விலைதான். விலையை ஏற்றவில்லை.”

“நான் ஜூலை மாதம்தான் பணம் கொடுக்கமுடியும். என் மகள் பிரைடல் படித்து சர்ட்டிபிகேட் எல்லாம் எடுத்திட்டா, அந்த ஏரியாவில் ஒரு பிரைடல் ப்யூட்டி பாலர் தொறக்கலாம்ன்னு நினைச்சிருக்கோம். கடைவீடு, ஆள் நடமாட்டம் இருக்கும், மேலே வீட்டிலேயே தங்கிக்கொண்டு, இந்த பிரைடல் ப்யூட்டி பாலரும் நடத்தலாம்ன்னு நினைக்கிறோம்..”

“தாராளமா செய்யலாம், வீட்டை வாங்கிக்கொண்டு செய்யுங்கள். வாடகையைப் பற்றிபேசவேண்டாம், வீட்டில் ஆள் இருக்கு..”

“சரிங்க, அப்படியென்றால் வீட்டை ஒரு முறை பார்க்கலாமா?” என்று இரண்டு நாளாக என்னைத்துரத்தியவண்ணமாகவே உள்ளார் சரோஜா.

நேற்று அழைத்துச்சென்று காண்பிக்கலாமென்று முடிவு செய்திருந்தேன்.  கடுமையான மழை. மழையென்றால் மழை அப்பேர்ப்பட்ட பேய்மழை. என்னால் இன்று வர இயலாது, என்பதனை சொல்வதற்கு, நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. மீண்டும் நான் அழைத்தேன் அவர் எடுக்கவில்லை. பிறகு அவர் அழைத்தார் நான் எடுக்கவில்லை. பிறகு இருவரும் மாறி மாறி அழைத்தோம் அழைப்பு செல்லவில்லை. கடுமையான மழையின் காரணமாக நெட்வர்க் பிரச்சனை வந்துவிட்டது.அதுமட்டுமல்ல அவர் எனக்கு மிஸ்ட்கால்தான் கொடுக்கின்றார். நான் அழைத்தால் சாவகாசமாகப் பேசுகின்றார். அதிலும் மிச்சம் பிடிக்கின்றார்கள்..என்ன செய்ய.!  

வீட்டிற்கு வந்து தொலைப்பேசியைப் பார்த்தால், பதினைந்து மிஸ்ட் கால்கள். எடுக்காத அழைப்புகள். அழைத்தேன். “நான் அவ்வீட்டின் கடைத்தெரு வாசலில் தான் நின்றுகொண்டிருக்கின்றேன். நீங்கள் எங்கே? ” என்றார் சரோஜா.

மழையின் கடுமையால் வீட்டிற்கு வந்துவிட்டேன் எனவும், நாளை வேண்டுமானால் பார்க்கலாம் என்றேன். இல்லை நான் இங்கே நிற்கின்றேன், நீங்கள் முடிந்தால் இப்பொது வரப்பாருங்கள். என்றார் அம்மணி. மழை மழை கடுமையான மழை நான் இப்போது எங்கும் வரமுடியாது என்று கூறிவும், சரி அப்படியென்றால் நாளை கண்டிப்பாக வரவேண்டும் என்றார்.

இன்று காலையிலிருந்து அழைப்புகள் ஓயவில்லை. ‘யங்க கண்டிப்பா வந்திடுங்க.. கண்டிப்பா வந்திடுங்க.. என நினைவுறுத்தியவண்ணமாக இருந்தார்.  மாலை நேரங்களில் மழை வருவதால், உணவு நேரத்தில் சந்திக்கலாம் என்கிற எனது முடிவைச் சொன்னேன். மதிய உணவு நேரத்தில் வரவேண்டுமென்றால் என்னை அழைத்துவர யாரும் இல்லையே, நீஙகள் வந்து அழைத்துச்செல்கிறீர்களா? என்று கேட்டார்.  மதிய உணவுநேரத்தில் அரக்கப்பறக்க ஒடிவரும் என்னை, அங்கே வா, இங்கே வா என அலைக்கழிக்கவேண்டாம். முடிந்தால் சனி ஞாயிறுகளில் பார்க்கலாம். என்றேன். முடியாதுங்க, எனக்கு அவசரமாக வேண்டும். சரி நானே வந்துவிடுகிறேன். அந்த ஸ்பேர் பார்ட் கடையில் காத்திருப்பேன், அங்கே சந்திக்கலாம் என்றார்.

மதிய உணவு நேரம் வருவதற்குள் காருக்கு விரைந்தேன். பாதிவழி சென்றவுடன் தான் கைப்பேசியை எடுத்துவர மறந்திருந்தேன். அடக்கடவுளே.. எப்படி?

காரை வீட்டின்முன் நிறுத்திவிட்டு. (கார்களின் வரிசை, நெரிசல் அதிகம்..) சரோஜாவைத்தேடினேன். மூச்சுவாங்க ஓடிவந்தார். உங்களின் காரைப்பார்த்ததிலிருந்து கார் பின்னாலேயே ஓடிவருகிறேன். நீங்கள்தான் என்னைப்பார்க்கவேயில்லை. என்றார்.

ஸ்பேர் பார்ட் கடையில் நிற்பதாகச்சொன்னீர்களே, அங்கே நிற்கவேண்டியதுதானே.! ஏன் இப்படி மூச்சுவாங்க ஓடிவாருவானேன்!!.. கேட்டேன். ஒரு அசட்டுச்சிரிப்பு அவரிடம்..

இருவரும் வீடு பார்க்கக்கிளம்பினோம். வீடு சாத்தியிருக்கிறதே, எப்படிப் பார்ப்பது. ?

இதோ காலியாக இருக்கும் இந்த பக்கத்துவீட்டைப்பாருங்கள் அதுபோலவேதான் இருக்கும் நம் வீடும். வீட்டைப் பார்க்கவேண்டுமென்றால், வாடகைக்கு இருப்பவர்கள் வந்தபிறகு பார்க்கலாம், என்றேன். சம்மதித்தார்.

வீட்டைச்சுற்றிக்காட்டிய பிறகு இருவரும் நடந்து வந்துகொண்டிருக்கும்போது, வழியில் ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன். அவரும் வீட்டைப்பற்றி விசாரித்தார். வீடு என்னாச்சு? வித்துட்டீங்களா? நான் ரொம்ப நாளாக உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பாசாருக்குக்கூட வருவதில்லையே நீங்கள்.! என்னாச்சு? என்று மிகுந்த அக்கறையோடு விசாரித்தார். நான் வீடு மாறிப்போய் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன என்கிற விவரத்தைச்சொல்லி, எனது தொலைப்பேசி எண்களைக்கொடுத்தேன்.

சரோஜாவிற்குக் கோபம்வந்துவிட்டது. என்னிடம் வீடு விற்பதாகச்சொல்லிவிட்டு, இப்போது அவரிடம் கொஞ்சுகின்றீர்களே. இதுக்கு என்ன அர்த்தம்?  நான்தான் வீட்டை வாங்குகிறேன் என்றேனே, பிறகு ஏன் அவரிடம் நம்பர் கொடுக்கின்றீர்கள்.! நான் இல்லாத சமையத்தில் ரகசியமாக பேரம் பேசவா? என்றார் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல். எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. என் தோழியும் சுதாகரித்துக்கொண்டு, ஓ..இவங்கதான் பையரா.. ஒகே ஒகே. நான் உங்களிடம் நேரமிருக்கும்போது அழைத்துப் பேசுகின்றேன், என்று சொல்லி இடத்தைக்காலி செய்தார்.

சரோஜாவின் பக்கம் திரும்பி, இது உங்களுக்கே ஓவரா இல்லை.!? நீங்கள் வீடு பார்க்க வந்த்தால் நான் யாரிடமும் பேசக்கூடாதா? இவ்வளவு நாள் வாங்காத வீடு, இப்போ விசாரிக்கும்போதே உடனே வாங்கிவிடுவார்களாக்கும்.. கடுப்பு வந்துவிட்டது. சுதாகரித்துக்கொண்டு.. மதியவேளை என்பதால், உணவு உண்ண சீனக்கடைக்கு நாசிஆயாம் சாப்பிட அழைத்துச்சென்றேன்.

சாப்பாடு ஆடர் கொடுத்தாச்சு. சாப்பாடு வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும்போது அவருக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.

இப்போதான் சாப்பிட வந்தேன். ஓ..வீடு இருக்கா? எந்த ஏரியா? கடை போடலாமா? என பேச்சு தொடந்தது.

சாப்பாடு வந்தது. “யங்க..யங்க.. நான் அவரசமா வெளியே போகணும், இந்த சாப்பாட்டை புங்குஸ் (பொட்டலம்) பண்ணச்சொல்லுங்க, என்றார். குளிர்பானத்தை மடக்கு மடக்கு என குடித்துமுடித்தவேளையில் காலில் சுடுதண்ணீ ஊற்றியதுபோல் பரபரப்பானார். அங்கு வந்த சீனத்தியிடம், இவரின் தட்டில் உள்ள உணவை பொட்டலங்கட்டச்சொல்லி, அவரிடம் கொடுக்கச்சொன்னேன். பொட்டலத்தை வாங்கியவர், பணம் செலுத்துவதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலையில்லாமல், என்னிடம் நன்றிகூட சொல்லாமல், பொட்டலத்தை வாங்கிய மறுவினாடி மறைந்துபோனார்.

சீனர் கடையில், நான் மட்டும் தனிமையில், நேரமின்னையால், அரக்கப்பறக்க உணவை வாயில் போட்டுக்கொண்டு, சாப்பிட்டும் சாப்பிடாமலும் கடையை விட்டு வெளியேறி அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

தாமதம்தான்.. இருப்பினும் பூனைபோல் உள்ளே வந்து அமைதியாக அமர்ந்துகொண்ட்டேன்.

கைப்பேசியை எடுத்துப்பார்த்தேன். சரோஜா இருபத்தைந்து முறை அழைத்திருந்தார். அழைத்துக்கொண்டும் இருந்தார். நான் எடுக்கவில்லை. என்ன அவசரமாக இருந்தாலும், இனி இவர் தேவையில்லை என்கிற முடிவில் நான்.. !!

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

காலை சூரியன் (மாமிகதை)


மாமிகதை..

தோல் எல்லாம் அரிப்புகண்டு மிக மோசமாகிவிட்டது மாமியின் உடல். எவ்வளவு அரிப்பு மருந்துகள் வாங்கியும், இலைகளைக்கொண்டு மூலிகை வைத்தியம் செய்தும் ஒன்றும் சரியாகவில்லை. ஒரு நாள் விட்டு மறுநாள் அதே போல் ரணமாகிறது.. தாங்கமுடியாத அரிப்புவேறு பரிதாபம்தான். என்ன செய்ய? சக்கரைவியாதி இருந்தால் தோல் அரிப்பு வருமாம். புண் ஆறுவது கொஞ்சம் கஷ்டமே. மருத்துவரும் சொன்னார்.

ஏற்கனவே தன் தாத்தாவை கவனித்துக்கொண்ட என் தோழி ஒரு ஐடியா கொடுத்தாள்.. காலை சூரியன் தோலில் படும்படி, பத்து அல்லது இருபது நிமிடங்கள் வெயிலில் அமரவைத்துப்பார். கொஞ்சம் நிவாரணம் கிடைக்கலாம் என்றார்.

என் வீட்டு பணிப்பெண்ணிடம், இன்று வேலைக்குக் கிளம்பும்போது, பாட்டியை வெயிலில் கொஞ்சநேரம் அமர வை. என்றேன்.

நான் அலுவலகம் சென்று சேர்வதற்குள் தொலைப்பேசியில் அழைத்தாள்.. அக்கா வெளியே உட்காரவைக்கவா..? என்று.

சாப்பாடு கொடுத்துவிட்டு பிறகு செய், இல்லையேல் மயக்கம் வந்துவிடப்போகிறது, என்று கூறி அழைப்பைத்துண்டித்தேன்.

வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தவுடன் ...
புகார் செய்தார் மாமி...

யம்மா, மொட்டை வெயிலில் என்னை உட்காரவைத்து வாட்டி எடுத்து விட்டாள். அவளைப் போகச்சொல். நான் போறேன்..

என்னடி ஆச்சு? என்ன பிரச்சனை? ஏன் பாட்டி இவ்வளவு கோபமா..!!! பணிப்பெண்னிடம் கேட்டேன்.

மதியம் சாப்பிட்ட பிறகு , பாட்டியை வெயிலில் உட்காரவைத்தேன்.

உச்சிவெயிலில்...

அடிப்பாவி.. மூட்டாளா நீ? யாராவது மொட்டை வெயிலில் உட்காரவைப்பார்களா?

நீதானே சொன்னாய்.. சாப்பிட்டபிறகு உட்காரவை என்று. அதான் அதேபோல் செய்தேன்.

அடக்கடவுளே....!!!!!

கொழுத்துகிற வெயிலின் கீழ் கிழவியை அமரவைத்து, முகமெல்லாம் கருத்துப்போய் சோர்ந்துதான் போயிருந்தார்.. பாவம்.

நீ இனி ஒண்ணும் செய்யவேண்டாம் தாயி.. எல்லாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என கும்பிடுபோட்டேன்.

வேலை சொல்வதைவிட, எருமை மேய்க்கலாம் போலிருக்கு.