வியாழன், மே 17, 2012

தாக்கம்

நம் வீட்டில் நடப்பதுதான் சினிமா!. 
நமக்குத்தான் சினிமா பிடிப்பதில்லை.! 
அங்கு, யாரோ ஒருவர் 
யாரோ ஒருவரைக் 
காதலித்துக் கொண்டிருப்பதால்.. .

தோனி திரைப்படம்

`தோனி’ என்கிற பெயர் கொண்ட ஒரு தமிழ் படம் பார்த்தேன். நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி. இடையிடையே வரும் வசனங்கள் கண்களைக் குளமாக்கின. பிரகாஷ்ராஜ் நடிப்பு அற்புதம். இந்தப் படம், இன்னும் ஐம்பது வருடங்களுக்கு தந்தையர் தின, ஆசிரியர் தின ஒளிபரப்பாக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் என்பது திண்ணம்.

மகனுக்கு கிரிகெட் பிரியம். அப்பாவிற்கோ, அவன் நன்கு படிக்கவேண்டும். நிச்சயமாக படிக்கத்தான் வேண்டும். காரணம் அவரின் நிலைமை அப்படி!. தாய் இல்லாமல், மறுமணம் கூட செய்யாமல், தனித்து நின்று, உபரி வருமானமாக ஊறுகாய் செய்து விற்று, (விற்று என்பதைவிட, சில காரியங்கள் கைகூடிவர அதை லஞ்சமாகக் கொடுத்து, அசடு வழியும் போது, நடிப்பில் சிவாஜி தோற்பார் போங்க..) கந்துவட்டிக்குக் (ஆலோங்) கடன் வாங்கி, தமது இரண்டு குழந்தைகளைப் படிக்கவைக்க, அவர் படும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சூழலில், அவர் நம்பியிருக்கும் ஒரே அஸ்திவாரம் அவரின் மகன். (பையனும் நன்கு நடிக்கிறார்). அவனுக்கோ கிரிகெட் மீது கிரேஸி. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் கிரிகெட் கிரிகெட் தான். கிரிக்கெட் அடிக்கும் மட்டையை கையிலேயே வைத்துக்கொண்டு, கனவிலும் நினைவிலும் அதே சிந்தனை. அந்த கைகள் எப்போதும் கிரிகெட் பந்து அடிப்பதைப்போலவே பாவனை செய்து கொண்டிருக்கும். பயங்கர காதல் கிரிகெட் மீது. 

இந்த ஆர்வம் படிப்பில் இல்லாமல் போனதால், தந்தைக்கு பயங்கர ஏமாற்றம். பள்ளியில் வேறு அவனை உருப்படாதவன், படிப்பே வரவில்லை என்று தூற்றுகிறார்கள். ஆமாம் பின்னே, பள்ளிக்கூடத்தில், நன்கு படிக்கும் மாணவர்களைக் கொண்டாடுவார்கள், சுமாரான அல்லது மந்தமான மாணவர்களை, உதவாக்கரை என்பார்கள் - இதை நன்றாக எடுத்துச் சொல்லியுள்ளார்கள் இத்திரைப் படத்தில்.

`ஆசியர்களுக்கு ஒண்ணுமே தெரியாதாம், ஆனால் அவர்கள் மாணவர்களை முட்டாள் என்று மேஜை மேல் நிற்க வைப்பார்கள்.’ இந்த வசனம் இப்படத்தில் பல இடங்களில் வரும். பள்ளியில் ஆசிரியர்களின் முன், தொலைக்காட்சி நிகழ்ச்சியில், வீட்டில் எல்லோர் முன்னிலையிலும் மற்றும் இறுதியாக முதல்வரிடம் என, சலிப்புட்டுகிற வசனமாக இது இருப்பினும், படத்திற்கே உயிரோட்டம் தருகிற இந்தக் கரு அவசியமென்றே படுகிறது.

பள்ளி நிர்வாகத்தின் பார்வை, மாணவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் துணைபுரிகிற அளவிற்கு இல்லை, என்பதையும் இதில் கோடிக்காட்டியிருப்பார்கள்.அவர்களின் நோக்கமெல்லாம் கரையானிலும், நீரிலும் கரைகிற காகிதங்களைப் போன்ற மனன மாணவர்களை  உருவாக்குவதே.

மேலும், மாணவர்களின் காகித தேர்வின் அபரீதமான வளர்ச்சியால், பள்ளிக்குச்சேர்கின்ற நற்பெயரோடு, அங்கு போதிகின்ற ஆசிரியர்கள்  பொதுவில் கொண்டாடப்படுவதும், பள்ளிக்கு இன்னும் அதிக மாணவர்கள் நான் நீ என முந்திக்கொண்டு வரிசையில் நிற்க வேண்டுமென்கிற உள்நோக்கத்தாலும், மாணவர்களின் குழந்தைத்தனத்திற்கும், சொந்த விருப்புவெறுப்பிற்கும் சமாதி கட்டுகிற சவக்கூடமாக மாறுகிறது இன்றைய கல்விக்கூடங்கள் என்பதை அழுத்தமாக ஒளிவு மறைவின்றிச் சொல்லும் ஒரு அற்புதத் திரைப்படம்  இது.

ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சியில் முழு பொறுப்பு பள்ளிக்கே அதன் ஆச்சிரியர்களுக்கே என்றால், ஏன் அவர்களை டியூஷன் வகுப்பிற்கு அனுப்ப அலை மோதுகிறார்கள் பெற்றோர்கள்..!? இத்திரைப்படத்திலும் தமது ஊறுகாயை லஞ்சமாகக் கொடுத்து, ஆசிரியர்களிடம் அசடு வழிகிறார் பிரகாஷ்ராஜ். பரிதாபமாக இருக்கும். இருப்பினும் அவனுக்குக் கல்வித்தேர்ச்சி என்பது குதிரைக்கொம்புதான், காரணம் படிப்பில் அவனுக்கு ஆர்வமில்லை. ஆக, கல்வியில் ஆர்வம் உள்ள மாணவர்களை வைத்துக்கொண்டு, கல்வி தேர்ச்சி நிலையில் எங்களின் பள்ளி முதலிடம் என தம்பட்டம் அடித்துக்கொள்வதில் என்ன பெருமையோ.!?

பள்ளியும் - சிறந்த பள்ளி, ஆசியர்களும் - சிறந்த ஆசிரியர்கள்.. ஆசிரியர்கள் சிலரும் மாணவர்களின் அவல நிலையைக் கண்டு கொதித்து - சிறுகதை, தொடர்கதை, கட்டுரை, ஆய்வுகள் என எழுதுகிறார்கள்- அது கூட ஏட்டுச்சுரைக்காய்தான் என்பது பலருக்குத் தெரிந்த ஒன்றுதான். இருந்தபோதிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சிற்காக அல்லும் பகலும் அல்லல் படுகிறார்களே, ஏன்? அப்படியென்றால் நல்ல சூழலில் வளரும் ஒரு குழந்தை, நல்ல தேர்ச்சி நிலையில் தானாகவே முன்னுக்கு வருகிறது, இதில் பள்ளிக்கும் ஆசிரியருக்கும் நல்ல பெயர் முலாம் எதற்கு.! அதுவும் நிறைய பணம் வசூலிப்பது, இந்தச் சந்தா அந்தச் சந்தா என மாத மாதம் வாங்கிக்கொண்டே இருப்பது.. ஆனால், போதிப்பதில் மட்டும் சுணக்கம். பிள்ளைகள் கூடுதல் வகுப்பான டியூஷன் சென்றால் தான் தேர முடியுமென்கிற தற்போதைய அவல நிலை.தேவையா.!?

எனக்கு இப்போதெல்லாம் தமிழாசிரியர்களை அவ்வளவாகப் பிடிப்பதில்லை. முன்பு நாங்கள் படித்த காலகட்டம் என்பது வேறு. ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வு இருந்தது. பள்ளி முடிந்தவுடன், அவர்களே இலவசமாக டியூஷன் வகுப்பு நடத்துவார்கள். வீட்டிற்கு வந்து பாடங்களைப் போதிப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில், எனக்குத் தெரிந்த தமிழாசிரியர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்களாக வலம் வருகிறார்கள். கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு எதையாவது எழுத்தித்தள்ளிய வண்ணமாகவே இருக்கின்றார்கள்... எழுத்துத்துறையில் பிரபல(!)மாகிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளரின் பின்னணியை ஆராய்ந்தால், அவர் தமிழாசிரியராக இருப்பார். வானொலியில் கதை எழுதுவார், பத்திரிகைகளில் கதை எழுதுவார், இணையத்தில் எழுதுவார், கட்டுரைகள் எழுதுவார், தொலைக்காட்சியில் குறுநாடகம் எழுதுவார், கவிதை போட்டியில் கலந்துக்கொள்வார்...!! தமிழாசிரியர் என்பதால் அவரிடம் உள்ள தமிழ் ஆளுமை அவரை எழுதவைக்கின்றது, அதில் தப்பேதும் இல்லை. ஆனால் நானும் எழுதுவதால், எனக்கும் எழுதுவதில் கொஞ்சம் ஆர்வமிருப்பதால், எழுத்து ஒரு தவம் என்பதால், எழுத்திற்கு ஏப்பேர்ப்பட்ட உழைப்பு தேவை என்பதும் தெரிவதால்தான் சொல்கிறேன், ஒரு படைப்பை முடிக்க எப்பேர்ப்பட்ட ஆய்வுகள், எத்தனையெத்தனை தேடல்கள், சதா அதே சிந்தனை, என நாள் முழுக்க, வார முழுக்க, ஏன் மாதக்கணக்கில் கூட யோசிக்க வேண்டிவருமே..! இப்படி இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் எப்படி கல்லைச் செதுக்கிச் சிற்பமாக்குகிற அரிய பணியினை தடையின்றி செய்ய முற்படுவார்கள்.!?

இப்படி சிந்தனைகளைச் சிதறவிட்டு சிறகடிக்கும் ஆசிரியர்களிடம் சிக்குண்டுக்கிடக்கும் மாணவர்கள் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்று யாராவது யோசித்ததுண்டா. !? இன்றைய நிலையில், ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு சிந்தனை இருக்கின்றதா!? இச்சூழலில் நல்ல பெற்றோர்கள் வாய்க்கப்பெறாத மாணவர்களின் கதியை நினைத்துப்பாருங்களேன்!!!   முட்டாள் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மனவுளைச்சலுக்கு ஆளாகி, ஒரு திருடனையும், பொறுக்கியையும் உருவாக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறவர்கள் ஆசிரியர்கள்தான்.

போதிக்கின்ற ஆசிரியர்களுக்கே பேர், புகழ், பணம், பகட்டு, பதவி ஆசை.. நீங்கள் நம்பவில்லையென்றால், ஒரே ஒரு ஆசிரியரிடம் பேச்சுக் கொடுத்துப்பாருங்கள்-கோளாறு உங்களின் பிள்ளைகளிடம் இல்லைவே இல்லை, அது அந்த ஆசிரியரிடமே என்பதை நன்கு தெரிந்து கொள்வீர்கள்.

இப்படத்தில் வரும் ஒரு காட்சி, என் குடும்பத்திலும் நடந்திருக்கிறது. என் மகன் பயிலும் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. கணவர் சென்றார். ஆசிரியர், அவன் மலாய் மொழியில் தேர்ச்சிப்பெறவில்லை, அவனின் மாணவர் தேர்ச்சி நிலை இறுதி எண் என்கிறார். அவன் மற்ற எல்லாப் பாடங்களிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றிருப்பினும், நாட்டின் தேசிய மொழியான மலாய் மொழியில் தேர்ச்சிப் பெறவில்லை என்றால், அவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், முட்டாளாகவே பார்க்கப்படுவான்.

மேலும் அவன் அந்த வருடம் எழுதவிருக்கும் மிகமுக்கியமான தேர்வில், மலாய் மொழியினை அவன் கைவிட நேர்ந்தால், இத்தனை ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பாழாகும். ஒட்டு மொத்தத் தேர்ச்சி தோல்வி நிலையினைக் காட்டும். அதாவது, அவன் இந்தத் தேர்வில் தோற்றுவிட்டான் என்பது தான் அந்த முடிவாக இருக்கும். படித்த படிப்பெல்லாம் வீணாய்ப்போகும். மீண்டும் அவன் அதே தேர்வை ஒரு வருடம் பள்ளிக்குச் சென்று படித்துத் தேரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவான்.  

அந்த மொழியாசிரியரை என் கணவர் சென்று காண்கையில், அவருக்கு, இவன் மற்ற தேர்வில் மிக சிறப்பான தேர்ச்சி - அறிவியல் பிரிவு  மாணவன் என்பதால் Chemistry, physics, mathematics & add maths போன்ற பாடங்களில், வகுப்புகள் நிலையில் முன்னணியில் நின்று சிறப்புத்தேர்ச்சிப் பெற்றிருப்பினும், இந்த மலாய் மொழியாற்றல் அவனிடம் இல்லாததால், அவனை இழிநிலைக்குக்கொண்டு வந்து வசை பாடிவிட்டார் அந்த ஆசிரியர். நம்ம ஆளும் பிரகாஷ்ராஜ் மாதிரிதான்.. படு டென்ஷன் ஆகி, வீட்டிற்கு வந்தவுடன், திடலில் நண்பர்களோடு காற்பந்து (அவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு அது) விளையாடிய அவனை, நண்பர்கள் முன்னிலையிலே கத்தி குதித்து ஆர்ப்பாட்டம் செய்து அழைத்து வந்து, விலையுயர்ந்த காற்பந்தை குப்பைத்தெட்டியில் இட்டு, அவன் அழ அழ அதை எரியூட்டி, பணியிட சீருடையைக்கூட கழற்றாமல், அவனையும் உட்கார வைத்து, அந்த மொழியில் அவனுக்கு என்ன பிரச்சனை என்பதை ஆராய ஆரம்பித்தார்.

எனக்கு அந்த மொழி பிடிக்கவில்லை, நான் படிக்க மாட்டேன் என நெஞ்சை நிமிர்த்திச்சொன்னான். இதே போன்ற காட்சி அப்படத்தில் அரங்கேறிய போது நான் தேம்ப ஆரம்பித்து விட்டேன். கண்களிலிருந்து நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. அன்று வீட்டில் உள்ள அனைவருக்கும் பயங்கர டோஸ். நல்ல வேளை, நான் இருந்ததால், அவன் மேல் அவர் கைவைக்க விடவில்லை. இல்லையென்றால் திரைப்படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் மகனின் நிலையே. அப்பேர்ப்பட்ட கொலைவெறியில் இருந்தார் அவர், அன்று.

அதன் பிறகு, தனியாக ஒரு டியூஷன் மொழி ஆசிரியரைக் கண்டு பிடித்து, தினமும் பலவித மான கட்டுரைப் பயிற்சிகள் வழங்கபட்டு, அவனின் எல்லா விளையாட்டுகளுக்கும் தடை விதித்து, கடின உழைப்பிற்குப் பிறகு ஆறே மாதத்தில் அம்மொழியில் சிறப்புத்தேர்ச்சியைப் பெற்றான். பள்ளியில் முதல் நிலையில் வந்தான். அரசாங்கத்தேர்விலும் முதல் நிலையே. இவையெல்லாம் நன்மையில் முடிவுற்றதால், அந்த பதற்ற நிலையெல்லாம் கானல் நீராய் போனது. இருப்பினும், தோனி படம் போல் பல திசைகளில் மாறிய வாழ்வுச்சூழல் பலருக்கு ஏற்பட்டதுண்டு. 

 
பிள்ளைகளுக்கு படிப்பு வரவில்லை என்பதால், கார் கழுவும் பட்டரைகளிலும், மோட்டார் வாகன பழுதுபார்க்கும் கடைகளிலும், காய்கறி சந்தைகளிலும், மளிகைசாமான் கடைகளிலும் வேலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். அதான் ஆசிரியரே சொல்லிவிட்டார், படிப்பிற்கு லாயக்கு இல்லையென்று, இனி என்ன என்பதைப்போல.! (ஆசிரியர்களின் பேச்சுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்கும் ஏமாளிகள் நம்மவர்கள் - இன்னமும்).

இப்படத்தில், விளையாட்டில் ஆர்வம் காட்டுகிற மாணவர்களுக்கு, அதற்கு வழிவகுத்துக்கொடுப்பது அவசியம் என்கிற கருத்தை முன் வைத்திருக்கின்றார்கள். அதாவது படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அதற்கு அப்பால் நிறைய உண்டு என்பதைச் சொல்லி படத்தை முடித்திருக்கின்றார்கள். 

என்னைப்பொருத்தவரை புறப்பாட நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் இருப்பது ஒரு புறமிருந்தாலும், அந்த மாணவன் அதை வளர்த்துக்கொள்ள உதவும் களம் அதைவிட அவசியம். முக்கியமாக இப்படத்தில் வரும் நடிகர் நாசர் போன்ற நல்ல வழிகாட்டிப் பயிற்றுனர் அமைவது. இது எல்லோருக்கும் அமையாத பட்சத்தில், விளையாட்டு விளையாட்டு என்று படிக்கின்ற பொன்னான பொழுதை வீணடிக்கின்ற மாணவர்களை பெற்றோர் கண்காணித்து, கோபமில்லாமல் நல்வழிப்படுத்துதலே அவசியம். 

சில மாணவர்களைப் பார்த்தீர்களென்றால், படிக்கின்ற பொழுதுகளையெல்லாம் கணினி கேம், பேஸ்புக், இணையத்தில் வெட்டி அரட்டைகள் பேன்ற வில்லங்கத்தில் பொழுதுகளைக் கழித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களை, அவர்களின் போக்கிலேயே விட்டுவிடவும் முடியாது. கல்வியின் அவசியம் குறித்துச் சொல்லியே ஆகவேண்டும். எதைவேண்டுமானாலும் படி, உனகென்று ஒரு லட்சியத்தை வைத்துக்கொண்டு; அதன் பிறகு உன் இஷடம் போல் அதை மாற்றிக்கொள்.  ஒரு விஞ்ஞானியாக வரவேண்டுமென்கிற லட்சியத்தோடு படி, ஒரு என்ஜினியராகவாவது வருவாய். அதற்கும் இயலவில்லையென்றார், லட்சியத்தை மாற்று.. எதுவாக இருந்தாலும் படிக்கும் வயதில் கல்வி அவசியம்.. வெற்றியோ தோல்வியோ அதை பின்னாடி பார்த்துக்கொள்ளலாம். முதலில் படி.

மொத்தத்தில் இத்திரைப்படம் ஓர் அற்புத உணர்வைக்கொடுத்தது. உணர்வுகளின் கொந்தளிப்பில் பெற்றோர்களின் கண்களில் கண்ணீர் ஆறாக...... ஒரு பெற்றோராக..