செவ்வாய், அக்டோபர் 30, 2012

முடிச்சு

``ஹேய் லதா இன்னிக்கு நான் புது டிரஸ் போட்டிட்டு வேலைக்கு வந்திருக்கேன்’’

``என்ன தீபாவளி டிரஸ்’ஆ?, வாங்கியவுடன் போட்டிடணும் இல்லேன்னா தல வெடிச்சிரும் உனக்கு..!”

``அடிப்பாவி என்ன ஒரு வில்லத்தனம் உனக்கு..  சனிக்கிழமை தீபாவளி ஷாப்பிங் போனேன். எனக்கு டிரஸ் வாங்கணும்னு நினைக்கல, ஆனால் நீண்ட நாளாக நான் தேடிய ஒரு டிரஸ் கண்ணில் பட்டது. எப்போதுமே மற்றவர்களுக்கு ஷாப்பிங் செய்வேன். இந்த முறைதான் எனக்காகச் சென்றேன். பார்த்தவுடன் அந்த டிரஸ் மனதைக் கவரவும் உடனே வாங்கினேன்..  செம விலைதான். அழகா இருந்தது. போட்டுக்கொள்ளணும் போல் தோணுச்சு, போட்டுக்கிட்டேன். வாழ்க்கையில் என்ன இருக்கு? நினைத்ததை நிறைவேற்ற முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை.!’’ இன்று காலையில் நிகழ்ந்த ஒரு பிரச்சனையைச் சொல்வதற்காக எனது உற்றதோழி லதாவை அழைத்திருந்தேன். அழைப்பை எடுத்தவுடன் பிரச்சனையைப்பற்றி பேசாமல், ஆடை வாங்கினேன், தீபாவளி ஷாப்பிங் போணேன் என, நீட்டி முழக்கினேன்.

`` சரி சரி..எஞ்ஜாய் பண்ணுப்பா..!” என்ன கலரு என்ன மாதிரியான ஆடை என்கிற கூடுதல் தகவல்களைப் பரிமாறிய பிறகு விஷயத்திற்கு வந்தேன்.

``காலையிலே ஒரு பிரச்சனை..லதா?’’

``என்னாலா, என்னாச்சு.. பெரியண்ணன் பொண்டாட்டி மீண்டும் வம்பிற்கு வறாளா?”

``அய்யே..குடும்பப்பிரச்சனை இல்லை.. ஆபிஸில்..’’

`` என்ன, கோழ் சொல்லி போட்டுக்கொடுத்துட்டாளா?..” வழக்கமான பிரச்சனைகளையே கிளறினாள் லதா.

``அதுவும் இல்லை லதா.. சரி யூகிக்காதே, நானே சொல்கிறேன்.. புதிய துணிகளை வாங்கியதும், பழய துணிகள் அலமாரியை அடைத்துக்கொண்டிருந்தது. நேற்று எல்லாவற்றையும் கழித்து, அலமாரியைத் தூய்மைப்படுத்தினேன். அப்போது சேராத பல நல்ல துணிமணிகளை ஒரு பையில் கட்டி ஆபிஸுக்குக் கொண்டு வந்தேன், கிளினிங் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்துவிடலாமே என்று. பை பெரிதாக இருக்கவும், என்னால் தூக்க முடியல. சரி, அந்த கிளினரிடமே கார் கீ’யை கொடுத்து, காரில் இருந்து எடுத்துக்கொள்ளச்சொல்லலாமே என அவளைத் தேடினேன்..”

``அவளைக் காலையிலே தேடினால் கிடைப்பாளா..? அங்கேயும் இங்கேயும் போய் ஊர்கத பேசறவளாச்சே அவ.”

லதாவிற்கு இங்குள்ள நிலவரங்கள் பற்றி நன்கு தெரியும். ஏற்கனவே இங்கே வேலை செய்தவள் லதா. லண்டனில் இருக்கும் அம்மா நோய்வாய்ப்பட்டபோது, அங்கு சென்று அவரைக் கவனித்துக்கொள்வதற்கு, தொடர்ந்து சில மாதங்கள் விடுப்பு கேட்கவும், இதுபோன்ற நீண்ட விடுமுறைகளுக்காகான சட்டத்திட்டங்கள் இங்கே இல்லை என்று நிர்வாகம் சொல்லிவிட்டதால், வேறு வழியில்லாமல்  அரை மனதோடு வேலை விட்டுச்சென்று விட்டாள். அவள் இங்கே வேலை செய்த போது நாங்கள் இருவரும் இணைபிரியா தோழிகள். ஆக, சில விஷயங்களைச்  சொன்னவுடன் புரிந்துகொள்வாள் என்பது கூடுதல் தகுதி. மேலும் எனது சில நடவடிக்கைகளில் ஏற்கனவே தொடர்பு இருப்பதால், மீண்டும் `தாத்தா பாட்டி’ கதைகள் எல்லாம் சொல்லி ஆவியை வீணடிக்கின்ற வேலையெல்லாம் இருக்காது. சம்பந்தமே இல்லாத சிலரிடம் சொல்லுகிற போது, அவர் யார்? இவர் யாரு? இது எப்போ நடந்தது? அது எப்போ நடந்தது? மொதல்லே இருந்து சொல்லு, புரியல... விளங்கல.. என வாட்டி எடுப்பார்கள். அதனால் நம்மோடு சில செயல்களில் கூடவே இருப்பவர்களிடம் தான் பிரச்சனைகளைப் பகிரவேண்டும். எல்லோரிடமும் என்றால், சக்தி விரையமாகும். உதாரணம் : இலக்கியம் பற்றி அறவே வாசிப்பு பழக்கமில்லாதவர்களிடம் பேசுவது போல்..!  ஒருவர் கிடைத்தாலே போதும். ஆனால் அந்த ஒருவர் கிடைப்பதுதான் அபூர்வம். அதுவே சிக்கல்.

``ஆமாம் லதா. கண்டீனில் அங்கே உள்ள வர்க்க்ஸிடம் கதையளந்துக் கொண்டிருந்தாள். நான் நுழைந்தவுடன் அந்த கண்டீன் காரி வாளுவாளுன்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டாள். என்ன கதை என்றால், இந்த கிளினர் அடிக்கடி அங்கே போய் கதை பேசுவதால், அங்கே வேலை செய்பவர்கள் வேலையை ஒழுங்காகச் செய்யாமல் சாப்பாட்டில் உப்பு புளி மிளகாய் அதிகமாகப்போட்டு விடுகிறார்களாம். மெனெஜ்மெண்டில் அதிக கம்ப்ளெயின் போகிறது என என்னிடம் சொல்லி சத்தம் போட்டாள்.”

``அடியே கோவில்பட்டி வீரலட்சுமி சாரி விஜயலக்ஷ்மி, உடனே நீ என்ன பண்ணினாய்..!?”

``நான் என்ன பண்ணுவேன், எதையும் காது கொடுத்துக்கேட்காமல், பேசிக்கொண்டிருந்த கிளினரை அழைத்து, கார் கீ’யை அவளிடம் கொடுத்து, `காரில் துணிமணிகள் இருக்கு, போய் எடுத்துக்கோ’ என்று சொல்லி, அந்த கண்டீன்காரி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததை அவளிடம் சொல்லி, `இனி அங்கே போகாதே, பிரச்சனை வரும்’ன்னு மட்டும்தான் சொன்னேன். அவ்வளவுதான் என் பங்கு. அதற்கப்புறம் என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ எனக்குத்தெரியாது. அந்த பொம்பள வரிஞ்சி கட்டிக்கொண்டு வந்துட்டா சண்டைக்கு காலையிலே... `ஏய், நான் என்ன சொன்னேன், நீ என்ன வத்தி வச்சே.. இங்கேயும் அங்கேயும் சொல்றதுதான் உன் வேலையா? அவ வந்து அங்கே கத்தறா. எங்க ஆயி ஆத்தா வரைக்கும் இழுக்கறா..ஆச்ச போச்சா’ன்னு சத்தம் போடறா அந்த மனுசி.”

``ம்ம்ம்..தேவதான்..அப்புறம்?”

`` நான் பொறுமையா.. `நடந்தது என்னன்னு நிதானமா கேளு.. சத்தம் போடாதே. போஸ் வந்திடப்போறாரு. பிரச்சனையாகும், இது வீடு இல்லே’ன்னு நிதானமா சொல்றேன் கேட்க மாட்டேன் என்கிறாள். இஷடத்திற்கு வாயிற்கு வந்தபடி கத்துகிறாள்.., சமாதனப்படுத்திப்பார்த்தேன், பக்கத்து அறையில் உள்ளவர்கள் எல்லோரும் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. எனக்கு என்னமோ ஒண்ணு மண்டைக்கு மணியடிக்க.. பொறுமையை எழந்துட்டேன் `ஏய், உனக்கு என்ன கீலாவா, சொல்றதைக்கேட்க மாட்டே, அவ வெளியூர்காரி எதாவது உளறுவாள், உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை இப்போ, ஏன் என்னிடம் வந்து கத்துகிறாய்? உங்க போஸை அழைக்கவா? ஸ்டூப்பிட் இடியட், அறிவிருக்கா, இது என்ன உன் வீடா?, சண்டைப்போட ஆசையா இருந்தா, தெருவுக்க்ப்போ, உனக்கு மட்டும்தான் கத்த முடியும்னு நெனைக்கிறியா? என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உம்மனசுல, நீ சொன்னதைத்தானே நான் சொன்னேன், வேறு எதாவது புதிதாக உளறினேனா?  தைரியம் இருந்தா பின்னாடி பேசாதே, போய் அவளுக்கு நேராக பேசு.. கூப்பிடு அவளை. நான் என்ன சொன்னேன் என்று அவளே சொல்லுவாள். லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு பவ்யமா வேலைக்கு வருவதால், என்னை என்ன லூசுன்னு நெனைச்சியா? பக்கா லொக்கலு நானு, இறங்கினேன்.. நாறிடும் பிஞ்சிடும் ஜாக்ரதை..’ன்னு கத்திட்டேன். ஆபிஸே குழாயடி மாதிரியாயிடுச்சு.., நான் என்னமோ அந்த பொம்பலைய அடிக்கப்போறதா எல்லோரும் நினைச்சுக்கிட்டு, என்னை இறுக்கிப்பிடிச்சுக்கிட்டாங்க.. `வேணாம் மேடம் விடுங்க விடுங்க’ன்னு.. கொடுமை’லா படு டென்ஷன்..”

``அய்யையோ.. அப்புறம்?” லதா ஆர்வமாக கதை கேட்டாள்.

`` ஆடிப்போயிட்டா அவ.. குரல் தாழ்த்தி, `இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி குதிக்கிறீங்க மேடம்’ன்னு முகமெல்லாம் வெளிறி பயந்துட்டா. இந்த பவ்யம் மொதல்லே இருந்திருக்கணுமா இல்லையா? வெட்கம் நம்மவர்களோட.. ச்சே.”

``கடைசியா என்னதான் ஆச்சு..?”

``ம்ம்ம்.. அந்த பொம்பளையோட போஸ் போன் பண்ணினான். நடந்தவற்றையெல்லாம் சொன்னேன். மன்னிப்பு கேட்டான். அவள திட்டியிருப்பான் போலிருக்கு.. காப்பி கலக்கி எடுத்துக்கொண்டு வந்து, `குடி குடி.. சாரி கீரி’ன்னு காலில் விழாத கொறையா மன்னிப்பு கேட்டா.. காப்பியும் வேணா ஒண்ணும் வேணா போயிக்கோ’ன்னு முகத்தைத்திருப்பிக்கொண்டேன். அழுதாள்.. எல்லாம் சரியாயிட்ட மாதிரி ஒரு தோற்றம் வந்தது. ஆனாலும் எனக்கும் ஒரு ` வார்னிங் மெமோ’ வந்தது .. ஆபிஸில் ரௌடித்தனம் செய்கிறேன் என்று..தேவையா இதெல்லாம் எனக்கு.. !!?”

`` விஜி, எனக்கு ஒண்ணு தோணுது, சொன்னா திட்டுவ...!” பீடிகை போட்டாள் லதா.

``என்ன?”

``நீ போட்டிருக்கிற புதிய டிரஸ் உனக்கு ராசி இல்லை. சிகப்பு கலர் அசம்பாவித கலர். டேஞ்சர் கலர். இனிமே சிகப்பு கலர் டிரஸ் வாங்காதே.. நான் சொன்னா நீ நம்பமாட்டே. ஆனால் அதுதான் உண்மை. ப்ளீஸ் இனிமே அந்த டிரஸைப் போடாதே...’’

``நல்லா போடு முடிச்சு.. நீயும் உன் ஐதீகமும்.. லூசு..” முணகிக்கொண்டே போனை வைத்தேன்.