புதன், மார்ச் 26, 2014

வியாழன், மார்ச் 20, 2014

அவசர எண்..

அலுவலகத்தில், அவசர அழைப்பு எண்களை அனைத்து floor யிலும் வைத்திருப்பார்கள். கீழே நான் அமர்கின்ற இடத்தின் பின்புறமும் அந்த லிஸ்ட் இருக்கும்.. சுவரில் ஒட்டி வைத்திருப்பார்கள்.

இன்று ஒரு பிரச்சனை. `எடு, பிடி, ஓடு, காவலாளிக்கிட்ட சொல்லு, கேட் மூடு, முன் பக்கம் சாத்து.. விடாதே, கார் நம்பர் நோட் பண்ணு, பிடி பிடி, போலிஸ் கூப்பிடு..’ என, தடதடவென இருவர் என் இடத்திற்கு ஓடி வந்தார்கள். 

நான் செய்வதறியாமல் `பே’ன்னு நின்று கொண்டு இருந்தேன்.
இங்கிருந்து அந்தப்பக்கம்.. அங்கிருந்து இந்தப்பக்கம்.. கீழே இருந்து மேலே.. மேலே உள்ளவர்கள் கீழே... ஓடு ஓடுன்னு ஓடி... ஒரே அமளி.

போலிஸ் கூப்பிடு.. போலிஸ் கூப்பிடு.. என்று சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டான்.

போலிஸ் கூப்பிட்டு..?? என்னன்னு சொல்ல? எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

மீண்டும் இன்னும் கூடுதல் ஐந்தாறு பேருடன் வந்து.. போலிஸ் கூப்பிட்டியா? என்றான்.

டேய் கஸ்மாலங்களா.. என்ன பிரச்சனைன்னு சொல்லாம, போலிஸ கூப்பிட்டு..!?

ஓடினான்.. கார்ட் ஹவுஸுக்கு.. மீண்டும் உள்ளே வந்தான்.. மூச்சு வாங்க..

என்ன நம்பரு? என்னா நம்பரு..? என் முன்னே நின்றுகொண்டு அவசரப்படுத்தினான்.. எனக்கு லேசா கிறுகிறுப்பு வந்துவிட்டது.

யார் நம்பர்.? பதில் சொல்லல...

அதற்குள் மனிதவள அதிகாரி கீழே இறங்கிவந்தார், இன்னும் சில அதிகாரிகளுடன், படபடப்பாய் இருந்த இந்த மெனெஜரை அழைத்துக்கொண்டு கீழே உள்ள ஒரு மீட்டிங் ரூம்’மிற்குள் நுழைந்தார்கள்.

கார்ட் வந்து சொன்னான்.. நீ கேட்’ஐ மூடு என்று சொல்வதற்கு முன்னமே, அந்த மஞ்சள் கார், சர்ர்ர் என்று சென்றுவிட்டது. விடு, இது நம் பிரச்சனை அல்ல. என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவர்களுக்குள் என்ன பேச்சு நடந்ததென்று தெரியவில்லை. மீட்டிங் முடிந்து வெளியே வந்தவுடன்... போலிஸ் இன்னும் வரலயா.. ? கேட்டான்.

நான் கூப்பிடவே இல்லையே.. என்றேன்.
முறைத்தான்...

எங்கள் அதிகாரி, என்னிடம் வந்து, “எது நடந்தாலும், என்ன நடந்தாலும், என்னிடம் அனுமதி கேட்காமல், போலிஸுக்கு அழைக்கக்கூடாது..” என்றார்.

முருகா....

புதன், மார்ச் 19, 2014

எப்போதும்போல்

தினமும் ஒலிக்கின்ற சினிமா பாடல்கள்
தினமும் பேசுகிற தொலைபேசி அழைப்புகள்
தினமும் வருகிற மின்னஞல்கள்
தினமும் வருகிற வட்ஸாஃப் பொம்மைகள்
தினமும் எழுதப்படுகிற நாட்டுநடப்புகள்
தினமும் ஒலிபரப்படும் செய்திகள்
தினமும் கேட்கிற முதாட்டியின் புலம்பல்கள்
தினமும் திறக்கின்ற முகநூல் பக்கங்கள்
தினமும் திங்கிற சோறும் குழம்பும்
தினமும் பருகுகிற நீரும் பீரும் போல்
சாதாரணமாகவே இருக்கிறது
உனது கவிதைகளும்...

திங்கள், மார்ச் 17, 2014

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் - கவிதை மாலை.. (16/3/2014)

புத்தகச்சிறகுகள் ஏற்பாட்டில் வல்லின பதிப்பகம் எடுத்து நடத்திய ’கவிதை மாலை’ என்கிற நிகழ்வு (16/3/2014) தலைநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வல்லின ஏற்பாட்டில் நடைபெறுகிற நிகவுகள் என்றால், நாட்டின்  ` ஊடக, எழுத்தாள, இலக்கியப் `பிரபலங்களின்’ ஒத்துழைப்பு என்பது சிஞ்சிற்றும் இருக்காது. பேச்சு வழி, முகநூல் வழி, குறுந்தகவல் வழி ஒருவர் மற்றவர்களை அன்புடன் அழைத்து ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இது என்பதால், அதிகமான இலக்கிய ஆர்வலர்களை எதிர்ப்பார்க்க முடியாது என்கிற அவநம்பிக்கையுடன் சென்ற நான், ஏமார்ந்துதான் போனேன். நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் வருகை புரிந்து, அந்த சிறிய அரங்கமே நிரம்பி இருந்தது, நிகழ்ச்சிக்கு வெற்றியே.

மேலும் நாட்டில் நடந்துகொண்டிருக்கின்ற மிகமுக்கிய பிரச்சனைகளின் ஒன்றான, MH370 விமானம்  காணாமல் போன சம்பவம் குறித்த தொடர் திருப்பங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற சமயத்தில், இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளின்பால் ஆர்வம் குறைந்து, மனது சதா நடந்துவிட்ட விபரீதங்களிலேயே மூழ்கியிருக்கின்ற பட்சத்தில், இலக்கியமாவது மண்ணாவது என்கிற உள் உணர்வையையும் மீறி, இந்நிகழ்விற்கு வருகை புரிந்து நிகழ்வு சிறக்க உதவிய அனைவருக்கும் புத்தகச்சிறகுகள் மற்றும் வல்லினம் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

நிகழ்ச்சியின் தலைப்பு `கவிதை மாலை’. சிறப்பு வருகையாளர் தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதி எழுத்தாளர் ஜெயமோகன். 
ம.நவீனின் `வெறி நாய்களுடன் விளையாடுதல்’ என்கிற நூலும், கே. பாலமுருகனின் `தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள்’ என்கிற கவிதை நூலும் வெளியீடு கண்டன. இந்த நிகழ்வோடு `பறை’ என்கிற கால் ஆண்டு இதழும், அதன் ஆசிரிய குழுமங்களின் விளக்க உரைகளோடு அரங்கத்திற்குள் நுழைந்தது. எளிய தேநீர் விருந்து. புத்தகச்சிறகுகளின் புத்தக விற்பனை ஒருபுறம், என, நிகழ்வுகளை அழகாகவே கோர்த்திருந்தார்கள்.

சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஜெயமோகன் வரவிருந்த விமானம் சற்று தாமதமாக வந்திறங்கியதால், அவர் வருவதற்குக் கூடுதல் அரைமணிநேரம் ஏடுத்துக்கொண்டு நிகழ்வை ஆரம்பித்த போதிலும், காத்திருக்கின்ற சோர்வே இல்லாமல் அமைதியாகவே நகர்ந்தது `கவிதை மாலை’ நிகழ்வு. 

நிகழ்வின் தலைப்பில் மாலை இருப்பினும், யாருக்கும் மாலை பொ(ப)ன்னாடை என்று அணிவித்து, வருகையாளர்களின் நேரத்தைக் கொள்ளையடிக்காமல், சொத்தப்பல் பேச்சுகளால் இலக்கிய ஆர்வலர்களின் கழுத்தில் `கத்தி’ போடாமல், நிகழ்வின் நோக்கம் மட்டுமே அரங்கேறியது, வல்லினம் முழுக்க முழுக்க இளஞர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது புலப்பட்டது.

மேடையில் நூல் குறித்த விமர்சனத்தில் அ.பாண்டியன், தினா, விஜயா, யோகி, பூங்குழலி போன்றோர்கள் ரத்தினச்சுறுக்கமாக புத்தகத்தில் தாம் ரசித்த விடயத்தைத் தொட்டு உரையாற்றினார்கள். எல்லோரும் ஒரே மாதிரியான கருத்தினைக் கொண்டிராமல், தத்தம் பார்வையில் வெவ்வேறு கோணத்தில் புத்தகத்தைப்பற்றி பேசியது சிறப்பாகவே இருந்தது. குழலி இன்னும் கொஞ்சநேரம் பேசியிருக்கலாம் என்கிற ஏக்கத்தை உண்டு பண்ணியது அவரின் தெளிவான பேச்சு. நல்ல பேச்சாளராவதற்கான தகுதி அனைத்தும் அமையப்பெற்ற பெண் அவர்.

கே.பாலமுருகன்

புத்தகம் குறித்து, அதனின் நூலாசிரியர்கள் பேசுகிறபோது, கே. பாலமுருகன் தமது உரையினை நகைச்சுவை ததும்ப வழங்கியிருந்தார். நகைச்சுவை பேச்சுதான் என்றாலும் அவரின் உரை சிந்தனையைத்தூண்டியது. 

யார் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற சூழல் இப்போது புற்றீசல் போல் பரவி வருவது கண்கூடு என்றார். கவிஞராக இருப்பது எவ்வளவு சிரம்ம் என்பதனையும் ரசிக்கும்படி சொல்லியிருந்தார். போட்டோவிற்கு போஸ் கொடுக்கின்ற போதுகூட கேமராவை நேராகப் பார்க்கக்கூடாது என்கிற கொள்கை உள்ள கவிஞர்களின் நிலைமையினை மிக வருத்தத்துடன் தெரிவிக்கின்றபோது, அவரின் உடல்மொழி நல்ல நகைச்சுவை. 

கவிதை எழுதுவதற்கு எதாவது ஒரு நிகழ்வு கவிஞர்களுக்குத் தேவைப்படுகிறது. பௌர்ணமி என்றால், கவிதை. தீபாவளி என்றால், கவிதை. விநாயகர் சதூர்த்தி என்றால் கவிதை. நாட்டில் எதாவது நிகழ்ந்தால், கவிதை. பசியில் வாடினால் கவிதை. காதல் வந்தால் கவிதை, தெய்வ சிந்தனை தோன்றினால், கவிதை., என பத்திரிகைகள் அதனின் தரம் காணாமல் கவிதைகள் என்கிற பெயரில் படைக்கப்படுகிற அத்தனை எழுத்துகளையும் வதவதவென்று பிரசுரித்து, அப்படி எழுதுகிறவர்களையும் ஊக்கமூட்டிவருகிறார்கள். இது தவறு. இதனால் எந்த நன்மையும் சமுதாயத்திற்கு வந்து விடப்போவதில்லை, என்கிற ஆதங்கத்தை பகீரங்கமாக வெளிப்படுத்தினார்.

மேலும் தமது எழுத்து குறித்து சொல்கையில், தாம் ஒரு ஆசிரியர் என்பதால், அச்சூழலின் செயல்பாடுகளை, குறிப்பாக, குழந்தைகளை எந்த ஒரு வெளிநடவடிக்கைகளிலும் ஆர்வம் கொள்ளவைக்காமல் படி, படி, படி என்று பாடபுத்தகங்களை மட்டுமே கட்டி ஆள்கிற துயரங்களைப் பொறுக்க முடியாமல், அவ்வாதகங்கத்தை தாம் கவிதைகளின் வழி மட்டுமே வெளிக்கொணர இயலும் என்று தமது உரையில் வெளிப்படுத்தி முற்றுப்புள்ளிவைத்தார். 

ம.நவீன்

மலேசிய இலக்கியச்சூழலில் அடிக்கடி சர்ச்சையில் மாட்டிக்கொள்ளும் ம.நவீன் மேடையேறினார். அவரின் உரையை நன்கு ரசித்தேன். கொஞ்சம் `சீரியஸா’கவே தமது உரையினை வழங்கினார். அவரும் கவிதை நூல் வெளியிட்டிருப்பினும் (வெறிநாய்களுடன் விளையாடுதல்), கவிதை குறித்த அறிமுகத்தை சுறுக்கமாக முடித்துக்கொண்டு, தாம் வாசித்து நெகிழ்ந்த இலக்கியச் சிதறல்களை அரங்கில் உள்ளவர்களோடு பகிர்ந்துகொண்டார். 

இலக்கியம் எல்லாக் கட்டமைப்புகளையும் உடைத்தெறிகிற பணியினைச் செய்வதுதான். ஏற்கனவே புனிதம் என்கிற போர்வையில் செல்லரித்து துருப்பிடித்த விடயங்களைப் பூசிமெழுகிற வேலைகளை இன்னமும் எழுத்துலகம் செய்துகொண்டிருப்பது இலக்கிய உலகின் அவலம். ஏன் இலக்கியம் படி(டை)க்கவேண்டும்? இலக்கியம் நம்மை என்ன செய்யும்.? ஏன் நல்ல படைப்பாளிகள் உருவாக வேண்டும்.? எது நல்ல இலக்கியம்.? இலக்கியம் என்பது.... !? என்று ஆரம்பித்து, சில நல்ல சிறுகதைகளை உதாரணமாகக் காட்டி, தமது பேச்சுதனை சுவாரஸ்யமாக நகர்த்திச்சென்றார். 

அதில் ஜெயமோகனின் யானைக்கதையும் வந்தது. புழுக்களைக் கண்டு அருவருக்கின்ற நாம், புழுக்களும் எதோ ஒரு ஜந்துவின் குழந்தைகளே, என்பதனை என்றாவது உணர்ந்துள்ளோமா.!? குழந்தைகளில் கூட, நன்கு அழகாக மொழுமொழு என்று பொம்மைக் குட்டியைப் போன்று இருக்கின்ற குழந்தைகளைத்தான் நாம் கொஞ்சி மகிழ்கின்றோம். என்றாவது கருப்பாக அசிங்கமாக இருக்கின்ற குழந்தைகளை நாம் நமது கணினியிலோ அல்லது கைப்பேசி ஸ்கிரீனிலோ ரசிப்பதற்காக வைத்திருக்கின்றோமா? குழந்தைகளைக் கொஞ்சுவதாக இருந்தால் எல்லாம் குழந்தைகள்தானே, ஏன், கொஞ்சுவதில் நாம் பாகுபாடு காட்டுகிறோம்.! புழுக்களும் ஒரு பூச்சியின் குழந்தைகள்தானே. ஏன் அருவருக்கின்றோம்.? என்கிற கேள்விக்கணைகள், என்னை என்னவோ செய்தது. யோசித்துப்பார்க்காத ஒரு கரு. யானைக் கதையில் வருகிற ஒரு பகுதியைக் குறிப்பிட்டு, இக்கருத்தை மேற்கோள் காட்டி பகிர்ந்துகொண்டார் நவீன்.

அடுத்ததாக சு.வேணுகோபாலின் ஒரு சிறுகதை. (தலைப்பு சொல்லவில்லை). அக்கதையினை அவர் சொல்லிமுடிக்கின்றபோது, எனது உரோமங்கள் சிலிர்த்தன. புனிதம் என்று கட்டமைக்கப்பட்ட கோட்பாட்டை, திரைமறைவில் யாருக்கும் தெரியாமல் சுயநலனுக்காக எப்படிவேண்டுமானாலும் உடைத்தெறியலாம் என்கிற நியதியில் முடிவடைகிற சிறுகதை அது. இது எங்கோ யாரோ செய்கிற காரியம்தான். ஆனால், அதைப் படைப்பாளியாகப்பட்டவன் எழுத்தின் மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிற வேலையினை மட்டும் செய்துவிடக்கூடாது. வாசகன் கெட்டுவிடுவான். குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும். இதுதான் நம்நாட்டு இலக்கியச்சூழலில் நிகழ்ந்துகொண்டிருக்கும் கட்டபஞ்சாயத்து நியாயம்.! 

சு.வேணுகோபால் நம் நாட்டு படைப்பாளியா அல்லது தமிழ்நாட்டுப் படைப்பாளியா? என்பது தெரியவில்லை. இங்கே இதுபோன்ற கதைகள் வந்தால், புத்தகத்தை நெருப்பில் போட்டுவிடுவார்கள். ஆக, இதுபோன்ற கதைகள் வந்துள்ளது என்றால், நிச்சயம் அவர் தமிழ்நாட்டு படைப்பாளியாகத்தான் இருக்கவேண்டும். நன்றி, நல்ல எழுத்தாளரையும் இவ்வேளையில் அறிமுகம் செய்துவைத்தமைக்கு.!

நிகழ்விற்குச் சிறப்புச் சேர்த்த்து ஜெயமோகனின் உரை.

கவிதை மாலை நிகழ்விற்கு, கவிதை குறித்த அவரின் உரையினை, திருவிளையாடல் புரணத்தில் நக்கீரன் தருமி விவகாரத்தில் ஆரம்பித்து, திருவள்ளுவர், பாரதி, பிரமிள் என்று தொடர்ந்தார். மிக ஆழமான பொருள் பதிந்த உரையாகவே அது எனக்குப்பட்டது. அவ்வுரையை நான் எனது கைப்பேசியில் recording செய்தும், கரகரப்பு ஓசையுடன் சரியாகப் பதிவாகாதது எனது துர்ப்பாக்கியம். ஆழமாக பேசப்பட்ட உரையினை, எனது பாணியில் சொல்வதற்கு முயல்கிறேன். காப்பி பேஸ்ட் வசனமும் எனக்கு வராது என்பதும் எனது `பாக்கியம்’.!

வள்ளுவரின் வரிகள் அனைத்தும் கவிதைகளே. அவர் சொல்லிச்சென்ற இருவரிகள் இன்னமும் பலகோணத்தில் பாடம் போதித்தவண்ணமாகத்தான் உள்ளது. 

நாலுவரி கவிதையினை எழுதிவிட்டு செத்துப்போங்கள் பரவாயில்லை. அதை யாராவது என்றாவது பேசுவார்கள்.! 

கவிதைகளில் வாழ்க்கை, தத்துவம், போதனை, காதல், அறிவுரை, வாக்குமூலம் என எல்லாம் சொல்கிறீர்களா? என்னாலும் அப்படியெல்லாம் யோசிக்கமுடியும். எனக்கு அது வேண்டாம். 

தமிழில் உங்களுக்கு அனைத்து எழுத்துக்களும் தெரியும். முனைவர் பட்டமெல்லாம் வாங்கியிருக்கலாம். ஆயிரம் ஆய்வுகள் செய்திருக்கலாம். பாண்டித்துவம் மிக்கவராகவும் நீங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு கவிதை உங்களுக்குப்புரிந்துவிடுமா என்றால் அது சந்தேகம்தான். காரணம் கவிதைக்கென்று இன்னொரு மொழிவடிவம் உள்ளது. அதன் உணர்வு என்பது வேறு. அதன் உலகமும் வேறு. 

எல்லாக் காலகட்டத்திலும் கவிதை என்றாலும் கவிஞர்கள் என்றாலும் சாமானிய மக்களின் மத்தியில் ஒரு பயம் இருந்துவருவது கண்கூடு. எல்லா இடங்களிலும் கவிதை குறித்த பேச்சுவார்தைகள் மிக எளிதாகவே நடைபெறும், டீக்கடை பார் என, ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி கண்டு மோதலில் முடிவடைவதைத்தான் நாம் பார்க்கமுடியும். காரணம் கவிதை குறித்த புரிதலில் ஒத்துப்போகுதல் என்பது சாத்தியமில்லாதது... இங்கே பிரமிள் கவிதகளை உதாரணமாகக் காட்டினார். எனக்கு பிரமிள் கவிதைகள் என்றாலே உதறல் வந்துவிடும். எழுத்து வடிவில் இருப்பதை விழுந்து விழுந்து வாசிக்கின்ற போதே புரியாது. ஜெயமோகன் அவற்றை மனனம் செய்து ஒப்பிக்கின்றபோது.. சுத்தம்.!

முடிவில், இவரின் இந்த உரை குறித்து கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்கலாம், என்றதிற்கு, “கேள்விகள் வேண்டாம். இங்கே நான் சொன்ன அனைத்தும், உடனே புரியுமா என்றால், அது சந்தேகம்தான்.! அதைப்பற்றி நிதானமாக யோசிக்கின்றபோதுதான், வினா எழலாம். ஆக, உடனே கேள்விகள் கேட்டு பதில் கொடுப்பதென்பது, சரிப்பட்டு வராது.” என்று சொல்லி நிராகரித்தார். நிஜம்தாம். நம்மைப் புரிந்துவைத்திருக்கின்ற ஓர் படைப்பாளி அவர்.

ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை விட, அவரின் ப்ளாக்’ஐ அடிக்கடி சென்று வாசிப்பேன். சிறந்த எழுத்தாளர். எழுத்தில் அவரின் பாணியை யாராலும் பின்பற்ற முடியாது. வாசகியான நான் தினமும் அவரின் ப்ளாக் பக்கம் எட்டி எட்டிப் பார்க்கின்ற பட்சத்தில், தொடர்ந்து அவரின் படைப்புகளை எல்லாம் விடாமல் முழுமையான வாசித்து முடிக்கமுடியாமல் திணறி திண்டாடுவேன். ஒரு நாள் விட்டு மறு நாள் சென்றால், வாசிக்காமல் விட்ட விடயங்கள் மலிந்து விடும் அங்கே. அப்பேர்பட்ட படைப்பாளி அவர். நிமிடத்திற்கு ஒரு பதிவு. அவரின் எழுத்துதானா அல்லது அவரின் பேச்சுகளை அவரின் உதவியாளர்கள் கடகடவென தட்டச்சு செய்து ப்ளாக்கில் பதிவேற்றி விடுகிறார்களா.? என்பது தெரியவில்லை. அவ்வளவு பதிவுகள் அங்கே. எல்லாமும் எளிமையான முறையில் சுலபமாக புரியும்படியே இருக்கும். அப்பேர்பட்ட எழுத்தாளரை, சிந்தனையாளரை, சினிமா பிரபலத்தை மிக அருகில் அவரின் பக்கத்திலேயே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிற பாக்கியம் கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திகொடுத்த வல்லினத்திற்கு நன்றி.

முழுக்க முழுக்க தம்பி தயாஜியின் அறிவிப்பில் சோர்வில்லாமல் நகர்ந்த அற்புத நிகழ்வு இது. இவ்வேளையில் அவருக்கும் என் வாழ்த்துகள்.


இம்மாதம் நான்கு கவிதைப் புத்தகங்கள் என் கைவசம்.

முகநூல் நண்பர் R.K. குரு (லஷ்மிகாந்தன்) அவர்களின் – தமிழுக்கு ஆட்கள் தேவை என்கிற புத்தகம். தற்போது எனது வாசிப்பில்.

ப.ராமு – எனது பழைய நண்பர். அவரின், சிணுங்கும் சிறகுகள் என்கிற கவிதைப் புத்தம்.

கே.பாலமுருகனின் – தூக்கிலிடப்பட்டவர்களின் நாக்குகள் என்கிற கவிதைப் புத்தகம்.

 ம.நவீன் – வெறிநாய்களுடன் விளையாடுதல் என்கிற புத்தகமும்....

எல்லாவற்றையும் வாசித்தபின்பே, அதையொட்டிய கருத்துப்பகிர்தலை முகநூலிலோ அல்லது ப்ளாக்கிலோ பகிர்வேன். கவிதை மாதம் இது எனக்கு.  






சனி, மார்ச் 15, 2014

அரை மணிநேரம்

வீடு மாறுகிறோம், ஏற்கனவே உள்ள செடிகள் எல்லாவற்றையும் அந்த வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை. காரணம் அங்கேயே நிறைய செடிகளை நட்டுவைத்து விட்டோம். பெரிய பெரிய ஜாடிகளில் உள்ள பழைய செடிகளை அப்படியே தூக்கிப்போட்டுவிடலாம் என்றிருக்கின்றோம். என்றார், எனக்குத் தெரிந்த ஒருவர்.

அப்படியா.? வீசாதீர்கள். எனக்குக் கொடுங்கள், நான் பராமரிக்கின்றேன். என்றேன். 

எப்படிக்கொடுப்பது.? பெரிய ஜாடிகள், உங்களின் காருக்குள் நுழையாதே. என்றார்.

ஹ்ம்ம்.. அப்படியென்றால் பரவாயில்லை. செடியை மட்டும் கொடுங்கள். நான் பிழைக்கவைத்து பாதுகாக்கின்றேன்.. என்றேன்.

இல்லை ..இல்லை நான் உங்களுக்கு ஜாடிகளோடு என் லாரியில் கொண்டுவந்து வீட்டிலேயே கொடுக்கிறேன், என்றார்.

இன்று காலையில் அழைத்தார். எங்கும் செல்கிறீர்களா? என்கிற கேள்வியோடு. இப்போது இல்லை. இருப்பினும் மதிய உணவிற்குப்பிறகு கொஞ்சம் சாமான்கள் வாங்கவேண்டியுள்ளது. சூப்பர் மார்க்கெட் செல்வேன் என்றேன்.

செடிகளைக் கொண்டு வரவா? கேட்டார்.
சுமார் எத்தனை மணிக்கு வருவீர்கள் என்று சொன்னால், காத்திருக்கிறேன். என்றேன்.
இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன், என்றார். நான்கு `அரை’ ஆகிவிட்டது.

இப்போது மீண்டும் அழைத்து, அட்ரஸ் சொல்லுங்கள். என்றார். சொன்னேன்.

இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவேன், என்றார்.

செலவு சாமான்கள் வாங்க நாளைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.

புதன், மார்ச் 12, 2014

ஆஸ்பித்திரி

 “ அவங்க ஆஸ்பத்திரியில் இருக்காங்க, போய் பார்த்தியா?” என்கிற கேள்விக்கணை என்னை நோக்கி வருவது எனக்குப்பிடிக்கவில்லை.

எதுக்குங்க.??

அங்கேயாச்சும் அவங்க நிம்மதியா ஏர்காண்ட்ல தூங்கி எழட்டுமே. அங்கேயும் சென்று ஆறுதல் என்கிற பெயரில் எதுக்கு உயிரை வாங்குவானேன்.!?

`அதாங்க, நீங்க உப்ப குறைச்சிருக்கணும். அதாங்க, நீங்க சீனியைக் குறைச்சிருக்கணும். அதாங்க, நான் அப்பவே சொன்னேங்க வெத்தல பாக்கு நல்லதில்லன்னு.. கொறைச்சிருக்கணும்..’ என்று சொல்லி, ஓய்வாக இருப்பவர்களை எழுப்பி `குரைத்து’விட்டு வருவதில் எனக்கு உடன் பாடில்லை.

ஆஸ்பித்திரி என்றவுடன் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதாவது அண்மையில் மாமியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வந்தோம். விடியற்காலை மூன்று மணிக்கு மூச்சுத்திணறல். `ஐய்யோ அம்மா, குய்யோ முய்யோ’ எனக் கதறல்.

அம்புலன்ஸ் அழைக்கவா? என்றால், வேணாம். ஒய்..ஒய்..ஒய் என்கிற ஓசையுடன் வரும். விடிந்தவுடன் அக்கம் பக்கத்தில் பதில் சொல்லமுடியாது. வா, நாமே அழைத்துச்செல்லலாம், என்று, நான், கணவர், வேலைக்காரி என மூவரும் கிளம்பினோம்.

மருத்துவமனைக்கு காலை மூன்று பதினைந்துக்கெல்லாம் சேர்த்துவிட்டோம். சாலையில் வாகனங்கள் இல்லை. அதனால் சுலபமாக இருந்தது. விரைவாகச் சென்று சேர்ந்தோம்.

`என்ன பிரச்ச்சனை?’ மெடிகல் அஷிஸ்டண்ட் கேட்டார்.

`மூச்சுத்திணறல்.’

`இல்லையே, நல்லா இருக்கு, இப்போ.?’

`இல்லை, விடிய விடிய தூங்கவில்லை.. மூச்சுத்திணறல் என்று புலம்புகிறார்.’ கணவன் சொன்னார்.

`எத்தனை நாளா இந்த மூச்சுத்திணறல்.?’

`மூணு.’  நான்தான் சொன்னேன்

`இன்னிக்குத்தான் ஆரம்பம்.’ கணவன்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். மெடிக்கல் அஷிஸ்டண்ட் இருவரையும் பார்த்தார். அதாவது, இரண்டு நாள்கள் மூச்சுத்திணறல் என்றால் ஏன் இந்த அர்த்தராத்திரியில் எமர்ஜென்ஷி வாட்டிற்கு கொண்டுவருவானேன்.! காலையில் சாதாரண டிஸ்பன்சரிக்குக் கொண்டு சென்று மருந்து எடுக்கலாமே. என்பார்கள். அதனால் இன்று, இப்போதுதான் ஆரம்பித்தது, என்று சொன்னால்தான், உடனே அட்மிட் செய்துகொள்வார்கள்.

எங்கே அட்மிட் செய்தார்கள்.!? கதையைக் கேளுங்கள்..

மாமியை உள்ளே அழைத்துச்சென்றார்கள். நீங்கள் இங்கே நில்லுங்கள். என்று சொல்லி, கணவரை அழைத்து, மாமியின் உடல்நிலை குறித்த பழைய ரிப்போர்ட்’களைக்கேட்டு வாங்கிக்கொண்டிருந்தார்கள்.

மணி நான்கு. நான் கொட்டாவி விட்டுக்கொண்டு உற்கார்ந்திருந்தேன். எமர்ஜென்ஷி என்பதால், ஓயாத விபத்துச் சம்பவங்கள் வந்து குவிந்தவண்ணமாக இருந்தன.. ஆட்கள் கதறி அழுதவண்ணமாக. காண்பதற்கே கலவரமாக இருந்தது அச்சூழல். எனக்கு மயக்கம் வருவதைப்போல் இருந்தது.  அப்போது என்னுடைய பள்ளித்தோழன் ஒருவர் அங்கே வந்ததைக் கவனித்துவிட்டேன்.

`என்ன லோகா, இந்த நேரத்தில்?’

`அம்மாவ நேத்துதான் பெயர் வெட்டி அழைத்துச்சென்றோம். மீண்டும் அதே பிரச்சனை. மூச்சுத்திணறல். அதான் கொண்டு வந்தோம். நீ ஏன் இங்கே?’ கேட்டார். மாமிகதையைச் சொன்னேன்.

`அப்படியா? வயதானவர்களை வைத்துக்கொண்டு பிரச்சனைதான் விஜி. பாவம் அவர்கள்.’ என்றார். அவருக்கும் கண்கள் எல்லாம் சிவந்து, மிகவும் சோர்வாகவே தென்பட்டார்.

`எத்தனை மணிக்கு வந்தே, லோகா.?’

`இரவு எட்டு இருக்கும்.!’

`ஐய்யோ, இன்னும் இங்கேவா வைச்சிருக்காங்க? வீட்டுக்குப்போகலையா நீ?’

`இல்லை விஜி. இன்னும் பெட் காலியாகலையாம். மணி எத்தனையாகுமென்று தெரியல.. ஹெம்ம்ம்..’ என்றார் சோர்வாக.

நான் கணவரை அழைத்து, ரொம்ப லேட் ஆகும் போலிருக்கு.! கேளுங்க நர்ஸிடம். என்று கூறினேன். அவர் நர்ஸிடம் எதோ பேசிவிட்டு, எங்களிடம் வந்து, கிளம்புங்கள், நான் உங்களை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன். லேட் ஆகுமாம்.! செஃக் செய்கிறார்கள். என்று சொல்லி எங்களைக் கிளப்பினார்.

நாங்கள் வீடு வந்து சேர காலை நான்கு முப்பது. கொஞ்ச நேரம் படுத்து எழுந்து, காலையில் வேலைக்குக் கிளம்பிவிட்டேன்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரம் அறிந்தவண்ணமாகவே இருந்தேன். ஒவ்வொரு முறை அழைக்கின்றபோது, இன்னும் வாட் கிடைக்கவில்லை. இன்னும் வாட் கிடைக்கவில்லை. இதுதான் பதில். சரி, இரவு முழுக்கத்தூங்கவில்லை. வந்து ரெஸ்ட் எடுத்துவிட்டு, பிறகு செல்லலாமே. என்று ஆலோசனை வழங்கினேன்.

அவர் வீட்டுக்குவந்து குளித்துவிட்டு தலை சாய்க்க, நான் வேலை முடிந்து வீட்டுக்கு வர, நேரம் சரியாக இருந்தது. மீண்டும் கிளம்பினோம், மருத்துவமனைக்கு.

நீ போய், வாட்டுக்குக் கொண்டு சென்று விட்டார்களா, என்று கேட்டுவிட்டு, எனக்கு ஒரு SMS அனுப்பு. நான் கார் பார்க்கிங்கில் காத்திருக்கிறேன், என்றார்.

மணி ஏழு. நானும் என் பணிப்பெண்ணும், எமர்ஜென்ஷி வாட்டில் மாமி இருந்த அறைக்குச்சென்றோம். அங்கே அவர் இல்லை. பதிவு செய்கிற நர்ஸிடம் சென்று, மாமியின் பெயரைச்சொல்லி கேட்டேன். Trauma வாட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். அங்கே சென்று கேளுங்கள், என்றார். Trauma வாட்டிற்குச் சென்றோம். அங்கே கையை விரித்து, உள்ளே சென்று கேளுங்கள், என்றார்கள். உள்ளே சென்று, அங்கே வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு நர்ஸிடம் விசாரித்தேன்.

`ஓ, அவரா? Menara Timor க்குக் கொண்டு சென்றுவிட்டார்களே.’ என்றார்.
அப்படியா? வாட் நம்பர் எனன? என்று கேட்டு தகவல் பெற்றுக்கொண்டு, கணவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புகிறபோது, கணவர் என்பின்னே நிற்கிறார். என்னாச்சு? என்கிற கேள்வியுடன். பொறுமை இழந்த நிலையில்.

விவரம் சொல்லி, Menara Timor க்குச் சென்றோம். அதே எமர்ஜென்ஷி வாட்டின் வழி, கண்டீனைக் கடந்து மெனரா நோக்கிச்சென்று, லிஃப்டில் ஏறுகிறபோது, அது Menara Timor அல்ல, Menara utama. அப்போ மெனர தீமோர் எங்கே? என்று தேடுகிறபோது, அங்கே எழுதியிருந்த குறியீட்டு வழிகாட்டியினை நோக்கி நடந்தோம். நடந்தோம்.. நடந்துகொண்டே இருந்தோம் .. புரியல.. கடைசி கதவு வரை வந்துவிட்டோம். எங்கே செல்வதென்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், அதுவும் இல்லை. கால்கள் போன போக்கில் நடக்கிறார் கணவர். நானும் என் பணிப்பெண்ணும் அவர் பின்னால். சோர்ந்துபோனோம்.

ஒரு இடத்திற்கு வந்து மீண்டும் யூ டெர்ன் எடுக்க ஆரம்பித்தார். என்னால் பொறுக்கமுடியவில்லை. `நில்லுங்கள். நிறுத்துங்கள்..’. என்று சொல்லி, அங்குள்ள காவலாளி ஒருவரிடம் விசாரித்தேன். Menara Timor எங்கே இருக்கு? அவர் அழகாக வழியினைக் காட்டி, பக்கத்தில் இருக்கின்ற லிஃப்டில் ஏறி செல்லச்சொன்னார்.

வேகவேகமாக ஏறிச்சென்று மாமியின் அறையில் நுழைகிறபோது, விஸிட்டிங் ஹவர் முடிகிற நிலையில்...! பக்கத்து பெட்’யில் மற்றநோயாளிகள் தூங்கவேண்டும். அங்கே நாம் நின்று பேசுவது சரியல்ல. தொந்தரவு. கொஞ்ச நேரம் முகம் காட்டிவிட்டு, மீண்டும் இறங்கினோம்.
இறங்கி வந்த வழியிலேயே சென்று, ஒரு சுற்று சுற்றி கார் பாக்கிங் சென்று சேர்ந்தோம். என் பணிப்பெண்ணிற்கு கால்வலியே வந்துவிட்டது. கார் பார்க்கிங் சென்று சேர்ந்தபோது தான் தெரிகிறது, மெனார திமோர் வாசற்கதவருகேதான் கார் பார்க்கிங். ஆனால் நாங்களோ, சுற்றிச்சுற்றி, வந்த வழியிலேயே வந்து சேர்ந்தோம்... !!!

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், நாம் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும், மருத்துவமனை சூழல் நம்மைத்தாக்கிவிட்டால், நாமும் மனநிலை பாதித்தநிலையில் உலவத் துவங்கிவிடுகிறோம்.

ஆகவே மருத்துவமனைக்குச் செல்வதென்றால், எனக்கு அலர்ஜிதான்..


சனி, மார்ச் 08, 2014

வெண்ணிற இரவுகள் - என் பார்வையில்..


தியேட்டர் வெரிச்சோடிக்கிடந்தது. டிக்கட் எடுக்க நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டிய அவசியமெல்லாம் ஏற்படவில்லை. யாருமே இல்லை நான் டிக்கட் எடுக்கச் சென்றபோது.

என்ன படத்திற்கு டிக்கட் வேண்டும்?  என்று கேட்டார், டிக்கடி விற்பனைக் கவுண்டரில் அமர்ந்திருந்த பணிப்பெண்.

வெண்ணிற இரவுகள் என்றேன். ரிங்கிட் மலேசியா பன்னிரண்டு என்றார். கட்டினேன். கனிணி ஸ்கிரீனில் எந்த இடம் வேண்டுமென்று தேர்வு செய்யச்சொன்னார் அவ்வூழியர்.

இதுவரையில் எனக்கு திரைப்படங்களுக்கு டிக்கட் எடுக்கின்ற அவசியம் இருந்ததில்லை. எப்போதும் மகன் அல்லது கணவர் எடுத்துவிடுவார்கள், ஆன்லைனில். நேற்று எடுக்கச்சொல்லி கேட்டபோது, ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு, `போ, ஆன்லைனில் டிக்கட் எடுக்கவேண்டிய அளவிற்கு இப்படத்திற்கு ஆட்கள் முட்டிமோதி நிற்கமாட்டார்கள். படம் ஆரம்பிக்க இரண்டு நிமிடம் இருக்கின்ற போது கூட செல்லலாம். டிக்கட் கிடைக்கும்.’ என்றார்கள். நிலைமை அப்படியேதான் ஆனது.

ஆக, டிக்கட் எடுத்த கையோடு அமர்கின்ற இடத்தையும் நாமே தேர்வு செய்யவேண்டும்.  அவர்கள் காட்டிய அந்த ஸ்கிரீன்’ஐ பார்த்தவுடன் எனக்கு ஒரே அதிர்ச்சி. காரணம் அங்கே இரண்டே இரண்டு இடங்களில்தான் ஆட்கள் இருப்பதாகக் காட்டியது அந்த ஸ்கிரீன். சரி, எதாவதொரு இடத்தில் போடு, என்றேன்.

என்ன, யாருமே கவனம் செலுத்திப் பார்க்க நினைக்காத படத்தையா நாம் பார்க்கச்செல்கிறோம். ! என்னமோ, பார்ப்போம்.! ஆஹா ஓஹோ என்கிறார்களே..! என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டு, மலேசியத் திரைப்படங்களின் மேல் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை ஒரு ஓரமாகத் தள்ளிவைத்துவிட்டு, மனதை மிக அகலமாகத்திறந்து வைத்துக்கொண்டு தியேட்டர் உள்ளே நுழைந்தேன்.

மூன்றே பேர்தான் அமர்ந்திருந்தோம் அவ்வளவு பெரிய அரங்கில். அமைதியாகவே ஆரம்பித்தது அத்திரைப்படம்.

படம் ஆரம்பிக்கின்றபோது மலேசியப்படம்போலவே இல்லை. தமிழகத்திரைப்படம்போலவே அழகான காட்சியமைப்புகள் மென்மையான இசை என நகர்ந்தது.  பேச ஆரம்பித்தார்கள். எனக்கு வெறுப்புத்தட்ட ஆரம்பித்தது. வசனங்களில் ஒரு அழுத்தம் இல்லை. அழுத்தம் என்றால், புராணக்கால படங்கள் போல் தமிழில் பேசுவதல்ல. அதாவது, சில காட்சிகளைப் பேசாமல் புரியவைப்பது. நல்ல வசனமாகப்பேசுவது. நல்ல அழுத்தமான வரிகளைப் பேசுவது. உதாரணத்திற்கு; பேசியதையே திரும்பத்திரும்ப பேசுவது. குறிப்பிட்டுச்சொல்ல... `இப்போ உனக்கு என்ன?.. உன்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்லை. எதுக்கு? சும்மா இரு..  அய்யோ.. , என்னாச்சு.? சொல்றத கேட்கிறியா? பேசாம இருக்கியா? காசு கொடு.. என்று தர்க்கம் செய்கிற வசனங்கள் மீண்டும் மீண்டும் வருவது .. அதுவும் சங்கீதா காட்டுக்கூச்சல் போடுவது போல் அமைத்திருப்பது, படுபோர்.
இது நடைமுறையில் நாம் பேசுகிற பாணிதான் என்கிறபோதிலும், திரைப்படம் என்று வருகிறபோது, வசன அமைப்புகளில் சில நேர்த்திகளை ரசிகனாகப் பட்டவன் எதிர்ப்பார்ப்பான். அது இல்லாத பட்சத்தில், எழுந்து ஓடிவிடலாமா என்கிற சிந்தனை வரும்.

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. காத்திருந்தேன். இரண்டு மணிநேர படம். படம் முழுக்க இப்படியேவா இருக்கப்போகிறது.!. காட்சிகள் மாறலாம். அது நம்மைக் கவரலாம், என்கிற சிந்தனையுடன் தொடர்ந்து பயணித்தேன் வியட்நாமிற்கு.

ஆஹா, அருமை. கதையை அழகாகச் சொல்லியிருக்கின்றார்கள். நடிப்பு ஒளிப்பதிவு, காட்சிகள் என படம் அற்புதமாக நகர்கிறது. வசனத்தில்தான் சில கோளாறுகள். அதுதான் மலேசிய பாணி பேச்சு என்றால் நான் என்ன செய்ய.? எனக்கு அந்த பாணி பரிச்சயம் இல்லை.

வெளிநாடு என்றால், எங்கெங்கோ சென்று பல திரைப்படங்களை தமிழ்நாட்டுத்திரைப்படங்கள்  எடுத்துக் காட்டியிருப்பினும், வியட்நாம் காட்சிகள், அங்கே தமிழர்கள் இருக்கின்றார்கள்/வாழ்கின்றார்கள் என்று சொன்ன முதல் படம் என்றால் அது இந்த வெண்ணிற இரவுகள்தான். ஒரு மலேசியத்திரைப்படத்தில் இம்முயற்சி அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

இருப்பினும், இங்கேயும் சில குளறுபடிகளைக் காணலாம். அதாவது, திரைப்படம் ஸூட்டீங்க் எடுப்பதை மக்கள் ஒரு ஓரமாக நின்று பார்ப்பதைப்போன்ற காட்சிகள் படத்தில் வந்துள்ளதைத் தவிர்த்திருக்கலாம். . தகுந்த திட்டமிடல் இல்லாமல், ஷூட்டிங் நடத்திருப்பதை இது காட்டுகிறது. சில காட்சிகளில், வியட்நாம் மக்கள் ஸூட்டிங் நிகழ்த்தப்படுகிற தளத்தின் காட்சிகளை இரசித்துப்பார்ப்பதையும் சேர்த்து படத்தில் இணைத்திருக்கின்றார்கள். கதை நகர்தல், எடுத்தவிதம், நடிப்பு என எப்படி அற்புதமாக விருவிருப்பாக நகர்த்திச்சென்றிருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் தலைகாட்டுகிறபோது, ரசிகன் நிஜத்தன்மையை மறந்து, நிழல்படம் பார்க்கின்றோம், என்கிற தாக்கத்திற்குள் நுழந்துவிடுகிறான். இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சம்.

இசை மற்றும் பாடல்களும் அற்புதம். படம் முழுக்க வியாப்பித்திருக்கும் இசை மிக ரம்மியமாகவே ரீங்காரமிடுகிறது.

ஒளிப்பதிவு என்று எடுத்துக்கொண்டால், வியட்நாம் கிராமிய சூழலை இன்னும் கொஞ்சநேரம் நமக்காகக் காட்டியிருக்கலாமே என்கிற ஏக்கத்தை நம்மிடம் விட்டுச்செல்கிறது சில காட்சியமைப்புகள். மாடு, சக்கரவண்டி, விவசாய நிலம், கன்னத்தில் சந்தனம் பூசிய மக்கள், சொக்கா மற்றும் லுங்கி அணிந்த கலாச்சார சூழல், காய்கறி சந்தை, சில தெருவோர வியாபார காட்சிகள், உணவுக்கடைகள், டீக்கடை சூழல், கோழிசண்டை, படகுசவாரி என இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் காட்டி இருக்கலாம் என மனம் ஏங்குகிறது. பரவாயில்லை. அது என்ன டாக்குமெண்டரி சித்திரமா.? கதைக்குத்தேவையானதை மட்டும் காட்டிச்சென்று, கதையோடு மீண்டும் இணைந்து கொண்டார்கள். அற்புதம்.

கதையைப்பற்றி நிறைய சொல்லலாம். இதுவரையில் இப்படிப்பட்ட கதையினை எந்தத் திரைப்படத்திலும் சொல்லவில்லை, என்று சொல்வதற்கு இல்லை. இருப்பினும் அதை நகர்த்திச்சென்ற விதம் நிஜமாலுமே பாராட்டுக்குரியது. பாசம் காதல் என்று ஏமார்ந்த பெண், தான் கொடுத்த பணத்தை வசூல் செய்வதற்கு  கதாநாயகனைத்தேடி வியட்நாம் செல்கிறாள். அங்கே அவர்கள் இருவருக்கும் நடக்கின்ற கூத்துகளைத்தான் கதையை பின்நோக்கியும் முன்நோக்கியும் காட்சியாக்கம் செய்திருக்கின்றார்கள். அதில் காதலும் கசிகிறது. மிக ஜாலியாக சுவாரஸ்யமாக நகர்கிறது காட்சிகள்.

காதல் இருப்பினும். இது காதல் கதையும் அல்ல. வேறுமாதிரி அழகாகச் சொல்லியிருக்கின்றார்கள். ஜாதி பிரச்சனை வருகிறது. அதையும் ஒரே காட்சியில் மிகவும் சாதூர்யமாக இணைத்துவிட்டு, காட்சியை முடித்திருக்கின்றார்கள். (மீசையை முறுக்கிக்கொண்டு அரிவாள் சண்டையெல்லாம் இல்லை.) அதிகம் பேசப்படவேண்டிய அதேவேளையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியமில்லாத கரு இது என்பதால் ஊறுகாய்போல் தொட்டிருக்கின்றனர். இங்கே `அது’ இருக்கு ஆனா இல்லை என்பதால்...

பல்கலைக்கழகத்தில் நடக்கின்ற ரெஃகிங் தொடங்கி, அங்கே நடைபெறும் காட்சியாக்கங்கள் அனைத்தும் மண்மணம். யதார்த்தம். இங்குதான் மலேசியபாணியை உலக மக்களும் கண்டு ரசிக்கலாம். இதுதான் எங்களுக்கே உரித்தான பாணி. கொஞ்சங் கூட தமிழ்நாட்டு தாக்கமில்லாமல் காட்சிகளை அமைத்திருப்பது அற்புதம்.

நடிப்பில் மஹேன், என மனதில் நிற்கிறார். சில இடங்களில் குறும்பு, சில இடங்களின் காமடி நடிகர்கள்போல் நகைச்சுவை, சில காட்சிகளின் குணச்சித்திர நடிப்பு வழங்கினாலும், இறுதியில் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாகவே மனதில் அரியணையிட்டு அமர்ந்துவிடுகிறார்.  எல்லா குணாம்சமும் நன்கு பொருந்திவிடுகிற கதாப் பாத்திரமாகவே மஹேன் திகழ்கிறார். யதார்த்த நடிப்பு. நடிப்பு என்பதைவிட பாத்திரத்திற்கு சிறந்த தேர்வு. நல்ல எதிர்காலம் உண்டு அவருக்கு. வாழ்த்துகள்.

சங்கீதா மலேசிய நடிகைதானா என்கிற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. தமிழ்நாட்டு சினிமா நடிகைகளை கண்முன் நிறுத்துகிறார். சுத்தமான நடிப்பு. நடிப்பில் கொஞ்சம் கூட போலித்தனம் இல்லை. அழுகை , சிரிப்பு, கோபம் என எல்லாமும் அற்புதம். கண்கள் பேசுகின்றபோது காஜல் அகர்வால் மனக்கண்முன் தோன்றி மறைகிறார். அழகுப்பதுமை. வாழ்த்துகள்.

ஒரே ஒரு காட்சியில் லோகன் வருகிறார். அடடா..  பக்குவப்பட்ட நடிப்பாற்றால் திறன் அவரிடம். அந்தக் காட்சிதான் படத்தின் திருப்புமுனை. கொஞ்ச நேரம்தான் என்றாலும் மனதில் பதிகின்றார்.  சிறப்பு.

படம் முழுக்க நாயகனும் நாயகியுமே மாறி மாறி காட்டப்படுகிறார்கள். சிலர் முகங்காட்டினாலும் மனதில் நிற்கவில்லை.  திரைக்கதைக்கு இந்தச் சின்ன கரு போதாதுதான். இருப்பினும் அதை மிக நேர்த்தியாக நகர்த்திச்சென்றவிதம் ஆர். பிரகாஷ்’ஐ சேரும். பாராட்டுகள்.

நல்ல படம். நம் நாட்டு தயாரிப்புகளின் மேல் நம்பிக்கை லேசாக எட்டிப்பார்க்கத்துவங்கியிருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கம்.  தொடரட்டும் முயற்சிகள்.

திரையரங்குகளில் சென்று பாருங்கள். நிச்சயம் ஏமாரமாட்டீர்கள்.









புதன், மார்ச் 05, 2014

பைத்தியம் நான்....

அழுத்தங்களின் 
ஆழங்களை 
ஆராய்கின்றபோது, 
ஆழத்தின் மத்தில் 
உன் புன்னகை 
என்னை உரசிச்செல்கிறது

%%%%

உயிரை மட்டும் அனுப்பு
காதலித்து நாளாகிறது

%%%%%

சராசரிகளின் முன்னே 
பைத்தியம் நான்; 
தோற்றுப்போகிறேன்...

%%%%%


ஞாயிறு, மார்ச் 02, 2014

எழுத்தாளர் ப.சந்திரகாந்தம் மறைவு

ஆளப்பிறந்த மருது மைந்தன், அமுதசுரபிகள், 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள், சாதனைப் படிகளில் சாமிவேலு போன்ற அரசியல் வரலாற்றுப்பின்னணியில் படைக்கப்பட்ட நாவல் மற்றும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்... 

நூற்றுக்கணக்கான சிறுகதைகள். நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்கள், நூற்றுக்கணக்கான தொடர்கள், ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் உலக சினிமா கட்டுரைகள்.. பத்திரிகையாளர், ஊடகவியலாளர், என குறைந்தது ஐம்பது ஆண்டுகாலம் (அதற்கு மேலும்) ஊடகத்துறையில் இருந்து வருபவருமான...

தலைசிறந்த இலக்கியவாதி என்கிற மகுடத்தை, மலேசிய பத்திரிகைத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய மறைந்த ஆதிகுமணன் அவர்களின் மூலமாக மனப்பூர்வமாக சூட்டப்பற்ற இலக்கியவாதியுமான...

தமிழகத்தில் கரிகால சோழன் விருது பெற்றவருமான...

இறக்கும் இறுதி மூச்சுவரை பத்திரிகைத்துறை மற்றும் நாடக டாக்குமெண்டரி தயாரிப்பு என தமது பொழுதினை இலக்கியம் எழுத்து என்கிற வட்டத்திற்குள்ளேயே அமைத்துக்கொண்ட துடிப்புமிக்க தமிழ்நேசன் ஞாயிறு பதிப்பாசிரியருமான...

எனது இனிய நண்பருமான...

திரு. ப.சந்திரகாந்தம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்.

மாமிகதை - விடியல்

இரவெல்லாம் அழைத்து அழைத்து தொல்லை செய்த மாமியின் செய்கை இரண்டு நாட்களாக விசித்திரமாகவே இருக்கின்றது. விடியற்காலை நான்கு மணிக்கு நான் வெளியே அமர்கிறேனே என்கிறார். வெளியே யாரும் இல்லை, என்றதிற்கு, பரவாயில்லை நான் அமர்கிறேன் என்று அடம்பிடித்தார். சரி வாருங்கள் என்று வெளியே அழைத்துச்சென்ற போது..

“ அய்யோ.. என்ன இன்னும்விடியவில்லை.? இருட்டாக இருக்கிறதே.. !!?” என்கிற முனகல், சலிப்புடன்.. 

இன்றைய கச்சேரி என்னாகுமோ தெரியவில்லை. நாளைக்கு வேலை. இரண்டு நாள் விடுமுறை பொழுது மாமியிடம் மல்லுக்கட்டுவதிலேயே முடிவடைந்தது.

வேலைக்குக் கிளம்பிச் செல்லுகையில், என்னுடைய யூனிபர்ம்’ஐ இறுக்கிப்பிடித்துக்கொண்டு, வேலைக்குச்செல்லாதே, என்பார்.

பரிதாபம் என்பதைவிட, கோபம் ஜாஸ்தியாக வருகிறது.. சிலவேளைகளில் எனக்கு.!