சனி, டிசம்பர் 03, 2011

முட்டை அட்டை

தீபாவளி சமயத்தில் நடந்த ஒரு அசம்பாவிதம் இது. பகிரவேண்டும் என்றிருந்தேன், மறந்தே போணேன்.

தீவாவளிக்கு இரண்டு வாரங்கள் இருக்கின்றபோது. தமிழ் நாட்டிற்கு பிரயாணம் செல்ல சில  வேலைகள் இருந்தது. இந்த முறை தீபாவளி ஷாப்பிங் தமிழ்நாட்டில் செய்யலாமென்று திட்டம் போட்டிருந்தோம். அதற்காக ஆயத்தவேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தோம் சகோதரிகள் நாங்கள்.

வேலை முடிந்தவுடன் விரைவாக வீடு திரும்புங்கள், கொஞ்சம் சாமான்கள் வாங்கணும், என்றேன் கணவரிடம். காலையில் சரியென்றவர், மதியம் இரண்டு மணிவாக்கில் என்னை அழைத்து, ஒரு அவரசம், இன்று ஷாப்பிங் போக முடியாது, என்ன விவரமென்று பிறகு சொல்றேன், என்று சொல்லி அழைப்பைத்துண்டித்தார்.

நான் விடுவேனா! மீண்டும் மீண்டும் அழைத்து விவரத்தைப் பற்றி கேட்டேன்.

வேலையிடத்தில் பணிபுரியும் நேப்பாள் ஊழியர்கள் தங்கும் ப்ளாடில் தீப்பிடித்துக்கொண்டது, அவசரமாக அங்கே போகவேண்டும், எததனை மணிக்கு வருவேன் என்று சொல்லமுடியாது..’ பேசி முடிக்காமலேயே தொலைபேசியை துண்டித்தார்.

நேப்பாள் ஊழியர்கள்தான் இருப்பிணும் அவர்கள் அனைவரும் என் கணவருக்கு நல்ல நண்பர்கள். மேலும் அவர்கள், இவரின் கீழே பணியாற்றுவதால், தகவல் அறிந்துவந்து மேலதிகாரிகளுக்குச் சொல்லவேண்டுமென்பதால் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

பகல் மூன்று மணிக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பவில்லை, தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லை. ஸ்வீட்ச் ஆஃப் செய்திருந்தது. நள்ளிரவு/அதிகாலை மணி  இரண்டிற்கு வீடுவந்து சேர்ந்தார்.

நான் தூங்காமல் விழித்திருந்தேன். விசாரித்தேன், `என்னாச்சு?’

அந்த ஐவரில் ஒருவன் மரணம், மற்றவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப்போராடுவதாக சொன்னார், சோர்வாக. நிலைமை மோசமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஓ....ஏன் தீப்பிடித்தது?  கேஸ் தோம்பு எதும் வெடித்துவிட்டதா? கரண்ட் சோர்ட்? பக்கத்துவீட்டிற்கெல்லாம் நெருப்பு போனதா? அங்கு குடியிருப்பவர்களின் நிலை என்ன ஆனது? ஷா ஆலாமில் எந்த பிளாட்ஸ்ல??’’

’’கொர்ர்ர்ர்ர்ர்..’’ சத்தம் மட்டும் வந்தது.

சரி... நானும் தூங்கினேன், கொஞ்சநேரத்தில், பொழுது விடிந்தது.

வேலைக்குக்கிளம்பினோம்.. அன்று மட்டும் நான் கலக்கி வைத்த காப்பியைக்கூட குடிக்காமல், அவசர அவசரமாக கிளம்பினார். நிறைய வேலைகள் இருப்பதாகச்சொல்லிக்கொண்டு....

வேலைக்கு வந்தேன். எனது சக ஊழியர் ஒருவரும் அன்று வேலைக்கு வரவில்லை., அவள் தங்கியிருந்த ப்ளாட்டில்தான் தீப்பிடித்துக்கொண்டதாம்.  உடனே அவளை அழைத்தேன். விவரமறிய..!

நேப்பாள்கார ஊழியர்கள் செய்த ஒரு காரியத்தால்தான் அங்கே தீப்பிடித்துக்கொண்டதாம். அவர்கள் தங்கியிருந்த வீடு முற்றிலும் சேதமாகியிருந்ததாம். பகல் நேரமாதலால், மேல் வரிசைகளில் புகை கிளம்பவும், கீழே வசிப்பவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டார்களாம்.

விரைவாக தீயணைப்பு வீரர்களுக்கு அழைத்து, நெருப்பை அணைக்கவைத்து விட்டார்கள் என்ப்தையும் தெரிவித்தாள். இந்த நேப்பாள் ஊழியர்கள் மட்டும் உள்ளேயே மாட்டிக்கொண்டார்களாம்...!

ஏன்? பகல்வேளை தானே, இளைஞர்களாகவும் உள்ளார்கள், தப்பித்திருக்கலாமே!

அவர்கள், இரவு வேலை முடிந்துவிட்டு வீடு வந்து, வீட்டின் முன்கதவின் ஃக்ரீலை பூட்டிக்கொண்டு நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள். பக்கத்தில் இருந்த கொசுமருந்து அங்குள்ள அலமாரியில் பற்றிக்கொண்டது. (பகலிலேயே கொசு ..கொடுமைதான்), தீப்பரவி புகை அந்த அறையைச்சூழ்ந்துக்கொண்டதால் மூச்சுத்திணறல் மயக்கம் ஏற்பட்டு, தூக்கத்தில் இருந்து எழவே முடியாமல்,  ஐவரும் அங்கேயே தீயிற்கு இரை.!

இதுதான் நடந்தது..
இன்னொரு தகவலையும் பகிந்தார் என் சக ஊழியர். அவர்கள் கொசுமருந்தாக பயன்படுத்தியது, கொசுமருந்து அல்ல முட்டைகள் வைக்கும் அட்டையை.

முட்டை வைக்கும் அட்டையை, எப்படி கொசுமருந்தாக பயன் படுத்தலாம்? ஆச்சிரியமாக இருக்கின்றதுதானே.! எனக்கும்தான்.

பயன் படுத்துகிறார்கள்..பெரும்பாலான வெளிநாட்டுத்தொழிலாளர்கள், தங்களின் குறைந்த வருமானத்தை முழுமையாகச் சேமிப்பதற்காக, சில செலவுகளைக் குறைத்துக்கொண்டு, இதுபோன்ற சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டு, தங்களின் உயிரையே பணையம் வைக்கின்றார்கள்.

கடைத்தெருக்களில் கிடைக்கின்ற முட்டை அட்டைகளை பொறுக்கி சேகரித்துவைத்துக்கொண்டு, ஒரு மூலையில் அதைப்பற்ற வைத்து, அதனில் இருந்து வெளிப்படும் புகையில் கொசுக்களை விரட்டியடிக்கின்றார்களாம். ! கொசுமருந்து வாங்கும் செலவு மிச்சம்தானே.!? என்ன கொடுமை இது.

நேப்பாளில் அவர்களைப் பெற்றுக்கொண்டவர்கள் உயிரோடு இருந்திருப்பார்களா, தெரியவில்லை. அதிலும் இறந்தவரக்ளின் இருவர் உடன்பிறப்புகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அண்ணன் தம்பி.

ஏண்டா ஊரு விட்டு ஊரு வந்து சாகிறீர்கள்.? விவசாயம் பார்த்துக்கொண்டு, கிடைக்கிற வருமானத்தில், வாழ்கிற கொஞ்ச நாளில் குடும்பத்தோடு இருந்து, நல்லது கெட்டதற்கெல்லாம் தோள்கொடுத்து மகிழலாமே...!

நான் மலேசியா வருகிறேன், பிழைக்க; என்று சொல்கிறவர்களை நான் துரத்துவேன். இங்கே வந்து துன்பப்படுவதைவிட அங்கேயே இருங்கள்.. வேலையா இல்லை.!!? பஜ்ஜி கடையில் பொட்டலங்கட்டும் வேலை மேல்.. இங்கே வந்து, உங்களின் உழைப்பை பலர் சுறண்டி, கிடைக்கும் கொஞ்ச வருவாயில், இதற்கு அதற்கு என்று பிடுங்கிக்கொண்டு, ஆண்மகன் ஆண்மகன் போல் நிமிர்ந்து வாழாமல் எல்லாவற்றிற்கும் கூனிக்குறுகி நிற்பதை.. என்னால் பார்க்கமுடியவில்லை. என் தாய்மக்கள் படும்வேதனையை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.

வராதீர்கள்...