வெள்ளி, டிசம்பர் 30, 2011

அறிவிப்பாளர்கள்

மேடையில் அறிவிப்பாளர்
மற்றவர் பேசுகிறார்
மைஃக் அவரிடம் செல்கிறது
இவர் சிரிக்கிறார்
மைஃக்கை இவரின் வாயருகே வைத்துக் கொண்டு....
இவரின் சிரிப்பொலியையும்
நாம் கேட்கவேண்டும்
ஏன்னா, இவர் தான் அறிவிப்பாளர்..



கவிதையும் கழிசடையும்

மார்வாடியிடம் நகையை அடகு வைத்தேன்
திருப்பிக்கொள்ள முடிந்தது
மார்வாடி மகளிடம் மனதை அடகு வைத்தேன்
மூழ்கிப்போய் விட்டது

சுஜாதா..

படித்ததில் சிரித்தது

கண்ணாடி

என்னுடைய கவலையென்பது
அவருடைய கவலை
அவருடைய கவலையும்
அதுவே.

என்னுடைய மகிழ்ச்சியென்பது
அவருடைய மகிழ்ச்சி
அவருடைய மகிழ்ச்சியும்
அதுவே.

என்னுடைய விதண்டாவாதம் என்பதும்
அவருடைய விதண்டாவாதம்
அவருடைய விதண்டாவாதமும்
அதுவே.

ஒரே வீட்டில்
ஒரே துருவம்



வியாழன், டிசம்பர் 29, 2011

கருணை காட்டு

மக்கள் ஓசையில் வந்தது.. 2007

ஏய்
விவஸ்தைகெட்ட
வெயிலே..

என் கண் முன் வந்து நிற்காதே
உன் வருகைக்காகக் காத்திருக்கும்
மென்மையான மலர் அல்ல
நான்.!

காலையில்
கண்ணெதிரே தோன்றி
சாலையை இருளடையச் செய்து
என்னை அலைக்கழிக்க வைப்பதில்
உனக்கென்ன அப்பேர்பட்ட மகிழ்ச்சி!?

தங்கப்பல்லைக் காட்டி
இளித்து நிற்கும் உன்
பிரகாசத்தை
அவசர யுகத்தில்
அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் ரசிக்க முடியவில்லை..

ஒரு நொடி அசந்திருப்பின்
உன் ஒளிக் கதிர் தாக்குதலால்
ஓர் உயிரைக் கொன்று
எம பாதகியாயிருப்பேனே!

பழி பாவத்திற்கு அஞ்சி
கெஞ்சிக்கேட்கும்
எனக்குக் கருணைக் காட்டு..

கொஞ்ச நேரம் மேகத்திற்குள்
ஒளிந்துக்கொண்டு
வழிவிடு சூரிய பகவானே
நான் வேலைக்குப் போகணும்.

மனிதன் இல்லை-நோய் பயமுமில்லை

H1N1 பயங்கரம் பற்றிய அறிவிப்பு எங்கு பார்த்தாலும். எங்க ஆபிஸிலும் அறிக்கைகள், முக மஸ்ஃக் கள் வினியோகம் கட்டுக்கட்டாக. அரசாங்கமும் செய்தி வழி, அதன் பயங்கரத்தைப் போதித்த வண்ணமாக..

அப்போது எழுதிய எனது கிறுக்கல் இது - மக்கள் ஓசை 2008


நாலாப் பக்கமும் மரம்
நடுவில் நான்

வானம் தெரியவில்லை
வானவில் போல்
வர்ணக் கம்பளமாக
இலைகள்
கதிரவனையே மறைத்து..

கிளைகளை உரசவிட்டு
சேட்டைகள் செய்யும்
குரங்குகளும் அணில்களும்
ஒரு புறம்..

சல சல சத்தம்
மிக அருகில்
அது அருவியல்ல
எங்கிருந்தோ ஓடிவரும்
கால்வாயின் நீரோட்டம்

எதையோ வேண்டி
காகம் கரைவது கூட
குயிலின் கானமாக
காதுகளுக்கு இனிமை

நனைந்தும் நனையாத
மரங்களிலிருந்து
வடியும் நீர் கூட
இனம் புரியாத
இதம்..

முக கவசத்தை அகற்றி விட்டு
மூச்சை இழுத்து
சுதந்திரமாக
சுவாசித்துக் கொண்டிருந்தேன்
H1N1 பயமில்லாமல்

குண்டுசட்டி நிருபர்கள்

தென்றலில் வந்த எனது கட்டுரை (வாசகர் கடிதம்) -2008

நமது நிருபர்களின் நிலையை நினைக்கின்ற போது, பயங்கர நகைச்சுவைதான் போங்க. !

இங்கே உள்ள நிருபர்களில் பெரும்பாலானோருக்கு ஆராயும் திறன் அறவே இல்லை என்கிற உண்மையை எவ்வளவு நாள் தான் மனதிலேயே பூட்டி வைப்பது? இவர்களின் செய்திகள் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது என்பதை நான் சொல்லித்தான் பிறருக்குத்தெரிய வேண்டுமா என்ன!

கண்ணால் கண்டதையும் காதால் கேட்பதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியோ அல்லது அதில் கண், காது, மூக்கு வைத்து ஜோடித்துச் சொல்வதையோதான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள். சொல்லப்படுகிற தகவல்களில் ஓர் ஆழமான ஆராய்ச்சியோ அல்லது விசாலமான பார்வையோ இருப்பதில்லை. சராசரி வாசகனின் பார்வையை விட, மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருப்பார்கள்.

அதைவிட அதிர்ச்சியூட்டும் விவரம் என்னவென்றால், ஒரு சில நிருபர்கள் (சிலர்தான்) உட்கார்ந்த இடத்திலேயே செய்திகளைச் சேகரித்து எழுதிவிடுகிறார்களாம். ஆச்சிரியமாக இருக்கின்றதல்லவா.! ஆனாலும் இது உண்மை.

சிலரின் செய்திகளால், தனி மனிதனின் தன்மான உணர்வு கூட பாதிக்கப்படுகிறதென்பதும், கேள்விப்பட்ட ஒன்று.

உதாரணத்திற்கு; தலையைச் சொரிந்தால் - பேண் தொல்லையால் திண்டாடுகிறார், என்றும், கொட்டாவி விட்டால் - கூட்டத்தில் குறட்டை விட்டு நன்கு தூங்கினார், என்றும், கண்களைத்துடைத்தால் - சோகம் தாளாமல் பொது நிகழ்வில் கண்ணீர் விட்டுக் கதறியழுதார், என்றும் பரபரப்பாக செய்திகள் எழுதிவிடுவார்களாம்.

பாருங்கள், எப்படியெல்லாம் ஒரு படி மேலே சென்று, அறிவுப்பூர்வமாக யோசித்து கதைகளைச் சேர்த்து செய்தி எழுதுகிறார்கள் என்று. !?

நிருபர்களின் கூர்மையான சமுதாயப்பார்வையையும் அக்கறையையும் கண்டு புல்லரித்த அனுபவமும் உண்டு.

‘புளிய மரத்தில் புள்ளையாருக்குப் பூஜை. அரசமரத்தில் ஆத்தாவிற்கு அருள் வந்தது. மாங்கா மரத்தில் மாரியம்மாளுக்கு மாலைகள் குவிகின்றன. ஆலமரத்தடி கணபதி பால் அருந்துகிறார். வேப்பமரத்தில் பேய், போன்ற விவரங்கள் அரசல்புரசலாக தெரியவந்தால் - பேனா என்கிற கூர் ஆயுதத்தையும், கேமரா என்கிற போர்வாளையும் தூக்கிக்கொண்டு தலைத்தெறிக்க அவ்விடம் நோக்கி ஓடி.. நான், நீ என முந்தி கொண்டு, அந்தச் செய்தியைப் பரபரப்பாக்கிப் பிரபலப்படுத்திவிடுவார்கள். அவர்களுக்கு அது அதிசயம் என்பதால் எழுதிப் பிரபலப்படுத்துகிறார்களா அல்லது உள்ளபடியே அவலம் என்கிற பார்வையில் பதியப்பட்டதா என்பது கூட நமக்குக் குழப்பமாக இருக்கும்.

இதைவிட இன்னொரு மிக மோசமானது - யாராவது ஒரு ஏழைப்பாட்டி, வயிற்றுப்பிழைப்புக்காக ‘கரிபஃப்’ செய்து பிழைப்பு நடத்துகையில், அவரின் செய்கிற வியாபார விளம்பரப் பலகையில் ‘கரிபஃப் விற்கப்படும்’ என்று எழுதிவிட்டால் போதுமே.. `தமிழ் கொலை செய்யும் வியாபாரிகள்’ என்கிற செய்தியோடு, பாட்டியின் புகைப்படமும், அந்த ஒட்டுக்கடையின் புகைப்படமும் ‘கரிபஃப்’பைத் தமிழில் எப்படிச்சொல்வார்கள் என்கிற விளக்கத்தோடு செய்தி ஒன்று வெளிவந்துவிடும். கேட்டால், சமூதாய அவலத்தைக் கண்டு வெகுண்டெழுகிறார்களாம்!

புகைப்பட கலைஞர்களின் நிலையைப் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்களின் எல்லாப் புகைப்படங்களுமே, யாருக்காவது கூஜா தூக்குவதைப்போல் தான் இருக்கும். தமக்கு வேண்டப்பட்டவர்களென்றால், அவர்களை வளைத்து வளைத்துப் பிடித்து அழகாகக் காண்பிப்பார்கள். அரசியல் பிரமுகரென்றால், புகைப்படக் கலைஞருக்கு எல்லாமும் அவர்தான். மேலும் அந்தக் கேமரா கலைஞரை யாராவது ஓரிரு வரிகள் மேடையில் புகழ்ந்து பேசிவிட்டால் போதும். ஃக்ளோசப்பில் அவர்கள் தான், எல்லாக் கோணத்திலும் அவர்கள் இருப்பார்கள்.  அதிலேயே நமக்குத் தெரிந்துபோகும் அவர்களின் சீரிய சமுதாயப் பார்வையும் உள் நோக்கமும்.!

புதுமைச் செய்திகளால் கண்களை அகல விரியவைக்கும் ஆய்வுகள், புல்லரிக்கவைக்கும் புதிய தகவல்கள், உலகையே புரட்டிப்போடும் புகைப்படங்கள், மெய் சிலிர்க்கவைக்கும் கருத்துக்கணிப்புகள், அதிர்ச்சியும் ஆச்சிரியமும் நிறைந்த மர்ம புகைப்படங்கள், விசாலமான வித்தியாசமான பார்வை, அறிவியல் ஆராய்ச்சி, ஆதாரப்பூர்வமான உலகக் குறிப்புகள், விவேகமாக வேகமாக  சிந்திக்கும் திறன் என நித்தம் போராடிக்கொண்டிருக்கும் உலக நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் எங்கே! குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் நமது நிருபர்கள் எங்கே?

(இதையொட்டி, மிக மோசமாக  என்னைத்திட்டித்தீர்த்த கடிதங்களையும் சேகரித்துள்ளேன்.  (விடுவார்களா பின்ன!?) அது வேண்டாம்) ..




ஓஷோவின் தேன் துளிகள்

எனது தொகுப்பு- மக்கள் ஓசையில் வந்தது (2006)

1. உங்களைப் பற்றிய அதிக அக்கறையே, உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.

2. உண்மையை தரிசியுங்கள், விளக்கமளிக்கத்தேவையில்லை.

3. அழாமல், அஞ்சாமல், துணிவுடன், அன்பாகவும் ஆடியும் கொண்டாடியும் வாழ்பவர்களுக்கே மரணம் அழகானது.

4. அநியாயத்திற்குள் நுழையத் தயாராய் இருப்பவர்களால் மட்டுமே வாழ்வைப் புரிந்துக்கொள்ள முடியும்.

5. அறியாததிற்குத் தயாராக - அறிந்ததிற்கு இறந்தவராய் ஆகுங்கள்.

6. வாழ்வு சமயத் தன்மையோடு இருக்கவேண்டும். ஆனால் சமயம் வாழ்க் கூடாது. தெய்வத்தன்மையே அவசியம். தெய்வம் அவசியமில்லை.

7. தொண்டு செய்தல் கேவலமான சொல். என்னிடம் உள்ளதை பல வழிகளில் பகிரிந்துக் கொள்கிறேன் என்பதுவே சிறந்தச் சொல்.

8. குழந்தையாய் இருங்கள். சிறுபிள்ளைத்தனம் வேண்டாம்.

9. உண்மையாய் இருங்கள். அஞ்சாமையை ஊட்டும்.

10. பிராத்தனை ஒரு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. கோவிலுக்குச் செல்பவர்கள் கடினமானவர்களாக மாற வேண்டிய அவசியமில்லை.

11. ஆழமாய் வாழுங்கள், முழுமையாய் வாழுங்கள். அனைத்தையும் அனுபவித்து வாழுங்கள். அப்போதுதான் விழத்தயாராய் இருக்கும் கனிந்த பழம்போல், மரணம் வந்து உங்களைத் தழுவும் போது, நீங்கள் தயாராக இருக்க முடியும்.

12. ஆதாரப்பூர்வமாக வாழுங்கள். முகமூடியை அகற்றுங்கள். அவை உங்களது இதயத்தை அழுத்தும் சுமை. பொய்மையானவற்றையெல்லாம் விடுங்கள். வெளிப்படையாக இருங்கள். அது சிரமம் கொடுக்கக் கூடியது என்ற போதிலும், அந்தச் சிரமம் அருகதை உள்ளதே. ஏனெனில் அந்தச் சிரமத்திற்குப்பிறகு நீங்கள் பக்குவப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் வாழ்வு அதன் புதுமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

13. புரிந்துக் கொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சிந்திக்கும் உணர்வோடு, விழிப்புடன் இருப்பவனே. விழிப்புணர்வு ஒன்றே மதிப்பிற்குகந்தது. மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

14. நிர்வகிக்கக் கூடியதல்ல அன்பு, அது தானாகவே நடக்கும் ஒரு நிகழ்வு. அன்பை நிவகிக்க முயன்றால், அந்தக் கணத்திலேயே அது இல்லாமல் போய்விடும்.

நன்றி திரு. இராஜேந்திரன் ஞாயிறு பொறுப்பாசிரியர்.

புதன், டிசம்பர் 28, 2011

ஏன் பெற்றாய்?

ஏழெட்டு பிள்ளைகளை
ஏன் பெற்றாய்?

பரம ஏழை
இல்லை என்று தெரியும்
முடியாது என்று புரியும்
எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை
வருங்கால சேமிப்பும் இல்லை
ஓயாத கஷ்டமும்
பிச்சைக்கார புலம்பலும்..!!

ஏன் பெற்றாய்
வருடத்திற்கு ஒரு பிள்ளை?

பள்ளியில்
இலவச சத்துணவு உண்பதற்கும்
இலவச காலணிகளை வாங்குவதற்கும்
இலவச சீருடைகள் பெறுவதற்கும்
தீபாவளி பொங்கல்
இலவச பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதற்கும்
ஏழை மாணவர்களின் வரிசையில்
முதலில் நாங்களும்..!

ஏன் பெற்றாய்
நிறைய குழந்தைகளை?

ஆசைப்பட்டது நிறைவேறாது
பலகாரங்களும் பதார்த்தங்களும்
பாதி பாதியாய், திருப்தியில்லாமல்..
பானையில் சோறு காலியென்றால்
பசியோடு படுக்க வேண்டியது தான்
கோபம் பீறிடும்..
உங்களுக்கு வந்து பிறந்தோமே
எங்களுக்குத் தலையெழுத்தா..!?

ஏன் பெற்றாய்
இத்தனைக் குழந்தைகளை?

சிறுவயதிலேயே
கனமான வீட்டு வேலைகள்
கஷ்டமான காட்டுவேலைகள்
புகையைக் கக்கும்
கண்களைக் கலங்க வைக்கும்
முகத்தைக் கறுமையாக்கும்
விறகடுப்பில் நித்தம்
போராட்டமே..!

ஏன் பெற்றாய்
வதவத என பிள்ளைகளை?

பைப் அடியில்
வெயிலில் காய்ந்து
நெஞ்சு எலும்பு தெரிய
தோம்பு தோம்பாக
தண்ணீர் நிறைப்பது
அன்றாட கடமை..
படிக்கக்கூட நேரமில்லாமல்
ஓய்ந்து களைத்து...

ஏன் பெற்றாய்
எங்களை?

ஏக்கமாக இருக்கும்..
பொறாமையாக இருக்கும்
தனியாக, செல்லமாக, சுத்தமாக, சுதந்திரமா..
செல்வச் செழிப்பில் வளரும்
குடும்பத்தின் ஒரே பிள்ளையைப் பார்க்க..

ஏன் பெற்றாய்
இந்த கொடுமைகளை நாங்கள் அனுபவிக்க...
என் தாயே!!!

கோபம் வந்தது அன்று..!!!

ஆனால் இன்று!

பிரச்சனையென்றால்
நானிருக்கேன், கவலைப்படாதேன்னு
ஓடோடி வரும் தம்பிகள்..

அய்யோ என்ன வாழ்க்கை!?
என அலுத்துக்கொள்ளும் போது
ஆறுதலாய் வருடி அரவணைக்க அக்காள்..

படித்ததைப் பகிர்ந்துக் கொள்ள
தமிழைத்திருத்திக் கற்றுத்தர
கலகலப்பூட்டி மகிழ்வைத்தர
தரமான தங்கைகள்!

சோர்வின் போது
கும்மாளமடித்து
குதூகலிக்க வைக்கும்
கடைக்குட்டி..!

இப்போதைக்கு
வாழ்வின் சுவாரிஸ்யமே
தோள் கொடுத்துத் தூக்கி விடும்
உடன் பிறப்புகள் தான்.!

தாயே..
இப்போது உன் மேல் கோபமில்லை
எவ்வளவு போராட்டங்களை
நீ சந்தித்திருந்தாலும்..
நோய் நொடியில்லாமல்
கண்டிப்புடன்
கண்ணின் இமைபோல்
எங்களைக் காத்து வளர்த்து
கரை சேர்த்து விட்டாயே.. !

உன் பாதங்களை
முத்தமிடுகிறோம்

நன்றி அம்மா.!

(தமிழ் நேசன் 2007- அன்னையர் தின சிறப்பு இதழில் வந்தது)
நன்றி ப. சந்திரகாந்தம் - முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர்.






கொஞ்ச நேரம் நில்லு

(மார்ச் 2010) மக்கள் ஓசையில் பிரசுரமான குட்டிக்கதை
நன்றி மக்கள் ஓசை திரு. இராஜேந்திரன் -
ஞாயிறு பெறுப்பாசிரியர் - திரு. சின்னராசு


அலுவலகத்தில் - ஆங்கிலத்தில் ஓர் உரையை நிகழ்த்த எப்படியெல்லாம் வார்த்தைகளைக் கோர்க்கலாமென்கிற அகப்பக்கத்தை, குகூளில் (கணினியில்) ஆரய்ந்துகொண்டு, அதனின் குறிப்புகளை ஒரு ஏட்டில் குறித்துக்கொண்டிருந்தாள் ரேணு. பக்கத்திலலுள்ள தொலைப்பேசி அலறியது..

“ஹாலோ! ” மறுமுனையில் வனிதா.

“ஹாலோ ரேணு, நான் தான் வனிதா!”

அறிமுகம் செய்துகொண்டாலும், அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இருவரும் நல்ல தோழிகள். ஹாலோ என்றவுடன், வனிதாதான் அழைப்பில் என கண்டுப்பிடிக்கும் அளவிற்கு, வனிதாவில் குரல் ரேணுவிற்குப் பரிச்சயம்.

வனிதா, அடிக்கடி ரேணுவுடன் தொலைப்பேசியில் பேசுபவள். குடுமபப் பிரச்சனைகள், வாழ்வின் குறை நிறைகள் என எதையாவது பகிர்ந்த வண்ணமாகவே இருப்பாள் வனிதா.

சில வேளைகளில், ரேணுவிடன் நன்கு வாங்கிக் கட்டிக்கொண்டாலும், இருவரும் இணைபிரியா தோழிகளே! பள்ளிப் பருவம் தொடங்கி இன்றுவரை நட்பு தொடர்வதால், உரிமையோடு கடித்துக்கொண்டாலும், ச்சீ என திட்டிக்கொண்டாலும் நட்பை முறித்துக்கொள்ளாமல் தொடர்ந்தார்கள் தோழிகள்.

“பிஸியா ரேணு?”

“ இல்லை வனிதா, போஸ் எல்லோரும் போர்ட் மீட்டிங்க் போயிட்டார்கள், கணினியில் கொஞ்ச........” என்று ரேணு சொல்லி முடிப்பதற்குள், வனிதாவின் அலுவலகத் தொலைப்பேசி ஒன்று அலறியது.

“நில்லு கொஞ்ச நேரம்..!”
என்று சொல்லி, வந்திருந்த அழைப்பை எடுத்துப்பேசலானாள். “ஆங்.. சொல்லுங்க..ம்....ம்.....ம்.....ம்ம் ஒகே  ஒகே” என்று கூறிவிட்டு, ரேணுவிடம் வந்தாள்..

“ ஒரே மயக்கமா இருக்குதுன்னு, டாக்டர்கிட்ட போனேன் ரேணு, அவர் முழுமெடிக்கல் செஃக் ஆஃப் செய்துவிட்டு, குண்டைத் தூக்கிப்போ.....” முடிப்பதற்குள், மீண்டும் தொலைப்பேசி அழைப்பு.

“நில்லு கொஞ்ச நேரம்..”

“ ஓ..சொல்லுங்கம்மா, இந்தச் சொந்தக்காரங்களே அப்படித்தான், சரிம்மா.. நான் மாமா கிட்டே பேசறேன், வருத்தப்படாதிங்க.., நான் அப்புறம் கூப்பிடறேன்..” என்று சொல்லி மீண்டும் ரேணுவிடம்..

“பாரு’லா, அம்மாவே கஷ்டப்ப்டறாங்க - அவங்க கிட்டப்போய், ‘மாமா செத்துட்டாரு, மச்சான் செத்துட்டாரு’, கருமாதி செய்யணும், முறை செய்யணும், பணம் சேர் பண்ணுன்னு தொல்லை பண்ணுகிறார்கள். சொந்தக்காறங்களே இப்படித்தான்.. சரி, நம்ம விஷயதிற்கு வருவோம், எனக்கு பிரஷர் அதிகமாயிடுச்சாம்! நூற்றுஎண்பதைக் காட்டுகிறதாம்.. சுகரும் எட்டு ஆயிடுச்சு’லா.... அதான் கொஞ்சம் நடந்தாலே இப்போதெல்லாம் அதிகமா மூச்சு...”

மீண்டும் ஒரு அழைப்பின் அலறல்...

“ கொஞ்ச நேரம் நில்லு..”

“ஹாலோ, ம்ம்ம்.. என்னது..இன்னும் போய் சேரலையா? போன வாரமே அனுப்பிய ஷிப்மெண்ட்!! லொஜிஸ்டிஃக்ல செஃக் பண்ணுங்க... ம்ம்ம்.. இருக்கும் இருக்கும், கஸ்டம்ஸ்ல ஏதும் பிரச்சனையோ? தொலைஞ்சோம்.. ம்ம்ம்.. ஐ வில் கால் யூ லெட்டர்..”

மீண்டும் ரேணுவிடம்.. “ஷிப்மெண்ட் பிரச்ச்னையெல்லாம் என் தலையில், கொடுப்பது ஒரு வேலை, தலையில் கட்டுவது பல வேலைகள்.. ஓயாது’லா இவனுங்களோட... ” என அலுத்துக்கொண்டு, “ஆமாம்,நான் எங்கு விட்டேன்?” தொடர்ந்தாள் வனிதா.

”ஆங்.. அதிகமா மூச்சு.. பிளட் செஃக் பண்ணி பார்த்துட்டு, கொலஸ்ட்ரோலும் 5.6 க்கு வந்திருச்சாம்.. சாப்பாடு கண்ட்ரோல் பண்ணச் சொன்னாரு டாக்டரு, முடிந்தால் இரவில் சாப்பிட வேண்டாம், ஓட்ஸ் மட்டும் எடுக்கச்சொன்னார். கண்ட்ரோலா இல்லேன்னா...” மீண்டும் அந்தப்பக்கம் தொலைப்பேசி அலறல்..

“நில்லு கொஞ்ச நேரம்..”

“என்ன கண்ட்ரி கோட் தவறா? ... 0043ன்னு தனே எழுதினேன். ம்ம். ம்ம். இல்லையா? ம்ம் ம்ம்.. ஓ அது ஆஸ்திரியாவுடையதா..!! அப்போ, அஸ்திரேலியா கண்ட்ரி கோட்..?  ம்ம்ம் ஒகே, 0..0..6..1 ஒகே நோட் பண்ணிக்கிட்டேன், மாத்தி எழுதிடறேன். தெங்க்ஸ்..”

மீண்டும் இந்தப்பக்கம் ரேணுவிடம் தொடர்கிறாள் வனிதா...

“கண்ட்ரோல் இல்லேன்னா ஸ்ட்ரோஃக் வந்திடுமாம்.. நம்ம இருவருக்கும் ஒரே வயது தானே, உனக்கு நிலவரம் எப்படி இருக்கு? மெடிக்கல் செஃக் ஆஃப் ஏதும் போனியா? போய்ப்ப் பார்ர்ரு’லா...” என்றவுடன் மறுமுனையில் மீண்டும் அழைப்பு... எதோ சொல்ல வந்த வனிதாவை இடைமறித்த ரேணு...

“அம்மா தாயே கருணை காட்டு, புண்ணியவதி..  நீ, கொஞ்ச நேரம் நில்லு.. கொஞ்ச நேரம் நில்லு’ன்னு அரை மணி நேரமா புலம்பறீயே, ஏதாச்சும் உருப்படியா பேசினாயா? ஒரே ஆள் கூட நின்னு நிதானமா அமைதியா பேசிப்பழகி, மனதை ஒரு நிலையில் வைச்சுக்கப்பாரு.. சுகரும் வராது, பிரஷரும் ஏறாது, எந்தக் கருமமும் வராது.

இங்கே கொஞ்ச நேரம், அங்கே கொஞ்ச நேரம் பேசி, என் தலை 360டிகிரி சுத்திப்போச்சு.! ஓய்வா இருக்கும் போது கூப்பிடு, பேசலாம், இப்போது போன வை.! எனக்கு பிரஷர் வந்து ஸ்ட்ரோஃக் வர மாதிரி இருக்கு..!” என்றுச் சொல்லி, வனிதாவின் தொலைப்பேசி அழைப்பைத்துண்டித்தாள் ரேணு. !









கோபம் இருக்கு

எனக்கும் கோபம் வரும்...

குதூகலித்து மகிழ்ச்சியாக
இருக்கும்
பக்கத்து வீட்டுக்காரர்
மீதும்..

என்னைப் பற்றி
இல்லாது பொல்லாதெல்லாம் பேசும்
மாமியார் நாத்தனார்
மீதும்..

புதுப்புடவை நகைகள்
வாங்கும்
கொழுந்தன் பொண்டாட்டி
மீதும்..

வைர மூக்குத்தி
வாங்கித்தர தாமதிக்கும்
கணவன் மீதும்..

சீரியலில் வரும்
கதாநாயகியைச் சூழ்ந்து
கொட்டமடிக்கும் வில்லிகளின்
மீதும்..

எனது அறிவுரைகளைக்
கேட்டுப் பின்பற்றாத
நண்பர்கள் மீதும்..

முகத்தைக் கருமையாக்கி
சுட்டெரிக்கும் சூரியன்
மீதும்..

ஷாப்பிங் செல்ல இயலாமல்
விடாது பெய்யும்
மழையின் மீதும்..

முகச் சுருக்கங்களையும்
நரைமுடியையும்
வெட்ட வெளிச்சமாகக் காட்டும்
என் கண்ணாடி
மீதும்..

என் வருகையின் போது
உடனே சிகப்பாகும்
சமிஃக்ஞை விளக்கின் (traffc lights)
மீதும்..

தெருவில் அசிங்கமாக
உலாவும் சொரிநாய்
மீதும்..

தலைக்கு மேல்
சதா கரையும் காகங்களின்
மீதும்..

போகிற போக்கில்
என் காலை மோதுகிற
மேஜை நாட்காலி
மீதும்..

தொலைப்பேசி அழைப்பில்
சொல்லப்படும் எண்களைக்
குறிந்து வைக்க
பேனா காகிதம் கிடைக்காத போது
உலகத்தின் மீதும்..

இயலாமையை மறைக்க
வார்த்தைகளைத் தேடி
தினறும் போது
தாய் மொழியின் மீதும்..

என்னை மட்டும்
வாழ்வைக்காமல்
சதா சோதிக்கும்
இறைவன் மீதும்..

உங்களின் ஆதரவு வேண்டி
நான் போடும் பதிவுகளை
கண்டுங்காணாமல் போகும்
உங்களின் மீதும்..

கடுங்கோபம் வரும்
எனக்கும்.....!!!!

நானும் எழுதலாம்..
படைப்பாளியாகலாம்..
எழுத்தாளர்களுக்குக் கோபம்
அவசியமென்கிறார் சுஜாதா.

(எழுதுவதற்குக் கோபம் வேண்டும், என்கிற சுஜாதவின் வரியைப் படித்தவுடன், நான் பட்டியலிட்ட எனது கோபங்கள் இவை..)



செவ்வாய், டிசம்பர் 27, 2011

தழும்பு

மலேசியப் பத்திரிக்கை,  தமிழ் நேசனில் வெளியான எனது கவிதை.
நன்றி முன்னால் ஞாயிறு பொறுப்பாசிரியர் திரு.ப.சந்திரகாந்தம்

பாலர் பருவத்தில்
கல்லில் மேல் விழுந்து
முட்டியில் ஏற்பட்ட
பெரிய காயம்!

பள்ளிப் பருவத்தில்
பால் மரம்
சீவி பழகும் போது
நடு விரலை
உளி கிழித்தது
பெரிய காயம்!

விளையாடும் போது
‘சைக்கிள் பிரேக்’
தொடையில் குத்திய
பெரிய காயம்!

வீட்டு வேலைகளைச்
செய்யும் போது
தகரக் கதவு
பெரு விரலைப்
பதம் பார்த்தது
பெரிய காயம்!

கல்லால் அடித்தாள்
தோழி
வடு உண்டு
தலையில்
அவள் இன்னமும்
எனக்குத் தோழிதான்

இவையெல்லாம் உடம்பில்
பட்ட காயங்களின்
தடயம்

நினைத்துப் பார்க்கும் போது
தழும்பு சிரிப்பைத்தரும்
சம்பவம் நினைவிற்கு வரும்!

ஆனால்
நீ சொன்ன
அந்த ஒரு ’வார்த்தை’
தழும்பில்லை
நினைத்துப் பார்க்க
தடயமில்லை......

இருப்பினும்
நினைத்த மாத்திரத்திலேயே
ஒரு வித அருவருப்போடு
கண்களில் நீர்!

நீயே முயன்றாலும்
இல்லாத அந்தத் தழும்பு
மாறாது
மறையாது!!!


(2009 தமிழ் நேசன்)

யூனிபோர்ம்

குதிரை மெய்த்தாலும்
பன்னி மெய்த்தாலும்
வெள்ளைக்காரன்
அழகு அழகுதான்
ஸ்டையில் ஸ்டையில் தான்

அகராதி

ஆசைதான்
ஆங்கில நாவல் படிக்க!
அகராதியை
எத்தனை முறைதான் திறப்பது!?

புத்தாண்டில்...

எனது 
புத்தாண்டு வாழ்த்து 
எல்லோருக்கும் அல்ல
பட்டியலில் மீண்டும் 
உன் பெயர் தான் முதலில்
உனக்கோ வாழ்த்துச் செய்திகள் பிடிக்காதே! 
பதிலும் வராதே!?
தேடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு குட்டிச்சுவரை!

திங்கள், டிசம்பர் 26, 2011

கவிதைப்பூவின் விவாகரத்து


ஒரு ஊரில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்.
குடும்ப வாழ்வு சந்தோசமாகவே நகர்ந்துகொண்டிருந்தது. இதற்குக் காரணம் அந்த மனைவி. அவள் மிகவும் நல்லவள். கலகலவென்று இருப்பவள், மேலும் அவளுக்குக் கணவனின் அந்தரங்கங்களை ஆராயும் புத்தி வந்ததில்லை. சந்தேகப்படுவதும் அவளின் சுபாவமல்ல. தனிமனித சுதந்திரம் பேணுபவள். அநாவசியமாக பிறரின் விஷயத்தில் மூக்கை நுழைப்பவளும் அல்ல.

கணவன் இதற்கு எதிர்மறையானவன், அமைதியாக இருக்கும் தமது மனைவி எதோ ஒரு கபட நாடகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாகவும் ஒரு நெருடல், சந்தேகம்.

தினமும் அவளை ஆராய்வதோடல்லாமல் எதாவதொரு சங்கடத்திற்கு உட்படுத்திவிடுவான்.

வெளியே எங்கேயாவது சென்று வந்தாள், தொலைபேசியை ஆராய்வான். கைப்பையை ஆராய்வான்.

ஒரு முறை கடைத்தெருப்பக்கம் போனபோது, போனில் ஒரு மிஸ்ட் கால் வந்தது, தங்கைதான் -  உடனே அழைக்க கைப்பேசியில்  போதிய தொகையில்லாத காரணத்தால், காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் உள்ள பொதுத் தொலைப்பேசியில் தமது தங்கையை அழைத்தாள். யதார்த்தமாக அப்பக்கம் காரைச்செலுத்திய அவளின் கணவன் இதைக் கவனித்து விட்டான்.  அவளைக் கையும்களவுமாக (!) பிடித்து விட்டதாக நினைத்து, விவரத்தைப் பெரிதாக்கி ஆர்ப்பாட்டம் செய்யத்துவங்கினான். வீட்டில் ஒரே ரகளை. மனைவிக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. அமைதியாக இந்த ஆர்ப்பாட்டத்தைக் கவனித்துக்கொண்டு, சிரிப்பதா அழுவதா என்று யோசித்த வண்ணமாக இருந்தாள்.

சந்தேகம் வந்தால் என்ன சொல்லி நியாயப்படுத்தினாலும் பிரியோஜனமில்லை என்பது தெரிந்த மனைவி அமைதியாயிருந்தாள்.

ஒரு முறை தோழி ஒருவள், வீட்டிற்கு தொலைப்பேசியின் மூலம் அழைத்திருந்தாள். அழைப்பை எடுத்த கணவன், அவளை தேவையில்லாமல் தாறுமாறாக திட்டித்தீர்த்து விட்டான். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத மனைவிக்குக் கோபம்வரவே, அவனிடம் சற்று கடுமையாக நடந்துகொண்டு, தமது மன ஆதங்கத்தையெல்லாம் கொட்டித்தீர்த்தாள். கையில் கிடைத்ததையெல்லாம் விட்டு வீசினாள், பாத்திரங்களையெல்லாம் உடைத்து நாசமாக்கினாள், இஸ்தீரியா வந்தவள் போல்.!

விவாகரத்து செய்யப்போவதாகக் கூறி மிரட்டினாள். கொஞ்சம் கூட சுதந்திரமில்லாத இந்த வாழ்க்கை தமக்குத் தேவையேயில்லை என்கிற முடிவிற்கு வந்துவிட்டதாகச் சொல்லி அழுதுவடிந்தாள்.  இதைக்கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத கணவன் அரண்டுபோனான். (சுயகௌரவம் என்கிற பாசாங்குப்போர்வையில் வளர்க்கப்பட்டவன் கணவன், ஆக இதுபோன்ற விவாகரத்து விஷயங்களின் அவ்வளவு சுலபமாக சம்மதம் தெரிவித்துவிடுவான் என்பது நிறைவேறாத ஒன்றே.)

திட்டம் தீட்டப்பட்டது;  அன்பு, பாசம், தீராக்காதல், நேசம்,  என் உயிர் நீ என பொறாமைக்குணத்திற்கும் சந்தேகத்திற்கும் அரிதாரம் பூசப்பட்டது.

காலில் விழாத குறையாக, கட்டிப்பிடித்து முத்தமிட்டு அவளை வசப்படுத்தினான். செல்லமே மானே தேனே என்கிற அலங்கார வாசங்களால் வார்த்தைகளை நிரப்பி..

இரவிலும் சில ஊடல்கள், கோபப்படுவதைபோல் பேசி, சமாளிப்புக்கு வந்து, தாவித் தடவி, கவ்வி கலவியில் தான் முடிகிறது.

இதெல்லாம் பழகித்தான் போனது மனைவிக்கு. எவ்வளவுதான் கோபம் வந்தாலும்,  ஆண்கள் தமது சாமார்த்தியத்தையும் பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தி மயக்குகிறபோது, பெண் என்பவள் இந்த இடத்தில் நிச்சயமாக மண்ணைக்கவ்வுகிற நிலைக்குத் தள்ளப்படுகிறாள். அன்பு என்கிற ஆயுதத்தைத் எங்கோ ஓர் இடத்தில் நுழைக்கின்ற போது அவள் கிறங்கித்தான் போகிறாள், மயங்கித்தான் போகிறாள்...

இந்த சம்பவத்திற்குப்பிறகு, அவனின் தொல்லைகளில் இருந்து அவளுக்கு விடுதலை கிடைத்திருந்தாலும், அதுவும் சில காலம்தான் தாக்குப்பிடித்தது. மனைவி மகிழ்கிறாள் என்றால் அவனுக்குத் தேள் கொட்டியதைப் போல் ஆகிவிடுகிறது, அவனில்லாத இடங்களில் அவள் மகிழ்கிறாள் என்றால், அந்த மகிழ்ச்சி அவனுக்கு தீப்போல் சுடுகிறது.

மீண்டும் துளிர் விடுகிறது பொறாமைத்தீ.

பேஸ் புக், ப்ளாக், புத்தக வாசிப்பு, எழுத்துத்துறை என சில சுவாரஸ்யமான விஷயங்களின் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவள் மனைவி. வீட்டை விட்டு வெளியே சென்றால்தானே பிரச்சனை.! வீட்டிலேயே  தமக்குப் பிடித்தமானவற்றில் தமது பொழுதினைக்கழிக்க இவைகளில் மிகுந்த நாட்டம் கொண்டவளாய் மாற்றிக்கொண்டாள்.

பொறுக்குமா கணவனுக்கு..! என்ன இவள், எப்போதுமே உற்சாகமாகவே இருக்கின்றாள்..!

எதோ ஒரு கேள்விக்குறியோடு.. நெருடலாக மீண்டும் பூதக்கண்ணாடிக்கொண்டு ஆராய ஆரம்பித்தான் அவளை. செய்கிற எல்லாவற்றையும் எட்டியெட்டிப் பார்ப்பது, என்ன புத்தகம் வாசிக்கிறாள் என்பனவற்றையும், அப்புத்தகம் சொல்லும் அர்த்தமென்ன என்பதைப்பற்றியும் ஆராயத்துவங்குவான்? செக்ஸ் சம்பந்தப்பட்டதாக இருந்தால், தொலைந்தாள் அவள்.. தேவையா அவளுக்குச் செக்ஸ் எண்ணம்? தாம் இருக்கும் போது செக்ஸ் சிந்தனை அவளிடம் நுழைந்தால், நிலைமை என்னாவது.? என்கிற ஈகோதான் கணவனுக்கு.

இது போன்ற சல்லையான தொல்லைகளைத்தவிர்க்க மனைவி தனிமையை நாடினாள்.  இரவு நேரங்களின் கணவன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்குவது சகஜம். கணவனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பது, செய்தி கேட்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள், சன் மூசிக் என தொலைக்காட்சியின் முன் அமர்ந்துகொள்வது பிடித்தமான ஒன்று.. அதுவும் அதனின் ஒலிகளை சத்தமாக வைத்துக் கொண்டு ரசிப்பதென்பது வழக்கமானதுதான்.

மனைவிக்கு இதெல்லாம் அறவே பிடிக்காது. அவளின் உலகமென்பது தனி, பூக்களும் வாசமும் நிறைந்த அமைதியான நந்தவனம் அவளின் உலகம். தனிமையை சுவாசித்து சுவைப்பவள். வாழ்வே அவளுக்குத் தியானம். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தமது தனிமையை அவள் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டள்.

மாடியில், தமது கணினியுடன் தாம் விரும்பிக்கேட்கும் பாடல், பேஸ் புக் பகிர்வுகள், மொட்டை மாடி காற்று வாங்குதல், சில நல்ல நட்புகளுடன் அளவளாவி மகிழ்வது.. புத்தக வாசிப்பு, பத்திரிக்கைகளுக்கு எழுதுவது போன்ற செய்கைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டாள். இரவு நேரங்களில் தனிமையில் கிட்டத்தட்ட இரண்டு இரண்டரை மணி நேரம்வரை தொல்லைகளற்ற பொழுதினை இப்படிப் பயனான வழியிலே கழிக்கின்றாள். தொலைப்பேசி அழைப்புகளைக் கூட சட்டைசெய்வதில்லை இதுபோன்ற நேரங்களில்..

இரவில் கணவனோடு படுக்கைக்குச் செல்லுகையில் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு..அவனோடு அதுவும் அவன், அவனது அன்றாட நடவடிக்கைகளை முடித்துகொண்டு மேலே வரும் போதுதான், மனைவியும் தயார் நிலையில் எல்லாவற்றையும் மூட்டைக்கட்டியபடி. அவனின் வருகை தெரியும் அவளுக்கு.. டீவி அடைக்கப்பட்டு அமைதியாகும் போது.

கணவனுக்கு மீண்டும் சந்தேகம்.. (எப்போதும் வருவதுதானே!) இவள் என்ன செய்கிறாள் மேல் மாடியில், தான் கீழே டீவியில் நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது, இவள் என்னமோ செய்கிறாள், எதோ ஒரு காரியத்தில் மூழ்கி தன்னை முழுமையாக மறந்துவிடுவதாக எண்ணி, இவளை விடக்கூடாது என முடிவெடுத்து, ஒர் அரிய திட்டத்தைத் தீட்டுகிறான்.

வேலை முடிந்து வந்தவுடன் அவள் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு காரியம் செய்கிறான். 

ஆம், இதுதான் அந்தத் திட்டம், இன்னும் ஒரிரு நாட்களில், அறைக்கே ஹோம் தியட்டர் வரப்போகிறது. எல்லாமும் இனி மாடியிலேயே நிகழப்போகிறது. சாப்பிட்டுவது மட்டும்தான் கீழே.  மேலே வந்தால், அவ்வளவுதான், அப்படியே கட்டிலில் கிடந்தபடியே எல்லாமும் முடிவுறும்.

இதைக்கேட்ட மனவிக்குக் கவலை வந்துவிடுகிறது. தமது தனிமை பறிக்கபடுவதை நினைத்து வேதனை அடைகிறாள். தனிமை ஒரு தவம் அவளுக்கு. அது எப்போதும் கிடைக்காது, அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி எப்போதும் அவளைச் சுற்றி ஆட்கள் இருப்பது, வாழ்வின் மேல் வெறுப்பு வந்துவிடுகிறது.

நிம்மதியாக அதை அனுபவிக்கின்ற தருணம் வீட்டில் வாய்த்தும், அதுவும் இப்படி பாதியிலேயே பறிபோவதை எண்ணி கலக்கம் கொள்கிறாள்.   தர்மசங்கடம்தானே.!? நாம் செய்வதையெல்லாம் யாராவது ஒருவர் நோட்டமிட்டுக்கொண்டே இருந்தால், என்ன செய்வது?  யாருக்கா நாம் பிறவி எடுத்துள்ளோம்? செய்த தியாகமெல்லாம் போதாதா? நாம் எப்போது வாழ்த்துவங்குவது? இது ஒரு தொடர்கதையானால் பிறவிப்பயன்தான் என்ன? மகன் ஆறு வயதுவரை தாய்ப்பால் குடித்தான், பதினேழு வயதுவரை அவளைக் கட்டிக்கொண்டு தூங்கினான்.. இப்போது அதற்கு அவசியமில்லாமல், அவனும் மீசை முளைத்த ஆம்பளையாக, ஆனால் மனைவிக்கு மட்டும் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமாகவே...

விடிவே இல்லையா இதற்கு? யோசித்தாள் மனைவி. தமக்கு இந்த இரைச்சல் வாழ்க்கை வேண்டாமென்கிற முடிவில், அறையை மாற்றிக்கொள்ளத் திட்டமிட்டாள். பக்கத்து அறை, விருந்தினர் வந்து தங்குவதற்காக செய்யப்பட்ட அறை. அவ்வறையைத் தூய்மைப்படுத்தி, தமது எல்லாப்பொருட்களையும் ஆவனங்களையும் எடுத்துக்கொண்டு, அடுத்த அறைக்கு மாற்றலாகிச் செல்ல தயாரானாள்.

இதுவும் விவாகரத்து மாதிரிதான்.

கணவனால் மனைவியை ஒன்றும் செய்ய முடியாது, அவள் எந்தத் தவறும் செய்யாதவரை...

உலகப் புகழ்பெற்ற ஒரு சிறுகதை

படித்ததில் பிடித்தது

நன்றி சுஜாதா.

லாட்டரி

ஒரு அமைதியான கிராமத்தில் ஒரு சாதாரண நாளில் ஒரு அசாதாரண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றுதான் அந்தக் கிராமத்தின் புராதன வழக்கப்படி வருடாந்திர லாட்டரி நடைபெறவேண்டும்.
அதிகாலையிலேயே கிராம மக்கள் அனைவரும் கூடி உற்சாகமாக எதிர்ப்பார்க்க இன்று லாட்டரி யார் பெயருக்கு விழப்போகிறது என்கிற விவாதங்களிடையே ஓரிருவர் இந்தப்பழக்கம் இன்னும் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கிளப்ப பழைய மனிதர்கள், தொடர வேண்டுமென்று அதட்ட இறுதியில், மைதானத்தில் நடுவே ஒரு ஸ்டூலில் ஒரு கருப்புப்பெட்டி வைக்கப்படுகிறது. நடுவர் நியமிக்கப்படுகிறார். அகர வரிசைப்படி கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பிரதிநிதி வந்து அந்தப்பெட்டியிலிருந்து சீட்டு எடுத்துப் பிரிக்காமல் காத்திருக்கிறார்கள். எல்லோரும் எடுத்தப் பின் அவரவர் சீட்டைப் பார்த்துக்கொள்கிறார்கள். வெள்ளைச் சீட்டு கிடைத்தவர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறார்கள். ஒரே ஒரு சீட்டில் மட்டும் ஒரு கருப்புப்புள்ளி இருக்கிறது. அது இந்த வருடம் திருமதி ஹட்சின்ஸனுக்கு வருகிறது “சீக்கிரம் முடித்து விடுங்கள்” என்கிறார் கிராமத்துப்பெரியவர். நடுவே ஒரு கற்குவியல். ஆளுக்கொரு கல் பொறுக்கிக்கொள்கிறார்கள். சீட்டு விழுந்த அபாக்கியப் பெண்மணி ”இது அநியாயம்” என்று கதறி மைதான நடுவில் நிற்க, அனைவரும் அவளை கல்லால் அடித்துக் கொல்கிறார்கள்.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

சனி, டிசம்பர் 24, 2011

அக்க்க்க்கப்பக்க்க்க்ப்போத்த்த்துத்துத்தூ


எனது வீட்டின்

இடது புறத்தில் வசிக்கும்
மலாய் அன்பரின் குழந்தையும்

வலது புறத்தில் வசிக்கும்
சீனக் குடும்பத்தின் குழந்தையும்

என் தம்பியின் குழந்தையைப் போலவே
பேசுகிறார்கள்...

என்ன ஆச்சிரியம்.!
அவர்களின் அம்மா மார்களுக்கு
அந்த பாஷை விளங்குகிறது

ஆ,ஆ ஆ, சரி டா செல்லம்
என, அவர்களின் பாஷையிலே
பதிலுரைக்கின்றார்கள்..

வெள்ளி, டிசம்பர் 23, 2011

பேட்டரி வீக்

மதிய உணவு நேரம். உணவு வாங்கச்சென்றேன். நான் மட்டும் தனியே..

வழக்கம்போல், உணவு வாங்குமிடத்தில் காரை நிறுத்தியபோது, என் காரின் முன்னே இரண்டு மலாய்க்காரர்கள், கைகளைப் பிசைந்து கொண்டு என்னையே ஒரு மாதிரியாகப் பார்த்தவண்ணம் இருந்தார்கள்..

நான் அவர்களை ஒரு பொருட்டாகக் கருதாமல், கடைக்குள் நுழைந்து, அறுசுவை உணவை ஒரு பிடிபிடித்து விட்டுத் திரும்பினேன். திடீரென்று பயங்கர மழை. என் காருக்குச் செல்ல வேண்டுமென்றாலும், குடை பிடித்தே ஆகவேண்டும். அவ்வளவு கடுமையான மழை.

கடைவரிசையிலேயே நடந்த பிறகு, நான்கு ஐந்து அடிகள் வைத்தால் காருக்குள் சென்று விடலாம்.. இருப்பினும் கடுமையான மழையில் நிச்சயமாக உடைகள் (யூனிபர்ம்) நனையும். ஓரமாக நின்று யோசித்துக்கொண்டிருந்தேன்..

முதலில் பார்த்தேனே அதே மலாய்க்காரர்கள் அங்கே குடையோடு நின்றுகொண்டிருந்தார்கள்...

“காருக்குச் செல்ல வேண்டுமா? குடை வேண்டுமா?” என்று என்னிடம் கேட்டுக்கொண்டே என்னருகில் வந்தார்கள். எனக்கு பயம் தான், காரணம் இங்கே நிறைய ஜேப்படி,வழிப்பறி கொள்ளைகள் மலிந்துகிடக்கிறது. எங்குபார்த்தாலும் இதையொட்டிய தகவல்கள் பத்திரிகை வானொலி தொலைக்காட்சிகளின் வந்த வண்ணமாகவே இருந்தது. இருந்தபோதிலும் எனக்குக் கவலையில்லை காரணம், உணவிற்குத்தேவையான பணத்தை மட்டும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, மற்றதையெல்லாம் பர்சிலே, ஆபிஸில் பத்திரமாக வைத்துவிட்டுத்தான் வெளியே செல்வது என் வழக்கம். நகைகளைப்பிடுங்கப் போகிறார்கள் என்றால், எனக்குத் தங்கமணிவது பழக்கமில்லை..மஞ்சள் கயிறு, அதில் ஒரு சின்ன குண்டுமணி, அவ்வளவே.!

இருப்பினும் நானே ஒரு தங்கம், என்னை எதாவது செய்துவிட்டால்.. (ஏற்கனவே நான் சொன்ன ஒரு சிறிய தகவலால், பெண்களெல்லாம் ஒன்று திரண்டு, என்னை வாசகவட்டத்திலிருந்து விரட்ட பலவாறான எஸ்.எம்.ஸு களை நாடுதழுவிய நிலையில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்கிற குறுந்தகவல் என்க்கும் சிலாப்பா (தவறுதலாக) வந்திருந்தது.) அதுவேறு எனக்கு மிகுந்த மனவுளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

ஒன்னும் பெரிதாகச் சொல்லிவிடவில்லை. ‘ உங்கள் எல்லோருக்கும் வாசிப்புப் பழக்கமில்லை, வாசகர் என்கிற பெயரில் பேனா பிடித்து என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்? இலக்கிய உலகம் பாழாய்ப் போக!’ இதுதான் நான் எழுதியது. கோபித்துக் கொண்டார்கள். உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. நீ என்ன பெரிய மேதையான்னு சண்டைக்கு வருகிறார்கள்.!! !@#$%^&* என்னத்தச் சொல்ல.!!?

சரி அது கிடக்கட்டும், கதைக்கு வருவோம்.. அப்போது அவர்கள் என் அருகில் வந்தவுடன், நானும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு..

“பரவாயில்லை, காரி பக்கத்தில்தானே இருக்கின்றது ஓடிவிடலாம், குடை வேண்டாம்!” என்றேன்.

அதில் ஒருவன் தயங்கித்தயங்கி,  “இல்ல அக்கா (மலாய்க் காரர்கள் பண்புள்ளவர்கள், வயதில் மூத்தவர்களை அக்கா என்றும், சிறியவர்களை தங்கையென்றும் அழைப்பார்கள்) குடைக்குள் வாருங்கள், நான் கார்வரை கொண்டுவிடுகிறேன்..” என்று சொல்லி, குடையை விரித்தார். எனக்கு தர்மசங்கடமாக இருப்பினும், பயங்கர மழையாதலால், சரியென உதவியைப்பெற்றுக் கொண்டு, அவர்களின் துணையோடு கார் வரை சென்றேன்.., அப்போது அவனின் தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளியே வந்தன.

“அக்கா, என்னுடைய காரை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை, உன்னுடைய எஞ்ஜின் பக்கம் கொஞசம் திறந்துக் கொடுத்தால், நான் என்னுடைய கொனெக்டரைக் கொண்டு உனது பேட்டரியில் பொருத்தி, எனது காரை ஸ்டார்ட் செய்துக்கொள்வேன், எனது நண்பனை அழைத்தேன், கடுமையான மழை என்பதால் வரவில்லை.. தொலொங் லா (உதவுங்கள்)” என்றான்.

அடப்பாவமே, இதுதான் பிரச்சனையா? இதில் எனக்கு எந்த குறைவும் வந்து விடாதே.. ஏற்கனவே இதே போல் ஒரு பிரச்சனையில் நான் மாட்டிக்கொண்டபோது, ஒரு மலாய் அன்பர்தான் எனக்கு உதவினார். அதுவும் அதே உணவு வேளையின் போதுதான், ஆனால் அன்று மழையில்லை.

’நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.’

(என்ற அவ்வையின் செய்யுள்தான் உடனே நினைவுக்கு வந்தது.)

“சரி அஃடிக் (தம்பி) பிரச்சனை இல்லை,தாரளமாக எடுத்துக்கொள்!” என்றேன்.

அவனும் எனது காரின் எஞ்ஜின் பகுதியைத்திறக்கச் சொன்னான். நான் அப்படியே செய்தேன். வயரின் நீளம் போதவில்லை. உடனே நான் அவனிடம் “காரைக் கொஞ்சம் பின்னாடி கொண்டு வா! “ என்றேன்.

இருவரும் சிரித்தார்கள். நான் மட்டும் தாமதமாகச் சிரித்தேன்.

மின்குழல்தான்


நம்பிக்கையின்மையால்

முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களின் நேர காலமில்லாமல் கொட்டமடித்து விட்டு, 24மணி நேரமும் ஸ்டேடஸ், கமெண்ட்ஸ், லைக்ஸ் என ஜாலம் காட்டிவிட்டு, ஊர்கதை பேசிவிட்டு, மணிக்கணக்காக வெட்டியா பொழுதைக் கழித்து விட்டு, ஜொள்ளு விட்டு, மயங்கி மொக்கையாக மாறி, போடுவதற்கு ஒன்றுமேயில்லாமல், யாராலோ முகத்திரை கிழிக்கப்பட்டு, தாம் நினைத்தபடி எதுவும் நடவாத போது, ஒரு வித விரக்தியின் விளிம்பிலும், வெறுப்பின் உச்சத்திலும் இருந்துகொண்டு விலகவும் முடியாமல் இருக்கவும் முடியாமல் தத்தளிக்கும் மனநோயாளிகள்...,

அங்கே நெட், வலைத்தளங்கள், பேஸ் புக், இணைய இதழ், குகூள் என, எதோ ஒரு உன்னதத் தேடலில் இருக்கும் நம்மைப் பார்த்து, அறிவுரை மழை பொழிதால், அரை விடனும் போல் இருக்குமா இல்லையா?

அறிவுரையோடு இருந்தாலும் பரவாயில்லை, என் கணவருக்குப் பிடிக்கவில்லை! மாமியாரைக் கவனிக்கனும்! பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம்! வீட்டு வேலைகள் செய்யாமல் பொம்பளைங்க இங்கேயே குடியாய் இருப்பதை நினைக்கும் போது அருவருப்புதான்! நான் உருப்படியான வருமானம் வரும் தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளப்போகிறேன்! பின்னல் தையல் என என்னை முழுமையாக அர்ப்பணிக்கப் போகிறேன்! எதாவது தன்முனைப்புப் பயிற்சியில் என்னை நிரப்பிக்கொள்ளப்போகிறேன்..! மனிதனாகப் பிறந்தவர்கள் பயன் உள்ளவர்களாக வாழ்ந்துச் சாகவேண்டும்! வெற்றியைதேட வேண்டாம், அது உன் காலடியில் கிடக்கிறது!!!! (ஷப்ப்ப்பா) என் தத்துவமெல்லாம் சொன்னால் சும்மா விடலாமா?

எதோ ஒரு தன்முனைப்பு சொற்பொழிவில் கலந்துகொண்டு, மறுநாள் திடுத்திப்பென..  மந்திரிச்சு விட்ட மங்கம்மாக்களாய், புனித ஆத்மாக்களாய் மாறி, காலகாலமாக தன்னம்பிக்கையோடு  இருப்பவர்களிடம்,  இதுபோன்ற அறிவுரைகளை வாரி வழங்க நினைத்தால், பாச்சா பலிக்குமா என்ன.!? பாவம், இல்லை..இல்லை  பரிதாபப் பிறவிகள்.

சரி, பிடிக்கவில்லை, மனநெருடலைத்தருகிறது, போதும் பட்டதெல்லாம் இனி இது வேண்டாம், எல்லாம் நல்ல அனுபவம், இதுவும் வேணும் இன்னமும் வேணும், சருக்கல் எல்லாம் பாடமாக, வருங்காலத்தில் இந்தப் பாடம் நல்ல வழிகாட்டி, இருந்த வரை கொட்டம் கும்மி கொண்டாடம் என வெளிப்படையாகக் கூறி, ஏற்றுக்கொள்கிற பக்குவம் என்றுதான் வருமோ நம்ம பெண்களுக்கு?

இப்படிச் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆரம்பத்தில் சுத்தமாக மறந்து விட்ட மாமி, கணவன், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள், ஆன்மிக வாழ்வு.. (எனக்கு இப்போதெல்லாம் கடுங்கோபத்தைத் தருவது, இந்த, நான் ஒரு ஆன்மிகவாதி, என்கிற வார்த்தையே, எனோ தெரியவில்லை) என எப்படி இப்படித்திடீரென பொங்கியவண்ணம்.. (டவுட்டு) . எல்லாம் ஒரு பாதுகாப்பிற்க்காகத்தான் எனபதுதான் நன்றாகத் தெரிகிறதே!. உணர்வுகளை அழகாக மறைத்துவிட்டோமென்று மகிழவேண்டாமே.. புரியும் ஒரு சிலருக்கு, நமது அறியாமை.

சிலர், சில பல வேளைகளில் விரக்தியின் விளிம்பில் இருப்பதற்கு இந்த அறியாமையே மூலக்காரணம். யார்தான் தவறு செய்யவில்லை? யார் தான் உத்தமர்கள்? யார் தான் திருட்டுத்தனம் செய்யவில்லை? யாரிடம்தான் கள்ளத்தனமில்லை? யார்தான் அவமானப்படவில்லை? யார் தான் ஹெங்கி பங்கி வேலைகளுக்கெல்லாம் ஆசைப் படவில்லை? யாருக்குத்தான் காதலில்லை? யாருக்குத்தான் காமமில்லை??  இப்படி இன்னும் பல யாருக்குத்தான்.. என, அடுக்கிக்கொண்டே போகலாம்...

உலகின் நிலை இப்படியாக இருக்கும் பட்சத்தில், ஏன் நாம் நமது உணர்வுகளுக்கு மட்டும்  வர்ணம்பூசி, பூதக்கண்ணாடிக்கொண்டு பார்த்து, மனம் வெதும்பி புத்தராக மாற நினைத்து, போதனையில் பல்டி அடிக்கவேண்டும்?! அசிங்கமாக இல்லையா!? வெளியே வாங்கப்ப்பா செல்லங்களா.!

சொல் புத்தியும் இல்லாமல், சொந்த புத்தியும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இருந்தால், யார் காப்பாற்றுவது.!?  எவ்வள்வு பெரிய குருவிடம் பயிற்சிப் பெற்றாலும், மாற முடியுமென்கிற நம்பிக்கை இல்லாமல் இருந்தால் எப்படி?.

வியாழன், டிசம்பர் 22, 2011

ஆண் பார்வை

முன்னே நடக்கும் போது
பின்னே ஒரு உருத்தல்

கீழே குனியும் போது
மேலே ஒரு நெருடல்

நேர் பார்வையிலும்
நேர்மையில்லாமல்..

பேச்சின் போது
அகலமாய் விரியும் கண்கள்

எதாவது தென்படாதா!?
என அங்கும் இங்கும்
ஏக்கத்துடன்..

எதோ ஒரு ஆவலில்
அலைபாயும் சுமையுடன்

“ நீங்களெல்லாம் அக்கா தங்கைகளோடு பிறக்கவில்லையா?”
என்கிற வசனம் எங்களுக்கே புளித்துத் தான் போனது.



புதன், டிசம்பர் 21, 2011

இவன் யார் ?

பொழுது 
நல்ல பொழுதாகட்டும்! 
என்கிற வாழ்த்தினை
சொல்லியே 
பொழுதை 
பொலிவிழக்கச்செய்தவன்...... 

சாப்பிட்டாயா? 
என்கிற ஒரே கேள்வியை 
அடிக்கடி கேட்டு 
என பசியை 
பிடுங்கிச்சென்றவன்....... 

நலம் பேண்! 
என்கிற சுக 
எச்சரிக்கையால் 
நித்தமும் 
என்னை நோயாளியாக 
மாற்றிக்கொண்டிருப்பவன்........ 

இறைவன் 
என்றும் துணையிருப்பான்! 
என்கிற ஆறுதல் 
வார்த்தையால்.... 
இறைவனையே 
மறக்கச்செய்து 
சதா 
இவன் 
நினைவிலேயே 
மூழ்க வைத்த...ஒரு 
'______________' fill in the blank

காதல் ஆராய்ச்சி


ஓயாத அழைப்பு
தீராத பேச்சு
மணிக்கணக்கில் மூழ்கி
எதேதோ உளறல்
காதலாம் …..!

நித்தம் சிணுங்கும்
சத்தமில்லாத கைப்பேசி..
எழுத்துகள் கூட
அழிந்து போயின
குவியும் குறுந்தகவல்கள்
காதலாம்....!

கரம் பிடித்து
கைகோர்த்து
கண் நோக்கி
‘அப்பா அம்மா’ விளையாட்டிற்கு
மௌன அழைப்பு
காதலாம்….!

காணும்போதெல்லாம்
கட்டித்தழுவி
இதழோடு இதழ்
பதித்த முத்தம்
காதலாம்….!

கனவில் கூட
பிரிவு கூடாதாம்….
கண்ணீரோடு விடிந்து
காலைப்பொழுது
காதலாம்….!

இதில் எதுவுமே
நமக்குள் நடக்கவில்லை
உன் முகம் பார்த்து
பேசியதில்லை
உன் விரல் கூட என்மீது
பட்டதில்லை…..

எப்படி நீ
எனக்குள் இவ்வளவு ஆழமாய்
நுழைந்து அரியணையிட்டாய் ?
இதற்குப்பெயர் என்ன ??
ஆராய்கிறேன் …
ஆனாலும் இது எனக்கு
பிடித்திருக்கு.!!
 

காமம்

என் தனிமைக்குள்
என்னையறியாமலேயே
நுழைந்துகொள்கிறான்.

எனது தனிமையில்
நான் நிரப்பிக்கொண்டிருப்பது
உன்னைப்பற்றிய சிந்தனையே

இன்று மனதில் ஏதோ ஒரு பயம்

தினமும் வேலைக்குச்செல்லுகையில், குறுக்குப்பாதையைப் பயன் படுத்தி விரைவாக பிரதான சாலைக்குச் செல்வது  என் வழக்கம்.

நேர்சாலை என்பது நிறைய கார்கள் பயணிக்கு. கொஞ்சம் நெரிசலாக இருக்கும், போகும் வழியில் நாசிக் லெமக் விற்பனை, பத்திரிக்கை விற்பனை, ஒரு பெரிய ஆட்டுக்கொட்டகை, கடைத்தெரு, பஸ் ஸ்டாப் என ஆட்களின் நடமாட்டம் என இருந்த வண்ணமாகவே இருக்கும்.  வாகனத்தை மெதுவாக நகர்த்தவேண்டிய நிலை வரும்.

நாமோ எல்லா நாட்களிலும் சுடுநீரைக் காலில்  ஊற்றிக்கொண்டு அரக்கபரக்க  ஓடுபவர்கள்.  இதில் சென்று மாட்டிக்கொண்டால், கொஞ்சம் தாமதமாகும். ஆக இந்தக் காட்டுக்குறுக்கு வழி எனக்குச் சுலபம்.

அந்தக் குறுக்குப்பாதையில் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. வழிநெடுக மலேசிய பூர்வீக குடிகளின் (orang asli) வீடுகள், வளர்ச்சியடையாத பழய மலேசியக் குடியிருப்புகளை ஞாபகப்படுத்தியபடி இருக்கும். எண்பதுகளின் இறுதிவரை மலேசியா இந்த மாதிரியான குடியிருப்பைக் கொண்டதாகவே இருந்தது.

பெரும்பாலும் புறம்போக்கு நிலத்தில், இஷடம்போல் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக்கொண்டு, சுற்று வட்டார நிலப்பரப்பையெல்லாம்  தமதாக்கிக் கொள்கிற ஜமிந்தார் வாழ்க்கைத்தான் முன்பெல்லாம்..!

எங்களின் வீடும் பெரிய வீடுதான். நான்கு பெரிய பெரிய அறைகள் கொண்ட விஸ்தாரமான வீடு. கோழிப்பண்ணை, ஆடு வளர்ப்பு, காய்க்கறித் தோட்டம், குழந்தைகள் விளையாட்டுத்திடல், துணி காயப்போடுகிற நீண்ட கொடிக்கம்புகள், விறகு அடுக்கும் கொட்டகைகள், காட்டு வேலைக்குப் பயன்படுத்தும் துணிமணிகள், வாளி, காண்டா, உளி, பால் தூக்கும் தோம்பு, அரிவாள், தேங்காய் அறுக்கும் கத்தி, வேலைக்குப்பயன்படுத்தும் சைக்கிள் போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு கொட்டகை. கோழிக்குப் போடும் தீவனம், ஆட்டிற்க்கு புல்கட்டு, சோறு வடிக்கிற நீராகாரம் ( மாடுகளுக்குக் குடிக்க எடுத்துச்செல்வார்கள்)  என சேகரித்து வைக்கின்ற வாளி போன்றவைகள் வைப்பதற்கு ஒரு கூடாரம். நாய் வளர்ப்பிற்கு ஒர் இடம், இரண்டுப்பக்கமும் பெரிய கட்டைகளைக் கொண்டு அடித்து ஒரு நாட்காலி போல் செய்து வைத்த வாங்கு. வீட்டின் பக்கவாட்டில் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல் உலக்கை, அரைக்கல், அண்டா குண்டா  போன்ற பொருட்கள் வைப்பதற்கு ஒரு ஒதுக்குப்புறமென மிக அழகான நந்தவனம் போல் வாழ்ந்து வந்தவர்கள் நாங்கள் இங்கே.

அந்தச் சூழலெல்லாம் காலத்தின் கட்டாயத்தின் பேரில் மாறி பலவருடங்கள் ஆகிவிட்டன. நாட்டின் அதீத வளர்ச்சியின் காரணமாக அவைகள் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் தான் போயிருந்தன.



சரி விஷயத்திற்கு வருவோம், இப்போது இங்கே இந்தக் குறுக்குப்பாதையில் இவைகளைக் காணுகிற போது, மீண்டும் பழைய வாழ்க்கைக்குச் செல்வதைப் போன்ற உணர்வுவரும். ஆகவே அச்சூழலை காலைவேளையில் ரசித்துக்கொண்டே, சுற்றும் முற்றும் நோட்டமிட்டவண்ணமாக என் காரைச் செலுத்துவதில் எனக்கு மகிழச்சி.

வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றும் அமைதி மையானமாகவே காட்சியளிக்கும். வீட்டைச்சுற்றி அழகழாகான பூச் செடிகள், பாதையின் இரு புறங்களிலும் அடர்ந்த மரங்கள், தென்னை பலா வாழை மரவள்ளி என தினசரி வாழ்விற்கு உதவும் பயிர்கள்.

தூரத்தில் எங்கோ ஒரு மூளையில் அந்தக்குளிர் காலையில் புகை வெளிப்பட்ட வண்ணமாக  இருக்கும்.
ஒரு இதமான சூழலைக் கொடுக்கும் அற்புதக் காட்சிகள் இவை. எவ்வளவு தாமதமானாலும், நமது படபடப்பை ஒரே நொடியில் அகற்றிவிடும் ஆற்றல் இந்தச் சூழலுக்கு உண்டு .

மேலும் சில காரணங்களுக்காகவும் நான் இந்தப் பாதையைப் பயன் படுத்துவது வழக்கம். அதாவது, பழங்களும் காய்கறிகளும் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்கும்.  காட்டு வாழை, காட்டு டூரியான், மிகச் சுவையான பலா, சிறிய கொய்யா, பப்பாளி, பெரிய பெரிய மரவள்ளிக்கிழங்கு, தளத்தளவென இருக்கும் கீரைவகைகள், நாட்டுக்கோழி அதன் முட்டை, மலைத்தேன் என, எதாவதொரு பொருள் தெரு ஓரமாக விற்பனைக்கு வரும்.. காலை மாலை கணக்கில் இல்லை, பார்த்தவுடன் காரை நிறுத்தி விடுவேன். மலிவாகக் கிடைக்கும் நல்ல பொருட்கள் அவை.


இப்போதான் கதையே ஆரம்பமாகிறது....

இன்று சனிப்பெயர்ச்சி. காலையிலேயே சன் டீ.வி யில் திருநள்ளாரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுப வைபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“இரவிலிருந்து இங்குதான் உள்ளோம், அற்புதமான பூஜை, தரிசனம், விடிய விடிய தூங்காமல் ... ” என்று மக்கள் ஒரு பக்கம் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்...

பின்புறத்தில் வேலையாக இருந்த என்னை, விரைவாக முன்னுக்கு வரும்படி அழைத்தார் கணவர்.

“டாலிங் ஓடிவா, அற்புதமான நிகழ்ச்சி ஓடுகிறது” என்றார்.

பார்த்தேன், `ம்ம்ம்ம்ம்’ என்கிற ஒர் சிறிய ஒலியை எழுப்பிவிட்டு நான் என் வேலையைத் தொடர்ந்தேன்.

“எல்லாம் அலட்சியம் தான் உனக்கு.படுவாய்!” சாபம் மாதிரி இருந்தது. ஆனாலும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை.

வழக்கமான பணிகளையெல்லாம் முடித்து விட்டு, வேலைக்குக் கிளம்பினேன். வழக்கமாக நுழையும் அதே குறுக்குப் பாதைக்குள் புகுந்தேன். கார் மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது.

மழையில் நனைந்த மரங்கள், மீண்டும் தூரலைச் சிதறியவண்ணமாக இருந்தது. சாலையும் ஈரமாக.

மீண்டும் ஒவ்வொரு காட்சிகளாக, ரசித்தபடி.. இன்று ஏனோ கூடுதல் அழகுடன் இயற்கை.

அப்போது.... ஒரு பெரிய பாம்பு. சாலையை ஒய்யாரமாக கடந்துகொண்டிருந்தது. உடம்பில் ஒரு மினுமினுப்பு, பளபளப்பு..  உருண்டு திரண்டு செல்லும் அதன் அழகை என்னால் ரசிக்க முடியவில்லை.

என் உரோமங்கள் சிலிர்த்தன. கால்கள் கூசின. உடலில் ஒரு நடுக்கம். கார் ஜன்னல் எல்லாம் சரியாக மூடியிருக்கின்றதா என்பதனைச் சரி பார்த்துக்கொண்டேன்.

திடிரென்று எதோ ஒரு எண்ணம் தோன்ற... குரூர குணமுள்ள ஒரு பெண்ணாக மாறி, அதன் மேல் என் காரை ஏற்றினேன்.
ஏற்றிய மறு நொடி, திரும்பிப்பார்த்தேன்..அது அங்கில்லை. எதோ ஒரு குழப்பத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தேன். அப்போதும் கால்களின் ரோமங்கள் சிலிர்த்தவண்ணமாகவே இருந்தன.

காணாமல் போன அந்த விஷப்பாம்பு எங்கு சென்றிருக்கும்? காரை விட்டு இறங்கியவுடன்.. முடிந்தவரை கீழே குனிந்துப்பார்த்தேன். யார் கண்டது, டையர் பகுதியில் பதுங்கியிருந்தால்.!!!

ஒரு குழப்ப நிலையில், மெதுவாக நடந்துவந்தேன். என் சக ஊழியரும் என்னுடன் வர (முஸ்லீம்) இந்த அனுபவத்தை அவரிடம் சொன்னேன். கொஞ்சம் பதற்றத்துடன்.

அவர் என்னை உற்று நோக்கி.. கிண்டல் சிரிப்புடன் “ அடி பட்டவுடன், அது ஓடியிருக்கும், எங்கே வந்து உன் காரில் ஏறப்போகிறது!” என்றார்.

சரி இவனிடம் சொல்லலாமே என ஒரு சீன நண்பரிடம் விசாரித்தேன், அவன், “ ஐயோ, எனக்குக் கிடைத்திருந்தால்.. சூப் செய்து சாப்பிட்டிருப்பேன், காட்டில் உள்ள பாம்புகள் சுவை அதிகம்..” என்றான் கண்களைச் சிமிட்டியபடி. இவன் வேற நிலைமை புரியாமல் என சிணுங்கிக்கொண்டு...
கொஞ்சம் ஆறுதல்தான் இருப்பினும் தமிழர் யாரிடமாவது கேட்டுப்பார்க்கலாமே, என்றெண்ணி காத்திருந்தேன்..வந்தார் நம்ம ஹீரோ. அவரிடமும் பகிர்ந்தேன்

“அய்யோ, அடிப்பட்டப் பாம்பு, சும்மா விடாது. கவனமா இருக்கணும். பழிவாங்கும். இனி அந்தப்பக்கம் போக வேண்டாம்.. இன்றைக்குச் சனிப்பெயர்ச்சி, கோவிலுக்குப் போய் சனி பகவானுக்கு விளக்குப் போடுங்கள்...எல்லாம் சரியாயிடும்..” !!!!









செவ்வாய், டிசம்பர் 20, 2011

சுயம்

நம்மிடம்
கொடுப்பதற்கு
அன்னை தெரெசா போல்
எதிர்ப்பார்ப்பற்ற
அன்பும் இல்லை

அழகாய்
எப்போதும் பளிச்சென்று இருக்க
ஹாலிவூட் நாயகியும் அல்ல

நினைத்த மாத்திரத்தில்
உலகை வலம் வரும்
கோடீஸ்வரரும் அல்ல

கவர்ச்சிப் புயலாய் கலக்க
உடல் வாகும் இல்லை
முகவெட்டும் இல்லை

அறிவாளி என்பதற்கும்
எந்த சரக்கும் இல்லை

ரசனையின் லட்சணமும்
இங்கே வெட்டவெளிச்சமாக..

குழந்தைபோல்
கள்ளங்கபடமில்லாமல்
கள்ளத்தனம் மிகுந்தவர்களாய்..

கம்பீரமென்றால்
அதுவும் கம்மிதான்
வழிகிறபோது...

எதற்குக்கோபப்படனும்
எதற்குச் சிரிக்கனும்
எதற்கு அழனும்
என்பது கூட தெரியாமல்

சதா
வாயால் வடை சுடும்
நோயாளிகளான நம் மீது

கடவுளின் குழந்தைபோல்
கரிசனம் காட்டுபவர்களை
காதல் என்றெண்ணி
வதைக்கலாமா?



ஆண்பால்

அன்பு வைக்கிறேன் பேர்வழி
என கிளம்பி விடாதே..!
அவர்கள் (அவன்கள்) நினைத்த மாத்திரத்தில்
தாய் மடியில் படுத்து
தாரத்தின் மடியில் பால் குடிக்கும்
பச்சைக் குழந்தைகள்..
உன் அன்பு, அங்கே எந்த மாற்றத்தையும்
கொண்டுவந்துவிடாது
வீணாய் ஏமார்ந்துபோகாதே....!

தவிப்பு

எல்லாக் கால நேரத்தில்
நான் உன்னுடனேயே
என்பதைக் காட்ட நினைக்கும் போது
எனக்குள் தான் எவ்வளவு தவிப்புகள்..!?

திங்கள், டிசம்பர் 19, 2011

எங்க ஊர் பத்திரிக்கைசெய்தி

ஒரு 16 வயதுடைய மாணவி, மாடியிலிருந்து தற்கொலை செய்துகொள்ள முயலும் போது, அவரது ஆசிரியரால் காப்பாற்றப்பட்டார். காரணம் காதல் தோல்வி. காதலன் வேண்டாம் என்றவுடன் இப்படி ஒரு முடிவைத்தேடி பல முறை முயற்சித்துள்ளார் அந்த மாணவி.

ஆசிரியரிடம் விசாரித்த போது, அவள் அடிக்கடி இந்த முடிவைத்தேடித் தான் பயணிக்கிறாள். ஏற்கனவே ஒரு முறை இப்படி ஒரு விபரீத முயற்சியிலிருந்து நாங்கள் அவளைக் காப்பாற்றியுள்ளோம். ஒருமுறை தமது தலையால் கண்ணாடி பாட்டில்களைக் கொண்டு பலமாக அடித்து ரணமாக்கிக்கொண்டாள். பிறகு ஒரு முறை சவர்க்கார நீரைப் பருகி உயிரை மாய்த்துக்கொள்ளவும் முயற்சித்துள்ளாள்.

காதலனைக் கேட்ட போது, அவள் தனக்கு பலவிதமான நெறுக்குதல்களைக் கொடுப்பதாகவும், தன்னை இறுக்கிப்பிடிக்க நினைப்பதன் காரணமாகவும், அவளை விட்டு விலக நினைக்கிறேன் என்கிறான்.

தாயிடம் கேட்ட போது, அவள் ஏற்கனவே தமது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு சாக முயன்றுள்ளாள், நான் காப்பாற்றிவிட்டேன் என்கிறார்.

நானே விவாகரத்து செய்துக்கொண்டு தனிமையில் வாழும் ஒரு தாய், நான் எப்படி இவளைச் சமாளிப்பேன் என புலம்புகிறாளாம் தாய்.

பாவம் அந்த மகள்...!!


இரவிந்திரநாத் தாகூர் ஓர் அறிமுகம்

எங்க ஊர் சிற்றிதழில்,  அண்ணன் (திரு கண்ணன்) அவர்கள் இரவிந்திரநாத் தாகூர் பற்றிய ஓர் கேள்வியை எழுப்பினார்.  அதற்கு நான் செய்த ஒரு சிறிய அறிமுகம் தான் இது. 2008யில் வந்தது.

கண்ணா அண்ணனின் கேள்விற்கு எனது சிறிய அறிமுகம். இரவிந்திரநாத் பற்றிய விவரம் எனக்கு அதிகம் தெரியாது. இருப்பினும் அவருடைய கவிதை புத்தகம் ஒன்று என்னிடத்தில் உள்ளது. அதைப் பகிர்ந்துக்கொள்வோமே..!

ஓஷோவின், ’மறைந்திருக்கும் உண்மைகள்’ என்ற புத்தகத்தை வாசிக்கும் போது, இரவிந்திரநாத் தாகூரைப்பற்றிய தகவல் ஒன்றை இடைச்சருகலாக நுழைத்திருப்பார். அதாவது, காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கோவில்களையும் சிற்பங்களையும் அன்றைய ஆட்சியாளர்கள் அழிப்பதற்கு ஆயத்தமானபோது, அதற்குக் கடும் எதிர்ப்பை வழங்கியவர் இந்த இரவிந்திரநாத் தாகூர் தான் என்று சொல்லியபோது, எனக்கு அவரைப்பற்றிய தேடலில் ஆர்வம் பிறந்தது. அப்போது கண்டெடுத்த புத்தகம்தான் தாகூரின் ‘ஏகாந்தப்பறவைகள்’.  படித்தேன் பரவசமடைந்தேன்.

கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, ஓவியம், இசை, மேடைப்பேச்சு, என பல துறைகளில் ஆழமான, அழகான, அறிவார்ந்த புதிய சிந்தனைகளை காலத்தை வெல்லும் படைப்பாக படைத்து, வங்கமொழி இலக்கியதிற்கு வளமூட்டிய ஒரு மகாகவி.

அவரது பாடல்களைப் பாடாத வங்க இல்லமே இல்லை எனும் அளவிற்கு, கொடிக்கடிப்பறந்த ஒரு வங்க கவிஞர். அவரின் கவிதைகள் சில......

‘அழகே நீ உன்னைக்
காதலில் அடையாளம் கண்டுக்கொள்.
கண்ணாடி காட்டும் பொய்ப்பாராட்டில்
இல்லை உனது அடையாளம்!’

‘என் வீட்டிற்குள் வர
உன்னை நான் அழைக்க மாட்டேன்
எனது நேசனே,
எல்லையற்ற என் தனிமைக்கு வா!’

‘உனது அமைதியின்
மையத்திற்கு என்னை அழைத்துப்போ,
என் இதயத்தை
உன் பாடல்கள் கொண்டு நிறைக்க!’

‘ஒரு சொல்லை
எனக்காக வைத்திரு
உனது மௌனத்தில்
நான் இறந்தபிறகு சொல் அதை
‘நான் நேசித்தேன்’ என்று!’

‘இதுவே
எனது கடைசி வார்த்தையாக
இருக்கட்டும் -
“ உன் அன்பில்தான்
நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” !’...........

காதலை மிக அழகாகச் சொல்லும் கவிதைகள் இவை. வாசிப்போரின்  மனதைக்கொள்ளைக் கொள்ளும் ஆற்றல் இரவிந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியுமா என்ன.!

நன்றி:  தென்றல் (வார இதழ்)

இலக்கியமும் குழாயடி சண்டையும்

1970களின் இறுதிக்காலகட்டத்தில், அதாவது 1980யின் ஆரம்பத்தில், மலேசியாவில் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம். எப்படியென்றால், வீட்டிற்கு வீடு பைஃப் வசதி இருக்காது. ஒரு ஏரியாவிற்கு ஒரு பைஃப் தான் பொருத்தியிருப்பார்கள்.

அப்போது நான் ஆரம்பப்பள்ளி மாணவி. குழாயடியில் தத்தம் வாளிகளை அடுக்கிக்கொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் நேரம் வரும் வரை வானத்தை அன்னார்ந்து பார்த்துக்கொண்டு பே.ன்னு உற்கார்ந்திருப்பார்கள். அப்படி உற்கார்ந்திருக்கும் பலரில் நானும் ஒருவள்.

அந்த இடத்தில் பலமாதிரியான குளறுபடிகள் நடைபெற்ற வண்ணமாக இருக்கும். உதாரணத்திற்கு சிறிய வாளிகளைக் காட்டி விட்டு, அவர்களின் நேரம் வரும்போது பெரிய தோம்பையோ அல்லது பெரிய வாளியையோ வைப்பார்கள். 
தண்ணீரை அங்கே உள்ள வாளிகளில் மட்டும்தான் பிடிக்கவேண்டும், அதை விடுத்து நேராக வீட்டிற்குக் குழாயைப் பொருத்தினால், சண்டை வரும்.

வேகமாக எடுத்துச்சென்று விரைவாக ஊற்றி விட்டு மீண்டும் யாருக்கும் தெரியாமல் வாளியை கமுக்கமாக வைத்து ஏமாற்றப்பார்ப்பார்கள். இச்செய்கையால் நீண்ட நேரம் காத்திருப்பவர்களுக்குக் கடுமையான கோபம் வரும்.  அவர்கள் தண்ணீர் பிடிக்கும் நேரம் முடிந்தவுடன், அந்த பைஃப் கித்தாவை கூடவே எடுத்துச் சென்றுவிடுவார்கள், அப்படி அவர்கள் மறந்தாட்போல் அதை அங்கேயே வைத்து விட்டுச் செல்லும்போது, மறுநாள் அந்த கித்தா அங்கு இருக்காது... அவ்வளவுதான், வீட்டில் உள்ள பரம்பரைகளையே  இழுத்து கடுமையான கொச்சை வார்த்தைகளைக்கொண்டு நாறடிப்பார்கள்.

ஏய், நீ யாரை வைச்சுருக்கேன்னு சொல்லவா? எனக்கு ஏண்டி அந்தப் பொழப்பு, நீ தான் ஊர் மேயறவ.., என பல மாதிரியான கெட்ட வார்த்தைகள்...!! பழைய பகைமையை மனதில் வைத்துக்கொண்டு,  அடுத்தவர் குடி நீரில் மண் விழும்படிதமது சைக்கில்களை ச்ர்ர்ரென்று திருப்புவார்கள்.. அடிதடிதலைமயிர் இழுத்துச் சண்டை போடுகிற நிலைமையெல்லாம் வரும். மண்டையில் ரத்தம் வழிய, தனி நபர் சண்டை, குடும்பமே தெருவுக்கு வந்து, எல்லைச் சண்டையாகிஏரியாவே கிடுகிடுக்கும் படி குண்டர் சண்டையாகி, போலிஸ்காரர்களின் வண்டி வந்து குழுகுழுவாக ஆட்களை வண்டியில் ஏற்றிய பிறகுதான் ஓயும் சண்டை.

இவற்றையெல்லாம் கண்குளிர பார்த்து, காதுகுளிர கேட்டு  ரசித்த ஒரு பக்கா நடுத்தர வர்க்கவாசி நான். அதே பாணி சண்டைகளில் சில இங்கேயும் ஈடுபடுவதைப்பார்க்கும் போது, ரசிப்பதைத்தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் இந்த போலிஸ் (வித்யாசகர்) கொஞ்சம் சென்சார் செய்தால். தெருச் சண்டைபோல் ஆகாமல், இலக்கிய விவாதமாக அமையலாம்.!

தெருச் சண்டையில் தனிநபர் தாக்குதலும் வாய் சவடாலுமே இருக்கும். ஆனால் இலக்கியச் சர்ச்சை என்பது அப்படியல்ல, தனிநபர் தாக்குதலுக்கு அங்கு இடமில்லை. அப்படியே இருந்தாலும், அது கொஞ்சம் நக்கல் நையாண்டியாக இருக்கவேண்டுமே தவிர முழுமையான சாடலாக இருக்காது இருக்கவும் கூடாது. அங்கு  இலக்கியம் சார்ந்த குறிப்புகள் வம்புகளோடு கலந்து வரும்பொழுது, அது சக வாசகர்களை உற்சாகப்படுத்துவதோடு, வாசகனின் வாசிப்பிற்கும் உந்துதலாக அமையலாம். 

இதெல்லாம் புரியாதவர்கள், அரைத்தமாவையே அரைத்துக்கொண்டு, புளித்துப்போன விவரங்களையெல்லாம் இலக்கியச் சர்ச்சை என்கிற பெயரியில் எல்லாவற்றையும்  நாசமாக்கிக்கொண்டுதமது பெயரில் எதாவது சர்ச்சைகள் வந்தால் மட்டும் போதும், தாமும் இலக்கியவாதியைப்போல் பாவனை செய்துகொண்டு எதையாவது குழப்பிவிடலாமே என்று நினைத்துக் கிறுக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அதுதான் இங்கே சிலரின் நோக்கமென்றால், உங்களின் மரியாதையை நீங்களே கெடுத்துக்கொள்கிறீகள் என்று அர்த்தம். ஏனென்றால் உங்களில் பலருக்கு வாசிப்புப் பழக்கம் அறவேயில்லை எனபதனை உறுதியாகச்சொல்லலாம். மேலும் பலரின் எழுத்துகள் குறுகிய வட்டத்தில் சிக்குண்டுக் கிடக்கிறது. ஆரம்பப்பள்ளியில் படித்த அதே இலக்கியச் சிந்தனையிலே கட்டுண்டுக்கிடக்கின்றார்கள்.

நவீன இலக்கியம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தப் பயணத்தில் நாம் இருக்கின்றோமா என்பதனை வாசக எழுத்தாளர்களான நாம் யோசித்துள்ளோமா? நம்மில் எத்தனைப் பேருக்கு நவீன இலக்கியத்தின் புரிதல் உண்டு?  நாம் இன்னமும் சிறுபிள்ளைத்தனமாக, கவிதைகளுக்கு விளக்கம் கேட்டவண்ணமாக நமது கேள்வி ஞானத்தை பறைசாற்றிக்கொண்டிருக்கின்றோம் ..!!  இந்த நிலை மாறுகின்றபோதுதான் நம் நாட்டு இலக்கியத்தில் மறுமலர்ச்சியைக் காணமுடியும்.!

இதையெல்லாம் நீ மட்டும் செய்யலாமா? என்று யாராவது என்னைக்கேட்டால, எனது எழுத்து பாணியே இது தான், நான் கடந்த இருபத்தைந்து வருடங்களாக எழுத்துத்துத் துறையில் இருந்து வருகிறேன். என் முதல் சிறுகதை வரும் போது எனக்கு வயது பதினேழு. இத்தனை வருடங்களாக என்ன எழுதினேன் என்பதைவிட எப்படியெல்லாம் திட்டு வாங்கினேன் என்பது தான் என் எழுத்துலகச் சரித்திரம். அவைகள் என்னை ஒரு போதும் கீழே இறக்கியதில்லை. மேலும் மேலும் மௌனமாகக் கற்றுக்கொள்ளவே தூண்டின.

எனக்குள் ஒரு தேடலை விதைதது இந்த எழுத்துலகம் தான்.  எனக்குள் எவ்வளவு ஆராய்ச்சிகள், தேடல்கள்.! எதையும் என்னால் தெளிவாக உள்வாங்கி (செக்ஸ் உட்பட) கிரகித்து எழுத்திற்குள் கொண்டுவர முடியும்.

எது தேவையற்ற அசிங்கமான கரு? எது உள்ளபடியே நல்ல எழுத்து,?  எது ஆர்ப்பாட்டம்? எது சுயபுராணம்? எது போலி? எது வயிற்றெரிச்சல்? எது பக்குவப்பட்ட  எழுத்து? எது மறைமுக தாக்குதல்? எது உயர்வு நவிற்சி? எது வஞ்சப்புகழ்ச்சி? எது ஜால்ரா? எது மயக்கம்.? எது ஒன்றுமே இல்லாத பாசாங்கு எழுத்து? எது காழ்புணர்ச்சி.?  என எல்லாவற்றையும் அக்கு அக்காக இனங்கண்டு பகுதறிய முடியும்  என்னால்.  அப்பேர்ப்பட்ட பக்குவத்தை அளிக்கக்கூடிய இந்த அற்புதமான இலக்கியத்துறையை, சில புல்லிருவிகள் தனிநபர் சாடலுக்குப் பயன் படுத்துவது தான்  வேதனை.   

எனது எழுத்து பாணியே இதுதான். எதையாவது போட்டு வாங்குவது எனக்குச் சுவாரஸ்யம். அதில் எனக்குத் தேடுதல் உண்டு, தகவல்கள் வரும், ஆரய்சிகள் தொடரும். தொடர் வாசிப்பிற்குத் தூண்டுதல்கள் அவை.

நான் எப்போதுமே, தேவையற்றதை உளறுபவள் அல்ல. எழுத்தில் எளிதில் உணர்ச்சி வயப்படுபவளும் அல்ல, அப்படி உணர்ச்சிவயப்படுவதைப்போல் நடித்து எழுதியிருப்பேனேயொழிய மற்றபடி என் உளறலகள் அனத்திலும்,  நிச்சயமாக எதாவதொரு படிப்பினைகள் இருக்கும்.  தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பது யாரிடமும் இருந்ததில்லை எனக்கு. வேண்டுமென்றால் என் எழுத்துப்படிவங்களை மீள்பார்வை செய்துபாருங்கள், புரியும்.

இலக்கியம் தான் எல்லாமும், எப்பேர்ப்பட்ட கல்வியாளர்களேயானாலும் இலக்கியவாதிகள் இலக்கியவாதிகள்தாம். இலக்கியவாதிகளின் உலகமென்பது வேறு. மெத்தப் படித்தவர்களெல்லாம் இலக்கியம் படைக்கலாம் ஆனால் அது இலக்கியமா, இல்லையா? என்பதனை என்னால் சொல்லவிடமுடியும்.!

(ஒரு சர்ச்சையால், எங்க ஊர் பத்திரிக்கைக்கு நான் எழுதிய ஒரு பதிவு இது)

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

மகள்

அவள்
குழந்தையாக இருக்கும் போது
அவ்வளவு அழகி!

பேசுவாள்
பேச்சுப்போட்டிகளுக்குப்
போவதைப்போல்

சுவரெல்லாம் ஓவியங்கள்
வீடெல்லாம் பொம்மைகள்
கலர் பென்சில்கள்
காகிதங்கள்..

அழகாய் பாடுவாள்
துள்ளிக் குதிப்பாள்
இசை கேட்டு நடனமாடுவாள்
சுட்டியாய்..சிட்டாய்
தனியாளாய்
அவள் அறையில்..

எனக்கு
ஓய்வே இல்லை
இங்கும் வேலை
அங்கும் வேலை

சரியாகக் கூட
அவளைக் கொஞ்சியதில்லை
மழலைச்சொல்லை ரசித்ததில்லை
அந்தப்பெரிய கன்னங்களை
கிள்ளி விளையாடியதில்லை

தத்தித்தவழும் நடையழகில்
கிறங்கடித்தும் கண்டுக்கொள்ளாமல்
துருத்துரு பார்வையை
பார்க்கக்கூட நேரமில்லாத
பரபரப்புச்சூழலில்...
நாளைய விடியல் பொழுதிற்கு இன்றே
இயந்திரமாய்..

இரவிலும்
கதை சொல்லவில்லை
பாப்பா பாட்டுப்பாடவில்லை
தட்டி தூங்கவைக்கவில்லை

நாளை பள்ளி
அம்மாவிற்கு வேலை
தூங்கு பேசாமல்
இதுதான் அவளுக்கு நான் பாடிய
தாலாட்டு..

ஏட்டிக்குப் போட்டியாய்
பாடாய், போராட்டமாய்
என் உணர்வே எனக்கு மேலாய்

அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு..
அழுவாள், அடம்பிடிப்பாள்
அடிப்பேன்
கத்துவேன்
மிரட்டுவேன்
பிரம்பெடுப்பேன்
பெண் ;ஹிட்லராய்’

பட்ட அவமானக்கதைகளைச் சொல்வேன்
பாட்டி வடைசுட்ட கதை போல் தினமும்
அவளை திசை திருப்ப


பொழுது விடிந்தால்
புத்தகப்பை ஒரு கையில்
டிபன் டப்பா ஒரு கையில்
எனது, ’ஹென் பேஃக்’ ஒரு கையில்
ஒரு காலில் சப்பாத்து
ஒரு காலில் சொஃக்ஸ்
வாயில் நீர் வடிய
தூங்கியும் தூங்காமலும்
எழுந்தும் எழாமலும்
தோளில் போட்டுக்கொண்டு
ஆயாவிடம்,
அவளும் இயந்திரமாகவே....


நல்ல ஆசிரியர்கள் தேடி
நல்ல வகுப்புகளைத்தேடி
நல்ல உணவுகளைத்தேடி
அரோக்கியத்தைத்தேடி
இன்னபிற நல்லனவற்றையெல்லாம் தேடித்தேடி
மழையிலும் வெயிலிலும்
இரவு பகல் பாராமல்

காலையில் படிப்பு
மாலையில் படிப்பு
இரவில் படிப்பு
வார இறுதியில்
வகுப்பு
படிப்பு
படிப்பு
படிப்பு

அவளுக்கும் நேரமில்லை
எனக்கும் நேரமில்லை

அயர்வு சோர்வு
படிப்பில் அவள் மூழ்க
எனக்கும் தொந்தரவுகள் குறைய
என் பசி, என் உறக்கம்,
என நானும் சுயநலமாய்..

கொஞ்சம் கூட தியாகமே செய்யாமல்
அவளின் உயர்வில்
தாய் ஸ்தானத்தில்
பக்கத்தில் நிற்கக் கூட
அருகதையற்றவளாய் நான்...

எல்லாப்புகழும் அவளுக்கே.!

இருக்கட்டுமே..
விட்ட குறை தொட்டகுறையாக...

”வாடி என் செல்லமே
இன்றாவது ஒரு முத்தம் தரவா..”

மரணம் வருவதற்குள்
ஈகோவை தூரவிட்டு கேட்பேன் இதை;
ஒரு நாள் நிச்சயமாக.

புதிர்

சில கேள்விக்குறிகளோடு 
ஆரம்பித்து, 
பல ஆச்சிரியக்குறிகளோடு 
முடிவடைகிறது,
உன்னைப்பற்றிய நினைவுகளால்
எழும் எழுத்தோவியங்களின்
வாக்கியங்கள்

வெள்ளி, டிசம்பர் 16, 2011

பேசாதே...

தைரியமிருக்கா
என்னோடு பேச..?
பேசு..
என் மனம்
இந்தத் தொகுப்பை
பதிவு செய்துக்கொண்டே
உன் மன ஓட்டத்தை
ஆராய்ந்துக் கொண்டிருக்கும்

கருத்து

உன்னுடைய நியாயங்களைச் சொல்வதற்கு, நீ ஒன்னுமே விவாதிக்க
வேண்டாம், உன் மௌனம் நல்ல பதிலடியாக இருக்கட்டும்.

விவாதிக்க முடியாத கருத்துக்கள் கேள்விகளாக, விடையே கிடைக்காமல் உள்ளக்கிடக்கில் அமுக்கி அமுக்கி... பெண் என்பதால் காதலோடும் காமத்தோடும் உடலும் புதைக்கப்படுகிறது

ஒரு ஆணின் மேல் கொண்ட காம இச்சையால், ஒரு பெண் செய்யும் அசிங்கமான வேலைகளைப் பட்டியலிட்டால்.. பெண்குல நாசமாக்கி என்கிற பட்டம் எனக்கு வந்தாலும் வரும்..எதிர்காலத்தில்.

இப்போது எனக்கு மிக ஆபாசமான வார்த்தையாகப்படுவது “நான் ஒரு ஆன்மிகவாதி”

ஒரு பெண்ணின் அழைப்பிற்கு ஏங்கும் ஒரு ஆணின் நிஜக்கனவு, அவளின் அதரங்கள் மற்றும் கொங்கைகள்

வயசை மறைத்து, புருவத்தை தீட்டி, ஆடை, அலங்காரம் அணிகலன்  எல்லாம் பூண்டு,  தலுக்கி மினுக்க நினைக்கும் நாமெல்லாம், சோரம் போன, ஒரு பெண்ணைப்பற்றிப் பேச அருகதையற்றவர்கள். அவள் வெளிப்படையாக செய்கிறாள்..நாம் போலி அலங்காரத்தில் அதை மறைத்து வைத்திருக்கிறோம்.

வயசை மறைத்து, புருவத்தை தீட்டி, ஆடை, அலங்காரம் அணிகலன்  எல்லாம் பூண்டு,  தலுக்கி மினுக்க நினைக்காத பெண்மட்டும் பேச்லாமா?

நிச்சயம் அவள் பேசமாட்டாள், ஏன்னா, நாம், நம்மை வைத்துத்தான் உலகத்தைக் காண்கிறோம்.

மறைத்துவைத்த ஓலம்

நிறைவாக
நுணுக்கமாக
பொறுமையாக
நிதானமாக
மென்மையாக
அழகாக
மெதுவாக
சுவாரஸ்யமாக
ரசனையோடு

“செய்....”

ஆர்வைத்தை ஒர் ஓரமாக வைத்துவிட்டு

ஒளிக்கீற்று

இன்னும் உதிக்காத
சூரியனின் வருகைக்காக
ஏற்கனவே மலர்ந்து விட்ட மலர் போல்
நானும் உன் வருகைக்காக..!

வியாழன், டிசம்பர் 15, 2011

கனவு காணுங்கள்

காலையிலே ஆபிஸ் வந்தவுடன், என் தொலைபேசிக்கு ஒரு மிஸ் கால். தங்கைதான்.

காப்பி கலக்கி வைத்துக்கொண்டு.. அழைத்தேன் அவளை..

“என்ன காலையிலே!?”

“அய்யோ ஒரு கனவு கண்டேன்.. தூக்கமெல்லாம் கலைந்து ஓடிவிட்டது.”

“ஓ...”

“என்ன ஓ? என்ன கனவுன்னு கேளு..”

“சரி, சொல்லு,”

“அம்மா செத்துப்போயிட்டாங்க, உறவுகள் நிறைய பேர் வீட்டில், இருப்பினும் நம்ம அத்தைகள் தான் பக்கத்தில்.. நாம் கத்திக் கதறுகிறோம்..பெட்டியை அடிக்கிறோம்..அவர்கள் ஆறுதல் கூறியவண்ணமாக இருக்கின்றார்கள்.., மாலை பூ என ஒரே மலர்க்குவியல்கள் பலவர்ணத்தில்.... மலர்களைக் கனவில் பார்த்தால் அபசகுணம் என்பார்கள்.... மனசு சரியில்லை காலையிலே..”

“ எல்லா நிகழ்வுகளுக்கும் நம்மவர்களுடன் உலா வரும் நறுமணம் மிக்கவல்ல நல்ல பொருள்தானே அது..! ஏன் குழப்பம் உனக்கு இப்போ!? நேற்று அம்மா வீட்டுக்குப்போனாயா?”

“ஆமாம்.. எப்படி கரெக்டா சொல்றே?”

“ஹூம்ம்ம்.. என் கனவில் வந்திச்சு..! இல்லே, நேற்று அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பாய், அன்று சின்னம்மா இறப்பிற்கு நீ போகவில்லை, கதை கேட்டிருப்பாய், அம்மா விலாவரியா சொல்லியிருப்பாங்க.. கதறியழுதல் மாலை, பூ, தேவாரம், சிவபுராணம்..என டீப்பா போயிருக்கும் கதை..அது உன் மனதில் நிழலாய் டீப்பா இறங்கியிருக்கும்.. கனவில் காட்சிகள் மீண்டும் நிழலாய் எட்டிப்பார்த்திருக்கும்.. அவ்வளவு தான். வேறொன்னுமில்லை.. சரியியியியி பல் வெலக்கிட்டியா?”

“இன்னுமில்ல, எழுந்தவுடன், உனக்குத்தான் போன்!”

கடி ஜோக் ஒன்று நினைவுக்கு..!!!

“அதான், நாற்றம் இது வரை வருகிறது. போ வேலையைப்பாரு!”

கலக்கிய காப்பியை எடுத்தேன் பருக.. ம்ம்ம் ஒரு மொடக்குதான் போயிருக்கும்.. மற்றொரு அழைப்பு.. என் அததை..

“ஏய், புள்ள.. மனசு சரியில்லை..!”

“ஏன்?”

“போன்ல காசு இல்லை, ஆபிஸில் இருந்து கூப்பிடு!”

பாருங்க, யார் யாரோ கதை போட ஆபிஸ் பணம் வீண் விரையம். அழைத்தேன். இல்லையென்றால், நாள் முழுக்க ஓயாது, இந்தக் கூப்பாடு.

“இன்ன்னா உனக்கு இப்போ காலையிலேயே?”

இல்ல என்கிற வார்த்தையோடு, புள்ள என்பதையும் சேர்த்துக்கொண்டு பேசுவதுதான் அத்தை அவர்கள் உரையாடுவது வழக்கம். புள்ள.. எங்களை அப்படித்தான் அழைப்பார். அப்பாவின் கடைசி தங்கை.

“இல்ல புள்ள, விடியற்காலையில் ஒரு கனவு.”

” ம்ம்ம் சொல்லு, இப்போதான் ஒரு கனவு மேட்டரைக்கேட்டேன்.. நீ என்ன குண்டு போடப்போற!?”..

“அடிங்ங்ங்..உங்கப்பம்மவளே.. கேளுடி”

“ம்ம்ம், சொல்லு சொல்லு”

“ ஒரு பழைய பலகை வீடு.. முன்பு நாம கூட்டுக்குடும்பமா இருந்தோமே, அந்த வீடு. அங்கு எல்லோரும் வந்திருக்கோம். அப்பா, தாத்தா (இருவரும் இறந்து இருபது வருடங்களாச்சு) எல்லோரும் இருக்கிறோம். அப்போ, எதோ ஒரு நிகழ்வு நடக்கவிருக்கிறது. அது என்ன நிகழ்வுன்னு சரியா தெரியல. வீடு அமைதியா இருக்கு, நான் மட்டும் பச்சை இலைகளை கிரைண்டரில் அரைத்துக்கொண்டிடுக்கிறேன்.. அந்த கிரைண்டர் சத்தம் தவிர வேறு எந்த சத்தமும் என் காதுகளில் கேட்கவே இல்லை. இருப்பினும் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள்..! அப்போது தான் நீ வர, ஆனால் உள்ளே நுழையவில்லை. ஒரு சிரிப்போடு வெளியவே நிக்கிற.. பார்ப்பதற்கு ஒரு சாமியாரினிபோல்.. மொட்டையடிச்சிருக்க.. ஆனால் குடுமி இருக்கு, கையில் ஒரு புக், .. எல்லோரும் உன்னை வேடிக்கைப்பார்க்கிறார்கள், நான் மட்டும் உன்னை உள்ளுக்கு வரச் சொல்லி கூப்பிடறேன். அப்போ, என்னமோ பேச வாய் எடுக்கற.. கனவு கலைஞ்சிருச்சு..!”

“ம்ம்ம், அப்பறம், கிளம்பி வேலைக்கு வந்திட்ட தானே..இன்னும் என்னவாம்!?”

“அய்யோ இல்ல புள்ள, இந்த மாதிரி பச்சை இலைகளைக் கனவில் பார்க்கக்கூடாதுன்னு சொல்வாங்க.. அதுவும் உன்னை வேறு அப்படிப்பார்த்தேனா, அதான் மனசு ஒன்னும்..!”

“நான் நல்லாதான் இருக்கேன், அதெல்லாம் ஒண்ணும் வராது.. போனமுறை நீ வந்த போது, நான் புக்கும் கையுமா உன்னிடம் சரியா கூட பேசல, அதன் எதிரொலியா இருக்கும். கவலை வேண்டாம்.. வேலையப்பாரு.”

அவரிடம் அப்படித்தான் மனம் கோணாமல் பேசுவோம். எங்களுடனே வளர்ந்தவர். திருமணமாகி ஐந்தே நாளில் விதவைக் கோலம் பூண்ட பரிதாபத்துகுரிய பெண் அவர். அவரைச் சுற்றி எது நடந்தாலும் எங்களின் நினவுதான் வருமாம்.

சரி, காப்பியைக்குடிக்கலாம் என காப்பி கப்பைக் கையில் எடுத்தேன்.. மீண்டுமொரு அழைப்பு...

“ஹாலோ..” நான் தான்

“ஹால்லோ..!” மறுமுனையில் வனிதா சோகமாக. என்ன கதையோ முருகா!!

“சொல்லுங்க வனிதா.”

”என் கூட்டாலி காலையிலே போன் பண்ணினாள்..”

“ம்ம்ம்”

“இறந்துபோன என் மகள், அவளின் கனவில் போய்..ஆண்டி ஆண்டி என தேம்பித்தேம்பி அழுதாளாம்..”

“ம்ம்ம்”

“எங்கம்மா.. எனக்கு சுடிதாரே வாங்கி வைக்கிறார், எனக்குச் சுடிதார் வேண்டாம், முடிந்த தீபாவளிக்குக் கூட மெரூன் சுடிதார் வாங்கிவைத்தார்.. என்னிடம் நிறைய சுடிதார் இருக்கு, எனக்கு கவுன் அதுவும் வெள்ளைக்கலர் கவுன் வேணும்னாளாம்... என்ன குறை வைத்தேன்? அவளின்  கனவில் போய் புலம்பியிருக்கின்றாள்..” அழுகிறாள்

சிறுகுறிப்பு: பத்தொன்பதாண்டுகளுக்கு முன்.. அவளின் மகள் வயிற்றிலேயே இறந்து பிறந்தது. சடங்கு சம்பிரதாயங்களுக்கு பேர் போன வம்சத்தில் பிறந்த மேல்தட்டு வர்க்கவாசிகள் அவர்கள். அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டிய பிறகுதான் புதைத்துள்ளார்கள். வருடா வருடம் வயதிற்கு ஏற்றாட்போல் உடைகள் பலகாரங்கள் என செய்து, படைத்து, பூஜை செய்வது வழக்கம். வேறு குழந்தையும் இல்லை அவளுக்கு.. அதனால்தான் இவ்வளவு பலகீனம். மன அழுத்தமும் கூட. அக் குழந்தையின் பெயரைச் சொல்லித்தான் கதைகளையே ஆரம்பிப்பாள்.

இதைப் பயன்படுத்தி, சில கட்டுக்கதைகளைச் சொல்லி, சிலர் அவளை, மந்திரவாதி, சாமியாடி, தோஷம், கழிப்பு, செய்வினை, மாந்த்ரீகம் என அழைத்துச் சென்று சுயலாபம் தேடப்பார்ப்பார்கள்.  பாவம் அவள்! பலஹீனமானவர்களைக் குழப்புவதில் நம்ம வர்கள் கில்லாடிகளாச்சே.

நான் இதுவரையில், அவளின் இதுபோன்ற செய்கைளுக்கு ஒத்தூதாமலும் நிராகரிக்காமலும் இரண்டுங்கெட்டான் நிலையில் அமைதிக்காப்பதால், அவளுக்கு நான் நல்ல தோழியானேன்.

பலரை பாதியிலே கலற்றி விடுவாள். ஆனால் என்னைப்பொருத்தவரையில், நானே போகிறேன் என்றாலும் விடமாட்டாள். அப்படி அவள்  ஒட்டிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு விஷேச தன்மைகளும் என்னிடம் இல்லை. சிலவேளைகளில் நானும் அவளின் அறியாமைகளைக் கண்டு, ஜாடைமாடையாகத் திட்டியுள்ளேன்.

இன்றும் திட்ட வேண்டும்போல் இருந்தது.. காலை நேரம், மூக்கைச்சிந்துகிறாள்.. என்னால் ஒண்ணுமே சொல்லமுடியவிலை..

“ஓ.. ம்ம்ம்”..

“ லஞ்ச் டைம்மிற்கு கொஞ்ச நேரம் வறீயா.. பூசாட் பஃக்கையான் ஹாரி ஹாரிக்குப் போய் வரலாம்” . அருகில் உள்ள துணிக்கடைக்கு அழைத்தாள். அவளுக்குக் கார் ஓட்டத்தெரியாது. மேலும் துணையில்லாமல் வெளியே சுற்றுகிறவள் அல்ல.

“சரி, நிலைமையைப் பார்த்திட்டு.. பிறகு கூப்பிடறேன்..” என்று சொல்லி தொலைப்பேசியை வைத்தேன்.

சுடு காப்பி, ஐஸ் காப்பியானது.. கீழே ஊற்றிவிட்டு, மீண்டும் கலக்கிவந்தேன். காலை மணி பத்து. மெயில் பாஃக்சைத் திறந்தேன்.. மெயில்களில் மூழ்கினேன்.

அதோடு வேறெந்த கைத்தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. நான் வேலை செய்கிறேன் என்பதே சிலருக்கு மறந்துப்போனது. (அடிங்ங்)

நாம் எல்லோரும் கனவுலகிலேயே வாழ்கிறோமென்பது உண்மைதான்  போலும். ஒண்ணு விழித்துகொண்டு, இல்லையேல் உறங்கும்போது..

கனவு காண்கிறோம்..