ஞாயிறு, பிப்ரவரி 02, 2014

நான் உள்ளே வரவா?

மாமிகதை :

மாமி படுக்கின்ற படுக்கையில் கரப்பான்பூச்சியைப் பார்த்துவிட்டாள் பணிப்பெண்.

காலையிலேயே படுக்கை, தலையணை, ரப்பர் விரிப்பு என எல்லாவற்றையும் உலர போட்டாள்.

மெத்தை தலையணை உலர்வதைக் கண்ட மாமி, `நான் தூங்கப்போகிறேன். இரவெல்லாம் உறக்கம் இல்லை. உடம்பில் அரிப்பு, இடுப்பு வலி, முதுகு வலி..’ என புலம்பிக்கொண்டே இருந்தார்.

நான் காலையில் கீழே இறங்கி வருகிறபோது.. `யம்மா, இவ அட்டகாசம் செய்கிறா.  எனக்குத்தூக்கம் வருது.’ என்றார்.
பணிப்பெண்ணிடம் `என்ன ஆச்சு.? மெத்தையைப்போடு, தூங்கட்டும்.’ என்றேன். அவள்.. `இப்போதுதான் வெயில் எட்டிப்பார்க்கிறது. கொஞ்ச நேரமாவது வெயில் படட்டுமே, தூங்குவதற்கு நன்றாக இருக்கும்.’ என்றாள். நியாயமாகவே பட்டது.

`சரி, அப்படியென்றால், இங்கே ஷோபாவில் படுத்துத்தூங்குங்கள்’ என்றேன். `ஈஸி சேரில்’ இருந்து சோபாவிற்கு அழைத்துச்சென்று படுக்கவைத்தோம்.
ஈஸி சேரில், இடுப்பு வலிக்கிறது. சோபாவில் சாய்ந்தால், முதுகு வலிக்கிறது. மீண்டும் புலம்பல். மணி காலை10.15. ஒன்பது மணிக்கு மெத்தை தலையணைகளைக் காயப்போட்டுள்ளாள் பணிப்பெண். ஏறக்குறைய ஒரு மணிநேரம்தான் ஆகிறது.

மகள் இறங்கிவந்தாள். மாமி தன் பேத்தியிடமும் அதே புலம்பல். பணிப்பெண்ணிற்கு கோபம் வந்தது. `பதினொரு மணிக்கு சாப்பாடு கேட்பாய் பாட்டி, கொஞ்ச நேரம் இரு.. எல்லோரிடமும் சொல்லாதே.’ என்று அதட்டினாள்.

நான் சமையல் வேலையை ஆரம்பித்தேன், பணிப்பெண் எனக்கு உதவி செய்துகொண்டிருந்தாள்.

கணவர் இறங்கிவந்தார். கணவரைக் கண்டவுடன். மீண்டும் புலம்பல். `எனக்கு உட்கார முடியல, நடக்க முடியல, எழுந்திரிக்க முடியல, அங்கே வலி, இங்கே வலி.. நான் தூங்கணும். படுக்கையெல்லாம் வெயிலில் வெளியே கிடக்கு.. வேலைக்காரி ரொம்ப மோசம்.’ என்று ஆரம்பித்துவிட்டார்.

கணவர் வெளியே கிடந்த மெத்தையை உள்ளே எடுத்துவந்து கட்டிலில் போட்டார். படார் என்று சத்தம். என்ன சத்தம் என்று எட்டிப்பார்த்தால், அவரே, அவரின் அம்மாவிற்கு படுக்கையை தயார் செய்கிறாராம். எப்படி? பணிப்பெண் தூங்குகிற மெத்தையை இழுத்துவந்து அம்மாவின் கட்டிலில் கிடத்தி, அலமாரியில் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து விரித்து மெனகட்டுக்கொண்டிருந்தார்...

பணிப்பெண் ஓடிவந்து, `அது என்னுடையது, பரவாயில்லை விடுங்கள், நான் போடுகிறேன்..’ என்று சொல்லி, மெத்தையைத்தட்டி, வாசனைப் பூச்சித்திரவம் அடித்து, பேன்;ஐ முடுக்கி விட்டு, மாமியை உள்ளே அழைத்துச்சென்றாள்.
உள்ளே படுக்கவைத்த சில நொடியில், மீண்டும் அழைத்தார் மாமி..

`நான் கொஞ்ச நேரம் வெளியே உட்காரவா?’

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், வயதானவர்களின் psychology’ஐ நாம் அறிந்துவைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் வயதானவர்களின் மேல் வெறுப்பே மிஞ்சும். கோபம் வரும்..

புரிந்துகொள்வோம் என்பதற்காகவேதான்...

என் தோழி, வயதான அவளின் அம்மாவை வைத்துப்பார்த்துக்கொண்டாள். சக்கரை வியாதின் காரணமாக அம்மாவிற்கு ஒரு கால் இல்லை. பணம், நகை வீடு எல்லாம் மகன்களுக்குக் கொடுத்துவிட்டு, கிட்டத்தட்ட ஒன்றுமில்லா நிலையில் தமது ஒரே மகளின் வீட்டில் தங்கியிருப்பதற்கு தாயிற்கு அவ்வளவாக இஷ்டமில்லை. இருப்பினும் வேறு வழியில்லை. மருமகள்களின் நிராகரிப்பு.

வீட்டிற்கு வருவோர் போவோர் எல்லாம், கால் இல்லாத குறையைச் சொல்லிச்சொல்லி அலுத்துக்கொண்டார்கள். ஒருமுறை அந்தம்மா சொல்லியுள்ளார். எனக்கு ஏன் கால் இல்லை இல்லை என்று சொல்கிறீர்கள்.? கால் இருக்கே. வலி என்பதால் அதை உள்ளே மடக்கி மறைத்து வைத்திருக்கிறேன், என்றார். அதற்கு மகள், `நல்லா துணியைத் தூக்கிட்டுப் பார், உள்ளே ஒன்றரை கால் தான் இருக்கு.’ என்றவுடன்.. அந்தத்தாயின் முகம் மாறியதை என்னால் இன்னமும் மறக்கமுடியாது.

புரிந்துகொள்ள கஷ்டம்தான். கோபம் வரும். கோபப்படலாம். அதேவேளையில் புரிந்துகொள்ளவும் வேண்டும்.