செவ்வாய், ஏப்ரல் 17, 2012

புளிப்பு மிட்டாய்

நீயும் திட்டு
விளங்காமல் நானும்
கொஞ்சம் திட்டி வைக்கிறேன்
இப்படி கொந்தளித்தால் தானே
உனக்கு நான் நல்லவன்
ஊருக்கு புரட்சியாளன்

யாருங்க ஊனம்?

சிலரிடம் இருக்கும் அபாரத் திறமைகளைக் காணும் போது, நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் செய்ய இயலவில்லை என்று நினைக்கையில் மனம் சில விஷயங்களைச் செய்துபார்க்கத் துடிக்கும்.

சில நாட்களாக என்னால் முடியுமா என சிலரின் கைவரப்பெற்ற அபாரத் திறமைகளை நான் என்னிடம் பரிசோதித்த்துப் பார்த்துக் கொண்டேன்.
கீழே ஒரு காகிதத்தை வைத்து, வலது கால் விரல்களில் பென்சிலைப் பொருத்தி, (கால்களால் வெட்கத்தில் கோலம் போடுவது சுலபம்) அந்த காகிதத்தின் மீது `விஜி’ என்று எழுதிப்பார்த்தேன். முடியவில்லை, அது அவ்வளவு சுலபமேயல்ல. மண்ணில் கோழி பிராண்டிய குப்பை போல் வந்தது என் எழுத்து. மீண்டும் முயன்றேன், தோல்வியே. மிக மிக கடினமான ஒரு காரியமாகவே இருந்தது. அதற்குள் காலின் நடு விரல் நரம்பு வேறு ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டது. அது வேறு ஒரு பக்கம் வலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது!  அந்த விரலை இழுத்து நேராக ஆக்கிக்கொண்டு மீண்டும் முயன்றேன், ஓரளவு வந்தது இருப்பினும் அழகாக வரவில்லை. இங்கொன்றும் அங்கொன்றும் கோணல்மாணலாக அலங்கோலமாகவே வந்தது.

அடுத்து, மறுபடியும் அதே பென்சிலை இடது கால் விரல்களின் நுழைத்துக்கொண்டு எழுத முயன்றேன், அறவே முடியவில்லை, இன்னும் கூடுதலாகச் சிரமப்பட்டேன். வலது காலிலாவது ஒரு விரலில்தான் சுளுக்கிக்கொண்டது, இடது காலில் பெருவிரலும் சேர்ந்து இழுத்துக்கொண்டது. பொறுக்கமுடியாத வலியை அனுபவிக்க நேர்ந்தது.

நமக்கு வலது கைப்பழக்கம் எழுதுவதற்குச் சரளமாக இருந்து விட்டால், வலதுகாலால் கொஞ்சம் எழுத முடிகிறது. அதுவே இடது கால் என்று வருகிறபோது கால் சுழலும்போது உடம்பும் ஆடுகிறது, எழுத்துவருவதில் சிக்கல் ஏற்படுகிறது.  எனது கால்களைக்கொண்டு எழுதும் பயிற்சியில்  ஈடுபட்டபோது கண்ட ஆராய்ச்சி இது.

அடுத்து, வாயில் பேனாவை வைத்துக்கொண்டு எழுத முயற்சி செய்தேன்.. பேனா நீட்டமாக இருப்பதான் எழுத்து காகிதத்தில் சரியாக விழவில்லை. காகிதத்தில் எழுதுகிறபோது பேனா வாயிற்குள் நுழைந்து நுழைந்து, தொண்டையினை உராயும்போது, குமட்டல் வந்து எச்சில் ஒழுகுகிறது.

ஆக, பேனா சரிப்பட்டு வராது என்பதால், பென்சிலை சிரியதாகச் சீவி (குட்டையான பென்சில் என்றால் சுலபம்) வாயிற்கும் காகிதத்திற்கும் இரண்டு இஞ்ச், பென்சிலும் அதே அளவில் இருப்பதை உறுதி செய்துகொண்டு., எழுத ஆரம்பித்தேன்.

வாயில் கவ்விய அந்தச் சிறிய பென்சிலால் `அம்மா’ என்று எழுதிப்பார்த்தேன். அதை எழுதி முடிக்கவே அப்பப்ப்பா என்றிருந்தது. எவ்வளவு சிரமங்களைச் சந்திக்கவேண்டியுள்ளது தெரியுமா.!. 

`அ` என்கிற எழுத்தை எழுதும்போது தலையும் சேர்ந்து சுழல்கிறது. வாயில்  நுழைத்த பென்சில் வேறு நழுவிக்கொண்டே இருந்தது. பற்களால் கடித்துக்கொண்டும், உதட்டால் இறுக்கிக்கொண்டும்... பெரும்  பாடாகிவிட்டது நிலை.

அம்மா என்கிற மூன்றெழுத்தை எழுதிமுடிக்கவே சில நிமிடங்கள் ஆனது. பென்சில் அங்கும் இங்கும் வளைந்தது. வாயிலிருந்து எச்சில் வேறு வடிந்து காகிதத்தை நனைத்து நாசம் செய்தது. தலையும் ஆடுகிறது,  ஆடும்போது தலைவலியும் சேர்ந்து வருகிறது. மிகவும் சிரமப்பட்டேன். குனிந்து குனிந்து எழுதுகிறபோது முதுகு வளையும், அப்போது  இடுப்பும் சேர்ந்து வளைகிறதல்லவா, அத்தருணத்தில் பின்புறத்தின் நடுமுதுகுப் பகுதி வலிக்கும். கீழே அமர்ந்துகொண்டு இதைச் செய்யும்போது யோகாசனம் செய்வதுபோல் இருந்தது, நிச்சயம் கொஞ்சம் குண்டானவர்கள் செய்யமுடியாது என்றே தோன்றுகிறது.

நான் வலது கைப்பழக்கம் உள்ளவள். எழுதுவது தொடங்கி எடுப்பது கொடுப்பது எல்லாமும் வலது கைதான். உதைப்பது, முதல் அடி எடுத்து வைப்பது, படியேறுவது என வலது காலும் எதற்கும் முதலாவதாகவே பயணிக்கும். பெரும்பாலும் பலருக்கு வலது கை வலது கால் பழக்கமாகத் தான் இருக்கும். யாரோ ஒரு சிலர் தான்  இடது கைப்பழக்கம், இடது கால்பழக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். இருப்பினும் பத்தில் மூன்றுபேர் இடது கை கால் பழக்கமுள்ளவர்களை இப்போது அதிக அளவில் காணலாம்.

இடது கை கால் பழக்கமுள்ளவர்கள் அறிவாளிகள் என்று யாரோ ஒரு சிலர் பரவலாகக் கிளப்பிவிட்ட புரளியால், குழந்தைகளை குழந்தைப்பருவத்திலேயே இடது கைப்பழக்கம் வருவதைப்போன்று செயற்கையாகப் பழக்கப்படுத்தி விடுகின்ற பெற்றோர்களும் இருக்கவேதான் செய்கிறார்கள்.  நான் அனுபவத்தில் கண்ட உண்மை இது.
இடது கை கால் பழக்கமுள்ளவர்கள், இடது கையால் பூப்பந்து விளையாடுவார்கள், இடது காலால் உதைத்து காற்பந்து விளையாடுவார்கள்,  சிலர் உணவு கூட இடது கையால் எடுத்துச் சாப்பிடுவார்கள். எதை எடுத்தாலும் இடது கையையே பயன் படுத்துவார்கள். கோழி, இறைச்சி, மீன் போன்றவற்றை துண்டு போடும் போது கூட இடது கைதான், இதைப் பார்க்கும் நமக்கு வித்தியாசமாகவே தோன்றும்.

இடது கை பழக்குமுள்ளவர்கள் எழுதுவதைப்பார்க்கும்போது எனக்கு படு குஷியாகிடும். எதோ நமக்கு இல்லாத ஒரு தனித் திறமை அவர்களிடம் இருப்பதைப் போன்ற ஒரு ஆர்வத்தில், அவர்கள் எழுதும் போது, வைத்தக்கண் வாங்காமல் அவர்கள் எழுதும் பாணியை ரசிப்பேன். எழுதுகிற எழுத்து அழகாக இருந்து விட்டால், ஒரே ஆச்சிரியம்.  

அதே மாதிரி நானும் எழுதிப்பார்ப்பேன். வலது கையால் எழுதும் போது, இடமிருந்து வலமாக எழுதுவோம்.இடது கை பழக்கமுள்ளவர்களும் அப்படியேதான் எழுதுவார்கள், ஆனால் நான், இடது கையால் எழுதிப்பழகும்போது, எழுத்து வலமிருந்து இடமாகச்செல்கிறது. எழுதியதை, கண்ணாடியின் முன் வைத்துப்பார்த்தால்தான், அந்த எழுத்தை சாரியாகப் வாசிக்க முடியும். இல்லையென்றால் அது தலைகீழாக இருக்கும்.

இவற்றையெல்லாம் ஏன் நான் பகிர்கிறேன் என்றால், எல்லாம் இருந்தும் நாம் ஊனமாகவே உள்ளோம் என்பதைப் புரிந்துகொள்வதற்காகத்தான்.

இப்போது சொல்லுங்கள்.. யார் இங்கே ஊனம்?