வெள்ளி, ஆகஸ்ட் 16, 2013

மண்மண(ன)ம்

மண்மணம் கமழ்கின்ற எழுத்தே  படைப்பாளி கொடுக்கின்ற சிறந்த எழுத்தாகப்பார்க்கப் படுகிறதாம்.!!

தமிழ்நாட்டில் வட்டாரவழக்கு மொழியினை தமது கதையினில் நுழைத்து மண்மணம் கமழ படைத்து வெற்றி வாகை சூடிவிடுகிறார்கள்.

எங்களின் சூழல்? மண்மணம், முன்பு வாழ்ந்த எஸ்டேட் வாழ்க்கைதான். அது இப்போது இல்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக எஸ்டேட் சூழலை நுழைத்து மண்மணம் கமழ கதை எழுதுகிறேன் என்று கற்பனைப் புனைவுகளை படைக்கின்றார்களே. சரியா?

வட்டாரவழக்கு என்கிறபோது நாங்கள் மலாய் ஆங்கில மொழியினை பேச்சுவழக்கில் கலந்துபேசுவதான ஒரு நிலையில் கதைதனை வடித்தால், அக்கதை தேர்வாகமலேயே போய்விடலாம் - காரணம் இங்கே தமிழ் மொழியில் கலப்பு என்பது அவ்வளவாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதற்காக - மலேசியாவில் இருக்கின்ற நாங்கள் தமிழ்நாட்டு சூழலை கற்பனை செய்து வைத்துக்கொண்டு, மண்மணம் கமழ கதை எழுதினால் அது பதினாறு வயதினிலே என்கிற சினிமா சூழலை கண்முன் நிழலாட வைத்துவிடுமே. அந்தத் தோரணையில் வந்த கதைகளை நான் படித்ததுண்டு.

நாட்டின் தற்போதைய மண்மணமாகப்பட்டது - தினசரி நடக்கின்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வே.
அதை நம் கதைகளில் நாம் வடிக்கின்றபோது, அது பலநாடுகளில் அன்றாடம் நடக்கின்ற பொது நிகழ்வாகிப்போகிறது. அங்கே மண்மணம் தெரிய வாய்ப்பில்லை.

ஆக, மண்மணம் கமழ்கின்ற கதைகள்தான் சிறந்த கதை என்கிற கருத்து புலம்பெயர்ந்து வாழ்கிற உலக தமிழர்களுக்கு பொருந்துமா?  

பலநாடுகளின் மண்மணம் - நாகரீகம் வளர்ந்துவிட்ட நிலையில் எல்லாமும் ஒரே மாதிரியாக இருக்கின்ற பட்சத்தில்.. மண்மண கதைகளை இன்னமும் எதிர்ப்பார்ப்பது சரியா?