புதன், நவம்பர் 30, 2011

இலக்கியக் காதல்

நீ யாரை அனுப்பினாலும்
எனக்கு உன்னைத்தான் பிடிக்கும்
நானும் பேராசைக்காரி
உன்னைப்போல்..

நானும் என் புகைப்படமும்

ஆபாசம்

பாலில் எனக்கு,
தயிர் பிடிக்கும்
மோர் பிடிக்கும்
வெண்ணெய் பிடிக்கும்
நெய் பிடிக்கும்
அதன் ஆடை பிடிக்கும்
பால் கோவா பிடிக்கும்
பால் குளியல் பிடிக்கும்
பால் அபிஷேகமும் பிடிக்கும்
பால் தீர்த்தம் பிடிக்கும்
பால் சாதம், பாயாசம், குழம்பு பிடிக்கும்
அந்த பாலையே பச்சையாகவோ/சூடாகவோ, ரொம்ப பிடிக்கும்..

பசுவின் காம்பு தான் பிடிக்கும் என்பவர்களை
நான் ஒண்ணும் செய்ய முடியாது.

திங்கள், நவம்பர் 28, 2011

மறுபிறவி

என் முணகல்களில் 
எனக்கே வந்த 
விழிப்பு நிலை

இரத்த அழுத்தம்


இரும்பை உருக்கும் 
நெருப்பு. 
இருப்பை உருகுலைக்கும் 
கொதிப்பு.

ஊடுருவல்

பாதைகள் மாறியாச்சு 
பயணத்தில் வெகுதூரம் வந்தாச்சு 
எதும் நினைவில் இல்லை... 
எல்லா சூழலும் மறந்த நிலையில்... 
துணைப்பயணி மட்டும் 
எதற்கும் உதவாத சில நினைவுகளை சுமந்துக்கொண்டு நம்மோடு 
நம்மை உசுப்பேற்ற....

போராட்டம்

பூவையரை 
பூ 
என்றதால் 

மென்மையை
காக்க 
மலராமலேயே.......!

படி ஏற்றும் உறவு

பகிர்தலின் படி 
படிக்கத்தூண்டுவது 
உன் உறவு.. 
தினமும் 
படிப்படியாக 
ஒருபடி ஏறும் உணர்வு. 
படிவேன் உன்னிடம் 
பகிர்ந்துப் படிக்க..

(ஏ)எங்கிடுவேன்

படிக்கும் புத்தகத்தில், பிடிக்கும் பகுதியை.. 
வட்டமிடுவேன் கோடிடுவேன். 
நீயும் ஒரு புத்தகம் எனக்கு. 
மொத்தமாக பிடிக்கும் புத்தகமாக நீ திகழும் போது, 
கோடுகளையும் வட்டங்களையும் எங்கிடுவேன்.?

அதிகாலைப்பொழுது

சூரியன் இன்னும் வரல 
மரங்களின் லேசான அசைவு 
ஏதோ ஒரு பறவையின் கொஞ்சும் குரல் 
பனியில் நனைந்த ரோஜா 
வெட்கத்தில் புற்கள் 
இவைகளை ரசிக்க என்னோடு வா 
தூக்கத்தை தியாகம் செய்து...

பைத்தியங்கள்

வெளியே தெரியாமல், 
நமக்கே புரியாமல், 
நம்மையறியாமலேயே 
சிலரின் பார்வையில் பட்டுவிட்ட, 
பைத்தியங்கள் நாம்.!

குற்றவுணர்வு

பள்ளிப்பருவம் 
தொடங்கி... 
இன்று வரை 
தொடர்கிறது.... 
எதையும் படிக்காமல் 
இருக்கும் போது....

பாரதி கனவு

அமல்
முதலாம் ஆண்டு படித்தது 
முக நூலில் அமல் 
'காலையில் எழுந்தவுடன், படிப்பு'

சத்தமான உலகம்

எங்கு சென்றாலும், 
எதாவதொரு வடிவில், 
இதயத்துடிப்பை 
இரட்டடிப்பாக்கும், 
ஒரு இரைச்சல். 
இப்போதும் கூட..

எழுதுகோல்

எனது 
கையில் 
நீயே 
பேனா..! 

எழுத்தெல்லாம் 
உன்னையே 
சொல்லுது 
தானா..!

சுயமரியாதை

உன் அலங்கோலமான 
வார்த்தைகளால்.. 
அலங்கரித்துக்கொண்டேன் 
என்னை நானே.

நினைவுப்பொழுதுகள்

கனவில் வரக்கூடாது 
என்கிற யோசனையில் 
உன் நினைவிலே கழியும் 
என் பகல் பொழுதுகள்.

கொஞ்சம் குழப்பத்தின் போது

கேள்வி

எப்போதும் 
கேள்வியோடு 
விடியும், பொழுது 

இன்று 
ஒரு 
பதிலோடு, விடிந்துள்ளது... 

இப்போது 
கேள்வி 
உங்களிடம்....!

என்ன பதில், அது?

மணம்

வாடிய 
மல்லிகையை 
வீசவே 
மனமில்லை.....
அதிலே 
உ(எ)ன் 
மண(ன)ம் 
இருப்பதால்!

லஃவ்டப்

நீ வரும் போது
என் இதயத்தின் 
ஓசை 
'லப்டப்.....' 
அல்ல 

'லவ்டப்'

வருடலே அழகு!

சலவை செய்தும் 
அழுக்காகவே இருந்த 
ஆடை! 

உலர வைத்த போது 
அழகாக அசைந்தது 
தென்றலில்!

வெள்ளை நிழல்


நான் வெள்ளையல்ல.. 
உன் நிறம் எனக்கேன்? 

வெள்ளைக்கும் 
கருப்புதான் நிழல் 

எனக்கு 
நீ போல..... 

விடாத 
கருப்பு அல்ல... 
வெள்ளை நிழல் 
நீ எனக்கு !

திலகம்


தூங்கச் செல்லும் போதும்.. 
நெற்றியில் திகலமிட்டுக்கொள்கிறேன். 
கனவிலும் வசியத்திற்கு 
மயங்குதல் கூடாது என்பதற்காக.!

எதிர்ப்பார்ப்பு


எந்த விதையோடும் 
என் இரவு 
விடைபெற்றதில்லை 

இருப்பினும்
ஒவ்வொரு விடியலும் 

ஏதோ ஒன்று 
முளைத்தபடி தான் 
விடிகிறது...!

சில உளறல்கள்

அழுது அடம்பிடித்து 
கெ(கொ)ஞ்சி 
பால் குடிக்கும் 
பச்சைக்குழந்தையைப் போல... 
காதலிக்குக் காதலன். 

பழக்கப்பட்ட 
சுவர் தான் 
காயம் பட்டு 
தவிக்கிது.!

இசையிலிருந்து 
இச்சைவரை 
ஆண் பெண் 
சேர்க்கையே 
இயற்கை அழகு

உன்னை விரும்புவதால் 
என்னை நேசிக்கின்றேன் 
யாரையும் வெறுக்காமல்

காதலர் தினம் 
எத்தனை 
ரோஜா 
யார் யார் 
காதிலோ?

விலையேற்றம் 
காதலர் தினத்தில் 
கேட்கமாட்டேன் 
உன்னிடம் ஒரு ரோஜா 
எனக்குத் தெரியும் 
நீ ஏழை என்று 
காதலைக்கொடுப்பதிலும்.....


அன்பிற்கு அடிமை

 

நிரந்தர மரணம் 
நோக்கி......... 

நித்தமும்
செத்த வண்ணம்.......... 

நாம்!

காயம்

என் இதயம் 
கடக்கரை மணல் அல்ல 
அலை வந்தவுடன் 
உன் தடத்தை அழித்துச் செல்ல 
இரத்தம் சுனாமி போல் 
பொங்கி வந்தாலும் 
இது என்றுமே 
அழியாத சுவடு 
மாறாத வடு.

துளி

பகல் 
போல் அல்ல.. 

இரவின் 
ஒவ்வொரு 
மணித்துளியும்... 

எனக்குச் சொந்தமானது..

காட்டாதே உன்னை

எனது 
கற்பனையைக் 
களைத்து விடாதே, 

என் 
கனவில் 
நீ அழகன்.!

மறக்கக்கூடும், உன்னை!

பேசவேண்டாம் 
பேசுகிறபோது... 

நீ கொஞ்சம் உளறலாம்! 
உன்னிடம் தெளிவில்லையோ, 
என நான் நினைக்கக்கூடும்! 

சொற்களை 
நிறுத்தி நிறுத்தி 
சொன்னதையே மீண்டும் மீண்டும், 
சொல்ல நேரிடலாம்! 
புத்திக்கூர்மை இல்லையே, 
என நான் நினைக்கக்கூடும்!

நிறுத்தாமல் 
நீ பேசிக்கொண்டே போகலாம்.. 
உளறுவாயனோ! 
என நான் நினைக்கக்கூடும்!

சில சந்தர்ப்பத்தில் 
சத்தம் போட்டு 
பேசுகிற நிலை வரலாம் 
காட்டு மிராண்டியோ! 
என நான் நினைக்கக்கூடும்!

பேசும்போதே... 
கொட்டாவியும் வரலாம், 
பேச்சில் ஆர்வமில்லையோ! 
என நான் நினைக்கக்கூடும்!

இடையில் 
இருமலும் வரலாம்! 
நோயாளியோ! 
என்றும் நினைக்கக்கூடும்!

ஏன், என்னை மகிழ்ச்சிப்படுத்த 
நீ, சிரித்தும் பேசலாம் 
வழிகிறாயோ!
என நான் நினைக்கக்கூடும்!

எல்லாம் தெரிந்ததைப்போல் 
நீ பேசலாம் 
உன் உறவே, வேண்டாம் 
என்கிற முடிவிற்கு கூட 
நான் வரக்கூடும்! 

பேசவே வேண்டாம் 
இதனால் தான், 
நான் யாரிடமும் 
அதிகம் பேசுவதில்லை...!!!! 

புரிந்து கொள்!!!!!!!!!!!!!!!!!!!!!

சந்தை நிலவரம்

 
'முட்டை இட காத்திருக்கும் ஈக்கள்.. 
குஞ்சு பொரிக்க அல்ல, 
குல நாசம் செய்ய’....

ஊனமான உண்மைகள்

பொய் சொல்வதென்றால்..
கதைகளைத் திரித்துக்கூற, 
அதில், கொஞ்சமாவது உண்மை இருக்கவேண்டும்!
இருப்பினும், அது 
ஊனமான உண்மைதானே!

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால்... 
சேர்த்துச் சொல்லப்படுகிற பொய்களால் 
திரிக்கப்பட்ட உண்மை 
பல வேளைகளில் 
பொய்யான மெய்தானே..!

பொய்யாகும், உண்மையையும்..
உண்மையாகும், பொய்மையையும்..
ஊனமான உண்மைக்காக
உளறி பொய்யாக்குவதை விட....!? 

சொல்லாமலேயே, 
பேசாமலேயே, 
உளறாமலேயே 
மௌனம் காப்போம் 
நேசத்தின் வலிமையை 
மெய்ப்பித்து உணரவைக்க...!!!

அப்பாவின் மரணம்

இது தான் கதை (15/7/1992)

கடுமையான மழை அன்று. மருத்துவமனை வளாகத்தில் நாங்கள் எல்லோரும்.

சித்தப்பா திட்டினார். " போங்க எல்லோரும், விட்டிற்கு, படித்த பிள்ளைகள்தானே.! பத்து நாளாக ஓயாமல் மூக்கைச் சிந்திகொண்டு.., பாவம் அம்மா, நிம்மதியே இல்லாமல் இருக்கின்றார், நீங்கள்தானே ஆறுதல் சொல்லணும் ..!  அப்பா நிச்சயம் நாளை வந்துவிடுவார், டாக்டர்கள் உத்தரவாதம் கொடுத்துவிட்டார்கள். கிளம்புங்கள் வீட்டிற்கு". சித்தப்பாவின் ஆறுதலான ஆவேஷம். 

சரி என, மருத்துவமனையை விட்டு வீட்டிற்குக் கிளம்பினோம், செல்லும் வழியில் கடையினில் காரை நிறுத்தி,  முப்பது முட்டைகளை வாங்கினோம். இரவு உணவிற்காக. வீட்டிற்கு வந்தவுடன் அதை குழம்பு வைத்தோம்..எல்லோரும் சாப்பிட்டார்கள், அதான் நாளை அப்பா வந்திடுவாரே.என்கிற நம்பிக்கைக்கீற்றுகள் துளிர்த்தவண்ணமாக!

இரவு மணி, பதினொன்று முப்பது இருக்கும், ஒரு அழைப்பு வந்தது. ஒருவாரகால தூக்கமின்மையால் எல்லோரும் விரைவாகவே உறங்கச்சென்று விட்டார்கள். அப்பா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில்.

தொலைப்பேசி அழைப்பினை நான் தான் எடுத்தேன். மறுமுனையில் சித்தப்பாவின் குரல்.  'அப்பா தவரிவிட்டார், நாளை காலை தான் கொண்டு வருவோம், ப்ளீஸ் இப்போது இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூங்குவார்கள், அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அமைதியாய் இரு. செய்யவேண்டியவைகளையெல்லாம் நாங்கள் இங்கிருந்தே கவனித்துக்கொள்கிறோம். கிளம்பும்போது நான் மீண்டும் அழைக்கிறேன். பார்த்து, கவனம்..சரியா..!” 'என்கிற குண்டைத்தூக்கிப்போட்டு தொலைப்பேசியை வைத்தார். 

அமைதியாய் இருந்தேன். எதிப்பார்த்த மரணமே என்றாலும், குடும்பத் தலைவனின் மரண செய்தி அஸ்வாரத்தை ஆட்டம் கொள்ளத்தான் செய்தது. அப்பாவிற்குப்பிறகு வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறது என்கிற கலக்கத்தில் நான். ஐம்பத்தைந்து வயதில் மரணமென்றால், எங்களின் வயது ஏறக்குறைய இருபத்தைந்திற்கும் குறைவே..! ஏழுபேர் கொண்ட பிள்ளைகள், சித்தப்பா அத்தை அம்மா தாத்தா என ஒரு குட்டுக்குடும்பமாகவே வாழ்ந்த குடும்பத்தில் அதன் தலைவன் இல்லையென்றால்..! என்னாகுமோ.. பீதியோடு படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன் அன்றிரவு.  

அம்மாவின் குரல் மெதுவாய்... “யாரு புள்ள போன்ல?” 

“அப்பாவின் நல விசாரிப்பு அழைப்பு’ம்மா,” என்று சொல்லி சமாளித்தேன். 

“ ஓ... சரி போய்ப்படு..” என்று சொல்லிய மறுநொடி மெள்ளியதாய் ஒரு குறட்டைச் சத்தம். தூங்குகிறார்போலிருக்கு. அசதிதான்.

எல்லோரும் தூங்கினார்கள். நான் மட்டும். தூங்கவில்லை ! எப்படித்தூக்கம் வரும்!?  மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. தம்பியை உடனே வரச்சொல், என. அப்போதெல்லாம் கைப்பேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. ஒவ்வொரு அழைப்பும் மருத்துவமனை பொதுதொலைப்பேசியின் மூலமாகவே வந்துகொண்டிருந்தது.

தம்பியை எழுப்பினேன். தடாபுடாவென்று எழுந்தான். கடிகாரத்தைப் பார்த்தான். என்ன.. என்ன.. என்ன? என்கிற கூச்சலோடு. உஸ்ஸ்ஸ்ஸ்.. சத்தம்போடாதே. சித்தப்பா அழைத்தார் என்கிற விவரத்தைச்சொல்லி, அப்பா இறந்துவிட்டார் என்கிற உண்மையையும் சொன்னேன். அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு என்னையே உர்ர் என்று பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி பன்னிரண்டு. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மௌனமானான். அவனின் திருமண ஏற்பாடுகள் கூடியவிரைவில் செய்யப்படுவதற்கான ஆயத்தவேலைகள் வேறு நடந்துகொண்டிருந்த தருணம் அது.

அவனின் கண்கள் பனித்தன. “அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா..!?”

“ஒண்ணும் வேண்டாம், நீ கிளம்பு, விடியும்போது சொல்கிறேன்.. என்னமோ அவரசம் போலிருக்கு.. சித்தப்பா உன்னை விரைவாக வரச்சொன்னார்.”

அவன் கிளம்புகிறபோது வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது, மீண்டும் அம்மாவின் குரல்.. “ஏய், யாரு.?”

“ யாருமில்லை’ம்மா.. தம்பி வெளியே கிளம்பறான்..” சொன்னேன். அம்மா எழுந்து வெளியே வந்தார். அம்மாவின் முகத்தைப் பார்க்க மனமில்லாமல் விரைவாகக் கிளம்பிப்போனான் தம்பி.

நான், தூக்கம் வருவதைப்போன்ற பாசாங்கான ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தேன்.

அம்மாவிற்கு சந்தேகம். ஏன் இந்த நேரத்தில் அவன் வெளியே கிளம்பிப்போகிறான்.! என்ன நடக்கிறது இங்கே.!? யார் அழைத்தார் உனக்கு.? அப்பாவிற்கு எதாவது ஆகிவிட்டதா? என்கிற குழப்பங்கள் எழாமல் இல்லை. முகத்திலும் ஒரு வித கலவரம் கவ்விக்கொண்டிருந்தது.

“அட, ஒண்ணுமில்லைம்மா.. தம்பிக்கு ஆயிரம் நண்பர்கள் நேரங்கெட்ட நேரம் அழைப்பார்கள்.. உங்களுக்கு ஏன் குழப்பம்..? போயிப்படுங்க.” என்று தைரியம் சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்துகொண்டு மௌனமாக அழுதேன். துக்கம் தொண்டையை அடைக்க, குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுத்தேன். வுவக் வுவக் என்கிற சத்தம் கேட்டவுன், மீண்டும் அம்மா எழுந்துவந்தார். பால் கலக்கிக்கொடுத்தார்.

விடியற்காலையை நெருங்கியது பொழுது. மணி மூன்று இருக்கும். நான் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன் போலிருக்கிறது..! தொலைப்பேசி மணி மீண்டும் ஒலித்தது. ஏதோ ஒரு கெட்டக்கனவில் சஞ்சரித்தவள் போல், எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு சாவுமணி சத்தம் கேட்பதைப்போல் இருந்ததால்.. கொஞ்சம் தாமதமாக தொலைப்பேசியை எடுக்க நேர்ந்ததால், தங்கை எடுத்துவிட்டாள் அழைப்பை. அவளின் காதிற்கு தகவல் சென்றுவிட்டது.

தொலைவில் வசித்த அம்மாவின் தங்கையின் கணவருக்கு செய்தி சென்றிருப்பதால், அவர் விட்டிற்கு அழைத்து, பிணம் எத்தனை மணிக்கு வருமென்று கேட்டுவிட்டார். அதுவும் தூக்கக்கலக்கத்தில் இருக்கும் செய்தியறியா தங்கையிடம்.!

அவள் குழப்பமாகி.. “பிணமா? யாருடையது? யார் நீங்க? என்ன பிரச்சனை? என்று பதற்றத்துடன் கேட்க. அவர் உடனே, விஷயமே தெரியாதா உங்களுக்கு? என்ன அநியாயம் இது. எங்களுக்குத்தகவல் வந்துவிட்டதே, என்று சொல்லி, நான் இரவெல்லாம் காத்து வந்த ரகசியத்தை உடைத்துவிட்டார்.

பிறகு என்ன? ஒரே கூச்சல்தான். அய்யோ அப்பா தவரிட்டாராம், அம்மா அம்மா..அக்கா அக்கா.. என்று அலற ஆரம்பித்தாள். எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன். முடியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரக்கப்பறக்க ஓடிவர... கொஞ்சநேரத்தில் திபுதிபுவென கூட்டம் வீட்டுவாசலில்.அந்தக் காலைப்பொழுதிலேயே.

காலை மணி நான்கு இருக்கும்.. அப்பா வந்தார் பெட்டியில். பிணம் என்றார்கள் எல்லோரும். 

ஆம் பிணம்தான் வந்தது. 

எல்லாம் உனக்காக

முகர்ந்து பார்த்தது
மோதிப்பார்த்தது
சீண்டி பார்த்தது
சீறியும் பார்த்தது
கத்திப்பார்த்தது..

இரண்டு மூன்று முறையல்ல
பல முறை சுற்றி
வலம் வந்தும் 
செய்வதறியாது
அமைதியாக திரும்பிச் சென்றது
பூனை...

அசைபவரிடம் 
ஆசை கொள்வது தான் 
உயிர்களின் இயல்பு(போ)!?

சிலவேளையில்
உன் முன்னே, நான்
அசைந்து கொண்டே... 
செத்த எலியாக...

உன் அமைதியான
சீண்டல் வேண்டி....!!!

வலிகளில் உதிக்கின்ற
சில கிறுக்கல்களுக்காக

அதுவும் உனக்காக....!