செவ்வாய், மார்ச் 12, 2013

சின்ன சின்ன

மணி பத்தாச்சு.. என்ன இன்னும் காணலையே..? வர நேரம்தானே...! மனதிற்குள் முணகிக்கொண்டே வாசலுக்கும் அறைக்கும் நடந்துகொண்டிருந்தாள் உஷா. எதாவதொரு ஹார்ன் சத்தம் கேட்டால், பட்டென்று கதவருகே ஓடிவருகிறாள்.

காலையிலிருந்து காத்துக்கொண்டிருக்கின்றாள். வழக்கம் போலவே விரைவாகக் குளித்தாள், உடல் முழுக்க கமகம சண்டல் பௌடர் பூசிக்கொண்டாள், கண்களில் லேசாக மை தீட்டிக்கொண்டாள், புருவத்தையும் தீட்டிக்கொண்டாள். உதட்டிற்கு, தெரிந்தும் தெரியாமல் இருப்பதைப்போன்றுள்ள லேசனா பிங்க் கலர் சாயம், உதட்டை பளபளப்பாக்கிக்கொண்டிருந்தது. முகத்தைப் பலமுறை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

போட்டிருக்கின்ற உடை நன்றாக இல்லாததுபோல் தோன்றவே, அதை மாற்றுகிறாள். கொஞ்சம் அழகாக, புதிதாக அலமாரியில் மடித்து வைத்திருக்கும் சுடிதார் ஒன்றினை எடுக்கிறாள், அணிந்துகொள்கிறாள்..

கண்ணாடியின் முன் மீண்டும் தோன்றுகிறாள்.
கூந்தலை அள்ளி மேலே வைத்துக் கட்டுகிறாள். அதைக் கலைத்து ஒற்றை சடை பின்னிப்பார்க்கிறாள். பிறகு இரண்டுமே வேண்டாமென்று கூந்தலைக் கலைத்துவிட்டு முடியைக் கட்டாமல் விடுகிறாள்.. அலையலையென கூந்தல் அவளின் அழகிற்கு மெருகூட்டியது.

பொட்டு வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறாள். முதலில் நேர் பொட்டு, பிறகு வட்டப்பொட்டு, பின் வர்ணப்பொட்டு என மாற்றி மாற்றி வைத்து அழகு பார்க்கிறாள். நெற்றியின் வகிடில் குங்கும்ம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் செய்து அழகு பார்த்துக்கொண்டாள்.

இரண்டு காதுகளுக்கிடையில் சுருள் சுருளாய் முடிகள் இயற்கையாக விழுவதைப்போல் செயற்கையாகச் செய்துகொண்டாள்.

வாசலில் ஹார்ன் சத்தம் கேட்கிறது. விரைகிறாள் வாசலுக்கு, ஏமாற்றத்துடன் திரும்புகிறாள். மீண்டும் தொடர்கிறது ஒப்பனை.

கண்ணாடியின் முன், உடைகளைச் சரி செய்து பார்க்கிறாள். நெஞ்சை நிமிர்த்தி, மார்பின் அழகை ரசிக்கின்றாள். இந்த ப்ரா வேண்டாம், எடுப்பாக இல்லை, வேறொரு ப்ரா போட்டுப்பார்க்கலாமே.. ! உடைகளைக் கலைகிறாள், உள்ளாடைகளை மாற்றுகிறாள். கண்ணாடியின் முன் மீண்டும் எடுப்பாகத் தெரிந்த மார்பின் அழகை பக்கவாட்டில் நின்று ரசித்துப்பார்த்துக்கொள்கிறாள். குனிந்து உடையைக்கொஞ்சம் இறக்கி விட்டுக்கொண்டு, மார்பு கொஞ்சம் தெரியும் அளவிற்கு இழுத்துவிட்டாள்.., அதனின் அழகில் அவளே மயங்கவும், வெட்கம் வர, உடைகளைக்கொண்டு சரி செய்தாள், இருப்பினும் லேசாக மார்பகங்களின் அழகு வெளியே தெரியும்படியே விட்டு வைத்திருந்தாள்.

கை கால்களுக்கு க்ரீம் லோஷன்களைப் பூசி வழவழப்பாக்குகிறாள். இடையிடையே கடிகாரத்தை நோக்கிக்கொண்டு, காதுகளையும் தீட்டி, ஹார்ன் சத்தம் கேட்கிறதா, எனவும் பரிசோதித்துக்கொண்டாள்.

ஒரு பாடலையும் முணுமுணுக்கின்றாள்..

‘ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும் என் அழகிற்கு ஒருவன் துணைவருவான்.. ஒஹோ ஹோ ஓ.. அது நானல்ல, அது நானல்ல...

மீண்டும் ஒரு முறை வாசலுக்கும் அறைக்கும் நடக்கிறாள்.. என்ன இன்று? இன்னேரம் வந்திருக்கணுமே.. இன்னும் ஆளையே காணோமே..!?

ஹார்ன் சத்தம் கேட்கிறது.. விரைந்து ஓடுகிறாள் வாசலுக்கு. ச்சே, இப்படி ஓடினால், மூச்சு வாங்குமே.. ரிலெக்ஸா போகலாமே என்று கதவருகே கொஞ்ச நேரம் தம்மை சுதாகரித்துக்கொள்கிறாள். உடைகளை சரி செய்துகொண்டு, கதவைத் திறக்கிறாள்.

காய்க்கறிவேன் நின்றுக்கொண்டிருந்தது. அருகில் வியாபாரி ரவி.  

ஆண்டி, நீங்கள் கேட்ட, கொடுவாமீன் கிடைக்கல, முள்ளுவாளை கொண்டுவந்திருக்கேன், வேணுமா?மீன் வியாபாரி ரவிதான் கேட்டான், உஷாவிடம்.