வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

கருப்பு தினம்

22/8...

நாடு சுதந்திரம் அடைந்து இந்த ஆண்டோடு ஐம்பத்தேழு வருடங்கள். 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. 57ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 57 வருடங்கள் கடந்துவிட்டன.

எனக்கு எந்தப் பற்றும் இருக்காது. மதம்.மொழி, சமயம் இன்னபிற பற்றுகள் என எதுவும் என்னை நெருங்க முடியாது. ஆனால் எனக்கு நாட்டுப்பற்று அதிகம். எங்கு தேசியகீதம் ஒளித்தாலும் நான் எழுந்து நின்றுவிடுவேன். இதை யாரும் எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. என் இரத்தத்தில் ஊறியது. அரசியல் தலைவர்கள் மேல் கோபம் இருக்கும்.. அரசாங்கத்தின் மீது கோபம் இருக்கும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் அரசியல் கட்சிகள் மீது வரும்.. ஆனால் நாடு என்று வரும்போது.. எங்கள் நாடு எங்களின் சொத்து.

எவ்வளவோ ஏற்ற இறக்கங்களை நாடு சந்தித்திருப்பினும், கடந்த மாதம் நிகழ்ந்த ஒரு வரலாற்றுப்பிழையை எந்த பாவமும் அறியாத எம்மக்கள் எதிர்நோக்கி இருப்பது மனதிற்கு வேதனை. கனவுகளைச் சுமந்து ஆகாயத்தில்சிறகடிக்க எத்தனித்த எமது உறவுகளை சுட்டு வீழ்த்தி (MH17) தரைமட்டமாக்கி தவிக்கவிட்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் அதைப்பற்றிய தகவல்கள் ஊடகங்களை நிரப்பியவண்ணம். நாடே குழம்பிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக போராடி, நாளைதான் அந்த விபத்தில் சிக்குண்டவர்களின் பிரேதங்கள், யாரும் திறந்து பார்க்கமுடியாத அளவிற்கு பெட்டியில் அடைத்து வைக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்படவிருக்கிறது.

நாடே சோகத்தில் மூழ்கும் நாள், நாளை.. (22/8) இன்றே அலுவலகத்தில் சக ஊழியர் ஒருவள் கண்ணீர் மல்க, ``நாளை கருப்பு ஆடைகள் அணிந்து வா.. ஒட்டுமொத்த மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாவ காரியத்தின் அடையாளங்களாக நமது சகோதர சகோதரிகள் இல்லம் திரும்புகிறார்கள். கனவுகளைச் சுமந்து மகிழ்வாகச்சென்று, சிதலமடைந்த நிலையில் தாய் மண்ணில் புதைபட புறப்பட்டுவிட்டார்கள்.. ஆகாயத்தில் ஆவிகள் உலவும் என்பார்கள்.. வெள்ளை மேகங்கள் பார்ப்பதற்கு சிலரின் உருவம்போலவே இருக்கும்.. நாளை வானத்தைப் பார்.. மேகங்கள் நமது உறவுகளின் தோற்றங்களை பிரதிபலிக்கின்றனவா என்று..’’ குமுறினாள்.. எனக்கும் கண்கள் கலங்கிவிட்டன..

இன்று ஒரு நாள், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கு கொள்வதற்காகவும், சவப்பெட்டிக்குள் அடைக்கலமாகி பறந்து வரவிருக்கின்ற நமது சகோதர சகோதரிகளுக்காகவும்.. ஒரு நாள் துக்கம் அனுசரிக்க நாட்டோடு நாமும் பங்குகொள்வோம். மரியாதை நிமித்தமாக...

புதன், ஆகஸ்ட் 20, 2014

பொய் கோபம்...



`ஹாலோ சாரி சாரி சாரி... எனக்குத்தெரியும் நீ கோபமாக இருப்பாய்.. சாரி லா.. ’ இன்று மதியம் தோழி என்னை அழைத்து சாரி புடவை என்று என்னமோ உளறிக்கொண்டிருந்தாள்..

என்னாச்சு.? கேட்டேன்.

இல்லெல்லா, சனிக்கிழம, சரியான மழ. எங்கும் வெளியாக முடியல. ப்ரொமீஸ் பண்ணிய மாதிரி அவரும் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வரல.. சாரி லா.. கோவிசுக்காதே..!

என் மண்டையில் நண்டு ஓட ஆரம்பித்தது. என்ன இது, என்னமோ உளறுது.. என்ன சொல்ல வருது.. பேஸியல் போகலான்னு சொல்லியுருந்தோமே, அதுவா? இல்லே அன்று மார்கெட் போயிட்டு பசியாறிட்டு வரலாம்னு ஒரு அப்பாயின்மெண்ட் வைத்திருந்தோமே அதைச் சொல்றாளா?.. ஜிம் போகலாம்னு சொல்லிக்கொண்டு அலைந்தோமே.. அதைச் சொல்றாளா.! எனக்கு ஒண்ணும் புரியல. இருப்பினும் கேட்க மனமில்லை. அவளின் பரபரப்புப் பேச்சின் அலைவரிசையில் நானும் சுழல ஆரம்பித்தேன்..

அதுக்கென்ன.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்.! புரிந்ததுபோல் கலந்துகொண்டு பங்கிற்கு சில வரிகளை உதிர்த்து வைத்தேன்.

கேளு என்ன நடந்துச்சுன்னா.., என் நாத்தனா திடீர்ன்னு கூப்பிட்டு, நாட்டு வைத்தியர்கிட்ட போகணும், வா எனக்கு இடந்தெரியாதுன்னு சொல்ல, நான் காடிய எடுத்துட்டுக் கிளம்பும்போதா எங்க சின்னம்மா வரணும்.. குடும்பத்தோட வந்துட்டாங்க..’ தொடர்ந்தாள்..

ஐய்யோ அப்புறம்.? சுமந்த கேள்விக்கணைகளை மனதில் புதைத்துக்கொண்டு, ஆர்வமாகக் கேட்பதாக பேச்சில் புகுந்துகொண்டேன்.

அப்புறம் என்ன .. நாட்டு வைத்தியர பார்க்கமுடியாது, இன்னொரு நாளைக்குப் போகலாம்னு அவ கிட்ட சொல்லிட்டு, மார்கெட் ஓடி சாமான் எல்லாம் வாங்கி வந்து சமைச்சு முடிக்க மணி ஏழு.

ஐய்யோ...

அதான் நம்ம நிலம.. சரி நீ வேற இரண்டு வாரமா போன் பண்ணல, கோவிச்சுக்கிட்டியோன்னு நினைச்சு நானே கூப்பிட்டேன்..

நான் ஏன் கோவிச்சுக்கறேன்.. உன்னுடைய வேலை உனக்கு.. நினைச்ச நேரம் வா’ன்னு கூட்டிக்கிட்டு கிளம்பமுடியுமா.! இன்னும் சரியாக புரிபடாத மங்கிய நிலையிலேயே என் பேச்சு இருந்தது..

அப்பாடா, கோபம் இல்லியே. அது போதும்.. இருந்தாலும் மகள் பட்டமளிப்பு விழா விருந்து ரொம்ப முக்கியம். தேர்ந்தெடுத்த நட்புகளை மட்டுமே அழைக்கிறேன். மனதார வாழ்த்தும் நல்லுள்ளங்கள் கண்டிப்பாக வரவேண்டும். வாழ்வில் மறக்கமுடியாத நாள். நிச்சயமா வந்திடு. வரலன்னாத்தான் இருக்கு உனக்கு’ன்னு, வார்னிங் பண்ணின.. அதான் தயங்கி தயங்கி, எதிர்ப்பாத்திருப்பியே என்னிய....?  சாரிலா இன்னொரு நாளைக்கு நிச்சயம் வரேன்.. ‘ என்றாள், குலாவியவண்ணம்.

ஆஹா. அப்போதுதான் எனக்கே நினைவுக்கு வந்தது, அவள் அன்றைய விருந்துக்கு அழைப்பு கொடுத்தும் வரவில்லை என்று.. இருந்தாலும் என்னுடைய மெத்தனப்போக்கைக் காட்டிக்கொள்ளாமல்.. இறுதியில் கோபங்கொண்டதுபோல் நடித்துவிட்டுத்தான் தொலைபேசியை வைத்தேன்..

வியாழன், ஆகஸ்ட் 07, 2014

சைகோன் சிட்டி பயணம் - வியட்நாம் பயணக்கட்டுரை


வியட்நாம் சென்று வந்தோம். பக்கத்தில் இருக்கின்ற கோலாலம்பூருக்கு ஷாப்பிங் சென்று வந்தாலே, பயணக் கட்டுரை எழுதுகிற நான், ப்ளைட் ஏறி வெளியூர் பயணம் சென்று வந்தால், சும்மா விடுவேனா. !



அதுசரி, ஏன் வியட்நாம் நாட்டிற்கு பயணம் செல்ல ஆர்வம் வந்தது.? யாரும் அதிகம் செல்லாத ஒரு நாடு ஆச்சே அது. அங்கே ஏன் செல்லவேண்டும்.?

வாழும் காலத்தில் நம்முடன் நெருங்கிய,  நாம் கண்ட வரலாற்றுப்பின்னணியைப் பறைசாற்றுகிற நாடு அது என்பதால் அதைப் பற்றித்தெரிந்து கொள்ள ஆர்வம், என்று எல்லாம் சொல்லி புருடா விடமாட்டேன்.

உண்மை என்னவென்றால், என் மகள் மருத்துவப்படிப்பின் இறுதிக்கட்ட தேர்வின் போது மிகுந்த மனவுளைச்சலில் சோர்வுடன் உழன்றுக்கொண்டிருந்தாள். தாம் மிகவும் வருத்தத்துடன் சோர்வாக உள்ளதாகவும், ஒவ்வொரு நொடியும் அதிக படபடப்புடன் பய உணர்வுடன்  நகர்வதாகவும், யாருமற்ற தனிமை தம்மைக் கொல்வதாகவும், ஆறுதல் சொல்ல பக்கத்தில் நாங்கள் யாரும் இல்லாததாகவும் புலம்பிக்கொண்டே இருந்தாள். வட்ஸாப்பில் தகவல் வருகின்ற போதெல்லாம், சிறுகுழந்தைக்கு மிட்டாய் கொடுத்து உற்சாகப் படுத்துவதைப்போல் மனங்கோணாமல் ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தோம் நானும் என் கணவரும். அப்போது தற்செயலாக, `நீ சந்தோசமாக தேர்வெல்லாம் எழுதிவிட்டு வா, நாமெல்லாம் ஜாலியான வெளிநாட்டு சுற்றுலா ஒன்றிற்குச் சென்றுவரலாம்.’ என்று `ஓவர்’ உற்சாகமூட்ட வாக்கு கொடுத்துவிட்டார்.

அன்றிலிருந்து, எங்கே போகலாம்.? எங்கே போறோம்.? என்று சதா கேட்கத் துவங்கிவிட்டார்கள் பிள்ளைகள்.

தேர்ந்தெடுத்த நாட்டிற்குச் செல்லலாம் என்றால், நோன்பு விடுமுறையில் இரட்டிப்பு விலையில் கழுத்தில் கத்தி வைக்கின்றார்கள்.  ஏர் ஏசியாவில், சீனா, கம்போடியா, பாங்கொக், கொச்சின், ஸ்ரீலங்கா, ஆஸ்த்ரேலியா, லண்டன் என பல இடங்களுக்கு டிக்கட் போட்டு விலையினைக் கூட்டிப்பார்த்து அதிர்ந்து, ஏறக்குறைய எங்கும் பயணம் செல்லவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கின்ற வேளையில், எதோ ஒரு பட்டனில் சிகப்புச் சிக்னல் காட்டவே, அங்கே சென்று அமுக்கிப்பார்க்க, அது ஹொ சி மின் பண்டனத்தைக் காண்பித்தது. எல்லா ஊர்களையும்விட வியட்நாம் செல்வது செலவை கொஞ்சம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம்  என்கிற யோசனையில், விட்டால் இதுவும் கிடைக்காது என்பதால், கண்களை மூடிக்கொண்டு டிக்கட்களை வாங்க ஆன் லைனில் பதிந்துவிட்டார் கணவர்.

வாங்கியபின் என்னிடம் ஆலோசனை கேட்க. `ஐய்யே அங்கே வா? வுவக், சாப்பாடு கிடைக்காதே.! பன்றி நாய் எல்லாம் சாப்பிடுவார்களே.. ! நாம் எப்படி அங்கே சாப்பிடுவது.?’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டேன். காரம் உப்பு புளி மசாலா என நாக்கைத்தீட்டி வைத்திருக்கின்ற எனக்கு சாப்பாடுதான் முக்கிய பிரச்சனையாக தலைதூக்க ஆரம்பித்தது.

`அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம், டிக்கட் போட்டாச்சு, ஆன்லைன்ல ஹோட்டல்கள் பாரு, த்ரீ ஸ்டார் போதும். அதிக விலையில் பார்க்காதே.!’ என்று தொடர் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

என்ன செய்யலாம் என்கிற சிந்தனையில், அலுவலகத்தில் உள்ள சில சீன தோழிகளிடம் வியட்நாம் பயணம் பற்றிப்பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். ஏறக்குறை எல்லா சீன நண்பர்களும் வியட்நாமிற்கு சென்றுவந்தவர்களாகவே இருந்தார்கள். அனைவரும் சொன்ன ஒரே விஷயம், `வியட்நாம் ஒரு உணவுச்சொர்க்க பூமி. அதாவது food paradise. அற்புதமான உணவுகளை அங்கே உண்டு ரசிக்கலாம். அழகான ஊர். நிச்சயம் உனக்குப்பிடிக்கும். நன்றாக மகிழ்வாக சுற்றிவிட்டு வா.’ என்று ஆர்வமூட்டிவிட்டார்கள்.

அதற்குப்பிறகு, இணையத்தில், அந்த நாட்டின் வளர்ச்சி, சிதோஷ்ணநிலை, உணவு, வரலாறு, பயண வழிக்காட்டி விளக்கங்கள் என ஆராய்ந்து வாசிக்கத்துவங்கினேன். ஆர்வத்தைக் கூட்டியது அந்த ஆராய்ச்சி.




பயணம்.

நான்கு இரவு ஐந்து நாட்கள் பயணம் மேற்கொண்டிருந்தோம். இங்கிருந்து தங்கும் விடுதியினை ஆன்லைனில் பதிவு செய்கிறபோது, டூர் செல்கிறீர்களா? அல்லது ஹொ சி மின் டவுனிலேயே ஷாப்பிங் செய்யப்போகிறீர்களா? என்று மின்னஞ்சல் வழி கேட்டுக்கொண்டார்கள். எதுவானாலும் சொல்லுங்கள் நாங்கள் ஹோட்டல் மூலமாகவே எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்கிறோம். உங்களின் திருப்திகர பயணத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கின்றோம் என்று உறுதியளித்தார்கள்.

டூர் செல்லலாம்.; ஐந்து நாட்களும் ஷாப்பிங் செல்ல நாம் ஒண்ணும் பெரிய கோடிஸ்வரர்கள் அல்ல.’ என்று முடிவானபிறகு, டூர் செல்வதற்கான செலவுகளை அட்டவணையிட்டு மீண்டும் மின்னஞ்சல் அனுப்பிவைக்க அந்த பட்ஜெட் பாக்கெட் மணிக்கு தகுந்தபடி அமையவே, அதைத்தேர்வு செய்துகொண்டு பயணத்திற்கு தயார் ஆனோம்.

மலேசிய நேரப்படி இங்கே காலை மணி ஏழு என்றால், அங்கே காலை மணி ஆறு. ஒரு மணி நேரத்திற்கு பின்னே சென்றிருந்தது பொழுது. இருந்தபோதிலும் காலை ஆறுமணிக்கெல்லாம் இங்குள்ள நேரப்படி காலை எட்டு போல் விடிந்திருந்தது. ஆறு மணிக்கே சூரியன் உதிக்கத்துவங்கிவிட்டான். பிரயாணத்திற்கும் காலை ஆறு மணிக்கெல்லாம் தயார் நிலையில் இருந்துவிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊர் சுற்றிவிட்டு, விடுமுறை பொழுதைத் தூங்கிக்கழிக்கலாம் என்கிற கனவு பாழாகிப்போனது என்றுதான் சொல்லவேண்டும்.

சுற்றுலா ஏற்பாட்டின் படி ஒவ்வொரு இடத்திற்கும் நான்கு அல்லது ஐந்து மணிநேரம் பேருந்தில் பிரயாணம் செய்தாகவேண்டிய கட்டாய நிலை. வெகுதூரம் செல்கிறார்கள் இடங்களைச் சுற்றிக் காண்பிக்க.

உலகச் சுற்றுலாப்பயணிகளை, பல ஹோட்டல்களில் இருந்து டாக்ஸி மூலமாக அழைத்துவந்து ஓர் இடத்தில் ஒன்று திரட்டி, பருகக் குளிர் பாணங்கள் கொடுத்து காத்திருக்கவைத்து, பின்பு எல்லோரையும் ஒரே பஸ்ஸில் ஏற்றிச் சுற்றுலா செல்ல ஆயத்தமாகிறார்கள்.

நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த பயண வழிகாட்டியும் நம்மோடு பயணிக்கின்றார். அவர் பஸ்ஸில் ஏறியவுடன் பஸ் கலைக்கட்ட ஆரம்பித்துவிடுகிறது.


வரலாறு, மக்கள் வாழ்க்கை முறை, ஏழ்மை, உணவிற்குப்பஞ்சம், வெள்ளம், தற்போது நாம் செல்ல விருக்கின்ற சுற்றுலாத்தளம் என எல்லாவற்றையும் குறித்து விலாவரியாக விளக்கம் கொடுத்துக்கொண்டே வருகிறார். பஸ்ஸில் நாங்கள் மட்டுமே மலேசிய இந்தியரகள் மற்ற அனைவரும் ஐரோப்பியர்கள். கிட்டத்தட்ட நாற்பது பயணிகளை ஏற்றிச்செல்கிற பஸ் அது.

பயண வழிகாட்டி தூய ஆங்கிலத்தில் ஐரோப்பியர்களின் பாணியில் உரையாடிக்கொண்டே வருவதால், அந்தப் பாணி புரிவதற்கு எனக்குக் கொஞ்சம் நேரமெடுத்தது. இடையிடையே உரையினை நிறுத்தி கேள்விகள் வேறு கேட்கிறார். நாங்கள் யோசிப்பதற்குள் அறிவுப்பூர்வ விளக்கங்களை ஐரோப்பியர்கள் கலகலவென பகிர்ந்துகொண்டே வந்தார்கள். நகைச்சுவையும் செய்தார்கள். உற்சாகப் பயணமாக அமைந்தது.

வரலாறு

வியட்நாமிய வரலாறு என்பது நமக்கு மிகவும் நெருங்கிய வரலாறு. வாழும் வரலாறு என்றும் சொல்வார்கள்.  70களில் ஓய்ந்த இந்த வியட்நாமியப்போர் எங்களின் காலகட்டமான 80கள் வரை அதன் தாக்கம், அது குறித்த பேச்சு என தொடந்துகொண்டிருந்தது.

முன்பெல்லாம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தால், என்ன இது ஓயாத வியாட்நாம் போராக இருக்கே.! என்று உவமை கூறுவார்கள். சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு என்கிற திரைப்படமும் இந்த சண்டையினை உதாரணமாகச் சொல்லித்தான்  தலைப்பிட்டு திரைக்காவியமாக வடித்திருந்தார்கள்.

யாரேனும் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தால், இதென்ன வியட்நாம் அகதிகள் மாதிரி இருக்கே.! என்பார்கள். எங்கேயாவது விழுந்தோ அல்லது விபத்துக்குள்ளாகியோ ரத்தக்களறியோடு காயம்பட்டு வந்திருந்த ஒருவரை, வியட்நாம் போரில் அகப்பட்ட அடிமை மாதிரி இருந்தது பார்ப்பதற்கு.! என்று எண்பதுகளிலும் பேச்சு வழக்கு இருந்ததை என்னால் நினைத்துப்பார்க்க முடிகிறது. அப்படி அந்தப்போரோடு உலக மக்கள் பின்னிப்பிணைந்திருந்தார்கள் அன்று..

அந்த வரலாறு நிகழ்ந்த இடங்களை நேரில் சென்று காண்கையில் மனம் கனக்கிறது. யூ.எஸ் இராணுவம் புரிந்த அராஜகங்களையும் மக்கள் பட்ட அவஸ்தைகளையும் ச்சூசி தன்னல் சென்றபோது விளக்கமளிக்கப்பட்டது.

வியட்நாம் மக்களும் அதன் இராணுவமும் பூமிக்கடியில் கிட்டத்தட்ட பல கிலோமீட்டர்களுக்கு சுரங்கப்பாதையினைத் தோண்டி, அதனுள் பதுங்கி அங்கேயே உணவு உறக்கம் என்று வாழ்ந்த வரலாறு குலைநடுங்க வைத்த அனுபவம்.

அந்தச் சுரங்கத்தினுக்குள் கொஞ்சம் சதைப்பிடிப்புடன் உள்ளே நுழைவது முடியாத காரியம். அப்படி நுழைய நினைத்த ஒரு ஐரோப்பியனுக்கு மூச்சுத்திணறலே வந்துவிட்டது. அப்படியென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் வியட்நாமியர்களின் உடல் எவ்வளவு மெளிந்து காணப்பட்டிருக்கும் என்று. சுரங்கத்தின் உள்ளே வேகமாக நுழைந்து, பிட்டத்தாலும், முட்டிபோட்டுக்கொண்டு நகர்ந்தும் பல மைல்களுக்கு அப்பால் எவ்வளவு விரைவாக ஆற்றங்கரைக்குச் செல்லமுடியுமோ அவ்வளவு வேகமாகச் சென்று மெக்கோங் ஆற்றில் குதித்து அங்கிருந்து தப்பித்திருக்கின்றனர்.



அதுமட்டுமல்ல, அமெக்க இராணுவத்தை வெறிகொண்டு தாக்கியிருக்கின்றனர். இதற்கான யுக்திகள் காண்போரின் கைக்கால்களை நடுங்கச்செய்தன. பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை, அமெரிக்கா வியட்நாம் போரில் பறிகொடுத்திருப்பதாக வரலாறு காட்டுகிறது. ஒரு வித விஷ மரத்தைக்கண்டுகொண்டு அதனின் இலைகள் மற்றும் தண்டுகளை அரைத்து, வீசப்பட்ட குண்டுகளைப் பொருக்கி, வெட்டி கூர்மையாக்கி சொந்த தயாரிப்பில் உருவான ஆயுதங்களில் அந்தக் கலவையைப் பூசி மறைவான இடங்களில் அவைகளைப் பதுக்கி, தாக்கியிருக்கின்றனர். மாட்டிக்கொள்கிற அமெரிக்க இராணுவ வீரர்கள் தப்பிக்க இயலாதபடி மிக நுணுக்கமாகக் கட்டப்பட்ட/வெட்டப்பட்ட குழிகள் பார்வையாளர்களின் கண்களை ஆச்சிரியத்தில் அலக விரிய வைத்த்து. எவ்வளவு கோபம் இருந்தால் அவர்கள் இதுமாதிரி வெறித்தனமாகச் சிந்தித்து இருப்பார்கள். அனைத்து ஆவணங்களையும் அப்படியே உள்ளது உள்ளபடி பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். எதிர்கால சந்ததியினருக்குப் பாடம் போதிக்க..



இருந்தபோதிலும் அந்தக்குழியில் இருந்து வெளியே சுவாசிக்க வியாட்நாமியர்கள் பூமியை நோக்கிப்போடப்பட்ட துளையின் வழியாக, அமெரிக்க இராணுவம் மோப்ப நாய்களைக்கொண்டு கண்டுபிடித்து, அதற்குள் ரசாயண விஷவாயுவை பாய்ச்சி பலாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்துள்ளார். அந்த விஷவாயு காற்றில் கலந்து மிச்சசொச்ச மக்களின் நாசி வழி புகுந்து பலரை ஊனமாக்கியதோடல்லாமல் பல ஆண்டுகளுக்கு ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கும் அது வழிவகுத்துவிட்டதாக ஆதாரங்கள் காட்டுகிறன.

இப்படி மாறி மாறி தாக்கிக்கொண்டே இருந்ததால், நாட்டில் பசி பஞ்சம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. மக்கள் உயிருக்கு அஞ்சி நாலா பக்கமும் சிதறி ஓடி ஆற்றின் வழி நீந்தியே தப்பித்து மெக்கோங் ஆற்றங்கரையோரம் நெடுதூரம் தங்களது வாழ்வாதாரத்திற்கு அஸ்திவாரம் இட்டுக்கொண்டார்கள். சுற்றிலும் நீர். அந்தப்பக்கம் காடு. நகரங்களின் போர். நாடே சீர்குலைந்த நிலையில்.. உணவிற்குப் பஞ்சம். பசிக் கொடுமை என இந்தச் சிக்கல்கள் பல ஆண்டுகள் தொடந்துள்ளது. அன்று ஆரம்பித்ததுதான், உயிர்வாழ பலவிதமான உயிரினங்களைக் கொன்று உணவாக்கிருக்கின்றார்கள். பாம்பு, நாய், பூனை, சிலந்தி, தவளை, எலி, குரங்கு, புழுக்கள், பூச்சிவகைகள் என. இன்னமும் அவைகளை உண்கிறார்கள் சில இடங்களில். !





வாழ்க்கைச்சூழல்

அங்குள்ள மக்களின் வாழ்க்கைச்சூழல் மகிழ்ச்சியாகவே கழிகிறது. மக்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கின்றார்கள். சோம்பித்திரிகிற மக்களைக்காணவே முடியவில்லை. (சத்தியமான வாக்கு இது..)

பரபரப்பாகவே காணப்படுகிறார்கள். நாட்டை மேம்படுத்த தாமும் வளமுடன் வாழ அவர்களின் பங்களிப்பை  எறும்புபோன்ற சுறுசுறுப்பில் காணமுடிகிறது. ஒவ்வொருவரும் எதாவதொரு வியாபாரத்தில் தம்மை  ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.  தங்களின் தோப்பில் விளைகிற பழங்கள். தாங்கள் வளர்க்கின்ற கால்நடைகள். தாங்கள் நட்டுவைத்த காய்கறிகள். தாமே தயாரிக்கின்ற கைவினைப்பொருட்கள், பலகாரங்கள். திண்பண்டங்கள் என வழிநெடூக வியாபாரிகள் எதையாவது விற்றுக்கொண்டு தங்களின் உழைப்பைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.







வாகனங்கள்

தொண்ணூறுகளின் இறுதிவரை சைக்கிள் மற்றும் ரிக்‌ஷாதான் முதன்மை வாகனமாகப் பார்க்கமுடியுமாம். ஆனால் இப்போது எங்கே பார்த்தாலும் மோட்டார் வாகனம்தான் பிரபலம். தேன்கூட்டைச் சீண்டிவிட்டால், எப்படி தேனீக்கள் குபுகுபுவென வருமோ அதேபோல் மோட்டார் வானகமோட்டிகளின் படையெடுப்பு வேர்த்துவிறுவிறுக்கச்செய்கிறது.  பாதசாரிகள் சாலையைக் கடக்கமுடியாத அளவிற்கு மோட்டார் ஓட்டிகளின் இராஜ்ஜியம் நிலைகுலையச்செய்கிறது. எங்குபார்த்தாலும்  மோட்டர்கள்தான்.

கார்கள் குறைவு. கேட்டதற்கு, கார்களின் விலை மலேசியாவைவிட மூன்று மடங்கு அதிகமாம். கார் வாங்குவதற்கு அரசாங்கம் கூடுதல் கெடுபிடிகளை வைத்திருப்பதால் மக்கள் கார்கள் வாங்க அஞ்சுகின்றார்களாம். மேலும் சாலைகள் இன்னும் விரிவு படுத்தப்படாமல் இருப்பதால் கார்கள் வாங்குவதற்கு மறைமுக தடைகள் அங்கே அதிகம் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.

செல்வதற்கும் வருவதற்கு இரண்டு சாலைகள். பேருக்குத்தான் நடுவில் வெள்ளைக்கோடுகளை இட்டிருக்கின்றார்கள், இருந்தபோதிலும் சாலை குறுகலாகவே இருக்கின்றது. பஸ்ஸில் பிரயாணம் செய்கிற நாங்கள் மோட்டார் ஓட்டிகள் நுழைவதைப் பார்க்கையில் உச்சந்தலையே கூசுகிறது. அதிகமான மோட்டார் வாகனங்கள். நெடுஞ்சாலைகளில் கார் பஸ்களுக்கு நடுவில் மோட்டார் வாகனங்களைக் காணமுடியாத நாடான நம் நாட்டில் இருந்துவிட்டு அங்கே சென்றபோது `ஐய்யோ.. பார்த்து.. ஆ.. மோட்டரு..’ என்கிற முனகலை தற்காப்புக்கவசமாக கிசுகிசுத்துக்கொண்டோம்.


வணிகம்

நகரங்களில் நடைபழகச் சென்றபோது வியாபாரம் செய்கிற இடங்களில் உணவுப்பொருட்களை மிகவும் தூய்மையாக வைத்திருக்கின்றார்கள். இரவுச்சந்தைகளில் விற்கப்படும் உணவுகள் வாயில் எச்சிலை வரவழைக்கின்றன. வர்ண வர்ண அரிசியில் அவிக்கப்பட்ட சோறுவகைகளின்  (புழூர்) நறுமணம் மூக்கைத்துளைத்தது. கைகளில் பிளாஸ்டிக் உரைகளை அணிந்துகொண்டு உணவுகளைப் பரிமாறுகிறார்கள். சுடச்சுட செய்து விற்பனை செய்கிறார்கள்.  என்ன வேண்டும்.? இந்தா பிடி. காசு கொடு. மொழி தெரியவில்லை என்றால் எழுதி காண்பிக்கின்றார்கள்.  பேரம்பேசினால். பொருட்களை எடுத்து வைத்து விட்டு அவர்களின் வேலைகளில் மும்முறமாக ஈடுபடத்துவங்கிவிடுகிறார்கள். நாம் மீண்டும் அவர்களிடம் பேச எத்தனித்தால், நமக்கு நா வறண்டு விடுகிறது காரணம் அவர்களுக்கு ஆங்கில அறவே விளங்கமாட்டேங்கிறது. பெரிய சிக்கல் இதுதான். மொழிப்பிரச்சனை.


ஒரு வார்த்தைகூட ஆங்கிலம் தெரியாமல் பயணிகள் சகஜமாக வந்துபோகிற இடங்களில் வியாபாரம் செய்கிறார்கள்.

மொத்த வியாபரக் கடைகளில் கரைகண்ட வியாபாரிகள், பயணிகளைக் கண்டால் சூழ்ந்துகொண்டு, கைகளைப்பிடித்துக்கொண்டு அவர்கள் விற்பனை செய்கிற பொருட்களை வாங்கச்சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிக லாபத்திற்கு அவர்களின் பொருட்களை நமது தலையில் கட்டப்பார்க்கின்றார்கள். . ஆனால் சிறுதொழில் அங்காடிகள், யாரையும் சட்டை செய்வதில்லை. வாங்கு, இல்லையேல் இடத்தைக்காலி செய், என்பதைப்போல் இருந்தது அவர்களின் முக பாவனைகள்.

dong

வியட்நாம் dong ஐ ஆயிரம் தடவைகள் என் பிள்ளைகளும் கணவரும் எனக்கு விளக்கம் கொடுத்து புரியவைக்க முயன்றிருப்பார்கள். என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. கோடிகோடியாய் கொடுத்து பொருட்களை வாங்க மனம் பதறுகிறது.

உடைகள் தைக்க அழகான துணி ஒன்றினைத்தேர்ந்து எடுத்தேன்.  விலை 1, 400,000 dong. ஐய்யோ கடவுளே. என்ன கணக்கு இது? என்று கணவரைத்தேடினால் . ஆள் நைசாக நழுவி விட்டார். பக்கத்தில் இருந்த மகளை அழைத்து கணக்குக்கேட்டால், பதிநாலுல பாதி, ஏழு. ஏழில் ஒன்று கூட்டினால் எட்டு. எட்டை இரண்டால் பெருக்கினால் பதினாறு. பதினாறுல பத்தைக்கூட்டுங்க.. இருபத்தி ஆறு. இருபத்தாறுபத்து? என்றாள்,  எனக்கு தலை சுற்றலே வந்துவிட்டது. பிறகு வியாபாரியே மலாய் மொழியில் பேச ஆரம்பித்தாள். ஆறுதலாக இருந்தது. கணக்குப் போட்டுப்பார்த்து, விலையை பாதிக்குப்பாதி குறைந்து பேரம் பேசி வாங்கினோம். விலையை அப்படித்தான் குறைத்து வாங்கவேண்டுமென்று எங்களின் பயணவழிகாட்டில் பஸ்ஸை விட்டு இறங்குகிறபோதே அறிவித்துவிட்டார்.

மெக்கொங் ஆறு

மெக்கோங் ஆற்றில் பேர்ரி சவாரி. ஆற்றைச்சுற்றிப்பார்த்தல். ஏன் ஆறு அங்கே அவ்வளவு பிரபலம். ஒரு காலத்தில் வணிகம் செய்ய உலக வணிகர்கள் ஆற்றைத்தான் முதன்மை போக்குவரத்து சாதணமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

ஆற்றின் மூலம் பொருட்களையும் நாட்டின் வளங்களையும் சைகோன் சிட்டி (ஹோ சி மின்’இன் பழைய பெயர்.) நகரத்திலிருந்து தத்தம் ஊர்களுக்கு கொள்ளையடித்துச்சென்றுள்ளார்கள்.







கப்பல் போக்குவரத்திற்கும் வனிகத்திற்கும் மிக வசதியாக நாட்டின் மையப்பகுதியில்  அமைந்துவிட்டதால் ஒரு காலத்தில் சைகோன் நகரம் பரபரப்பு மிகுந்த நகரமாக காட்சியளித்துள்ளது.

இயற்கை எழில்

வியட்நாம் நீர் வளம் கொழிக்கும் ஓர் அற்புத நாடு. ஒரு நாட்டிற்கு மிக முக்கியமான செல்வம் நீர். அதற்கு அங்கே பஞ்சமில்லை. எங்கு பார்த்தாலும் ஆறுகள் ஆறுகள் ஆறுகள். வழியெல்லாம் பாலங்கள். பாலங்கள் கட்டியே நாடு ஏழையாகிவிடும் போலிருக்கு.! காணும் இடமெல்லாம் பாலங்கள். ஆற்றைக்கடக்க முன்பு படகுசவாரிதான் முதன்மை போக்குவரத்து. இன்றும் சில இடங்களில் படகுதான் போக்குவரத்து வாகனம்.

நாடு வளரவளர மக்கள் வாழ்வாதாரங்களைத்தேடி நாடு நகரம் உலகம் என  நாலாப்பக்கமும் சென்றுவிட்ட காலகட்டத்தில் இருக்கின்ற பட்சத்தில் படகுகளைச் செலுத்துவது குறைந்த வருமானம் தரும் தொழிலாகப் பார்க்கப்படுவதால், மேலும் அது பழய காலத்துப் பாணியாக கருதப்படுவதால், படகுகளைச் செலுத்துவதற்கு ஆட்கள் குறைந்து காணப்படுகிறார்கள். மேலும் தற்போது மோட்டார் வாகனங்கள் மக்களின் தேர்வாக இருந்தபடியால், இக்கரையில் இருந்து அக்கரைக்குச்செல்ல பல இடங்களில் பாலங்கள் வேறு கட்டப்பட்டுவிட்டன. நவீன வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய பெரிய பாலங்கள் தொடங்கி, தென்னை மரங்களால் ஆன மிகச் சிறிய பாலங்கள் வரை.. எங்குபார்த்தாலும் பாலங்கள். ஒரு கிராமத்திலிருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லவேண்டுமென்றால் ஆற்றைக்கடக்கவேண்டும். பாலம் இல்லாத இடங்களில் ஏழ்மை நிலையில் உள்ள படகோட்டிகள் தங்களின் குலத்தொழிலான படகோட்டித்தொழிலை இன்னமும் செய்துகொண்டிருப்பதைக் காணலாம். பஸ் நிறுத்தும் இடங்களைப்போல் படகு நிறுத்திவைக்கப்பட்டு பிரயாணிகளுக்காக அது மிதந்துகொண்டிருப்பதையும் ஆங்காங்கே காணலாம்.


நீர் வளம் மிகுந்த நாடு என்றால் சொல்லவே வேண்டாம்... கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று பயிர்கள். நெல்வயல்கள். மரங்கள். பழங்கள். செடிகொடிகள் என கணகளுக்கு விருந்தளிக்கின்ற காட்சிகள் மனதை அள்ளிச்செல்கின்றன. இந்தச்சூழல் தூய்மையான காற்றைக்கொடுப்பதால் மனம் லேசாகிப்போகிறது. கடுமையான வெப்பத்தில் சிக்குண்ட நாடான மலேசியாவில் இருந்து சென்றதால், அங்குள்ள சிதோஷ்ண நிலை மனதை ரம்மியமாக்கிக்கொண்டே இருந்தது. மாலைப்பொழுதானால் கருமேகங்கள் சூழ்ந்து லேசான தூரலை நம்மீது தெளிக்கின்ற போது ஏற்படும் பரவச உணர்வு சொர்க்கம். 

காலைப்பொழுதுகளில் சாலையெல்லாம் பனியினால்  நனைந்திருப்பது, மர இலைகளில் இருந்து பனி சொட்டுவதும், பூக்களின் மேல், புல் நுணியின் மேல் பனி போன்ற காட்சிகள் தற்போதைய சூழலில் அபூர்வம்.  இதை அங்கு காண்கையில் அது நம்மை எங்கேயே இட்டுச்செல்கிறது. இயற்கையை நேசிக்கின்ற  என்னைப்போன்ற ஜீவராசிகளுக்கு இக்காட்சிகள் வரப்பிரசாதம்.

ஒரு காலத்தில் எங்களின் நாடும் இதே சூழலில்தான் இருந்தது. இன்று ஏன்அப்படி இல்லை.?

சுவைதரும் பழங்கள்

பழங்களுக்குள் கற்கண்டைக் காய்ச்சி ஊற்றியிருப்பதைப்போல் பழங்களின் சுவை தித்திப்பு.

அங்குள்ள உணவு மனநிறைவைத்தராததால் உணவுவேளைகளின் போது பலவிதமான பழங்கள் எங்களின் பசியினைப்போக்கியது. பழங்களை நிறைய வாங்கி வழிநெடூக சாப்பிட்டுக்கொண்டே சென்றோம். அற்புதமான ஆசியன் பழங்கள் அவையனைத்தும்.

கையிற்கெட்டிய தூரம் பழமரங்களில் இருந்து பழங்களைத் தாமாகவே பறித்து உண்ணலாம். அவ்வளவு பழங்கள் வழியெங்கும். யாரும் எதுவும் கேட்கவில்லை. சுற்றுலா பயணிகளான நாங்கள் வேண்டிய மட்டும் longgan மற்றும் கொய்யாப்பழங்களைப் பறித்து உண்டோம். எட்டாத மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டார்கள். ரசித்து மகிழ்ந்தோம்.

காண்கிற இடமெல்லாம் நன்கு செழிப்பாக வளர்ந்து நிற்கின்ற பழமரங்கள். ஆற்றோரங்களில் sea coconut க்குப் பஞ்சமேயில்லை. sea coconut மலேசியாவில் பிரபலம். நோன்புக் காலங்களில் நோன்புச்சந்தைகளில் பானங்களாகச் செய்து வியாபாரம் செய்வார்கள். வியாபாரம் தூள்பறக்கும்.



டிரஃக்கன் ஃப்ரூட் மிகப்பிரலம். சாலையில் செல்லுகையில் லாரி லாரியாக அப்பழங்களை ஏற்றிச்செல்வதைப் பார்க்கலாம். அங்கு செல்ல நினைப்பவர்கள் அங்குள்ள பழங்களைச் சுவைக்காமல் வராதீர்கள். கூடுதல் சுவையுடன் கிடைக்கின்ற அற்புத பழவகைகளை தவறவிடாதீர்கள்.


கைவினைப்பொருட்கள்

முட்டை ஓட்டினை வைத்துக்கொண்டு அற்புதமான கலைப்படைப்புகளை செய்து வியாபாரம் செய்கிறார்கள். போரில் பாதிக்கப்பட்டு உடல் ஊனமுற்றவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இத் தொழில்பட்டறை ஆரம்பிக்கப்பட்டதாக சுற்றுலா வழிகாட்டி அறிமுகப்படுத்தினார். இன்று அது மிகப்பெரிய தொழிலாக பரிணமித்திருப்பதைப் பல இடங்களில் பார்க்க ஆச்சிரியமாகவே இருந்தது. உடற்பேறு குறைந்தவர்கள்தான்  அக்கலையினில் கைத்தேர்ந்தவர்களாகக் காணப்படுகிறார்கள். இன்னமும் அங்கே உடல் ஊனமுற்றவரகள் பணிபுரிவதைப் பார்க்கலாம். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே கருப்பு அட்டையினில் வெள்ளையாக வரையப்பட்ட அற்புத ஓவியத்தில் தூளாக்கி வைத்திருக்கின்ற முட்டை ஓடுகளைத் தூவி அதை அழகுபடுத்தி பிரமாண்ட கலைப்படைப்பாக மாற்றுகிறார்கள். கண்கவர் படைப்புகள் அனைத்தும். இருப்பினும் வாங்குவதற்குத்தான் இயலவில்லை. காரணம் அதிகமான விலை.  பூ வைக்கின்ற சிறிய கூஜா கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்.

அந்நிறுவனம் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுவருவதால் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். எங்களின் குழுவில் வந்த எவரும் அங்கே பொருட்களை வாங்கியதை நான் பார்க்கவில்லை.





தென்னை ஓலையில் பலவிதமான கைவினைப்பொருட்களை உடனுக்குடன் தயார் செய்தும் தருகிறார்கள். தொப்பி. கூடை. கைப்பை. முறம் என நிறைய.. . பயண வழிகாட்டிக்கூட அப்பொருட்களைச் செய்வதில் கைத்தேர்ந்தவராகவே திகழ்ந்தார். மட்டையைக் கிழித்து கண்மூடிக் கண் திறப்பதற்குள்  தோடு, கைசெயின், சங்கிலி, நெற்றியில் கட்டுகிற பட்டை, பெல்ட், தட்டான், வெட்டுக்கிளி என தயாரித்துவிட்டார். இன்றைய காலகட்டத்து இளஞர்களுக்கு அது அதிசயம். கண்களை அகல விரித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் எனக்கோ இது பழைய பாணி காரணம் நாங்கள் முன்பு விளையாடியதே இதுபோன்ற கைவினைப்பொருட்களைத் சொந்தமாகத்தயாரித்துத்தான். தென்னை மட்டையை மூன்று அல்லது இரண்டு பாகமாகப்பிரித்து சடைபோல் பின்னத்தெரிந்தால் போதுமே, எல்லாமும் அதற்குள் அடக்கம்தான்.


மிதக்கும் சந்தை










வியட்நாம் பயணமென்றாலே மிதக்கும் சந்தைதான் பலரின் சிந்தனைக்குள்  மின்னி மறையும். இன்றுகூட வியட்நாம் என்று இணையத்தில் தட்டினால், மிதக்கும் சந்தையினைப் படமாகப்போட்டுத்தான் அறிமுகம் செய்துவைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அச் சந்தை அங்கே மிகவும் பிரபலம்.

ஐநூறு ஆயிரம் ஆண்டு காலமாக எங்கெங்கோ இருக்கின்ற விவசாயிகள் தங்களின் விளைப் பொருட்களை வியாபாரம் செய்ய அதைப் படகில் ஏற்றிக்கொண்டு வழிநெடுக வசிக்கின்ற மக்களுக்கு வியாபாரம் செய்துவந்திருக்கின்றார்கள். படகில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு இடத்திற்கு வந்து சூழ்ந்துகொள்கிறார்கள். பஸ்போன்ற பேர்ரி மக்களை ஏற்றிக்கொண்டு வந்து அங்கே நிறுத்துகிறது. அந்த பேர்ரியில் அமர்ந்தபடியே, அங்கே வட்டமடிக்கின்ற சரக்குப் படகுகளை அழைத்து பொருட்களை வாங்கிக்கொள்கிறார்கள். படகு, மோட்டார் போட், பேர்ரி ஜெனரேட்டர் சத்தம், மக்கள் கூவும் சத்தம் என்று பேரிரைச்சலாக இருப்பதால், சரக்கை ஏற்றிக்கொண்டு வரும் வியாபாரிகள், படகின் நடுவில் ஒரு நீண்ட குச்சியினை ஊன்றி, அதில் அவர்கள் என்னென்ன காய்கறி பழங்களை வியாபாரம் செய்கிறார்கள் என்பதை உதாரணமாகக் காட்டி வரிசையாகக் கட்டி வைத்திருப்பார்கள். வாங்குபவர்கள் தங்களின் கைகளைப் பயன்படுத்திக்  எத்தனையாவது எண்ணில் உள்ள பொருளை வாங்க நினைக்கின்றார்கள் என்பதனை விரல்களின் மூலம் காட்டினால், வியாபாரிகள் பேர்ரியின் அருகிலேயே கொண்டுவந்து கொடுத்து பேரம்பேசி விற்பனை செய்கிறார்கள்.

பூக்கள் தொடங்கி இறைச்சி மீன் வகைகள், காய்கறிகள் என தொடர்ந்து உணவு காப்பிப் பலகாரங்கள் என சூடுபறக்க பிஸ்னஸ் பரபரப்பாக நடைபெறுகிறது. படகில் ஆவி பறந்தால் சூப் செய்கிறார்கள் அல்லது காப்பி கலக்குகிறார்கள் என்று அர்த்தம். நாம் அவர்களைக் கொஞ்ச நேரம் உற்று நோக்கினால் துடுப்பைக்கொண்டு படகை நகர்த்தி நம்மிடம் வந்து ஆவி பறக்கின்ற காப்பியை கைகளிலேயே கொடுத்துவிட்டுச்செல்கிறார்கள். வாங்குவதற்கு ஆசையாக இருந்தபோதிலும், பயணவழிகாட்டி, பேர்ரியில் ஏறும்போதே சொல்லிவிட்டார்.. ஆற்றின் நீர் அசுத்தம் நிறைந்தது.  இவர்களால் ஆறு மாசுபட்டுக்கிடக்கிறது. அந்த நீரிலேயே அனைத்து வேலைகளையும் காலைக்கடன்களையும் முடித்துவிட்டு, அதைக்கொண்டே காப்பி தேநீர் பலகாரங்கள் சூப் போன்றவைகளையும் செய்வார்கள். வாங்கிச்ச்சாப்பிட்டுவிட்டு உற்சாகப் பயணத்தை பாழ்படுத்திக்கொள்ளவேண்டாம் என்று எச்சரித்துவிட்டதால், பார்வையாளராக மட்டும் நாங்கள் இருந்தோம்.

காணக்கிடைக்காத அற்புத காட்சி அது. சிலர் காலத்திற்கேற்ப மாறாமல் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக நிலத்தில் வீடுகளைக் கட்டாமல் படகிலேயே அப்படியே மிதந்தமேனியாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள் என்கிற ஆச்சரியமூட்டும் தகவலையும் பகிர்ந்துகொண்டார் பயண வழிகட்டி. கல்யாணம். குழந்தைப்பிறப்பு. குடும்பம் நடத்துதல் என எந்த ஒரு பிக்கல் பிடுங்கள் இல்லாமல் பேராசையற்ற மக்களாக நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று சொன்னபோது, வீடுபோல் கூடாரம் அமைத்திருந்த ஒரு படகிற்குள் நடப்பவற்றில் என் கவனம் சென்றது.

துணிமணிகளை பெண்பிள்ளை  உலரப்போடுகிறாள். தாயோ பாட்டியோ தெரியவில்லை மீன்களை ஆய்ந்துகொண்டிருந்தார். பின் பக்கம் ஒரு பையன் வாளியின் மூலமாக படகின் உள்ளே புகுந்த நீரை வெளியே வாரி வாரி இரைத்துக்கொண்டிருந்தான். இதை ஓவியமாகத்தீட்டினால் அழகான கலைப்படைப்பு ஒன்று உருவாகியிருக்கும். கேமராவோ மகனிடம். கைப்பேசியோ கணவனிடம். அவர்களுக்கு இதெல்லாம் சாதாரண வாழ்க்கைச்சூழல். ஆனால் எனக்கோ அது கலை. ஜென். கண்களால் சிந்தைக்குள் க்ளிக் செய்துகொண்டேன். சுவாரஸ்யமான அனுபவம். காணக்கிடைக்கா காட்சிகள் அவை. எப்படியெல்லாம் மக்கள் வாழ்கிறார்கள் என்பது புது அனுபவமாகவே இருந்தது எனக்கு.

தொண்ணூறுகள் வரை பரபரப்பாக இருந்த இந்த மிதக்கும் சந்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகக் கூறி குறைபட்டுக்கொண்டார் பயணவழிகாட்டி. நாடு வளர வளர், நாலாபக்கமும் நவீன பாலங்கள் கட்டப்பட்டவுடன், மக்கள் ஆற்றோரங்களுக்கு வருகை புரிவதைக் குறைத்துக்கொண்டு வண்டி வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருட்களை தங்களின் அன்றாடத்தேவைகளுக்கு வாங்கிக்கொள்கின்றார்களாம்.  அலைச்சல் குறைவு நேராக வீட்டின் வாசலிலேயே விற்பனைக்குக் கொண்டுவந்தும் கொடுக்கின்றார்களாம். இதனால் வருங்காலத்தில் நாட்டின் அடையாளமாகத்திகழும் மிதக்கும் சந்தை இல்லாமலும் போகலாம் என்கிறார் பெருமூச்சுடன்.

உணவு..

இதுதான் பெரும்பிரச்சனை நமக்கு. நமக்கு என்றால் இந்துக்களுக்கு. நாம் பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களாக இருப்போம். இல்லையேல் நடப்பது ஊர்வது பெரியது எல்லாம் சாப்பிட மாட்டோம். கோழி இல்லையேல் மீன் தான். ஆனால் அங்கே தொண்ணூற்று ஒன்பது விழுக்காடு உணவில் பன்றி இறைச்சியினைச் சேர்த்துக்கொள்கிறார்கள். சைவசாப்பாடு கிடைப்பது குதிரைக்கொம்பு. சைகோன் ஹாலால் உணவகங்களில் கிடைக்கலாம் ஆனால் அதைத்தேடி நாம் போகவேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் கிடைக்கும் மற்றபடி உணவிற்கு நாயாய் அலைய வேண்டி வரும்.


மீன் உணவை உண்ணலாம் என்றால், மீனைப்பிடித்து நேராக கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுத்து பரிமாறிவிடுவார்கள் போலிருக்கு. ஒரு வித கவுச்சி வாடை குமட்டுகிறது. கொஞ்சங்கூட வாசனையே இல்லை சமையல்களில்.

காய்கறிகளை சமைக்காமலேயே வைத்துவிடுகிறார்கள். பொரித்த மீன் அருகில் எழுமிச்சையை துண்டாக வெட்டி வைத்துவிடுகிறார்கள். அரிசி மாவில் செய்யப்பட்ட  அப்பம், காகிதம் போல் மெலிதாக உள்ளது அதையும் கூடவே வைத்துவிடுகிறார்கள். இது எதுக்கு? என்றால், பதில் பேசமலேயே மீனைப் பிய்த்துகாகிதம்போன்ற அப்பத்தில் வைத்து பச்சையாக உள்ள காய்கறி கீரைவகைகளை அதில் வைத்து, இடியப்பம்போன்ற ஈரமான நூடூலையும் அதில் அடுக்கி, அதன் மேல் எழுமிச்சஞ்சாற்றைப் பிழித்து அதைச் சுருட்டி நம்மிடம் வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அதுதான் சாப்பாடாம். ! அதன் பிறகு சூப். கொஞ்சம் சோறு. வாட்டிய இரால். வாட்டிய பன்றி இறைச்சி.

மேஜை நிறைய உணவு ஆனால் என் மகன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். கணவர் நல்லாருக்கு நல்லாருக்கு என்று போலியாய் சுவைத்துக்கொடிருந்தார். மகள் கடமைக்கு சூப்’ஐ கொஞ்சம் சுவைத்தாள். செய்துவைத்த சுருள் அப்பத்தை நான் கஷ்டப்பட்டு விழுங்கினேன்.

சாப்பாடு நமக்கு ஒத்துவராது. நாம் அதற்குச் சரிபட்டுவர மாட்டோம்.

காப்பி ஆஹா அற்புதம். ப்ளாக் காப்பி குடி, பிரமாதமென்று என் சீனத்தோழிகள் என்னிடம் கூறி அனுப்பினார்கள். முடிந்தால் காப்பி வாங்கிவா. வியட்நாம் காப்பி ஆஹா ஓஹோ அருமை. என்றார்கள். நிஜமாலுமே காப்பி பிரமாதம். செல்லும் இடமெல்லாம் காப்பியை கலக்கிக்கொடுக்கச்சொல்லி உணவிற்கு பதில் இரவுபகல் பாராமல் காப்பியை அருந்தி அகமகிழ்ந்தேன்.
எப்படியாவது காப்பி வாங்கவேண்டுமென்றும் காத்திருந்தேன்.

பயணவழிக்காட்டியும், இங்கே வந்தவர்களின் கவனத்தை காப்பி அதிகம் கவரும். ஆக, காப்பிப்பருக மறக்கவேண்டாம், என்று சொல்லி எங்களையெல்லாம் ஒரு பிரமாண்ட காப்பிக்கடைக்கும் அழைத்துச்சென்றார்.

அங்கே பயணிகளுக்கு இலவசமாகக் காப்பியும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் மட்டுமல்ல நிறைய பயணிகள் அங்கே. நெரிசலில் முட்டிமோதிக்கொண்டிருந்ததால் ஒரு வரவேற்பு அறையில் சிலரை கொஞ்சநேரம் அமரவைத்தார்கள். அந்தக் குழுவில் நானும் இருந்தேன்.

அங்கே தொலைக்காட்சியில் சிறந்த காப்பி எப்படித்தயாரிப்பார்கள் என்பதை அக்குஅக்காகக் காண்பித்தார்கள்.

கூண்டில் அடைக்கப்பட்ட பல மூசாங் பூனைகளிடம் பழுத்த காப்பிப்பழங்களைக் கொட்டுகிறார்கள். அப்பழங்களை அவைகள் தேர்ந்தெடுத்து உண்கின்றன. உண்டபிறகு மலம் கழிக்கின்றன. புழுக்கைகளாக `நாய் பீ’ மாதிரியான வடிவத்தில் அங்கே கிடத்தியிருக்கின்ற தட்டில் விழுகிறது அவைகளின் மலம். மறுநாள் அதைச்சேகரித்து சிறந்த காப்பித்தூளாக மாற்றுகிறார்கள்.


இதைப்பார்த்தபிறகும் நான் காப்பிக்குடிப்பேனா.?

`யம்மா, மலத்தையும் விட்டுவைக்கலையா இவர்கள்.? என்று மகள் முனகிக்கொண்டே பஸ் ஏறினாள்.

மதமற்றவர்கள்.

“வியட்நாமில் மதம் இல்லை. எங்களுக்கு மதம் எப்போது உதவும் தெரியுங்களா.? அரசாங்க வேலை வாய்ப்பின்போதுதான். அங்கேதான், ` நீ என்ன மதம்?’ என்று பூர்த்தி செய்கிற பாரத்தில் கேட்டிருப்பார்கள். அவ்விடத்தை எதையாவது கொண்டு நிரப்பவேண்டும் என்பதற்காக வழிவழியாக கடைபிடித்துவந்த மதம் என்ற ஒன்றினைப் பயன்படுத்திக்கொள்வோம். மற்றபடி மதம் எங்களுக்கு எதற்கும் உதவுவது கிடையாது. பொதுவாகவே நாங்கள் மதமற்றவர்கள். அதனால்தான் இங்கே கோவில்கள் குறைவு.”

பயணவழிகாட்டி பகிர்ந்துகொண்ட தகவல்..




கசப்பான அனுபவம் -

மொத்த வியாபாரக்கடையில் துணியெடுக்கச்சொல்லி அந்த கடை முதலாளி எங்களை வற்புறுத்திக்கொண்டிருந்தாள்.

கைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு கெஞ்சி கூத்தாடிக்கொண்டிருந்தாள். ஏழை வறுமை ப்ளீஸ், என்று மன்றாடினாள். தப்பிக்கமுடியாத அளவிற்கு எங்களைப் பிடித்துவைத்துக்கொண்டாள். கேட்டவிலையில் இருந்து பாதிக்கும் மேல் குறைத்துக் கேட்டும் முடியாது என்று சொல்லி, இறுதியாக சரி என்று அதே விலைக்கும் வந்தாள். அதாவது ஆடை தைக்கின்ற  தையற்கூலியுடன். மூன்று மணிநேரத்திற்குள் தைத்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தாள்.  இரவு பத்துமணிக்குள் ஹோட்டல் அறைக்கே கொண்டுவந்து கொடுக்கின்றோம் என்று வாக்கு கொடுத்தாள். சரியென வியட்நாம் சுடிதார்.. (பார்க்க அப்படித்தான் இருக்கும் அவர்களின் பாரம்பரிய உடை) ஒன்றை மகளின் அளவிற்கு தைக்கக்கொடுத்து, தங்கும் அறையின் எண், தொலைப்பேசி எண் போன்ற விவரங்களைக் கொடுத்து, பணத்தையும் முழுமையாகச் செலுத்திவிட்டு, பத்து கிலோமீட்டருக்கு அப்பாலில் உள்ள ஹோட்டலுக்கு வந்துவிட்டோம்.

இரவு பதினொன்றாகியும் ஆடை வரவில்லை. ரிஷப்பஷனில் கேட்டபோது, ஏமாற்றமாட்டார்கள் வரும். கவலைவேண்டாமென்று ஹோட்டல் ஊழியர்கள் எங்களைச் சமாதானப்படுத்தினார்கள்.

இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். அழைப்பு வந்தது. ஆடை வந்துவிட்டது என்று சொன்னார்கள். கீழே இறங்கி அறைக்குக் கொண்டுவந்து எடுத்துப்பார்த்தால், ஒரு ஜோடியாக இல்லாமல் அந்தக் கலாச்சார உடையின் சட்டை மட்டுமே இருந்தது அதில்.

நான் அவளின் தொலைபேசி எண்களை வாங்கிவைத்திருந்ததால், அந்த இரவே அவளுக்குத் தொலைபேசி அழைப்பு கொடுத்து கொஞ்சம் கோபமாகவே கேட்டேன்.

காலையில் நன்கு அங்கிலம் மலாய் என்று பேசியவள் இரவில் மொழி தெரியாததுபோல் நாடகமாடினாள். சோர்ந்துபோனேன். ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்கிற உளைச்சலில் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தேன்.


உடம்புப்பிடி/மெனிக்ஃயோ./பெடிக்ஃயோ

தயவுசெய்து செல்லாதீர்கள். அதிகவிலை. குறைந்தவிலை என்று சொல்லி உள்ளே அழைத்துச்சென்று டிப்ஸ் என்கிற பெயரில் இன்னும் இவ்வளவு கொடுங்கள், என்று கேட்டு வாங்குவார்கள். எங்கள் விஷயத்தில் எங்களை உடம்புப்பிடி பார்லரில் விட்டுவிட்டு பாருக்குச்சென்றுவிட்டார் கணவர். எல்லாம் முடிந்தபிறகு இன்னும் இவ்வளவு கொடுங்கள் என்று கேட்கத்துவங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி, கால்பிடித்துவிட ஒரு ஆள். உடம்பு பிடித்துவிட ஒரு ஆள் ஆக மொத்தம் இரண்டுபேருக்கு இவ்வளவு டிப்ஸ் என்று கேட்டு வாங்குகிறார்கள். எங்களிடம் பணமில்லை என்றால் கணவரை வரச்சொல்லுங்கள் என்கிறார்கள். அவர் வந்து ஏற்கனவே ஆறாவது மாடியில் பணம் செலுத்திவிட்டோம் இன்னும் என்ன இங்கே? என்று கேட்டதிற்கு, அங்கே மசஜுக்குப் பணம். அது முதலாளிக்கு. டிப்ஸ் எங்களுக்கு. என்றார்கள். அதுவும் கசப்பான அனுபவமே.



 நடக்கவேண்டும்..

பயணங்களில் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நல்ல காலணிகளைப் பயன்படுத்துங்கள். இல்லையேல் பயணம் பாழாகும். சைக்கிள் சவாரியெல்லாம் செய்யச்சொல்வார்கள் கிராமங்களைச் சுற்றிப்பார்க்க. ஆக தோதான ஆடைகளையும் அணிந்து செல்லுங்கள். புடவை, வேட்டி எல்லாம் வேண்டாம்.  

அப்படி இப்படி சில மைனஸ்கள் இருப்பினும், வியட்நாம் பயணம் சிறப்பான பயணமாகவே எங்களுக்கு அமைந்தது. விட்டுவர மனமில்லை அந்த ரம்மியமான சூழலை. மீண்டும் செல்வேன் வாய்ப்புக்கிடைத்தால்... 

செவ்வாய், ஜூலை 01, 2014

கணவன்

முன்பு என்னோடு வேலை செய்த நண்பன் ஒருவனை நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்று சந்தித்தேன்.

பணியிட நண்பர்தான். சொந்தத் தொழில் ஆரம்பித்தவுடன் பணியை ராஜினாமா செய்துவிட்டு மலாக்கா சென்றுவிட்டார்.

சீனர்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது ஒரே இடத்தில் நீண்ட நாள் வேலை செய்யமாட்டார்கள். வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு, வேறொரு அனுபவம் தேடி மற்றொரு துறை அல்லது அந்தவேலை சம்பந்தமாக இருக்கின்ற சொந்தவேலை எதேனும் செய்து குட்டி முதலாளியாகவாவது ஆகிவிடுவார்கள். எவ்வளவு பெரிய பதவியினை வகித்தாலும், சர்வசாதாரணமாக வேலையைத் தூக்கிப்போட்டுவிட்டு இடத்தைக் காலி செய்து நகர்ந்து விடுவார்கள். பெரும்பாலும்...

அதே போல் என் நண்பனும் எங்களின் நிறுவனத்தில் வேலையினைக் கற்றுக்கொண்டு சொந்தமாகத்தொழில் தொடங்கி, கம்பனிக்கே supplier ஆக வந்துவிட்டார்.

நாங்கள் இருவரும் ஒரே floor யில் வேலை செய்து, அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வதால், நெருக்கமாக நண்பர்கள் ஆனோம். உணவை ஊட்டிக்கொள்வது. உடல் நலமில்லை என்றால் மருந்து வாங்கித்தருவது. எங்கேயாவது சென்றுவந்தால் எனக்காக எதையாவது வாங்கிவருவது என.. நானும்தான், வேலைக்கு எடுத்துச்செல்கிற உணவை அவனுக்கும் சேர்த்து எடுத்துச்செல்வது, நல்லநாள் பெருநாள் என்றால் எதாவது வாங்கித்தருவது என..

எப்போது கூடுதல் நெருக்கம் வந்தது என்றால், ஒரு நாள் எனக்கு கடுமையான காய்ச்சல் சளி இருமல். வேலைக்குச்சென்று  ஏர்கோண்ட் பட்டவுடன் குளிர்காய்ச்சலும் சேர்ந்து வரத்துவங்கிவிட்டது. மெடிகல் லீவு கிடைத்தபோதிலும் உடலெல்லாம் ஒரே வலி என்பதால், கார் ஓட்டி வீட்டிற்குச் செல்ல இஷ்டமில்லாமல் ஸ்டோர் அறையில் இருந்த ஒரு ஷோபாவில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டேன்.

ஸ்டோர் உள்ளே, எதோ ஒரு பொருளை எடுக்க  நுழைந்த அவன், நான் குளிரில் நடுங்கி தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து, என்னை எழுப்பாமல், அவனின் அலுவலக கோர்ட்’ஐ என்மேல் போர்த்திவிட்டுச் சென்றுள்ளான். மாலையில் எழுந்து பார்க்கின்றபோது என்மேல் ஒரு கோர்ட் போர்த்தப்பட்டிருந்தது. என்ன இது ? யாருடையது? என்று யோசிப்பதற்குள், அவனே வந்து நடந்தவற்றைக்கூறினான்.

அதுமட்டுமல்ல நான் தொடர்ந்து இரண்டு நாள் மெடிகல் லீவில் வீட்டில் இருந்தபோது, குறுந்தகவல் மூலம் நலம் விசாரித்தபடியே இருந்தான். அன்று தொடங்கி இன்றுவரை நல்ல நண்பர்கள் நாங்கள்.

அப்படியே நெருங்கிப்பழகப் பழக எங்களுக்குள் ஒளிவுமறைவு அற்ற நட்பு வளரத்துவங்கியது. சில ரகசியங்களை என்னோடு வெளிப்படையாகப் பகிர ஆரம்பித்தான். அதாவது, அவனின் சிறுவயதுக் காதலி அவனைவிட்டு விலக நினைப்பது. யாரோ ஒருவனை நம்பி அவனுடன் ஓடிப்போன அவளை மனவுளைச்சலுடன் தேடிக் கண்டெடுத்து மீட்டு வந்தது. திருமணம் செய்கிறபோது பணநெருக்கடியில் சிக்கிக்கொண்டது. திருமணம் செய்தபின் வேலையை விட்டு சொந்த தொழில் ஆரம்பித்து நட்டத்தில் மாட்டிக்கொண்டது. மனைவிக்கும் இவனுக்கும் ஓயாமல்  சண்டை வருவது. போகும் இடமெல்லாம் திருமணம் ஆகி ஐந்துவருடங்கள் கழித்தும் இன்னும் குழந்தை இல்லையா ? உனக்குப் பிரச்சனையா? என உறவுகள் கேள்வி கேட்பது என இப்படியே தொடர் இடர்கள் அவனைத்தாக்கத்துவங்கியது.

மனம்விட்டுப்பேசுகிற சுபாவம் இருந்ததால் தப்பித்துக்கொண்டான். இல்லையேல் தற்கொலையே செய்துகொண்டிருப்பான்.

இப்போது ஓரளவு நன்றாக வந்துவிட்டான். மகிழ்ச்சி.

வேலை விஷயமாகக் கம்பனிக்கு வருகிற வேளை இருந்தால், தவராமல் எனக்குத் திண்பண்டங்களை வாங்கி வந்து குஷிபடுத்துவான். வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை.

நீண்ட நாள் கழித்து இன்று சந்தித்ததால், இருவரும் சாப்பிடச்சென்றோம்.

தமக்குக் குழந்தை பிறந்துவிட்ட இனிய செய்தியினை என்னோடு பகிர்ந்துகொண்டான். எப்படி என்று தொடங்கி, நீண்ட நெடிய கதையினைக் கூற ஆரம்பித்தான். வழக்கமான கதைகள்தான். மருத்துவ ஆலோசனை. கட்டுப்பாடு. ஒழுக்கம். மன அமைதி. ஒருமுக சிந்தனை. காலநேரத்தோடு அட்டவனைப்படி உடல்சேர்க்கை. புகைப்பதை நிறுத்துதல்,  என தொடர்ந்தான்.
சுவாரஸ்யம் எது தெரியுங்களா.? மனைவி கர்ப்பக்காலகட்டத்தின் இறுதி மாதத்தின் போது கடுமையான மறதி வியாதியால் அவதிப்பட்டதுதானாம். கணவனையே காலையில் எழுந்தவுடன், ஏன் நீ என்னோடு தூங்குகிறாய்.? யார் நீ ? என்று கேட்கிற அளவிற்கு மறதி வியாதி அவளை ஆட்கொண்டதாகக் கூறினான். ஆச்சரியம்தான் என்றான் நகைச்சுவையாக.. ஒரு நாள் அவள் வேலைக்குச் செல்கையில் தமது உள்ளாடைகளை அணிந்துகொள்ளாமல் கிளம்பி சென்று விட்டாளாம். ! பணியிடத்தில் பலர் அவளைப் பார்த்து இது பற்றிக்கேட்கையில் தான் அவளுக்கே ஞாபகத்திற்கே வந்ததாம். ! இவனை அழைத்து எனக்கு உடனே உள்ளாடைகளைக் கொண்டு வா.. பால் கசிந்து உடையெல்லாம் நனைகிறது, என்று விரட்டியிருக்கின்றாள். வேலையிடத்தில் இருக்கின்ற இவன் செய்வதறியாமல், அவசர அவசரமாக துணிக்கடைகளுக்கு விரைந்து அவளின் அளவு கூட என்னவென்று தெரியாமல், அவளுக்கு உள்ளாடைகளை வாங்கித் தந்தானாம். அதை இன்னமும் சொல்லிச்சொல்லி சிரிப்பாளாம் மனைவி.

குழந்தை பிறந்த முதல் மாதத்தில் அவன் பட்ட அவஸ்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறான். குழந்தையோடு சேர்ந்து அவளும் அழுவாளாம். உடல் வலி, பால் கட்டிக்கொண்டு அவள் படும் அவஸ்தை என உறக்கமில்லாமல் பலநாள் அவதியுற்றதாகச் சொன்னான்.

நீ ஏன் அவஸ்தைப் பட்டாய்.? என்று கேட்டேன்.

மார்பு இரண்டும் வீங்கி வெட்டிப்பதைப்போல் இருக்கும். பரிதாபமாக இருந்தது. கோபிஸ் கீரையினை இலை இலையாக பிய்ந்து குளிர்ச்சாதணப்பெட்டிக்குள் வைத்துவிடுவேன். அதில் ஐஸ்பிடித்து கட்டியாக ஆனவுடன், அதை அப்படியே அவளின் மார்பில் வைத்து இரவெல்லாம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பேன். குழந்தைக்கு அந்த மார்பை எப்படிச் சூப்பிப் பால் பருகுவதென்று சொல்லிக்கொடுப்பேன். பம்ப் கொண்டு மார்பின் பாலை வெளியே எடுத்து, பாட்டலில் நிரப்பி பிரிட்ஜில் வைப்பேன். குழந்தை அழுகிறபோத அந்தப் பாட்டலை சுடுநீரில் வைத்து சூடு காட்டி குழந்தைக்குக் கொடுப்பேன்..

அய்ய்யோடா.... எப்பேர்ப்பட்ட கணவன் நீ... !! என்று அவனிடம் சொல்லி பெருமிதம் கொண்டேன். பாராட்டினேன். அத்தோடு நான் வாசித்த ஒரு விஷயத்தையும் அங்கே அவனோடு பகிர்ந்துகொண்டேன். அதாவது, எனக்குப்பிடித்த ஒரு எழுத்தாளர், அவர் மனைவியின் மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்பட்டபோது, அவரின் வாயால் அப்பாலை சலம் ரத்தத்தோடு உறிஞ்சு உறிஞ்சு வெளியே எடுத்துத் துப்பி மனைவியின் வலியினைக் குறைத்தார் என்று எழுதியிருந்தார். அதை நான் வாசிக்கின்றபோது மனம் நெகிழ்ந்தேன். அதுபோல்தான் இருக்கின்றது உன் கதையும் என்றேன். அதற்கு அவன், உன்னிடம் சொல்லவில்லை. வெட்கமாக இருந்தது. இருப்பினும் இப்போது சொல்கிறேன்.., நான் அந்த வேலையையும் செய்தேன். என்றான்.

ஆச்சிரியத்தில் என் கண்கள் அகல விரிந்தது. இப்படிப்பட்ட கணவன்மார்களை சினிமாவில்தான் நான் பார்த்துள்ளேன்.
நிஜவாழ்வில் `அய்யோ பாவம்.’ என்று உச் கொட்டிவிட்டு, இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம், அதான் உறவுகள் அருகிலேயே இருக்கின்றார்களே, அம்மா பார்த்துக்கொள்வார். மாமி பார்த்துக்கொள்வார்.. என்று விலகி நிற்கின்ற கணவன்மார்கள்தான் ஜாஸ்தி - நம்மவர்களில்...    

திங்கள், ஜூன் 02, 2014

நூல் புடவை

திருமணம் ஒன்றிற்குச் சென்றுவந்தேன். எங்கேயாவது சென்று வந்தால், அங்கு ஏற்பட்ட அனுபவங்களை அசை போட்டுப்பார்ப்பதில் எனக்குப் பிரியம். பகிர்கிறேன் என்ன சிக்கல் என்பதனை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
மண்டம் நிறைந்து வழிந்தது. செம்மையான கூட்டம். மிகப்பெரிய பிரமுகர் திருமணம் போல் கோலாகலமாக நடைபெற்றது. (சாதாரண ஆட்கள்தான்)
பெரிய மண்டபம், ஆட்கள் உள்ளே நகர்ந்து செல்வதற்குக் கூட இடைவெளி இல்லாத மேஜை நாட்காலிகளின் வரிசைகள். தொந்தி பெரிதாக உள்ள ஆள் உள்ளே நுழைந்து இருக்கைகள் தேட எண்ணினால், வர்சையாக அமர்ந்திருக்கின்ற ஆட்கள் எழுந்து நகர்ந்து வழிவிடவேண்டும். அவர்களும் நகர்கின்றபோது, பின்னே அமர்ந்திருக்கிற மற்றவர்களும் எழவேண்டும். அவர் எழவேண்டுமென்றால் அருகில் சுற்றி இருக்கின்ற மற்றவரும் நகரவேண்டும். இப்படியே எல்லா தடைகளையும் தாண்டி உள்ளே ஓர் இடம் கிடைத்தால், மணமக்களைப் பார்க்கமுடியவில்லை.
சரி யார்தான் பொண்ணு? (நாங்கள் மாப்பிள்ளை வீட்டார்) என்று எழுந்து நின்றால், `எம்மா கொஞ்சம் வழிவிடுங்க..’ என்று எங்களை ஓட்டுவதற்கு வேறு ஒரு ஆள் பக்கத்தில்...
மண்டபம் முழுக்க டீம் லைட். பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கூட கண்களுக்கு மங்களாகத்தான் தெரிகிறார்கள்.
எங்கோ ஒரு மூலையில் உறவில் கொஞ்சம் நெருங்கி நட்பு பாராட்டும் ஒருவர் எங்களைப் பார்த்து கைதூக்கினால், அவரைச் சென்று நலம் விசாரித்துவிட்டு வரலாம் என்றால்.. நகரமுடியவில்லை.
பிறகு அவர்களே முட்டிமோதி, நாங்கள் இருக்கின்ற இடத்திற்கு வந்து கைகளைக் குலுக்கி நலம் விசாரித்து, என்னமோ கேட்கின்றார்கள், ஒன்றுமே விளங்கவில்லை. டாலிங்கு டம்பக்கு டாலிங்கு டம்பக்கு காதுகளைக் கிழிக்கின்றது.
கெட்டிமேளம் சத்தம் கேட்டது. தாலி கட்டியாச்சு. மொய் கொடுக்கலாம் என்று திரும்பினால் நீண்ட வரிசை.
முதலில் சாப்பிடலாமே என்று சாப்பாட்டு வரிசை பக்கம் திரும்பினால்.. ஆத்தா.. கூட்ட நெரிசல்.. வரிசை S வடிவில் நிற்கிறது. வாசலில் போடப்பட்ட அழகான மயில் ரங்கோலி கோலத்தை அழித்துக்கொண்டு வரிசை.
அவ்வளவு பெரிய கூட்டத்திற்கு இரண்டே இரண்டு சாப்பாடு கவுண்டர்தான் திறந்துவைத்திருகின்றார்கள். சிறிய வரிசைதான்போல, என்று நானும் என் மற்றொரு உறவுக்கார பெண்ணும் நிறக ஆரம்பித்து, உணவின் மணம் நாவில் எச்சியை வரவழைக்க, ஊறிய எச்சிலை இருவரும் மடக் மடக் என்று விழுங்கிக்கொண்டு காத்திருந்தோம்.. குறைந்தது நற்பத்தைந்து நிமிடங்கள் காத்திருந்த பின் உணவு கிடைத்தது.
அதை எடுத்துக்கொண்டு சாப்பிட உற்கார இடம் தேடினால், இடைத்தைப் பிடித்துக்கொண்டு `ஆள் இருக்கு..’ `ஆள் இருக்கு..’ என்று விரட்டினார்கள். மீண்டும் முன்னே எம்பி எம்பி சென்று இடம் பிடித்து அமர்ந்து ஒருவகையாகச் சாப்பிட்டு முடித்தோம்.
சரி, மொய் கொடுக்கலாமே என்று மேடைக்குச்சென்றால், கீழே இருந்து உறவுகள் நண்பர்கள் என வரிசை. என் உறவுக்காரப் பெண்.. வாங்க மேடைக்குப் போகலாம்.. ஒரு போட்டோவாவது பிடித்துக்கொள்வோம். நாம் வந்திருக்குக்கின்றோம் என்கிற அத்தாட்சி அதுதான். நம்மை யாரும் கவனிக்கவில்லை. நாளைக்கு, நீங்கள் கல்யாணத்திற்கு வரவில்லை என்று யாராவது சொன்னால், போட்டோ இருக்கு.. சாட்சிக்கு, என்றார்.
சரி போகலாமே என்றால்.. மேடைக்குச் செல்லுகையில் காலணிகளைக் கலற்றிவைத்துவிட்டு, ஏறிய படியிலேயே இறங்குகின்றார்கள், காலணிகளை எடுக்க.. நெரிசல் அங்கேயும்..
வா.வா.. வா.. என்றவரை நைஸாக முன்னே தள்ளிவிட்டு, அப்படியே நான் விலகிக்கொண்டேன்.
மேலே, மேளதாளங்கள் வாசிப்பவர்கள் ஒரு பக்கம். ஷூட்டிங் எடுப்பவர் ஒரு பக்கம். கையில் கைப்பேசியை வைத்துக்கொண்டு, அங்கேயும் இங்கேயும் மணமக்களை புகைப்படம் எடுப்பவர்கள் ஒரு பக்கம்.. மொய் பையைப் பிடித்துக்கொண்டு அது நிறைந்து வழிவதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் பெற்றோர்கள் ஒரு பக்கம். பரிசுகளை அடுக்கத்திண்டாடும் பொண்ணு மாப்பிள்ளைகளின் உடன்பிறப்புகள் ஒரு பக்கம்.
வந்ததிற்கு நன்றி என்று சொல்வதற்கும்.. சாப்பிட்டுப்போங்கள் என்று சொல்வதற்கும் ஆள் இல்லை. மணமக்களின் பெற்றோர்கள் வேர்த்து விருவிருத்து செய்வதறியாமல்..
பெரிய குறை, நான் கட்டியிருந்த புடவையை யாரும் ரசிக்கவில்லை, தமிழ் நட்டில் வாங்கினேன். விலையுள்ள நூல் பட்டுப்புடவை அது.
:(((((((

வியாழன், மே 29, 2014

அழகு குறிப்பு

அழகுக்குறிப்பு.. (பெண்களுக்கு மட்டும். ஆண்கள் படிக்கவேண்டாம்)

பெண்கள் நாம், முகக்கிரீம்களை வாங்குகிறபோது, எப்போதுமே ஒரு செட் ஆகத்தான் வாங்குவோம். அப்படித்தான் கிடைக்கும். Skin milk, toner and moisturiser. தனித்தனியே வாங்குவதைவிட மொத்தமாக வாங்குகிறபோது, விலையில் அதிக மாற்றம் இருக்கும். செலவைக் கொஞ்சம் குறைக்கலாம். 

கண்டிப்பாக, இந்த மூன்றும், முக ஒப்பனைக்கு அவசியத்தேவை. இவைகள் இல்லாமல் முகத்தை ஒண்ணும்பாதியுமாக அலம்பிவிட்டு, பவுடரையோ அல்லது பவுண்டெஷனையோ பூசிக்கொண்டால், சருமம் வறண்ட தோற்றத்தைத் தரும். வெப்பத்தின் தாக்கத்தை முகத்தின் தோல் ஏற்றுக்கொள்ளது, முகம் கருவடையும்.

இருந்தபோதிலும், இந்த மூன்று பொருட்களையும் செட் ஆக வாங்கிக்கொண்டு, அதில் அந்த skin milk மற்றும் moisturiser ’ஐ மட்டுமே தொடர்ந்து பயன்படுத்திவருவோம். toner ஐ மறந்துவிடுவோம். காரணம் toner போட மிருதுவான பஞ்சுவேண்டும். போட்டு சில நிமிடங்கள்வரை காத்திருந்து அந்தத் திரவம் காய்ந்த பின்பே மொட்சுரைசர் பின் பௌண்டேஷன் பூசவேண்டும்.

பரபரப்புச்சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு, அந்தத் தோனர் காய்கிறவரை பொறுமை காக்க மறுப்பதால், தோனரை ஒரு பொருட்டாகக் கருதாமல் தூக்கிப்போட்டு விடுவார்கள்.
இதனாலேயே பல தோனர் பாட்டல்களை அதனின் expiry date வந்தவுடன் தூக்கி வீசிவிடுவது பல பெண்களின் வழக்கம். நானும் பல தோனர் பாட்டல்களை பயன்படுத்தாமல் அப்படியே வீசியுள்ளேன்.

இப்போது அதற்கு அவசியம் இல்லை.

அதாவது, முகத்தில் மேக் ஆப் போடுகிற பெண்கள், முகத்தை அலம்பி, skin milk கொண்டு தேய்த்து சுத்தம் செய்வார்கள். சிலவேளைகளில் அந்த ஸ்கீன் மில்க் முகத்தில் படிந்திருக்கின்ற மேக் ஆப்களை முழுவதுமாக அகற்றாது. அதனால் அகற்றவும் முடியாது, அதன் தன்மை வேறு. முகம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு பளபளவென்று இருந்தாலும், அந்த மேக் ஆப்கள் ஏழு எட்டு மணிநேரம் முகத்தில் படிந்து இருக்கும். பார்த்தால் தெரியாது, டிஷ்யூ கொண்டு துடைத்தால், துடைக்கத் துடைக்க தெரியும்.

அப்படிப் படிந்திருக்கின்ற அந்த முக ஒப்பனைகளை முழுமையாகத் தூய்மை படுத்தாமல், இரவில் படுக்கச்சென்று, காலையில் எழுந்து மீண்டும் முகஒப்பனை செய்கிறபோது ஏற்கனவே ஒட்டியிருக்கின்ற பழைய மேக் ஆப் களோடு புதிய மேக் ஆப்களும் கலந்து முகத்தைப் பாழ்படுத்தும்.

இதற்காகவே சில பெண்கள், அதற்கென்றே இருக்கின்ற make up remover வாங்கி வைத்துக்கொண்டு அந்த ஒப்பனைகளைச் சுத்தம் செய்வார்கள். மேக் ஆப் ரிமூவரும் மலிவு அல்ல. அதிக விலைதான். நல்ல பொருட்கள் எப்போதுமே அதிக விலைதான்.

ஆக, இந்தத் தோனரை மேக் ஆப் பேஸ் ஆகப் பயன்படுத்த சோம்பல் படுகிறவர்கள், அதை make up remover ஆகப் பயன் படுத்தலாம்.
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்கள், குளிப்பதற்கு முன், மிருதுவான பஞ்சுகளின் (cotton sponge) தோனரை நனைத்து, கண்மை, உதட்டுச்சாயம், பவுண்டேஷன், ஐ சேடோ போன்றவற்றை நன்கு துடைத்து எடுத்த பின், ஸ்கீன் மில்க் கொண்டு கழுவி சுத்தம் செய்யலாம். பார்ப்பதற்கு பளீச் சென்று இருக்கும்.

நீங்களும் அழகிகளே..

செவ்வாய், மே 27, 2014

கோச்சடையான்

தமிழ் சினிமா வரலாற்றில் வித்தியாசமான படமொன்றைப்பார்த்த திருப்தியில் திளைத்துள்ளேன்.

என்ன படம்.?  காத்து மாத்திரி நடக்கிறார்கள்.. பொம்மை மாதிரி நடிக்கின்றார்கள். நடையில் மாற்றம். உடையில் மாற்றம், நடிப்பில் மாற்றம். வாய் அசைவில் வசனங்கள் அமரவில்லை, உடல் அசைவுகளின் நடிப்பு சரியாகச் சேரவில்லை. கண்ணோடு கண்நோக்குதலில் சொதப்பல், தொடுதலில் அணைப்பில் உயிர்ப்பு இல்லை. புதிய பாணியில் படமெடுத்து சரியாக வரவில்லை. தியேட்டரில் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தேன், பாதியில் எழுந்து வந்துவிட்டேன்.. கார்ட்டூன் படம். குழந்தைகளுக்கான படம்.. என்கிற என் நண்பர்களின் புலம்பல்களைப் பொருட்படுத்தாமல் நான் இத்திரைப்படத்தை திரையரங்கில் சென்று கண்டேன்.

என்னை அதிகம் கவர்ந்த புதிய பாணி திரைப்படம்.. நன்றாக ரசித்துப்பார்த்தேன். வியந்துபோனேன்.

கதையை விடுங்கள். நடிகர்களை விடுங்கள். நடிப்பை விடுங்கள். மறைந்த மறவா கலைஞன் நாகேஷ் அவர்களும் நடித்திருக்கின்றார், அதையும் விடுங்கள். இசை அற்புதம், அதையும் விடுங்கள்.  ஆனால் அந்தப் படத்தின் பிரமாண்டம்  இருக்கிறதே.. ஆஹா.. அற்புதம்.. அப்படியே மனதில் அரியணை இட்டு அமர்ந்துகொள்கிறது.

என்ன கதை.? என்பதில் நான் கவனம் செலுத்தவே இல்லை. மீண்டுமொருமுறை இத்திரைப்படத்தைப்  பார்த்தால்தான் கதையைப் பற்றி என்னால் சொல்லமுடியும்.  காரணம் அரங்கில் கதையோடு நான் ஒன்றவில்லை.

காட்சியமைப்புகள். நாம் எப்போதும் கண்டு ரசிக்கின்ற நடிகர்களின் வித்தியாசமான முகபாவனைகள், மெழுகு பொம்மைகள் போன்ற உருவ அமைப்புகள், கோட்டைகளின் பிரமாண்டம், மிகப் பழமையான உணர்வை நமக்குக் கொடுக்கின்ற சுற்றுச்சூழல். செட் போடப்பட்டது போ்ன்ற தாக்கத்தை ஏற்படுத்தாத இயற்கைக் காட்சிகள், அற்புதமான நேர்த்தியான நடன அசைவுகள்.. ஆதிகால பாரம்பரியத்தைச் சொல்கிற ஆடைகள் அணிகலன்கள். மக்கள், மண், நிலம், புல், மரம், தென்றல், நீர், அலை, கடல், மன்னர்காலத்துக் குதிரைகள், தேர், போர்க்கப்பல்கள், போர்ப்படைகள் என அனைத்தும் அற்புதம். காட்சிகளை ஒன்றுவிடாமல் அணுவணுவாக இரசித்தேன். அற்புதமாக இத் திரைப்படத்தைத் தயாரித்து உள்ளனர். இதுபோன்ற படங்களை நான் இதுவரையில் கண்டு களித்ததில்லை.

கிழவனுக்கு மே ஆப்’களை அப்பி கோப்புகளை ஏந்திக்கொண்டு கல்லூரிகளுக்குச் சென்று பதினாறு வயது பெண் குழந்தையுடன் கட்டிப்புரல்வதைக் கண்டு நொந்துபோன நூற்றாண்டு சினிமா ரசிகப் பெருமக்களுக்கு நல்ல விருந்து. ரஜினிகாந்தை மிகவும் இளமையாக அழகாகக் காட்டியிருப்பது மனதிற்குத் தெம்பைத் தந்துள்ளது.

இதுபோன்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் உலக அளவில் அதிகமாக வந்துள்ளதாகச் சொல்கிறார்கள். இருப்பினும் நான் முதன்முதலில் கண்டு ரசித்த புதிய தொழில்நுற்பக் கலைப்படைப்பு என்றால் அது கோச்சடையான் தான். 

இது தமிழ்ச் சினிமா பரிணாமத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றுகின்ற ஓர் திரைப்படமே என்றாலும், வருங்கால நடிகை நடிகர்களுக்கும் ஒப்பனை மற்றும் ஆடை அணிகலன் கலைஞர்களுக்கும் பேராபத்தைத்  தருகிற  முயற்சியின்  தொடக்கமாகவே   ஆரம்பமாகியிருக்கிறது.  காரணம் இப்படத்தின் ஆடைகள் முக ஒப்பனைகள் அனைத்தும் கணினி இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகியிப்பது வெள்ளிடைமலை.

தொடர்ந்து இதுபோன்ற படங்கள் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தால், மறைந்த மூத்த ஜாம்பவான்களான சிவாஜி ஜெமினி எம்.ஜி.ஆர் போன்ற பழம்பெரும் நடிகர்கள் தீபிகா படுக்கோன் போன்ற இளவட்டங்களோடு டூயட் பாடி நடித்துவிட்டுச் சென்று விடுவார்கள்.  வருங்காலத்தில் முதல்வருக்கு பஞ்சம் ஏற்படலாம்.! . :(

படம் அருமை. திரையில் கண்டு ரசியுங்கள்..

சௌந்தர்யா ரஜினிகாந்த சூப்பர்.  - Amazing

கே.எஸ்.ரவிக்குமார் சார்..  Rocking