ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

கலாச்சாரமாகவே...

(23/8)
என் மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டேன். அதிகமான மாணவமணிகள் இன்று பட்டம் பெற்றார்கள். 

இந்தியர்கள் அதிகமானோர்களைக் காணமுடிந்தது.. அடுத்த நிலையில் சீனர்கள் பிறகு பெல்டா உதவிநிதியில் அரசாங்கத்தின் மூலம் பயின்று பட்டம் பெற்ற மலாய்க்காரர்கள் கொஞ்சம். இது ஒரு தனியார் பல்கலைக்கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மட்டும் இரண்டு டிக்கட்கள் வழங்கியிருந்தார்கள். அதாவது எனக்கும் என் கணவருக்கும் டிக்கட் இருந்தது. வெளியே பெரிய திரை ஒன்றின் மூலம், வருகிற உறவுகள் அமர்ந்து உள்ளே நடக்கின்ற காட்சிகளைக் காணும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். நன்கு வசதியுடன்.

நாங்கள் என் அக்கா மகனையும் என் மகளையும் அழைத்துச்சென்று விட்டோம். அவர்களை உள்ளே விடமாட்டார்கள் என்று  தெரிந்திருந்தும் அழைத்துச்சென்றோம், எப்படியாகினும் ஏமாற்றியாவது உள்ளே நுழைத்து விடலாம் என்கிற யோசனையில்..

கூட்டம் திருவிழா போன்று ஜெ ஜெ.. என்றிருந்தது. பட்டம் பெறுகிற மாணவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்த பிறகுதான் டிக்கட் உள்ள பெற்றோர்கள் உள்ளே நுழைய அனுமதி கிடைக்கும் என்று வெளியே பேசிக்கொண்டார்கள். நாங்கள் காலை எட்டு மணிக்கெல்லாம் அந்த வளாகத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய பூங்கொத்தோடு காத்திருந்தோம்.

ஒன்பது தொடங்கி பத்து மணிவரை பட்டம் பெறவிருக்கின்ற மாணவர்கள் நுழைகிறார்கள் நுழைகிறார்கள் நுழைந்துகொண்டே இருக்கின்றார்கள். எங்கிருந்து தான் வருகிறார்களோ தெரியவில்லை.. அவ்வளவு பேர் வரிசையாக வந்த மேனியாக... அதுவும் இது தனியார் பல்கலைக்கழகம். அரசாங்க பல்கலைக்கழமென்றால் மாணவர்கள் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாம்.! இவ்வளவு பட்டதாரிகளுக்கு நாட்டில் வேலை இருக்கா என்ன..!? என் மனதிற்குள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

பல்கலைகழகம் செல்வது சுலபமாகிவிட்டது இப்பொதெல்லாம். நாங்கள் பயில்கின்ற காலகட்டத்தில், பல்கலைகழகம் சென்றால் அது பெரிய விஷயம். இருந்தபோதிலும் அங்கே சென்று பயின்று வந்தவர்களுக்கு வேலை உறுதி என்றிருந்த காலகட்டம் அது.

மாணவர்கள் நுழைவதற்கு முன் வெளியே முட்டி மோதி நின்றிருந்த கூட்டத்தைக்கண்டவுன், உள்ளே சென்று இடம் பிடித்துவிடலாமா.!? என்று நினைத்து, உள்ளே நுழைய முயன்ற எங்களை அங்கே பணிபுரிந்த தற்காலிக மாணவப்பணியாளர் அனுமதிக்கவில்லை. ``கொஞ்ச நேரம் பொறுங்கள்’’, என்று மிகமரியாதையுடன் எச்சரித்து வெளியே காக்கவைத்தனர்.

மணவர்கள் அனைவரும் நுழைந்த பிறகு, பெற்றோர்கள் நுழைகிற தருணத்தில், என் புடவையே அவிழ்ந்து விழுந்துவிடும் அளவிற்கு தள்ளிக்கொண்டு `நான், நீ,’ என முண்டியடித்து உள்ளே நுழைய தயாராகிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் வாசலிலேயே மாட்டிக்கொண்டோம். ஏய், ஏன் தள்ளுகிறீர்கள்.? இது என்ன மீன் மார்க்கெட்டா?.. என்று இழுத்துப்பிடித்துத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள்..

மாணவப்பணியாளர்கள் நிறைய பேர் அங்கே பணிக்கு அமர்த்தியும் அவர்களையே தள்ளிவிட்டு குபுகுபுவென கூட்டம் நுழைந்துவிட்டது.
`டிக்கட்..டிக்கட்..டிக்கட்’ என்று மாணவப்பணியாளர்கள் கூச்சலிட்டும் ஹ்ம்ம்.. யாரும் சட்டை செய்யவில்ல.

டிக்கட் இல்லாதவர்கள் உள்ளே  நுழையக்கூடாது என்று சொல்லியும், கேட்ட பாடில்லை. பாட்டி தாத்தா.. என எல்லோரையும் அழைத்துக்கொண்டு நுழைந்துவிட்டார்கள்.

``கீழே மண்டபம் நிறைந்துவிட்டது. எல்லோரும் மேலே செல்லுங்கள்.’’ என்று, நீண்ட வரிசையாகக் கைகளைக் கோர்த்து, மண்டப நுழைவாசலை மறைத்துக்கொண்டு, ``மேலே செல்லுங்கள்.’’ என்று, அடுத்து வருபவர்களை பணித்தார்கள் மாணவப்பணியாளர்கள். நாங்களும் மேலே செல்கிற கூட்டத்தில் மாட்டிக்கொண்டோம். லிஃஃப்ட் இல்லை. மாடிப்படிகள் ஏறவேண்டும். ஏறி உள்ளே நுழைந்தால் அங்கும் இடமில்லை. மேலேயும் நிறைந்துவிட்டது. ஆட்கள் பின்னே நுழைந்தவண்ணமாக.. `உள்ளே செல்லுங்கள்.’ `உள்ளே செல்லுங்கள்.’ என்று எல்லோரையும் உள்ளே நுழைத்துக்கொண்டே இருந்தார்கள்.

உற்கார இடமில்லை. உள்ளே நுழைந்து, இடையிடையே இருக்கின்ற இடத்தில் அமர, அங்கே அமர்ந்திருப்பவர்களை, கொஞ்சம் நகருங்கள், என்றால், எதிலோ மழை பெய்வதைப்போல் அமைதியாக இருந்தார்கள்.

சரி உள்ளே நுழைந்து உற்காரலாம் என்றால்.. ஆள் இருக்கு, என்கிறார்கள்.

வேற வழி, நின்றே பார்க்கலாம் என்று ஒரு ஓரமாகச் சென்று கீழே மண்டபத்தைப்பார்த்தால், அங்கே.. வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில், ஒரு நாற்காலியில் அவர்கள் அமர, ஒரு நாற்காலி வாங்கிவந்த பூங்கொத்து, அவரகளின் கைப்பைகள் வைக்க என சில வரிசைகளில் ஈவு இரக்கம் இல்லாமல்.. யாரைப்பற்றியும் பொருட்படுத்தாமல் நாற்காலிகளைப் பிடித்துவைத்துக்கொண்டு உற்கார்ந்திருக்கின்றார்கள்.

நாங்கள் நின்ற வரிசையில் நான்கு பேர் அமரும் இடத்தில் இரு பெண்கள் இடத்தைப்பிடித்துக்கொண்டு.. யாருடைய முகத்தையும் பார்க்காமல் தங்களின் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்...

பலரின் கைகளில் பூங்கொத்து. அதைக்கொஞ்சம் சாய்க்கின்ற போது அதன் அடியில்  உள்ள நீர் அங்கேயும் இங்கேயும் வடிந்து அதில் ஒரு சீன முதியவர் வழுக்கி விழப்பார்க்க..

அங்குள்ள வராண்டாவில் அந்தநீர் வடிந்து ஊற்றி, அங்கேயும் யாரும் அமரமுடியாமல்.. ஒரே அவதி தான் போங்க..!

சரி எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பது.. கீழே போய் மண்டபத்தின் வெளியே நிறைய மேஜை நாற்காலிகள் போடப்பட்டுள்ளது, அங்கேயே உற்காருவோம், என்று, அங்கிருந்து வெளியானபோது, ``வெளியே சென்றால், மீண்டும் உள்ளே வரமுடியாது.’’ என்று எச்சரித்தார்கள். பரவாயில்லை. நாங்கள் வெளியே அமர்ந்து, பெரிய திரையின் மூலம் விழாவைக் கண்டு ரசிக்கின்றோம், என்று சொல்லி வெளியான போது, வெளியே அறுசுவை உணவு தயாராகிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்த கையோடு அனைவருக்கும் மதிய உணவு வழங்குவதற்கு தயார்படுத்திக்கொண்டிருந்தார்கள்..

அங்கே நிறைய மேஜை நாட்காலிகள் காலியாகவே இருந்தன. ஆனாலும் அங்கேயும் ஒரு வட்டமேஜையில் பத்துபேர் அமரலாம் என்றால், இருவர் அமர்ந்துகொண்டு, விழா முடிந்து உள்ளிருந்து வெளியே வரும் உறவுகள் சொகுசாக அமர்ந்து உணவை உண்பதற்கு இடம்பிடித்து வைத்துக்கொண்டு காத்திருக்கின்றார்கள்.

நான் ஓர் இடத்தில் அமர, அங்குள்ள சீனப்பெண் ஒருவள், `ஆளிருக்கு’. என்று சொல்ல... ஊச்சுமண்டைக்கு மணியடிக்க... அதிருப்தி வசனங்களை உதிர்த்து, நாற்காலியை டர்ர்ர் என்று இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டேன்..