ஞாயிறு, ஜனவரி 15, 2012

பொங்கல் - நான் சிறுமியாக இருந்த போது


போகியன்று
விடியற்காலை
நான்கு மணிக்கே எழுந்து
வீட்டின் முன் போடப்பட்ட
நெருப்பிம் முன்
நடுங்கிக்கொண்டு குளிர் காய்தல்..
இதில் பக்கத்து வீட்டுச் சிறுமிகளிடம் பந்தா வேறு
நா..ங்...க எ எ எ...... நாலு மணிக்கே எழுந்திட்டோம்.

முதல் நாளே
பெரிய பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு
வீடு வீடாக அலைவோம்
சாமிக்கு பூ பறிக்க
எங்களுக்கு முன் எங்களின் சக தோழிகள்
அங்கே பூ பறித்தால்
அங்கே போய் கலாட்டா செய்வது..
சண்டை போடுவது
இருந்தாலும், பூவே கிடைக்காது
எல்லாப் பூச் செடிகளும் முன்பே மொட்டையாகிவிடும்..

வீட்டின் பின்புறத்தில் கரும்புச்செடிகள் இருக்கும்
‘கரும்பை வெட்டிவா’ என்பார் அம்மா
பயமா இருக்கும்
புதருக்குள் பாம்பு இருந்தால்..!?
வேறோடு பிடிங்கி வருவோம்
கரும்பாலே அடிவிழும்..

சும்மாவே இருக்க மாட்டோம்
சாணியைக் கரைத்து..
(முகத்தை சுளித்துக்கொண்டு சாணியைக் கரைப்போம்)
வாசலில் கோலம் போடுவோம்
சும்மா அலங்கோலமாக இருக்கும்
அதையும் ரசிப்பார் அப்பா..
புள்ளைகள் படு கெட்டி, சுட்டி என. !

மாவிலை, தோரணம், கரும்பு
தேங்காய், வாழைப் பழம், வாழை இலை,
பூ காய்க்கறி, பால், மஞ்சள் இலை
வெற்றிலை, செங்கல், விறகுக் குச்சிகள்,
பால்மர ரப்பர் (அடுப்புப் பற்ற வைக்க, முன்பு இது அதியாவசியப் பொருள்) என
எல்லாம் அக்கம் பக்கத்திலேயே
உங்களிடமிருந்தது எங்களுக்கு
எங்களிடமிருந்தது உங்களுக்கு
என பரிமாறிக்கொள்தல்
பணவிரையம் தவிர்க்கப்படும்..

பொங்கலன்று
எச்சில் படாமல் மிக சுத்தமாக
எல்லாம் தயார் நிலையில் இருக்கும்
முதல் நாள் ஆட்டமாய் ஆடியதால்,
கொஞ்சம் களைப்பாகவே
உட்கார்ந்திருப்போம் வாசலில்
அம்மா நல்ல நேரம் பார்ப்பார்
அடுப்பு மூட்டி, பொங்கல் தயாராகும்
பொங்கிவரும் போது
பொங்கலோ பொங்கல் என, சத்தம் போடுவோம்
பக்கத்து வீட்டுச் சக பெண்பிள்ளைகளுக்கு
வயிறு எரியட்டும் என வேகமாக..
அவர்களும் சளைத்தவர்கள் அல்ல
மைக் போட்டு கத்துவார்கள்

அந்த இனிப்புச் சாதத்தை அப்படித்திண்போம்...
வடை பாயாசம் மதிய உணவிற்குத்தயார் ஆகும்
இருப்பினும் அந்தப்பொங்கல் வரப்பிரசாதமே.
வாழை இலையில் வைத்து பொங்கலை
அக்கம் பக்கத்திற்கும் கொடுப்போம்
அவர்களும் கொடுப்பார்கள்..
அவர்களது இன்னும் தித்திப்பாக இருக்கும்
இருந்தாலும் காட்டிக்கொள்ள மாட்டோம்
எங்களதுதான் ‘பெஸ்ட்’ என இறுமார்ந்திருப்போம்

மாடுகள் வைத்திருப்பவர்கள் மறுநாள்
கொண்டாடுவார்கள்
அங்கேயும் அன்று காலையிலேயே
காலில் செருப்பில்லாமல்
ஓடிவிடுவோம்..
அவர்கள் மாடுகளைக் குளிப்பாட்டி
அலங்கரிப்பதைப் பார்ப்போம்
அங்கும் பலகாரங்கள் கிடைக்கும்
வாங்கிச் சாப்பிடுவோம்
மாடுகள் அழகாக இருக்கும்
பொட்டு, கொம்பில் மல்லிகைச்சரம்
கழுத்தில் வடை மாலை என,
சில வேளைகளில் மாடுகள்
திமிறிக்கொண்டு ஓடும்
நாங்கள் அதைவிட வேகமாக ஓடி
மறைந்துக்கொள்வோம்
அன்று முழுக்க சிகப்பு ஆடைகள் அணியக் கூடாது என்று
பாட்டி எச்சரிகை விடும்.
அதே போல் யாரும் சிகப்பு ஆடைகள்
அணிய மாட்டோம்.
ரிப்பனில் கூட சிகப்பில்லாமல்
பார்த்துக் கொள்வோம். !

முன்றாம் நாளில்
பள்ளித்திடலில்
இளஞர்கள் ஒன்று திரண்டு
பல போட்டி நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்
இசை நாட்காலி, நூல் கோர்த்தல், தேங்காய் துருவுதல் போட்டி
பலூன் ஊதுதல். தண்ணீர் நிரப்புதல், சாக்கு ஓட்டம் என..
நாங்களும் கலந்து கொண்டு
டம்லர், குடம், தட்டு என்று அதிகமான பரிசுப்பொருட்களையெல்லாம்
பெற்று பிரபலமாவோம்..
அங்கும் கூட்டுப் பொங்கல் நடைபெறும் மாலையில்..
அடுப்பூதுவது, விறகு தள்ளி
அடுப்பை நன்றாக எரியவிடுவது என உதவிகள் செய்து
மூக்கு பிடிக்கத்திண்ணுட்டு வருவோம்..

பரதேசியாய் சுற்றுவோம் அந்த ஏரியாவையே..
அவ்வளவு சந்தோசம்....!
விடியவே கூடாது என பிரார்த்திப்போம்
அடுத்த ஆண்டு எப்படியெல்லாம் செய்யலாம் என
திட்டம் தீட்டப்படும் அன்றே.....!

இன்று எல்லாம் ‘ரெடிமெட்’
பாவம் இன்றைய பிள்ளைகள்..