ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

பாக்கியம் அக்கா மன்னியுங்கள்.

வாசகர் விழா.

பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் சென்ற ஞாயிறு, மதியம் தொடங்கி இரவு வரை மிகச்சிறப்பாக நடந்தேறிய ஒரு அற்புத விழா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


விழாவின் கருப்பொருள் ஒழுக்கமே விழுப்பம். கருப்பொருளுக்கேற்ப, நிகழ்விலும் ஒரு ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கெல்லாம்  ஒரே மாதிரியான ஆடைகள், பேச்சாளர்கள் மேடையில் முழங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற நேர ஒதுக்கீடு, நிகழ்ச்சி நிரல் அறிக்கையிலேயே அச்சாகி இருந்தது. சீரான வழிநடத்தல், சோர்வில்லாத அறிவிப்புப்பணி, அற்புதமான நடனங்கள். நடனங்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், பிரமாண்டமான நிகழ்சிகளில் அரங்கேறும் கலாச்சார நடனங்கள் போல், முழுமையாக நடன உடைகள் ஆபரணங்கள், முக ஒப்பனைகளோடு மிக அற்புதமாக அரங்கேறிய நடனங்கள். நன்கு பயிற்சி பெற்று, குழுவாக இயங்கி, கவனங்கள் சிதறாமல், ஒரே சீராக அபிநயம் பிடித்து, நடனங்களை வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்த அவர்களைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. நடன  ஆசிரியருக்கு ஒரு சபாஷ் இவ்வேளையில். நமது கலை கலாச்சாரங்களை வளர்த்து வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள்  இவர்களைப்போன்ற  நல்ல  கலையார்வம் கொண்ட நடன ஆசிரியர்கள்தான். வாழ்த்துகள் ஆசிரியர்களே.


எல்லாமே இலக்கியத்தனமாக இருந்தாலும் சோர்வாகிவிடுமென்பதால், இடையிடையே பலவிதமான கலைநிகழ்ச்சிகளும் குதூகலிக்கவைத்தன.

இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஸ்கைஃப் வழி, தமிழ் நாட்டு பிரமுகர், இலக்கியவாதி, இதழாசிரியர் கீழாம்பூர் சிவசுப்ரமணியன் அவர்களை தொடர்புக்கொண்டு சில கேள்விகளின் வழி அவர் எங்களோடு பேசியதுதான். இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளில் செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை, ஆனாலும் இந்த முயற்சி வரவேற்கக்கூடிய ஒன்று. வெளிநாட்டுப் பிரமுகர்களை அதிக செலவில் வரவழைத்து உரையாற்றச்செய்வதை விட இப்படி ஒரு யுக்தி, புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. உலகத்தமிழர்கள்  எல்லோரும் தமிழால் ஒரே குடையின் கீழ் இணையத்தின் வழி கைகோர்த்து நிற்கின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சிதான். தொழில்நுற்ப வளர்ச்சியின் உச்சத்தைக்காட்டும் இவ்வரிய வாய்ப்பிலிருந்து மலேசியர்களான நாமும் விடுபட்டுவிடாமல் இருப்பது இன்னொரு மகிழ்ச்சியே.

அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று, இலக்கியப்பத்திரிகை நடத்தும் உங்களின் கலைமகள் இதழுக்கு யாரெல்லாம் எழுதலாம்? 

அவருடைய பதில், யாருக்கெல்லாம் தாம் சரியாக எழுதுகிறோம் என்கிற எண்ணமும், தம்முடைய படைப்பின் மீது முழு நம்பிக்கையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் தாராளமாக படைப்புகளை அனுப்பலாம். என்றார். பதில் எவ்வளவு நாசுக்காக இருக்கின்றது பார்த்தீர்களா.! எல்லோரும் நம்பிக்கையோடுதான் படைப்புகளை அனுப்புகிறோம். ஆனால் கலைமகள், நந்தவனம், தீராநதி, காலச்சுவடு, குமுதம் போன்ற தமிழ் நாட்டு இலக்கிய இதழ்களில் நமது படைப்புகள் வருவதென்பது சாதாரணமா.!?

பாலகோபாலன் நம்பியார் நிகழ்ச்சிகளை அழகாக வழிநடத்துவதில் வல்லவர். இவருக்குப்பின், அரசாங்கத்தால் பதிவுபெற்ற இவ்வாசக இயக்கத்தை சரியாக வழிநடத்துபவர் யார் என்பது தான் அன்றைய நிகழ்வில் பலரின் உள்ளகிடங்கின் கேள்விக்குறியாக இருந்தது வினா. அள்ளிக்கொடுக்கவும், நிகழ்வுகளுக்கு முதுகெலும்பாக நிற்கவும், கொடைநெஞ்சர் கிள்ளார் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் சங்கபூஷண் சித.ஆனந்தகிருஷ்ணன் எப்போதுமே இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில், நிகவுகளை சரியான முறையில் வழி நடத்துவதற்கு திரு பாலகோபாலன் நம்பியாரைத் தவிர வேறொரு நபர் இன்னும் உருவாகவில்லை என்கிற அரசல் புரசல் பேச்சுகள் கூட செவிகளில் விழுந்தனவே. காத்திருப்போம். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

வாசக இயக்கங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் மலேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு உயிர் நாடியாகத் திழந்தவை வாசக இயக்கங்களே. எண்பதுகளில் எழுத ஆரம்பிக்கும்போது, இப்பொழுது உள்ளதுபோல் மின்னஞ்சல், பெஃக்ஸ் வசதி, குறுந்தகவல் சேவை, நினைத்தமாதிரத்தில்  பத்திரிகை ஆசிரியர்களோடு தொலைப்பேசி வழி உடையாடல் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. எழுதுவோம், சென்றதா, அல்லது பாதிவழியிலேயே காணாமல் போனதா, என்பனவற்றையல்லாம்  ஆராயவே முடியாது. பத்திரிகையைப் பார்த்தால்  தான் உண்டு. அந்த காலகட்டத்தில் வாசக இயக்கங்கள்தான் இவற்றிற்கெல்லாம் பாலமாக இருந்தது.


வாசகர்களை எழுத ஊக்குவிற்பதற்கு வாசக  இயகங்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாக எங்களின் வாசக வட்டத்தலைவர் என்று சொன்னால் அது  எம்.கே.சுந்தரம் அவர்களே . அவரின் அழைப்பின் பேரில் பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்றுள்ளோம். அவரிடம் சில கடிதங்களை எழுதிக்கொடுத்து அனுப்புவோம். சும்மாலும் ஒரு காகிதத்தைக் கிழித்து, மனதில் பட்டதை எழுத்துப்பிழைகளோடு எழுதி அனுப்பினால், அதை, வாசகவட்டத் தலைவரான இவர் இன்னும் கொஞ்சம் அழகாக மெருகேற்றி, திருத்தி ,பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்ப்பார். படைப்புகள் பத்திரிகைகளில் வந்தாலே பெரிய அதிர்ஷ்டம். இந்நிலை, தொடர்ந்து எழுதுவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது. 

இன்னமும், அந்த காலகட்டத்தில் எழுதிய வாசகர்கள் பலர்தான்  இன்றும் எழுதி முத்திரைப் பதித்து வருகின்றனர். புதிதாக எழுத்துலகிற்கு வருபவர்கள் கொஞ்சநாளிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இதை மாற்றியமைக்க இன்றைய வாசக இயங்கங்கள் முன் வரவேண்டும். நமது பத்திரிகைகளும் இன்றை சூழ்லுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, குறுந்தகவல் மின்னஞ்சல் பயன்பாடுகளையும் பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  கணினி யுகத்தில் நாம் போட்டிபோட்டுக்கொண்டு தரமான படைப்புகளை மக்களின் பார்வைக்குக்கொண்டு வரவில்லை என்றால்,  சிறப்பானவற்றை விரும்பும் இளைய தலைமுறையினர், நம் நாட்டு எழுத்துகளை புறக்கணித்துவிட்டு இணையத்திலேயே உலா வருகிற நிலை வரலாம். நான் சொல்வது கணிப்பு அல்ல, உண்மை. நடைமுறையும் அதுவே.   இளைய சமூதாயத்தின் தாய் என்பதாலும், சிலரின் இலக்கிய ஆர்வங்களைக்கூர்ந்து கவனித்தவள் என்பதாலும்  இதைச்சொல்கிறேன். மற்றபடி யார் எழுத்தின் மீதும் காழ்ப்பு இல்லை எனக்கு.

நான் எழுதினால், அவர் எழுதக்கூடாது, அவர் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்கிற சிறுபிள்ளைத்தனமெல்லாம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை. பாக்கியம் அம்மையார் எழுத்திற்கு மறுமொழி எழுதிவிட்டேன், இலக்கிய உலகில் கருத்து மோதல்கள் சகஜம், புகைகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயும் மூட்டி விடும் சிலரை அடையாளங்காட்டியது இந்த சர்ச்சை.  அவர், நாடு போற்றும் ஒரு நல்ல பெண்படைப்பாளி என்பதை மனதார ஏற்கிறேன். புண்படும்படி எழுதியிருந்தால் மன்னியுங்கள் அக்கா. தொடர்ந்து படைப்புகளைக்கொடுங்கள். வாழ்க வளமுடன்.


இன்றைய தினக்குரலில் வந்த எனது கட்டுரை. வாசகர் விழா விமர்சனம்

நன்றி தினக்குரல். திரு.பி.ஆர்.இராஜன்.