புதன், ஜூலை 20, 2022

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பழுப்பு நிறப் பக்கங்கள்.

சாரு தமிழில் பரவலாக அறியப்பட்ட நவீன மற்றும் பின் நவீனத்துவ எழுத்தாளர். என்றாலும் மலையாளம் மற்றும் ஆங்கில இலக்கிய வாசகரப் பரப்பிலும் நன்கு அறியப்பட்டவர். அவரின் எழுத்துகள் நான் லீனியர் மற்றும்  ட்ராஸ்கிரசிவ் ( transgressive) எழுத்து என்பதால் தமிழ் வாசக பரப்பில் அதிக எதிர்ப்புகளை சம்பாதித்தவர் சாரு. நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவ கோட்பாடுகளை ஆழமாக வலியுறுத்திய சாரு சர்ச்சைக்குரிய எழுத்தாளராக தமிழிலக்கிய உலகில் பார்க்கப்பட்டார். இதனால் பல இன்னல்களையும் இடையூறுகளையும் தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார்.

தவிர பொதுவில் தனிநபர் தாக்குதல்களுக்கும் ஆளாகி இருப்பதாகவும் அடிக்கடி தமது வலைதளத்தில் பகிர்வார். எவ்வளவு இன்னல்கள் இடையூறுகள் தனிநபர் தாக்குதல்கள் வந்தபோதும் அவைகளை ஒரு பொருட்டாக நினைக்காமல் யாரிடமும் எந்த சமரச போக்கும் வைத்துக் கொள்ளாமல் தான் படைக்கவிருக்கும் படைப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கடுமையான  வாசிப்பு, தொடர் தேடல், உலக இலக்கிய ஆய்வு எழுத்து என அயராமல் உழைத்து இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வரும் ஒரு முக்கிய படைப்பாளி சாரு.  


தன் படைப்புகள் உலக இலக்கியத் தரம் வாய்ந்தவை  என்று திண்ணமாகச் சொன்ன சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் தற்போது ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரமாகி பிரபலமாகி வருவருவதையும் பலரும் அறிவர்.  சாரு எழுதிய மிக முக்கிய நாவலான  `ஸீரோ டிகிரி’ உலகளவில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்த வாசகப்பரப்பைக் கொண்ட மிக பிரபலமான நாவலாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது.  இந்தியாவின் ஐம்பது  முக்கிய புத்தகங்களின் ஒன்றாக திகழும் இந்நாவல் சுவிட்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இவர் தமிழுக்கு கிடைத்த  மிக முக்கிய படைப்பாளி என்றாலும், மலேசிய தமிழிலக்கிய மண்ணில் இவர் இன்னும் பரவலாக அறியப்படும் எழுத்தாளராகத் திகழவில்லை என்பதுதான் வருத்தமளிக்கக்கூடிய ஒன்று. சாருவின் எழுத்து கொடுக்கும் உன்னத இலக்கிய வாசிப்பு அனுபவம் பற்றிய மகத்துவத்தை  வார்த்தைகளால்  சொல்லியோ அல்லது எழுத்துக்களால் எழுதியோ பிறருக்கு விளங்க வைத்துவிட முடியாது. நான் லீனியர் எழுத்தை  அவ்வளவு எளிதாக  உள்வாங்கி நாம் பெற்ற இலக்கிய அனுபவத்தை அப்படியே பிறருக்கும் பகிரலாம் என்று அதன் சாரம் கெடாமல் கதையாகச் சொல்லி எளிதாகக் கடந்துவிட முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதன் வாசிப்பு அனுபவம் என்பது தியான நிலைக்கு ஒப்பானது.  

 

எழுத்தாளர் சாரு கிறங்க வைக்கும் வசீகர எழுத்துக்குச் சொந்தக்காரர். அவரின் கைவண்ணத்தில் தமிழில் பல முக்கிய நாவல்கள், சிறுகதைகள், அரசியல் சினிமா விமர்சனங்கள், விழிப்புணர்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள் என எண்ணிலடங்கா எழுத்துகள் நூல் வடிவமாக வந்திருப்பினும் அவரின் இணையத்தளத்திலும் பலதரப்பட்ட அனுபவப் பகிர்வுகள், வாசகர் கடிதங்கள், வசை பாடும் விமர்சன எழுத்துகள், மேற்கத்திய இசை அறிமுகம், உலக சினிமா, உலக இலக்கியம், ரஷ்ய எழுத்தாளர்கள், புதிய தொடர், நூல் அறிமுகம் என விடாமல் எழுதி பகிர்ந்த வண்ணம் இருப்பதைக் காணலாம். அவரின் இணையத்தளத்தை (charuonline)  தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு அது போதையூட்டும் வஸ்துவாக மாறி அங்கே வாசிப்பு கொண்டாட்டமாக அமைவதையும் உணரலாம்.  


பத்தி எழுத்துகளுக்கு இலக்கிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் சாரு. அந்த வகையில் அவரின் பத்தி எழுத்தான பழுப்பு நிறப் பக்கங்கள் அவரின் கைவண்ணத்தில் உருவான ஒர் அற்புத இலக்கியப் பிரதி. கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கிய பேரிலக்கிய ஜாம்பவான்களைக்  கண்டடைந்து அவர்களின் படைப்புகளில் பொதிந்திருக்கும் இலக்கியச் சாராம்சங்களை வலுவான ஆதாரங்களை துணையாகக்  கொண்டு விரிவான விளக்கத்தின் மூலம் மூன்று பகுதிகளாக, எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் குறித்தும்  மிக ஆழமாக எழுதியிருக்கிறார்.  இவ்வரிய தொகுப்பானது தமிழுக்குக்  கிடைத்துள்ள பொக்கிஷம். காரணம் இந்த மூன்று தொகுப்புகளையும்  வாசிக்கும் வாசகனுக்கு ஒரே வாசிப்பு அனுபவத்தில்  நூறு நாவல்களையும் ஆயிரம் சிறுகதைகளையும் வாசிப்பது போன்ற அனுபவம்  கிடைக்கப் பெறுகிறது. 


இப்புத்தகத்தை எழுதிய சாருவே இதுபோன்றதொரு நூலை தன் வாழ்நாளில் இதுவரையிலும் எழுதியதில்லை என்றும், எப்படி இப்பேர்பட்ட எழுத்து தனக்கு வசமானது என்றும் சிலாகித்து வியக்கிறார்     


 தமிழ்ப் படைப்புலகின் போக்கை மாற்றி அமைத்த முன்னோடிகள் பற்றிய அறிமுக நூலான பழுப்பு நிறப் பக்கங்கள் ஏற்கனவே இணையப் பதிப்பில் வெளியாகி பரந்த வாசகப் பரப்பைக் கொண்டு மிகுந்த பாராட்டைப் பெற்ற தொடர்.   மூன்று பாகங்களாக வந்திருக்கும் இத்தொகுப்பு ஒரு classic collection.

முதல் பாகம் பதினாறு எழுத்தாளர்கள் கொண்ட தொகுப்பு, இரண்டாம் பாகம் ஐந்து எழுத்தாளர்களைப் பற்றியது. மூன்றாம் பாகம் ஆறு எழுத்தாளர்களைப் பற்றியது. மொத்தம் இருபத்தேழு எழுத்தாளர்களைப் பற்றிய இத் தொகுப்பானது வாசிப்பதற்கு இலகுவாக மிக எளிய நடையில் சாருவிற்கே உரித்தான எள்ளல் பகடி பாணியில் நகைச்சுவையாகவும் அதேவேளையில் மனபாரத்தைக் கொடுக்கும் எழுத்தாளர்களின் துயர்   சொல்லும் கருப்பு பக்கங்களாகவும் இந்நூல் அமைகிறது.     


இந்நூலின் நாயகர்களை வெளிக்கொணர  சாரு போட்ட உழைப்பை அவ்வளவு எளிதாக எண்ணி விடலாகாது.. ஒவ்வொருவராக அறிமுகம் செய்வதற்கு  அவர்களைப் பற்றிய தேடலில் சிறப்பானதை நமக்குக் கொடுக்க அவர் எடுத்துக்கொண்ட வாசிப்பும் அதற்கான நேரமும் நம்மை  பிரமிக்க வைக்கிறது.  


இத்தொகுப்பில் வரும் பலர் ட்ராஸ்கிரசிவ் மற்றும் பின்நவீனத்துவ  எழுத்தாளர்கள். சமூக மூடத்தனங்களையும் போலித்தனங்களையும், குடும்ப வன்முறைகளையும், வாழ்வியல் ஆதாரங்களையும், பெண்ணடிமைத்தனத்தை யும், தாம்பத்திய துரோகங்களையும், அறியாமையின் உச்சத்தையும். தேகம் உடல் சார்ந்த நுண்ணிய உணர்வுகளையும், கீழ்மையான எண்ணங்களையும் கலவையாகச் சேர்த்து படைக்கப்பட்ட படைப்புகளை நிறைய அலசி ஆராய்ந்திருக்கிறார்.  


கலாச்சார பின்னணியை ஆதாரமாக வைத்து அங்கே நிகழ்த்தப்படும் கொடுமைகளைக் கட்டுடைக்கும்  ஆதவனின் கதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத்துண்டும்படி அறிமுகம் செய்கிறார் சாரு. உதாரணமாக என் பெயர் ராமசேஷன் நாவல். ராமசேஷன் எல்லா வயதுப் பெண்களுடன் சகஜமாக பாலியல் உறவு வைத்துக் கொண்டு உல்லாசமாக இருக்கும் ஒரு வாலிபன். ஆனால் தன் தங்கைக்கு மட்டும் நல்ல மாப்பிள்ளை  அமைய வேண்டும் என தங்கையின் காதலை பிரிக்க முயல்கிறான். நமது வாழ்வியல்  முறையே நம் உள்ளுணர்வை உலுக்குகிறது என்பதற்கு இந்த நாவல் ஆதாரம்.   ஆதவனின் எழுத்து தனிப்பட்ட சமூக வாழ்வின் போலித்தனங்களில் இருந்து நம்மை விடுவிப்பவை என்கிறார் சாரு. 


கோபி கிருஷணன் பற்றிய தொடர் கொஞ்சம் துயரமாக இருந்தது.  நான் மிகவும் ரசித்து வாசித்தது கோபி கிருஷ்ணன் பற்றிய தொகுப்பைத்தான்.   கோபிகிருஷ்ணன் படைப்புகள்  அவரின் வாழ்வோடு சம்பந்தப் பட்டது என்று தெரிய வரும்போது மனதில் ஈரம் கசிகிறது. இந்தச் சமூகம் எல்லோரும் செய்வதைச் செய்கிறவனை நல்லவன் என்றும், எல்லோரும் செய்கிற செயல்கள்தான் நல்ல செயல்கள் என்றும்.  அப்படிச் செய்யாதவனை எதற்கும் உதவாத பைத்தியக்காரன் என்றும் புறந்தள்ளி புறக்கணிப்பதை ஆதாரமாகச் சொல்லும் நிறைய கதைகளை எழுதியிருப்பவராக கோபியைக் காட்டுகிறார் சாரு. கோபியின் கதைகளில் வரும் மனோதத்துவ மருத்துவ terms களை வாசிக்கின்ற போது, அவர் எவ்வளவு பெரிய ஜீனியஸ் என்பதை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. அவரின் வாழ்வும் மரணமும் அதிர்ச்சி மிக்கது.  அம்மணமாகத் திரியும் ஊரில் ஆடை அணிந்தவன் அரைக்கிறுக்கன் என்கிற வாசகம் தான் நினைவுக்கு வந்தது கோபியின் அத்தியாயத்தை வாசித்து முடித்த போது..     


 பழுப்பு நிறப் பக்கங்களில் வரும் ஒவ்வொரு இலக்கிய முன்னோடிகளை வாசிக்கின்றபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் மிக்கவர்களாகவும்  தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கிய படைப்பாளி களாகவும் பார்க்கும்படி காட்டியிருக்கின்றார் சாரு. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்கிற ரீதியில் படைக்கப்பட்டது தான் ப.நி.ப. அப்படி இருக்கையில்,  கு.ப.ராஜகோபாலன் பற்றி சொல்லுகையில், அவர்தான் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகன் என்று குறிப்பிடுகிறார்.  ஆண் பெண் உறவின் நுண்ணிய தேக உணர்வுகள் பற்றி சிறுகதைகளில் சொல்லும்போது, வாசகன் தன் நிலைக்கேற்ப  அவைகளை ஆபாசக் கதைகளாக எடுத்துக்கொள்கிறான். அதன் பின் எழுத்தாளர் மிக மோசமாக விமர்சனம் செய்யப்பட்டு துரத்தியடிக்கப்படுகிறார். இந்த புறக்கணிப்பு கு.ப.ரா வை ஒன்றுமே செய்யவில்லை. மிக மெல்லிய குரலில் மென்மையான முறையில் அடுத்த இலக்கியப் பிரதிக்கு தயாராகலாமே, என்பாராம் கு.ப.ரா..  எல்லாக் காலத்திலும் பெண்களின் மறைக்கப்பட்ட உணர்வுகளை கதைகளின் வழி  சொல்ல வந்த நவீன பின்நவீனத்துவ எழுத்தாளர்கள் சர்ச்சைக்குரிய எழுத்தாளர்களாக மாற்றி அவர்களை சமூக விரோதிகளாக  அடையாளப்படுத்துகிறது நம் சமூகம்.   


எஸ்.சம்பதின் இடைவெளி என்கிற சிறிய நாவல் மகாபாரதம் போன்ற காவியத்திற்கு ஒப்பான படைப்பு என்கிறார் சாரு. ஒரு படைப்பாளியின் மரண சாசனம் இந்த நாவல்.  இறக்கும் தருவாயில் தனது மரணம் குறித்து தானே எழுதி வைத்திருக்கும் மரண அறிக்கைதான் இந்த இடைவெளி நாவல். நாவல் வெளிவரும் முன்பே நோயின் தாக்கத்தால் மாண்டு போகிறார் சம்பத். 


ந. சிதம்பர சுப்ரமணியம் என்கிற எழுத்தாளர் பற்றிச் சொல்லுகையில்,   பிரபல எழுத்தாளர்கள் என்று நாம் நினைக்கின்ற பல எழுத்தாளர்களுக்குக் கூட ந. சிதம்பர சுப்ரமணியம் யார் என்று தெரியாமல் போய்விட்டது என வருத்தப்பட்டு எழுதுகிறார் சாரு. ந. சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் என்கிற நாவலை வாசித்த போது அவருக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபவத்தை இப்படி நம்மிடம் பகிர்கிறார், ‘கோவில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும் போதும், காலை நேரத்தில் வசீகரிக்கும் மலர்களைக் காணும்போதும், புண்ணிய நதியில் நீராடும் போதும், பேராலயங்களில் நுழையும் போதும் நமக்கு எத்தகைய புனிதமான உணர்வு ஏற்படுகிறதோ, அப்படிப்பட்ட உணர்வு சிதம்பர சுப்ரமணியனின் கதைகளை படிக்கும்போது ஏற்படுகிறது என்று சிலாகிக்கிறார். 


அசோகமித்திரனை தன்னுடைய தகப்பன் ஆசான் ஆகியவர்களைவிட மிக உயரத்தில் வைப்பதாகச் சொல்கிறார். அசோகமித்திரனின் எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் அவர் சர்வதேச அளவில் ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு நிகராகப் போற்றப்பட்டிருப்பார். உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்களின் பட்டியலில் அசோகமித்திரனுக்கு உயர்ந்த இடம் கொடுக்கலாம் ஆனால் அவர் தமிழ் இலக்கியச் சூழலில் சிக்குண்டு இறுதிவரை ஏழ்மையிலேயே காலம் கழித்ததாக மனவருத்தத்துடன் சொல்கிறார் சாரு.  


இருத்தலின் சாரத்தை வலியுறுத்தும் கதைகளை எழுதியவர் ஆ. மாதவன் என்று சொல்லி அவரின் `எட்டாவது நாள்’ என்கிற நாவலைப் பற்றி எழுதுகிறார் - ``இந்த கணத்தை தீவிரமாக வாழ், அதுவே முழுக்க முழுக்க அறம் சார்ந்தது. இருத்தலியல் தருணத்தில் வாழும் மனிதனுக்கு எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதில்லை.’’ என்ற வரிகளை நம்மிடம் பகிரும்போது ஆ.மாதவனின் கதை சொல்லும் பாணி என்பது எப்படிப்பட்ட தத்துவ சாரங்களை உள்ளடக்கியதாக  இருக்கக்கூடும் என்கிற சிந்தனையை நம்மிடம் பரவ விடுகிறார்.  


எம்.வி. வெங்கட்ராம் - தமிழில் ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்தின் முன்னோடியாக எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைப் பார்ப்பதாகச் சொல்கிறார் சாரு. ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்பது சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க விதிகளை உடைத்து அலசி அதை அப்படியே எழுத்தில் கொண்டுவந்து விவாதிப்பது தான். அதற்கு உதாரணமாக அவர் எழுதிய `காதுகள்’ நாவலைப் பற்றி எழுதுகிறார். காதுகளுக்குள் புகும் பலரின் அகோர குரல்கள் அசரீரியாக நின்று தனி ஒரு மனிதனின் மனசாட்சியுடன் எப்படி  கொச்சையாக உரையாடி அவனின் நிம்மதியை சீர்குலைக்கிறது. மனிதனின் கீழான அவல நிலைக்கு முக்கிய பங்கு வகிப்பது காதுகள் உள்வாங்கும் பரவலான உரையாடல்கள் என்பதைச் சொல்லும் நாவலாக இந்நாவல் இருப்பதாகச் கோடிக் காட்டுகிறார்.


பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத ஆண், ஆண் மகவு வேண்டி ஐந்து ஆறு மனைவிகளை மணம் முடித்துக்  கொள்கிறான்.  அவர்களுடன் எப்படி தாம்பத்திய வாழ்வில் ஈடுபடுகிறான், அப்படி ஈடுபடுகையில் அந்த வீட்டில் மகள் ஸ்தானத்தில் இருக்கும்  பருவப் பெண் படும் அவஸ்தைகள் குறித்தும்  தஞ்சை பிரகாஷின் கரமுண்டார் வூடு நாவல் சொல்வதாக எழுதுகிறார் சாரு. லெஸ்பியன் உறவு பற்றி தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் தான் என்றும் அறிமுகம் செய்து வைக்கிறார். . ஒரு ஆணின் வீரிய வளர்ச்சிக்கு என்ன மாதிரியான உணவுகள் தேவைப்படுகின்றன என்கிற நீண்ட பட்டியலையும் கொடுத்திருக்கின்றார்.. அக்காலத்தில் அறுபது வயதுவரை பெண்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று வந்துள்ளதையும், ஆண்கள் எழுபத்தைந்து வயது வரை வீரியம் குறையாமல் பல மனைவிகளை மணமுடித்துக் கொண்டதையும் தஞ்சை பிரகாஷின் நாவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்த பூமியில் பிறந்த அத்தனை பெண்களும் நிச்சயம் தஞ்சை பிரகாஷின் நாவல்களை குறிப்பாக கரமுண்டார் வூடு நாவலை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம் பெண்ணியம் பேசும் அத்தனை எழுத்தாளர்களையும் ஒன்று சேர வீழ்த்தியவர் தஞ்சை பிரகாஷ் என்று புகழ்மாலை சூட்டுகிறார் சாரு. பெண்களின் அடக்கப்பட்ட காமத்தின்  உக்கிர வெளிப்பாட்டை எந்த பெண் எழுத்தாளரும் இவர்போல் எழுதிவிட முடியாது என்கிறார். தன் பூட்டி பாட்டிகளின்  சொந்த அனுபவங்களை உண்மையின் பிரதிநிதியாக நின்று பிரகாஷ் வடித்திருக்கும் இக்கதைகள் அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பணம் என்கிறார் சாரு.


இப்படி இன்னும் நிறைய சுவாரஸ்யங்களைக் கொண்ட நூல்தான் பழுப்பு நிறப் பக்கங்கள். தமிழ் இலக்கியச் சூழலுக்கு சாரு கொடுத்திருக்கின்ற இந்த அரிய புதையல் அனைவரும் வாசித்துப் பயன் பெற வேண்டிய ஒன்று.   

 


பின்நவீனத்துவ கூறுகளில் ஒன்றான புனிதங்களை கட்டுடைத்தல் என்பதில் தீவிர போக்கு உடைய எழுத்தாளர்களை  சர்ச்சைக்குரிய எழுத்தாளர்கள் என்று புறந்தள்ளும் போக்கு மாறவேண்டும்.  பின்நவீனத்துவ எழுத்துகளில் மறைந்திருக்கும் சாராம்சத்தை விளங்கிக்கொள்ள முயல்வதே நாம் நல்ல இலக்கிய பிரதிகளைக் கண்டடைவதற்கு வழி வகுக்கும். கதை என்பது கதை சொல்வதல்ல, சொல்லப்பட்ட கதைக்கும் சொல்லப்படாத கதைக்கும்  இடையே வாசகனான  நாம் சிந்தித்திருக்கும் தருணத்தில் உதிக்கின்ற ஒரு பொறிதான் நமக்குள் ஓராயிரம் அர்த்தங்கள் கற்பித்துக் கடக்கும் இலக்கிய சூட்சுமம். இங்குதான் இலக்கிய வாசிப்பின் மகத்துவம் புரிந்து கொள்ளப்படுகிறது.  இதுதான் இலக்கியம் நிகழ்த்தும் அற்புதம்.  


இதுபோன்ற அற்புத நூல் வாசிப்பை நமக்குக் கொடுத்த சாருவிற்கு நன்றி. 


நூல் கிடைக்கும் இடம் : tamilasia.com