புதன், மே 22, 2013

விளக்கம்..

நேற்று மாலை வேலை முடிந்து வீடு செல்லுகையில், என்னுடைய கார் கோரமான சத்தத்தை எழுப்பியது. கரமுரா என்கிற சத்தம். சத்தம் வந்த சில நொடிகளில் காரின் சீதோஷ்ண கருவியின் (temperature meter)  முள் அதிக சூடாகக்காட்டியது. சிகப்புப்புள்ளி அபாய அறிவிப்பு என்றால் அந்த முள் சிகப்பு புள்ளியை தொட்டுக்கொண்டிருந்தது.

என்னால் காரை தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கை கால்கள் நடுங்கின. சென்ற வாரம் கூட பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது, சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றியது,  காரோட்டி மயிரிழையில் உயிர் தப்பினார் என்று. இந்தச்செய்தி வேறு திடீரென்று என் ஞாபகத்திற்கு வரவே, காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு கணவருக்கு அழைப்பு விடுத்தேன். நிறைய அழைப்புகள் நிராகரிக்கப்பட்ட பின்பு, ஒரு குறுந்தகவல் வந்தது.. அதிகாரிகளுடன் உள்ளேன். பிரச்சனை என்ன என்பதை குறுந்தகவல் மூலமாகவே சொல், என்று.

பிரச்சனையைச் சொன்னவுடன், மறு குறுந்தகவல் வந்தது, `என்னால் உதவமுடியாது, அப்படியே மெதுவாக ஓட்டிச்சென்று வீடு போய்ச்சேர், இரவு பார்த்துக்கலாம்..’ என்று.

தொடர்ந்து காரைச்செலுத்த என் மனம் சம்மதிக்கவில்லை. புலி அடிப்பதைவிட கிலி அடிப்பதுதான் பெரிய சிக்கல் இங்கே. கண்ணுக்கெட்டிய தூரம் கண்களாலே வட்டமிட்டேன். தூரத்தில் ஒரு கார் பட்டரை தெரிந்தது. அது கார் வர்க்‌ஷாப் தானா என்பது தெளிவாகத்தெரியவில்லை. இருப்பினும் விளம்பரப்பலகையில் நாலா பக்கமும் டையர்கள் வரைந்திருந்தார்கள்.

அது நிச்சயம் கார் பழுதுபார்க்கும் பட்டரையாகத்தான் இருக்கவேண்டுமென்று நினைத்து, காரை அங்கே செலுத்தினேன். கரமுரா என்கிற கடுமையான சத்தத்துடன் காரை அந்த வர்க்‌ஷாப் வாசலில் நிறுத்தினேன். நான் `அலாரம்’ போட்டுக்கொண்டு வந்ததை செவிமெடுத்த அந்தப் பட்டரை ஊழியர் ஒருவர், நான் அழைக்காமலேயே வெளியே வந்தார்.

இஞ்ஜினை திற, என்கிறார். அதைத்திறக்கக்கூட தெரியாமல் திணறினேன். கடந்த இருபது ஆண்டுகளாக கார் ஓட்டுகிறேன், ஆனால் இஞ்ஜினை உள்ளிருந்து எப்படித்திறப்பது என்பது கூட தெரியாத நிலையில் நான். அந்த அளவிற்கு இந்திய ஆணாதிக்க சமூகம் பெண்களை  கோழையாக்கி வைத்திருக்கின்றது.

தவித்தேன், தடுமாறினேன்.. என்னை காரில் இருந்து இறங்கச்சொல்லி, அவரே செய்தார் அவ்வேலையை. திறந்தவுடன் காரில் இருந்து புகை கிளம்ப ஆரம்பித்தது. அரண்டுபோனேன்.

உள்ளே உள்ள சில குழாய்களைக் காண்பித்து, இதில் ஓட்டை, அதில் ஓட்டை.. இது அடைத்துக்கொண்டிருக்கிறது, அதில் உடைந்துவிட்டது. காத்தாடி சிக்குகிறது, கூலிங் கம்மி என என்னன்னமோ சொன்னார். ஒன்றும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து காரை செலுத்தமுடியாது, இங்கேயே வைத்துவிட்டுப்போ, நாளைதான் தயாராகும், என்றார்.

மணி, மாலை ஆறுமுப்பது. எப்படி வீட்டிற்குச்செல்வது.? டாக்சி பிடித்துத்தான் போகவேண்டும் வேறுவழியில்லை என்றார்.

வரும் வழியில் காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்கினேன். எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு பஸ் நிறுத்தும் இடத்திற்குச்சென்றேன். அங்குதான் பஸ் டாக்சி போன்ற வாகனங்கள் நிற்கும். மற்ற இடங்களில் பேராபத்து. வாகனங்களை யாரும் நிறுத்தமாட்டார்கள். விபத்து ஏற்படும் இல்லையேல் வாகன நெரிசல் ஏற்படும். 

அங்கே யாருமே நிற்கவில்லை. மாலையும் இரவும் சந்திக்கின்ற வேளையில் நான் மட்டுமே தனிமையில்.

அந்த பஸ்டாப் புதுமையாக இருந்தது. அதாவது, வலது இடது புறமும் சாலை, பஸ்டாப் நடுவில். டாக்சி இந்தப்புறமும் வரலாம் அந்தப்புறமும் வரலாம்.

இந்தப்புறம் பார்க்கும்போது அந்தப்புறம் டாக்சி வருகிறது. அந்தப்புறம் பார்க்கும்போது இந்தப்பக்கம் டாக்சி வருகிறது. இங்கும் அங்கும் சுற்றிச்சுற்றி ஓய்துபோனேன். டாக்சி நின்றபாடில்லை. அப்படியே நின்றாலும் நாங்கள் வசிக்கும் இடத்திற்குச்செல்ல முடியாது, அங்கே இன்று கடுமையான சாலை நெரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லி தட்டிக்கழித்து விட்டு நகர்ந்தார்கள்.

அதுவரையில் எந்த பஸ்ஸும் வரவில்லை. செய்வதறியாது அமைதியாக அமர்ந்திருந்தேன். சக ஊழியர் ஒருவருக்கு அழைத்தேன்.

“ஹாலோ  சீலன், நான் தான்..!”

“ஹா..என்ன விஜி இந்த நேரத்தில் அழைக்கிறீங்க?”

“கார் பழுதாகிவிட்டது, டாக்சிக்கு காத்திருக்கின்றேன்..”

“என்ன பிரச்சனை?”

“நிறைய பிரச்சனை. டெம்பரச்சர் சூடேறி, மீட்டர் ஹிட் ஆகிடுச்சு..”

“ ஓ.. ரேடியட்ட்டர் போச்சு போலிருக்கு..”

“கார் எங்கே?”

“ வர்க்‌ஷாப்பில் போட்டுவிட்டேன்..”

“ வர்க்‌ஷாப் எங்கே?”

“ செக்‌ஷன் இருப்பத்தாறு..”

“ செக்‌ஷன் இருப்பத்தாறுக்கு ஏன் போனீங்க..?”

“ வர்க்‌ஷாப் அங்கேதானே இருக்கு அதான்..!”

“ இல்ல.. வேலை முடிஞ்சி செக்‌ஷன் இருபத்தேழு வழியாதானே போவிங்க.. எதுக்கு அந்தப்பக்கம் போனீங்கன்னு கேட்டேன்..!”

“ இங்கே இருக்கிற காய்க்கறி மார்க்கெட்’டுக்கு வந்தேன். வாங்கிட்டுத்திரும்பும்போது பழுதாயிடுச்சி..”

“காய்க்கறி வாங்க அவ்வளவு தூரம் போவீங்களா.. ஹம்ம்..”

கடுப்பானேன் நான்.. என் பிரச்சனையைப் புரிந்துகொள்ளாமல் மொக்கை போட்டார் சீலன். “சீலன், இப்போ பிரச்சனை அது அல்ல. எனக்கு டிராஸ்போர்ட் வேணும்.. உதவமுடியுமா?”

“எங்கே நிற்கறீங்க?”

“ செக்‌ஷன் இருபத்தேழு, வாழை இலை உணவகத்தின் அருகில்..”

“எந்த உணவகம்? நாம் அடிக்கடி சாப்பிடச்செல்வோமே அங்கேயா?”

“ம்ம்ம்...”

“அடேயப்பா.. வர்க்‌ஷாப்பில் இருந்து அங்கே போய் நிக்கறீங்க.. அவ்வளவுதூரம் ஏன் நடந்துபோனீங்க..?”

“ அங்கே மட்டுதான் பஸ்டாப் இருக்கு..!”

“ டக்சி வரலையா?”

“டக்சி வந்தா, நான் ஏன் உங்களைக்கூப்பிடப்போறேன்..!” குரலில் எரிச்சல் கலந்து வந்ததைப்புரிந்து கொண்ட சீலன், கேள்விக்கணைகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்தார்..

“ ஓ.. நான் வீட்டுக்குப்போயிட்டேனே... வரமுடியாதே..!”

“ நன்றி..” என்று சொல்லி, மூதேவி அதை முதலிலேயே சொல்லித்தொலைக்கவேண்டியதுதானே. கைப்பேசி கட்டனத்தையாவது மிச்சம் பண்ணியிருக்கலாம், என, முனகிக்கொண்டே தொலைபேசியைத் துண்டித்தேன்.

மீண்டும் வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் கணவர் அழைத்தார். மணி ஏழு முப்பது. “வீட்டுக்கு போயிட்டியா?”

“இன்னும் டாக்சி கிடைக்கவில்லை.. வேயிட் பண்ணிக்கிட்டிருக்கேன்.”

“அம்மா (என் மாமி) சாப்பிடாம இருப்பாங்களே.., நீ இன்னும் இங்கேதான் இருக்கியா? ” இந்தக்கேள்வி என் உச்சுமண்டைக்கு சுர்ர் என்று ஏறியது.. வாயில் வந்த கெட்ட வார்த்தையை, அப்படியே விழுங்கிவிட்டு.. தொடர்பைத்துண்டித்தேன்.

மீண்டும் கைப்பேசி சிணுங்கியது.

“ராஜா பேசறேன்..” சகஉழியர்தான், லாரி ஓட்டுனர்.

“சொல்லுங்க ராஜா..”

“ காடி கெட்டுப்போச்சாம்.. சீலன் சொன்னார்.”

“ ஆமாம் ராஜா.. எங்கே இருக்கீங்க?”

“ அலம் மேகா’வில்தான் இருக்கின்றேன்.. சாமான்களை ஏற்றிக்கொண்டிருக்கிறேன். இன்னும் பதினைந்து நிமிடம் ஆகும் வர.. ஒகே வா?”

“ம்ம்..ஒகே..!”

“என்ன பிரச்சனை?”

“ டெம்பரச்சர் மீட்டர் சூடேறிப்போச்சு..”

“ ஹ்ம்ம்..அப்புறம்..!!?” தொடர்ந்தார் ராஜா.. அதற்குள் ஒரு கார் என் முன்னே வந்து நிற்கவும், நான் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி அவரின் அழைப்பிற்கு முற்றுப்புள்ளிவைத்தேன்.

டக்சிதான் நின்றது. பூச்சோங் போகவேண்டுமா? உங்க கணவர்தான் டக்சி அனுப்பினார், என்று சொல்லி கணவரின் பெயரைச்சொன்னார். ஏறி அமர்ந்தவுடன், ராஜாவுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி, டாக்சி கிடைத்துவிட்டது, லாரி வேண்டாம் என்று குறுந்தகவல் அனுப்பினேன்.

வீடுவந்துசேர இரவு எட்டு நாற்பதாச்சு..

நுழைந்தவுடன் மாமி கேட்டார்.. “ஏன் இப்பலெல்லாம் ரொம்ப லேட் லேட்’ஆ வர..?”