திங்கள், நவம்பர் 28, 2011

அப்பாவின் மரணம்

இது தான் கதை (15/7/1992)

கடுமையான மழை அன்று. மருத்துவமனை வளாகத்தில் நாங்கள் எல்லோரும்.

சித்தப்பா திட்டினார். " போங்க எல்லோரும், விட்டிற்கு, படித்த பிள்ளைகள்தானே.! பத்து நாளாக ஓயாமல் மூக்கைச் சிந்திகொண்டு.., பாவம் அம்மா, நிம்மதியே இல்லாமல் இருக்கின்றார், நீங்கள்தானே ஆறுதல் சொல்லணும் ..!  அப்பா நிச்சயம் நாளை வந்துவிடுவார், டாக்டர்கள் உத்தரவாதம் கொடுத்துவிட்டார்கள். கிளம்புங்கள் வீட்டிற்கு". சித்தப்பாவின் ஆறுதலான ஆவேஷம். 

சரி என, மருத்துவமனையை விட்டு வீட்டிற்குக் கிளம்பினோம், செல்லும் வழியில் கடையினில் காரை நிறுத்தி,  முப்பது முட்டைகளை வாங்கினோம். இரவு உணவிற்காக. வீட்டிற்கு வந்தவுடன் அதை குழம்பு வைத்தோம்..எல்லோரும் சாப்பிட்டார்கள், அதான் நாளை அப்பா வந்திடுவாரே.என்கிற நம்பிக்கைக்கீற்றுகள் துளிர்த்தவண்ணமாக!

இரவு மணி, பதினொன்று முப்பது இருக்கும், ஒரு அழைப்பு வந்தது. ஒருவாரகால தூக்கமின்மையால் எல்லோரும் விரைவாகவே உறங்கச்சென்று விட்டார்கள். அப்பா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில்.

தொலைப்பேசி அழைப்பினை நான் தான் எடுத்தேன். மறுமுனையில் சித்தப்பாவின் குரல்.  'அப்பா தவரிவிட்டார், நாளை காலை தான் கொண்டு வருவோம், ப்ளீஸ் இப்போது இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம்..அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தூங்குவார்கள், அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும். அமைதியாய் இரு. செய்யவேண்டியவைகளையெல்லாம் நாங்கள் இங்கிருந்தே கவனித்துக்கொள்கிறோம். கிளம்பும்போது நான் மீண்டும் அழைக்கிறேன். பார்த்து, கவனம்..சரியா..!” 'என்கிற குண்டைத்தூக்கிப்போட்டு தொலைப்பேசியை வைத்தார். 

அமைதியாய் இருந்தேன். எதிப்பார்த்த மரணமே என்றாலும், குடும்பத் தலைவனின் மரண செய்தி அஸ்வாரத்தை ஆட்டம் கொள்ளத்தான் செய்தது. அப்பாவிற்குப்பிறகு வாழ்க்கை எப்படியிருக்கப்போகிறது என்கிற கலக்கத்தில் நான். ஐம்பத்தைந்து வயதில் மரணமென்றால், எங்களின் வயது ஏறக்குறைய இருபத்தைந்திற்கும் குறைவே..! ஏழுபேர் கொண்ட பிள்ளைகள், சித்தப்பா அத்தை அம்மா தாத்தா என ஒரு குட்டுக்குடும்பமாகவே வாழ்ந்த குடும்பத்தில் அதன் தலைவன் இல்லையென்றால்..! என்னாகுமோ.. பீதியோடு படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன் அன்றிரவு.  

அம்மாவின் குரல் மெதுவாய்... “யாரு புள்ள போன்ல?” 

“அப்பாவின் நல விசாரிப்பு அழைப்பு’ம்மா,” என்று சொல்லி சமாளித்தேன். 

“ ஓ... சரி போய்ப்படு..” என்று சொல்லிய மறுநொடி மெள்ளியதாய் ஒரு குறட்டைச் சத்தம். தூங்குகிறார்போலிருக்கு. அசதிதான்.

எல்லோரும் தூங்கினார்கள். நான் மட்டும். தூங்கவில்லை ! எப்படித்தூக்கம் வரும்!?  மீண்டும் ஓர் அழைப்பு வந்தது. தம்பியை உடனே வரச்சொல், என. அப்போதெல்லாம் கைப்பேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. ஒவ்வொரு அழைப்பும் மருத்துவமனை பொதுதொலைப்பேசியின் மூலமாகவே வந்துகொண்டிருந்தது.

தம்பியை எழுப்பினேன். தடாபுடாவென்று எழுந்தான். கடிகாரத்தைப் பார்த்தான். என்ன.. என்ன.. என்ன? என்கிற கூச்சலோடு. உஸ்ஸ்ஸ்ஸ்.. சத்தம்போடாதே. சித்தப்பா அழைத்தார் என்கிற விவரத்தைச்சொல்லி, அப்பா இறந்துவிட்டார் என்கிற உண்மையையும் சொன்னேன். அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு என்னையே உர்ர் என்று பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான். மணி பன்னிரண்டு. தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மௌனமானான். அவனின் திருமண ஏற்பாடுகள் கூடியவிரைவில் செய்யப்படுவதற்கான ஆயத்தவேலைகள் வேறு நடந்துகொண்டிருந்த தருணம் அது.

அவனின் கண்கள் பனித்தன. “அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொன்னா..!?”

“ஒண்ணும் வேண்டாம், நீ கிளம்பு, விடியும்போது சொல்கிறேன்.. என்னமோ அவரசம் போலிருக்கு.. சித்தப்பா உன்னை விரைவாக வரச்சொன்னார்.”

அவன் கிளம்புகிறபோது வீட்டின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது, மீண்டும் அம்மாவின் குரல்.. “ஏய், யாரு.?”

“ யாருமில்லை’ம்மா.. தம்பி வெளியே கிளம்பறான்..” சொன்னேன். அம்மா எழுந்து வெளியே வந்தார். அம்மாவின் முகத்தைப் பார்க்க மனமில்லாமல் விரைவாகக் கிளம்பிப்போனான் தம்பி.

நான், தூக்கம் வருவதைப்போன்ற பாசாங்கான ஒரு கொட்டாவியை விட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தேன்.

அம்மாவிற்கு சந்தேகம். ஏன் இந்த நேரத்தில் அவன் வெளியே கிளம்பிப்போகிறான்.! என்ன நடக்கிறது இங்கே.!? யார் அழைத்தார் உனக்கு.? அப்பாவிற்கு எதாவது ஆகிவிட்டதா? என்கிற குழப்பங்கள் எழாமல் இல்லை. முகத்திலும் ஒரு வித கலவரம் கவ்விக்கொண்டிருந்தது.

“அட, ஒண்ணுமில்லைம்மா.. தம்பிக்கு ஆயிரம் நண்பர்கள் நேரங்கெட்ட நேரம் அழைப்பார்கள்.. உங்களுக்கு ஏன் குழப்பம்..? போயிப்படுங்க.” என்று தைரியம் சொல்லிவிட்டு, அறைக்குள் புகுந்துகொண்டு மௌனமாக அழுதேன். துக்கம் தொண்டையை அடைக்க, குமட்டிக்கொண்டு வந்தது. வாந்தி எடுத்தேன். வுவக் வுவக் என்கிற சத்தம் கேட்டவுன், மீண்டும் அம்மா எழுந்துவந்தார். பால் கலக்கிக்கொடுத்தார்.

விடியற்காலையை நெருங்கியது பொழுது. மணி மூன்று இருக்கும். நான் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன் போலிருக்கிறது..! தொலைப்பேசி மணி மீண்டும் ஒலித்தது. ஏதோ ஒரு கெட்டக்கனவில் சஞ்சரித்தவள் போல், எங்கோ ஒரு மூலையில் எதோ ஒரு சாவுமணி சத்தம் கேட்பதைப்போல் இருந்ததால்.. கொஞ்சம் தாமதமாக தொலைப்பேசியை எடுக்க நேர்ந்ததால், தங்கை எடுத்துவிட்டாள் அழைப்பை. அவளின் காதிற்கு தகவல் சென்றுவிட்டது.

தொலைவில் வசித்த அம்மாவின் தங்கையின் கணவருக்கு செய்தி சென்றிருப்பதால், அவர் விட்டிற்கு அழைத்து, பிணம் எத்தனை மணிக்கு வருமென்று கேட்டுவிட்டார். அதுவும் தூக்கக்கலக்கத்தில் இருக்கும் செய்தியறியா தங்கையிடம்.!

அவள் குழப்பமாகி.. “பிணமா? யாருடையது? யார் நீங்க? என்ன பிரச்சனை? என்று பதற்றத்துடன் கேட்க. அவர் உடனே, விஷயமே தெரியாதா உங்களுக்கு? என்ன அநியாயம் இது. எங்களுக்குத்தகவல் வந்துவிட்டதே, என்று சொல்லி, நான் இரவெல்லாம் காத்து வந்த ரகசியத்தை உடைத்துவிட்டார்.

பிறகு என்ன? ஒரே கூச்சல்தான். அய்யோ அப்பா தவரிட்டாராம், அம்மா அம்மா..அக்கா அக்கா.. என்று அலற ஆரம்பித்தாள். எவ்வளவோ தடுத்துப்பார்த்தேன். முடியவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அரக்கப்பறக்க ஓடிவர... கொஞ்சநேரத்தில் திபுதிபுவென கூட்டம் வீட்டுவாசலில்.அந்தக் காலைப்பொழுதிலேயே.

காலை மணி நான்கு இருக்கும்.. அப்பா வந்தார் பெட்டியில். பிணம் என்றார்கள் எல்லோரும். 

ஆம் பிணம்தான் வந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக