ஞாயிறு, ஜூன் 23, 2013

அபசகுனப்பேச்சு

ஒரு பெண் பிரசவத்திற்குத் தயாராகும்போது, குடும்பம், கணவன் உறவுகள் என எல்லோரும் அதற்குத் தயாராகிக்கொண்டிருப்பார்கள்.

எங்கே பிரசவிப்பது.., என்னென்ன பொருட்கள் வாங்கலாம்.., யார் கவனித்துக்கொள்வார்கள்.. எங்கே கொண்டு விடுவது.. எப்படிப் பாதுகாப்பது.. எவ்வளவு பணம் தேவைப்படும்.. ஆண் குழந்தை என்றால் என்ன வாங்குவது.. பெண் குழந்தை என்றால் என்ன வாங்குவது.. என்ன பெயர் வைக்கலாம்.. வீட்டில் பூஜைகள் போட என்ன செய்யவேண்டும்.. போன்ற ஆயத்தப்பணிகளில் அப்பெண் ஒன்பது மாதபிரசவ நிலையில் இருக்கின்ற போதே மும்முரமாக ஈடுபடத்துவங்கிவிடுவார்கள். குதூகலத்துடன் அக்குடும்பமே ஆவலாய் காத்துக்கொண்டிருக்கும் ஒர் புதிய உறவை வரவேற்க.

இது சகஜம்தான். ஆனால் மனித உறவுகள் ஒருவரின் இறப்பை எதிர்ப்பார்த்து எந்த ஆயத்தப்பணியிலும் ஈடுவது கிடையாது. இந்த நவநாகரீக காலத்திலும் மரணத்தை ஓர் அபசகுனக் காரியமாகவே கருதி, பிறப்பு போல் இறப்பும் இயற்கை என்பதனை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது நம்சமூகத்தில் கண்கூடு.

சோகம் ஏற்படும் என்பதற்காக அதை அபசகுனச் செயலாகக் கருதி, உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்து, அதைப்பற்றிப் பேசினாலே அக்காரியம் நிகழ்ந்துவிடும் என்பதைப்போல் நினைத்து, அத்தகைய பேச்சுகளுக்கு கதவடைப்பு செய்துவிடுகிறார்கள் நம்மவர்கள்.  அல்லது திடுக்கென்று பயந்து நெஞ்சைப்பிடித்துக்கொண்டு `போய் முதலில் வாயைக்கழுவு’ என்று அதட்டி நம்மை நிந்திக்கத்துவங்கிவிடுவார்கள். என்னமோ இக்காரியம் இதுவரையில் யாருக்கும் நிகழாதது போலவும் அல்லது இனி யாருக்கும் இது நிகழவே நிகழாது என்பதைப்போலவும் அவர்களின் பேச்சுகள் இருக்கும். இப்படி மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மரணத்தை அபசகுனமாகக் கருதுவது, அது நம் வீட்டில் மட்டும் நிகழாது  என்கிற அசட்டு குருட்டு நம்பிக்கையேயன்றி வேறென்ன.!

வீட்டில் தள்ளாத வயத்துக்காரர் ஒருவர் இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவர் இன்றோ அல்லது நாளையோ அல்லது அடுத்த வாரமோ அடுத்தமாதமோ மரணமடைந்துவிடுவார் என்கிற நிலை இருக்கின்றபோது, வீட்டில் உள்ளவர்கள் அதற்குத்தயார் நிலையில் இருக்கவேண்டுமா இல்லையா, இப்படி நினைப்பது தவறா.?

ஒருவேளை இச்சம்பவம் நிகழ்ந்தால்.. வீட்டில் இருக்கின்ற நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளாக  என்ன செய்யவேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவது பாவச்செயலாகுமா.! பாவச்செயலாகவே கருதி பலர் அக்காரியங்களை வெறுத்து ஒதுக்குகின்றனர்.

மரணம் யாருக்கும் எந்த நேரத்திலும் நிகழலாம். இளமையில் மரணம் என்பது கொடுமையே. ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றுதான். இருப்பினும் கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என்கிற இறை சிந்தனை இங்கே கைக்கொடுத்து ஆசுவாசப்படுத்தி நம்மை ஏற்றுக்கொள்ளவைக்கிறது.

என் மலாய்தோழியின் மகன் கார்விபத்தில் மரணமடைந்து விட்டான். பத்தொன்பது வயது. கல்விக்கேள்விகளில் சிறந்துவிளங்கும் ஓர் மாணவன் அவன். மருத்துவமனையில் ஆசிரியர்கள் மாணவர்கள் என குவிந்துவிட்டார்கள். அவர்கள் நம்போல் வீட்டில் கிடத்தி சொந்தபந்தகங்கள் வரும்வரையில் ஒப்பாரி வைத்து ஓலமிடமாட்டார்கள். வீட்டிற்கு வராவிட்டாலும் பரவாயில்லை, மருத்துவமனையில் இருந்து பள்ளிவாசலுக்கு எடுத்துச்சென்று சுடுகாட்டிற்குக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

கொடுமைதான். சாகிறவயதா அது.! அழுதார்கள் நண்பர்கள். ஆசிரியர்கள் ஆறுதல் சொன்னார்கள். தாய் கண்ணீர் சிந்தினாலும் ஓர் வாசகத்தை மட்டும் முனகிக்கொண்டே இருந்தார். `இறைவன் கொடுத்தார். அவருக்கு உரிமை உண்டு எடுத்துக்கொள்ள, இருப்பினும் இவ்வளவு விரைவாக எடுத்துக்கொள்வாரென்று நான் நினைக்கவேயில்லை. என் மகனுக்கு, இந்த பிஸ்கட் பிடிக்கும். இந்த ஐஸ்கிரிம் பிடிக்கும். கோழிசம்பல் பிடிக்கும்.. இந்தந்த உணவுகள் பிடிக்கும்..  இறைவா உன்னிடம் அனுப்புகிறேன், இனி நீதான் அவனுக்கு இவற்றையெல்லாம் கொடுக்கவேண்டும்’ என்று இறைவனிடம் உரையாடிக்கொண்டிருந்தார். உருக்கமாக இருப்பினும். பக்குவப்பட்ட மக்களின் நிலை பார்ப்பதற்கு ஆச்சிரியமாகவே இருந்தது.

சென்றவார புதன்கிழமை, மாலை நான்கு மணி இருக்கும்.. என் மாமி மரணமடைந்துவிட்டார் என்று என் பணிப்பெண் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். தகவல் அறிய தொலைபேசி வழி உடனே அழைத்தேன். பதற்றமாக, தீடிரென்று மூச்சுபேச்சு இல்லை. நாக்கு வெளியே தள்ளிவிட்டது, உடபெல்லாம் சில்லென்றாகிவிட்டது அசைவு இல்லை.. என்றாள். தொடந்து என்னசெய்வதென்றறியாமல் அவரை உலுக்கி உலுக்கி நெஞ்சில் குத்தி உயிரை மீட்டுக்கொண்டுவந்துள்ளாள். திடுக்கென்று கண்விழித்த மாமி, ஏன்டி இப்படிக்கத்தற.? என்றவுடன்தான் அவளுக்கு பெருமூச்சே வந்துள்ளது.

இது பற்றிப்பேசுகையில், நிஜமாலுமே அவர் (மாமி) இறந்து விட்டால் நமது அடுத்தக்கட்ட நிகழ்வுகள் என்ன என்பதைப்பற்றிய ஆலோசனைகள் சிலவற்றை வழங்கினாள் என் தோழி. காரணம் இறப்பை நாம் எதிர்க்கொள்ள ஆயத்தமாக இல்லாத நிலையில் அது நடந்துவிட்டால் என்னென்ன செய்யலாம் என்கிற  விழிப்புநிலை பலருக்கு வருவதே இல்லை. அதைப்பற்றிய அக்கறையும் நமக்கில்லை.

முன்பெல்லாம் வீட்டில் இறப்பு நடந்துவிட்டால், பிணத்தை நடுவீட்டில் கிடத்தி, உற்றார் உறவினர்கள் என எல்லோரும் வந்து அழுதுபுரண்ட பிறகு காரியங்கள் நடைபெறும். காரியங்கள் நடைபெறும்போது அந்தப்பிணம் படுகிற அவஸ்தை இருக்கே.. நம் இனத்தில் மட்டுமே இவ்வளவு கொடுமைகள்.

பிணம் பெண்ணாக இருந்தால் ஆண்கள் எல்லோரும் அந்தப்பக்கம் திரும்பிக்கொள்ளுங்கள், என்று சொல்லி பிணத்தின் உடைகளையெல்லாம் கலற்றி வாளிவாளியாக நீர் ஊற்றி சவர்க்காரம் போட்டு குளிப்பாட்டுவார்கள். பிறகு சலசலப்புகள் எழும்.. உயிர் நிலையில் நீர் வடிகிறது, மலம் வெளியேறுகிறது, வாய் பிளந்துகொண்டது, இரத்தம் வழிகிறது .. என்று. அங்கே நிற்கிற நமக்கு அருவருப்பாகவே இருக்கும். பலர் கால்களில் செருப்பு அணியாமல் கூட நிற்பார்கள்.. பிணத்தைக்கழுவுகிற நீர் நம் கால்களில் பட்டுச்செல்லும். பிறகு புடவையை எடு, பொட்டு எங்கே..நகைகள் எங்கே என ஒரே பரபரப்பாகும் சூழல். இதை நான், தேவையே இல்லாத ஆர்ப்பாட்டம் என்றே சொல்வேன்.

இப்போது அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் மருத்துவமனையிலேயே நன்கு தூய்மைப் படுத்தி பெட்டியில் வைத்து அனுப்பிவிடுவார்கள். முறைப்படி காரியங்கள் செய்தால்தான் ஆத்மா சாந்தியடையும் என்று சொல்லி நமது சடங்கு சம்பிரதாயங்களை உச்சத்தில் வைத்து,  பெட்டியில் பவ்வியமாக இருக்கின்ற பிணத்தை வெளியே எடுத்து காரியங்கள் செய்கிறார்கள் இன்னமும். கல்யாணம் எல்லாம் செய்வார்கள்.. நானும் பார்த்துள்ளேன். வாழை மரத்திற்கு  இறந்தவர் தாலிகட்டுவதைப்போன்ற கூத்துகளையெல்லாம் பார்க்கலாம் அங்கே,

அப்படி மருத்தவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்ற வயதுமுதிர்ந்த பெரியவர்களுக்கு மரணம் ஏற்பட்டால்..!? அனுபவப்பட்ட யாழ்ப்பாண வர்க்கத்துத் தோழி ஒருவள் என்னிடம் பகிர்ந்த சில விஷயங்கள்..

இறந்த ஒரு மணிநேரத்திற்குள், பிணத்தை எடுத்துச்சென்று குளியலறையில் வைத்து குளிப்பாட்டவேண்டும். அப்போது அவரின் மலம் எல்லாமும்வெளியேறும். மலம் வெளியேறும்வரை காத்திருந்து நன்கு குளிப்பாட்ட வேண்டும்.  குளித்தவுடன் பிணத்தின் உடலை சுத்தமாகத்துடைத்துவிட்டு விபூதியைக்கொண்டு உடல்முழுக்க பூசுதல் வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு விபூதி.. முடிந்தால் அருகில் உள்ள கடைகளில் கூடுதல் இரண்டு மூன்று பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு வந்து பூசி விடவேண்டும். அதன்பின் இரண்டு பெரிய பாக்கெட் மஞ்சள் பொடிவாங்கி அதை நீரில் கட்டியாகப் பிசைந்து கழிவுகள் வெளியேறும் மர்ம்ம உறுப்புகளான கீழ்பகுதியிகளில் வைத்து நுழைத்து, துணியோ அல்லது உள்ளாடையைக்கொண்டோ கழிவுகள் வெளியேறாமல் இருக்க இறுக்கமாகக் கட்டிவிடவேண்டும். அதன்பின் பிணத்தை அலங்கரிக்கலாம். பெட்டிக்கு ஆடர் கொடுத்து அது வந்தவுடன் சவத்தை அதில் வைத்து யாரும் தொடாமலும் பிணத்தின் மீது விழுந்து அழாமலும் பார்த்துக்கொள்வது நல்லது. சடங்குகள் பிணத்தைத்தொடாமல் நடைபெறுவதுபோல் இருப்பது அனைவருக்கும் நன்மையே.  இறப்பு வீட்டிற்கு வருகிறவர்களுக்கு பிணத்தின் மீதிலிருந்து வெளிப்படும் கிருமிகள் தாக்காமல் இருப்பதற்கு இதுவே சிறந்தவழி.

நல்ல ஆலோசனையாகவே பட்டது. மனதில் வாங்கிக்கொண்டேன். இதை வெளியில் யாரிடமாவது பகிர்ந்தால், அடப்பாவமே உயிரோடு இருக்கும்போதே ஈமச்சடங்கு பற்றிப்பேசுகிறாளே.! பேயா பிசாசா இவ.. என்று மனதிற்குள் நிந்திக்கக்கூடும்.

இருப்பினும் மனிதனாகப் பிறந்தவர்களுக்கு எது நிகழ்கிறதோ இல்லையோ இறப்பு மட்டும் நிச்சயம். கல்யாணச்சடங்கு, கருமாதிச்சடங்கு வளைக்காப்பு நிகழ்வு, பூப்பெய்தல் சடங்கு, தீட்டுக்கழிப்பு, பலவிதமான இறைவழிபாட்டுச் சடங்குகளைவிட, ஒருவர் இறந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்கிற அணுகுமுறைகளை அவசியம்  அனைவரும் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.



  

வெள்ளி, ஜூன் 21, 2013

பழக தெரியவேண்டும், பார்த்து நடக்கவேண்டும் பெண்ணே..

ஆண் நட்பு என்றாலே அலர்ஜியாகிறது இப்போதெல்லம். இப்போது என்றல்ல எப்போதுமே இந்த உணர்வு என்னிடம் நீறுபூத்த நெருப்பாய் அணையாமல் இருப்பதை நான் தொடர்ந்து உணர்ந்துவந்துள்ளேன்.

எவ்வளவு அன்பாக கள்ளங்கபடமில்லாமல் பழகினாலும், அந்த உறவில் எப்படியாவது காமம் நுழைந்துவிடுகிறது. அந்தப்பெண் விரும்பியோ விரும்பாமலோ சம்பந்தப்பட்ட அந்த ஆண் நண்பன், எதோ ஓர் உணர்வை மறைத்து வைத்துக்கொண்டுதான் உறவாடியபடி இருப்பான், போலியாக.

பெண் என்பவள் பாலியல் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை வெளிப்படையாகப் பகிர்வதற்கு தயங்குவாள். அப்படி அவள் தயங்குவதற்குக் காரணம் - அவளை ஆரம்பத்திலிருந்து அடக்கி ஒடுக்கி வைத்துள்ள அவளின் சுற்றம்தான்.

இன்னமும் தனிப்பட்ட பெண் ஒருவளின் பிரச்சனை அவளின் மூலமாகவோ அல்லது மற்றவர்களின் மூலமாகவோ பொதுவில் வைக்கப்படும்போது, அங்கே பிரச்சனை என்ன என்பதைவிட , கொஞ்சமும் தயவுதாட்சண்யம் இல்லாமல் அப்பெண் பொதுவில் தூற்றப்படுவதுதான் எழுதப்படாத விதி.

`அவன் என்னிடம் காமப்பார்வையுடன் பழகிவிட்டான்’ என்று நாம் நமது பெற்றோர் மற்றும் அண்ணன் தம்பிகளிடமோ அல்லது கணவன் காதலனிடமோ அல்லது உற்றார் உறவினரிடமோ பகிர நேர்ந்தால் நிலைமை என்னாகும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா.!

இந்திய கலாச்சாரப்பின்னணியாகப்பட்டது தவறு எங்கே நடந்தாலும் அங்கே அந்தப் பெண் தான் ஒழுக்கங்கெட்டவள் என்கிற ரீதியில் அவளை ரணமாக்கி வேடிக்கை பார்க்கும்.. `நீ வைத்துக்கொண்ட வழி அப்படி.!’ `அவன் கிட்ட இளிச்சிருப்பே,வழிஞ்சிருப்பே..’ ‘மினுக்கிக்கிட்டு பல்லைக்காமிக்க, அவன் அப்படித்தான் கேட்பான்.’ `எதுக்கு உனக்கு ஆண் நட்பு இப்போ?’ `ஆசை உனக்கெல்லாம்..வைச்சானா ஆப்பு, இதுவும் வேணும் இன்னமும் வேணும்..’ `மொளைச்சி மூணு எல விடல அதுக்குள்ள ஆள் கேட்குதா உனக்கு..’ ‘கல்யாணம் பண்ணிட்டே, இன்னும் எதுக்கு ஆம்பளைங்களோடு பழக்கம்வேண்டிக்கிடக்கு..’ `போ.. பல்லைக்காட்டு, புள்ளைய கொடுத்துட்டு கம்பிநீட்டுவான்..’ `தே......த்தனம் செய்கிறீயா?’ `நல்லா பாவிச்சுட்டு சுத்தலில் விடுவான்..’ இவைகள் யாவும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் கேட்டுக்கேட்டு புளிச்சுப்போன வசனங்கள்தாம் என்பதை யார்தான் மறுக்கமுடியும்.! எதாவது ஒரு வழியில் இந்த வார்த்தைகளைக் கேட்டிராத நம் பெண்கள், குறிப்பாக, நடுத்தரவர்க்க தமிழ் பெண்கள் இருக்கமுடியுமா என்ன.!

தமது உடலின்ப விருப்பங்களை ஒரு ஆண் பகீரங்கமாக வெளிப்படுத்தும்போது அவன் அங்கே மோசமானவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சினிமா வில்லன்கள் போல அவர்களை நாம் பார்க்கத்துவங்கிவிடுகிறோம். இது இன்னமும் நடக்கின்ற ஓர் அவலம்தான். ஓரளவு படித்து பக்குவப்பட்டவர்கள் கூட உடலின்ப காம ஆசைகள் உள்ள ஒருவன் அல்லது ஒருவளை சந்திக்கநேர்ந்தால், எதோ ஒரு விஷ ஜந்துவைப்பார்ப்பதுபோலவே பார்த்து அருவருக்கின்றனர்.

நாம் நமது ஆசைகளுக்கு எதாவதொரு முலாம் பூசி அவற்றை மறைத்துவைப்பதிலேயே குறியாக இருக்கின்றோம். குறிப்பாக நான் ஆன்மிகவாதி, ஆன்மிகவாதி என்றாலே அவன் உலகமகா உத்தமனாகவே சித்தரிக்கப்படுகிறான் நம் சமூகத்தில். அந்த முலாம் நம்மவர்களுக்கு மிகவும் வசதியாகப் பொருந்திவிடுகிறது. சுலபமாக ஒருவரின் வீட்டில் நுழைவதற்கு தகுந்த நுழைவுச்சீட்டாகவும் அது அமைந்துவிடுகிறது. பட்டை கொட்டை என்று பொதுவில் அலைந்து, ஆசைகளை நான்கு சுவருக்குக்குள் யாருக்கும் தெரியாமல் அனுபவித்து அகப்பட்டுக்கொள்கிற பலரை நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துத்தானே வருகிறோம்.

முடிந்த தந்தையர் தினத்தை நான் கொண்டாவில்லை. ஏன் கொண்டாடவில்லை? என் தந்தை இறந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. அது பிரச்சனை இல்லை இங்கே. பிரச்சனை என்னவென்றால், தந்தையர் தனத்திற்கு முன்புதான், எனக்கு நன்கு அறிமுகமான தோழியின் மூலமாக ஓர் துக்கச்செய்தியினை கேட்க நேர்ந்தது.சொந்த மகளையே படுக்கைக்கு அழைத்துத் துன்புறுத்திய தந்தையின் செய்கையில் அதிர்ச்சியுற்ற மகள் தற்கொலை செய்துகொண்டாள். இத்தனைக்கும் தகப்பன் ஓரு பக்திமான். இந்தச் செய்தியால் மனமுடந்துபோனே நான் பிறகு எங்கே தந்தையர் தினத்தைக்கொண்டாடுவது.! யாருக்கும் வாழ்த்துகூட சொல்லவில்லை.

எங்களின் நிறுவனத்திற்கு கடிதங்களைக் கொண்டு வரும் ஒரு `ஆபிஸ்பாய்’ எனக்கு நன்கு அறிமுகம். தினமும் வருவான்.  கடிதங்களைப் பெறுவதும், என்னிடம் இருக்கின்ற கடிதங்களை எடித்துச்செல்வதும் எங்களுக்குள் நடக்கும் பண்டைமாற்று வாடிக்கை. தினமும் சந்திக்கின்ற போது சிலவிஷயங்களைப் பேசுவோம். வேலை செய்கிற பெண்களுக்கு இதெல்லாம் சகஜம்தானே. ஆண் பெண் கலந்து வேலை செய்கிறபோது சந்திப்பு உரையாடல் என்பதெல்லாம் சாதாரணம். (இதனால்தான் எங்கள் வீட்டில் பெண்களை நாங்கள் வேலைக்கு அனுப்புவதில்லை, என்று நீங்கள் உங்கள் மனதிற்குள் பெருமை பட்டுகொள்ளலாம்.)

ஒரு நாள், அவன் அலுவலகத்தில் நுழைகின்ற போது யாருடனோ ஆவேஷமான தொலைபேசி உரையாடலோடு நுழைந்தான். `ஏய் உனக்கும் எனக்கும் ஒண்ணுமில்லைன்னு ஆயிடுச்சே, ஏன் என்னைத்தொந்தரவு செய்கிறாய்? பணமெல்லாம் சரியாக வந்துடும்தானே..! இப்படியே டாச்சர் செய்தே.. நான் போன் நம்பரை மாத்திட்டு நிம்மதியா இருப்பேன். உன் தொல்லை தாங்க முடியல..’ என்று திட்டிக்கொண்டிருந்தான். `என்னாச்சு..ஒரே கோபம் இன்று.?’ என்றுதான் கேட்டேன். அன்று ஆரம்பித்ததுதான் இன்றுவரை எதாவதொரு கதையோடு என்னிடம் பேச்சுக்கொடுப்பது அவன் வழக்கமாகிப்போனது.

`கல்யாணம் ஆகிவிட்டது. விவாகரத்தும் ஆகிவிட்டது.’ என்றான். `அப்படியா, ஏன் விவாகரத்து?’ கேட்டேன். `அவளுக்குச் சந்தேகம் நான் நிறைய பெண்களோடு படுக்கின்றேனாம்.’ என்றான். `ஓ.. நிஜமாலுமா?’ கேட்டேன். `ஆமாம், எனக்கு பெண்கள் என்றால் பிடிக்கும். நான் இதுவரையில் பல பெண்களை அனுபவித்துள்ளேன். எல்லா இனத்திலேயும் எனக்கு பெண்களின் தொடர்பு உணடு. பிடித்திருந்தால், எப்படியாது வசப்படுத்திவிடுவேன்.’ எனக்குத்தூக்கிவாரிப்போட்டது. `இந்த புத்தி இருக்கின்ற பட்சத்தில், ஏன் கல்யாணம் செய்துகிட்டு ஒரு பெண்ணின் வாழ்வை வீனாக்குவானேன்.!’ மனதில் பட்டதை கேட்டும்விட்டேன். `என் குணம் அவளுக்கு நல்லா தெரியும், மேலும் பெண்களைத்தேடி நானாகப்போக மாட்டேன் என்பதும் அவளுக்குத்தெரியும். என்னைத்தேடி வருகிறவர்களுக்கு நான் `சேவை’ செய்வேன். ஆரம்பத்தில் அவளும் நானும் நட்பாகத்தான் பழகினோம். நானாக சொல்லவில்லையே கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்று, அவளாதானே கொக்குமாதிரி நின்றாள். கல்யாணம் முடிந்தவுடன் உரிமை கொண்டாடி கழுத்தை அறுத்தாள். விவாகரத்து கூட நான் கேட்கவில்லை. அவளா கேட்டாள், கொடுத்தேன். என்னைப்பொருத்தவரை, இதுபோன்ற புதைக்குழியில் விழுந்து தினம் தினம் சாவதைவிட சும்மா ஜாலியா தேவையானதை அனுபவித்துவிட்டு எங்கேயாவது போய் எப்படியாவது சாவது மேல்.’என்றான். எனக்கு ஒரே ஆச்சியரியம். வாழ்க்கைங்கிறது சாதாரணமான ஒன்றாகிவிட்டது பலருக்கு. என்ன செய்ய?

அவனுக்குக்கிடைத்த வாழ்வை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான். இளமையில் துள்ளலாம் ஆட்டம்போடலாம்,  இன்னும் இருக்கே அனுபவிக்க. அதை எப்படி எதிர்கொள்வான்.! எப்படியாவது போகட்டும், நமக்கென்ன என்று எதைப்பற்றியும் கேட்காமல் அவன் வரும்போது எனது வேலைகளில் மூழ்கிவிடுவேன்.

அவன் சொல்வான், பெண்கள் என்னிடம் பேசுகிறபோது நிச்சயம் என் காதல் வலையில் விழுந்துவிடுவார்கள். நான் பொய்பேசமாட்டேன். எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பனவற்றில் நான் மிகவும் தெளிவாக இருப்பேன். என் மேல் காதல் கொண்டு பெண்கள் பைத்தியம்போல் அலைந்துள்ளார்கள். எதுவும் நான் செய்வதில்லை. அது தானாகவே நிகழும். அன்பாக மட்டுமே இருப்பேன். அன்பு உண்மை நேர்மை போதும் பெண்களை வசப்படுத்த.. வன்புணர்வு, திருட்டுத்தனம், துரத்தித்துரத்தி பெண்களை வலையில் விழவைப்பது போன்றவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
நான் நினைத்தால் உங்களைக்கூட என்னால் வசப்படுத்தமுடியும். என்பான் கண்களைச்சிமிட்டியவாறு.

தேவைதான் எனக்கு.

இதை வாசிப்பவர்கள் ஒருவித இந்துத்துவ கலாச்சார சிந்தனைப் போக்கில் நோக்குவார்களேயானால் நிச்சயம் என்னை ஒரு தவறான கண்ணோட்டத்தில் பார்க்கத்துவங்கி முகஞ்சுளிப்பார்கள். காரணம் திருமணமான ஒரு பெண்ணிடம் அங்கே இங்கே சுற்றி பொறுக்கிச் சுகம் காண்கிற ஒரு ஆண், இப்படியெல்லாம் பேசுவதற்கு இடமளித்துள்ளாளே இவள், எப்படிப்பட்டவளாக இருப்பாள்.?

யோசிங்க.. அவனைவிட நாம் மோசமானவர்கள்தாம்...
  

புதன், ஜூன் 19, 2013

முதுமை

உடலின் நடுக்கத்தில்
நடக்கமுடியாமல்...

உற்கார்ந்தால்
எழமுடியாமல்

உணவுகளை
விழுங்க முடியாமல்
ஜீரணிக்க முடியாமல்....

பார்வைகள்
மங்கிய நிலையில்..

மூத்திர மல நாற்றத்தை
தாமே சகிக்க முடியாமல்..

தமது தேவை என்ன?
தாமே யூகிக்கமுடியாமல்...

பெற்ற பிள்ளைகளை
வதைக்கின்றோமோ...!
என்கிற பரிதவிப்பு ஒருபுறம்

மூளை மட்டும்
தெளிவான நிலையில்
உதிர்த்தது ஒரு வாசகத்தை
திருவாசகமாய்...

இருபது வருடங்களுக்கு முன்
அவருக்க வந்த
மாரடைப்பே மேல்...!!

பாம்பு

நேற்று இரவு மூணாவது வீட்டில் பாம்பு புகுந்துவிட்டது. பெரிய பாம்பாம்.! இந்த விவரம் எனக்குத்தெரியாது. இன்று காலையில் கைப்பேசியில் என் அண்டைவீட்டுக்காரர் கொடுத்திருந்த ஆறு மிஸ்ட் கால்ஸ் பார்த்தவுடன், அவருக்கு அழைப்பு விடுத்தேன். என்ன கதை என்று கேட்டால், பாம்பு மூன்றாவது வீட்டின் குசினியில் புகுந்துள்ளது, அதைப் பிடித்து அடிக்கப்போராட்டம் நடத்துகிறபோது அது இரண்டாவது வீடான இவர்களின் வீட்டின் கொல்லைப்புறத்தில் பதுங்கிக்கொண்டதாம்.! இதைக்கேள்விப்பட்ட என் அண்டைவீட்டுக்காரர், எனக்கும் அழைத்துள்ளார்.

“சரி, உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் பாம்பு பதுங்கிக்கொண்டது என்கிறீர்களே, பிறகு ஏன், தூங்கிக்கொண்டிருந்த என்னை அழைப்பானேன்.?”

“எனக்கு ஒரே பயம். தூக்கமே வரவில்லை. பெரிய பாம்புங்க.. நாகப்பாம்பாம். விஷப்பாம்பு. நான்வேறு சிறுகுழந்தையை வைத்திருக்கேன்.. பயமிருக்காதா?”

“ஓ..அதுசரி, அந்த இரவு நேரத்தில் என்னை ஏன் எழுப்பினீர்கள்?”

“வீட்டுக்காரர் வேறு வெளியூர் வேலைக்குச் சென்றுள்ளார்..”

“ஓ..ஒகே, என்னை ஏன் அழைப்பானேன்..?”

“அதோட வால் பகுதி, என் கட்டை விரல் தடி.. அப்போ பாம்பு எவ்வளவு பெரிதாக இருக்குமென்று யூகித்துக்கொள்ளுங்கள்..!”

“அதுசரி சுசி, என்னை எதற்கு அந்த இரவு வேளையில் எழுப்பினீர்கள்?”

“அக்கம் பக்கத்தில் ஒரே அமளியா இருந்தது. உங்களைக்காணோமே என்று..”

“சரி.. அதுக்கு என்னை அழைத்து..!!?”

“இல்லை நீங்களும் கொஞ்சம் ஜாக்ரதையாக இருங்கள் என்பதற்காகத்தான்..”

“உங்கள் வீட்டில் பாம்பு நுழைந்ததிற்கு நான் ஏன் ஜாக்ரதையாக இருக்கவேண்டும்..!?”

“இல்லை.. நாம் மட்டும் தூங்காமல் போராடும்போது, உங்களுக்கு என்ன தூக்கம்வேண்டிக்கிடக்கு, அதான்...!!”

“ம்ம்ம்..இந்த பதிலுக்குத்தான் நான் காத்திருந்தேன்.”

இதுதான் சராசரி இந்தியன் குணம்.

திங்கள், ஜூன் 17, 2013

உணவுகளும் கழிவுகளும்

மதிய உணவின் போது, உணவுப் பாத்திரத்தை கையில் ஏந்தி கரண்டியைக்கொண்டு வீட்டிலிருந்து சமைத்து எடுத்துவந்திருந்த உணவைச் சுவைத்துக்கொண்டே மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஸ்டார் பத்திரிகையில் கண்களை மேயவிட்டேன்.

அன்றைய பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே அதிர்ச்சிதரக்கூடிய தகவல் ஒன்று என் கண்ணில் படவே, உணவில் லய்ப்பதைவிடுத்து, அந்த முதல் பக்கச் செய்தில் லய்த்திருந்தேன்.


என்ன செய்தி அது?

மலேசியர்கள் நாளொன்றிற்கு பதினைந்தாயிரம் டன் எடையுள்ள உணவுகளை குப்பையில் வீசுகிறார்களாம். ! அப்படி வீசப்படும் உணவுகள் 7.5 மில்லியன் மக்களின் பசியினைப் போக்கவல்லதாம். அதிர்ச்சிதானே.!

உணவுகளின் சொர்க்கபூமியான மலேசியாவில் உணவு விரையம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்கிற ஆலோசனைகளும் அங்கே பகிரப்பட்டிருந்தது. மேலும் கழிவுகளை எப்படி மறுசுழற்சி செய்து உரமாக்கலாம் போன்ற ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்கள்.

உதாரணத்திற்கு, கோழி, இறைச்சி, மீன் போன்ற சமைக்காத கழிவுகளை மண்ணில் புதைத்து உரமாக்குவது. காய்கறிகள் பழங்கள் கொடுக்கின்ற கழிவுகளை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கொஞ்சம் சீனியைக்கொட்டி, சுக்காவையும் ( vinegar )  ஊற்றி ஓரிரு வாரங்கள்  இறுக்கமாக மூடிவைத்துவிட்டால்அத் திரவத்தைக்கொண்டு  பாத்திரங்கள் கழுவுவது, குளியலரை, வீடு வாசல் போன்றவைகளை சுத்தம்செய்வதற்கு உபயோகப்படுத்தலாம். நல்ல மணமாகவும் இருக்கும்.


அதிக உணவுகள் கழிவுகளாக வீசப்படுவதற்கு முக்கிய காரணங்கள் :- 

அதிக உணவுகளைக் கழிவுகளால வீசப்படுவதற்கு முக்கிய காரணங்கள் பல. அவற்றில் ;-
உணவு பிடிக்கவில்லை. சுகாதாரமற்ற கடைகளில் நுழைந்து உணவு ஆடர் செய்தபிறகு சூழல் பிடிக்காமல் உணவை வைத்துவிட்டு சென்றுவிடுவது. வாங்கிய உணவை சாப்பிட்டு முடிக்கமுடியாமல் வீசுவது. சுவை குறித்த அதிருப்தி. அதிக அளவில் உணவை எடுத்து தட்டில் வைத்துக்கொள்வது. சமையலில் போதிய அளவு பற்றிய தெளிவின்மை. பசி வந்தவுடன் அதிகம் உண்ணவேண்டுமென்கிற வெறித்தனம். சேகரித்துவைத்து உண்ணலாம் என்கிறபோது அவ்வுணவு கெட்டுப்போகுதல். ஒருவரின் விருப்பு வெறுப்புகளைப் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உணவுகளை பொட்டலங்கட்டிச்செல்வது.  டின்களில் அடைக்கப்படும் பொருட்களை அதிக அளவில் வாங்கி குவித்துக்கொண்டு, காலாவதியானவுடன் அவைகளை தூக்கி வீசுவது. முறையான செய்முறையின்றி புதிய சமையல் செய்கிறேன் பேர்வழி என உப்பு காரம் சக்கரை போன்றவற்றை அதிக அளவில் சேர்த்து சமையலைக் கெடுப்பது. புதிதாக எதையாவது சாப்பிட்டுப்பார்க்கலாமே என்று நினைத்து, கேள்விப்படாத ஐரோப்பிய ரெஸ்டரண்டுகளுக்குச் செல்லமுயன்று உணவு பிடிக்காமல் அப்படியே வைத்துவிட்டு வருவது. என இன்னும் பலவித காரணங்கள் உணவுகளை விரையமாக்குவதற்காகச் சொல்ல்லாம்.


உணவுகளை விரையமாக்காமல் இருப்பது சாத்தியமா?

உணவுகளை விரையமாக்காமல் இருப்பது சாத்தியமா? வீட்டில் சமைக்கின்றபோது, சமைக்கின்ற அளவு சுவை போன்றவற்றை அறிந்து வைத்துக்கொண்டு சமைத்துச் சாப்பிடுவது ஒருபுறமிருந்தாலும், வெளியே சாப்பிடுகிறவர்கள் உணவை விரையமாக்காமல் சாப்பிடத்தான் முடியுமா?

குடிக்கின்ற நீர், காப்பி, தேநீர், குளிர்பாணங்கள் தொடங்கி சாப்பிடுகிற உணவுவரை அனைத்திலும் ரசாயணக் கலவைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் தூய்மையின்மையை உணரும் பட்சத்தில், சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அது அதனின் வேலைதனை காட்ட ஆரம்பித்துவிடும். புளிச்ச ஏப்பம், வயிறு உப்புதல், காற்றுபுகுதல்,   வயிற்றைப்பிரட்டுதல்குமட்டுதல்வயிற்றுப்போகிற்கு  தயாராகும்   நிலைவருதல் என எதாவதொன்றை உடனே அறிகுறியாகக் காட்டிவிடும் நம் உடல். 

போதாக்குறைக்கு உணவுகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே எதாவது கருப்பாக சின்ன உருண்டையாகக் கண்களுக்குத் தென்பட்டால்ஈ யாக இருக்குமோ, பூச்சியாக இருக்குமோ, எலிபுழுக்கையாக இருந்துவிடுமோ, கொசுவாபல்லியின் மலமா என பலவாறாக மனது சிந்திக்கத் துவங்கிவிடும். அந்த சிந்தனையிலேயே தொடர்ந்து உணவை விழுங்குவதற்கு மனம் இடமளிக்காது.


உணவுக்கடைகளில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் :-

இதுபோன்ற சிந்தனைகள் ஏன் வருகிதென்றால், நாளிதழ் தொடங்கி தனிநபர் வரை உணவுக்கடைகளில் ஏற்படும் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருவதால், கடைகளில் உண்கிற தவிர்க்கமுடியாத நிலை ஏற்படுகிற போது, மனதாகப்பட்டது சில சம்பவங்களிலேயே வட்டமடிக்கத்துவங்கிவிடுகிறது.

படித்த, அனுபவபட்ட, கேள்விப்பட்ட சில சம்பவங்கள் இங்கே

* காய்கறி சூப்பில் பிஞ்சிபோன மோப் துணியின் சுருள்.

* பரோட்டா போடும் ஆடவன் கழிவறை சென்று கைகளைக்  கழுவாமல்  பரோட்டா போட்டதால், பரோட்டா எல்லாம் மலவாடை.

* நாசி லெமக் உணவில் பொரித்து வைக்கபபட்ட நெத்திலியில் ஒரு பல்லிக்குஞ்சும் நெத்திலி போல் பொரிந்து கிடந்தது.

* மலேசிய பிரபல உணவான சீ சொங் ஃபன் உணவின் சோஸில் கரப்பான்பூச்சி.

* பிரபல சத்தே உணவகத்தில் குவா கச்சாங்கில் செத்த எலி.

* உணவுக்கடைகளில் கழுவுவதற்கு   வைக்கப்பட்டிருந்த  எச்சில் தட்டுகளை நாய்கள் நக்குகின்றன.

* கொதிக்கவைக்காத நீரில் குளிபானங்களைத் தயார் செய்வது.

* நன்கு கொதிக்காத நீரில் காப்பி தேநீர் கலக்குவது.

* குளிர் பாணங்களுக்குப் பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளில் உரைந்த நிலையில் செத்துக்கிடக்கும் தவளைகள்.

* உணவுக்கடைகளில் எலிகளின் ராஜ்ஜியம்.

* சாப்பிட்டு மிச்சம் வைக்கின்ற உணவுகளை மீண்டும் பரிமாறுவது.

* உணவுகளில் மயிர்.

* சமைத்த காய்கறியில் புழு (கத்தரிக்காயில் இருந்திருக்கும்).

* நாசி கோரிங்கில் பானை விளக்கும் சுருள் கம்பிகளின் கொத்து. (என் அனுபவம்)

* உணவில் கக்கூஸ் ஈ. (அது ஒரு ராட்சஸ ரக  ஈ. அது போடும் முட்டைகளால் உடம்பே கூசிப்போகும்.)

* காதுகளையும் மூக்குகளையும் நோண்டிக்கொண்டு உணவைப் பரிமாறுவது.

* சரியாக வேகாத சோறு அல்லது அதிகம் குழைந்த நிலை சோறு (இங்கே அடிக்கடி)

* சந்தையில் காய்கறிகளின் அதிக விலையேற்றத்தின் காரணமாக, பொதுமக்கள் வாங்கிச்சென்று, மிச்சப்பட்டு மிதிபட்டுக்கிடக்கும் காய்கறிகளை ஆக மலிவு விலையிலோ அல்லது இலவசமாகவோ பொறுக்கி எடுத்துச்சென்று சமைத்து வருகையாளர்களுக்கு விற்பனை செய்கிறார்களாம் (சில கடை முதலாளிகள்).

* மீன் கோழிகளும் அதே போல்தானாம். எல்லோரும் வாங்கிய பின்புமிச்சமீதியை மலிவான விலையில் வாங்கிச்சென்று சமைத்து விற்பனை செய்கிறார்களாம்.

* என் பணிப்பெண், என் வீட்டில் வேலை செய்வதற்கு முன் ஒரு ரெஸ்டரண்டில் வேலை செய்தவள். அவள் சொல்வாள் அங்கே நடக்கும் சில கூத்துகளை. முதல் நாள் சமைத்த கோழியோ மீனோ அதிக அளவில் மிச்சப்பட்டுப்போனால் அதைக் கழுவி குளிர்ச்சாதணப்பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் அதை வேறொரு உணவு வகையாக மாற்றிச் சமைத்து பரிமாறிவிடுவார்களாம். (இது சகஜம். யார்தான் வீசி நஷ்டப்பட விரும்புவார்கள்.!)


இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதைக்கேள்வி படும்போதோ அல்லது நேரடியாக நமக்கே அவை நிகழ்கின்றபோதோ, எப்படி தொடர்ந்து உணவை விரையமாக்காமல் உண்பது.விரையமாக்கக்கூடாது என்பதால், ஆடர் செய்த உணவை சகித்துக்கொண்டு விழுங்கினால் உடல் என்னாவது?

தினந்தோறும் கடைகளில் உண்பவர்கள் எதிர்நோக்கிப் பகிர்ந்து செல்கிற பிரச்சனைகள்தான் இவையனைத்தும்.


தமிழ்நாட்டு உணவகங்கள்

மலேசிய உணவுக்கடைகளிலாவது பரவாயில்லை, சமைப்பவர், சமைக்கும் இடம், பயன்படுத்துகிற பொருட்களின் சின்னம், இடத்தின் தூய்மை என சிலவிவரங்கள் நமது பார்வையில் படும். பொதுவாகவே பெரும்பாலான கடைகளின் சமையல் அறையை நாம் எட்டிப் பார்க்கலாம். ஆனால் தமிழ்நாட்டில்..!! சமையல் எங்கிருந்து வருகிற்தென்றே தெரியாத அளவிற்கு சமையற்கட்டு மர்மமான இடத்தில் இருக்கும். உணவுக்கடைகளில் கும்மிருட்டு. டீம் லைட் போட்டிருப்பார்கள். காதலர்கள் செல்லும் கேண்டலைட் டின்னர் போல.
பட்ட பகலிலேயே இருள் சூழ்ந்த அறையில் அமர்ந்து கொண்டு சாப்பிடுகிற துர்ப்பாக்கியம் தமிழ் நாட்டில். உணவில் மயிர் இருக்கா? பூச்சி விழுந்திருக்கா? ஈ முட்டைகள் இருக்கா? புழு இருக்கா என எதையும் ஆராயமுடியாத அளவிற்கு இருள் சூழ்ந்த நிலையிலே பல உணவுக்கடைகள். எப்படிச் சாப்பிடுவது.தட்டில் போட்டிருக்கின்ற உணவுகள் என்னென்ன என்பதனை பார்வையால் கண்டுகொள்ளவே முடியாமல், சுவையின் மூலமாக உணர்ந்துஓ.கத்திரிக்காயா!, கோழியா!ஓ.. ஆட்டிறைச்சியோ.!  என புரிந்துகொள்கிற சூழல் அங்கே.  இந்நிலையில் ஆடர் கொடுத்த உணவை எப்படி விரையமாக்காமல்  முடிப்பது?

`ஆஹா. ஓஹோ. சாப்பாடு பிரமாதம், ஃபைவ் ஸ்டார் ரேன்ஞ்என புருடா விடுவார்கள். உள்ளே நுழைந்தவுடன்தான் தெரியும் அதன் நிலவரம்.  பரிமாறுபவர்களின் உடைகள், அவர்களின் கைகள் விரல்கள், தலையில் தலைப்பாகை/தொப்பி போடாமல் இருப்பது, கால்களில் செருப்பு காலணிகள் அணியாமல் அங்கும் இங்கும் நடந்துகொண்டு சேவை வழங்குவது, தண்ணீர் டம்லர்களில் விரல்களை உள்ளே நுழைத்து ஒரே மூச்சில் ஐந்து ஆறு டம்லர்களைக் கொண்டுவருவது, மேஜையைத்துடைக்கும் போது நீரைப் பாய்த்து, சிந்தியிருக்கின்ற உணவை ஒன்று கூட்டி இழுக்கும்போது வாந்தி எடுத்ததைப்போல் வரும் ஒரு கலவை, அதைப்பார்க்கின்ற நமக்குக் குமட்டும்... உணவு மேஜைகளை மிக நெருக்கமாகப் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ளவரின் தும்மல் இருமல் நம்மையும் தாக்குகின்ற சூழல்.... போன்ற நிலவரங்களைக் குறிப்பிடலாம். இருப்பினும், மூணாரில் இருக்கும் ஒரே ஒரு தமிழர் உணவுக்கடை, சரவணபவன் ஹோட்டலில் சாப்பிட்ட திருப்தி மாதிரி வேறெங்கும் கிடைக்காது. பளீச் சென்று வெளிச்சமான உணவுக்கடை அது.


உணவும் நோயும்..

உணவு உண்ணல் என்று வருகின்றபோது, அதனூடே வரும் சில நோய்களையும் நாம் ஆராயவேண்டிவருகிறது. பசி அடங்கிய பின் தொடர்ந்து உண்பதை சிலர் தவிர்த்துவிடுவார்கள்.  மலேசிய சூழல் வேறுபெரும்பாலும் தட்டுகளை கைகளில் ஏந்தி வரிசையில் நின்று நமக்குத்தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வந்து உண்ணலாம். இந்தச் சூழலிலேயே மில்லியன் டன் கணக்கில் உணவை விரையமாக்குகிறார்கள் என்கிற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வருகின்ற போதுதமிழ் நாட்டுச்சூழலை நினைத்துப்பாருங்களேன். ! ஒரு பெரிய தட்டில் குட்டிக்குட்டியாக நிறைய பாத்திரங்களை சுற்றிலும் வைத்து, அதில் குழம்புதயிர், காய்கறி, பாயாசம்கூட்டு, பொரியல் என குறைந்தது ஒன்பதுவகை பதார்த்தங்கள் இருக்கும். நடுவில் சப்பாத்தி, புளிசாதம் அல்லது எலுமிச்சை சாதம் என வைத்து கூடவே பால்கோவா மற்றும் பெயர் தெரியாத ஸ்வீட்கள் என சிலவற்றையும் வைத்திருப்பார்கள். இவைதான் சாப்பாடுபோல என்று நினைத்து, சப்பாத்தி, புளிசாதம் போன்றவற்றை நன்கு சாப்பிட்ட பிறகே, நாம் ஆடர் கொடுத்துள்ள உணவுகள் வரும் சோற்றோடு. எப்படி உண்பது? அப்படியே தங்கிப்போகும். அனைத்தும் விரையமாகும்.


அரசாங்க ஒத்துழைப்பு

நேற்று ஒரு வேலையாக வெளியே சென்றுவந்தபோது மதிய உணவுவேளை, பயங்கரப் பசி. அருகில் எந்த தமிழர் உணவுக் கடையும் தென்படவில்லை. வாகனத்தைக் கொஞ்ச தூரம் செலுத்தினேன், ஒரு கடை தென்பட்டது. சுத்த சைவ உணவகம் என்று எழுத்தியிருந்தார்கள்.

உருளைக்கிழங்கு பொடிமாஸ், பலாக்கா பால் பிரட்டல், அப்பளம் குழம்பு அவ்வளவுதான். சுவையே புரிபடவில்லை. என்னமோ கடமைக்கு உண்பதைப்போலவே இருந்ததது. சரி ரசம் இருக்கா? என்று கேட்டதிற்கு, இல்லைவெஜி சூப் மட்டும்தான் இருக்கு என்று சொல்லி, காய்கறி பிரட்டுகையில் அதில் மிஞ்சுகிற நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துவைத்து அதை சூப்பாகக்கொடுக்கின்றார்கள். பருகியவுடன் தெரிந்துவிட்டது. தினமும் சமைக்கின்ற எங்களுக்குத்தெரியாதா சூப் என்றால் என்னவென்று.! வாங்கிய உணவை அப்படியே வைத்துவிட்டு வந்துவிட்டேன். விரையம்தான் என்ன செய்வது.!? அப்படிப் பார்த்தால், உடல் உபாதைகளுக்குக்கூடுதல் கட்டனம் செலுத்தவேண்டி வருமே.! பரவாயில்லையா?

ஆக, உணவு விரையம், உணவுக்கழிவுகள் என்பது வீட்டில் சமைக்கிற உணவுகளால் ஏற்படாது என்பது என் யூகம். அது பெரும்பாலும் உணவுக்கடைகளாலேயே ஏற்படுகிறது. பத்திரிகைகள் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காக, எதையாவது ஆய்வுகளாகப்போட்டுவிட்டு, நான் நன்றாக அலசி ஆராய்கிறேன் என்கிற புள்ளிவிவரங்களை கொடுத்து மார்த்தட்டிக்கொள்வதைவிட, லஞ்சம் வாங்காமல் தூய்மைக்கேடு நிறைந்த உணவுக்கடைகளை இழுத்து மூடுகிற வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால், டன் கணக்கில் விரையமாகும் உணவுகளைத்தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம்.

ஆய்வினைப் படித்து முடிக்கின்றபோது, நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவில் ஒரு ஈ அமர்வதைக் கண்டேன், என் உணவையும் குப்பையில் போட்டுவிட்டு, பன் வாங்க கண்டீனுக்கு விரைந்தேன்.

அதீதம் இணைய இதழில் வந்த எனது கட்டுரை இது... 17/6/2013. 

ஞாயிறு, ஜூன் 16, 2013

பற்கள் தெரியலாம் உணர்வு ஒன்றாகுமா?

கேக் அலங்கரிக்கும் வகுப்பு இங்கே மிகப்பிரபலம். ஒரு கேக்’ஐ செய்து, பின் அதைப் பலவடிவங்களில் வெட்டி, கோவில், டோனல்டக், கார், கோபுரம் என இன்னும் பலவடிவங்களில் செதுக்கி அதன்பின் மேலே வர்ண கிரீம்களால் அலங்கரிக்கவேண்டும். 

கட்டனம் கொஞ்ச நஞ்சமல்ல - அதிகம்தான். 

எனக்கு ஒரு டவுட்டு. அலங்கரிப்பது என்பது அவரவர்களின் கிரேயேட்டிவிடி’யைப் பொருத்தது. ஒருவரின் கிரியேட்டிவிடியை நாம் படித்துக்கொள்ளமுடியுமா? அவரால் கற்றுக்கொடுக்கத்தான் முடியுமா?

சரி முடியும் என்றால்.. அவர் செய்த கேக் ஒன்று அழகாக உள்ளது. டோனல்டக். அதை வெட்டி ஒட்டி, கிரீம்களால் வர்ணமடித்துள்ளார். அழகாக வந்துள்ளது. அந்த ஒருவகையை அவர் எப்படிச்செய்தார் என்று கற்றுக்கொடுக்கமுடியும், நாமும் கற்றுக்கொள்ளலாம். அவரின் கிரியேட்டிவிட்டியை நாம் காப்பி அடிப்போமேயொழிய அவர்போல் சிந்திக்க அவரால் சொல்லிக்கொடுக்கமுடியுமா? அது ஒரு நுண்ணிய கலையுணர்வுதானே..! அதை வியாபாரமாக்குபவர்களின் வலைகளில் நாம் ஏன் விழுவானேன்.

நானும் முன்பு பின்னல் வகுப்பிற்குச்சென்றுள்ளேன். மாமிவீட்டில் இருக்கும் சில விரிப்புகள் எனது பின்னல் கைவண்ணம்தான். இருப்பினும் கிரியேட்டிவிடி இல்லாததால் கற்றது அத்தோடு நின்றுபோனது. தொடர் ஆர்வமும் இதற்கு ஊன்றுக்கோல்.

நமக்கு என்ன வருமோ அதில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதுமானது. பலர் இப்படித்தான், பலமாதிரியான வகுப்புகளுக்குச்சென்று எதையும் உருப்படியாக செய்தபாடில்லை. மற்றவரின் கிரியேட்டிவிடியை படிக்கப்போகிறேனென்று பணம் மற்றும் நேரத்தை ஏன் வீண் விரையம் செய்வானேன்.

கலைகளை போதிக்கத்தான் முடியுமா?
ஓவியம் பழகமுடியுமா? கவிதையைக் கற்றுக்கொள்ளமுடியுமா? இலக்கியம் போதிக்கமுடியுமா?

உன்னைப்போல் நான் சிரிக்கலாம். பற்கள் தெரியலாம், உணர்வு ஒன்றாகுமா?

வியாழன், ஜூன் 13, 2013

பாதிவழியில்

வாசிப்பில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் புத்தகம்

எழுத்தில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
என் கட்டுரை

ரசனையில்;
பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட
புதிய திரைப்படம்

உறவில்;
பாதி வழியிலே
பரிதவிக்கும்
நம் காதல்....

எல்லாவற்றையும்
முடிவுக்குக் கொண்டு வர
பாதி வழியிலே
விழிபிதுங்கி நிற்கும் நான்...


திங்கள், ஜூன் 10, 2013

குள்ளநரிகள்

என்னை எனக்கு அதிகம் பிடிக்கும். ஏன் தெரியுமா? என்னால் முடியாத, என் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத, என் தகுதிக்கு மீறிய, எனக்குத் தொல்லை தரக்கூடிய, எனக்குப்பிடிக்காத எதையும் நான் வரவேற்க மாட்டேன். தைரியமாக நிராகரிப்பேன். யார் யாருக்காகவோ கண்ட அல்பங்களையெல்லாம் நெஞ்சில் மலமாகச் சுமக்க என்னை நான் என்றுமே அனுமதித்ததில்லை.

நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக சிலர் சுற்றிவளைத்து சுற்றிவளைத்து எதையோ சொல்லவருவார்கள். நான் மட்டும், முடியாது என்றால் முடியாது. முடியும் என்றால் முடியும்.

பலரின் தட்டிக்கழித்தலில் தமக்கு சுயநலம் இல்லை என்பதைப்போல காட்டிக்கொள்ள முயற்சி செய்வார்கள். தமது சுயநலப்போக்கு எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றெண்ணி, அற்ப காரணங்களுக்கு வெட்டி வியக்கியானம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

சில மனித ஜென்மங்கள் நன்றி கெட்ட ஜீவன்கள். கையில் பசை இருக்கும் வரை பிடுங்கித்தின்னு உடல் வளர்த்து கொழுத்து, இல்லாதபோது விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பதோடல்லாமல், தம்மால் முடியாத சில காரியங்களை பிறர் செய்யும் படி பணித்து அதற்கான ஆலோசனைகள் வக்கனையாக வழங்கி இரட்டை வேடம் தரித்து எல்லாவற்றிலும் ஜெயிக்க நினைப்பார்கள்.

சிலவற்றைப் பகிரலாம் என்று தோன்றினாலும் இந்த குள்ளநரிகளின் செயல்பாடுகள் குறித்து நினைக்கின்ற போதே இதயத்தின் துடிப்பு அதிகரிக்கின்றது.

எப்படியெல்லாம் வேடமிடுகிறார்கள்.! இது நாடகம்தான் என்று நமக்குத் தெள்ளத்தெளிவாய் தெரிகின்றபோது, நான் நன்றாக நடித்துவிட்டேன் என்று இறுமார்ந்திருக்கிற மலந்தின்னிப் பன்னிகளால் என்றுமே   மனவுளைச்சல்தான். 

கைப்புண்ணிற்கு கண்ணாடி தேவையில்லை என்பதைப்போல சிலர் நமக்குக்கொடுக்கின்ற காயங்களுக்கு விளக்கமே தேவையில்லை. அது நிகழும்போதே அதற்கான பலாபலன்கள் உடனே தென்படத்துவங்கிவிடும்.

வாக்கு காப்பதில் நம்மவர்களுக்கு நிகர் நம்மவர்கள்தான். நிகழாது என்று தெளிவாகத் தெரிகின்றபோது வாக்குகளை வாரி வாரி வழங்குவார்கள், அதைக்கேட்கின்ற சில கூர்கெட்ட சாம்பிராணிகள் `ஆஹா..இவர் போல் வருமா. ரொம்ம்ம்ப நல்லவர்ர்ங்க..’ என்று அகமகிழ்வாரகள்.அதுவே நிகழ்க்கூடிய சாத்தியமெல்லாம் இருக்கிறதென்று வைத்துக்கொள்ளுங்களேன், வாக்கு மீண்டும் மாறும். பேச்சு மாறும். நியாயங்கள் அநியாயமாக மாறும். நாட்டு அரசியலைவிட வீட்டு அரசியல் கொடுமையானது. ஒவ்வொரு வீட்டிலும் கெட்ட சர்வதிகாரிகள் உள்ளனர். தமது தரப்பு நியாயங்களை மட்டும் வெட்டியாய் பேசிக்கொண்டு.. பக்கிகள்.

நான் யாரிடமாவது கதை சொன்னால், ஆரம்பத்திலிருந்துதான் வருவேன். என்ன நடந்தது என்றால்....., என்று ஆரம்பித்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் வரிசையாகச் சொல்வேன். ஒருவரிடம் சொல்வது மற்றவரிடம் மாறுபடாது. ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உண்மையல்லவா, அதித ஞாபகச்சக்தியெல்லாம் அங்கே தேவையே இல்லை. 

நிதானமாக எல்லாவற்றையும் கேட்க, சிலருக்குப் பொறுமையே இருக்காது. `என்னடா இது, இப்படி இவளிடம் மாட்டிக்கொண்டோமே..’, என்று வருத்தம் கொள்பவர்களும் உண்டுதான்.

கதைகளைக் கேட்பவர்கள், அங்கே நடந்துவிட்ட முடிவை மட்டுமே எதிர்ப்பார்ப்பார்கள். இக்கதையால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பதைத்தெரிந்து கொள்ள மட்டுமே ஆவலாய் இருப்பார்கள். நானோ முடிவை மட்டும் சொல்லாமல், நடந்தவற்றையெல்லாம் சொல்லி ‘பூசிங்’ செய்வேன். முடிவைச்சொல்லாமல், அதை அவர்களே யோசிக்கும்படியும் வைத்துவிடுவேன்.

ஆனால் ஒருபோதும் என் தரப்பில் அநியாயமான நியாயங்கள் இருப்பதைப்போல் சொன்னதே கிடையாது. போகிறபோக்கில் சம்பவங்களில் இருக்கின்ற `நான்’ என்ன செய்தேன், என்பதை மட்டும் நியாயப்படி சொல்வேன். அதன் நியாய அநியாயத்தை, கேட்பவரே முடிவு செய்யட்டும். 

சிலர் உருகி உருகி கதை சொல்வார்கள், கேட்கிற நமக்குத்தெரிந்து விடும், `அட தடிமாடே, பிரச்சனையே நீதானே, எருமை..’ என்று மனதிற்குள் முனகிக்கொள்வோமே, அதுபோல்தான், சொல்கிற கதையை யாராவது கேட்டுவிட்டு முடிவுசெய்து கொள்ளட்டும் நம் தரப்பு நியாய அநியாயத்தை. !

நாம் என்ன நியாயமா கேட்கிறோம்? கேட்கின்ற அனைவரும் உலகத்தின் தலைமை நீதிபதியா என்ன..? மனதில் உள்ளதை வெளியே கொட்டினால், பாரம் கொஞ்சம் குறையுமே.. அதற்குத்தான் இந்த உளறல்கள்.

தமது இரண்டு கைகளையும் ஏந்திகாட்டி, “ இந்தக் கைகளால் எவ்வளவு உதவி செய்திருப்பேன். இந்தக் கைகளால் எவ்வளவு ஆக்கிப்போட்டிருப்பேன். இந்தக் கைகளால் எவ்வளவு கொடுத்திருப்பேன். இந்தக் கைகளால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பேன் ஆனால் இன்னிக்கு எனக்கு ஒருவேளை சோறு போட யாருமில்லை..” என்கிறார் ஒரு வயதான அம்மா. மக்களைப்பெற்ற மகராசி.  

தூ...தூ..தூ 

புதன், ஜூன் 05, 2013