வெள்ளி, செப்டம்பர் 02, 2011

சுவையான உணவு


என் கம்பனியில் ஒரு நேப்பாள பணியாளர். கிட்டத்தட்ட 5 வருடமாக, துப்புறவு பணியின் சுப்பர்வைசர். நல்ல நண்பன். மரியாதையான மனிதன்.
அஷ்டமி, நவமி, பஞ்சமி, பௌர்ணமி, நவராத்திரி என எல்லா நல்ல நாட்களையும் எனக்கு ஞாபகப்படுத்துவார். மருத்துவ குறிப்புகள் தந்துதவுவார். நெற்றியில் சிவப்பு குங்குமம் எல்லா நாட்களிலும்.உதவி என்றால், தட்டாமல் உடனே செய்வார்.  அவரின் மனைவி குழந்தைகளிடமும் பேசியுள்ளேன்.
அவர், அடுத்த மாதம் நேப்பாளுக்குச் செல்கிறார். இனி இங்கு வரவே மாட்டேன் அக்கா, என்றார். போதும் போதும் என்றாகிவிட்டதாம். உண்மைதான், அவர் உதவி செய்கிறார் என்பதற்காக, ஓயாமல் அவரையே எல்லா வேலைகளுக்கும் அழைப்பார்கள். பரிதாபமாகத்தான் இருக்கும். இருப்பினும் யாரையும் குறை சொல்ல மாட்டார். சிரித்துக்கொண்டே இருப்பார். இறை வழிப்பாடு, அவ்வளவு பக்குவத்தைக் கொடுத்திருக்கின்றது எனலாம். இரவு பகல் உழைப்பு, நாள் தவராமல்.. நேப்பாளில் ஒரு செலவு சாமான் கடையே திறந்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
அவர் செல்கிறார் என்பது சங்கடமாக இருந்தாலும், அவரிடம் நான் கற்றுக்கொண்ட ஒரு சிறிய செய்தியைப் பகிரவே இவ்வளவு கதை அளப்பு இங்கே.
ஒரு நாள், ஆட்டிறைச்சி வறுவல், கோழி குழம்பு, மீன் பொரியல் என நன்றாகச் சமைத்து அவருக்கும் எடுத்துச்சென்றேன், மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்.
‘நான் அதிக உணவு எடுக்காதவன், இன்று நன்றாகச் சாப்பிட்டேன் அக்கா, ஆனால் நான் ஒன்று சொல்வேன் கோபித்துக்கொள்ளக்கூடாது’ என பீடிகையோடு கழுவிய அடுக்குகளைக் கொண்டு வந்தார்.
’சொல், கோபம் வராது!’ என்கிற ஆச்சிரியத்தோடு அவரை நோக்கினேன்.
‘உன் சாப்பாடு அருமை அக்கா, அதிக சுவை, காரம் உப்பு எல்லாம் தூக்கலாக.. ஆனால் இது மாதிரி ருசியாக சாப்பிடக்கூடாது, சாப்பாடு என்பது, வயிறு கொஞ்சம் நிறைந்தவுடன் நிறுத்திவிடவேண்டும், உன் சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல் உள்ளது. அது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும்’ இனி இப்படி சமைத்துச்சாப்பிடாதே’ என்றார்.
யோசிக்க வைத்த ஒரு நல்ல ஆலோசனையாகவே பட்டது எனக்கு. இப்படி இதுவரையில் இவ்வளவு எளிமையாக அறிவுரை வழங்கியவர் யாருமே இருக்க முடியாதுதான்.
நல்ல நட்பில் பிரிவு வரும்போது கொஞ்சம் வருத்தமே. மற்றபடி அவர் எங்கிருந்தாலும் நலம் பெற வாழ்த்தும், இந்த நல்ல மனம் .