வியாழன், நவம்பர் 24, 2011

குண்டுப்பாப்பா

சொரி சிரங்கு வந்தவன் கை சும்மானாலும் இருக்காது என்பதைப்போல, காணுகின்ற சுவாரஸ்யங்களை பகிர்ந்துபழகியவர்களின் கையும் சும்மா இருக்காதுங்கோ. 

இன்று மருத்துவமனையில் (Cardiology Ward) ஒரு சம்பவம். செகண்ட் கிளாஸில் 4பேர் ஒரு அறையில். அதில் ஒரு பெண்மணி 66 வயது, வாய் சும்மாவே இல்லை..! எல்லோரையும் நலம் விசாரிப்பது, குடும்பம் பற்றி பேசுவது என ஒரே கலகலப்பு..பின்ன, வேற வேலை..! 

அந்த அறையில் நேற்று இரவில், புதிதாக ஒரு பெண் (40வயது மதிக்கத்தக்க) இருதய வலியோடு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். கூடவே அவரின் மகள் 16வயது..(நல்ல குண்டு, பாப்பா).. அவரிடம் எல்லாவற்றையும் விசாரித்தார் இந்த ’லொட லொட’ அம்மணி.

இன்று மதியம், நேற்று புதிதாக வந்தவரின் உறவுகள்  நலம் விசாரிக்க வந்திருந்தார்கள். அவர்களோடு இந்த லொட லொட அம்மணியும் சேர்ந்துக்கொண்டார், ஒரே கும்மிதான். புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அவர்களின் கதைகளைக்கேட்டுக்கொண்டே... எனக்கும் சிரிப்புதான்..!

'' ஏன் பாப்பா, நீ, இவ்வளவு குண்டா இருக்கே? நாங்க எல்லாம் ஓடி ஓடி வேலை செய்தே, இதயத்தில் அடைப்பு, அப்படி இப்படின்னு நாள் கணக்கா வச்சிருக்கானுங்க, உங்களுக்கெல்லாம் 20வயதிலே எல்லா எடத்திலேயும் அடைப்பு வந்திடும் போலருக்கே!’’ அந்த குண்டு பெண்ணுக்கு முகம் உர்ர்ர் என்று ஆகிவிட்டது..!


பிறகு, அந்த லொட லொட அம்மணி, ஏம்மா உனக்கு எத்தனை பிள்ளைகள் என கேட்டார், வந்திருந்த உறவினர் ஒருவர், மூணு பொண்ணுங்க, ஒரு ஆண் பிள்ளை என்றார்.

’’பிள்ளைகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள்?’’

’’பையனுக்கு 21வயது, ரெண்டு பொண்ணுங்களும் படிக்கறாங்க, மூனாவது பெண், மூன்று மாத கைக்குழந்தை..’’

அமைதியாக இருந்தார் அந்த லொட லொட அம்மணி.

எல்லோரும் சென்று விட்டார்கள்...
எங்களின் அறையில் ஒரே அமைதி நிலவியது...
நோயாளிகள் அனைவரும் உறக்கத்தில் இருந்தார்கள்....

அந்த அம்மணி, புதிதாக வந்துள்ள இந்த இருதய நோயாளியிடம் சென்று..

‘ஏம்மா, 21வயது மகனை வைத்துக்கொண்டு.. எப்படி உன் குழந்தைக்கு பால் கொடுப்ப? எப்படி இது நடந்தது, இந்த வயதில், அதுவும் வயது வந்த புள்ளைகளை வைத்துக்கொண்டு.......’’ கேட்டார்

பதில் வரவில்லை.. நெஞ்சு வலி கூடியிருக்கும்

நான் வாய்விட்டே சிரித்து விட்டேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக