வியாழன், மே 26, 2011

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

டந்த 2500 ஆண்டுகளில் தமிழில் தோற்றம் கொண்டு வளர்ந்தமைந்த இலக்கியங்களைத் தமிழ் இலக்கியங்கள் எனக் கூறலாம். எழுந்த காலம், மற்றும் இலக்கியத்தின் யாப்பியல், கருப்பொருள் முதலியன தொடர்பாகத் தமிழ் இலக்கியங்களை  வேறு பிரித்து ஆராயும் முறை நிலவி வருகிறது. சங்க இலக்கியம், பல்லவர் கால இலக்கியம், இருண்ட கால இலக்கியம், சோழர் கால இலக்கியம், தற்கால இலக்கியம் எனப் பாகுபடுத்தல் ஒருவகை; யாப் பியல் மற்றும் கட்டமைப்பு வகையில் பெருங்காப்பியம், சிறு காப்பியம் எனப் பகுத்தல் மற்றொரு வகை. தமிழ்நாட்டு மக்களால் வழிபடப் பெறும் கடவுளர்களை மையப்படுத்தி எழுந்த இலக்கியங்களைச் சமய இலக் கியங்கள் என்றால் வழக்கு. மேற்குறித்த சமய இலக்கியங் களில் ஒருவகை சிவனைக் குறித்து எழுந்த சைவ இலக்கியங்கள். இவற்றுள் சிவனை மையப்படுத்தி எழுந்த சைவ இலக்கியங்களே இக்கட்டுரையில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
சைவ- இலக்கியங்கள் என்ற குறியீடு

திருமுருகாற்றுப்படை காலம் தொடங்கித் தமிழ் மக்கள் வழிபடு கடவுளர்களிடையே உறவுமுறை கற்பிக்கும் பழக்கம் ஏற்பட்டது. எனவே, அவ்வகையில் தாய்த்தெய்வ வழிபாடாகிய சக்தி வழிபாடு, முருக வழிபாடு, கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழகத்தில் தோற்றம் கொண்டு வளர்ந்த கணபதி வழிபாடு, சிவன்- சக்தி- முருகன் அம்சமாகக் கருதப்பட்ட சிறுதெய்வ வழிபாடு என்பன எல்லாம் ஒருங்கிணைந்த சிவவழிபாட்டின் அங்கங்களாயின. எனவே, சைவ இலக்கியங்கள் என்ற குறியீட்டில் மேற்குறித்த அனைத்து வழிபாட்டு இலக்கியங்களும் ஒருங்கிணைத்துக் கொள்ளப்பட்டன. வைணவம் மட்டும் தனித்து ஆராயப்பட்டது.
16 ஆயிரம் சைவத் தமிழ் நூல்கள்

உலக மொழிகளோடு ஒப்பிடுகையில், எண்ணிக்கை, காலப்பழமை, யாப்பியல், இசை வடிவங்கள் கொண்ட தமிழ் இலக்கியப் பரப்பே பரந்ததும், விரிந்ததும் ஆகும். தமிழில் கடைச்சங்க காலம் முதற் கொண்டு, 20-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தோற்றம் கொண்ட பல்வேறு வகையான இலக்கியப் பரப்பில், அறுபது விழுக்காட்டு இலக்கியங்கள் சைவ சமயம் குறித்து எழுந்தன என்பது நன்கு நினைவு கூரப்பட வேண்டியதாகும். சைவ சமயக் களஞ்சியம் ஒன்றைத் தயாரிக்கும் எனது கடந்த ஐந்தாண்டு கால முயற்சியில், சைவ சமய இலக்கியங்களின் தொகை பதினா றாயிரத்தை நெருங்குவது வியப்பாக நின்றது. இவற்றில், எண்பது விழுக்காட்டு நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுள் இடம் பெற்ற பாடல்களின் தொகை பல லட்சங் களைத் தாண்டும்.
தொல்காப்பியம் முதல் சிலம்பு வரை

கால வரிசைப்படி, சைவ சமயம் தந்த தமிழ் இலக்கியங்களை இச்சிறிய பதிவில் அடை யாளப்படுத்த மட்டுமே இயலும். விரிவான ஆய்வுகளுக்கு வாய்ப்பு இல்லை. 2750 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில், வெற்றி தருபவளாகக் கொற்றவை குறிக்கப்படுகிறாள். "கொடி நிலை கந்தழி' என்று தொடங்கும் நூற்பாவில், முருகன் பற்றிய குறிப்புள்ளதாக ஒருசிலர் கருதுகின்றனர். தனிப்பாடல்களாக எடுத்துக்கொண்டால், எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பரிபாடலில், இசை வடிவாக முருகன், காடுகிழாள் (காளி) குறித்தெழுந்த சைவ- தனி-இசைப்பாடல்களைக் காண முடிகிறது. சைவம் தந்த தனிநூலாக, முதல் கொடையாகக் கிடைத்துள்ள நீண்ட வரிகளால் அமைந்தது நக்கீரனாரின் திருமுருகாற்றுப் படை. சிறிய இடைவெளிக்குப் பின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில், சிவ- சக்தியாகிய உமையைப் போற்றிப் பாடும் தனிக் காதையாக வேட்டுவ வரியும், முருகனைப் புகழ்ந்து பாடும் "குன்றக்குரவை'யும் அமைந்தன.
முதல் சிற்றிலக்கிய வடிவங்கள்

கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னதாகச் சங்க இலக்கிய அகப்பாட்டு நெறியில், சிவனைப் பாடுபொரு ளாகக் கொண்டு கல்லாடம் என்ற அரிய நூல் தோன்றி யது. "கல்லாடம் கற்றவனிடம் சொல்லப் படாதே' என்பது பழமொழி. முதல் கணபதி வாழ்த்து இந்நூலில் இடம் பெற்றது. தொடர்ந்து காரைக்கால் அம்மையா ரின் மூத்த திருப்பதிகங்கள் இரண்டும், அற்புதத் திருவந்தாதியும், திரு இரட்டை மணிமாலையும் தோற் றம் கொண்டன. பதிகம் (10 பாடல்களைக் கொண்டது). அந்தாதி- (ஒரு பாடலின் நிறைவை அடுத்த பாடலின் தொடக்கமாகக் கொண்டு 100 பாடல்களில் அமைவது). இரட்டை மணிமாலை (இரண்டு வகை யாப்புகள் அமைந்த பாடல்களை மாறிமாறி அடுக்கி 20 பாடல்களில் நிறைவிப்பது) என்ற புத்திலக்கிய வடிவங்கள், அம்மையார் தமிழுக்குத் தந்த இலக்கியக் கொடைகளாகும்.
தமிழ் ஆகமம்- திருமந்திரம்

"யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற தொடருக்கு அடுத்துத் தமிழ் இனப்பெருமை பேசும், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்ற சமய- சமரசத்தை முன்வைத்த திருமூலரின் திருமந்திரம், சைவம் தந்த தமிழ் இலக்கியக் கொடைகளுள் சிறப்பாகக் குறிக்கத் தக்கது, "என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' எனக் கட்டியம் கூறித் தொடங்கும்  திருமூலர், சைவத்தைத் தோத்திர நெறியிலிருந்து சாத்திர நெறிக்கு எடுத்துச் சென்றார். கி.பி. 14-ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில்அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தக் கூடிய அறிவியல் பூர்வமான, "சைவ சித்தாந்தம்' என்ற பெருநெறி தோன்ற வித்திட் டவர் திருமூலர். தென்னாட்டு அறிஞர்களால் வடமொழியில் படைக்கப்பட்ட ஆகமங்களை, மொழிபெயர்ப்புச் செய்யாமல், தமிழ் ஆகமமாகத் திருமந்திரம் படைக்கப்பட்டது. அறம், யோகம், மருத்துவம், தத்துவம் எனத் தமிழில் எழுந்த ஒரு சைவக் கலைக்களஞ்சியமாகவே திருமந்திரம் நிற்கிறது. உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்நூலை அறிவாராய்ச்சிக்கு உட்படுத்தினால் கிடைக்கும் புதையல்கள் அன்னைத் தமிழுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்கும்.
500 ஆண்டு பொற்காலம்

கி.பி. 650 காலப்பகுதி தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை அளப்பரிய சிறப்புடைய சைவப் பனுவல்களும், சிற்றிலக்கியங்களும், பெருங்காப் பியங்களும் தோன்றினபிற்காலச் சோழர்களின் எழுச்சியும், நால்வர் பெருமக்களின் வருகையும், சைவம் வழித் தமிழ்மொழிக்கு விலைமதிப்பற்ற ஆபரணங்களை அணிவிக்கக் காரணமாயின. பாலி மொழியை முன்வைத்துத் தமிழை அழிக்க முயன்று பௌத்தர்களின் முயற்சியையும், வடமொழியை முன்வைத்துத் தமிழர் உயர் கலைகளைச் சீரழிக்க முயன்ற சமணர் முயற்சி களையும் எதிர்த்துப் பெரும் சமயப் போராட்டம் நிகழ்த்திய சைவர்கள், வெற்றிவாகை சூடி, தமிழ் அன்னைக்கு அரியணை தந்தனர். "நாளும் இன்னிசை யால் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்', "நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவி னுக்கு அரையன்' என்ற சுந்தரர் பதிவுகள் அன்னார் இருவரும் சைவத்தின் பெய ரால் தமிழ்வளர்த்த திறம் உரைத்தன.
சைவத் திருமுறைகள்

மூவர் தேவாரம், சங்க காலத்தில் நிலவிப் பின் அழிவுற்ற தமிழ் இசை வடிவங்களாகிய 103 பண்களில் 22 பண்களை மீட்டெடுத்தது. புத்திலக்கிய வடிவங்களை ஞானசம்பந்தர் படைத் தளித்தார். தாண்டகம் நாவரசர் கொடையாக அமைந்தது. கருவறையில் நிகழ்த்தப்படும் அருச்சனை என்பது "தமிழ் இசையால் பாடுவதே' என்பதை சுந்தரர் வரலாற்றில் வைத்துச் சேக்கிழார் புரட்சி செய்தார். உலகச் சமய இலக்கியங்களுள் நெஞ்சத்தை உருக வைக்கும் அனுபவ வெளிப் பாடாகத் திருவாசகத்தை மாணிக்கவாசகர் தமிழுக்குக் கொடையாக வழங்கினார். ஒன்பதாம் திருமுறை இசைப் பாமாலையாய் வந்தது. 11-ஆம் திருமுறையில் புத்திலக்கிய வடிவங்களில் 40 சிற்றிலக்கியங்கள் இணைந்தன. வரலாற்றுப் பெட்டகமாக கடவுளினும் பெரியன் மனிதன் என்பதை நிலைநாட்டிச் சேக்கிழார் பெரிய புராணம் என்ற காப்பியம் உபகரித்தார்.
சைவ சித்தாந்தம்

சைவம் தமிழ்மொழிக்குத் தந்த விலைமதிப்பற்ற கொடைகளுள் ஒன்று சைவ சித்தாந்தம். விவேகானந்தருக்கு அது, ஜே.எம். நல்லசாமி பிள்ளையால் மொழிபெயர்த்துத் தரப்பட்ட போது, அவரை அது வியக்க வைத்தது. மூவர் தேவாரம், திருமந்திரம் தந்த ஒளியில் மெய்க் கண்டார் படைத்த சிவஞான போதமும், அதற்கு சிவஞான யோகிகள் வரைந்த பேருரையும் அளவற்ற தமிழர்களின் நுண்மாண் நுழை புலனுக்குக் கட்டியம் கூறி நின்றன. இந்நூலுக்கு அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய செய்யுள் வடிவிலான உரை நூலே, சிவஞான சித்தியார் என்பது. தமிழின் பெருமை பேசும் ஆறு நூல்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்பட்டது. மெய்கண்ட சாத்திரங்களும், பண்டார சாத்திரங் களும் தமிழ்மக்கள் கற்றுணர்ந்த வடமொழி மற்றும் தருக்க அறிவுக்குச் சான்று கூறுவன.
சைவம் தந்த அறக்கொடைகள்

வள்ளுவத்தையும், பதிணென் கீழ்க்கணக்கில் உள்ள ஏனைய நூல்களையும் வழிமொழிந்து, சைவநெறி நின்ற ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர் போன்றோர் அரிய எளிய அறநூல்களைச் சைவத்தின் பெயரால் வடித்தமைத்தனர். கச்சியப்பரின் கந்தபுராணம், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம், சிவஞான சுவாமிகளின் காஞ்சிப் புராணம் என்பன தமிழன்னைக்குச் சூட்டப்பெற்ற விலைமதிப்பற்ற ஆபரணங்கள். சிற்றிலக்கியம், தனிப்பாடல் வரிசையில் சித்தர்கள் ஆற்றிய பங்கும் மகத்தானது. ஒட்டக்கூத்தர், புகழேந்தி, பட்டினத்தார், தாயுமா னார், சிவப்பிரகாசர், குமரகுருபரர், சைவத்திருமடத்து தலைவர்கள், அருளாளர்கள் வழங்கிய நூல் தொகுதிகள் கணக்கில் அடங்காதன.
பல்வகை இலக்கியச் செல்வங்கள்

சிவநெறி வழாது நின்று முருகனைப் பாடுபொருளாகக் கொண்டு, சந்தத் தமிழ் தந்த அருணகிரியாரின் திருப்புகழ் ஓர் தமிழ் அற்புதம். முருகனை மையப் பொருளாக்கி வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோர்  நெஞ்சுருக்கும் கவிமழை பொழிந்தனர். ஈழத்து அறிஞர்களின் சைவப்பணிகள் தனியே ஆராயத்தக்கன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிற்கால கம்பராகவே திகழ்ந்தார். சீர்காழி மூவராகிய முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாச்சலக் கவிராயர் என்பார் தமிழில் சிவனை மையப்படுத்தி இனிய பதங்களையும், கீர்த்தனைகளையும் வழங்கித் தமிழ் இசைக்கு ஆக்கம் சேர்த்தனர். கோபால கிருஷ்ணபாரதி, சுத்தானந்த பாரதி முதலியோரின் சைவப் பங்களிப்பும் குறிக்கத்தக்கன.
விருப்பு- வெறுப்பற்ற ஆய்வு

இன்னும் சைவத் தமிழ் இலக்கியங்கள் படைத்த நூறு நூறு கவிஞர்களும், ஆயிரக்கணக்கான நூல்களும் தமிழன்னை செம்மொழி சிம்மாசனம் ஏறத்துணை நின்றன. அவற்றையெல்லாம் விரிப்பின் பெருகும். சைவம் வளர்த்த தமிழை ஒதுக்கிவிட்டுத் தமிழ்மொழியின் சீர்மையை நிலைநாட்ட முயல்வது நிரம்பாது. விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தமிழ் அறிஞர்களும், ஆர்வலர்களும், பல்துறை அறிஞர்களும் சைவ இலக்கியங்களை ஆய்ந்தால் அவை தரும் பெருமிதம் கடல் அளவுக்கும் மேல் என்பது புலனாகும். காலமாற்றங்களால் யாவும் சரியாக மதிப்பிடப்படவே செய்யும் என்று நாம் நம்பலாம்.
தேவர் குறளும் திருநாள் மறை முடியும்
மூவர் தமிழும் முனிமொழியும்- கோவைத்
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்று உணர்.
சைவத்தின் சமூகப் பெருமிதப் பதிவுகள்

0சைவத்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கீழே தரப்பட்டுள்ள அரிய தொடர்கள். இத்தகு நூல்களின் சமயங்கடந்த சமூக நாட்டத்தைப் பறைசாற்ற வல்லன.
"இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை'
"நாமார்க்கு குடியல்லோம் நமனை அஞ்சோம்'
"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி'
"எல்லாரும் இன்புற்றிருக்கனைப்பதுவே அல்லாமல்
வேறு ஒன்று அறியேன் பராபரமே'
"என் கடன் பணி செய்து கிடப்பதே'
"வான் முகில் வழாது பெய்க; மலிவளம் சுரக்க'
"சாத்திரம் பல பேசும் வழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்'
"பறைச்சி ஆவது ஏதுடா? பனத்தி ஆவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலே இலக்கமிட்டு இருக்குதோ?'
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'
"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்'
இத்தகு தொடர்களும், இவை போல்வன பலவும், சமயம் சார்ந்த பண்பாட்டில் செழித்த அரிய தமிழ்க் கொடைகள்.
__._,_.___
(படித்ததில் பிடித்தது)

நன்றி
--
T.Venugopal